Sunday, June 16, 2013

கூல்..கூல்..ஸ்கூல்!

நேற்று பப்புவின் பள்ளியில், நோட்டு புத்தகங்கள்,யூனிஃபார்ம் மற்றும் இதர பொருட்கள் வாங்கும் டே!

வரிசையில் அமர்ந்ததும் திரும்பிப் பார்த்தால் இரண்டு சீட்கள் தள்ளி மாலா.

மாலா! 

பப்புவுக்கு சிறு வயதிலிருந்தே ஒரு பழக்கம். நாங்கள் பழக்கியதுதான். அவளாக  குளியறைக்குச் சென்றால், கதவை உள்பக்கத்து நாதாங்கியை தனியாக இழுத்துவிட வேண்டும். சாத்தினாலும் உட்பக்கமாக பூட்ட முடியாது. மேலும், கதவு சாத்திக்கொண்டால், குழந்தை உள்ளே வைத்து தானாக பூட்டிக் கொள்வதை தவிர்க்கலாம். யாருமில்லாத நேரங்களில் என்றில்லை, குழந்தைகள் அறைக்குள் சென்று பூட்டிக்கொள்வதை தடுக்க பொதுவாக ஆயா இப்படி செய்தும், பப்புவுக்கு சொல்லியும் தந்திருந்தார். (பப்புவை பார்த்துக்கொள்பவர் வராத வேளைகளில் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடக்கூடாதே என்று, பப்புவுக்கு விபரம் புரியும்வரை,  அறைக்கதவுகளையும் அவ்வாறே உள்பக்கமாக இழுத்து விட்டிருப்போம்.)

பள்ளியில் என்றில்லை, நண்பர்கள் வீட்டுக்கோ, சினிமா தியேட்டருக்கோ  செல்லும்போதும், பப்புவுக்கு இந்த சொல்லியே அழைத்துச் செல்வது வழக்கம். சீனியருக்கு வந்ததிலிருந்து, பாத்ரூம் போக, உடன் பெரியவர்கள் யாரும் வருவதை, பாத்ரூமுக்கு வெளியில் நிற்பதை பப்பு விரும்புவதேயில்லை. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 'உள்ளே லாக் பண்ணிக்கக் கூடாது, தாப்பா போட்டுட்டு கதவை சாத்திக்கோ' என்று சொல்லிவிடுவது.

மாலாவும், பப்புவும் ஒருநாள் ஒன்றாக பாத்ரூமுக்குச் சென்றிருக்கிறார்கள். பப்பு சென்றதும், அவள் சாத்துவதற்கு முன்பாக மாலா வெளியிலிருந்து கதவை  பூட்டிவிட்டிருக்கிறாள். வராந்தாவிலேயே ஒரு ஆயாம்மா எப்போதும் இருப்பார். அப்போது பார்த்து அவர் இல்லை. திகைத்துப் போய், கதவை தட்டி க‌த்திய பப்புவை சில நிமிடங்களிலேயே ஆயாம்மா வந்து கதவை திறந்துவிட்டிருக்கிறார்.

அதிலிருந்து மாலா என்றாலே பப்புவுக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்! 'மாலா, பாதியிலதான் சீனியருக்கு வந்தா....யாரும் அவளுக்கு ஃப்ரெண்ட் இருக்கலன்னு நான் ஃப்ரெண்டா இருந்தா, அவ என்ன பண்ணா? பாத்ரூமில வைச்சு லாக் பண்ணலாமா?" என்று ஒரே பொருமல்.

மாலாவும் பப்புவின் பள்ளிதான். ஸ்பெஷல் சைல்ட். பப்புவின் பள்ளியில், ஸ்பெஷல் சில்ரனை சேர்த்துக்கொள்வார்கள். அவளது வகுப்பிலேயே ஏற்கெனவே இரு குழந்தைகளை பார்த்திருக்கிறேன். ஆரம்பத்தில், அவர்களுக்கு தனியாக ஒரு அறையிலும், குறிப்பிட்ட நாட்களுக்குப் பின்னர் அவர்களிடம் மாற்றம் தெரிந்ததும் ஏற்ற வகுப்புகளில்  சேர்த்துக் கொள்வார்கள். அதன்படி, மாலா, இடையில் சீனியருக்கு மாற்றப்பட்டிருந்த குழந்தை. பப்புவுக்கு என்றில்லை, அந்த வகுப்பில் இருப்பவர்களுக்கு அதெல்லாம் தெரியாது. குழந்தைகளைப் பொறுத்தவரை,  அவர்கள்  இடையில் வந்து சேர்ந்தவர்கள். 

ஆனால், பாத்ரூமில் லாக் செய்வதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. அது எந்த குழந்தையாகவும் இருக்கலாம். ஆனால், பப்புவுக்கு இதெல்லாம் புரிந்திருக்கவில்லை. அவளைப் பொறுத்தவரை, 'எல்லாரும் மாலாவை லஞ்சுக்கு சேர்த்துக்கல, நானும் விலாசினியும், புவனும் எங்க பக்கத்துல அவளுக்கு மேட் குடுத்தோம். என்னை ஏன் லாக் பண்ணனும்?" என்றே சொல்லிக் கொண்டிருந்தாள். 'தெரியாம பண்ணியிருப்பா, அதுக்காக அதையே நினைச்சுட்டிருப்பாங்களா, அதெல்லாம் உடனே மறந்துடணும்.' என்றாலும் ம்ஹூம்.

நல்லவேளையாக, பள்ளியில் இதனை நன்றாக ஹேண்டில் செய்திருந்தார்கள். இப்படி நடந்ததை எனக்கு அன்று மதியம் போன் செய்து சொன்னார்கள். அவளை அழைத்துப் போக வந்திருந்த மாலா அம்மாவிடமும் சொல்லியிருக்கிறார்கள்.  அவர், அங்கேயே அழுதுவிட்டதாக அடுத்த நாள் ஆயாம்மா சொன்னதைக்கேட்டு கஷ்டமாக இருந்தது. மாலாவின் அம்மாவை சந்திக்க நினைத்தேன். ஆனால், காலையில் நான் செல்லும் நேரமும், அவர் வரும் நேரமும்  சந்திக்க ஒத்துவரவில்லை. மாலையிலோ, அவரும் அதே பள்ளியில் மான்டிசோரி பயிற்சிக்காக சேர்ந்திருந்தார்.

அதற்குப்பிறகு, மாலாவும் பப்புவும்  சகஜமாகவே இருந்திருக்கிறார்கள். அடுத்த சில வாரங்களில் ஆபீசில் இருக்கும்போது பப்புவின் பள்ளியிலிருந்து போன்.
அவளது பள்ளியிலிருந்து போன் என்று பார்த்தாலே எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். 'என்ன ஆச்சோ' என்றுதான். மாலா சௌக்கியை எடுத்துகொண்டு வந்து நேராக பப்புவை தலையில் இடித்திருக்கிறாள். 'ரத்தம் எதுவும் வரவில்லை. நெற்றியில்தான் வீக்கம். ஐஸ் வைத்தபிறகு ஒன்றுமில்லை. கவலைப்படவேண்டாம்' என்றார்கள். எப்படி கவலைப்படாமலிருப்பது?!! சௌக்கி என்பது டெஸ்க் போல இருக்கும். அன்று சீக்கிரம் கிளம்பி வீட்டுக்குச் சென்றுவிட்டேன். நல்லவேளையாக  பயப்படும்படி ஒன்றுமில்லை. அதிலிருந்து பப்புவையும் மாலாவையும் வகுப்பில் தூர தூரமாக உட்கார வைப்பதாகவும்  சொன்னார்கள்.  அதன்பிறகு, லஞ்சில் மட்டும் மாலாவோடு சேர்ந்துக்கொள்வதாகவும், சாரி சொல்லி ஃப்ரெண்ட்ஸ் ஆகிவிட்டதாகவும் பப்பு சொல்லியிருந்தாள்.

ஆனால், மனதில், பாத்ரூமில் லாக் செய்த தாக்கம் மட்டும் பதிந்துவிட்டிருக்கிறது.  அந்த மாலாதான், நோட்டுப்புத்தகங்களை கைகளில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

'ஹாய் மாலா' என்றதும், அவளும் 'ஹாய்' என்றாள்.

லீவுக்குப் ஊருக்குப் போனது பற்றி எல்லாம் பேசி முடித்தோம். அதற்குள், அவரது அம்மா யூனிஃபார்ம் வாங்கிகொண்டு வந்திருந்தார். எனது முறையும் வந்திருக்கவில்லை.

'அம்மா, அவதான் குறிஞ்சி, பாத்ரூம்ல லாக் ' என்று அம்மாவிடம் சொன்னதும், அவர், "சாரி சொன்னியா? சாரி சொல்லு" என்று என்றார்.

"இட்ஸ் ஓகே, மாலா, அதெல்லாம் போன வருசம்தானே....குறிஞ்சி வீட்டுக்கு வரியா ஒருநாள்?" என்றேன்.

மாலாவின் அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது எனது முறை வந்தது. விடைப்பெற்றுகொள்ளும்போது, மாலாவும், 'நீங்க எங்க வீட்டுக்கு வாங்க' என்று அழைத்தாள்.


அவளிடம் 'பை' சொல்லிவிட்டு யூனிஃபார்ம் வாங்கினோம். நோட்புக்குகள் வாங்க காத்திருக்கும்போது, பிரம்மி ,தந்தையுடன் கடந்து சென்றாள். சென்ற வருடம், அவளது டான்ஸ் ஸ்கூலிலிருந்து ஒரு ஃப்ளையரை கொண்டு வந்து கொடுத்து 'குறிஞ்சியை சேர்த்துவிடுங்க ஆன்ட்டி' என்று சொல்லியிருந்தாள்.

திரும்பி வரும்போது, பப்புவிடம்,

"ஹேய், பிரம்மி என்னப்பா, நல்லா ஒயரமாயிட்டா!!" என்றேன்.

"இல்ல ஆச்சி, அவ என்னோட குள்ளம்" பப்பு

" அப்படியா? ஆனா, லீவ்ல ரொம்ப ஒல்லியாகிட்டா, குண்டா இருப்பாளே!"

"ஆச்சி, இப்ப நீ சப்பாத்தி மாவு உருட்டறேன்னு வச்சிக்கோ, ஃபர்ஸ்ட் உருண்டையா  குண்டா இருக்கும்.... அப்புறமா, உருட்டனா நீட்டா ஒல்லியாதானே ஆகும்...அதுமாதிரிதான், குட்டி வயசுல, குண்டா, குள்ளமா இருந்தா. இப்ப, ஒல்லியா நீட்டா ஆகிட்டா."

அவ்வ்வ்வ்வ்வ்!! என்னவொரு interpretation!!

3 comments:

ராமலக்ஷ்மி said...

கூல்:)!

தியானா said...

//ஆச்சி, இப்ப நீ சப்பாத்தி மாவு உருட்டறேன்னு வச்சிக்கோ, ஃபர்ஸ்ட் உருண்டையா குண்டா இருக்கும்.... அப்புறமா, உருட்டனா நீட்டா ஒல்லியாதானே ஆகும்...அதுமாதிரிதான், குட்டி வயசுல, குண்டா, குள்ளமா இருந்தா. இப்ப, ஒல்லியா நீட்டா ஆகிட்டா//

Nice interpretation.. :-))

அன்புடன் அருணா said...

super interpretation!!