Saturday, March 20, 2010

கோள்மூட்டி கோமளாவும், சுப்பாண்டியும், கபீஷூம்...

"ஆயா, அவங்கதான் கோள்மூட்டி கோமளாவா”ன்னு கேட்டப்போது நான் இரண்டாம் வகுப்பு. ஐந்து குடித்தனங்கள் இருக்கக்கூடிய வீட்டில் முதல் போர்ஷனில் இருந்தோம். கோமளா அக்கா அப்போதுதான் புதிதாக கல்யாணமாகி, எங்களுக்கு அடுத்த போர்ஷனில் குடி வந்திருந்தார்கள். தினமும் பால்காரர் ஹார்ன் சத்தம் கேட்டதும் பால் சொம்பு எடுத்துச்செல்வது என் டிபார்ட்மெண்ட். பென்சில் சீவலை மண்ணில் புதைத்து அதன்மேல் பாலை ஊற்றி ரப்பர் செய்யும் கலையில் நான் தேர்ச்சி பெற்றிருந்ததை, ஆயா அறிந்த நாள் முதல், அந்த பதவி பறி போயிற்று. அப்படி ஆயாவோடு பால் வாங்கிக் கொண்டு திரும்பும்போது எதிரில் வந்த கோமளா அக்காவிடம், ஆயா பேசிக் கொண்டிருந்தபோது நான் கேட்ட இந்தக்கேள்வியால் ஆயாதான் தடுமாற வேண்டியிருந்தது. ‘சின்ன பொண்ணுதானே' என்று சாக்கும் இருந்தது.

'கோள்மூட்டி' கோமளா - பூந்தளிரிலோ அல்லது கோகுலத்திலோ அப்போதுதான் நான் படித்திருந்த கதை. கோமளா என்ற பெண் எப்படி கோள்சொல்லி சண்டைகள் மூட்டி விடுவாள் என்பதை உணர்த்தும் ஒரு நீதிக்கதை. அதற்காக கோமளா என்று பெயர் வைத்தவர்களெல்லாம் கோள் சொல்வார்கள் என்று நினைத்தது என் ஏழு வயது அறியாமைதான். ஆனால், ஆங்கிலத்தில் கதைகள் படித்திருந்தால் இப்படி ஒரு அடைமொழியோடு கோமளா அக்காவையும், ஆயாவையும் தர்மசங்கடப்படுத்தியிருக்க முடியுமா? :-)

சரி, இப்போது எதற்கு இது என்கிறீர்களா? தூலிக்காவின் ”தாய்மொழியில் படிப்பதும் எழுதுவதும் பற்றி” என்ற தொடர் இடுகைக்காகத்தான்.
தாய்மொழியில் படிப்பது, எழுதுவது எல்லோருக்கும் எப்படி விருப்பமோ அப்படித்தான் எனக்கும்! டிங்கிள், சம்பக்,மிஷா, பூந்தளிர், கோகுலம், பாலமித்ரா,அம்புலிமாமா, ரத்னபாலா என்று இருந்தாலும் முதலில் தமிழ் புத்தகங்களை வாசித்தபின்பே சம்பக்கிற்கு மிஷாவிற்கும் தாவுவது என் வழக்கமாக இருந்தது. பின்னர் டிங்கிள் , சம்பக் வாங்குவதும் நின்றுவிட்டது. அதேபோல, பக்கத்துவீட்டு சுஜாதா அக்கா, விஜி அக்கா தமிழ் துணைப்பாட நூலில் வரும் கதைகளை வாசிப்பதும். நிலாவில் வடை சுடும் ஆயாக்கதையையும், சித்திரக்குள்ளன் கதையையும் எத்தனைதடவை கேட்டாலும் அலுக்கவே அலுக்காத சிறுவயது கதைகளையும் கொஞ்சமாவது ஆங்கிலத்தில் கற்பனை செது பார்க்க முடியுமா? அல்லது தூய தமிழ்மொழியில்தான் கற்பனை செய்து பார்க்க முடியுமா? கண்டிப்பாக என்னால் முடியாது - நிலவொளியில், ஆயா மேல் கால் போட்டுக்கொண்டு, ஆயாவின் குரலில்,ஆயாவின் பேச்சுவழக்கைத் தவிர வேறு எப்படியும் அக்கதைகளை என்னால் கற்பனை செய்து பார்க்கவியலாது.


புவனகிரியில், ஆயாவின் அக்கா ஒருவர் இருந்தார். வடலூருக்கு செல்லும்போதெல்லாம் அங்கு ஒரு விசிட் அடிப்பது வழக்கம். அங்கே சென்றால், குழந்தைகளுக்கு (நாங்கதான்) கதை சொல்லும் பணியை அவர் எடுத்துக் கொள்வார். ஆனால், என்னால் அவர் சொல்லும் கதைகளை முழுவதுமாக ஃபாலோ செய்ய முடிந்ததில்லை. பூச்செண்டு, மாடம் என்றெல்லாம் அவர் சொன்னபோது என்னவென்றே விளங்கவில்லை. மேலும் நிறைய வார்த்தைகள் அந்தக்கால தமிழ் வார்த்தைகள் - இப்போது என்னால் நினைவுக்குக் கொண்டு வர இயலவில்லை. ஆனால், எனது ஆயாவின் மொழி போல இணக்கமாக இருக்கவில்லை. மேலும் அவர் சொல்லும் கதைகள் விரைவில் முடியாது. நிறைய எபிசோடுகள் கொண்டவை அவை.அதனால் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்போம்.(அவர் ஒன்று சொல்ல நாங்களாக ஒன்று கற்பனை செய்துக்கொள்ள வேண்டியதுதான்!) விளக்கின் சுடரிலிலிருந்தும், உருண்டோடும் மிளகிலிருந்தும் சுட்டிப்பெண்கள் எழுந்து வருவார்கள். பூச்செண்டை கொடுத்த இளவரசன் குதிரை மேல் பறந்து வருவான். ஆனாலும், அவர் சொல்லும் ஒரு சில வார்த்தைகள் அப்போதே வழக்கொழிந்திருந்தன. மேலும், வடஆற்காடு - தென்னாற்காடு வட்டார வழக்கு வேறு படுத்தி எடுக்கும்.

ஆம்பூரில், 'க(ட)லக்கா' என்பது வடலூரில் மல்லாட்டை என்றாகும். உண்மையில், அது கடலைக்காய் மற்றும் என்பதும் மணிலாக்கொட்டை அல்லது வேர்க்கடலையே! நாங்கள் குறிப்பிடும் கருணைக்கிழங்கும், தென்பகுதியில் குறிப்பிடும் கருணைக்கிழங்கும் வேறுவேறு. பெரும்பாலும் சாப்பிடும் நேரத்தில்தான் இந்த ஆராய்ச்சியெல்லாம் நடக்கும். புரையேறுவது என்றால் என்ன என்பதை ஒரு தெலுங்கு நண்பருக்கு, ஆங்கிலத்தில் சொல்லி விளங்க வைக்க நாங்கள் பட்ட பிரயத்தனங்கள் (ஆமா, அதுக்கு இங்க்லீஷில் என்ன?)- கடைசியில் தெலுங்கில் 'புரை போயிந்தி' மாதிரியான ஒரு வார்த்தையே. அதேபோல, வடகம் என்பது குழம்புக்கு போட்டுத்தாளிக்க அம்மா செய்து வைத்திருக்கும் உருண்டைகள் - ஆனால்,மதுரை தேவி அக்காவிற்கு வடகம் என்பது நாங்கள் வத்தல் என்று குறிப்பிடும் வஸ்து. எனக்கு, வத்தல் என்பது மே மாசமானால் அத்தைகளும் அம்மாவும் காலையில் காய்ச்சி முறுக்கு அச்சில் பிழிந்து காய வைப்பார்களே.. அது!ஆனால், திண்டுக்கல் கல்பனாவிற்கு வத்தல் என்பது மிளகாய் வத்தல். இப்படி பேச்சுத்தமிழிலேயே எத்தனை விதங்கள்!

ஓக்கே..கமிங் பேக் டூ த பாயிண்ட்...
சிறுவயதில் எனக்கு ஆங்கில கதைப்புத்தகங்களும் தமிழ் கதைப்புத்தகங்களும் சமமாகவே கிடைத்தன. பெரும்பாலும் ரஷ்ய கதைப்புத்தகங்களும், ரஷ்ய மொழிப்பெயர்ப்பு புத்தகங்களும். இவற்றில், பொக்கிஷமாக கருதி இன்று வரை பாதுகாத்து வருவது - தலைகாணி சைஸுக்கு இருக்கும் இரு புத்தகங்கள் - உலக நாடோடிக்கதைகள் தொகுப்பு மற்றும் உலகின் அத்தனைத் தேவதைக்கதைகளின் தொகுப்பு. உலகநாடோடிக்கதைகள் தமிழிலும் தேவதைக்கதைகள் தொகுப்பு ஆங்கிலத்த்திலும் இருக்கும். அந்த ஆங்கிலப்புத்தகம், நாடோடிக்கதைகள் புத்தகத்தைப்போல தாட்கள் கிழியாமல், மூலைகள் மடங்காமல் பத்திரமாக இருக்கிறது.கதைகளை என் தாய்மொழியில் வாசிக்கவே விருப்பமாக இருக்கிறது. அறிவியல் பற்றிய நூல்கள் தமிழை விட ஆங்கிலத்தில் வாசிப்பதே எளிதாக புரிந்தது. 'துளிர்' என்ற தமிழ்நாடு அறிவியல் இயக்க நூல் ஒன்று வீட்டுக்கு வரும். அதில் எளிதாகவே கொடுத்திருந்தாலும், புரிந்துக்கொள்வது கொஞ்சம் கடினமாகவே இருனத்து. எல்லாமே, தமிழ்ப்படுத்திய வார்த்தைகள்தான்- அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தில் கொடுத்திருந்தால்தான் பொருள் விளங்கியது.அங்குதான் தாய்மொழிக்கும், பயிற்றுமொழிக்குமான இடைவெளி வருவதாக நினைக்கிறேன்.

பப்புவுக்கு தமிழ் புத்தகங்களையே தேடித்தேடி வாங்குகிறேன். ஆனால், தமிழில் toddlers-க்கான புத்ததங்கள் வெகு குறைவு. ஆங்கிலத்தில் எக்கசக்காமான
வெரைட்டி - எளிய வாக்கியங்களில் அழகான வண்ணமயமான படங்களுடன். நான்கு வயதுக்கு மேல்தான் தமிழில் ஓரளவு கிடைக்கின்றன. கடைகளில் பார்த்தவரையில், ஆறு வயதினருக்கு மேல் தமிழில் நல்ல கலெக்ஷன் உண்டென்று தோன்றுகிறது. அதனால், பெரும்பாலும் ஆங்கிலப்புத்தகங்களையே பப்புவுக்கு அறிமுகப்படுத்த வேண்டியிருக்கிறது. எந்த மொழிப்புத்தகமாக இருந்தாலும் பப்புவுக்கு அதை அவளுடைய மொழியிலேதானே சொல்கிறேன்.அதனால், குந்தைகளுக்கான புத்தகங்கள் 'குழந்தை ஃப்ரெண்ட்லி' மொழியாக இருந்தாலே போதும்.

பப்புவின் பழக்கம் எப்படியெனில், எந்த ஒரு புத்தகமும் முதலில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று வாரங்கள் - அலுக்கும் வரை - தொடர்ந்து அதையே திரும்ப திரும்ப சொல்லச் சொல்வாள். பிறகு, அதை கண்டுக்கொள்ளவே மாட்டாள். அப்புறம் எப்பொழுதாவது கண்ணில் பட்டால் எடுத்து தானாகவே கதைச் சொல்லிக்கொள்வாள். இப்படி ஒரு புத்தகம் அடுத்த ரவுண்ட வர ஆறுமாதங்களாவது ஆகும். மேலும், பப்புவுக்கு கதைச் சொல்வதாக நினைத்து சொல்வதில்லை. இருவரும் சேர்ந்து கதைப் வாசிப்பதுபோலதான் - புத்தகங்களை வாசிக்கிறோம். (குழந்தைமனசு!) சில புத்தகங்களை, எளிய வாக்கியங்களாக இருந்தால் படித்து காட்டுவேன்.அடுத்த சிலமுறைகளில் அவளும் கூட சேர்ந்து சொல்லுவாள் - மனப்பாடமாக. பெரும்பாலும் நீதிக்கதைகளை நான் வாங்குவதே இல்லை. (அப்படிப்பார்த்தால் - நான் படித்த நீதிக்கதைகளுக்கு எத்தனை நீதியுடனும் வாழ வேண்டும்...நீதிகள் கதைகள் மூலம் அறியப்படுவதில்லை என்பதே நான் அறிந்த நீதி!)என்னை பொறுத்தவரை - கதைகள் என்பவை சுவாரசியமாகவும்,ஜாலியாகவும், pleasure of reading-ஐயும் அறிமுகப்படுத்துவதாக இருக்கவேண்டும்.


சிறுவயதிலும் சரி - இப்போது சரி - உலகின் பல பகுதிகளில் இருக்கும் சிறுவர் கதைகளை படித்துவிட வேண்டும் என்ற தீராத ஆர்வம் எனக்குண்டு. உலகின் எந்தப் பகுதியிலிருந்து நண்பர்கள் மூலம் நான் பெறுவது - அந்தந்த ஊர்களில் கிடைக்கும் சிறுவர் புத்தகங்கள் அல்லது நாடோடிக்கதைப் புத்தகங்களே. பெரும்பாலும், அவையெல்லாமே அமசானிலும் கிடைக்கின்றன. ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர் புத்தகங்களில் - எளிய வாக்கியங்களாலான கதைகள் அல்லது பேச்சு வழக்கிலான கதைகள் , தானாக படிக்கும் வயதினருக்கு formal language-இல் இருப்பதையே பரிந்துரைப்பேன். மேலும், மொழியைவிட அந்த புத்தகத்தின் illustrations-ஐ தான் - எப்படி பட விளக்கமாக் இருக்கிறதென்பதையே முக்கியமாக கவனிப்பேன். மேலும் நாடோடிக்கதைகளை அதன் வட்டார வழக்கிலேயே படிப்பதே சுவாரசியம்!

இத்துடன் எனது மொக்கையை முடித்துக்கொள்கிறேன். தூலிகா-வின் அழைப்பிற்கு நன்றி. இதை தொடர விரும்புபவர்கள் தொடரலாம். உங்கள் எண்ணங்களையும் அறிய ஆவலாக இருக்கிறேன்.

23 comments:

Vidhoosh said...

நல்ல பதிவு.

புரையேறுதல் - aspirating

சின்ன அம்மிணி said...

//பென்சில் சீவலை மண்ணில் புதைத்து அதன்மேல் பாலை ஊற்றி ரப்பர் செய்யும் கலை//

சைண்டிஸ்ட் ஆச்சி நீங்க.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

கலக்கல் !


மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது வாழ்த்துக்கள் !

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அய்யா நான்தான் பர்ஸ்ட் !
மீண்டும் வருவான் பனித்துளி !

நட்புடன் ஜமால் said...

கபீஷ் என்ற பெயரை பார்த்தவுடன் எனக்கும் கொ.வ சுத்திக்கிச்சி (எழுதவெல்லாம் தெரியாது)

ரத்னபாலா தான் ஃபேவரைட்

உங்க நீதி - நல்லாயிருக்கே ...

நிறைய நோட் செய்து வச்சிக்கிறேன்.

ஆயில்யன் said...

அருமையாக இருந்துச்சு ஆச்சி ! அதுவும் அந்த பென்சில் தோலுக்கு பால் ஊத்துறதுல ஆரம்பிச்சு மல்லாக்கொட்டையையும் வத்தலயும் எடுத்துக்கிட்டு , நீதிக்கதைகளை ஒதுக்கிவைச்சுப்புட்டு துளிர்ல டெரர் காமிச்சு,கதை படிச்சுட்டு வந்த காலங்கள் - அட இதே லைன்லதான் நானும் வந்திருக்கேனாக்கும் :) - ஆனா நீங்க சீனியர் ! :)

சூப்பரூ

ஆயில்யன் said...

//உலகின் எந்தப் பகுதியிலிருந்து நண்பர்கள் மூலம் நான் பெறுவது - அந்தந்த ஊர்களில் கிடைக்கும் சிறுவர் புத்தகங்கள் அல்லது நாடோடிக்கதைப் புத்தகங்களே//

ஆஹா நிம்மதியாக இருக்கவிடமாட்டாங்க போல!

ப்ளாக் படிக்க வந்ததுக்கு தண்டனையா? அவ்வ்வ்வ்வ் :))))))

அதோ அங்கிட்டு பெரியபாண்டி இருக்காரு அவுருதான் நொம்ப்ப்ப தூரம் !:)

முகிலன் said...

நல்ல பதிவு..

பப்புவுக்கு எத்தனை வயதிலிருந்து புத்தகங்கள் வாசிக்கிறீர்கள்?

என் மகனுக்கு வாசித்துக் காட்ட எப்போது ஆரம்பிப்பது என்ற சந்தேகத்தின் பேரிலே கேட்கிறேன்.. :))

ஆயில்யன் said...

//சின்ன அம்மிணி said...

//பென்சில் சீவலை மண்ணில் புதைத்து அதன்மேல் பாலை ஊற்றி ரப்பர் செய்யும் கலை//

சைண்டிஸ்ட் ஆச்சி நீங்க///

பாஸ் இது ரொம்ப சிம்பிளா இருக்கு ஆச்சி அதுக்கும் மேல !

புள்ளைக்கி எம்பூட்டு அறிவுன்னு ஆயாக்கிட்ட திருஷ்டி சுத்தி போடச்சொல்லியிருப்பாங்க யாராச்சும்! அதை சொல்லவேயில்ல ஆச்சி :( !

பா.ராஜாராம் said...

Intresting!

பதிவு மற்றும் ஆயில்யன் கமென்ட். :-)

ராமலக்ஷ்மி said...

கோகுலம், பாலமித்ரா,அம்புலிமாமா, ரத்னபாலா..விரும்பி வாசித்தவை. சம்பக் எப்போதாவது. அந்த நாளுக்கே கூட்டிப் போய் விட்டீர்கள். ரஷ்ய கதைகளும் கூடவே படங்களும் அருமையாய் இருக்கும்.

ராஜ நடராஜன் said...

வந்ததுக்கு புரையேறுதல் ஆங்கிலம் இலவசமாக கிடைத்தது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இப்பவும் ஊருக்குப் போனா பூந்தளிர் எடுத்து சாப்பிடும்போது படிப்பேனாக்கும்.. அது ஒரு பொற்காலம்..:) பழசெல்லாம் கண் முன்னே வருது.. நன்றி முல்லை.

நாங்களும் ரப்பர் செய்ய முயற்சி செய்திருக்கோம் ..ஆனா வழக்கம்போல அதன் செய்முறை மறந்து போச்சு.. :)

செல்வநாயகி said...

நல்ல பதிவு முல்லை.

தாரணி பிரியா said...

இந்த புக் எல்லாம் பைண்ட் செஞ்சு வெச்சு இருந்தேன். உள் வீட்டு சதியால ஒரு கெட்ட நாளுல எல்லா புக்கும் பழைய புக் கடைக்கு போயிடுச்சு :)

அக்கினிச் சித்தன் said...

நீங்க கேக்கிறீங்களேன்னு ஒன்னு சொல்றேனுங்க. தம் தம் தம்பீ என்றொரு புத்தகக் கட்டு இருக்கிறது. தூலிகாவின் புத்தகம்தான் இது. சுமார் 10 இருக்கும் இந்தத் தொகுதியில். நண்பர் ஒருவர் என் குட்டிக்குப் பரிசாகக் கொடுத்தார். கைப் பெருவிரல் ரேகையை அச்சாகக் கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் நிறைய உண்டு. அழகான புத்தகம். உறுத்தாத பொருள்!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

::))

☀நான் ஆதவன்☀ said...

குழந்தை மனசு பாஸ் உங்களுக்கு :)) கொசுவத்தி எக்ஸ்பர்ட்டுன்னு உங்களுக்கு பட்டம் கொடுக்கலாம்னு நினைக்கிறேன்.

இய‌ற்கை said...

மிக நல்ல பதிவு

நசரேயன் said...

//சரி, இப்போது எதற்கு இது என்கிறீர்களா? //

அப்படிஎல்லாம் நாங்க கேட்டா எப்படி கும்மி அடிக்கமுடியும்

நசரேயன் said...

// சின்ன அம்மிணி said...
//பென்சில் சீவலை மண்ணில் புதைத்து அதன்மேல் பாலை ஊற்றி ரப்பர் செய்யும் கலை//

சைண்டிஸ்ட் ஆச்சி நீங்க.

2:46 PM//

மயில் இறகை புத்தகத்திலே வைத்து வளர்க்கிறதுமா ?

ராஜ நடராஜன் said...

மறுபடியும் கண்ணுல படுதே பதிவு?

Shakthiprabha said...

எங்களையும் சிறுவயதிற்கு இட்டு சென்று விட்டீர்கள் :) அழகான நினைவுகள். உங்களின் இப்பதிவையும் ( "உனக்கு பிடித்த சாக்லெட் கூட" எனக்கும் ரொம்ப
பிடித்ததால் அந்தப் பதிவையும்) வலைச்சரத்தில் பதிவிட்டுள்ளேன்.

உங்கள் பதிவு இணைத்த
எனது இடுகை