Friday, May 31, 2013

குழந்தைகளுக்கு சாதியைப் பற்றி.....

"ஆச்சி, பிராமின்ன்னா என்னப்பா?" என்று பப்பு கேட்டபோது என்ன சொல்வதென்று ஒரு கணம் புரியவில்லை. பப்பு புதிதாக‌ ஒன்றை கற்றுக் கொண்டால் எனக்கு ஒரு க்யூரியாசிட்டி வந்துவிடும்(அவள் புதிது புதிதாக வார்த்தைகள்  கற்றுக்கொண்ட காலத்திலிருந்து தொடரும் பழக்கம்!). எங்கிருந்து கற்றுக்கொண்டாள் என்று root cause analysis  செய்ய‌ கிளம்பிவிடுவேன். இந்த விஷயத்தில் root cause - சமீபத்தில் ஒரு சம்மர் கிளாசுக்கு சென்றாள். அங்கு அவளுக்கு ஒரு ஃப்ரெண்ட் கிடைத்திருக்கிறாள். இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது அந்த  குட்டிப்பெண் (இலவச இணைப்பாக!)   'ஐ அம் பிராமின்' என்று சொன்னாளாம்.

'பிராமின்னா, கோயில்லல்லாம் பூஜை செய்வாங்க இல்ல, அவங்கதான்' என்றேன்,அவள் கேட்டதுக்கு பதிலளிக்கும் விதமாக. உடனே, "ஓ...காசு கேப்பாங்களே, எப்படி ஆச்சி, அந்த கோயில்ல பெரிய உண்டி வைச்சு இருந்தாங்க இல்ல, மக்கள்கிட்டேருந்து காசு வாங்கிறதுக்கு'", என்றாள். அவ்வ்வ்வ்...நாங்கள் சென்ற கோயில்களிலேயே, பப்புவின் உயரத்துக்கு ஒரு (வெண்கலம்/எவர்சில்வர்?) உண்டியலை சுசீந்திரம் கோயிலில் பார்த்திருந்தோம். சென்றுவந்தபிறகு ரொம்பநாளைக்கு அந்த உண்டியலை பப்பு மறக்கவில்லை. "ஆச்சி,அவங்க அப்பா கோயில்ல பூஜை செய்றவரா?" என்றும் கேள்வி. அவ்வ்வ்வ்வ்! 'எனக்கு எப்படி தெரியும்' என்று வசூல் ராஜா ஸ்டைலில் சமாளித்துவிட்டாலும், எப்படி புரிய வைப்பது என்று சவாலாகவே இருந்தது.

ஃபார்மர்,கார்ப்பெண்டர், கோல்ட் ஸ்மித்,டீச்சர் என்றெல்லாம் சொல்லி ஓரளவுக்கு சமாளித்துவிட்டேன். இறுதியாக‌,'நாம யார்க்கிட்டேயாவது நீ இந்துவா முஸ்லீமான்னு கேக்கலாமா? நீயே சொல்லு' என்றதும்,  "அதுல்லாம் பர்சனல். கேக்கல்லாம் கூடாது.நான் கிறிஸ்டீன், விலாசினிக்கிட்டே சொல்லியிருக்கேனா" என்றாள்.(அவ்வ்வ்..அதை நீ என்கிட்டேயே இதுவரைக்கும் சொன்னது  இல்லையேம்மா!!‍ -மைன்ட்வாய்ஸ்) 'அதுமாதிரிதான் இதுவும்' என்று சொல்லிவைத்தேன்.

இதுவரை அவளிடம்  எந்த இடத்திலும் சாதிபற்றி பேசியதில்லை. சாதியை அதன் கொடுமைகள் இல்லாமல் நிச்சயம் பேசிவிட முடியாது.சாதி என்றால் என்ன என்பதிலிருந்து அவளுக்கு சொல்லவேண்டும். எப்படியும் தெரிந்துக் கொள்ளாமல் அவள் வளர்ந்துவிடப்போவதில்லை. என்றாலும், இந்த விஷயத்தில் அது அவ்வளவு எளிமையானது அல்ல.

பப்புவும், அந்த குட்டிப்பெண்ணும் நண்பர்கள் என்றுதான் பப்பு நம்பிக் கொண்டிருக்கிறாள். தனிப்பட்ட ரீதியில், எதிரியாக பார்க்காமல் எப்படி  புரிய வைப்பது? அதோடு, இப்படி மற்றவர்களிடம் சொல்லிக்கொள்வது இழிவானது, தவிர்க்கப்பட வேண்டியது என்றும் புரிய வைக்கவேண்டும்.  இந்த மாதிரி சமயங்களில் எனக்கு பெரிதும் உதவியிருப்பவை கதைகள் முக்கியமாக புத்தகங்கள். முன்பு ஒரு முறை பப்பு 'கறுப்பர்கள்' பற்றி கேட்டபோது going' someplace special'  என்ற கதைப்புத்தகம், வேலையை சுலபமாக்கியது. மிகவும் அருமையான புத்தகம்! அதோடு, 'உனக்கு படிக்கத் தெரியாது(கமலாலயன் ‍ வாசல் வெளியீடு)' என்ற புத்தகத்தை, கொஞ்சம் வாசித்துக் காட்டியிருக்கிறேன். (அதிலும், மேரி பெத்யூன்  நிறைய விஷயங்களுக்கு உதவுவார்! ) இதெல்லாம் எந்த அளவுக்கு இந்த வயதில் அவளுக்கு புரியுமென்று தெரியாவிட்டாலும், 'ஓதி வைத்தால் என்றைக்காவது உதவும்' என்ற கோட்பாட்டை நம்பி அவ்வப்போது செய்வதுதான்!

இது போன்ற குழந்தைகளுக்கான (கதை)புத்தகங்கள், நமது நாட்டு 'சமூக‌/ பண்பாட்டுச் சூழ்நிலைகளு'க்கேற்றவாறு வந்திருக்கின்றனவா? சாதி பற்றியும், அதன் பாதிப்புகள் பற்றியும் 6 முதல் 10 வயதினருக்கு ஏற்ற வகையில் சொல்வதற்கு புத்தகங்கள் இருந்தால் நலம். அமர்சித்திர கதாவின் 'அம்பேத்கர்' சித்திர புத்தகம், அம்பேத்கரின் வாழ்க்கைச் சரிதமாக  சொல்லப்பட்டிருக்கிறது.' அழகிய பெரியவனின் கதையான‌ 'செருப்பு' என்ற ஒரு குறும்படத்தையும் பப்புவுடன் அமர்ந்து பார்த்திருக்கிறோம். இவையெல்லாம் ஓரளவுக்கு உதவும் என்றாலும், படங்களுடன், 'If you lived...' சீரிஸ் மாதிரியான புத்தகங்கள் இருந்தால் நன்றாக இருக்கும். அப்படி இருந்தால் பகிர்ந்துக் கொள்ளவும்.  இல்லையென்றால், குழந்தை எழுத்தாளர்கள்/பதிப்பகங்கள் இந்த ஏரியாவை கவனித்தால் தேவலை.

1 comment:

தியானா said...

புத்தகங்கள் பற்றித் தெரியவில்லை முல்லை.. ஆனால் சாதியைப் பற்றி சொல்லிக் கொடுப்பது சற்று கடினமான விஷயம் தான்.. அந்தக் குட்டிப் பெண் வீட்டில் டிப்ஸ் கேட்கலாமே முல்லை :-))). Just kidding..