Saturday, March 27, 2010

இனிஷியலைப் பற்றி இனிஷியலாக...

சமீபத்தில் எனது நண்பரைச் சந்தித்தேன். அந்தத் நண்பரின் தந்தை ஒரு ஆராய்ச்சியாளர்- வீட்டில்தான். ஒவ்வொரு முறை போகும்போதும் வீட்டில் புதிதாக ஏதேனும் எலெக்ட்ரிக் உபகரணம் இருக்கும்..அவரே வடிவமைத்தது.
வீட்டில் ஸ்விட்ச்கள் இல்லாத சுவரே இல்லாத அளவுக்கு. அவரது உருவாக்கங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.அப்போது நண்பர் சட்டென்று, "எங்கப்பா படைச்சதுலேயே சிறந்தது எதுன்னு நான் சொல்லட்டுமா" என்ற ஆரம்பித்தபோது ஆர்வமானோம். என்னது..என்னது என்று சொன்னது சிரிப்புடன் சொன்னார், "மிகச் சிறந்த படைப்பு நாந்தான்!" அவர் விளையாட்டுக்காக சொல்லியிருந்தாலும் - பதிவுலகில் காணக்கிடைக்கும் சில வாசகங்கள் நினைவுக்கு வந்தது. “இனிஷியல் இல்லாதவனா நீ” அல்லது “இனிஷியல் தெரியாதவன்” என்ற வாசகங்களை நேரடியாகக் கேட்டதைவிட பதிவுலகில் பார்த்ததே அதிகம்.

” தந்தையுடைய படைப்பு மட்டுமா நாமெ”ன்ற கேள்வியும் அதைத் தொடர்ந்து எழுந்தது. அம்மாவின் பங்குஇருந்தாலும், எல்லோரும் தந்தையின் படைப்பு என்றுதானே சொல்லிக்கொள்கிறோம். எத்தனை பேர் அம்மாவின் பெயரையும் இனிஷியலாக போட்டுக்கொள்கிறோம்? இன்னாரது பிள்ளை என்று சொல்லும்போது தந்தையின் பெயரையே முதலில் குறிக்கிறோம். தந்தையின் பெயர் தெரியாதவர் எனபது இழுக்கானதொன்று சொல்பவர்கள் தாயின் பெயரையும் இனிஷியலாக சேர்க்க வேண்டுமென்று சொல்லாதது ஏன்? நாலரைப் பால் அர்ஜூனுக்கு ஐக்யூ அதிகம் வேண்டுமென்றால் மட்டும் அர்ஜூன் அம்மா வேண்டும். சஃப் எக்செலின் விலை குறைந்தாலும், ரின் மீது பைசா வசூலானாலும் கவலைப்பட தேவையானவர்கள் அம்மாக்களே. ஆனால், ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டில் கையெழுத்து மட்டும் அப்பாதான் போட வேண்டும்...இப்படியும் சில பள்ளிக்கூடங்கள் இருக்கத்தானே செய்கின்றன!

எனது சிறுவயது கதை புத்தகங்களில், நோட்டுகளில் T.சந்தனமுல்லை என்றுதான் பெரிம்மா எழுதியிருப்பார். நானும் அப்படி எழுதியிருக்கிறேன். ஆனால், ஏதோவொரு தருணத்தில் எல்லா பள்ளி ரெக்கார்டுகளிலும் அது R.சந்தனமுல்லையாகி போனது. ஆனாலும், ரொம்ப நாளைக்கு T.R.சந்தனமுல்லை என்று பொறித்துத் தள்ளியிருந்தேன். எனக்கு செய்த தவறிலிருந்து கற்றுக் கொண்ட பாடமோ என்னவோ, என் தம்பிக்கு
ஆரம்பத்திலிருந்தே எல்லா ரெக்கார்டுகளிலும், அம்மா-அப்பா இருவரின் பெயர்களுமே இனிஷியலாக இருக்கிறது.

சொல்லப்போனால், எங்கள் இருவரையும் உருவாக்கியது, பெரிம்மாவும், ஆயாவும், அம்மாவும்தான். உருவாக்குதல் எனபது பிறப்பை தருவது மட்டுமில்லைதானே? அவர்களின் கூட்டுப் படைப்பாக இருந்துக் கொண்டு என்னால் நான் அப்பாவின் படைப்பு மட்டுமே என்று சொல்ல முடியுமா அல்லது சொன்னால் அது நியாயமாகுமா என்று எண்ணிப் பார்க்கிறேன்.

அப்படியே இருந்தாலும், அவர்களுக்கு உரிய நேரத்தில் தகுந்த இடத்தில் அதற்கான மரியாதையை நான் தந்திருக்கிறேனா என்று எண்ணும்போது என் மனம் குற்றவுணர்ச்சி கொள்கிறது. குறுகி போகிறது. எங்கள் திருமணம் இந்து முறைப்படி நடந்தது. திருமண சடங்குகளில் ஒன்று, பாத பூஜை செய்ய வேண்டும். இந்த சடங்குகள் எதையும் அறிந்தவளில்லை. ஒரு தாம்பாளத்தில் பெற்றவர்கள் அல்லது பெற்றவர்கள் இடத்தை பெற்றவர்கள் நிற்க, அவர்களது காலை கழுவி பொட்டு வைக்க வேண்டும். என் தந்தை காலமாகி இருந்தார். தாம்பாளத்தில் ஏறி நின்றவர்கள் பெரிய மாமாவும் அத்தையும். ஒருவேளை இந்த சடங்கு, பெற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பதெனில் அதில் நிற்க வேண்டியவர்கள் யார்? பெரிம்மாவும் அம்மாவும் தானே. பாத பூஜை அந்த மரியாதையை, நன்றியை, feeling of gratitude-ஐத் தான் குறிக்கிறதெனில், உண்மையில், பெரிம்மாவுக்கும் -அம்மாவுக்கும் அல்லவா நான் கொடுக்க வேண்டும்! தயக்கத்துடன் நிமிர்ந்து பார்க்கிறேன். சுற்றிலும் உறவு முகங்கள் - இருபக்கங்களிலிருந்தும். கடைசியிலிருந்து எட்டி பார்த்தது அம்மாவின் முகம். பெரிம்மா மேடையிலேயே இல்லை. விருப்பமில்லாமலேயே கடமையை முடித்தேன். (பெரிம்மாவிற்கும் அம்மாவிற்கும் இதனைப் பற்றிய வருத்தமிருக்குமா எனத் தெரியவில்லை.) பெரிம்மாவும் அம்மாவும் இதைப் பற்றி துளிக்கூட எண்ணியிருக்க மாட்டார்களென்றாலும் ஆணை மட்டுமே முன்னிறுத்தும் எல்லா இடங்களிலும் இந்நிகழ்வு நினைவுக்கு வந்துவிடுகிறது!
அம்மா இல்லாமல் அப்பா மட்டும் இருந்து நடத்தும் திருமணங்களில் நிகழும் பாதபூஜை எப்படி இருக்கும்?

நமது குழந்தைகளுக்காவது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சம-மரியாதையை கொடுக்க இனிஷியலிலிருந்து ஆரம்பிப்போம்!

28 comments:

ஆயில்யன் said...

ம்ம் !


இனிஷியலில் மட்டுமில்லாம இனிஷியலாகவும் நாம்/நம் மக்கள் - நம் பெற்றோர்களுக்கு தகுந்த மரியாதையினை கொடுப்பதிலும் கவனம் செலுத்துதலும் மிக அவசியம் - முதியோர் இல்லங்களாவது சற்று குறையட்டுமே!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

பெற்றோரும் உற்றோரும் உள்ள குழந்தைகளுக்கு இது பொருந்தலாம்..!
--
இதுவும் தேவை இல்லை என்ற காலமும் வரலாம்..!

தமிழ் பிரியன் said...

Yosikkanum :-)

Uma said...

//கூட்டுப் படைப்பாக இருந்துக் கொண்டு என்னால் நான் அப்பாவின் படைப்பு மட்டுமே என்று சொல்ல முடியுமா அல்லது சொன்னால் அது நியாயமாகுமா என்று எண்ணிப் பார்க்கிறேன்.//
இனிஷியல், குடும்பப் பெயர் என்று அப்பா அல்லது கணவன் பெயர் சேர்ப்பது எல்லாம் நாம் சமூகத்தில் கொஞ்சம் over-rated. Last Name என்ற கான்செப்ட்டே விளங்கவில்லை. ஆனாலும் ஒன்றின் பின் ஒன்றாகச் செல்லும் வாத்துகள் போல செய்து கொண்டிருக்கிறோம் :(

கண்ணகி said...

உருவாக்குதல் எனபது பிறப்பை தருவது மட்டுமில்லைதானே? அவர்களின் கூட்டுப் படைப்பாக இருந்துக் கொண்டு என்னால் நான் அப்பாவின் படைப்பு மட்டுமே என்று சொல்ல முடியுமா அல்லது சொன்னால் அது நியாயமாகுமா என்று எண்ணிப் பார்க்கிறேன்.

போலிச்சம்பிரதாயங்கள் யாருக்க்காக..

ராஜன் said...

நல்ல இடுகை !

வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் said...

நல்ல சிந்தனை தான்

பெற்ற தாய்க்கு ஈடாக எதுவுமில்லை

ஹாஜருக்கு பாஸ்ப்போர்ட்டில் இரண்டு பேர் போடத்தான் எண்ணியிருந்தோம் வேறு நபர்களால் செய்யப்பட்டதால் அது நடவாமல் போயிற்று, இருந்தாலுமென்ன இனி அவ்வாறே போடுவோம் தாய்மையை முன்னெழுதி ...


நன்றிங்க,

ராமு said...

ஆரம்பிப்போம்!

nanrasitha said...

நல்ல பதிவு...

சின்ன அம்மிணி said...

யோசிக்க வைச்சுட்டீங்க

veeramani said...

:)

அன்புடன் அருணா said...

அப்பா இல்லாமல் நடந்த திருமணத்தில்....அம்மா.....எந்தெந்த இடத்திலெல்லாம் நிற்கவேண்டுமோ அதையெல்லாம் யாருக்கோ கொடுத்துவிட்டு முகம் மறைத்து நின்றது இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.பூங்கொத்து!

ச.செந்தில்வேலன் said...

நல்ல பதிவு. நல்ல சிந்தனையும் கூட..

என் மனதில் படும் சில விசயங்கள்..

நம் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் பொழுது.. அவர்கள் எங்கே வாழப்போகிறார்கள் அவர்களை எப்படி அழைப்பார்கள் என்றெல்லாம் யோசிப்பது நல்லது!!

அதிக இனிஷியல்கள் இருந்தால் "அவர்கள்" பெயரில் அழைப்பது குறைய வாய்ப்புள்ளது. அல்லது நாம் வைத்த பெயரையே சுருக்கவும் வாய்ப்புள்ளது.

Surname என்று வரும் பொழுது தமிழர்கள் தந்தையின் பெயரைப் பயன்படுத்தி வருகிறோம். இதுவே வட மாநிலத்தவர்கள் சாதிப்பெயர்களையும், சாதி அடையாளத்தைக் காட்டும் படியான குடும்பப் பெயர்களையும் போட்டு வருகிறார்கள். இதை ஒப்பிடும் பொழுது நம் முறை எவ்வளவோ மேல் தான்.

கண்மணி/kanmani said...

எங்க உங்க காலத்துல இருந்திருக்கலாம்.
இப்பா நிறைய பேர் அப்பா-அம்மா இனிஷியலோடுதான் இருக்காங்க.

கேரளா பக்கம் அப்பா இனிஷியல் இல்லையாமே.அம்மாவோடதுதான்.
எனக்குத் தெரிந்த ஒரு பெண்குட்டி உண்டு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

லேபிள் நல்லா இருக்கு முல்லை..

அப்பா மட்டும் இருக்கும் வீட்டுல என்ன செய்வாங்கன்னு தெரியலயே ..கேட்டுப்பார்ப்போம்..

\\பாத பூஜை அந்த மரியாதையை, நன்றியை, feeling of gratitude-ஐத் தான் குறிக்கிறதெனில், உண்மையில், பெரிம்மாவுக்கும் -அம்மாவுக்கும் அல்லவா நான் கொடுக்க வேண்டும்!//
நியாயமான கேள்வி.

துபாய் ராஜா said...

உலக அளவில் இப்படித்தான் இருக்கிறது. :((

ராமலக்ஷ்மி said...

சிந்திக்க வைத்து விட்டீர்கள் முல்லை. மிக நல்ல கேள்விகளுடனான பதிவு.

காமராஜ் said...

அர்த்தமுள்ள பதிவு.அவசியமானதும் கூட.வெறுமனே போடுவதும் கூட சடங்காகிவிடலாம்.இருந்தாலும் சம அளவுள்ள சடங்காக இருக்கட்டும்.

tamil said...

மனைவியை இழந்த கணவன் தாரை வார்த்து கொடுக்க முடியாது -பிராமணர்கள் சமூகத்தில்.எனவே வேறு யாராவது தம்பதியாக செய்வார்கள்.பலரின் பெயரின் முதலெழுத்து ஊரைக் குறிக்கும்.கேரளா,ஆந்திராவில்
பலர் இதைப் பின்பற்றுகிறார்கள்.
surname என்று சாதி/குலத்தின் பெயரைப் போடும் பலர் அத்துடன்
தந்தையின் பெயரைப் போடுவதில்லை.தாய் தந்தை இருவர் பெயரையும் போடும் வழக்கமும் உள்ளது. திருமணத்திற்குப் பின் சிலர் கணவன் பெயரை சேர்த்துக் கொள்கிறார்கள்.சிலர் சேர்த்துக் கொள்ளமல் பழைய பெயரையே தொடர்கிறார்கள். எனவே இதில் ஆணாதிக்கமே உள்ளது என்று வாதிட முடியாது.

ஹுஸைனம்மா said...

வெறுமே ஆவணப்படுத்துவதை விட, நிஜ வாழ்வில் அம்மாக்களுக்குரிய மரியாதையைத் தருவதே முக்கியம்.

மேலும் செந்தில் சொன்னதுபோல நாம் வாழும் இடமும் இதில் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பாஸ்போர்ட்டில குறிப்பிடப்பட்டிருக்கும் விதத்தினால், அமீரகத்தில் செல்லுமிடமெல்லாம் முன்னர் என் தந்தையின் பெயரும், திருமணத்தின் பின்னர் என் கணவரின் பெயரே என் பெயராக இருக்கீறது!! இந்தக் குழப்பத்தால், என் பிள்ளைகள் இருவருக்கும் எந்த இனிஷியலும் கிடையாது, அவர்களாவது அவர்களின் பெயரால் அழைக்கப்படட்டும் என்றுதான்!!

ஜெயந்தி said...

அம்மாவின் பெயரையும் இன்சியலாக போட்டுக்கொள்ள வேண்டும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

எங்கள் வீட்டில் வர்ஷினிக்கும், வர்ஷினிக்கு முன்னாள் பிறந்த அவரின் அண்ணன் மகள் சஞ்சனா இருவருக்குமே, அம்மா, அப்பா இன்ஷியல்தான்.

கொஞ்சம் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

பாதபூஜை விஷய்ம் - நானும் இதுகுறித்து யோசித்திருக்கிறேன். இன்னொன்று பெற்றோருக்கு இறப்பு பரிகாரங்கள் செய்வது.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

உண்மையில் நாம் ஆரம்பத்தில் தாய் வழி மரபினர்தானே. ஆனால் இடையில் எங்கோ மாறிவிட்டோம்.
"இனிஷியலிலிருந்து ஆரம்பிப்போம்!" என நீங்கள் கோருவது நல்ல முயற்சி.

அமுதா said...

நல்ல பதிவு முல்லை. ஆனால் பல சம்பிரதாயங்கள் எல்லாம் இப்படித்தான் உள்ளன. சம்பிரதாயங்களை மாற்ற வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும்.

தீஷு said...

நல்ல சிந்தனையைத் தூண்டும் பதிவு முல்லை. வாழ்த்துகள்...

பின்னோக்கி said...

என்னைப் பொருத்தவரை, என்னை என் அம்மாவின் பெயர் கொண்டே உறவினர்கள் அடையாளம் காணுவார்கள். அதில் என் அப்பாவுக்கு எந்த வருத்தமும் இருந்ததில்லை.

சில சம்பிரதாயங்களை மாற்ற வேண்டிய நேரம்.. அடுத்த தலைமுறை மாற்றுமா ?... பார்ப்போம்.

என் கல்யாணத்தில், அண்ணா-அண்ணிக்கு பாத பூஜை. மகிழ்வாகவே உணர்ந்தேன்

Deepa said...

//ஆறுமாசம் முன்னாடி வரைக்கும் யாருமே இல்லாத அந்த ரோடுலே தூண்கள் கட்டி வாகனங்கள் போக வர ஆரம்பிச்சதும்.. அங்கே முளைச்ச தர்பூசணி கடை, இளநீர் கடைகள்..ஆச்சரியமாயிருந்துச்சு..எப்படி மக்கள் வாழ்க்கையை நடத்துறதுக்கு வழி கண்டுபிடிக்கறாங்கன்னு!)
//

திரைப்படத்தின் விமர்சனமும் அதன் தொடர்பாக நீங்கள் எழுதி இருக்கும் சம்பவங்கள் வெகு சுவாரசியமாகவும் நெஞ்சைத் தொடுபவையாகவும் உள்ளன.
பார்ப்ப‌வ‌ர் ம‌ன‌தை எத்த‌னையோ விஷ‌ய‌ங்களில் த‌ட்டி எழுப்புவ‌த‌ன் மூல‌ம்
"அங்காடித் தெரு" ஒரு மிகச் சிறந்த படைப்பு என்று நிரூபிக்கிறது.
ஒரே மாதிரி ஆறு ட்ரெஸ். :)

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

சிந்திக்க தூண்டும் பதிவு அருமை . பகிர்வுக்கு நன்றி . தொடருங்கள்