Saturday, January 23, 2010

இரண்டு புத்தகங்களும் குடியரசு தினமும்

பள்ளியில் சேர்ப்பதற்கு முன் பப்புவை பார்த்துக்கொள்ள ஒரு முழுநேர உதவியாளரை அமர்த்தியிருந்தோம். அவரிடம், ஈரமாக இருந்த பப்புவின் உள்ளாடையை அலசுமாறுக் கொடுத்தேன். “முதலியார் ஜாதியில் பொறந்துட்டு இதெல்லாம் செய்ய வேண்டிருக்குது” என்றார் வாங்கிக்கொண்டே. இன்னின்ன வேலைகள் அவர் செய்ய வேண்டியிருக்கும் என்று சொல்லித்தான் அவரைச் சேர்த்தோம்.

ஆம்பூரில் கடைத்தெருவிற்கு சென்றிருந்தோம். குறுகலான சந்து. யாரோ வண்டியை குறுக்காக திருப்ப முயல வாகன நெரிசல் ஏற்பட்டுவிட்டது. பின்னர் வண்டிகள் மெதுவாக நகர ஆரம்பித்தன, வ்ழியை அடைத்துக்கொண்டிருந்த வண்டிக்குப் பின்னால் பைக்கில் நின்றிருந்தவர் கத்தினார், ‘ எவன்யா அவன்....சரியான கொல்ட்டியாக இருப்பானா?!”

வாகன நெரிசலுக்கும் கொல்ட்டிக்கும் (ஆம்பூரில் தெலுங்கு பேசுபவர்கள் இருந்தாலும் அதில் ஒரு பிரிவினரை அவ்வாறு அழைப்பார்கள்)
என்ன சம்பந்தம்? என்ன அர்த்தம் அதற்கு? கொல்ட்டி அல்லாதவர்கள் ஒருபோதும் வாகன நெரிசல் ஏற்படுத்த மாட்டார்களா?

அன்றாட வாழ்க்கையிலேயே சாதி நம்மிடையே இந்தளவுக்கு பரவிக்கிடக்கும்போது, அதிகாரம் படைத்த அரசாங்க/தனியார் மயமாக்கப்பட்ட நிர்வாகங்களில் எந்தளவுக்கு புரையோடி போயிருக்கிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது, தலித் முரசு வெளியிட்டிருக்கும் அய்.இளங்கோவன் அவர்களின் “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, எங்களிடம் வராதீர்கள்” என்ற புத்தகம் . இது தலித் முரசுவில் தொடராகவும் வந்திருக்கிறது.

'தகவல் அறியும் சட்டம்' என்பது எத்தனை பயனுள்ளது என்பது இந்த ஒரு புத்தகத்தை வாசித்தாலே தெரியும். தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில், சிறுபான்மையினரின் கல்லூரிகளில் உள்ள பணியிடங்கள், அதில் தலித் மக்களின் இடஒதுக்கீடு, பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடு, அதில் எத்தனை நிரப்பப்பட்டுள்ளன என்ற தகவல்கள், புள்ளிவிவரங்களுடன்! ஆச்சரியமும் திகைப்பும் மேலிடும் ஒரு விஷயம் - அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் ஒரே ஒரு பழங்குடி விரிவுரையாளர் கூட இல்லை என்பது!! ஆசிரியர் அல்லாத பணியிடங்களிலோ ஒரே ஒரு பழங்குடியினர் மட்டுமே. அதுவும் பெருக்குவதற்கு!

பெரும்பாலான ஆதிதிராவிட மக்கள் சுய மரியாதைக்காகவும், சமூகத்தில் சம உரிமைக்காகவுமே இஸ்லாத்துக்கும் கிறிஸ்தவத்திற்கும் மதமாறுகின்றனர். ஆனால், அங்குமே அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்பதே இந்த தகவல்களும், இந்த புத்தகமும் நமக்குக்கூறும் உண்மை. வேறு எங்கோ படித்த நினைவு, “ஆதிதிராவிடர்கள் மதமாறிய பிறகு பிற்படுத்தபட்டவர்களாக கருதப்படுவர்” என்று!


தலித் மற்றும் பழங்குடியினரின் முன்னேற்றத்திற்காக அரசு திட்டங்களை வைத்திருந்தாலும் அதை பயன்படுத்தும் கல்லூரிகள் இல்லையென்றே கூறிவிடலாம். அவர்களின் உரிமையை பெற்றுத்தருவதற்காகவோ பாதுகாக்கவோகூட ஒருவரும் இல்லை. எ.காக,
கல்லூரிகள் தலித் மாணவர்களின் எதிர்கால வழிகாட்டியாக ஒருவரை நியமிக்க வேண்டும். ஆங்கில வழியில் கல்வி கற்கும் திறனை வளர்த்துக்கொள்ள அரசு வழங்கும் மானியம் - இவை எதுவுமே ஒன்றிரண்டு கல்லூரிகளைத் தவிர எதிலும் கடைபிடிக்கப்படுவதில்லை. இன்னும் பெரும்பாலான நல்ல திட்டங்கள் இருந்தாலும் அவை எதுவுமே அவர்களைச் சென்றடையாமல் பார்த்துக்கொள்கின்றன இந்நிர்வாகங்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனைவரும் சமம் என்று கூறும் நமது அரசும், அரசின் மக்களும் தலித்துகளிடமும் சரி ,பழங்குடியினரிடமும் சரி சம உரிமையை நிலைநாட்டுவது இல்லை என்பதே இந்த தகவல்களின் படி நமக்கு விளங்கும் உண்மை. 60 ஆண்டுகளான குடியரசு நாட்டில் ஆதிதிராவிடர்கள்/பழங்குடியினரின் பிரதிநிதித்துவம் எந்தளவில் இருக்கிறது? இந்நிலை தொடர்வதுதான் நமது பெருமையா? கட்சிகள் வெற்று அரசியலையும் வாய் சவடாலையும் தவிர்த்து என்ன செய்திருக்கின்றன ?

இதைத் தொடர்ந்து எனக்குள் பல கேள்விகளை, உணர்வுகளை ஏற்படுத்திய மற்றொரு புத்தகம் விடியல் பதிப்பகத்தின் “சோளகர் தொட்டி” - ச.பாலமுருகன் அவர்கள் எழுதியது. பழங்குடி மக்களின் பண்பாடு, தொன்மங்கள், வாழ்க்கையைப் பேசும் தமிழின் முதல் நாவல் என்று பதிவர் நாதாரி அவர்கள் அறிமுகப்படுத்தினார். நன்றிகள் அவருக்கு! வீரப்பனைப் பற்றிய பல புத்தகங்களை வாசித்திருக்கிறேன். அவையெல்லாம் வீரப்பனை பிரதானப்படுத்தி எழுதப்பட்டவை - ஒரு குழலின் ஒரு முனையிலிருந்து பார்ப்பது போல.

சோளகர் தொட்டி அதே குழலின் அடுத்த முனையிலிருந்து பார்ப்பது போல - வீரப்பனை சாராத மற்ற தொட்டி மனிதர்களைப் பற்றியது (தொட்டி என்பதற்கு ஊர் என்ற பொருள்). வீரப்பனை தேடி வரும் போலீசாரால், மக்களுக்கு நேரும் அவலங்களையும்(உண்மையில் அது மனித உரிமை மீறல்களே!) இந்நூல் பதிவு செய்துள்ளது. ('சந்தனக்காடு' தொலைக்காட்சி தொடரும் அப்பாவி பொது மக்கள் அவதிக்குள்ளாக்கப் பட்டதை பதிவு செய்திருந்தது. )
தொட்டியின் மூத்தவர் தலைவர், கொத்தல்லி. பெயர்தான் தலைவரே தவிர நமது ஊரின் தலைவருக்கான எந்த அடையாளங்களும் இல்லாதவர். கோல்காரன் சென்நெஞ்சா, ஜோகம்மாள், சிக்குமாதா, கெம்பம்மா, போலிசிடம் சிக்கி சீரழியும் மல்லி, மாதி, சிவண்ணா - என்று காட்டை உயிர்நாடியாகக் கொண்டு வாழும் அப்பாவி மக்களைக் கொண்ட நாவல். வீரப்பனைத் தேடி வரும் அமைதிப்படையும் அவர்களின் அக்கிரமங்களையும் அம்மக்கள் அனுபவித்த அடக்குமுறைகளைப் பற்றிச் சொல்லும் நூல். இது உண்மையில் நூலல்ல...அம்மக்களின் வாழ்க்கை!

அதிகாரமில்லாத சாதாரண மக்களாக இருந்தால் அவர்கள் மேல் சர்வ அதிகாரங்களையும் செலுத்த போலீசுக்கு உரிமை கொடுத்தது யார்?
கல்வியும் அதிகாரமும் இல்லாத காரணங்களுக்காக அவர்களின் உரிமைகளை ஏய்க்கும் தனிப்படை! போலீஸ் என்பவர் மக்களுக்கு பாதுகாவலரா அல்லது அவரை அணுகவே நாம் பயப்பட வேண்டுமா? விசாரிப்பதாகக் கூறி அழைத்துச் சென்று நரகவேதனை கொடுக்க காவலர்களுக்கு அனுமதி கொடுத்தது யார்? பழங்குடியினர் என்றும் ஆதிவாசி என்றும் நாம் அழைக்கும் மக்கள் உண்மையில் எத்தனை பண்பாடு மிக்கவர்களாக இருக்கிறார்கள்! அவர்களை மனிதர்களாகவே பார்க்க மறுக்கும் நாம் எத்தகையவர்கள்?

அவ்வளவு ஏன்? நம்மில், எத்தனைபேர் நமது வீட்டில் வேலைசெய்பவர்களை சமமாக நடத்துகிறோம்? செய்யும் வேலையில் உயர்வு தாழ்வு பார்த்தல் பாவமென்று சொல்லிக்கொண்டாலும் நமது வரவேற்பறையின் நாற்காலியில் வீட்டுவேலையாளர்களை உட்கார வைக்கிறோமா? அவர்களாகவே நாற்காலியில் உட்கார்ந்துவிட்டால் நம்மில் எத்தனைபேரால் மனமுவந்து ஏற்றுக்கொள்ள முடிகிறது?

34 comments:

சின்ன அம்மிணி said...

சூப்பர் பதிவு.
சிலருக்கு சாதியைப்பொருத்துதான் வேலை. சிலருக்கு ஒருசில வேலையைத்தட்டிகழிக்க சாதி.

தமிழ் பிரியன் said...

ஏன்னு கேட்கிற நிறைய கேள்விகளை பதில் தெரியறது இல்ல... இல்லையென்றால் தெரியாத மாதிரி நடிக்கிறோம்.

அமைதிச்சாரல் said...

ஆச்சி.. உங்களின் வேறு எந்தக்கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லாமல் இருந்தாலும், உங்களின் கடைசிக்கேள்விக்கு என்னால் தலை நிமிர்ந்து, பதில் சொல்ல முடியும்.

எனது அசிஸ்டென்ட்(நான் அப்படித்தான் சொல்லிக்கொள்கிறேன்)எந்த விதமான பாகுபாடு இல்லாமல்தான் நடத்தப்படுகிறார்.கடைசிவரிகளில் குறிப்பிட்டிருப்பதற்கும் மேலாகவே.

இது செயற்கரிய செயல் இல்லை என்று நான் நினைக்கிறேன்.இதில் பெருமை தேவையில்லை என்றும் நினைக்கிறேன்.

கோமதி அரசு said...

ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய
விஷயத்தை எழுதி உள்ளீர்கள்,
முல்லை.

பின்னோக்கி said...

அருமையான பதிவு.
(மீ த பர்ஸ்ட் போடணும்னா, பதிவு படிக்குறத்துக்கு முன்னாடியே இப்படி போடணும். படிச்சுட்டு, அடுத்த பின்னூட்டம்)

பின்னோக்கி said...

பாரதி செய்த தவறு “சாதிகள் இல்லையடி பாப்பா”ன்னு சொன்னது. எல்லாரும் பாப்பாவுக்குத் தானே என்று நினைத்துக் கொள்கிறோம்.

நட்புடன் ஜமால் said...

மனிதன் மீது மனிதன் என்ற பார்வை வீசுவதே இல்லை
ஆ-வாகட்டும் நா-வாகட்டும்

--------------


கடைசி பத்திக்கு அவ்வளவு எளிதாக பதில் சொல்ல இயலவில்லை -

சாப்பாட்டு மேஜையிலும், தொழுகையிலும் மட்டுமே கடைபிடிக்க இயலுகிறது - மற்றவிடத்தில் - ஹூம் இன்னும் மாறனும் ...

வினவு said...

குடியரது தினத்தை ஒட்டி தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு விடிவே இல்லை என்பதை இரு புத்தகங்கள் வாயிலாக பகிர்ந்தமைக்கு நன்றி

Vidhoosh said...

தப்பா நினைக்க வேண்டாம். சத்தியமா நீங்க சொல்லவரது புரியலை? இரண்டு தரம் படிச்சுட்டேன். :(

☀நான் ஆதவன்☀ said...

நானும் ’ஏன்?’னு ரொம்ப நாளா கேட்டுகிட்டு தான் இருக்கேன்.... எப்போ விடை தெரியும்னு தான் தெரியல!

நல்ல பதிவு & புத்தக பகிர்வு

சிங்கக்குட்டி said...

நல்ல விசையம் சந்தனமுல்லை வாழ்த்துக்கள்.

Deepa said...

முதல் பாராவிலேயே அதிர்ச்சி ஏற்படுகிறது. ஜாதி எந்தளவு சமூகத்தில் ஊறி இருக்கிறது என்பதற்கு சாட்சியாக.

இரு புத்தகங்களையும் பற்றிய அலசல் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

கடைசி வரி மிக முக்கியமானது. இது பற்றி இன்னும் ஒரு இடுகையை எதிர்பார்க்கிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கடைசி கேள்விக்கு ஒகே, நாங்க பிரிவு பாக்கறதில்ல அல்லது அப்படி தோணியது இல்லை .. எங்க வீட்டுல ஹாலில் சோபாவில் உக்காரலாம்..உக்காந்திருக்காங்க. நானும் அவங்க வீட்டுக்கு போவேன்.. அந்தவர்களின் பெரிய குழந்தைகள் வந்தாலும் இணைந்து விளையாடுவார்கள்..
வீட்டுவேலை உதவிக்கு வந்த பழய ஆட்கள் கூட இன்னமும் நினைவு வைத்து வந்து போவது வேறு பலருக்கு ஆச்சரியமாக இருக்கும்.. எதுக்கு வந்தாங்கன்னு கேப்பாங்க..

அமைதிச்சாரல் சொன்னதும் சரிதான் \\இது செயற்கரிய செயல் இல்லை என்று நான் நினைக்கிறேன்.இதில் பெருமை தேவையில்லை என்றும் நினைக்கிறேன்.//

ப்ரதிநிதிகளாக மேலே வந்தவர்கள் உண்மையில் அதை செய்யாமல் அல்லது செய்ய இயலாமல் இருப்பதே பலகாலமாக ஆகியும் நிலைமை மாறாமல் இருக்க காரணமாக இருக்கலாமோ..

மாதவராஜ் said...

இந்தப் பதிவில், முல்லை அவர்களின் இன்னொரு பரிமாணத்தை பார்க்க முடிந்தது. சத்திய ஆவேசக்குரலாய் ஒலித்திருக்கிறது.

பகிர்வுக்கும், எழுப்பிய கேள்விகளுக்கும் நன்றி.

பதி said...

இரண்டு நல்ல புத்தகங்களைப் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி.

"சோளகர் தொட்டி"யைப் பற்றி பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த நூலாய்வுப் (அறிமுகப்) பதிவு ஒன்று

http://djthamilan.blogspot.com/2005/08/blog-post_11.html

இதையொத்த மற்றொரு புதினமாக "ஸி.கே.ஜானுவின் வாழ்க்கை வரலாறினை" குறிப்பிடலாம்

http://tamilnathy.blogspot.com/2007/03/blog-post_8091.html

பதி said...

புத்தக விமர்சனங்களை பற்றி மட்டும் குறிப்பிட்டுவிட்டு உங்களது இந்தப் பதிவைப் பற்றி சொல்லாவிட்டால் எப்படி ??

இந்தக் காலத்தில் எல்லாம் யார் சார் சாதி பாக்குறாங்க, இன்னமும் எதுக்கு இடப் பங்கீடு (ஒதுக்கீடு அல்ல) என கேட்பவர்களுக்கு காட்ட பயன்படும் மற்றுமொரு ஆதாரம் !

:(

தமிழ் உதயம் said...

மனமாற்றம் நிகழாத வரை சாதீய பாகுபாடு நீங்காது. சரி... மனமாற்றம் என்று நிகழும். அரசாங்கத்தால் மட்டுமே அது சாத்தியம். ஆனால் அரசு என்ன செய்கிறது. தன் கடமைகளை சரி வர செய்யாமல், தனக்கு எது லாபமோ, அதை மாத்திரமே செய்து, தன்னாலான கெடுதல்களை அவை செய்து வருகின்றன.

கையேடு said...

முனை கூராகிச் செல்கிறது
கிழிபடப்போகும் குப்பைகளை
எதிர்நோக்கி..

காமராஜ் said...

எனக்குத் தெரிந்து ஒரு தகவல் தொழில் நுட்ப வல்லுநர் வெளிநாட்டிலிருந்து இறங்கிய சூடு மாறுவதற்குள் தேய்க்கிறவன் வல்லியா என்று கேட்டார்.
சாதி இரண்டொழிய வேறில்லை என்று ஆரம்பித்து பதினெட்டு வருஷம் படித்து முடித்து,
வெளி நாட்டுக்குப் போய்விட்டு, அங்கிருக்கிற எல்லா மாற்றங்களையும் உள் வாங்கிக் கொண்டு திரும்ப வந்து வீட்டு வாசலில் கால் வைத்தவுடன் ஜாதிப்பல் நீண்டுவிடுவது
எவ்வளவு முரண்.
முல்லை உனது அல்லது உங்களின் இந்தப்பதிவு இயல்பாய்
இழுத்துக் கொண்டுபோய்
சுரீர் என்று வலிக்குபடி
அடிக்கிறது.
வலிக்கணும்.
வாழ்த்துக்கள் பா.

நசரேயன் said...

//
Vidhoosh said...

தப்பா நினைக்க வேண்டாம். சத்தியமா நீங்க சொல்லவரது புரியலை? இரண்டு தரம் படிச்சுட்டேன்.
//

அல்லோ... நீங்க எழுதுற எல்லாம் இருபது தடவை படிச்சாக் ௬ட எனக்கு புரியலையே

நசரேயன் said...

விடை இல்லா கேள்விகள் பதில் கிடைகிறது ரெம்ப கஷ்டம்

செல்வநாயகி said...

முல்லை,
உங்களின் இத்தகைய பதிவுகளை மேலும் எதிர்பார்க்கிறேன். ஆயிரம் காலத்து அழுக்கை நொடிகளில் கழுவிவிடும் சக்தியற்ற சாமானியர்கள்தான் நாம். ஆனால் அவை குறித்த இத்தகைய சிந்தனைகள் குறைந்தபட்சம் நம்மை, நம் சந்ததியை அவற்றிலிருந்து மீட்டெடுத்துக் கொள்ள உதவுகின்றன. அதுவும் பெண்களுக்கு இத்தகைய சிந்தனைகள் எழுவது நமது குடும்ப அமைப்புகளில் அவை கடத்தப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகப் படுத்துகின்றன. நல்ல பதிவு.

kanagu said...

சாதிகள் நம்மிடையே இல்லாமல் இல்லை... நகரம் என்பதால் பலர் அதை வெளிகாட்டாமல் இருக்கிறார்கள்... கிராமங்களில் இன்னும் நிலைமை மோசமாகவே இருக்கிறது...

அரசு சட்டங்களை இயற்றுகிறது... அந்த சட்டத்தின் பலனை மக்கள் அணுபவிக்க வேண்டிமெனில் அதை அதிகாரிகள் கொண்டு சேர்க்க வேண்டும்.. ஆனால் என்ன செய்வது.. அவர்களும் ஏதோ ஒரு உயர் சாதியினராக இருக்கின்றனரே....

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

அந்தமானில் வீட்டுப்பணிக்கு வருவோரிடம் அவமரியாதையாக நடந்து கொண்டால் அவர்கள் வரவும் மாட்டார்கள்.வருபவர்களிடம் அவ வீட்டுக்கா போற! சீ என்பார்கள்.மனிதரை மனிதர் மதிக்காததற்கு எல்லாவற்றையும் பொறுத்துப் போகும் பணியாளர்களும் ஒரு காரணம்.அவர்களுக்குள் ஒற்றுமை இருந்தால் மற்றவர்களைச்சார்ந்திருக்கும் மேல்தட்டு மக்களை ஒரு கை பார்த்து விடலாம்.

naathaari said...

உங்கள் பாதங்கள் சரியான தடத்தை நோக்கி திரும்பியிருக்கிறது கரங்களும் அப்படியே கூர்பட்டுவரும் எழுத்து கிழிக்கும் இலக்கை

பா.ராஜாராம் said...

செல்வநாயகி said...


//முல்லை,
உங்களின் இத்தகைய பதிவுகளை மேலும் எதிர்பார்க்கிறேன். ஆயிரம் காலத்து அழுக்கை நொடிகளில் கழுவிவிடும் சக்தியற்ற சாமானியர்கள்தான் நாம். ஆனால் அவை குறித்த இத்தகைய சிந்தனைகள் குறைந்தபட்சம் நம்மை, நம் சந்ததியை அவற்றிலிருந்து மீட்டெடுத்துக் கொள்ள உதவுகின்றன. அதுவும் பெண்களுக்கு இத்தகைய சிந்தனைகள் எழுவது நமது குடும்ப அமைப்புகளில் அவை கடத்தப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகப் படுத்துகின்றன. நல்ல பதிவு.//

ஆம்!

ச.முத்துவேல் said...

சோளகர் தொட்டி நானும் இப்போதுதான் வாசித்தேன். முக்கியமான நூல் அது.சந்தனக்காடு தொடரும் ஓரளவு தொடர்ந்து பார்த்தேன்.

Thekkikattan|தெகா said...

இந்த மாதிரி கேள்விகள் இன்னும் ஆயிரமாயிரம் நம்ம நாமே கேட்டுக்கணும் இத்தினிகூண்டு நம்மை நாமே வளர்த்துக்கணும்னா கூட, இந்தப் பிறப்பிலேயே.

நல்ல சிந்தனை!

anamika said...

நகரத்தில் வாழ்ந்து வருபவர்களுக்கு சாதி வித்தியாசங்களைப் பார்க்க நேரமும் கிடைப்பதில்லை எதார்த்தத்தில் முடியவும் முடியாது என்றே நினைக்கிறேன். அதே நேரம் ஒன்றை கூற வேண்டும் என்று நினைக்கிறேன். அரசு அலுவலகம் சென்று பாருங்கள். கேடயமாகக் கொடுக்கப்பட்டதை பெரும்பாலான SC/ST ஊழியர்கள் ஆயுதமாக உபயோகப்படுத்தி வேலை செய்யாமலும் செய்யச் சொல்பவர்களை மிரட்டியும் வருகிறார்கள் என்பதை காண்பீர்கள். இதை குறித்து ஏன் யாரும் பேசுவதில்லை? இப்படி இருந்தால் ஏற்ற தாழ்வு மறையாது இடம் மாறும் அவ்வளவுதான்.

அமுதா said...

அருமையான பதிவு முல்லை. நியாயமான கேள்விகள். கடைசியாகக் கேட்ட கேள்வி சாதிக்கும் பொருந்தும். சாதி இல்லை என்று சொல்லிக் கொண்டே இன்னும் பாகுபாடு இருக்கின்றது. வெளிப்படும் நேரங்கள் மாறுகின்றன. இன்று பள்ளிகளின் பெயரை வைத்தே மதமும், சாதியும் சொல்ல முடியும் என்பதே சாதியும் இல்லை , மதமும் இல்லை என்று நாம் சமுதாயம் உருவாக்குகிறோம் என்று சொல்லும் வார்த்தைகளின் பூச்சைக் காட்டுகின்றன.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நம்மில், எத்தனைபேர் நமது வீட்டில் வேலைசெய்பவர்களை சமமாக நடத்துகிறோம்? செய்யும் வேலையில் உயர்வு தாழ்வு பார்த்தல் பாவமென்று சொல்லிக்கொண்டாலும் நமது வரவேற்பறையின் நாற்காலியில் வீட்டுவேலையாளர்களை உட்கார வைக்கிறோமா? அவர்களாகவே நாற்காலியில் உட்கார்ந்துவிட்டால் நம்மில் எத்தனைபேரால் மனமுவந்து ஏற்றுக்கொள்ள முடிகிறது? //

சாட்டையடி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

சோளகர் தொட்டி - பகிர்வுக்கு நன்றி

ராமலக்ஷ்மி said...

மிக நல்ல பதிவு.

//அவர்களை மனிதர்களாகவே பார்க்க மறுக்கும் நாம் எத்தகையவர்கள்? //

சமுதாயத்துக்கான கேள்வியைத் தொடர்ந்து கடைசியாக எழுப்பியிருக்கும் கேள்வி ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கிறது முல்லை.

thiruchchi said...

Dear Brother Sandhanamullai,

I reached this site, throgh tamilhindu. A gentle man named kudukuduppai has beeb posting good comments there and also referred this blog. Is kudukudppai and Sandanamullai are same? I will soon write an article in my blog about the necessity of a Dalith becoming a Sankaraachaaryaa.

I have already written some articles in my blog about homogenious socity. Kindly visit.

http://thiruchchikkaaran.wordpress.com/2009/12/08/casteless-homogenious-soceity-1/