Saturday, May 15, 2010

முஸ்லீம் பெண்கள் சம்பாதிப்பது ஹராமா?

பப்புவை வளர்த்ததில், கவனித்துக்கொண்டதில் பெரும்பங்கு ஏஜென்சியில் இருந்து வந்த,வீட்டோடு தங்கியிருந்த கவனிப்பாளர்களுக்கு உண்டு. அதில் ஒருவர் ரேணுகா அக்கா. ஒரு நண்பர் மூலமாக, பாண்டிச்சேரியிலிருந்து வந்தார். ரேணுகா அக்காவிற்கு இரண்டு சிறுவர்க்ள். அவர்கள் இருவரும் ஒரு காப்பகத்தில் தங்கி படித்துக்கொண்டிருந்தனர்.


ரேணுகா அக்கா அந்த காப்பகத்தின் பொறுப்பாளரிடம் ஏதாவது வேலைக்காக உதவி கோரியிருந்தார். மாதந்தோறும் அந்த காப்பகத்திற்கு உதவியளிக்கும் குடும்ப நண்பர் மூலமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தார் ரேணுகா அக்கா. அக்காவின் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். இவரை கவனித்துக் கொள்வதில்லை. குடும்பச் செலவுகளுக்கு பணம் கொடுப்பதில்லை. அதனாலேயே மகன்கள் இருவரையும் காப்பகத்தில் விட நேர்ந்தது என்றும் அவரது பெற்றோரும் இல்லையென்பதால் கணவன் வீட்டிலேயே வாழ்ந்து வருவதாகவும், செலவுகளை சமாளிக்கவே இப்படி வேலைக்கு வந்ததாக ஆயாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார் அக்கா.


அக்காவுடன் பப்புவும் நன்றாகவே ஒட்டிக்கொண்டாள். இரண்டு வாரங்கள் சென்றது.ஒருநாள் அந்த விடுதி காப்பாளரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. “ரேணுகாவை நாளைக்கு அனுப்பிடுங்கம்மா, அவங்க வீட்டுக்காரன் குடிச்சுட்டு வந்து இங்கே ஒரே தொந்திரவு” என்றார். அதற்குள் ஆயாவிடமிருந்து அடுத்த தொலைபேசி அழைப்பு. ரேணுகா அக்காவிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் அதிலிருந்து அக்கா அழுதுக்கொண்டிருப்பதாகவும் கூறினார். அலுவலகத்திலிருந்ததால், எல்லாவற்றிற்கும் 'சரி,வீட்டுக்கு வந்து பார்த்துக்கலாமெ'ன்று சொல்லி வைத்துவிட்டேன்.


அக்கா ஊரிலில்லாததை அறிந்த அவரது கணவர் நேராக விடுதிக்கு சென்றிருக்கிறார். அக்காவை, காப்பாளர்தான் எங்கேயோ அனுப்பி விட்டதாகவும் எங்கள் முகவரி மற்றும் ஃபோன் நம்பர் கேட்டு சண்டையிட்டிருக்கிறார். அவரும் எங்கள் நம்பரைக் கொடுத்துவிடவே, அந்த போன்கால்தான் அக்காவின் அழுகைக்குக் காரணம்.உடனே வீட்டுக்கு வருமாறு அக்காவிடம் சண்டையிட்டிருக்கிறார். அதுதான் இவ்வளவு குழப்பத்திற்கும் காரணம்.


“அந்தாள் இங்கே வந்து சண்டை போடுவாம்மா, இப்போவே வரச் சொல்றான், இல்லேன்னா போலீசை கூட்டிட்டு வந்து கலாட்டா பண்ணுவேன்ன்னு சொல்றான்,என்னை வாழவும் விடமாட்டேங்கறான்,சாகவும் விட மாட்டேங்கறான்” என்று அக்கா உடைந்து போனார்.


“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது, பாத்துக்கலாம்” என்றாலும் சமாதானமாகாமல் “அவனைப் பத்தி உங்களுக்குத் தெரியாது, என்னாலே உங்களுக்கு எதுக்கு கெட்ட பேரு, பிரச்சினை, வீட்டு முன்னாடி வந்து அசிங்கமா அசிங்கமா கத்துவான், நான் போறேன்” என்று ஊருக்குக் கிளம்பத் தயாரானார் அக்கா.


அவரை வழியனுப்பிவிட்டு திரும்பியபோது,பப்புவை பார்த்துக்கொள்வது எப்படியென்று எனக்கு முன்னாலிருந்த பெரும்சவாலைவிட, ”வீட்டுச் செலவுக்கும் காசு கொடுக்கறதில்லை,இவந்தான் என்னைதான் விட்டுட்டு போயிட்டான், நிம்மதியாவது வாழவிடலாம் இல்லே,நீ எப்படி போகலாம், யாரைக்கேட்டு போனே,வீட்டை விட்டு ஏண்டி ஓடிப்போனேன்னு கெட்ட வார்த்தையிலேல்லாம் போன்லே கத்தறான், ஹோம் இருக்கிறதாலே பசங்களை அங்கே விட்டிருக்கேன்,இல்லேன்னா என் கதி...” என்ற அக்காவின் கதறலும்,புலம்பலுமே நிரப்பியிருந்தது.


ரேணுகா அக்காவென்று இல்லை, அவருக்குப் பின் வந்த அத்தனை அக்காக்களுக்கு பின்னாலும் இப்படி ஏதாவது ஒரு கதை இருந்தது.
இந்த அக்காக்களின் தோள்களில்தான் குடும்பத்தின் அத்தனை பொறுப்பும் ஏற்றப்பட்டிருந்தது.ஆனாலும்,அவர்களின் முடிவுகளை தீர்மானிக்கும் அதிகாரங்கள், அவர்கள் வேலைக்குச் செல்வதா வேண்டாமாவென்று தீர்மானிக்கும் அதிகாரம் உட்பட அத்தனையும் அவர்களது கணவனின் கைகளில் இருந்தது.


இப்போது அந்த அதிகாரத்தை மத அமைப்புகளும் கையில் எடுத்துக்கொண்டது போலத் தெரிகிறது. தியோபந்த் முஸ்லீம் அமைப்பு ‘முஸ்லிம் பெண்கள் வேலைக்குச் செல்வதும்,அந்த சம்பளத்தில் வாழ்வதும் ஹராம்” என்று இருநாட்களுக்கு முன்பு ஃபத்வா கொடுத்துள்ளது.


ஆம்பூரில் அதிகாலை 5.30 - 6 மணிக்கு மெயின்ரோட்டிற்கு வந்தீர்களானால் கையில் உணவு டப்பா அல்லது கைப்பையுடன்,கருப்பு புர்க்காக்களோடு அங்காங்கே கும்பல் கும்பலாக நின்றுக்கொண்டு ஏதாவது ஃபேக்டரியின் பஸ்ஸுக்காக காத்திருப்பதைக் காணலாம். அவர்கள் அவ்வளவு சீக்கிரம் வரவேண்டுமானால்,எத்தனை மணிக்கு எழுந்து வேலைகளை முடித்திருக்க வேண்டும். அவ்வளவு காலையில் சாப்பிடக் கூட நேரமிருக்காது. அந்த குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் நீங்கள் இல்லையென்றால் ஃபேக்டரி பஸ் காத்திருக்காது.


கன்கார்டியா பள்ளியில் பத்தாவது வகுப்பில் முதலாவதாக வந்த ஷ்ம்ஷாத் அக்காவை படிக்க வைத்தது - இந்த தோல் ஃபேக்டரிக்கு வேலைக்குச் சென்ற அவரது அம்மாதான். ஒருநாள் கூட தவறாமல், பொழுது புலராத வேளையில், புர்க்காவுடன் மின்னல் போல வேலைக்கு விரைந்து சென்ற அவரது அம்மாதான் - கணவரை இழந்த அவர்தான், யார் உதவியுமின்றி தனது இரு பெண்களை பள்ளியிறுதி வரையும் ஒரு பையனை கல்லூரி வரையும் படிக்க வைத்தார்.இன்று ஷம்ஷாத் அக்கா ஒரு மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார்.


ஷம்ஷாத் அக்காவின் அம்மா மட்டுமில்லை, ஆம்பூரின் பெரும்பான்மையான நடுத்தர மற்றும் அடித்தட்டு முஸ்லிம் பெண்கள் - தோல் தொழிற்சாலைகளிலும், குடிசைத் தொழிலான சேலைகளில் சம்க்கி தையல் கலைகளையும், இடியாப்பம் செய்து விற்றும் தங்கள் குடும்பங்களை காப்பாற்றுகிறார்கள். அவர்களுக்கு கணவன் இருந்தாலும், இருந்தும் இல்லாலிருந்தாலும் குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு, செலவுகளை சந்திப்பதற்கு அவர்கள் உழைத்தாக வேண்டும். வாரத்திற்கு ஆறுநாட்களும் வேலை செய்தால்தான் முழுசம்பளமும் கிடைக்கும். வெள்ளிக்கிழமை விடுமுறையிலும் கூட ஓய்ந்திருக்க முடியாமல், கைகளில் பத்து விரல்கள் பத்தாதென்று இன்னும் இன்னும் கைகளைக் தீனியாகக் கேட்கும் வீட்டு வேலைகள் நாள் முழுவதுமுண்டு!


காலைவேளைகளில் இடியாப்பத்தை எடுத்துக்கொண்டு வீடு வீடாக செல்லும் பாட்டி - ஹபிபாவை எப்படியாவது படிக்க வைத்துவிட பெரிம்மாவிடம் ஆர்வத்துடன் வந்து சந்தேகங்களை கேட்டுச் செல்வார்.பத்தாவது முடித்தவுடன் எந்த க்ரூப் எடுப்பது, எதை எடுத்தால் எந்த வேலைக்குச் செல்லலாம் என்று புரிந்துக்கொள்ள அந்த பாட்டி பட்ட பிரயத்தனங்களும், உத்வேகமும் சொல்லில் விளக்க முடியாதவை. வெளிநாட்டிலிருந்து மகன் அனுப்பும் கடிதங்களை தன்னால் படிக்க முடியவில்லை என்ற அவரது தீராத ஆதங்கத்தை யார் புரிந்துக்
கொள்வார்?சென்னையில் வழக்கறிஞராக ப்ராக்டிஸ் செய்வதற்காக ஆம்பூரிலிருந்து செங்கல்பட்டிற்கு தனது குடித்தனத்தை மாற்றிக்கொண்ட ஆஃப்ரீனின் அம்மா, மருத்துவர்களாகவும், பிசியோதெரபிஸ்ட்களாகவும் இருக்கும் ஆலியா, ஹாஜிரா,ப்ராக்ஜட் மேனேஜராக பலநாடுகளுக்கு பறந்து கிளையண்ட்களை சந்திக்கும் ஆயிஷா சித்திகா - இவர்களை இந்த ஃபத்வா என்ன செய்து விடும்?


பெண்கள் சம்பாதிப்பதை மறுதலிக்கும் இந்த ஃபத்வா பெண்களுக்கு எந்த வகையில் உதவும்? இவர்களது பொருளாதாரத்தேவைகளை எந்த வகையில் சந்திக்கும்? பெண்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் 33% என்று மாற்றங்களுக்கு போரிடும் வேளையில் இந்த ஃபத்வா முஸ்லீம் பெண்களை வீட்டு நிலைப்படிகளுக்குள்ளேயே முடக்குகிறது. பள்ளியிறுதி வரையிலான படிப்பைக் கூட முடிக்க முடியாமல் முஸ்லீம் பெண்களில் ஒருபகுதியினர் இருக்கும் நிலையில், சாதிக்க வேண்டியது இன்னும் மிச்சமிருக்கும் நேரத்தில் இந்த ஃபத்வா முட்டாள்தனமானதாகத் தெரிகிறது.


இந்த ஃபத்வா குறித்து பதிவர்களில் - பெண்களின் கருத்தை , நண்பர்களான
நாஸியா, ஸாதியா, ஹூசைனம்மா,ஜலீலா,சுமஜ்லா - இவர்கள் இது குறித்து (நேரமும்,விருப்பமும் இருப்பின் ) என்ன சொல்கிறார்கள் என்று அறிய ஆவலாக இருக்கிறேன்.

55 comments:

முகிலன் said...

//இந்த ஃபத்வா குறித்து பதிவர்களில் - பெண்களின் கருத்தை , நண்பர்களான
நாஸியா, ஸாதியா, ஹூசைனம்மா,ஜலீலா,சுமஜ்லா - இவர்கள் இது குறித்து (நேரமும்,விருப்பமும் இருப்பின் ) என்ன சொல்கிறார்கள் என்று அறிய ஆவலாக இருக்கிறேன்//

நானும் ஆவலாக இருக்கிறேன்..

அதோடு இதைப் பற்றி வினவு மற்றும் சுகுணா திவாகர் அவர்களின் கருத்தையும் அறிய ஆவலாய் இருக்கிறேன்.

ச.செந்தில்வேலன் said...

உங்கள் கண்முன்னே பார்த்தவற்றை அழகாகத் தொகுத்துள்ளீர்கள்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள பதிவர்கள் என்ன கருத்தைக் கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.

தொடருங்கள்.

ஜெரி ஈசானந்தன். said...

அட...ராமா..

வினவு said...

5ooக்குப் பிறகு ஆரம்பமே வெகு அழகு.முட்டாள்தனமான பத்வாவை உரிய நேரத்தில் முகத்திலறையும் அனுபவங்களோடு பதிவு செய்தமைக்கு நன்றி. கருத்துக் கேட்டலில் இசுலாமிய ஆண் பதிவர்களையும், மாற்று மத பதிவர்களையும் முக்கியமாக சொந்த மத அபிமானம் பெருமளவு இல்லாதவர்களையும் சேர்த்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்குமென்று தோன்றுகிறது.

சின்ன அம்மிணி said...

பதிவுலகில் இருக்கும் பல பெண்பதிவர்களும் வேலைக்குச்செல்பவர்கள்தான். நிச்சயம் இதை ஆதரிக்கமாட்டர்கள் என்றே நினைக்கிறேன்.

நாஸியா said...

பதிவெழுத அழைத்தமைக்கு ரொம்ப நன்றி சகோதரி! நானே இதை பத்தி எழுதனும்னுதான் நினைச்சிருந்தேன்.. கண்டிப்பா எழுதுறேன். இன்ஷா அல்லாஹ்.

**
ஒன்றை புரிஞ்சுக்கனும். இந்த மாதிரி அமைப்புகள் திடீர் திடீர்னு ஃபத்வா டிக்ளேர் பண்ணி என்ன நடக்குதோ இல்லையோ, மீடியாக்களுக்கு நல்ல தீனி மட்டும் கிடைக்குது.எனக்கு ஃபத்வான்னு ஒரு வார்த்தை இருக்குன்றது தெரிஞ்சதே இந்த மாதிரி நியூஸ் மூலமாத்தான் :)

இஸ்லாத்தில் பெண்கள் சம்பாதிப்பது ஹராம் கிடையாது. ஆனா சில கட்டுப்பாடுகள் இருக்கு. அதே போல ஆண்களுடைய சம்பாத்தியத்திற்க்கும் சில கட்டுபாடுகள் இருக்கு.. இதை போல்ட் அன்ட் அன்ட‌ர்லைன் ப‌ண்ணிக்கோங்க‌. இறைத்தூத‌ர் முஹ‌ம்ம‌து ந‌பி (ச‌ல்) அவ‌ர்க‌ள் முத‌ல்ல‌, அவ‌ங்க‌ ம‌னைவி க‌திஜா (ர‌லி) அவ‌ங்க‌கிட்ட‌ தான் வேலை பார்த்துட்டு இருந்தாங்க‌.

இன்னும் சொல்ல‌ப்போனா, பெண்க‌ள் ச‌ம்பாதிப்பதை பத்தி இஸ்லாம் என்ன‌ சொல்லுதுன்னு நான் தெரிஞ்ச‌ பிற‌கே, க‌ண்டிப்பா ச‌ம்பாதிக்க‌னும்னு முடிவெடுத்த‌வ‌ நான். எப்ப‌டின்னு என் ப‌திவுல‌ சொல்றேன்! :))

ஷர்புதீன் said...

நான் சிறுவயதில் இருக்கும் போது சீதா என்றொரு நடிகையின் படத்தை உற்று பார்த்தால் ( ராணி புத்தகத்தில் அட்டை படத்தில் அடிக்கடி வரும்) என் அம்மா அடிக்க வருவார்கள்., ஆனால் இப்போதுள்ள அட்டை படங்களில் உற்று பார்க்க தேவையில்லை , அவர்களே அவிழ்த்துதான் போஸ் கொடுக்கிறார்கள்., அனால் இன்று என் அம்மாவால் பதினெட்டு வயசு பய்யன் அப்படி உற்று பார்பதற்காக கண்டிக்க முடியாது., காரணம் எல்லோருமே துண்டு கட்டி கொண்டுதான் இருக்கிறார்கள்,

நேரிடையாக பதில் சொல்லாமல் சற்றே சுத்தி வளைச்சி எனது கருத்தை ( பிறப்பால் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவன்..) சொல்லியிருக்கிறேன்! சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் சொல்லுங்கள், விளக்கமாக ஒரு பதிவே போடுகிறேன் !

செ.சரவணக்குமார் said...

மிக நல்ல பகிர்வு. ரேணுகா அக்காவின் நிலை மிகுந்த துயரம் தருவதாக உள்ளது.

அக்பர் said...

தனிமனித உரிமையில் தலையிட யாருக்கும் உரிமையில்லை.

சின்ன அம்மிணி said...

நண்பர் ஷர்புதீன், வேறு ஏதாவது உதாரணம் தந்திருக்கலாம்.

ஷர்புதீன் said...

அன்புள்ள சின்ன அம்மணிக்கு., நிச்சயமாக வேறு உதாரணம் குடுத்திருக்கலாம்., எனது பிரச்னை இதுதான் - சீதாவை என்னுடைய பதினெட்டு வயசில் அந்த பார்வையை பார்க்க விடாதது தப்பில்லை, அது சரிதான்., ஆனால் பல அடிப்படை கண்ணோட்டங்கள் பின்னால் மாற்றிக்கொள்ளும் பொழுது, சீதாவை ரசிக்க விடாமல் செய்த செயல் சரியா? தவறா....?

இன்று மானாடுவது., மயிலாடுவது., சரியென்றால், விதி படத்தின் வசனத்தைகேட்க விடாமல் செய்தது (அன்றைய பெற்றோருக்கு ) சரியா..?

மயில் said...

ஷர்புதின், நீங்க பதிவே போட வேணாம், இதுலயே விளங்கிடுச்சு...முடிஞ்சா அட்டையில்லாத புத்தகம் வாங்குங்க. இல்லனா படிப்படையே நிறுத்திடுங்க.

விந்தைமனிதன் said...

மிக அருமையான நடையில் எழுதப்பட்டுள்ள அற்புதமான கட்டுரை. நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்..... என்ன மாதிரியான எதிர்வினைகள் வரப் போகின்றனவென்று....

ஜெஸிலா said...

ஃபத்வா போடுபவர்கள், எல்லாம் தெரிந்த இஸ்லாமியர்களாகிவிட முடியாது. நீங்கள் கொடுத்த சுட்டியில் கூட //Even the most conservative Islamic countries, which restrict activities of women, including preventing them from driving, do not bar women from working// இப்படிதானே இருக்கிறது? யார் யாரோ திடீரென்று முளைத்து ஃபத்வா தந்தால் என்ன மாற்றம் வந்துவிட முடியும்? பெண்களுக்கு முழு சுதந்திரம் தந்திருக்கும் மார்க்கத்தை ஒழுங்காக அறியாததின் விளைவே இத்தகைய ஃபத்வாக்கள். சும்மா டீல்ல விடுங்க!

Dr.Rudhran said...

வாழ்த்த மட்டும் இல்லை, வணங்குகிறேன் இந்தப் பதிவுக்கு.

ஷர்புதீன் said...

@ மயில்
"ஷர்புதின், நீங்க பதிவே போட வேணாம், இதுலயே விளங்கிடுச்சு...முடிஞ்சா அட்டையில்லாத புத்தகம் வாங்குங்க. இல்லனா படிப்படையே நிறுத்திடுங்க"


தனியார் தொலைகாட்சிகள் தினமும் ஒரு படம் என்று போட்டவுடன் ( 1998s ) அநேகம் பேர் பயந்தார்கள்., அய்யயோ இப்படி தினம் ஒரு படம் பார்த்தல் என்னாகுவது என்று., ஆனால் என் வயதுக்குரியோர் ஓரிரு படங்கள் நேரத்தை ஒதுக்கி பார்த்தார்கள் என்பது உண்மைதான் .,( எங்களை திருத்திய விஜய் போன்ற நடிகர்களுக்கு மிக்க நன்றி) ஆனால் இப்போதும் ?? அது ஓடிக்கொண்டுதான் இருக்கிறது., வாழ்கையும் போய் கொண்டுதான் இருக்கிறது., எல்லா வித விசயங்களையும் அலசி ஆராயும் மனோபாவத்தை இந்த சமூகம்தான் ( கல்வி ) கற்று தரவேண்டும், மதம் மூலம் என்றால் ., முன்னே ஒரு சட்டம் , பின்னே ஒரு சட்டம் ஏன்? ( மதத்தில் அப்படி இல்லை, மனிதர்கள் தான் தப்பு என்பார்கள்.

எனக்கு, எதிரில் இருக்கும் மனிதன் தான் முதலில் தெரிகிறான்., ) என்பதுதான் எனது முதல் இடுக்கையின் மூலம் சொல்லவந்தது.

அந்த சீதா மேட்டரை இன்னுரு முறை விளக்கிவிடவேண்டியது முக்கியமாக தெரிகிறது ( மயில் அவர்களுக்கு நன்றி) நடிகை சீதா முழுவதும் திருத்தமாக உடை அணிந்து காம பார்வை அற்ற பார்வை பார்த்த அந்த ராணி அட்டை படம் உதாரணத்திற்காக மட்டும்தான் சொல்லவந்தேன். கண்மணி எனும் நாவல் புத்தகத்தின் அட்டை படத்தில் கூட பெண்களை அழகாக ( ஆனால் ஒரே மாதிரிதான்) வரைவார் ஓவியர் மாருதி, அதோடு ஒப்பிடும் பொது, இன்றைய குமுதம் அட்டை படங்கள்தான் எனது பிரச்சனை.

உதயம் said...

சிக்கலான மதப் பிரச்சினைகளில் அல்லது மதம்சார் சட்ட நுணுக்கங்களில், மதம் சார்ந்த சிக்கலான செயல்பாடுகளில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரு பிரிவுகளோ பல பிரிவுகளோ உருவாகி அது சம்பந்தமான சரியான நிலை எது என மார்க்க அறிஞர்களிடம் தீர்வுக்கு விடப்பட்டு அதன் அடிப்படையில் ஆய்ந்து, அறிந்து அவர்கள் சொல்லும் தீர்ப்புதான் ‘ஃபத்வா’.

இந்தத் தீர்ப்பு சரியானதாகவோ தவறானதாகவோ இருக்கலாம். ஆனால் அவர்கள் சொல்வது ‘பத்வா’தான். பத்வாக்கள் என்பதன் உண்மையான செயல்பாடுகள் இவ்வாறிருக்க இஸ்லாமியத் தலைவர் ஒருவர் அவரது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப விடும் அறிக்கைகள், எச்சரிக்கைகள், காரசாரமான பேச்சுகள், பேட்டிகள், இவையெல்லாம் பத்வாக்கள் என ஒருபோதும் அழைக்கப்படமாட்டா.

கிரி said...

சந்தனமுல்லை சிறப்பா எழுதி இருக்கீங்க!

இதைப்போல கட்டுப்பாடுகள் நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. கட்டாயப்படுத்தினால் தேவையற்ற பின் விளைவுகளையே தரும். நீங்கள் கூறியது போல் இஸ்லாமை சேர்ந்தவர்கள் (குறிப்பாக பெண்கள்) பற்றிய கருத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

காமராஜ் said...

சப்ஜெக்டோ ட கிளம்புது இந்த எழுத்து.ரொம்ப எஜுகேட்டிவ் விவரங்கள் இருக்கிறது இந்தப்பதிவில்.நாம் இது குறித்து வேறென்ன சொல்லப்போகிறோம்.தோழர் ஷர்புதீனின் வாதம் இன்னும் என் மண்டைக்குள் ஏறவில்லை.இது தொடர்பான அணைத்துப்பதிவுகளுக்கும் எனக்கு இணப்புக்கொடுக்க முடியுமா தங்கச்சி.

dhakshina said...

http://beta.thehindu.com/news/national/article428615.ece

தமிழ் பிரியன் said...

இஸ்லாம் பெண்கள் வேலைக்கு செல்வதை, தொழில் செய்வதை கண்டிப்பாக ஆதரிக்கின்றது.. குறிப்பாக சொல்வதானால் இத்தா காலங்களில் கூட வேலை செய்வதை இஸ்லாம் அனுமதிக்கின்றது.. போர்க்களங்களில் கூட பெண்கள் வேலை செய்துள்ளனர். இது போன்ற பத்வாக்கள் விளம்பர நோக்கில் தரப்படுபவையே... நம் சக முஸ்லிம் பெண் பதிவர்களில் பெரும்பான்மையானவர்கள் வேலைக்கு செல்பவர்கள் தான்..

ஹுஸைனம்மா said...

நாஸியா பதிவெழுதிருக்காங்க தெளிவான விளக்கங்களோடு, பாருங்க:

http://biriyaani.blogspot.com/2010/05/blog-post_15.html

செந்தழல் ரவி said...

அடிமைகள் தாங்கள் அடிமைகள் என்பதை உணராத வரையில் அவர்கள் எப்படி அந்த அடிமைத்தனத்தில் இருந்து வெளியேறுவார்கள்?

UFO said...

"No 'fatwa' against Muslim working women, says Deoband"
http://timesofindia.indiatimes.com/India/No-fatwa-against-Muslim-working-women-says-Deoband/articleshow/5923004.cms

"Deoband denies ‘fatwa’ against working women"
http://religion.gaeatimes.com/2010/05/12/deoband-denies-fatwa-against-working-women-2811/

No fatwa against Muslim working women: Deoband
http://www.zeenews.com/news626227.html


"No 'fatwa' against working women, says Deoband"
http://twocircles.net/2010may12/no_fatwa_against_working_women_says_deoband.html

ஹா ஹா ஹா ....
தியோபந்த் பத்தி தெரியாதா...? ஓ..! நீங்க வடஇந்தியாவுக்கு புதுசா..? அது ஒரு சரியான காமடி பீஸ்.... அப்பப்ப தன் இருப்பை வருஷத்துக்கு இரண்டு வாட்டி இப்படித்தான் ஏதாவது சொல்லி காட்டிக்கொள்வார்கள்...

அது சரி, ஆமாம்.... முஸ்லிம்களே இதனை கொஞ்சங்கூட சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை எனும்போது... உங்களுக்கு என்ன வந்தது..? முஸ்லிம்கள் என்ற பெயரில் யாராவது ஏதாவது சொன்னால்-செய்தால் போதும்..., "எப்படா ...சாரி... எப்படிடி இந்த முஸ்லிம்களின் புருக்காவை கழட்டி நடுத்தெருவில் இவங்கள ஓடவிடுவது"... என்ற ஒரே லட்சியத்துடன் 'புரட்சி வெறிகொண்ட முற்போக்காளர்கள்' எல்லாம் திரிவதை காண சகிக்கலை.... 'கொலைகார காவிகள்' கூட திருந்தியாச்சு... நீங்க எல்லாம் எப்பம்மா திருந்த போறீங்க...

விஷயம் இம்புட்டுதான்...
இஸ்லாம் சொல்கிறது இப்படி.... "குடும்பத்தில் உழைக்க ஆன் இல்லை அல்லது ஆன் உழைப்பு அதியாவசியத்துக்கு போதவில்லை-எனில், ஹலாலான வழியில் பெண்கள் வேலை பார்ப்பது-சம்பாதிப்பது ஹராம் இல்லை". அம்புட்டுதான்...ச்சாப்டர் குளோஸ்...

ஆதாரம்:"Women and Employment" 1-Verses of the Qur'an
2-Ahadith of the Holy Prophet
3-Women's Right to Earn Income
4-Views of the Eminent Scholars

http://www.muslimtents.com/shaufi/b2/b2_16.htm

போய் வேற உருப்படியான குடுமிப்பிடிச்சண்டை இருந்தா போடுங்க...

i criticize periyar said...

http://darulifta-deoband.org/viewfatwa.jsp?ID=21031

Asalamu-Alikum: Can muslim women in india do Govt. or Pvt. Jobs? Shall their salary be Halal or Haram or Prohibited? Answer: 21031 04 Apr, 2010 (Fatwa: 577/381/L=1431)

It is unlawful for Muslim women to do job in government or private institutions where men and women work together and women have to talk with men frankly and without veil


இதுதான் பத்வா. படிக்க காமெடியாக இல்லையா.கார் ஓட்டலாம என்று பத்வா விடுத்திருக்கிறார்கள். பெண் எது செய்தாலும் அது சரியா இல்லையா என்பதை இவர்களிடம் கீட்டுக் கொண்டே இருந்-தாள் உருப்பட முடியுமா
http://darulifta-deoband.org/viewfatwa.jsp?ID=20998
Question: 20998 India Assalaamualaikum wa rahmatullah Alhamdulillah I started wearing hijaab close to a year ago and recently got married to a practicing muslim who is also mashaAllah a good husband. I alo started wearing niqaab soon after my marriage. before my marriage i used to drive whenever i had to go out, but never with any non-mahram. It is quite a harassment for women to go out hunting for autos to go anywhere and it becomes a helpless situation and waste of time if autowaalas dont agree to take you to your destination.but now after marriage my husband is not very happy with the idea of me driving anywhere. i have stopped driving since my marriage, but i have to go out with my mother who is elderly or anywhere short distance without my husband it has become a real tension and i have become immobile. i also have a back ache problem which gets aggravated if i travel in auto. i want to know if on rare occasions, it is ok for me to drive short distances with my mahrams in sucha situation. isnt this better than get into fitnah situation with talking with autowaalas or 2 ladies walking long distances on the road? kindly provide answer. jazakallah hu khair Answer: 20998 04 Apr, 2010 (Fatwa: 566/l376/L=1431)


In severe compulsion, you can drive a shorter distance with the permission of your husband.
குறைந்த துரம் என்றால் என்ன என்று அடுத்து ஒரு பத்வா வரும் போலிருக்கிறது. ஒரு பெண் கார் ஓட்டுவது முஸ்லிம்களுக்கு மட்டும் ஏன் பிரச்சினையாகிறது. கேரளாவில் பெண்கள் ஆட்டோ ஓட்டுகிறார்கள்.
"but now after marriage my husband is not very happy with the idea of me driving anywhere
"
இதுதான் பிரச்சினை. ஆணாதிக்கம் அதற்கு ஆமாம் போடும் மதவாதிகள்.

☀நான் ஆதவன்☀ said...

குட் போஸ்ட் பாஸ்!

ஷர்புதீன் said...

விஷயம் இம்புட்டுதான்...
இஸ்லாம் சொல்கிறது இப்படி.... "குடும்பத்தில் உழைக்க ஆன் இல்லை அல்லது ஆன் உழைப்பு அதியாவசியத்துக்கு போதவில்லை-எனில், ஹலாலான வழியில் பெண்கள் வேலை பார்ப்பது-சம்பாதிப்பது ஹராம் இல்லை". அம்புட்டுதான்...ச்சாப்டர் குளோஸ்...


STRONG AND CORRECT WORDS ., AS A MUSLIM I KNOW THAT , BUT HERE LOT OF MUSLIM DONT KNOW HOW TO LIVE., COZ MOST OF MUSLIM TRY TO KNOW HOW TO WORSHIP ONLY THAT HOW TO LIVE!!

Prosaic said...

விஷயம் இம்புட்டுதான்...
இஸ்லாம் சொல்கிறது இப்படி.... "குடும்பத்தில் உழைக்க ஆன் இல்லை அல்லது ஆன் உழைப்பு அதியாவசியத்துக்கு போதவில்லை-எனில், ஹலாலான வழியில் பெண்கள் வேலை பார்ப்பது-சம்பாதிப்பது ஹராம் இல்லை". அம்புட்டுதான்...ச்சாப்டர் குளோஸ்...


STRONG AND CORRECT WORDS ., AS A MUSLIM I KNOW THAT , BUT HERE LOT OF MUSLIM DONT KNOW HOW TO LIVE., COZ MOST OF MUSLIM TRY TO KNOW HOW TO WORSHIP ONLY THAT HOW TO LIVE!!


So if a woman goes to work just because she wants to (not for financial reason), is wrong in islam?

mohamed ashik said...

////இஸ்லாம் சொல்கிறது இப்படி.... "குடும்பத்தில் உழைக்க ஆன் இல்லை அல்லது ஆன் உழைப்பு அதியாவசியத்துக்கு போதவில்லை-எனில், ஹலாலான வழியில் பெண்கள் வேலை பார்ப்பது-சம்பாதிப்பது ஹராம் இல்லை". அம்புட்டுதான்...ச்சாப்டர் குளோஸ்...////

---சாப்டர் குளோஸ் இல்லை... சொச்சம் இருக்கிறது தெரிந்துகொள்ள: இஸ்லாத்தில் ஒரு குடும்பத்தில் ஆண் இருக்கையில் பெண்கள் சம்பாதிக்க வேண்டியது அவர்கள் மீது கடமை இல்லை. மாறாக ஆணின மீது பொருளீட்டி குடும்பத்தை காப்பாற்றுவது என்பது கட்டாய கடமை.குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, விரும்பினால் ஆகுமான வழியில் சம்பாதிப்பது தவறில்லை. ஆனால், குடும்பத்திற்காக அவள் வருமானத்திலிருந்து ஒரு பைசா செலவழிக்க கேட்கக்கூட கணவனுக்கு உரிமை இல்லை. ஏனென்றால், மனைவி லட்சம் ரூபாய் சம்பாதித்தாலும், அவளுக்கும் குழந்தைகளுக்கும் தேவையான உணவு, உடை, கல்வி, மருத்துவம், இருப்பிடத்திற்கு செலவு செய்ய வேண்டியது கணவன் மீது கட்டாயக்கடமை.

தேவுபந்து---முஸ்லிம்களுக்கு இது ஒரு தேவை இல்லாத பந்து....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இந்த செய்தி வந்த அதே செய்தித்தாளின் இன்னோரு பக்கத்தில் பிரிட்டனில் கேபினட்டில் முதல் முஸ்லீம் பெண் என்ற செய்தியும் பார்த்தேன். இரான்மாதிரியான முஸ்லீம் நாடுகளில் கூட பெண்கள் வேலைக்கு செல்வதையெல்லாம் வாசித்து நம்ம ஊருல ஏன் அப்படி இல்லைஎன்று நினைத்திருக்கிறேன்.. ப்ளாக் உலகில் நம்முடன் எழுதும் சில முஸ்லீம் பெண்களும் படித்து வேலைக்கு செல்வதை அறிந்து .. சரிதான் நம்ம ஊருல தலைக்கு தலை நாட்டாமையால் வந்த ப்ரச்சனைகள் இந்த தடைகள் என்று புரிந்து கொண்டேன்.

இந்து திருமணத்தில் கோத்ரா ஒன்றாக இருந்தால் கல்யாணம் செய்யக்கூடாது என்று கௌரவக் கொலை செய்வது வடநாட்டில் இன்று தலைப்பு செய்திகளில் முந்தி நிற்கிறது. அதிலும் 30 வருடங்களுக்கு முன்பே ஒரு பெண் போராடி இப்படி திருமணம் செய்யலாம் என்று சட்டத்தில் ஒப்புதல் வாங்கி இருக்கிறார் என்கிற செய்தி 30 வருடத்துக்கு பிறகு லேட்டஸ்ட் செய்தியாக வந்திருக்கிறது. தலைக்கு தலை நாட்டாமை என்பது தான் இதுபோன்ற ப்ரச்சனைகளை தொடரந்து உயிர்ப்பித்துக்கொண்டே இருக்கிறது.

இது மட்டுமா முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்களை கல்யாணம் செய்ய மதம் மாறியே ஆகவேண்டும் என்கிறார்கள். அப்படி செய்யலை என்றால் இல்லீகல் என்கிறார்கள். ஆனால் பல ப்ரபலங்கள் மதம்மாறாமல் மணந்துகொண்டிருக்கிறார்கள்.. இவைகள் எல்லாம் ஸ்பெஷல் மேரேஜ் ஆக்டில் செய்யலாம் என்கிறதாம் இன்னோரு சட்டம். தெளிவா குழப்பறாங்க..

அன்னு said...

sorry....i mistook ur name as sinna ammini, i corrected it :)

The Analyst said...

As always, நன்றாக எழுதியுள்ளீர்கள்.

பெண்கள் ஆண்களுடன் வேலை செய்வ வேண்டுமாயின் என்ன செய்ய வேண்டுமெனக்கூட எகிப்பிலுள்ள ஒரு இஸ்லாமிய அறிஞர் கூறும் தீர்வு இது.

"The head of the Hadith Department in Al-Azhar University, Dr. Izzat Atiyya, recently issued a controversial fatwa dealing with breastfeeding of adults. The fatwa stated that a woman who is required to work in private with a man not of her immediate family – a situation that is forbidden by Islamic law – can resolve the problem by breastfeeding the man, which, according to shari’a, turns him into a member of her immediate family.

Dr. Izzat Atiyya explained his fatwa…..”The religious ruling that appears in the Prophet’s conduct [Sunna] confirms that breastfeeding allows a man and a woman to be together in private, even if they are not family and if the woman did not nurse the man in his infancy, before he was weaned – providing that their being together serves some purpose, religious or secular…

“A man and a woman who are alone together are not [necessarily] having sex, but this possibility exists, and breastfeeding provides a solution to this problem… I also insist that the breastfeeding relationship be officially documented in writing… The contract will state that this woman has suckled this man…

Dr. Atiyya further explained that the breastfeeding does not necessarily have to be done by the woman herself. “The important point,” he said, “is that the man and the woman must be related through breastfeeding. [This can also be achieved] by means of the man’s mother or sister suckling the woman, or by means of the woman’s mother or sister suckling the man, since [all of these solutions legally] turn them into brother and sister…

The adult must suckle directly from the [woman’s] breast… [This according to a hadith attributed to Aisha, wife of the Prophet’s Muhammad], which tells of Salem [the adopted son of Abu Hudheifa] who was breastfed by Abu-Hudheifa’s wife when he was already a grown man with a beard, by the Prophet’s order… Other methods, such as [transferring] the milk to a container, are [less desirable]…"

http://news.bbc.co.uk/2/hi/middle_east/6681511.stm

Can you believe it? எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறார்களோ தெரியவில்லை.

mohamed ashik said,

"ஆண் இருக்கையில் பெண்கள் சம்பாதிக்க வேண்டியது அவர்கள் மீது கடமை இல்லை. மாறாக ஆணின மீது பொருளீட்டி குடும்பத்தை காப்பாற்றுவது என்பது கட்டாய கடமை.குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, விரும்பினால் ஆகுமான வழியில் சம்பாதிப்பது தவறில்லை. ஆனால், குடும்பத்திற்காக அவள் வருமானத்திலிருந்து ஒரு பைசா செலவழிக்க கேட்கக்கூட கணவனுக்கு உரிமை இல்லை. ஏனென்றால், மனைவி லட்சம் ரூபாய் சம்பாதித்தாலும், அவளுக்கும் குழந்தைகளுக்கும் தேவையான உணவு, உடை, கல்வி, மருத்துவம், இருப்பிடத்திற்கு செலவு செய்ய வேண்டியது கணவன் மீது கட்டாயக்கடமை."

ஏன் அப்படி? திருமணம் செய்யும் இருவரும் matured adults ஆகத்தானே இருக்க வேண்டும். ஏன் அவர்கள் தங்களுக்குள் பேசி, இருவருக்கும் ஏற்ற ஒரு முடிவுக்கு வரக்கூடது. மனைவி லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் போது கணவன் வீட்டு வேலைகளைக் கவனித்தால் என்ன பிரச்சினை?

The Analyst said...

Just wanted to add, before anyone got hyped-up, that Dr. Atiya, thankfully was eventually suspended from al-Azhar University.

But the fact remain that supossedly religious scholars from all over the world come up with these bizarre and ridiculous statements as potential solutions to the assumed Sex-addicted (TOTALLY NOT TRUE) world or the cause for every disasters on the planet - as an Iranian cleric, a month ago claimed that "women who wear immodest clothing and behave promiscuously are to blame for earthquakes".

Apologists keeps telling that the religion is misunderstood. In all these cases the common denominator is the religion, so isn't it time to take a closer look at it with an open mind?

BTW, It's not just islam, every religion is misogynistic in nature.

ஹுஸைனம்மா said...

What happened to my previous comment, Mullai? Didn't receive it?

Kalaivani Sankar said...

Hi Mullai, Your feministic thoughts are good. You can write so, only when you feel that you are not humiliated by the chauvinistic world. Do write about girls like us working in IT industry, the problems we face..

You know that my husband does business. He was in a good job. He quit his job and ventured into business. When he decided he dint have any savings. What made him take this bold decision? Because I was earning and bringing home a huge sum every month. Till date he takes extreme risks without caring about the future.. It is all because I work. I am just ventilating my sorrows through your blog comments. Your topics make me feel that I am also one of those women who are exploited by the mankind.

The only mistake I did was I was soft and could not raise voice against my rude husband. He was really rude and merciless towards me.

Everybody, his relatives, friends, my relatives, friends, expect me to influence and change him, though all know that he is rude and does not listen to anybody. I do not know why I am made responsible for all that he does? Nobody knows the torture I am undergoing in married life… It is really unimaginable.

Thanks for giving a chance to ventilate my feelings.

Regards,
Kalaivani.

அன்னு said...

hi santhanamullai,

i had replied to this post using a post and sent u t link, tat comment dint get approved but after that wat i wrote got approved...why is it so?

சந்தனமுல்லை said...

ஹூசைனம்மா & அன்னு , தனிப்பட்ட தாக்குதல்கள் இல்லாமல் வரும் அனைத்து மறுமொழிகளையும் அனுமதிக்கிறேன். தங்களிடமிருந்து வந்த மறுமொழிகள் அனைத்தையும் வெளியிட்டிருக்கிறேன். சமயங்களில், பிலாக்கரும் மறுமொழிகளை விழுங்கிவிடுகிறது.

ஒருவேளை தாங்கள் குறிப்பிடும் மறுமொழி இங்கே இல்லாமலிருந்தால், சிரமம் பார்க்காமல் திரும்பவும் இடவும். நன்றி

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நல்லதொரு அவசியமான கட்டுரை..!

சில நேரங்களில் முஸ்லீம்கள் உலகத்தில் எது எதுவெல்லாம் தவறு.. எது எதுவெலலாம் சரி என்று புரிவதில்லை..!

ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கேற்ப திருக்குரானை பயன்படுத்துகிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது..!

ஜெயந்தி said...

எல்லா மதத்துலயும் பெண்களை எப்படி எப்படியெல்லாம் போட்டு துவைக்கலாம்னு ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

அன்னு said...

சந்தனமுல்லை அவர்களே,
என்னுடைய முதல் மறுமொழியை நீங்கள் வெளியிடவில்லை. அதன் பின் எழுதிய எல்லா மறுமொழிகளையும் வெளியிட்டுள்ளீர்கள். என்னுடைய முதல் மறுமொழி, இந்த பதிவிற்கான் பதில் பதிவை ஒரு இடுகையாக நான் இட்டுள்ளேன் என்பதுதான். வேறு எதுவும் இல்லை. தங்கள் spam folderல் தேடிப் பார்த்தால் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ். நன்றி.

..:: Mãstän ::.. said...

@சந்தனமுல்லை மேடம், ஹ்ம்ம்ம்... என்ன் சொல்வது என்றே தெரியவில்லை... இந்த பதிவு தேவையில்லை என்பதே எனது கருத்து...

இப்போதுதான் நான் சுகுணாவின் பதிவை படித்தேன், அங்கு வெளியிட்ட பின்னூட்டத்தை இங்கும் வெளியிடுகிறேன்...


இப்படி பட்ட பத்வா விசயங்களை உங்களை போன்றவர்களின் பதிவுகள் மூலமே அறிய முடிகிறது... பொதுவா இஸ்லாத்தை பொருத்த வரை குரான் மற்றும் ஹதீஸ் தவிர மற்றவர்கள் கூறும் எல்லாம், அவர்களின் ஸ்டான்டை நிலை நிறுத்துவதற்காவே... அதாவது அரசியல் போல... ஜஸ்ட் லைக்தட் என்றுதான் போகவேண்டும், அந்த பத்வாவை வெளியிட்டவருக்கு அந்த வீட்டின் பெண்தான் சம்பாதித்து அவரை காப்பாற்றவேண்டும் என்ற நிலை வந்தால்? கண்டிப்பா பெண்ணை வேலைக்கு அனுப்பவே செய்வார். இவர்கள் எல்லாம் கூறுவதை நாங்கள் சீரீயஸாக எடுத்தால்தான் இந்த பதிவு அவசியமாக இருந்துருக்கலாம்.... ஹ்ம்ம்ம்ம்....

பெண்கள் சம்பாரிப்பது என்பது, இப்போது அவசியமான ஒன்று... வரும் காலத்தில் கண்டிப்பான ஒன்றாய் கூட இருக்காம். ஆணின் வருமானத்தை கொண்டு மட்டும் எதையும் செய்ய முடியாது.

எனக்கு என்னவோ, எப்படி அரசியலில் சுப்பரமனிசாமி கூறுவதை எப்படி எடுக்கிறோமே அப்படியே இந்த பத்வா ஆசாமிகளின் கூற்றையும் எடுக்கவேண்டும், அவர்கள் எல்லாம் ஒரு காமெடி பீஸ் அவ்வளவுதான்.

ஸாதிகா said...

சந்தனமுல்லை.இஸ்லாத்தில் பெண்கள் சம்பாதிப்பதற்கு எந்த தடையும் இல்லை.முஹம்மது நபி(சல்) அவர்களின் மனைவி கதீஜா அம்மையார் அவர்கள் பல நூறாண்டுகள் முன்னரே வணிகத்தில் கொடிகட்டி பறந்தவர்கள்.இஸ்லாத்தின் கோட்பாடுக்களுக்கிணக்க தாராளமாக பெண்கள் பணி செய்யலாம்.கோல் எடுத்தவர்கள் எல்லாம் கோலேச்சலாம் என்ற ரீதியில் விடப்படு பத்வாக்களைக்கண்டு நாம் பெரிதுபண்ணத் தேவை இல்லை என்பதே என் தாழ்மையான கருத்து

UFO said...

@ Prosaic,
///So if a woman goes to work just because she wants to (not for financial reason), is wrong in islam?///

Nothing wrong as long as she follows islamic codes... but... it is unnecessary for her... as you said ... "not for financial reason" // thats all.

வேலைக்கு போகும் பெண்களுக்கு எவ்வளவு சிரமங்கள், தொல்லைகள், ஆபத்துகள், சங்கடங்கள், மனஉளைச்சல்கள், இழப்புகள்.... எல்லாம் இருக்கின்றன என்று இப்பதிவில் படித்தேனும் அறிந்து கொள்ளுங்கள்...

http://onlinepj.com/islathai_unmaipatuthum_natunatapukal/velaiku_selum_pengal/

இஸ்லாம், பொதுவாக மனிதர்களுக்கு அவர்கள் சக்திக்கு மேலே சுமையை ஏற்றாது... அதிலும் பெண்களுக்கு... நோ சான்ஸ்...

The Analyst said...

"இதை போல்ட் அன்ட் அன்ட‌ர்லைன் ப‌ண்ணிக்கோங்க‌. இறைத்தூத‌ர் முஹ‌ம்ம‌து ந‌பி (ச‌ல்) அவ‌ர்க‌ள் முத‌ல்ல‌, அவ‌ங்க‌ ம‌னைவி க‌திஜா (ர‌லி) அவ‌ங்க‌கிட்ட‌ தான் வேலை பார்த்துட்டு இருந்தாங்க‌."

"முஹம்மது நபி(சல்) அவர்களின் மனைவி கதீஜா அம்மையார் அவர்கள் பல நூறாண்டுகள் முன்னரே வணிகத்தில் கொடிகட்டி பறந்தவர்கள்."


தயவு செய்து கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் - கதீஜா ஒரு very successful business woman ஆக இருந்ததற்கு இஸ்லாமிற்கு முதலிருந்த கலாச்சாரம் தான் காரணமேயொழிய, இஸ்லாமல்ல. ஏனெனில் முஹம்மது நபி கதீஜாவிடம் வேலைக்குச் சேரும் போது இஸ்லாமே இருக்கவில்லை. கதீஜாவின் வியாபார வெற்றி இஸ்லாம் தோன்ற முன் நடந்தது. You can't give credit to islam or Mohammed for that at all.

கதீஜாவிற்கு பிறகு அவரின் மற்றைய மனைவியரில் யார் அவ்வளவு successful ஆயினர்?

mohamed ashik said...

//கதீஜாவிற்கு பிறகு அவரின் மற்றைய மனைவியரில் யார் அவ்வளவு successful ஆயினர்?//--சர்தான்... good analysis... but... in wrong way....

'இவ்வுலகில் எவர் ஒருவர் அதிகம் சொத்து சேர்த்து பெரிய பணக்காரர் ஆகிராரோ அவருக்குத்தான் மறுமையில் சொர்க்கம்' என்று இறைவன் கூறி இருந்திருந்தால், மற்ற மனைவியர் அனைவரும் கதிஜா(ரலி) அவர்களை விட ''successful '' ஆக ஆகி இருந்திருப்பார்கள்தான்... ஹும்.... என்னசெய்ய ...

இப்படிக்கு நிஜாம்.., said...

எம்மா தாயி! நான் முன்னயே சொன்னேன் நீங்க ஒரு அரைவேக்காடுன்னு. அதே நிலை இங்கேயும் கொப்பளிக்கிறது. எவனோ ஒருத்தன் பத்வா போட்டான்னா அது அவன்கிட்ட தனியா மெயில் அனுப்பி கேக்க வேண்டிய விசயம். அத எத்தன பேரு ஏத்துக்கிட்டான்னு தெரியாம என்னமோ எல்லாருமே அப்படியே பாலோ செய்யற மாதிரியில்ல இருக்கு உங்க எழுத்து. தெளிந்த காவிகளும் உங்களிடம் தோற்றுவிடுவார்கள் போல் இருக்கிறது. கொடுமைடா!

The Analyst said...

:):):)

உங்களின் point என்னவென்று விளங்கவில்லை. அப்ப கதீஜாவின் success இப்ப பிழை என்கிறீர்களா?

இஸ்லாத்தின் பெண்களின் நிலை எவ்வளவு உயர்வாக உள்ளது எனக்காட்ட (இப்பதிவின் பின்னூட்டங்களில் கூட) கதீஜாவையே அநேகமானோர் தேர்ந்தெடுப்பார்கள். அதனாலேயே கதீஜாவின் வெற்றிக்கும் இஸ்லாத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்ற உண்மையை எடுத்துக்கூறினேன்.

அதனால் தான் முஹம்மது நபி பெண்களின் நிலையை உயர்த்தினாரெனில் அவர் இஸ்லாத்தை உருவாக்கும் போது/பின் வந்த மற்றைய 11 மனைவியருக்கு என்னவாயிற்று என்றேன்.

The Analyst said...

UFO
I read the article you cited. I sincerely hope that you were kidding when you said "வேலைக்கு போகும் பெண்களுக்கு எவ்வளவு சிரமங்கள், தொல்லைகள், ஆபத்துகள், சங்கடங்கள், மனஉளைச்சல்கள், இழப்புகள்.... எல்லாம் இருக்கின்றன என்று இப்பதிவில் படித்தேனும் அறிந்து கொள்ளுங்கள்"

அநேகமாக எல்லா குற்றங்களுக்கும் குற்றவாளியிலேயே பழிபோடும்/அவர்களுக்கே தண்டனை கொடுக்கவேண்டுமெனவும் நீதி கதைக்கும் சனம் ஏன் குற்றம் பெண்களுக்கெதிராகப் பொதுவாக ஆண்களால் இழைக்கப்படும் போது அதற்கு மட்டும் பாதிக்கப்பட்ட பெண்களே பொறுப்பேற்க வேண்டும் என தீர்மானிக்கினமென எனக்கு விளங்கிய‌தே இல்லை.

"வீட்டில் கணவரின் சந்தேகப் பார்வை; பஸ்சில் இடிமன்னர்களின் குறும்பு; அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் காமப் பார்வை"

SERIOUSLY!!!!!!!!!!! இதில் சந்தேகப்படும் கணவனிலோ, அந்த இடிமன்னர்களிலோ, உயர் அதிகாரிகளிலோ தப்பில்லையா?????? உண்மையில் தண்டனை அவர்களுக்கல்லவா கொடுக்கப்படவேண்டும்? Am I missing something here?

ஆணை அவன் பிறந்ததிலிருந்தே பெண்ணை ஒரு போகப்பொருளாக பார்க்கப்பட வளர்க்கப்படும் சமூகத்தில் இவ்வாறு நடக்கத்தான் செய்யும். இலங்கையில் நாம் பள்ளிக்கூடம் போகும் போதே கட்டுரையில் கூறியமாதிரி "ரோட்டில் தனியாக நடந்து செல்லும் போது எதிரில் வருபவர் சேட்டை பார்வை வீசுவார். பஸ் ஏற பஸ் நிலையத்தில் காத்திருக்கும் போது, வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை கிண்டல் பாட்டு பாடுவது" எல்லாம் நடந்தது. அதற்காகப் பள்ளிக்கூடமே போயிருக்கக்கூடாது என்கிறீர்களா?

"வேலைக்குச் சென்றதால் வீட்டு வேலையில் இருந்து அவர்கள் விடுபட முடியாததால் அவர்கள் இரட்டைச் சுமையைச் சுமந்து வருகின்றனர்"

ஏன் இதற்குத்தீர்வு கணவன் வீட்டில் உதவி செய்ய வேண்டுமென இருக்கக்கூடாது?

அக்கட்டுரையில் சொல்லப்பட்ட
பிரச்சனைகள் எல்லாம் பெண்ணையும் தன்னை மாதிரி இன்னொரு மனிதப்பிறவியாகப் பார்க்கும் ஆண்‍ பெண் சமத்துவமுடைய ஒரு சமுதாயத்தில் இருக்காது. இலட்சியம் அவ்வாறு ஒரு சமுதாயம் உருவாக்குவதற்காய் இருக்க வேண்டுமே தவிர பெண்ணை பூட்டி வைப்பதற்காய் இருக்கக் கூடாது.

UFO said...

@ Analyst:
////SERIOUSLY!!!!!!!!!!! இதில் சந்தேகப்படும் கணவனிலோ, அந்த இடிமன்னர்களிலோ, உயர் அதிகாரிகளிலோ தப்பில்லையா?????? உண்மையில் தண்டனை அவர்களுக்கல்லவா கொடுக்கப்படவேண்டும்? Am I missing something here?/// ---மிக மிக நியாயமான வாதம்.... கண்டிப்பாக தரப்பட வேண்டும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை.

நானும் இதேபோன்ற ஒரு நியாயமான வாதம் வைக்கவா?

திண்டுக்கல்லில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு பூட்டும் தமிழ்நாட்டின் காவல்துறைக்கும், முதல்வருக்கும்,உயர்நீதி மன்றத்துக்கும் சவுக்கடி அல்லவா? என்னவொரு கேவலம்? அதேபோல இந்தியாவில் தாரிக்கப்படும் ஒவ்வொரு பூட்டும்... (அது இரு சக்கர லாக் /நான்கு சக்கர லாக் /வங்கி லாக்கர்/ கதவு லாக் என எதுவாகவும் இருக்கட்டுமே...) நம் சட்டத்திற்கும், நீதிக்கும் பிரதமருக்கும், சி பி ஐ க்கும் கொடுக்கப்படும் அசிங்கம்-அவமானம் இல்லையா? இவ்வளவு பேர் என்ன ....க்கு இருக்கின்றனர்? தம் நாட்டு மக்களுக்கு களவு பயம் அற்ற வாழ்க்கையை சட்டம்/நீதி/தண்டனை மூலம் தர வேண்டாமா? பின்னர் எதுக்கு பூட்டு தயாரிக்க அனுமதிக்க வேண்டும்? ஒவ்வொரு பூட்டுக்கும் ஒரு போலிசை தன் கடமை தவறியதற்காக 'உள்ளே' தூக்கி போட வேண்டாமா?

ஆணும் பெண்ணும் சமம் என்றால், எதற்கு லேடீஸ் ஸ்பெஷல் பஸ்? லேடீஸ் கவுண்டர்? லேடீஸ் கம்பார்த்மென்ட்? மகளிர் ஒய்வு அறை? மகளிர் காவல் நிலையம்? ஈவ் டீசிங் சட்டம்? பெண்கள் சுய உதவி குழுக்கள்? எக்ஸ்ட்ரா பாதுகாப்பு... இத்யாதிகள்..?

நானும் தெரியாமல்தான் கேட்கிறேன்... அது என்னப்பா உலகமே பெண்களுக்காக தனி அக்கறை எடுத்து கூடுதல் கவனமும் பாதுகாப்பும் வசதியும் கொடுக்கும்போது வாய்மூடி மவுனியாக இருந்து விடுவது... அதையே இஸ்லாம் செய்தால், "அய்யய்யோ ஆணாதிக்கம் பாரீர்"... "அடேய் பெண்விடுதலை பேணு"... என்று கூப்பாடு போட கிளம்பி விடுகிறீர்கள்?

"நான் வெயிலில் வியர்வை சிந்தி வேலை பார்க்கிறேன் நீ ஜாலியா வீட்டில் டிவி சீரியல் பார்த்துகொண்டு காற்றாடியில் காத்து வாங்கிட்டு இரு" என்றால் பெண் அடிமைத்தனமா?

டாப்பிக் என்னவென்றால், இஸ்லாம் எதற்கு 'ஆணை மட்டும் சம்பாரிக்க சொல்லி அவனை பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்ற சொல்கிறது' என்பதுதான்...

'அவரவர் பசிக்கு அவரவர் வயிற்றுக்கு அவரவர் உழைத்து சாப்பிட்டுக்கொள்ள சொல்லி இருந்தால் சமநீதி இருந்திருக்குமே...' என்று தானே அங்கலாய்க்கிறீர்கள்?

//ஏன் இதற்குத்தீர்வு கணவன் வீட்டில் உதவி செய்ய வேண்டுமென இருக்கக்கூடாது?//
எதற்கு உதவி எனும்போது 'சிறிதாக' நினைக்கிறீர்கள்? உங்களைவிட நான் என் மனைவிக்கு உதவி செய்வதில் பெரிய ஆளாக்கும்...
எனவே...நான் 'மிகப்பெரிய உதவி' ஒன்றை செய்ய ஆசைப்படுகிறேன்....

ஆணாகிய நான் ஆலையில் வேலை பார்த்து சம்பாரித்துக்கொண்டே...
பத்து மாசம் கருப்பையில் சுமந்து பெத்து மார்பில் இரண்டு வருடம் பாலூட்ட விரும்புகிறேன்... (ஆசையாத்தான் இருக்கு...அது ஆணால் முடியலையே...)
====>>>இதற்கு என்ன 'புரட்சி சம நீதி' வைத்திருக்கிறீர்கள் உங்கள் பெண்விடுதலை புத்தகத்தில்???

The Analyst said...

UFO,

"திண்டுக்கல்லில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு பூட்டும் தமிழ்நாட்டின் காவல்துறைக்கும், முதல்வருக்கும்,உயர்நீதி மன்றத்துக்கும் சவுக்கடி அல்லவா? ............ஒவ்வொரு பூட்டுக்கும் ஒரு போலிசை தன் கடமை தவறியதற்காக 'உள்ளே' தூக்கி போட வேண்டாமா?"


சாதார‌ண‌மாக‌ எல்லா ச‌மூக‌ங்க‌ளிலுல் ந‌ட‌க்கும் திருட்டுக‌ளுக்கும் நாம் க‌தைப்ப‌த‌ற்கும் உள்ள‌ பெரிய‌ வித்தியாச‌ம், உங்க‌ள் வீட்டில் திருட‌ப்ப‌ட்டால், திருடனைப் பிடித்து தண்டிப்பது தான் சரியான விடயம் என எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள். திருடர்கள் இருக்கிறார்களெனத்தெரிந்தும் நீங்கள் ஏன் வீட்டை விட்டு வெளியே போனீர்களென யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள். இதையேதான் நான் முதல் சொன்ன உங்களுக்கான பதிலிலும் குறிப்பிட்டிருந்தேன். குற்றமிழைத்தவனை விட்டு விட்டு பாதிக்கப்பட்டவர்களை அக்குற்றத்திற்குப் பொறுப்பாளியாக்காதீர்களென. பெண்கள் விடயத்தில் எம்சமூகத்தில் அவ்வாறு தான் நடக்கிறது.


"ஆணும் பெண்ணும் சமம் என்றால், எதற்கு லேடீஸ் ஸ்பெஷல் பஸ்? லேடீஸ் கவுண்டர்? லேடீஸ் கம்பார்த்மென்ட்? மகளிர் ஒய்வு அறை? மகளிர் காவல் நிலையம்? ஈவ் டீசிங் சட்டம்? பெண்கள் சுய உதவி குழுக்கள்? எக்ஸ்ட்ரா பாதுகாப்பு... இத்யாதிகள்..?"

Feels like Deja Vu all over again. :) இவையெல்லாம் பெண்ணை ச‌க‌ ம‌னித‌ப்பிற‌வியாக‌ ம‌திக்கும் ச‌மூக‌த்தில் தேவையில்லாத‌வை.

The Analyst said...

""நான் வெயிலில் வியர்வை சிந்தி வேலை பார்க்கிறேன் நீ ஜாலியா வீட்டில் டிவி சீரியல் பார்த்துகொண்டு காற்றாடியில் காத்து வாங்கிட்டு இரு" என்றால் பெண் அடிமைத்தனமா?"

Are you serious? ஒரு வகை ஒடுக்குமுறையேதான். மனைவி என்பவள் ஒன்றும்மறியாத சின்னக்குழந்தையல்ல, நீங்களே அவளுக்கு என்ன சரியானது என்பதைத் தீர்மானிக்க.எனக்கு ஒரு கெளரவமான அடிமையாக இருக்க விருப்பமில்லை. உங்களுக்கு அப்படி இருக்க ஒரு வாய்ப்புக்கிடைத்தால் சந்தோசமாக இருப்பீர்களா? திரும‌ண‌மென்ப‌து ஒரு சுய‌மாக‌ச் சிந்திக்க‌கூடிய‌ ம‌னித‌ர்க‌ளுகிடையில் நடைபெற‌வேன்டும். It should be an equal partnership with equal decision making power and shared responsibility. It's not a business contract (or shouldn't be) with assigned roles for each memeber. Shouldn't marriage be about sharing every aspect of life's ups and down with a compatible person who will accept you for who you are and help you to achieve your goals and dreams, while you help him or her to do the same? and if you choose to have children, then together helping them to become the best human beings they can be.

The Analyst said...

"எதற்கு உதவி எனும்போது 'சிறிதாக' நினைக்கிறீர்கள்? உங்களைவிட நான் என் மனைவிக்கு உதவி செய்வதில் பெரிய ஆளாக்கும்...
எனவே...நான் 'மிகப்பெரிய உதவி' ஒன்றை செய்ய ஆசைப்படுகிறேன்....
ஆணாகிய நான் ஆலையில் வேலை பார்த்து சம்பாரித்துக்கொண்டே...
பத்து மாசம் கருப்பையில் சுமந்து பெத்து மார்பில் இரண்டு வருடம் பாலூட்ட விரும்புகிறேன்... (ஆசையாத்தான் இருக்கு...அது ஆணால் முடியலையே...)"


:) Sounds impossible doesn't it?ஆனால் எத்தனையோ பெண்க‌ள் இவ்வாறே வேலைக்கும் போய் பிள்ளைக‌ளையும் பார்த்து வீட்டு வேலைக‌ளையும் செய்துகொண்டுள்ள‌ன‌ர், தெரியுமா? ப‌ல‌ ச‌ம‌ய‌ம் பொருளாதார‌த்தேவைக‌ளுக்காக‌ எத்த‌னையோ பெண்க‌ள் இவ்வாறு 'super women' ஆக‌ இருக்க‌ வேண்டியுள்ள‌து. But there are still treated like second-class citizens. ப‌ல‌ ச‌ம‌ய‌ம் அவ‌ர்க‌ள் விரும்பியும் வேலைக்குப் போகிறார்க‌ள். ஆனால் வீட்டு வேலை, பிள்ளை வ‌ள‌ர்ப்பு எல்லாவ‌ற்றிற்கும் அநேகமாக அவ‌ர்கள் தான் முழுப்பொறுப்பேற்க‌வேண்டியுள்ள‌து. அதில் உத‌வி செய்ய‌ உங்க‌ளுக்கு ஏன் இய‌லாம‌ல் இருக்குது?

like Crystal Eastman said in 1920,
A growing number of men admire the woman who has a job, and, especially since the cost of living doubled, rather like the idea of their own wives contributing to the family income by outside work. And of course for generations there have been whole towns full of wives who are forced by the bitterest necessity to spend the same hours at the factory that their husbands spend. But these bread-winning wives have not yet developed homemaking husbands. When the two come home from the factory the man sits down while his wife gets supper, and he does so with exactly the same sense of fore-ordained right as if he were "supporting her." Higher up in the economic scale the same thing is true. The business or professional woman who is married, perhaps engages a cook, but the responsibility is not shifted, it is still hers. She "hires and fires," she orders meals, she does the buying, she meets and resolves all domestic crises, she takes charge of moving, furnishing, settling. She may be, like her husband, a busy executive at her office all day, but unlike him, she is also an executive in a small way every night and morning at home. Her noon hour is spent in planning, and too often her Sundays and holidays are spent in "catching up."

Two business women can "make a home" together without either one being over-burdened or over-bored. It is because they both know how and both feel responsible. But it is a rare man who can marry one of them and continue the homemaking partnership. Yet if there are no children, there is nothing essentially different in the combination. Two self-supporting adults decide to make a home together: if both are women it is a pleasant partnership, more fun than work; if one is a man, it is almost never a partnership -- the woman simply adds running the home to her regular outside job. Unless she is very strong, it is too much for her, she gets tired and bitter over it, and finally perhaps gives up her outside work and condemns herself to the tiresome half-job of housekeeping for two.

"Now we can begin" in The Liberator, 1920

செல்வநாயகி இதைப்பற்றி மிக நன்றாக இங்கு எழுதியிருக்கிறார்.

rajasurian said...

@The Analyst

பின்நூட்டமிடுகையில் இணைப்பின் முகவரியை நேரடியாய் கொடுத்தால் படிக்க ஏதுவாக இருக்கும்.

The Analyst said...

முதற்கொடுத்த link வேலை செய்யவில்லை. மன்னிக்கவும். இது தான் அந்த தளம் (http://sakhthi.blogspot.com/). She has written it brilliantly.

rajasurian said...

@The Analyst

நன்றி