Saturday, May 29, 2010

பனிராஜாவின் மகள்

பப்புவிடம் இருக்கு சில புத்தகங்களில் வேறு வேறு நாடுகள்,கண்டங்களில் இருப்பவர்களின் காலநிலை பற்றி, உடை உடுத்தும் விதம் பற்றி வாசித்திருக்கிறோம். அப்போதெல்லாம் வரும் முக்கிய கேள்வி, ‘பனி எப்போ நம்ம வீட்டுக்கு வரும்'. நம் வீட்டிற்கு, பனி டீவியில் காட்டும் பனி போல பொழிவதில்லை என்று புரியவைக்க முடியாது. அவளுக்கு டீவியில் காட்டும் பனி போல- அவள் விளையாட்டில் செய்யும் பனி பந்துகள் போல வேண்டும்.

அப்போதுதான், இந்த புத்தகம் கோடையின் அக்னி நட்சத்திரத்தின் ஆரம்பத்தில் தூலிகாவினரிடமிருந்து எங்கள் கைகளை வந்தடைந்தது.

”பனிராஜாவின் மகள்”

கோள்மூட்டி கோமளாவும், சுப்பாண்டியும், கபீஷூம் இடுகைக்காக அனுப்பியிருந்தார்கள்.

அட்லசை பார்த்து, அவ்விடத்திற்கே கற்பனையில் விஜயம் செய்யும் சிறுவனின் கதை.

சிறுவன் கேசவ்-விற்கு கோடைவிடுமுறை . “என்ன வெயில்” என்று அம்மா சலித்துக்கொள்ள அட்லசை பார்த்துக்கொண்டிருந்த கேசவ் ”குளுமையான இடத்துக்கு போனால் எப்படி இருக்குமென்று” கேட்பதிலிருந்து அவனது கற்பனை ஆரம்பிக்கிறது. அட்லசில் ஒவ்வொரு இடமாக பார்த்து எங்கெல்லாம் போகலாமென்று கற்பனை செய்வதும்,அந்த ஊரின் மொழியையும் கதைகளையும் அறிந்தவன் போல தன்னை எண்ணிக்கொண்டு பாயில் படுத்தபடி மெதுவாக தனக்குள் பேசிக்கொள்வதுமாக நேரத்தை கழிப்பான்.

அதில் திபெத்தை கண்டுக்கொண்டவன் அம்மாவிடம் அந்நாட்டைப் பற்றிப் பேச, பக்கத்துவீட்டினர் அங்கிருந்துதான் வந்திருக்கிறார்களென்ற செய்தியை சொல்கிறார் அம்மா.அவனுக்கு தெரிந்தவர்கள் அந்நாட்டில் வசிப்பதாக அவன் அறிவது இதுதான் முதல் முறை.பக்கத்துவீட்டுச் சிறுமி லாப்சாங் குழந்தையாக இருக்கும்போதே வந்துவிட்டாள்,அவளது அம்மாவும்,அப்பாவும் இன்னும் திபெத்திலேயே இருக்கிறார்களென்றும் கூறுகிறார் அம்மா.

ஆச்சர்யத்துடன் அட்லசை எடுத்துக்கொண்டு லாப்சாங்கை நோக்கி ஓடும் கேசவ் அந்த சிறுமி மூலமாக அவளது நாட்டைப் பற்றியும்,அங்கு பொழியும் பனியைப் பற்றியும் பேசுக்கொள்வதும்,அவர்களுக்கிடையே உண்டாகும் நட்பு இழையையும் சொல்லும் கதைதான் பனிராஜாவின் மகள்.

இருவரும் ஒன்றாக அமர்ந்து அட்லசை பார்ப்பதும், கற்பனையை ஓட்டி அங்கிருப்பதாகவே நினைத்துக்கொள்வதும், பனியை கையிலெடுத்து உருகுவதாக எண்ணிக்கொள்வதும் - பப்புவையும் அவர்களோடே விளையாட வைத்தது. புத்தகத்தின் படங்கள் ஒரு ப்ளஸ். திபெத்தில் பனி அரண்மனையை கண்டபின், அடுத்து இலங்கையை பார்த்து அங்கே போகலாமா என்று கேசவ் மற்றும் லாங்சாங் கேட்டுக்கொள்வதாக முடிகிறது கதை.


காசு வாங்குவதற்கு வீட்டிற்கு கூர்க்கா வரும்போதோ அல்லது ஏதாவது உணவகத்திலோ மங்கோலிய முகங்களைப் பார்த்தால் ”ஏன் அவங்க அப்படி இருக்காங்க” என்று சில சமயம் பப்பு கேட்டிருக்கிறாள். நம்மை போலில்லாமல் அவர்கள் வித்தியாசமாக இருப்பதைதான் அவள் குறிக்கிறாளென்றாலும் என்னால் விளக்க முடிந்ததில்லை. ”அவங்க வேற ஊரிலேருந்து வந்திருக்காங்க, அவங்க அப்படிதான் இருப்பாங்க ”என்றுதான் சொல்லியிருக்கிறேன், வேறுவகையில் புரிய வைக்க இயலாமல்.

பப்புவின் வயதுக்கு இந்தக் கதை பெரியது தான். அவளுக்கு பூமிஉருண்டை அல்லது மேப்பில் கண்டங்களை மட்டுமே கண்டுபிடிக்கத் தெரியும். ஆஸ்திரேலியாவும் நார்த் அமெரிக்காவும் சால இஷ்டம்! பிறகு துருவங்கள்!

நானும் பப்புவும் கண்ணை மூடிக்கொண்டு ”இப்போ எங்கே இருக்கோம்,பப்பு” என்றதற்கு, “ஆர்டிக்,அண்டார்டிக்” என்றாள்.

“அங்கே என்ன இருக்கு”

”ஹேய், போலார் பேர் அங்கே போகுது பாரு...குட்டி போலார் பேர் பார்த்தியா”

போலார் விளையாட்டு முடிந்ததும், திரும்ப கேசவை போலவே கவிழ்ந்து படுத்துக்கொண்டு கதை புத்தகத்தை விரித்து வைத்துக்கொண்டு எங்கு போகலாம் என்று கேட்டதற்கு “ஆஸ்திரேலியா” என்றாள். ”என்ன பண்ணலாம் அங்கே என்ன இருக்கும்” என்றேன். “கங்காரு” என்று சொல்வாள் என்று எதிர்பார்த்தேன்.

கடல் ஆமைக்குட்டிகளை கடலுக்குள் கொண்டு விடலாமென்றாள் அவள்.

டோராவின் அண்ணன், ஒரு புத்தகத்தில் கடல் ஆமைக்குட்டிகள் முட்டையிலிருந்து வெளிவந்ததும் கடலுக்குச் செல்ல வழிகாட்டுவான்.

கடல் ஆமைக்குட்டிகளுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் என்ன தொடர்பு என்று குழப்பிக்கொண்ட போது பிடிபட்டது, அந்த புத்தகம் எங்களுக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து நண்பர் பப்புவிற்கு அனுப்பியது! :-)

தூலிகாவிற்கு நன்றி!

” பனிராஜாவின் மகள்”
கதை : சௌம்யா ராஜேந்திரன்
சித்திரங்கள் : ப்ரொய்தி ராய்

7 comments:

காமராஜ் said...

பாருங்கள்,இந்த பப்புதான் எங்களை எங்கெங்கெல்லாம் கூட்டிக்கொண்டு போகிறாள்.

நல்லதொரு அறிமுகம் முல்லை.

மீண்டும் பிள்ளையாகக்கிடைத்தது ஒரு சில மணித்துளிகள்.நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல அறிமுகம்..
இங்கே கூட ஒரே வெயில் நானும் பனி இருக்கும் இடமாகப் போக ஆசைப்படறேன்.. :)

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

வல்லிசிம்ஹன் said...

பப்புமா,நானும் உன் கையைப் பிடிச்சிக்கிறேன்பா. என்னியும் கூட்டிட்டுப் போறியா?

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

ஜெயந்தி said...

பிள்ளைகளின் வழியில் தொடர்பை யோசித்து கண்டும் பிடித்துவிட்டீர்கள்.

G.Ganapathi said...

நல்லா இருக்குங்க