Sunday, March 17, 2013

'கோயிங்....கோயிங்....கான்'

 கோவளம் கடற்கரை. ஒவ்வொருநாளும் சுமார் ஐந்தரைமணிக்கு  மக்கள் அங்கு கூடுகிறார்கள். கூட்டம் பலதரப்பட்டதாக இருக்கிறது. பெரும்பாலும் வடஇந்திய முகங்கள். தலைப்பாகைகளோடு, காந்தி தொப்பிகளோடு மற்றும்  சேலை தலைப்பால் முக்காடிட்ட முகங்கள். இது கன்னியாகுமரியின் கோவளம் கடற்கரை. தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அறிவிப்புப் பலகை நம்மை வரவேற்கிறது.

கடற்கரைக்குச் செல்லும் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிரம்பிவிடுகின்றன. வாகனங்களிலிருந்து, விரைந்து இறங்கி கடற்கரைக்குச் அவசரம் அவசரமாக செல்ல முற்படுகிறார்கள், சிலர். 'கைய பிடி,' என்றும் 'ஓடாதே' என்றும் 'நில்லு நில்லு' என்றும் பொருள் தரக்கூடிய வார்த்தைகள் பல பாஷைகளில் கேட்கிறது.

'முத்து மாலை பார்க்கறீங்களா? ஒரிஜினல், மேடம். கிஃப்ட் குடுக்கலாம்' என்று கைகளில் மாலைகளுடன் சிலர் ஒவ்வொருவரையாக அணுகத் தொடங்குகிறார்கள். டாலர்களுடன் சில மாலைகள், டாலர்கள் இல்லாமல் சில என்று விதவிதமான வண்ணங்களில்,வகைகளில் மாலைகள் வாங்கத் தூண்டுகின்றன.

ஒவ்வொருவராக தத்தமது கூட்டத்துடன், குடும்பத்துடன் பாறைகளில் இடம் பார்த்து அமர்கிறார்கள். கால் நனைப்பவர்கள் கடலின் ஓரமாக சென்று நனைத்துவிட்டு திரும்புகிறார்கள். சிலர், பாறைகளின் நுனிக்குச் சென்று அடிக்கும் அலையின் சாரலை ரசிக்கிறார்கள். எதிர்பாராத நேரத்தில் உயரமான அலை அவர்களை நனைத்ததும் "ஓ" என்ற கூச்சல் எழும்புகிறது.

முக்காடிட்ட பெண், சற்று முதிர்ந்த வயதுடையவர். உடன் வந்த பெண்ணோடு கையை பிடித்தபடி, உயரம் குறைந்த ஒரு பாறையில் அமர்கிறார். அவருடன் வந்த ஆண்கள் ஜீன்சை மேலே உயர்த்தி,  அலைகளில்  விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது திரும்பி  இந்த பெண்களைப் பார்த்துக் கொள்கிறார்கள்.  வயதான பெண்மணியின் கணவர், சற்று தள்ளி நின்று கடலைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். திடீரென்று, அந்த ஆண்கள் இருவருடம் ஏதோ நினைவு வந்தவராய் குனிகிறார்கள். ஈர மணலைக் கூட்டி கட்டுகிறார்கள். அந்த இளம்பெண் தாயிடம் ஏதோ சொல்கிறார். அதற்குள்ளாக, அவர்களே தங்கள் தாயை கூப்பிட்டுக் காட்டுகிறார்கள். அவரும் சரி என்பதாக ஒரு தலையசைப்பைக் காட்டுகிறார். தனது கணவரை நோக்கி, "ஷிவ்லிங்க் பனாவோ" என்கிறார். அலை "ஷிவ்லிங்க்"கை  பாதியாக கரைத்திருக்கிறது.  கடற்கரையில், அடிக்கும் அலையின் அருகே சிவலிங்கம் அமைப்பது ஒரு சம்பிரதாயம் போல! இதற்குள்ளாக சூரியனின் உக்கிரம் கொஞ்சமாக குறைந்திருக்கிறது. ஐந்தரையிலிருந்து ஆறு மணி என்பது இவ்வளவு நேரமா என்று மலைப்பாக இருக்கிறது.  இப்போதும் சிலர் வேகவேகமாக வந்துபடி இருந்தனர், தாம்  எதையோ இழந்து விரும்பாதவர்களாக‌.  அன்றைய நாளின் வருகையாளர்கள் அனைவருக்காகவும் காத்திருப்பது போல ஒரே இடத்தில் அமைதியாக இருக்கிறது, சூரியன். இடையில்,ஒரு சிறு மேகக் கூட்டத்துக்குள் சிக்கிக்கொண்டு விடுகிறது. இதற்குள், அலைகளில் ஆடிக்கொண்டிருந்த அனைவரும் ஆங்காங்கே அமர்ந்துவிட்டிருக்கின்றனர். படகுகளில், சற்றுத்தள்ளி இருந்த படிகளில், உயரமான பாறைகளில் நின்றபடி என்று மக்கள் கூட்டம் சட்டென்று அமைதியாகி விடுகிறது. வாழ்க்கையில் முக்கியமான ஒன்றை பார்க்கப்போகிறோம் என்பதுபோல எல்லா முகங்களும் சூரியனையே நோக்கியிருக்கின்றன.


கூட்டம் அமைதியடைந்ததும் தொடங்கும் நாடகம் போல, பொன்னிறம் சூழத் தொடங்குகிறது. அந்த மேகக்கூட்டத்திலிருந்து விடுபட்ட சூரியன், நம் கண்ணுக் கெட்டிய கடலின் ஓரத்தை எட்டித் தொடுகிறது.கூட்டத்தில் சிறு உற்சாகம். இந்த உற்சாகத்தைக் கண்டுக்கொண்டது போல, மெல்ல கடலில் மூழ்கத்தொடங்குகிறது சூரியன். பெரும்பாறை ஒன்றில் அமர்ந்திருந்தவர்கள், "கோயிங் கோயிங்" என்று கத்தத்தொடங்குகிறார்கள். இதில், எந்த வயது வித்தியாசமுமில்லை. அவர்களது உற்சாகம் நமக்கும் தொற்றிக்கொள்கிறது. ஆனாலும், யாரும் அவர்களை திரும்பிப்பார்க்கவில்லை. ஒரு சிறு அசைவைக்கூட  பார்க்காமல் விட்டுவிடக்கூடாது என்பதுபோல கண்கள் அனைத்தும் சூரியன் மீதே இருக்கின்றன. 'இதோ பிடிக்க வரேன் பாரு' என்றதும் ஓடி ஒளியும் குழந்தையின் கண்ணாமூச்சியை நினைவுபடுத்துகிறது, இந்த 'கோயிங் கோயிங்' கோரஸ் குரல்களும், அதற்கேற்ப மறையும் சூரியனும்.


சூரியனையும், கடலையும் பார்க்க,  ஒரு கோன் ஐஸ்கிரீமை பார்ப்பது போல இருக்கிறது என்றாள் பப்பு,என்னிடம். கண்ணுக்குத் தெரியாத கோன் கடலுக்குக் கீழேயும், முக்கால் பாகம் வெளியே தெரியும் சூரியனும் செவ்வண்ண ஐஸ்க்ரீமை நினைவுபடுத்தின போலும். சூரியன் நம் கண்முன் மறையும் ஒவ்வொரு விநாடியும் உண்மையில் பூமியின் சுழற்சியே என்கிறேன் அவளிடம். சூரியனிலிருந்து திரும்பிய பப்பு, இப்போது பூமியிலிருந்து  சூரியனை நோக்கத் தொடங்குகிறாள். கோன் ஐஸ்க்ரீம் இப்போது தலைக்கீழாகி விட்டதுபோல இருந்தது,எனக்கு. சூரியனின் கால்வாசியே கடலுக்கு வெளியே. கிரகணத்தின்போது தெரியும் மோதிரத்தின் கல்லாக பளிச்சிடுகிறது சூரியன்,இப்போது."கோயிங் கோயிங்" போய் "கான்" என்று கத்துகிறார்கள்,அவர்கள். உடனே ஒரு கவுண்ட்டவுன் தொடங்குகிறது. "டென்...நைன்" என்ற இளைஞர்களின் ஒருமித்த குரல் சூரியனுக்கு கேட்டிருக்க வேண்டும். ஒன் என்று முடிக்கும் போது, சூரியனின் சின்னஞ்சிறு விள்ளலும் கடைசியாக கடலுக்குள் மறைகிறது. கூட்டத்தில் ஆங்காங்கே கைத்தட்டல்.   'ஆம், எல்லாம் ஒழுங்காக நடைபெற்றது' என்பது போல! தத்தம் அருகில் இருப்பவர்களைப் பார்த்து புன்முறுவல் பூத்துக்கொள்கிறார்கள், ஒரு மிகச்சிறந்த பர்ஃபார்மென்ஸை பார்த்ததுபோல‌. கைத்தட்டல், பாராட்டுகளோடு  சூரியன் ,உலகின் மறுமுனையில் ஏதோ ஒரு மலையின் உச்சியிலோ அல்லது பாலத்தில் மீதோ அல்லது வேறு கடலின் மற்றொரு கரையிலோ காத்திருக்கும் முகங்களைக் இதே நேரத்தில் கண்டிருக்கும்.  

 உலகின் மறுமுனையில் உதயமாவதைக் காண, இந்த சூரியனோடு கூடவே சென்றால் என்ன  என்று ஆசையாக இருந்தது.ஆனால், ஒரு இரவு பொறுத்தால் 'இதே சூரியன் இதே கடலில்' உதயமாவதை காணலாம்.சூரியன் மறைவதை கோவாவின் கடற்கரைகளில், கேரளாவின் ஏரியில்  கண்டிருக்கிறோம். அங்கெல்லாம் இவ்வளவு பெரிய கோளமாகக்  கண்டதில்லை. ஒரு மாபெரும் சூரியபந்து, தெளிவாக‌ ஒவ்வொரு கோடாக  கடைசிச் சுற்று வரை மறைவது இங்குதான். பப்புவால்  பூமி சுற்றுவதை உணர முடிந்ததாம்.  அப்போது, தலையும் லேசாக சுற்றுவது போல உணர்ந்தாளாம்.

கூட்டம் பாதியாக குறையத் தொடங்கியது. இன்னமும் வெளிச்சமாகத்தான் இருந்தது. ஆனால், இவ்வளவு நேரமும் 'சாலை' என்ற ஒன்று இருப்பதே தெரியாமல் இருந்தது. ஹாரன் ஒலிகளும், வாகனங்களை உயிர்ப்பிக்கும் ஒலிகளும் 'நாம் திரும்பிச் செல்ல வேண்டும்' என்பதை உணர்த்தின. நடப்பவர்களுக்கு இடமே இல்லாமல் வாகனங்கள் வரிசையாக சாலையில் நிறுத்தப்பட்டிருந்தன. கடலையும், செஞ்சாந்து தீட்டப்பட்ட வானத்தையும்  பார்த்துக்கொண்டே மெதுவாக நடக்கத்துவங்கினோம். அவ்வப்போது திரும்பிப்பார்த்துக்கொண்டோம். நெருப்பூட்டப்பட்ட பஞ்சு போல காட்சியளித்தது மேகம், இப்போது.காலையில், நாங்கள் சூரிய உதயத்தை இதே கடலில் கண்டிருந்தோம். மாலையில், இதே கடலில் சூரியன் மறைவதையும் கண்ட பப்புவுக்கு இது எத்தனையாவது நாள் என்ற குழப்பம் வந்திருக்க வேண்டும். ஏனெனில், சூரிய உதயத்தை அல்லது சூரியன் மறைவதைத்தான் கண்டிருக்கிறாள். இரண்டையும், ஒரே நாளில் ஒரே கடலில்/இடத்தில் பார்ப்பது இங்குதான். அவளது சந்தேகத்தை என்னால் சரியாக புரிந்துக்கொள்ள முடியவில்லை. 

"புரியலை, இன்னொரு தடவை சொல்லு?" என்றேன்,அவளிடம்.

ஏற்கெனவே இரண்டு முறை சொல்லியும் எனக்கு புரியாததால் அலுத்துப்போன பப்பு, சொன்னாள் "உனக்கு சொல்லி புரிய வைக்கிறதுக்குள்ள பொழுதே விடிஞ்சிடும்"

:‍-)  


இடம்:

சன்செட் பாயிண்ட்
பே வாட்ச் மியூசியத்துக்கு அருகில்
கன்னியாகுமரி பஸ் நிறுத்தத்துக்கு அருகிலிருந்து 2 கிமீ தொலைவில்
தமிழக அரசு சுற்றுலாத்துறையின் அறிவிப்பு பலகையை காணலாம்.
இந்த குறிப்பிட்ட இடத்தில் சன் செட் மிக அருமையாக தெளிவாக இருக்கிறது. அருகில் அமைந்த சாலையின் வழியே சென்றால் கண்ணுக்கினிய கடற்கரைகள்,மீனவ கிராமங்கள் இருக்கின்றன.

3 comments:

இரசிகை said...

thalaippu superb...

கோமதி அரசு said...

நாங்கள் நவம்பர் மாதம் சென்றோம், சூரியன் கடலில் மறைவதை பார்க்க முடியவில்லை. மேகம் மிக அதிகமாய் இருந்தது.

உங்கள் பதிவில் அழகாய் பார்த்து விட்டேன் முல்லை.

வடநாட்டினர் கடல் மண்ணில் சிவலிங்கம் செய்வதை உங்கள் பதிவின் மூலமாய் கேள்வி படுகிறேன்.

சூரியன் மறைவதை பப்பு நன்கு ரசித்து இருப்பாள் இல்லையா!
குழந்தை மகிழ்ச்சி நமக்கும் மகிழ்ச்சி.

ராமலக்ஷ்மி said...

கல்லூரியில் இருக்கையில் குமரியில் சூரிய உதயம் பார்த்திருக்கிறேன். படங்களும் உங்கள் அழகான வர்ணனையும் இதற்காகவே போகும் ஆசையை ஏற்படுத்துகிறது. அஸ்தமிக்கும் சூரியனைப் பெரிய பந்தாக கேமராவில் பிடிக்க ‘கோயிங் கோயிங்..’ என அவசரத்துடனேதான் எடுக்க வேண்டியிருக்கும் எப்போதுமே:).

/பூமி சுற்றுவதை உணர முடிந்ததாம். அப்போது, தலையும் லேசாக சுற்றுவது போல உணர்ந்தாளாம்./

நமக்குதான் உணர முடியவில்லை:).