Wednesday, May 12, 2010

ஒ ஃபார் ...

ஒரு நாள் ஒரு கனவு...

”இனிமே லைஃப்லே கொடைக்கானல் பக்கம் தலைவைச்சே படுக்க மாட்டேன் யா' என்று எல்லோரும் தீவிர தீர்மானத்தை நிறைவேற்றியபோது, 'ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் - அதுவும் கருப்பு ஸ்ப்லெண்டர் - சிலுசிலுன்னு காத்து - கூட பாட்டு - ஹேர் பின் பெண்ட்ஸ் - லெதர் ஜாக்கெட் - ஏகாந்தமா தனியா ஓட்டுக்கிட்டு வரணும்' என்கிற ரம்மியமான கனவுகளோடுதான் கொடையை விட்டு ஒரேயடியாக இறங்கினேன்.


அதுவும் பழனி டூ கொடை மலைப்பாதை அழகான பள்ளத்தாக்குகளையும், அங்கங்கே நீர் வீழ்ச்சி,சிற்றோடைகளையும் அடர்ந்த காடுகளையும் கொண்டது. அவ்வப்போது ஒலிக்கும் பறவைகளின் விநோத சத்தங்களும், எப்போதாவது கடந்து செல்லும் லாரி அல்லது பஸ் எஞ்சின் சத்தங்கள் தாண்டி நாமும், இயற்கையும், யூக்கலிப்டஸ் மணம் நிரம்பிய காற்று மட்டுமே!நினைத்த இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு..ஸ்டைலாக இறங்கி...மலைப்பாதையின் இறங்கி நடந்து.. ரசித்து...பின்னர் ஸ்டார்ட் செய்து...வாவ்..நினைக்கவே எவ்வளவு ஜாலியாக இருக்கிறது!

நான் பார்த்திருந்த யமஹா,பஜாஜ்,என்ஃபீல்டு வகையறாக்களில் கொஞ்சம் ஸ்லீக்காக, தனித்துவமும், நாகரிகமும் எல்லாவற்றுக்கும் மேலாக இளமையின் சின்னமாகத் தெரிந்த ஸ்ப்லெண்டர் என்னை கவர்ந்ததில் வியப்பேதும் இல்லை. இப்படி பஸ்ஸில் செல்லும்போதே ஸ்பெல்ண்டர் கனவுகள் உடன்வர, 'வேலைக்கு போனதும் முதல்ல ஸ்ப்லெண்டர்தான் வாங்குவேன்' என்ற நினைப்பும் வர மனமும் பயணமும் குதூகலமாகிவிடும்.

வேலைக்கு வந்தபோதோ 'ஹூடிபாபா' பிரபலமாகி விட்டிருந்தது. தம்பியின் வண்டியில் ஓட்டக்கற்றுக்கொண்டு ஸ்பெலண்டர் வாங்கிக்கொள்ளலாம் என்று நினைப்பைத் தள்ளிப்போட்டாயிற்று. இந்த ஆசையை வெளியிட்டிருந்ததில் நலவிரும்பிகள் என்ற நலவிரோதிகள் அனைவரும் ‘கியர் வண்டியெல்லாம் சரிப்பட்டு வராது, அதுவுமில்லாம, அப் ஹில்லே ஓட்டறது எங்களுக்கே கஷ்டம், வேணும்னா சொல்லு ஆச்சி, பைக்கிலே கொடைக்கானல் போணும், அவ்ளோதானே,நாங்க எதுக்கு இருக்கோம்' என்றதில் புஸ்ஸாகிப் போனது. ‘பின்னாடி உட்கார்ந்துக்கிட்டு போறதுக்கா..உங்ககிட்டே சொன்னேன்.. ச்சே..இனிமே உங்ககிட்டே சொன்னாதானே' என்று பொருமியதோடு நின்று விட்டது.

ஆனால், வேலைக்கு வந்ததும் வாங்குவதற்கு வாய்த்ததென்னவோ “ஸ்கூட்டி'தான். 'பஸ்ஸில் நின்றுக்கொண்டு செல்வதால்தான் பொண்ணுக்கு கால்வலி வருதெ'ன்று நினைத்த பெரிம்மா ஸ்டேட் பேங்கிலிருந்து வித்ட்ரா செய்த பணத்தோடு வந்து நின்ற இடம் அடையார் ராம்கே டிவிஎஸ். இருபதாயிரம் முதல் தவணை. மீதி எட்டாயிரம் எனது சம்பளத்திலிருந்து இன்ஸ்டால்மெண்ட். மிகவும் பிடித்த வண்ணமான ‘ரத்த சிவப்பு' அல்லது ‘தீஞ்சிவப்பு' ஸ்கூட்டியை தேர்ந்தெடுத்து பணத்தை கொடுக்கும் வரை உறைக்கவே இல்லை, 'ஸ்கூட்டி ஓட்டத் தெரியாதே' என்று! 'வண்டி இன்னும் ரெண்டு நாள்லே கிடைச்சுடும் மேடம்,ரெஜிஸ்ட்ரேஷன் ஆனதும் நீங்க வந்து எடுத்துக்கலாம்' என்று சொன்னபின்புதான் ஆரம்பித்தது, ‘ஓட்டத் தெரியாமல் எப்படி ஹாஸ்டலுக்கு வண்டியை எடுத்து வருவது' என்ற கவலை.

பாபு அண்ணா இருக்க பயமேன்! ஹாஸ்டலுக்கு பெட்டி தூக்குவதிலிருந்து, பெரிம்மா கொடுத்தனுப்பும் ஸ்வீட்ஸை குரியர் செய்வது வரை பாபு அண்ணாதான் சகலமும். அண்ணா ஊரிலிருந்து வந்தார்.வண்டியை ஹாஸ்டலுக்கு கொண்டு வந்தார். எப்படி ஓட்டுவது, எது ப்ரேக், எது ஆக்ஸிலேட்டர், இண்டிகேட்டர் என்று பத்து நிமிடத்தில் சொல்லிக்கொடுத்து ‘நீதான் சைக்கிள் ஒட்டுவே இல்லே, நீ நல்லா ஓட்டிடுவே, ஆச்சி' என்று நம்பிக்கையும் கொடுத்துவிட்டு சென்றார். அண்ணா முன்பு இரண்டு ரவுண்டுகள் எங்கள் ஹாஸ்டல் எதிரில் ஓட்டினாலும் சாலையில் வாகனங்களுக்கிடையில் ஓட்டுவதை நினைத்து லேசாக மலைப்பாக இருந்தது. அதேசமயம்,சாகச மனப்பான்மையும்!

அடுத்த நாள் அதிகாலை மஞ்சுதான் எழுப்பினாள்.'ஹேய் உனக்கு ஓட்டத் தெரியுமா,மஞ்சு' என்றதற்கு ‘பாத்துக்கலாம் வா' என்றாள். ஒரு ஏ4 பேபப்ரில் இன்சுலேஷன் டேப்பால் L -ஐ ஒட்டிவிட்டு, வண்டியை தள்ளிக்கொண்டு வெளியே வந்தோம். காலை ஆறு மணிக்கு ராஜ்பவன் ரோடு காலியாக இருந்தது. ‘ம்ம்...ஸ்டார்ட் பண்ணுப்பா' - பின்னால் மஞ்சு. என் இதயத்துடிப்பு எனக்கே கேட்டது.

‘ஹேய் மஞ்சு, பிடிச்சுக்கோ,விழுந்துடப் போறேன்(!)' என்றபடி ஸ்டார்ட் செய்தேன். கொஞ்சம் ஆக்ஸிலேட்டர். ஒரு கையில் எப்போதும் வேண்டுமானாலும் அழுத்த ப்ரேக்...விர்...விர்ர்ர்...வ்ர்ர்ர்ருரூம்ம்ம்ம்..அட..காலை காற்று முகத்தில் அடிக்க கண்களை எதேச்சையாக கீழே தளர்த்தியபோது ஸ்பீடோமீட்டர் காட்டியது 40கிமீ!

தடுமாறுவேன் என்று நினைத்தது போலல்லாமல் ஸ்டடியாக போய் கொண்டிருந்தது வண்டி. இல்லையில்லை... பறந்துக்கொண்டிருந்தோம்! உற்சாகம் பீறிட 'இன்னும் வேகம் இன்னும் வேகம்' என்று அழுத்தியதில் மத்திய கைலாஷ் தாண்டியதும் - 60கிமீ வேகத்தில் சென்றதும் அனிச்சையாக நடந்தது. நேராக தரமணிக்கு, எனது அப்போதைய அலுவலகத்திற்கே சென்றுவிட்டோம். இன்னும் தாண்டினால் மஞ்சுவின் வீடு வந்துவிடும் என்றாள் மஞ்சு.

அப்படியே, திருப்பிக்கொண்டு வரும் வழியில் ‘ஹேய் மஞ்சு,உனக்கு ஓட்டத் தெரியுமா, சொல்லவே இல்ல' என்றதும் மஞ்சு சொன்னதுதான் ஹைலைட். ‘ஒருதடவை பக்கத்துவீட்டு அண்ணாவோட டீவிஎஸ்50ய சும்மா ஒருரவுண்ட் ஓட்டிபார்த்தேன்'! “அடப்பாவி” என்று கூவினாலும் இப்போது எனக்கே கொஞ்சம் தைரியம் வந்துவிட்டிருந்தது. விர்ர்ர்ர்ர்ர்ரூம்!

திரும்பி வரும்போது ராஜ்பவன் எதிரில் வலதுபுறம் திரும்பவேண்டும். 'கை போடவா' என்று மஞ்சு கேட்டபோது 'ம்ம்' என்று தலையாட்டிவிட்டு வலதுபுறம் செல்ல நேரம் கடத்தியபோது, பின்னால் வந்த பைக்காரர் ஒருவர் கெட்ட வார்த்தையால் திட்டிக்கொண்டே கடந்து சென்றது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி. இப்படி, நடுரோட்டில் நாளொரு திட்டும், பொழுதொரு தவறுமாக ஓட்டிக் கொண்டிருந்தபோது ஸ்பெலண்டர் கனவு கொஞ்சம் கொஞ்சமாக புதைய ஆரம்பித்திருந்தது.

திருமணம் நிச்சயமாகி, இரவு தொலைப்பேசி அழைப்புகளின் ‘ம்ம்..அப்புறம்டா' அல்லது ‘சொல்லுடா,அப்புறம்..செல்லம்' என்ற அந்த ‘அப்புறம்' காலகட்டத்தில் ஏதோ ஒரு 'அப்புறத்தி'ற்கு அப்புறம் 'என்னுடைய உன்னதமான கனவை' முகிலிடம் சொல்லித் தொலைத்தேன்.

‘அவ்ளோதான,கல்யாணத்துக்கப்புறம் நாம முதல்லே அங்கேதான் போறோம்' என்று கற்பூரம் அணைக்காத குறை. இந்த சத்தியத்தை திருமணத்திற்கடுத்த இரண்டு மாதங்களில் நினைவூட்டியபோது ‘உன் கை எவ்ளோ சாஃப்ட், இந்த கையாலே அதையெல்லாம் ஓட்ட முடியுமா..கியர் வண்டி வேற” என்ற வழிசலை பார்த்து ‘போயா யோவ், அடுத்த மாசமே உன்னை டைவர்ஸ்தான்' என்று பல்லை கடித்தபடி அதே சாஃப்ட் கையால் மங்கம்மா சபதம் செய்தேன். ‘ என் உன்னதக் கனவை அடைந்தே தீருவது எப்படி' என்று திட்டங்கள் தீட்டினேன் - அடுத்த சிலவாரங்களில் காத்திருந்த அதிர்ச்சி தெரியாமல்!

ஸ்பெலண்டர் ஓட்டுவது என்ன,ஸ்கூட்டியையே இன்னும் ஒரு வருடத்திற்கு ஓட்ட முடியாது என்பதுதான் அந்த அதிர்ச்சி! 'இனி பின்சீட்டுதான்' என்பது அதற்கடுத்த அதிர்ச்சி!Pregnancy!! (Yes, Unplanned) நினைத்த இடத்திற்கு நினைத்தபோது போனது போக,‘எனக்கு அங்கே போகணும், என்னை கூட்டிட்டு போறியா....ப்லீஸ்' இல்லையேல் ‘இன்னைக்கு ஆஃபீஸ் இருக்கு, கொண்டு வந்து விடறியா'என்றோ கேட்பது மாதிரியான கொடுமை...அதுவும் எப்போதும் சுயமாக இருந்தபின் சார்ந்து இருக்க வேண்டியநிலை வரும்போது....சொல்லத் தெரியவில்லை!!

முடக்கப் பட்டது போல உணர்ந்தேன். (உடலின் மாற்றங்களை மனம் ஏற்றுக்கொள்வதில் இருந்த Latency!)

தற்போது,மிலி வந்து ஆறு வருடங்களாகிவிட்டது. அவ்வப்போது மக்கர் செய்ய ஆரம்பித்து இருக்கிறது.

புது வண்டி வாங்கலாம் என்று கடைக்குச் சென்றபோது, மகிழ்ச்சியைவிட 'நானே சம்பாரிச்சு நானே ஓட்டக் கத்துக்கிட்ட வண்டி'என்ற நினைப்பே ஆக்கிரமித்திருந்தது. மிலியை விட மனசே இல்லை.

ஸ்கூட்டி பெப் தற்போது (முற்காலத்து 'மடிசார் மாமி' புகழ் கைனடிக் போல) ஆண்ட்டிகள் வண்டியாகி விட்டதால் ஸ்கூட்டி ஸ்ட்ரீக்கை தேர்ந்தெடுத்தேன். ஆனாலும், சிலநாட்கள் மிலியுடனே ஆஃபிஸ் வந்தேன். இப்போது, முற்றிலும் புது வண்டிக்கு மாறிவிட்டேன்.

‘பேசாம, இதுலேயே கொடைக்கானல் போகலாமா' என்று தற்போது யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனாலும், அவ்வப்போது ஆழ்மனதிலிருந்து எட்டிபார்க்கிறது ‘ஸ்ப்லெண்டர் கம் கொடைக்கானல்' ஆசை!

25 comments:

Joe said...

சுவாரஸ்யமான இடுகை, சந்தனமுல்லை. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

splendor-ல கொடைக்கானல் போகும் ஆசை வெகு விரைவில் நிறைவேறுவதாக!

ஆயில்யன் said...

ஸ்பிலண்டரும் பின்னே முகில் பாஸும் ஸோஓஓஓஓஒ பாவம் :))))

அமைதிச்சாரல் said...

வாவ்.. splendour. எங்க வீட்டிலும் மகளுக்கு பைக் ஓட்றதுன்னா, கொள்ளை ஆசை. நல்லாவே ஓட்டுவா. காலேஜ் போற வசதிக்காக விக்டரை கொடுத்துட்டு ஆக்டிவா வாங்கியதில் அம்மணிக்கு உலக மகா வருத்தம். இப்பவும் ரோட்டில் யாராவது பைக்கில் போனா ஒரு பெருமூச்சுடன், ஸ்கூட்டரை மாத்திடலாமான்னு ஒரு வேண்டுகோளும் வரும். உங்க இடுகையை படிச்சுக்காமிச்சேன். genious people think alikeன்னு சொல்றா :-)))

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

பாஸ், நடத்துங்க!!!

சின்ன அம்மிணி said...

//போயா யோவ், அடுத்த மாசமே உன்னை டைவர்ஸ்தான்' என்று பல்லை கடித்தபடி அதே சாஃப்ட் கையால் மங்கம்மா சபதம் செய்தேன். //

உங்க ஏரியால பூரிக்கட்டை பிரபலமாகலியோ :)

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

சின்ன அம்மிணி said..
//உங்க ஏரியால பூரிக்கட்டை பிரபலமாகலியோ :)//

ஏன் இந்த கொலைவெறி!!!

பாஸ், நீங்க இவங்க பேச்சு "கா" விட்டுடுங்க.

Deepa said...

மிக சுவாரசியமான இடுகை. உன்னுடைய‌ இன்னொரு பக்கத்தின் ஃப்லாஷஸ் கூடுதல் ப்ளஸ்! ;‍)
அநாயாசமாக பைக் அல்லது கியர் வண்டிகள் ஓட்டிச் செல்லும் பெண்களைப் பார்த்து எனக்கும் ஏக அட்மிரேஷன் உண்டு.

//‘சொல்லுடா,அப்புறம்..செல்லம்' என்ற அந்த ‘அப்புறம்' காலகட்டத்தில் ஏதோ ஒரு 'அப்புறத்தி'ற்கு அப்புறம் 'என்னுடைய உன்னதமான கனவை' முகிலிடம் சொல்லித் தொலைத்தேன்.//
:)))))))) சான்ஸே இல்ல!

பின்சீட்டில் அமர்ந்திருக்கும் போது பக்கத்தில் சுதந்திரமாக வண்டியோட்டிச் செல்லும் பெண்களைப் பார்த்து ஆசைப் பட்டுத் தான் பிடிவாதமாக வண்டி வாங்கினேன். (உனக்கு ட்ராஃபிக்ல ஓட்ட வராது. சைக்கிள்ளையே ஆக்சிடென்ட் ஆச்சுல்ல, மறந்துட்டியா?)

//ஸ்பெலண்டர் ஓட்டுவது என்ன,ஸ்கூட்டியையே இன்னும் ஒரு வருடத்திற்கு ஓட்ட முடியாது என்பதுதான் அந்த அதிர்ச்சி! 'இனி பின்சீட்டுதான்' என்பது அதற்கடுத்த அதிர்ச்சி!Pregnancy!! (Yes, Unplanned) நினைத்த இடத்திற்கு நினைத்தபோது போனது போக,‘எனக்கு அங்கே போகணும், என்னை கூட்டிட்டு போறியா....ப்லீஸ்' இல்லையேல் ‘இன்னைக்கு ஆஃபீஸ் இருக்கு, கொண்டு வந்து விடறியா'என்றோ கேட்பது மாதிரியான கொடுமை...அதுவும் எப்போதும் சுயமாக இருந்தபின் சார்ந்து இருக்க வேண்டியநிலை வரும்போது....சொல்லத் தெரியவில்லை!!//

நன்றாகவே புரிகிறது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எங்க தெருவுல ஒரு பொண்ணு கை விட்டுட்டு கூட பைக் ஓட்டறா சின்னபொண்ணு தான் .. ஆனா ஓட்டும்போது அவ ஆண் போல நடந்து கொள்வது தவிர ( Style la) எனக்கு அதை ஓட்டும் பெண்ணை பிடித்திருக்கிறது. உஞ்க கனவும் நனவாகட்டும்

Rithu`s Dad said...

கலக்கல் பதிவு முல்லை.
//திருமணம் நிச்சயமாகி, இரவு தொலைப்பேசி அழைப்புகளின் ‘ம்ம்..அப்புறம்டா' அல்லது ‘சொல்லுடா,அப்புறம்..செல்லம்' என்ற அந்த ‘அப்புறம்' காலகட்டத்தில் ஏதோ ஒரு 'அப்புறத்தி'ற்கு அப்புறம் 'என்னுடைய உன்னதமான கனவை' முகிலிடம் சொல்லித் தொலைத்தேன்.//

இந்த ”அப்புறம்”கால கட்டம் மட்டும் எல்லாருக்கும் ஒன்னுதானோ.. !!

பேசாம முல்லை அடுத்த “தொடர்பதிவு” இது பத்தி எழுத சொல்லலாமே.. :)

அமுதா கிருஷ்ணா said...

எனக்கெல்லாம் எப்பவும் இரண்டு சக்கர வண்டி ஓட்ட டிரைவர் தான்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல இடுகை

காமராஜ் said...

சட்டம் என் கையில் படத்தில் அந்த ஆங்கில நடிகை, கமலுக்கு ஆபத்தென்றதும் புல்லெட்டெடுத்து உதைத்து வெளியேறி ஒரு திருப்பத்தில் லாங்கிலும்,மிட்ஷாட்டிலும் காண்பிக்கிற காட்சியை நான் பல காலம் பிரம்மித்திருக்கிறேன். ஆனால் அந்யாயமா அந்தக் கேரக்டரைக் கொலை செய்ததற்காக ஆய்ரம் முறை அந்த டைரக்டரை சபித்திருக்கிறேன்.ஒரு நாலு வருடத்துக்கு முன்னாள் எங்கள் ஊரில் வீரம்மா என்கிற சப்பின்ஸ்பெக்டர் இருந்தார்.பைக்கில் தான் வருப்வார் கண்கொள்ளாக் காட்சி. நான் பஜாஜ் ஸ்கூட்டர் வங்கியபோது நண்பர் ஒருவர் இப்படிச்சொன்னார்." இது பொம்பளைங்களுக்குன்னு டிசைன் பண்ணது" அதனாலே கூட எனக்கு இந்த கலாச்சாரம் சம்ப்ரதாயங்கள்,போன்றவற்றோடு முரண் வளர்கிறது.மேலோட்டமாக தெளிந்து காணப்படும் அவற்றில் ஏகப்பட்ட புளுக்கள் நெளிகிறது.

அன்புடன் அருணா said...

அமைதிச்சாரல் said...
/genius people think alikeன்னு சொல்றா :-)))/
Repeat!
Even I have a dream to drive vrooooooooom in a splendor

நசரேயன் said...

//கனவுகளோடுதான் கொடையை விட்டு ஒரேயடியாக இறங்கினேன்.//

அந்த வருஷம் நல்ல மழையாமே கொடையிலே

//பின்னால் மஞ்சு. என் இதயத்துடிப்பு எனக்கே கேட்டது.//

சாலையிலே போனவங்களுக்கு எல்லாம் இதயத்துடிப்பு நின்னு போச்சாம்

//கொடைக்கானல் போகலாமா' என்று தற்போது யோசித்துக் கொண்டிருக்கிறேன்//

பாவங்க கொடைக்கானல் இப்பத்தான் கொஞ்ச நிம்மதியா இருக்கு

நிஜமா நல்லவன் said...

ஆச்சி...செம கலக்கலா எழுதி இருக்கீங்க...ஆனா பாருங்க நான் இதுக்கு முன்னாடி போட்ட கமெண்ட் கூட கம்பேர் பண்ணுறப்போ..ஜஸ்ட் ஓகே...:)))

*இயற்கை ராஜி* said...

அருமையான இடுகை.. அப்பிடியே எங்களையும் அந்த நாட்களுக்கு கூடவே கூட்டிட்டு போய்ட்டீங்க‌

*இயற்கை ராஜி* said...

//நிஜமா நல்லவன் said...
ஆச்சி...செம கலக்கலா எழுதி இருக்கீங்க...ஆனா பாருங்க நான் இதுக்கு முன்னாடி போட்ட கமெண்ட் கூட கம்பேர் பண்ணுறப்போ..ஜஸ்ட் ஓகே...:)))
//

ஓ.. .அப்படியா.. அப்போ அந்த கமெண்ட ரிலீஸ் பண்ண சொல்லுங்க‌

முகிலன் said...

en friend oru ponnu anayasama Yamaha ottuva.. bangalorela work pannittirunthappo rendu perum than office povom. one way nan ottina other way ava ottuva..


unga idugai padichathum athu ninaivukku vanthuttathu

கோமதி அரசு said...

முல்லை, உங்கள் ரம்மியமான கனவும்,உங்கள் ரசிப்பு தன்மையையும்
ரசித்தேன்.


நீங்கள் ஸ்பிலண்டரில் மலைபாதையில்
இயற்கையை ரசித்து கொண்டு வர வாழ்த்துக்கள்.

கமலேஷ் said...

சுவாரஸ்யமான இடுகை....

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

ஜெரி ஈசானந்தன். said...

இப்போது மலை சாலைகளை அகலப்படுத்தி விட்டார்கள்,பைக்கில் பயணிப்பது சுலபமானதும் கூட...என்னை போன்ற மதுரை வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்...நண்பர்களோடு ஜாலியாக பைக்கில் இரண்டரை மணிநேர பயணத்தில் கொடைக்கானல் என்ற திறந்த வெளி சொர்க்கத்தில் நுழைவது .......வாழ்நாள் பாக்கியம் தான்.உங்களுக்கும் இந்த உன்னதமான சந்தோசம் கிட்ட வாழ்த்துகிறேன்.

☀நான் ஆதவன்☀ said...

:))))))))))

//திருமணம் நிச்சயமாகி, இரவு தொலைப்பேசி அழைப்புகளின் ‘ம்ம்..அப்புறம்டா' அல்லது ‘சொல்லுடா,அப்புறம்..செல்லம்' என்ற அந்த ‘அப்புறம்' காலகட்டத்தில்//

பாஸ் இந்த சமயத்துல என்ன சொன்னாலும் ஆண்கள் ஓக்கேன்னு தான் சொல்லுவாங்க.. இது தெரியாம இருந்திருக்கீங்களே :)))

☀நான் ஆதவன்☀ said...

//போயா யோவ், அடுத்த மாசமே உன்னை டைவர்ஸ்தான்' என்று பல்லை கடித்தபடி அதே சாஃப்ட் கையால் மங்கம்மா சபதம் செய்தேன். //

பெண்ணாதிக்கவாதி பாஸ் நீங்க

☀நான் ஆதவன்☀ said...

//அதுவும் பழனி டூ கொடை மலைப்பாதை அழகான பள்ளத்தாக்குகளையும், அங்கங்கே நீர் வீழ்ச்சி,சிற்றோடைகளையும் அடர்ந்த காடுகளையும் கொண்டது.//

எனக்கே இப்ப ஆசையா இருக்கு. எனிவே மைண்ட்ல வச்சுக்கிறேன். என்னைக்காவது ஆசைய நிறைவேத்திட வேண்டியது தான்

பின்னோக்கி said...

வண்டிக்காக டைவர்ஸ்சா பெண் ஆதிக்கக் கொடுமையைப் பாரீர்..பாரீர்.

அப்புறம். ப்ரேக் என்ற ஒரு வஸ்து இருக்கிறது. அதனை உபயோகிக்கவும். திட்ட முயன்று, பின் பார்த்து, செல்ல வேண்டியிருக்கிறது.