Tuesday, January 19, 2010

சாலையோரம்.....

இது நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியிருக்கும். மடிப்பாக்கத்திலிருந்து கிண்டி செல்வதற்கு பிருந்தாவன் நகர் வழியாக வந்துக்கொண்டிருந்தேன். குறுக்குவழிதான். கொஸ்டின் பேங்க்-கை படித்து முன்னேறிய தலைமுறையாச்சே! மேலும் சிக்னல்கள் எதுவும் இருக்காது..வாகன நெரிசலும் குறைவுதான். ரோடிலேயே ஒரு கோயில் வரும். அங்கு மட்டும் கொஞ்சம் நெரிசலாக இருக்கும். உருட்டிக்கொண்டு செல்ல வேண்டியிருக்கும்.

அன்றும் அப்படி உருட்டிக்கொண்டு சென்ற போது எனக்கு முன்பு பைக்கில் சென்று கொண்டிருந்தவர் சடாரென்று நிறுத்திவிட்டார். நானும் உடனடியாக பிரேக் போட்டதில் அவரது வண்டியின் இலக்கத்தகடின் மீது லேசாக இடித்துவிட்டேன். திரும்பிப் பார்த்தவரிடம் 'சாரி' சொல்லிவிட அவரும் தலையசைத்தார். அதற்குள் வாகனங்கள் நகரத்துவங்கியது. அந்த சாலைஆஷ்ரம் பள்ளி இருக்கும் மெயின் ரோடில் வந்து இணையும். அந்த பள்ளியருகே பைக்கில் வந்தவர் என்னை வழி மறித்தார்.

ஏதோ சொல்ல வருகிறாரென்று நானும் நிறுத்தினேன். பைக்கை நிறுத்திவிட்டு என்னிடம் வந்தவர் அவரது இண்டிகேட்டர் லைட்டை நான் உடைத்து விட்டதாக சொன்னார். பார்த்தால் அது ஒரு பக்கம் தலை சாய்த்துக்கொண்டிருந்தது. நான் இடித்தது அவரது இலக்கத்தகடைதானென்றும் இண்டிகேட்டரை நான் உடைக்கவில்லை என்றதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. காசு கொடுத்துவிடுமாறு கூறினார். நான் மறுத்து ஸ்கூட்டியின் உயரத்தையும் அவரது இண்டிகேட்டரின் உயரத்தையும் காட்டினேன். மேலும் நான் உண்மையில் உடைக்கவில்லை..அவர் சடாரென்று ப்ரேக் போட்டால் நானும் என்ன செய்ய முடியும்...எனக்கும் பின் வந்தவர்கள் என் வண்டியின் மேலும் தானே மோதினார்கள் என்று சொல்ல அவர் காசு கொடுக்குமாறு வலியுறுத்திக்கொண்டிருந்தார்.

அந்த சாலை ஒரு பக்கத்தில் பழக்கடைகள் இருந்தன. அதைத் தவிர வேறுக் கூட்டமில்லை. சரி, போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று கம்ப்ளெயின் கொடுப்போம் என்று சொன்னதும் அவர் எனது வண்டியின் சாவியை படக்கென்று எடுத்துக்கொண்டார். இது முற்றிலும் நான் எதிர்பாராத ஒன்று.
இப்படி ஒன்றுக்கு நான் தயாராகவே இல்லை. உண்மையைச் சொன்னால் அப்போதுதான் எனக்கு இக்கட்டில் மாட்டிக்கொண்டாற்போல இருந்தது. முகிலுக்கு போன் செய்யலாமென்றால் கைப்பை எல்லாம் வண்டிக்குள் இருந்தது.

கோபத்துடன் நான் குரலுயர்த்தி எனது சாவியைக் கொடுக்குமாறு சொன்னேன். அவன் நூற்றைம்பது ரூபாயாவது கொடுக்குமாறு சொன்னான். 'குடுத்துட்டு போயிடுங்க மேடம், உங்களுக்கு எதுக்கு பிரச்சினை' என்று அவனே அட்வைஸ். அதற்குள் ஒரு நாலைந்து பேர் வந்துவிட்டார்கள். அப்போதுதான் இது ஏதோ பிரச்சினை என்று அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது. விசாரித்தவர்களிடம் என் வண்டி சாவியை கொடுத்துட்டு எதுன்னாலும் பேசச் சொல்லுங்க என்றேன். கோபமாக வந்தது. அவன் சாவியை எடுத்தது எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஊட்டியது.

அதற்குள் வேறு எங்கிருந்தோ ட்ராபிக் போலீஸும் வந்து விட கும்பலும் சேர ஆரம்பித்தது. போலிஸிடம் அவனே எல்லாவற்றையும் சொன்னான். அதன்பின் போலிஸ் அவனது இண்டிகேட்டரையும் பார்வையிட்டார். அவரிடம் என் பங்குக்கு நானும் சொன்னேன். வண்டியின் இண்டிகேட்டரை உடைக்காததையும், இலக்கத்தகடை இடிக்க நேர்ந்ததையும், அதுவும் அவன் சடன் பிரேக் போட்டததால்தான் என்றும். பின்னர் போலீஸ் சாவியை வாங்கி என்னிடம் கொடுத்துவிட்டு அவனது இண்டிகேட்டர் இப்போது உடைந்ததில்லை, ஏற்கெனவே உடைந்ததை அவன் டேப் போட்டு கட்டியிருந்தது இப்போது ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டிருக்கிறதென்றும் கூறினார்.

மேலும் கம்ப்ளெயின் செய்ய வேண்டுமானால் கிண்டிக்குச் செல்லுமாறு கூறினார். அவர்கள் மேற்கொண்டு விசாரிப்பார்களென்றும் சொன்னார். அதன் பின்னர் அவன் போன மாயம் தெரியவில்லை. எனக்கு இதை கம்ப்ளெயின் செய்ய வேண்டும் போல இருந்தது , ஆனால் வண்டி எண்ணை மட்டும் வைத்து என்ன செய்வது அல்லது வேறு எப்படி கையாள்வது என்றுத் தெரியவில்லை. அலுவலகம் வந்து சேர்ந்துவிட்டேன். நண்பர்களிடம் சொன்ன பிறகு கொஞ்சம் படபடப்பு அடங்கியது. நான் நிறுத்தியதுதான் தவறென்று கூறினார்கள். கையை ஆட்டி என்னெதிரில் மறித்துக்கொண்டு ஓரமாக வந்தால் எப்படி நிறுத்தாமல் இருப்பதென்று புரியவில்லை. ஆனாலும் நெடுநாளைக்கு அந்த வண்டியின் நம்பர் நினைவிலிருந்தது - அந்நிகழ்வின் பாதிப்பும்.

அந்த சாலையில் போகும்போதெல்லாம் எனக்கு முன்செல்லும் வண்டி அதுவாக இருக்குமோ என்று பார்த்துக்கொண்டிருந்தேன் கொஞ்ச நாள். பார்த்தால், நிறுத்தி நாலு திட்டு திட்டலாம் என்றுதான். யாருக்குத் தெரியும், ஒருவேளை அந்த நபர் இதை வாசித்துக்கொண்டு கூட இருக்கலாம். தினமும், செலவுக்கு இப்படி வழிமறித்து 'நூதன பிச்சை' கூட எடுப்பதை இன்னமும் தொடர்ந்துக்கொண்டிருக்கலாம். அல்லது, குற்றவுணர்ச்சியே இல்லாமல் தனது டெக்னிக்கை மாற்றியுமிருக்கலாம்.

ஆனால் எனக்கு அன்றைக்கு தேவையாக இருந்தது - இதுபோல் நிகழும்போது எப்படி கையாள்வது, யாரைத் தொடர்பு கொள்வது, வண்டியின் சாவியை தொடும் தைரியம்அவனுக்கு எப்படி வந்தது - இனி அவன் அப்படி நடந்துக்கொள்ளாமல்/ஏமாற்றாமல் இருப்பான் என்று என்ன நிச்சயம் என்பதுதான்.

அடுத்த சில தினங்களில் எனக்கு ஒரு ஃபார்வர்டு மெயில் வந்திருந்தது.ஏற்கெனவே சில வருடங்களுக்கு முன் சுற்றிக்கொண்டிருந்தது தான். அது இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறதா என்று ஆச்சரியமாக இருந்தது. மெயிலாக இருந்தது இப்போது தளமாகவும் மாறி இருக்கிறது! ஆண்களில் bad drivers இருப்பதுபோலத்தான் பெண்களிலும். ஓட்டுகிற எல்லா பெண்களையும் குற்றம் சொல்லும்போது நாம் தவறு செய்யும் ஆண் வாகன ஓட்டிகளை மன்னித்து விடுகிறோம். ஆண்கள் தவறு செய்தால் ஒப்புக்கொள்கிற நாம் பெண்கள் தவறவே கூடாதென்று எதிர்பார்க்கின்றோம். லைசன்ஸ் வாங்காத பையனையும் கார் ஓட்ட அனுமதிக்கிற நாம் (லைசன்ஸ் வைத்திருக்கும்) பெண்கள் U டர்ன் எடுக்கும்போது மட்டும் ஹார்ன் அடித்து தவிக்க விடுகிறோம்! ஏன்?

ரொம்ப நாளைக்கு முன்னால் சின்ன அம்மிணி ஒரு தொடர் இடுகைக்கு அழைத்திருந்தார். சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு - பெட்டர் லேட் தேன் நெவர் -ன்னு இப்போ எழுதறேன்..சின்ன அம்மிணி மன்னிக்கணும். :-) சாலை பாதுகாப்பும் சாலையில் பாதுகாப்பு பத்தியும் எப்போ வேணா எழுதலாம். நான் அழைக்க விரும்பும் நால்வர்,

மயில் (எ) விஜிராம்
தீபா
முத்துலட்சுமி
ஹூசைனம்மா

முன் அனுமதி இல்லாமலே அழைத்திருக்கிறேன், உரிமையோடும் - தங்களின் பகிர்தலை வாசிக்கும் ஆவலோடும்!

24 comments:

Deepa said...

//கோபத்துடன் நான் குரலுயர்த்தி எனது சாவியைக் கொடுக்குமாறு சொன்னேன். அவன் நூற்றைம்பது ரூபாயாவது கொடுக்குமாறு சொன்னான். 'குடுத்துட்டு போயிடுங்க மேடம், உங்களுக்கு எதுக்கு பிரச்சினை' என்று அவனே அட்வைஸ்.//

எவ்வளவு கோபம் வந்திருக்கும் என்று யூகிக்க முடிகிறது. என்ன திமிர் அவனுக்கு?

நல்ல விஷயத்தைத் தொடர அழைத்திருக்கிறீர்கள். ஆனால் இக்கட்டான சூழ்நிலைகளைக் கையாள்வது பற்றி எனக்கு வாழ் நாள் பூரா யாராச்சும் க்ளாஸ் எடுத்தா நல்லாருக்கும். :-) நான் சந்தித்ததை மட்டும் பகிர முயல்கிறேன்.

ஹுஸைனம்மா said...

விபத்தைத் தடுக்க மட்டுமல்ல, இதுக்கும்கூட விழிப்புணர்வு தேவைதான் இல்லையா?

பாதுகாப்பு வாரம் முடிஞ்சவுடனே அப்பாடா, இனி யாரும் தொடர்பதிவுக்கு அழைக்க மாட்டாங்கன்னு இருந்தேன். ஆனா, பாதுகாப்பு அந்த ஒரு வாரத்தோட முடிஞ்சுபோற விஷயமில்லையே!!

நசரேயன் said...

பிரபலமானாலே இப்படித்தான் பிரச்சனை வருமோ ?

குடுகுடுப்பை said...

நானா இருந்தா காச கொடுத்துட்டு ஆள விடுறா சாமின்னு வந்திருப்பேன். அவ்ளோ துணிச்சல் எனக்கு.

உண்மைய்லேயே நீங்கள் வீரர்தான்.

நட்புடன் ஜமால் said...

'நூதன பிச்சை' - சவுக்கடி

சின்ன அம்மிணி said...

அந்த பார்வேர்டு மெயில் இன்னும் உலக அளவில சுத்திக்கிட்டுதான் இருக்கு.

இந்த மாதிரி விழிப்புணர்வு பதிவுக்கெல்லாம் லேட்டு சீக்கிரம்னு கிடையாது ஆச்சி. :)

டம்பி மேவீ said...

இந்த மாதிரியான சமயங்களில் பொறுமையையும் நிதானத்தையும் எந்த காரணம் கொண்டும் இழக்க கூடாது ......

ஒருவர்/ போலீஸ் யாராக இருந்தாலும் நமது வாகனத்தை கை காட்டி நிறுத்தும் பொழுது .....நிறுத்திய உடனே சாவியை எடுத்து நாம் வைத்து கொள்ள வேண்டும் .......

முக்கியமாக எதிராளி வீணாக கோவப்பட்டு கத்தும் பொழுது அவனை பார்த்து நாம் லேசாக சிரிக்க வேண்டும்...இது அவனது மன தைரியத்தை குழைத்து விடும் .......

பிறகு நியாயத்தை பேசி கொள்ளலாம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

விசயம் என்னவோ உங்களுக்கு நேர்ந்த கஷ்டத்தைப் பத்தி , ஆனா எழுதின விதம் ரொம்ப சூப்பர்..
இதே தொடருக்கு ஆதவன் கூப்பிட்டப்ப குளிரைக் காரணம் காட்டி மறுத்தேன்.. ஆனா இப்ப அந்த குளிரையே காரணமா வச்சு பதிவு போட்டுடறேன்.. :)

\\ஆனால் இக்கட்டான சூழ்நிலைகளைக் கையாள்வது பற்றி எனக்கு வாழ் நாள் பூரா யாராச்சும் க்ளாஸ் எடுத்தா நல்லாருக்கும். :-)// இது சூப்பரோ சூப்பர்.. எனக்கும் அட்மிசன் வேணும்..

Vidhoosh said...

நல்ல பதிவு முல்லை. நீங்கள் வண்டி என்னை வைத்துக் கூட புகார் கொடுத்திருக்க முடியும். கொஞ்சம் சொந்த நேரம் விரயமாகுமே தவிர, செய்த புகாருக்கு பலன் இருக்கோ இல்லையோ, தவறான ஒருவனை முக மூடி உரித்து அடையாளம் காட்டிய திருப்தியாவது இருந்திருக்கலாம். :) இருந்தாலும், அவன் இதே பாணி மிரட்டலில் நிறைய பெண்களிடமும் வயதானவர்களிடமும் பணம் பறித்திருப்பான். அந்த துணிச்சலில்தான் உங்களிடமும் முயன்று பார்த்திருக்கிறான்.

நல்ல பகிர்வு.

-வித்யா

ஆதிரை said...

ஆம்... அந்த மெயில் எனக்கும் கிடைத்தது. :)

மயில் said...

ம்ம்ம், நான் வண்டி ஓட்டும் விதம் உங்களுக்கு நல்லாவே தெரியும் :))
அப்படி இருந்தும் என்னை தொடர சொன்னா எப்படி ?? :))

மாதவராஜ் said...

நல்ல பகிர்வு. முதலில் பைக் நபரை அவரென்றும், சம்பவத்தில் அந்த நபர் நடந்துகொண்ட விதத்திற்குப் பிறகு அவனென்றும் கையாண்டிருப்பதை ரசித்தேன்.

கோமதி அரசு said...

எப்போதும்,எங்கும் நல்ல விழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை உங்கள் பதிவு சொல்கிறது
முல்லை.

எப்படி ஏமாற்றுவது எனறு கலையாக
கற்றவர் போலும்,அவர்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஏன் ஏஎன் இப்படி வேகம் /a> ன்னு தொடர்ந்து பதிவு போட்டிருக்கேன் .. நன்றிப்பா முல்லை..

பின்னோக்கி said...

ஸ்கூட்டியில் போகும் பெண்களை ஹார்ன் அடித்து துன்புறுத்தும் பலரை பார்த்திருக்கிறேன். கண்டிக்கத்தக்கது. அந்த வண்டி எண்னை வைத்து புகார் குடுத்திருக்க வேண்டும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு

Anonymous said...

நல்லா எழுதியிருக்கீங்க பாவம்தானே அவனுக்கு கொடுத்திருக்கலாமே இன்டிகேட்டரை டேப் போட்டு சுத்திவைக்கிறாளவுக்கு இருந்தால் பாக்கெட் காலியாயிருந்திருக்கும் என்றுதானே அர்த்தம் இலக்கப்பலகையில் அடித்த அதிர்வில் கட்டிவைக்கப்பட்டிருந்த இண்டிக்கேட்டர் உடைந்திருக்கும் வன் டேப் கேட்டிருக்கலாம் கொXசம் அதிகமாக கேட்டுவிட்டான் அவ்வளவுதான்

அமைதிச்சாரல் said...

நல்ல பகிர்வு ஆச்சி.ஆணோ.. பெண்ணோ.. சாலையில் மட்டுமல்ல இதுபோன்ற விஷயங்களிலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியிருக்கிறது.

அம்பிகா said...

நல்ல அனுபவ பகிர்வு + பின்னூட்டங்கள்.

குப்பன்.யாஹூ said...

can you type the vehicle's regn no. we can find out the address. TN22 or TN09

அமுதா said...

நல்ல அனுபவ பகிர்வு

லெமூரியன்... said...

சாவிஎடுப்பது சென்னை கலாசாரம் என்று நினைக்கிறேன்... எனது சகோதரி மிக மெதுவாகத்தான் வண்டியை செலுத்துவார்...எம் எம் டி ஏ பகுதயில் ஒரு பள்ளி முடிந்து மாணவ மாணவிகள் வெளியேறிக்கொண்டிருந்த நேரம் போல... சாலையை கவனிக்காமல் ஹாரன் சப்தத்தை கூட கேட்க்காமல் ஒரு எட்டாம் வகுப்பு மாணவி சாலையை கடக்க முயற்சிக்க....பிரேக் போட்டும் நிற்காமல் வண்டி அந்த பெண் மீது மோதிவிட்டதாம்.. வண்டியை நிறுத்தி விட்டு அந்த பெண்ணை தூக்கி விட சென்ற பொழுது அப்பெண்ணின் தோழர்களில் ஒருவன் எனது சகோதரியின் வண்டி சாவியை எடுத்திருக்கிறான்....கோபம் கொண்டு சற்று கடுமையாகவே திட்டிய பின்புதான் சாவியை ஒப்படைத்திருக்கிறான் அவன்...தமிழ் சினிமா வயது மூத்தோர்களிடம் எப்படி நடக்க கூடாது என்பதையும் எப்போதோ கற்று கொடுக்க ஆரம்பித்து விட்டது என நினைத்து கொண்டேன்..

வெ.இராதாகிருஷ்ணன் said...

இக்கட்டான சூழலில் நடந்து கொள்வது பற்றியும், பணம் பறிக்கும் கும்பல் பற்றியும் அறியச் செய்த பதிவு. எல்லா இடங்களிலும் இதுபோன்று நடந்தேறுகிறது.

எறும்பு said...

சாலையோரம் தொடர் இடுகை


http://yerumbu.blogspot.com/2010/01/blog-post_25.html