Saturday, March 06, 2010

ஸ்டெல்லா புரூஸ் கவிதைகள்

ஒன்பதாவது படிச்சுக்கிட்டு இருந்தேன்னு நினைக்கறேன். அப்போ திடீர்ன்னு ஸ்கூல்லே அரைநாள் லீவு விட்டுட்டாங்கன்னு வீட்டுக்கு வந்தேன். கதவு உள்பக்கமா பூட்டியிருந்தது. எனக்கு அப்போல்லாம் ஒரு பழக்கம் - ரொம்ப ஜாலியா இருந்தேன்னா அப்படி செய்வேன் - கதவை திறக்கிற வரைக்கும் 'டொங் டொங்' -ன்னு தட்டிக்கிட்டே இருப்பேன்.பொதுவா, ஒரு சின்ன சத்தம் கேட்டாக் கூட எட்டிப் பார்க்கிற ஆயா அன்னைக்கு ரொம்ப நேரமா நிக்க வைச்சுட்டாங்க, நானும் க்ரில் நாதாங்கியை தட்டிக்கிட்டு 'ஆயா ஆயா' -ன்னு கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன். 'வர்றேன்னு வர்றேன்'னு சொல்றாங்களே தவிர ஆயா லேட் பண்றாங்க. கதவை திறந்துட்டு என்னோட ரூமுக்குள்ளே நுழைஞ்சுக்கிட்டு கதவை லேசா ஒருக்களிச்சு சாத்திட்டாங்க. பையையும் செருப்பையும் வீசிட்டு முகம்- கை- கால் கழுவிட்டு ரூமுக்குள்ளே போறேன்.. ஆயா ஒரு நோட்டையும் இங்க் பேனாவையும் அவங்க பெட்டிக்குள்ளே வைக்கறது தெரியுது.

ஏதோ நோட்டை வைக்கறாங்கன்னு பெரிசா கண்டுக்கலை. ரஃப் நோட்டுக்காக ஆயா ஒரு குயர் வெள்ளைத்தாள் வாங்கி அதை வெட்டி எங்களுக்கு நோட் செஞ்சு கொடுப்பாங்க . அந்த ரஃப் நோட்டு மாதிரி இருந்தது. ஆயாவுக்கு, நாங்க ஸ்கூல்லேருந்து வந்தவுடனே கை கால் கழுவிட்டு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணனும். பையை சோபா மேலே வைக்கக் கூடாது. ஆனா நானும் சரி என் தம்பியும் சரி..திட்டு வாங்காம இதை ஒரு நாளும் செய்ய மாட்டோம். அன்னைக்கும் ஆயா திட்ட ஆரம்பிச்சாங்க..நான் உடனே ரூமுக்குப் போய் கதவை சாத்திக்கிட்டேன். அவங்களை எப்படி பழி வாங்கறதுன்னு நினைச்சப்போதான் 'டக்'னு ஐடியா. அந்த நோட் என்னவா இருக்கும்? அதை நாம ரஃப் நோட்டுக்கு எடுத்துக்கலாம்னு - ஆயாவோட பெட்டியை திறந்து அந்த நோட்டை எடுத்துட்டேன். அதுலே ஆயா முக்காவாசி வரைக்கும் எழுதி வைச்சிருந்தாங்க. அழகா இருந்துச்சு கையெழுத்து.

முதல் பக்கத்துலேருந்து படிக்க ஆரம்பிச்சேன். ஒரு பெண்ணோட கல்யாணத்துலேருந்து ஆரம்பிச்ச நினைவு. நிரைய கேரக்டர்ஸ். பூரணி தாரணி மாதிரி 'ணி'லே முடியற மாதிரி நிறைய பேருங்க( ஆயாவோட நிஜபேரு கல்யாணி). எந்த பேரு யாருன்னு கண்டுபிடிக்க முடியலை. கதையை ஃபாலோ பண்ணவும் முடியலை. ஏன்னா, அது வந்து, ஸ்டாலின் நடிச்ச ஒரு விடுதலை போராட்ட காலத்து சீரியல் பாஷையிலே இருந்தது. ஆயா என்னோட இந்த நாச வேலையை கண்டுபிடிச்சுட்டாங்க போல. 'என்ன பண்றே கதவ சாத்திக்கிட்டு'ன்னு குரல் கொடுத்தாங்க. 'வர்றேன்'னு பதில் குரல் கொடுத்துட்டு எவ்ளோ பேஜஸ் இருக்குன்னு பார்த்தா அது பாட்டுக்கு போய்கிட்டே இருக்கு. 'கதைவை திற' ன்னு ஆயா சொன்னதும், அவங்களை வெறுப்பதேத்த, 'நான் உங்க நோட்டை எடுத்து படிக்கறேன்'னு சொன்னதும் ஆயாவுக்கு ரொம்ப கோவம் வந்துடுச்சு.

ஆயாவுக்கு நான் எப்பவுமே ரொம்ப செல்லம். ஆனா, அன்னைக்கு ஆயா என்மேலே ரொம்ப கோவமாகிட்டாங்க. 'ஏன் என் உயிரெடுக்கறே-ன்ற மாதிரி ஏதோ சொன்னாங்க. நானும் கோவம் வந்து அந்த நோட்டை வைச்சுட்டேன். பெரியவங்க பேச்சை கேக்கறதுல்லே, பசங்கன்னா அப்படி இருக்கணும், இபப்டி இருக்கணும்னு திட்டு aka அட்வைஸ்! அப்புறம் அன்னைக்கு சாயங்காலம் விளையாடிட்டு வந்து பார்த்தப்போ அந்த பெட்டிலே ஒரு சின்ன நம்பர் லாக் தொங்குது.

அப்புறம் அதை நானும் மறந்து போயிட்டேன். ஆனா, ஆயா கதை எழுதறாங்கன்னு மட்டும் தெரிஞ்சது. ஒருவேளை சுயசரிதையா இருக்கும்னு நானா நினைச்சுக்கிட்டேன். அப்புறம் அந்த பெட்டியும் எங்கேயோ மேலே பரணுக்கு போய்டுச்சு. இப்போ கொஞ்ச நாள் முன்னே ஆயாவுக்கு
ஒரு நரம்பு ஊசி போட்டாங்க. அப்போ நாந்தான் அவங்க கையை பிடிச்சுக்கிட்டு இருந்தேன். ஊசி போட்டு முடிச்சப்பறம் குத்தின இடத்துலே பஞ்சை வைச்சு அழுத்திக்கிட்டு இருந்தப்போதான் ஆயா கையை கவனிச்சேன். அதிலேதான் எத்தனை சுருக்கங்கள்! அந்த ஒவ்வொரு சுருக்கத்துக்கும் பின்னாடி ஒரு கதை இருக்கும்தானே. இந்த கையாலேதான் ஆயா அந்த கதையை எழுதியிருப்பாங்க-ன்னு தோணுச்சு. வீட்டுக்கு வந்தப்பறம் மெதுவா ஆயாக்கிட்டே கேட்டா, 'ஆமா கதைதான் எழுதுனேன்'-னாங்க. 'அங்கேதான் மேலே எங்கேயாவது கிடக்கும்'னு சொல்லிட்டு 'படிச்சிருக்கியா'ன்னு கேட்டாங்க. 'எங்கே படிக்க விட்டீங்க'ன்னு சொன்னேன்.

அந்த நாவலை முடிச்சாங்களான்னு இல்லையான்னு ஆயாவுக்கு இப்போ நினைவில்லை. என்ன கதைன்னு கூட ஞாபகம் இல்லை. ஆனா ஆயா கதை எழுதறாங்கன்னு தெரிஞ்சப்போ எழுந்த ஒரு வித ஆச்சரியம் - பொறுமையா எல்லா பக்கங்களிலும் இருந்த சீரான அந்த கையெழுத்து! ஆயா நிறைய கதை படிப்பாங்கன்னு மட்டும்தான் தெரிஞ்சிருந்த எனக்கு - அதுவும், பழங்காலத்து கதை பேசிக்கிட்டு இருப்பாங்கன்னும், காலையிலே காஃபி போட்டு எங்களுக்குக் கொடுத்துட்டு 'செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்சாமி'-ன்னு ஆரம்பிக்கும்போது, 'சில்வர் ஜூப்லி' கண்ட அந்த உலகப்புகழ் அருவா மனையை எடுத்துக்கிட்டு, காய்,வெங்காயம், தண்ணி குண்டான், அருவாமனைக்கு கீழே வைக்க பேப்பர் சகிதம் சமையலைறைக்கு பக்கத்தில் உட்கார்ந்து - காய்களை நாலாக எட்டாக அரிந்துக் கொண்டிருக்கும் ஆயா - அந்த அருவாமனையிலேருந்து வர்ற 'டக் டக்' சத்தத்தோட கேக்கற ஆயாவோட குரல் - பெரும்பாலும் ஆயாவும் பெரிம்மாவும் பேசிக்கறது அப்போதான் - நாட்டு நடப்பிலேருந்து நேத்து காய்கறிகாரன் பேரம் படியாத போனது வரைக்கும் - ஆயாவுக்குள்ளே இவ்ளோ இருக்கான்னு தெரிஞ்சதும் வந்த ஆச்சரியம்,பிரமிப்பு....!

இப்போ இந்த கொசுவத்தி எதுக்காக-ன்னா - சமீபத்துலே (!) அதே மாதிரி இன்னொரு ஆச்சர்யம் எழுந்தது - ஸ்டெல்லா புரூஸ் கவிதைகள் எழுதியிருக்காருன்னு தெரிஞ்சதும்.

ஸ்டெல்லா புரூஸ்-ன்ற பேரிலே கவிதைகள் எழுதலை. காளி - தாஸ் என்ற பேரிலே கவிதைகள், சிறுத்திரிக்கைகள் சூழல்லே எழுதியிருக்கார். அதே பேரிலே கவிதை தொகுப்பும் வெளியிட்டிருக்கார்.

இந்தத் தொகுப்புக்கு ஞானக்கூத்தன் ஒரு அழகான முன்னுரை எழுதியிருக்காரு. தொகுப்புல இருக்கிற முதல் கவிதைய பத்தி ஞானக்கூத்தன் விவரிச்சிருக்கிறதை வாசிக்கிறப்ப, ஒரு கவிதைய எப்படி அணுகி புரிஞ்சுக்கணும்னு நாம தெரிஞ்சுக்கலாம். தலைப்பு இல்லாம இருக்கிற அந்தக் கவிதை இதுதான்:

பொழுது விடிந்து

தினமும் நான்

வருவேனென்று

கடற்கரை மண்ணெல்லாம்

குஞ்சு நண்டுகள்

கோலம் வரைந்திருந்தன.

இந்தக் கவிதைக்கு ஞானக்கூத்தன் சொல்லியிருக்கிற விளக்கத்தை முன்னுரைலேந்து அப்படியே தரேன்...

''இக்கவிதையைக் காளி - தாஸ் சொன்னபோது அசத்தலாக இருந்தது. இக் கவிதை சில அமைவுகளைக் கொண்டிருப்பதாய்த் தெரிந்தது.

தினமும் வருகிறவன்

கோலமிடும் நண்டுக் குஞ்சுகள்

தினமும் கோலம்.

இப்படிக் கருத்துகள் அடுக்கப் பெறுகின்றன. இதில் 'வரைந்திருந்தன' என்று இறந்த காலத்தில் சொல்லியிருப்பதால் நண்டுக் குஞ்சுகள் கோலத்தை வளராதுவிட்டுப் போய்விடுவதால் நவிற்சிக்காரனுக்கு கவிதை சொல்பவன், தரப்படும் வரவேற்பில் அதன் பங்கு வரையறை உடையதாய் இருக்கிறது. ஆனால், இந்த வரையறை அதன் பெருமையைக் குறைக்கவில்லை. ஏனெனில் கோலமிடுதல் என்ற பணி மகத்துவம் உடையது.

'கோலம்'

இந்தச் சொல்லே மங்களமானது. கோலம் பெரிதானால் விழா பெரிதென்று பொருள். பெரிய விழா. பெரிய கோலம். ஒருவர் இருவர் சேர்ந்து போடமுடியாது. பலபேர் போட வேண்டும். அதனால்தான் நண்டுகள் என்று பன்மையில் கூறப்பட்டிருக்கிறது. போடுகிற இடம் பெரிது.

கடற்கரை மண்ணெல்லாம்...

இரண்டாவது அமைவு.

கோலம்

வீடு வெளி இரண்டு பிரதேசங்களிலும் கோலம் வரையப்படுவது மரபு. கோலம் இடப்பொருளாகத் தெரிகிறது. பார்வைக்கு இடப் பொருளானாலும் உண்மையில் அது காலப் பொருளானது. காலம் நன்றாக இருந்தால்தான் கோலம் வரையப்படுகிறது. இறப்பு நிகழ்ந்த வீட்டில் கோலம் வரையப்படுவதில்லை. இக் கவிதை 'பொழுது விடிந்து' என்று தொடங்குகிறது. பொழுது விடிந்து நீண்ட நேரமாகியும் ஒரு வீட்டில் கோலம் வாசலில் இடப்படவில்லை என்றால் அந்த வீட்டில் ஏதோ அமங்கலம் என்று பொருள். இக் கவிதை மங்கலமான விஷயத்தையும் சொல்கிறது.

வீட்டிலிருந்து வெளியே போகிறவர், வீட்டுக்கு வருகிறவர் ஆகிய இருவருக்குமே கோலம் பொதுவானதால் அது 'அகம், புறம்' என்ற தத்துவத்துக்கு அப்பால் செயல்படுகிறது. வீட்டில் இருப்பவர் வீட்டைவிட்டு வெளியே செல்வதென்றால் முதலில் வாசலில் பெயருக்காவது ஒரு சிறிய கோலமாவது போட்டு விட்டுத்தான் பிறகு அவர்களால் வெளியே செல்ல அனுமதிப்பது மரபு. ஏனென்றால் கோலமில்லாமல் வாசலைப் பிரேதம்தான் கடக்கிறது.

இக்கவிதையில் பொழுது விடிவு + விழாக்கோலம் என்ற அமைவு புலனாகிறது.

விழாத் தலைவர் 'யார்?' 'வருவேன்' என்று சொல்வது யார்? கடற்கரை, நண்டு என்ற சொற்களைக்கொண்டு பார்த்தால் 'வருவேன்' என்று சொல்வது 'சூரியன்'தான். ஆனால், கவிதை 'வருவேன்' என்ற சொல்லாட்சியில் ஒரு திருகலைக்கொடுக்கிறது. சூரியனுக்குத் தினகரன் என்று பெயர். அவன் தினத்தைச் செய்கிறவன். அதனால் தினகரன். 'வருவேன்' என்றவன் சூரியன் என்று பொருள் கொண்டால் கடலைப் புறப்பகுதியாகக்கொண்ட வீட்டுக்காரனான சூரியன் கோலமிட்ட கடற்கரையை வாசலாகக் கண்டு மகிழ்ந்து சொல்கிறான் என்று பொருள்படுகிறது. இதிலிருந்து ஒரு வாசகம் உருவாகிறது. அது கடக ராசியில் சூரியன் வருகிறான் என்பது. கடகராசி என்பது நண்டுக் கூட்டம். எனவே கடக ராசியில் சூரியனுக்கு வரவேற்புக் கூறி மகிழ்கிறது இக் கவிதை. வருவேன் என்ற செயல் கடற்கரைக்குப் போகிறவனையும் சாதாரண நிலையில் குறிக்கிறது. கடற்கரையில் நண்டுகள் விட்டுச்சென்ற தடங்களைக் கண்ட நெஞ்சில் இப்படி எழுந்து அமைகிறது கவிதை.''


கோலம் போடறத பத்தி எனக்கு சில மாற்று கருத்து இருந்தாலும், இந்தக் கவிதைக்கான விளக்கமா ஞானக்கூத்தன் எழுதியிருக்கறதை படிக்கிறப்ப 'அட'னு தோணுது.


அவரோட 'நானும் நானும்' புத்தகத்திலிருந்து சில கவிதைகளை பகிர்கிறேன்.

அது வேறு உலகம்

ஓணான் முதுகாய்த் தெரியும்

புளிய மரக்கிளைகளுக்கும்

இடமுண்டு

என் பால்ய உலகில்

சுட்டுப் பொசுக்கி தின்பதுண்டு

சிட்டுக் குருவிகளை

துவாரம் விழுந்த

கால்சட்டைப் பையில்

கைவிடச் சொல்லியிருக்கிறேன்

பக்கத்து வீட்டுப் பெண்ணை

கடிதமெழுதி சித்தியை

காதலித்த கணம்

கலைந்த உலகம்

இன்னும் சுழல்கிறது நினைப்பில்

கிழிந்த காற்றாடியாய்...

---------

''நானும் நானும்''


தெருக்காட்சியில்

ஓசையற்றுத் தெரிகிறேன்

தூரத்து அருவியாய்

அநேகமாக

நடமாடும் தாவரம் போல்

யாவருக்கும் தோன்றுகிறேன்

ற்தோவொரு பூவின்

விஸ்வ - ரூபமாகத் தெரிந்தாலும்

தெரிவேன் போலிருக்கிறது

ஆனால்; காலமும்

காலமின்மையும் சந்திக்கும்

நிமிர்கோடாய் நிற்பதுதான் என்முகம்

அதிலிருந்து ஓர்

நிசப்தம்

ஒலிப்பரப்பாகிறது எப்போதும்

-----------

இலக்கிய கோத்ரங்கள்

விலை உயர் சிற்றுண்டி நிலையம்

பழச்சாறு அருந்தும் தோழி தோழன்

நாய்கள் வளர்க்கும் சீமாட்டி

மாருதி ஓட்டும் கனவான்

எவருக்கும் சான்றிதழ் கிடையா

மேலும் தீண்டத் தகாதோர்

பட்டியலில் பலருண்டு

கரிசல் காட்டில் முகாமிட்டு

இலக்கிய தாசில்தார்

கையேடு வைத்திருக்கிறார்

தருவார்

இலக்கிய மாந்தர் முத்திரை

பத்தாம் தேதி நாஞ்சில் நாடு

இருபதாம் தேதி கொங்கு நாடு

ஆங்காங்கு சிபாரிசுத் தரகர் குலம்

பெருநகர தமிழில் அணுகாதீர் அய்யா

நாட்டுப் புற தமிழே உச்சம்...

------------

மண்


மண்ணில் உட்கார்ந்ததும்

சொந்தம்

இயல்பாக ஒட்டிக் கொள்கிறது

அதன் மெளனம்

நிறம்

அமைதி

கொஞ்சமும் தலையிடவில்லை

எத்தனை தூரம் நடந்தாலும்

உடன் இருக்கிறது

கவனித்துக் கொண்டே இருக்கிறது

ஒருநாள்

மண்ணோடு மண்ணாகிவிட

ஆதங்கம் வந்தது

சாய்ந்தேன்

மண்ணே இல்லாமல்

ஆகாயம் தெரிந்தது

---------

நான் ஏதோ மலையில்

கல்லுடைப்பதாக எண்ணி

அனைவரும்

அலட்சியமாக பார்த்தனர்

அவர்களுக்குத் தெரியவில்லை

நான்

மலையை உடைத்துக் கொண்டிருக்கிறேன்.

----------

ஒழிந்த நேரங்கள்

நான்

ஒழிந்த நேரத்தில் பிறந்தேன்

நான்

ஒழிந்த நேரத்தில் வளர்ந்தேன்

நான்

ஒழிந்த நேரத்தில் படித்தேன்

நான்

ஒழிந்த நேரத்தில் எழுதினேன்

நான்

ஒழிந்த நேரத்தில் விளையாடினேன்

நான்

ஒழிந்த நேரத்தில் காதலித்தேன்

நான்

ஒழிந்த நேரத்தில் சம்பாதித்தேன்

நான்

ஒழிந்த நேரத்தில் கல்யாணம் செய்தேன்

நான்

ஒழிந்த நேரத்தில் புணர்ந்தேன்

நான்

ஒழிந்த நேரத்தில் பிள்ளை பெற்றேன்

நான்

ஒழிந்த நேரத்தில் குடித்தேன்

நான்

ஒழிந்த நேரத்தில் தூங்கினேன்

நான்

ஒழிந்த நேரத்தில் சாமி கும்பிட்டேன்

நண்பர்களே வாருங்கள்

ஒழிந்த நேரம் பார்த்து

ஒழிந்த நேரம் ஒன்றில்

நான் செத்துப் போகும் முன்...

----------

"பாடைக் காட்சி"

நான்கு பேர் சுமக்க

கடற்கரையிலிருந்து பாடை கிளம்பியது

பேசியபடி நண்பர்கள் சிலர்

பாடையை தொடர்ந்தார்கள்

யாருடைய முகத்திலும் வருத்தமில்லை

ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டு போனார்கள்

பாடையைத் தூக்கிக் சென்றவர்கள்

மிகவும் நிதானமாக நடந்தார்கள்

பாடை குலுங்காமலும்

அதிகம் அசையாமலும்

கவனித்துக் கொண்டார்கள்

நண்பர்கள் சிகரெட் பற்ற வைத்தார்கள்

சினிமா பற்றியும் அரசியல் பற்றியும்

விவாதித்தார்கள்.

பஸ்ஸிலும் தெருவிலும் பலர்

பாடைக் காட்சியை கண்டார்கள்

சாலத்தில் கழுத்தில் மாலை இல்லை

பின் போனவர்கள் யாரிடமும்

மரண காரியம் செய்யும் தோற்றமில்லை

பீடிக்கு தீ கேட்பதுபோல

ரிக்ஷாகாரன் ஒருவர்

நெருங்கி வந்து கேட்டான்

செத்து போனது யார் ஸார்?

ஒருவனும் அவனுக்கு பதில் சொல்லவில்லை

வெகுநேரம் சென்றபின் பாடை

திண்ணையிட்ட ஒரு வீட்டெதிரில்

இறக்கப்பட்டது.

எல்லோரும் மௌனமாக நின்றார்கள்

பாடையில் இருந்தவர் எழுந்து

வீட்டிற்குள் போனார்

தூக்கி வந்தவர்களுக்குப் பணம் தந்துவிட்டு

நண்பர்கள் உள்ளே சென்றார்கள்

வீட்டுப் பெண்கள் கலவரமடைந்து கேட்டார்கள்

என்ன கர்மம் இது

ஏனிப்படி பாடையில் வரணும்?

ரொம்பத்தான் களைப்பாக இருந்த்து

பஸ் டாக்ஸி ரிக்‌ஷா

எதிலும் ஏறப் பிடிக்கவில்லை

பாடையில் படுத்து நன்றாக

தூங்கிக் கொண்டு வந்தேன் என்றார்

மரணம் நிகழ்ந்த துக்கம்

முகங்களில் படர

பெண்கள் நிசப்தமானார்கள்

களைப்புடன் நண்பர்களும்

நாற்காலிகளில் சாய்ந்து

கண்மூட

வெற்றுப்பாடை

வீதியில் போனது.


ஒவ்வொருத்தருக்குள்ளேயும்தான் சொல்றதுக்கும் எழுதறதுக்கும் எவ்ளோ விஷயம் இருக்கு இல்லே? என் பக்கத்துலே இருந்த ஆயாவுக்குள்லே இருக்கற விஷயங்களை/கதைகளை/வாழ்க்கையையே என்னாலே இன்னும் முழுசா தெரிஞ்சுக்க முடியலை...ஸ்டெல்லா புரூஸூக்குள்ளேயும் எவ்ளோ இருந்திருக்கும்?!

மரச்சட்டம் போட்ட கண்ணாடிக்கு பின்னால் இருக்கற தாத்தா,மாமா ஃபோட்டாவெல்லாம் பார்த்து அவங்கள்ளாம் இப்போ எங்கேன்னு சின்ன வயசுலே கேட்டப்போ ராத்திரி வானத்தை காட்டி 'அவங்க நட்சத்திரமாயிட்டாங்க, அதோ அங்கே தெரியறாங்க'-ன்னு
சொல்லுவாங்க சின்ன மாமா. நாங்களும், ஆளுக்கொரு நட்சத்திரத்தை பார்த்துக்கிட்டு இருப்போம். "அதோ உன்னை பார்த்து கண் சிமிட்டறாங்க, பாரு"ன்னு சொன்னதும் எந்த நட்சத்திரம் மினுக்குதோ அதை தாத்தாவாவும், சின்ன நட்சத்திரங்களை மத்த ஃபோட்டாலே இருக்கறவங்களாவும் கற்பனை பண்ணிக்குவோம்.

பப்புவுக்காக என் தம்பி இருட்டுலே மினுக்கற நட்சத்திர ஸ்டிக்கர்களை ஒட்டி வைச்சிருந்தான்.

நேத்து இந்த கவிதையெல்லாம் படிச்சுட்டு, லைட் ஆஃப் பண்ணிட்டு, யோசிச்சிட்டு இருந்தப்போ மேலே இருந்த ஒரு பெரிய நட்சத்திரம் மினுக்கறா மாதிரி இருந்தது....

ஆத்மாநாமை நான் படிச்சதில்ல. ஆனா, அவரும் தற்கொலை செஞ்சு இறந்ததா கேள்விப்பட்டிருக்கேன். ஆத்மாநாம் மூலமா கவிதைல அறிமுகமான ஸ்டெல்லா புரூஸும் தற்கொலை செஞ்சுகிட்டாரு.

இந்த முரணை எப்படி புரிஞ்சுக்கறது?

33 comments:

பைத்தியக்காரன் said...

இடுகைய வாசிச்சு முடிச்சதும் நிறைய கொசுவர்த்திய எனக்குள்ளயும் சுழல வச்சிட்டீங்க...

ஆத்மாநாம் மூலமா 'ழ' சிற்றிதழ்ல 'காளி - தாஸ்' கவிதைகள் எழுத ஆரம்பிச்சாரு. அதுக்கப்புறம் கிட்டத்தட்ட 60 கவிதைகளுக்கு மேல எழுதிட்டாரு. ஆனா, 32 கவிதைகள் மட்டும்தான் தொகுப்பா வந்திருக்கு... அதுவும் இப்ப அச்சுல இல்ல. அவரோட முழுமையான கவிதை தொகுப்பு வந்தா எவ்வளவு நல்லா இருக்கும்...

தேடிப் பிடிச்சு எங்களுக்கு 'காளி - தாஸ்' பத்தி சொன்னதுக்கு தாங்ஸ்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ஆயில்யன் said...

//நேத்து இந்த கவிதையெல்லாம் படிச்சுட்டு, லைட் ஆஃப் பண்ணிட்டு, யோசிச்சிட்டு இருந்தப்போ மேலே இருந்த ஒரு பெரிய நட்சத்திரம் மினுக்கறா மாதிரி இருந்தது.///


ரைட்டு !


அடுத்த தளத்திற்கு தாவிக்கொண்டிருக்கும் ஆச்சிக்கு வாழ்த்துக்கள் !

{யெம்ம்மாம்ம்ம்ம்ம்ம்ம் பெரிய பதிவு!}

KVR said...

நம் சொந்த வாழ்க்கையில் அல்லது பிறரைப் பார்க்கும்போது நமக்கு ஏற்படும் அனுபவங்களில் தொடங்கி அதனை எழுத்தாளரின் அனுபவத்தோடு ஒப்பிட்டு அவரது எழுத்துகளை அறிமுகம் செய்யும் வித்தையை எஸ்.ரா மிக அழகாக “கதாவிலாசம்” தொடரில் செய்து காட்டினார். அந்த உத்தி உங்களுக்கும் கைகூடி இருக்கிறது. ஸ்டெல்லா புரூஸின் கவிதை முகத்தைப் பற்றிச் செய்தியாகப் படித்திருந்தாலும் முதல் முறையாக கவிதைகளைப் படிக்கிறேன். நல்ல அறிமுகம். நன்றி.

பத்மநாபன் said...

ஒழிந்த நேரம் இன்று தான் கிட்டியது ... ஸ்டெல்லா ப்ருஸ் கவிதைகளையும் , கதைகளையும் நினவு படுத்தியதற்கு நன்றி .
கொஞ்சமே எழுதி இருந்தாலும் எல்லாம் நெஞ்சம் நிறைந்தவை .... ''அது ஒரு கனாக் காலம் '' .......படித்தது ஒன்றிரண்டு தான்
இருந்தாலும் மனம் அதையே சுற்றி இருக்கும் ... மீண்டும் நன்றி .

அன்புடன் அருணா said...

"ஸ்டெல்லா புரூஸ் கவிதைகள்" இது தகவல்...அருமையான கவிதைகள்.
ஆயா பற்றி அழகாக எழுதியிருக்கிறீர்கள்!

ஆயில்யன் said...

ஆயாவின் கதை பற்றிய நினைவுகள் பகிர்ந்துகொண்டது அருமை! யார் யாரோ எழுதிய கதைகள் கவிதைகள் பற்றி சிலாகித்துக்கொண்டிருக்கும்போது இப்படியான அனுபவங்கள் கண்டிப்பாக மனதில் பல்வேறு விதமான மாற்றங்களை கொண்டு வரலாம்! ஆயாவின் கதைகளை இப்பொழுது கண்டுபிடித்து படிக்க முயற்சித்ததுண்டா?

ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்ற நினைவுகள்,எதிர்பார்ப்புக்கள் பற்றிய குறிப்பீடுகள் எல்லா வீடுகளிலும் எழுத்துக்களாகவும் எண்ணங்களிலும் புதைந்துபோய்கிடக்கின்றன !

அமைதிச்சாரல் said...

ஸ்டெல்லா புரூசின் கவிதைகளுக்கு நன்றி முல்லை. ஆயாவைப்பத்தி எழுதினது ரொம்ப பிடிச்சிருந்தது.பெரும்பாலான சமயங்களில் வீட்டுப்பச்சிலையை கண்டு கொள்ளாம இருந்திடறோம் இல்லையா!!!!

நட்புடன் ஜமால் said...

மிக நீண்ட பதிவுதான்னாலும் வாசிக்கும்படியாக இருந்திச்சி.

ஆயோவோட அந்த கதைகளை தூசி தட்டி பாருங்களேன் எதுனா கரு கிடைக்கலாம் - தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் ...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பகிர்வுக்கு நன்றி முல்லை.

ஆயாவோடைய புக் தேடிப்பிடிங்க..

☀நான் ஆதவன்☀ said...

நான் படிக்கும் போது கவிதைகளை கொஞ்சம் ஸ்கிப் பண்ணிட்டேன். பட் நல்ல அருமையான கட்டுரையா வந்திருக்கு பாஸ். வாழ்த்துகள்

மாதேவி said...

அருமையான கவிதைகள்.

கோமதி அரசு said...

ஸ்டெல்லா புருஸ் கவிதைகள் அருமை.அவர் கதைகள் படித்திருக்கிறேன்.கவிதை
படித்ததில்லை.

பகிர்வுக்கு நன்றி முல்லை.

செல்வநாயகி said...

ஸ்டெல்லா புரூசின் கவிதைகளுக்கு நன்றி முல்லை. ஆயாவைப்பத்தி எழுதினது பிடிச்சிருந்தது.

தமிழ் பிரியன் said...

\\\\முத்துலெட்சுமி/muthuletchumi said...

பகிர்வுக்கு நன்றி முல்லை.

ஆயாவோடைய புக் தேடிப்பிடிங்க..\\

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்

D.R.Ashok said...

நல்ல பகிர்வு :)

பின்னோக்கி said...

ஸ்டெல்லா புரூஸ் எழுதிய, ஆனந்த விகடனில் வெளிவந்த அந்த சிறுகதை அந்த கடைசி வரி ட்விஸ்ட் மறக்க முடியாதது.

சே.குமார் said...

nalla pathivu. vazhththukkal

பா.ராஜாராம் said...

ரொம்ப அருமையான பகிர்வு முல்லை.

ஸ்டெல்லா ப்ரூஸ் கவிதை எழுதியது குறித்து இப்பவே அறிய நேர்ந்தது.

//அந்த நாவலை முடிச்சாங்களான்னு இல்லையான்னு ஆயாவுக்கு இப்போ நினைவில்லை. என்ன கதைன்னு கூட ஞாபகம் இல்லை. ஆனா ஆயா கதை எழுதறாங்கன்னு தெரிஞ்சப்போ எழுந்த ஒரு வித ஆச்சரியம் - பொறுமையா எல்லா பக்கங்களிலும் இருந்த சீரான அந்த கையெழுத்து! ஆயா நிறைய கதை படிப்பாங்கன்னு மட்டும்தான் தெரிஞ்சிருந்த எனக்கு - அதுவும், பழங்காலத்து கதை பேசிக்கிட்டு இருப்பாங்கன்னும், காலையிலே காஃபி போட்டு எங்களுக்குக் கொடுத்துட்டு 'செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்சாமி'-ன்னு ஆரம்பிக்கும்போது, 'சில்வர் ஜூப்லி' கண்ட அந்த உலகப்புகழ் அருவா மனையை எடுத்துக்கிட்டு, காய்,வெங்காயம், தண்ணி குண்டான், அருவாமனைக்கு கீழே வைக்க பேப்பர் சகிதம் சமையலைறைக்கு பக்கத்தில் உட்கார்ந்து - காய்களை நாலாக எட்டாக அரிந்துக் கொண்டிருக்கும் ஆயா - அந்த அருவாமனையிலேருந்து வர்ற 'டக் டக்' சத்தத்தோட கேக்கற ஆயாவோட குரல் - பெரும்பாலும் ஆயாவும் பெரிம்மாவும் பேசிக்கறது அப்போதான் - நாட்டு நடப்பிலேருந்து நேத்து காய்கறிகாரன் பேரம் படியாத போனது வரைக்கும் - ஆயாவுக்குள்ளே இவ்ளோ இருக்கான்னு தெரிஞ்சதும் வந்த ஆச்சரியம்,பிரமிப்பு....!//

இந்த கட்டுரை தொடங்கியது தொட்டு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே வந்தது.இந்த பகுதி ரொம்ப பிடிச்சிருந்தது.மிக அற்புதமான எழுத்தாளர் உங்களிடம் இருக்கிறார்.உங்களை நிறைய வாசித்தது இல்லை முல்லை.அமித்தம்மாவிடம் சொல்வது போல உங்களிடமும் சொல்ல விரும்புகிறேன்.

சிறுகதைகளும்,நாவல்களும் எழுதணும் முல்லை நீங்கள்.

சின்ன அம்மிணி said...

ஆயா-நீங்க - அடுத்தது பப்பு

காமராஜ் said...

நல்ல நினைவூட்டல்.

வினவு said...

ஸ்டெல்லா புரூஸ் கவிதையைவிட ஆயா எழுத இயலாமல் போன கதை மனதில் வலிக்கிறது. ஆயாவின் வாழ்வில் நிறைவேறாத ஆசையாய் ட்ரெங்கு பெட்டிக்குள் உறங்கும் அந்தக் கதை முல்லையின் மூலம் நிறைவேறவேண்டும் என்று விரும்புகிறேன்.

திகழ் said...

அருமையான தொகுப்பு
முதலில் நன்றியைச் சொல்லிக் கொள்ள வேண்டும் உங்களுக்குத் தான்,
நேரத்தையும் காலத்தையும் ஒதுக்கி இவ்வளவு அருமையான கவிதைகளையும் கவிஞரையும் பற்றி எழுதியமைக்கு

இதிலும் குறிப்பாக கடற்கரையின் விளக்கமும் பாடைக் கவிதையும் என்னை எங்கோ இட்டுச் சென்று விட்டது

அன்புடன்
திகழ்

அம்பிகா said...

அன்பு முல்லை,
தென்கச்சி சுவாமிநாதனை பற்றிய பதிவு தான், நான் படித்த உங்கள் முதல் பதிவு. அருமையா எழுதியிருந்தீங்க. உங்களிடம் ஒரு அற்புதமான எழுத்தோட்டம் இருக்கிறது. நிறைய எழுதுங்க முல்லை. காத்திருக்கிறோம்.

Dr.Rudhran said...

அழகியசிங்கர் நடத்திய விருட்சம் பத்திற்கையில் இவரது கவிதைகள் வந்திருக்கின்றன. தொகுப்பு வந்ததா என்று தெரியவில்லை ஆனால் விருட்சம் இதழ்களின் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

T.V.ராதாகிருஷ்ணன் said...

மிக நீண்ட பதிவுதான்னாலும் வாசிக்கும்படியாக இருந்திச்சி.
பகிர்வுக்கு நன்றி

ராமலக்ஷ்மி said...

பகிர்வுக்கு மிக்க நன்றி முல்லை. மிக அருமை.

//
ஒவ்வொருத்தருக்குள்ளேயும்தான் சொல்றதுக்கும் எழுதறதுக்கும் எவ்ளோ விஷயம் இருக்கு இல்லே? என் பக்கத்துலே இருந்த ஆயாவுக்குள்லே இருக்கற விஷயங்களை/கதைகளை/வாழ்க்கையையே என்னாலே இன்னும் முழுசா தெரிஞ்சுக்க முடியலை...ஸ்டெல்லா புரூஸூக்குள்ளேயும் எவ்ளோ இருந்திருக்கும்?!//

உண்மைதான்.

காமராஜ் said...

முல்லை.. முதல் பின்னூட்டம் எனது வருகைப் பதிவெனக்
கொள்ளலாம். இப்போது ஆர அமர ரெண்டாம் வாசிப்பில் இழுக்கிறது உன் எழுத்து. முட்டி முட்டிச் சண்டையிட்டு,முஷ்டி உயர்த்திக் கோஷமிட்டும் மிஞ்சுகிறது அன்பின் தெறிப்புகளே.போராட்டங்கள் கூட அங்கிருந்து தான் முளைக்கும். அப்படி வரிக்கு வரி செதுக்கி வைத்திருக்கிறது அன்பை.உண்மையில் ஆயா எல்லா புருசுக்கும்( எழுத்தாளர் என்று கொள்க) சளைத்தவரில்லை.அவர்களின் சுருக்கம் எனது முதல் சிறுகதையை நினைக்க வைக்கிறது.
'பூச்சிக்கிழவி'.
பப்பு நிறைய்யக்கொடுத்து வைத்தவள். சென்னை வந்திருக்கும்போது உன்னைப் பார்த்திருக்கவேண்டும்.
பார்ப்பேன்.

மாதவராஜ் said...

முல்லை!
ஆச்சரியமாக இருக்கிறது இந்த இடுகையும். ஸ்டெல்லாபுருஸ் எழுத்துக்களில் சிலவற்றைத்தான் படித்திருக்கிறேன். அது என்னமோ வாய்க்காமல் இருந்திருக்கிறது. இப்போது உங்கள் மூலமாக அவரையும், அவர் மூலமாக உங்களையும் அறிந்துகொள்கிறேன். எழுத்துக்கள் செய்யும் ஆச்சரியகரமான வண்னங்கள் இவை. பகிர்வுக்கு நன்றி. கூடவே, தங்களின் இன்னொரு பரிமாணத்திற்கு வாழ்த்துக்கள்.

செல்வேந்திரன் said...

ஆச்சர்ய தகவல். அருமையான பகிர்வு.

கடல் நண்டுகளின் கால் தடத்தை தனக்கான கோலமாகக் கண்டுணரும் கவிதை மனதின் அனுபவிக்க ஞானக்கூத்தனின் போஸ்ட்மார்ட்டம் வகையிலான விளக்கம் ஒரு தடையாக இருக்கிறது.

மகளிர் தின வாழ்த்துகள்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

கவிதை பகிர்வுக்கு நன்றி

அனைவருக்குள்ளும் ஒரு கதை இருந்திருக்கும். உங்கள் ஆயாவுக்கு அதை எழுத்தாய் மாற்றும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இப்போது சுருக்கம் மிகுந்த அந்தக் கைகள் அப்போது என்ன கதையை எழுதியிருக்கும் என்பதை அறிய மிகுந்த ஆவலாய் இருக்கிறேன்.

R.Gopi said...

ஸ்டெல்லா புரூஸ் கதையை தொடர்ந்து இப்போது அவரின் கவிதைகளா??

குட்... எழுத்தின் அடுத்த கட்டத்தை எட்டி விட்டீர்களே!! அதற்கு பாராட்டுக்கள்...

மகளிர் தின வாழ்த்துக்கள்....

"உழவன்" "Uzhavan" said...

அவரின் கவிதைகளோடு இன்னும் பலவற்றையும் பகிர்ந்த விதம் நன்றாக இருந்தது.

ராகவன் said...

அன்பு சந்தனமுல்லை,

மிக அழகான பகிர்வு.
படித்தவுடன் ஏற்பட்ட ஆச்சர்யங்களுக்கு அளவில்லை... வாடாத பக்கங்களில் பா.ரா.வின் சிலாஹிப்பிர்க்கு பிறகு இதை படிக்க ஆரம்பித்தேன். ஆயா பற்றிய நினைவுகளில் ஆரம்பித்து மெதுவாய் உள்நுழைகிறது காளிதாஸின் கவிதை உலகத்திற்குள். வெகுஜன பத்திரிகையில் (ஆ.வி.யில்) எழுத ஆரம்பித்த பிறகே ஸ்டெல்லா புரூஸ் நிறைய பேருக்கு பரவலாக தெரியா ஆரம்பித்தார். எனக்கு அவர் முன்னாளில் எழுதிய சில கவிதைகளை விருட்சம் இதழிலும், இன்னும் சில சிறு பத்திரிக்கையிலும் படிக்க ஆரம்பித்தேன். திரை தெரிகிறது, திரைக்கு அப்பாலும் தெரிகிறது என்கிற கவிதை தான் காளிதாஸின் கவிதைகளில் நான் முதலில் படித்தது.

அவரின் மனைவியின் மேல் அவருக்கு இருந்த பிரியம் அலாதியானது... அவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியான விஷயம்... வயதான ஒருவர் மனைவி அற்ற ஒரு சூன்ய வாழ்க்கையை எதிர்நோக்க முடியாமால் அல்லது அதன் வெப்பத்தை தாங்க முடியாமல் தன்னை பொசுக்கி கொண்டது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது... இளையவர்களின் தற்கொலையை விட வயது முதிர்ந்தவர்களின் தற்கொலை ஏற்படுத்தும் அதிர்வுகள் எந்த ரிக்டர் அளவு என்பது வகைபடுத்த முடியவில்லை.

உம்பர்டோ என்ற படத்தில் வரும் ஒரு வயதானவரின் தற்கொலை, ஷஷாங் ரிடம்சன்னில் வரும் ஒரு வயதானவரின் தற்கொலை என்னை தூங்க விடாமல் செய்திருக்கிறது. காளிடாஷின் மரணமும் அந்த வகையை சார்ந்தது தான். ரொம்ப அழகா எழுதியிருகீங்க...

வாழ்த்துக்கள் சந்தன முல்லை... மனம் நிறைய...

அன்புடன்
ராகவன்