Wednesday, May 05, 2010

வீட்டுக்கு வீடு அனிதா (அ) அன்னை தெரசா!

அனிதா. அனிதாவை, அவளது திருமணம் முடிந்த அன்று மதியம்தான் முதன்முதலில் சந்தித்தேன். அம்மாவீட்டு செண்டிமென்ட்டால்தான் அவளது கண்கள் கலங்கியிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். ஏனெனில், திருமணமானதுமோ அல்லது வயதுக்கு வந்தவுடனோ அழ வேண்டுமென்று பலத்த நம்பிக்கை கொண்டிருந்த பல பெண்களை பார்த்த அனுபவம். மேலும், மண்டபத்தில் செய்ய வேண்டிய சடங்குகளும் ஒரு காரணம்.

உறவினர் அனைவரின் கால்களில் விழுந்து விழுந்து, எழுந்து, புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து என்று கதற வைப்பார்கள். அப்புறம் கோயில் கோயிலாகவும் ஏதாவதொரு ஏரி அல்லது குளத்துக்கு நட்ட நடு மதிய நேரத்தில் அழைத்துச் சென்று மண்டை காய வைப்பார்கள். இந்தச் சடங்குகளை முடித்து, வியர்த்துக் கொட்டி, வீட்டுக்கு வந்தவளை சுற்றி எல்லாரும் அமர்ந்திருந்த நேரத்தில் சந்தித்தேன்.

அனிதா ஒருவகையில் எனக்கு தங்கை முறை. (ஏனெனில் அவள் என்னை அக்கா என்று அழைத்தாள். :-)) அதாவது முகிலின் வழியில் ஓரளவு நெருங்கிய சொந்தத்தில் தம்பி மனைவி. அழுகை முட்டிக்கொண்டு வர கைக்குட்டையால் துடைத்துக்கொண்டு, சுற்றியிருப்பவர்களின் சொல்லுக்கெல்லாம் சமாதானமானவள் போல தலையாட்டிக் கொண்டுமிருந்தாள். புழுக்கமாக இருந்தது அறை. மாலை. பத்தாதற்கு தலைநிறைய பூ. அதில் தலையலங்காரங்கள் வேறு. சூரியன்- சந்திரன்-அப்புறம் நட்சத்திரங்கள், மணிகள். அதற்கு மேல், தங்கள் மரியாதையே அதில்தான் இருக்கிறது என்பதுபோல் உறவினர்கள் வரிந்துக் கட்டிக்கொண்டு கட்டிய ஒரு கொத்து லட்சுமி காசுகள்.

”மாலையும்,தலையிலே இருக்கறதும் வெயிட்டா இருக்கும் இல்ல.. அதுவும் கசகசன்னு இருக்குமே...கழட்டிடுங்களேன்” என்றதற்கு, கம்மலான குரலில்
“இருக்கட்டுங்க்கா, பரவால்ல, இன்னைக்கு ஒரு நாளைக்குத்தானே” என்றாள்.

அவள் நிலையில் நான் நின்றபோது “எனக்கு யாராவது சொல்ல மாட்டார்களா” என்று தோன்றியதை,ஒருவரும் சொல்லாததை அவளுக்குச் சொன்னதாக நான் பெருமை வேறு பட்டுக்கொண்டேன். ஆனால், அவள் அதைத் தாங்கிக்கொள்ளும் பக்குவத்துடனே இருக்கிறாள். அதுவும் , ‘ஒருநாளைக்குத்தானே' என்றும்!!

அங்கே வந்த அங்கிள் அவளைப் பார்த்தது “எல்லாம் சரியாய்டும், அவன் அப்படித்தான்...கோவக்காரன்” என்று சொன்னதும் தலையாட்டிக் கொண்டாள். திரும்பக் கண்ணீர். உடனே சுற்றி இருந்தவர்கள் “இன்னைக்கு அழவே கூடாது” என்று சமாதானப்படுத்தத் தொடங்கினர். பத்தாததிற்கு ஒரு ஆயா, வேறு ,”அவன் அப்படித்தான்,கொஞ்சம் கோவக்காரன், எல்லாம் சரியாப்பூடும், கோவம் இருக்கற எடத்துலே தான் கொணம் இருக்கும்” என்று வெற்றிலையை மென்றபடி சொல்லிகொண்டிருந்தார். இதற்கும் அனிதா ஒரு மருண்ட பார்வையோடு தலையாட்டிக்கொண்டிருந்தாள்.

நடந்தது இதுதான். கல்யாணம் முடிந்ததும் கோயிலுக்கு அழைத்துச் சென்று மணமகளின் அம்மா ஆரத்தி எடுத்திருக்கிறார்கள். ஆரத்தித் தட்டை மணமகன் தள்ளி வீசி இருக்கிறான். தடுத்து பிடிக்க வந்த மணமகளின் தம்பியை அறைய கை ஓங்கியிருக்கிறான். சமாதானப்படுத்தி இருவரையும் இங்கே அழைத்து வந்திருக்கிறார்கள். அதுதான் அனிதாவின் கண்ணீருக்குக் காரணம். அங்கிள் சொன்னால் சுரேன் கேட்டுக் கொள்வான் என்று இங்கே அழைத்து வந்திருக்கிறார்கள்.


இதற்குத்தான், “மாப்பிள்ளைக் கொஞ்சம் கோவக்காரன்” என்ற சப்பைக்கட்டு எல்லோரிடமிருந்தும். சொல்லிவைத்தது போல எல்லோரும் அதைச் சொன்னது மிகுந்த விசித்திரமாக இருந்தது. சுரேனை ஃப்ரெண்ட்லியாகவே பார்த்திருக்கிறேன். அவனது இந்த செய்கை மாப்பிள்ளை முறுக்கு அல்லது வெட்டி பந்தாவாகவே பட்டது. ஒருவரும் அவனை கண்டிக்கா விட்டாலும், அனிதாவின் முன்பு அவனை விமர்சிக்காமலும் “எல்லாம் சரியா போய்டும்” என்று அவளை தேற்றவே முற்பட்டனர். பின்னர், அனிதாவின் வீட்டுக்கு மறுவீடு செல்ல ஏகப்பட்ட பேர் சுரேனை வற்புறுத்த வேண்டியிருந்தது.

மாப்பிள்ளைக்கு மணமகளைப் பிடிக்கவில்லை. ஆனால், மாப்பிள்ளையின் அப்பாவிற்கு மணமகள் வீட்டாரின் செழிப்பு பிடித்திருந்ததே கல்யாணத்திற்குக் காரணம்.

இது எல்லாம் மூன்று வருடங்களுக்கு முன்பு. இப்போது, இரண்டாம் பிரசவம் முடிந்து அம்மா வீட்டிலிருந்த அனிதாவை கடந்த முறை விழுப்புரம் சென்றிருந்தபோது சந்தித்தேன். Back to back delivery.

அந்த அங்கிள் இரண்டாம் மகனைப் பற்றி அங்கலாய்த்துக்கொண்டிருந்தார். அவன் இன்னும் அரியர்சை வைத்துக்கொண்டிருப்பதாகவும், முடித்துவிட்டால் நாங்கள்(?!) எப்படியும் வேலை வாங்கி (!!) கொடுத்து விடுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், கொஞ்சம் புத்தி சொல்லிட்டு போகும்படியும் புலம்பிக் கொண்டிருந்தார். ”இப்படிதான் அங்கிள் நீங்க சுரேன் பத்தியும் சொன்னீங்க, உருப்படவே மாட்டான்னு, இப்போ அவன் நல்லா இல்லையா, நாமதான் நம்ம பசங்க மேலே நம்பிக்கையா இருக்கணும், திட்டாம இருந்தாலே போதும் அங்கிள்” என்று வேதம் ஓதிக்கொண்டிருந்தேன்.

“நான் அவனை பத்தியும் கவலைப்பட்டேந்தாம்மா,அவன் லாயக்கே இல்லே, ஆனா அவனுக்கு வந்தவ கெட்டிக்காரி, எல்லாத்தையும் இப்போ கரெக்ட் பண்ணிட்டா. கல்யாணம் பண்ணி கூட்டுட்டு வந்தப்போ ரூம்லேருந்து வெளிலே வந்து படுத்துக்குவான்...மருமக கிட்டே கேட்டா 'எங்களுக்குள்லே பேச்சுவார்த்தையே கிடையாது' -ன்னு அழுவா.எல்லாம் கொஞ்ச நாள்லே சரியா போய்டும்னு சொல்லுவோம்..வேற என்ன பண்ண முடியும்...இப்போ பாரு..ரெண்டு குழந்தைங்க...முன்னெல்லாம் அவங்க அம்மா வீட்டுக்கு போகவே மாட்டான்..இப்போ அங்கேயேதான் கெடக்கறான்.அதை கொறையா சொல்லல..ரொம்ப சந்தோஷம்தான் எங்களுக்கு” - அங்கிள்.

அனிதாவின் கடந்த மூன்று வருட வாழ்க்கையை நான் அறிவேன். ஹோம் தியேட்டரும், ஏசியும், 50 பவுன் நகையும், கட்டிலும் பீரோவும், காரும் லஞ்சமாகக் கொடுத்து வாங்கப்பட்ட ஆணுக்கு நல்ல மனைவியாக இருப்பது எப்படி என்ற ஒரே எதிர்கால லட்சியத்துடன் வளர்க்கப்பட்டவள். அற்பமான காரணங்களுக்காக, பலர் முன்பு கணவனிடம் அறை வாங்கியவள்.ஒருமுறை, அவள் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது கணவன் தண்ணீர் கேட்டதற்காக பாதி சாப்பாட்டிலிருந்து எழுந்து கைகழுவி ப்ரிட்ஜிலிருந்து எடுத்துக் கொடுத்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தாள். ஃப்ட்ரிஜிலிருந்து தண்ணீரை எடுத்துக் கொள்ள முடியாதபோது மற்ற வீட்டு வேலைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எல்லோரும் சாப்பிட்ட பின்பு சாப்பிட்டு , பின் தூங்கி முன் எழுபவள். எல்லோருடைய துணிகளையும் துவைத்தவள். மாமனார்- மாமியார் முன்பு அமராதவள். உடல்நிலையை பற்றி நினைத்துக் கூட பார்க்காமல் அடுத்தடுத்த பிள்ளைப்பேற்றுக்கு ஆளானவள். (ஒருவேளை அனிதா படித்தவளாக அல்லது சம்பாதிக்கக் கூடியவளாக இருந்திருந்தால், இவை எல்லாமே மாற்றி நடந்திருக்கும். ;-) )

“அவன் கெட்டவன்மா, நானே சொல்லுவேன், ஆனா இவ விடாம அவனை நல்ல வழிக்கு கொண்டு வந்துட்டா..என்ன ஒண்ணே ஒண்ணு..குடிதான்..அதையும் கண்ட்ரோல் பண்ணிட்டான்னா....அவ பண்ணிடுவா” - அங்கிளைத் தொடர்ந்து ஆண்ட்டி!

அனிதா என்ன அன்னை தெரசாவா என்று கேட்க வந்தது தண்ணீரோடு சேர்ந்து உள்ளே போய்விட்டது!

"எல்லாம் பொம்பள கையிலேதான் இருக்கும்மா” - என்று முடித்தார் அங்கிள். (இதில் எனக்கு ஏதும் உள்குத்து இருக்குமோ என்று எனக்கு வேறு யோசனை... LoL!)

”இப்போ எனக்கு அவனைப் பத்தி கவலையே கிடயாது..எல்லாம் மருமவ பாத்துக்குவா..அவ சாமர்த்தியம்மா! இவன் (இரண்டாவது) இப்படி இருந்தா யாரு பொண்ணு குடுப்பா” - இது ஆண்ட்டியின் கவலை.

சிறுவயதிலிருந்து வளர்த்தவர்களாலேயே நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்டு வர முடியாது தோல்வியுற்றபோது, ஒரு adult-இன் பழக்க வழக்கங்களை மாற்றிட முடியுமா என்பதை விடுங்கள்.

கணவன் எப்படியிருந்தாலும் திருத்தி நல்வழிப்படுத்தி அவனுடன் வாழ்வதுதான் மனைவியின் வேலையா?

அனுதினமும் போராடி அவமானங்களை பொறுமையாக சகித்து அவனை திருத்துவதுதான் அவளது வாழ்க்கையா?

அதுவும் கணவனின் எல்லா நடத்தைகளுக்கும் மனைவியே பொறுப்பு என்று கற்பிப்பது ..?

“ஆச்சி எனக்கு சம்பளம் கொடுக்குது,எனக்கென்னா ஆயா, நான் ரெண்டு பசங்களை வச்சிக்கிட்டு தனியா வந்துடுவேன், மாடு மாதிரி அடிக்கறான் ராத்திரி வந்து” என்று ஆயாவிடம் சொன்ன ஷோபனா அக்காவின் தைரியம் அனிதாக்களுக்கு எப்போது வரும்?

36 comments:

☀நான் ஆதவன்☀ said...

ம்ம்ம்ம்
:(

ஆனா அனிதா’க்கள் காலம் மாறிகிட்டே இருக்குது... கூடிய சீக்கிரம் மாறிடும் பாஸ்.

ராமலக்ஷ்மி said...

'ஒரு கால் கட்டு போட்டால் எல்லாம் சரியாகி விடும்'-காலம் காலமாக தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது:(!

ஆயில்யன் said...

டோண்ட் ஒர்ரி ஆச்சி & அக்கா

நல்லவங்க மனசுல என்னிக்குமே சோகம் நிரந்தரமா இருக்காது!

முகிலன் said...

அனிதாவை நினைத்து பரிதாபப்படுவதா கோபப்படுவதா என்று தெரியவில்லை.. :(

Kalaivani Sankar said...

Hi Mullai,

What you have written is really true. For all the mistakes husband does, wife is only made responsible.

அமைதிச்சாரல் said...

//எல்லாம் பொம்பள கையிலேதான் இருக்கும்மா” - என்று முடித்தார் அங்கிள்//

கோவந்தான் வந்துச்சிங்க இதப்படிக்கும்போது.. ஏன்?, அவங்கம்மா கையில எதுவும் இல்லாம போயிடுச்சு!!!
பையனை சரியா வளக்காம இன்னொரு பொண்ணோட வாழ்க்கைய பணயம் வைக்கிறது எந்த வகையில நியாயமா படுதுன்னு தெரியல.

//அதுவும் கணவனின் எல்லா நடத்தைகளுக்கும் மனைவியே பொறுப்பு என்று கற்பிப்பது//
:-(((( .

//படித்தவளாக அல்லது சம்பாதிக்கக் கூடியவளாக இருந்திருந்தால்//

ஒண்ணும் நடந்திருக்காது.'சம்பாதிக்கிற திமிர்'ன்னு ஒரே வார்த்தையில் எல்லாத்தையும் காலிபண்ணிடுவாங்க.
என்னவோ போங்க. பரிதாபமா இருக்கு.

ஹுஸைனம்மா said...

// (ஒருவேளை அனிதா படித்தவளாக அல்லது சம்பாதிக்கக் கூடியவளாக இருந்திருந்தால், இவை எல்லாமே மாற்றி நடந்திருக்கும். //

அப்படியா?? நெசமாவா?

சின்ன அம்மிணி said...

//அவ என்ன தெரசாவா//

அப்படி பொறுமையா இல்லாட்டி பொண்ணே இல்லைன்னு சொல்லிடுவாங்க :(

அமுதா said...

/*சிறுவயதிலிருந்து வளர்த்தவர்களாலேயே நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்டு வர முடியாது தோல்வியுற்றபோது, ஒரு adult-இன் பழக்க வழக்கங்களை மாற்றிட முடியுமா என்பதை விடுங்கள்.

கணவன் எப்படியிருந்தாலும் திருத்தி நல்வழிப்படுத்தி அவனுடன் வாழ்வதுதான் மனைவியின் வேலையா?

*/
ம்.... மனைவியின் வேலை என்று எண்ணுபவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.


/*ஒருவேளை அனிதா படித்தவளாக அல்லது சம்பாதிக்கக் கூடியவளாக இருந்திருந்தால், இவை எல்லாமே மாற்றி நடந்திருக்கும். ;-) )
*/
பெரும்பாலும் இருக்கலாம். ஆனால் இவர்களுக்குள்ளும் சில அனிதாக்கள் இருக்கிறார்கள்.. குடும்பம் என்ற சூழ்நிலை கைதியாகி திருமணம் என்ற பந்தம் கழுத்தை அறுத்தாலும் பொறுத்துக் கொண்டு.... :-(

நாஸியா said...

\ஒருவேளை அனிதா படித்தவளாக அல்லது சம்பாதிக்கக் கூடியவளாக இருந்திருந்தால், இவை எல்லாமே மாற்றி நடந்திருக்கும். ;-) )\

எனக்கு தெரிஞ்சு இல்லைங்க.. கல்லூரியில என் நெருங்கிய தோழி ஸ்ரீவி. நல்ல படிச்சவ, நல்ல சம்பாதிக்கிறா. ஆனா கல்யாணம் 15 லட்சம் ரொக்கம் ப்ளஸ் சீர் வரிசை.. மாப்பிள்ளையும் படிச்சவர், பல் மருத்துவர். ஆனா அவளோட சேலரி அக்கவுன்ட் இருக்கும் டெபிட் கார்டும், பாஸ்வேர்டும் மாப்பிள்ளை கையில். கேட்டா 'சின்ன வயசு, காச எப்படி செலவழிக்கனும்'னு தெரியாதாம். 20,000க்கு மேல சம்பாதிக்கிறவளுக்கு 2000 கூட கிடைக்காது, சொந்த செலவுக்கு. இதை விட அநியாயம் இருக்கா?

அம்பிகா said...

முல்லை,
உங்கள் பதிவு, என் மனநிலையை பிரதிபலிப்பது போலிருக்கிறது. நேற்று எதிர்வீட்டில், திருமணம் செய்து கொடுத்த மூன்றே வருடத்தில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாள். காரணம் தெரியாமல் கோபமும், கண்ணீரும் வருகின்றது.
நீங்கள் பதிவில் எழுதியிருந்ததை போன்ற காரணங்கள் தாம்.
:-(((

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

சாட்டையடி!!!

நசரேயன் said...

//நாமதான் நம்ம பசங்க மேலே நம்பிக்கையா இருக்கணும், திட்டாம இருந்தாலே போதும் அங்கிள்” //

குறிச்சி வச்சிக்கிறேன்

நசரேயன் said...

// எனக்கு ஏதும் உள்குத்து இருக்குமோ என்று எனக்கு வேறு யோசனை.//

கண்டிப்பா, சந்தேகமே பட வேண்டாம்

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

கவலை வேண்டாம் காலப்போக்கில் எல்லாம் மாறிவிடும் . பகிர்வுக்கு நன்றி !

நசரேயன் said...

//கணவன் எப்படியிருந்தாலும் திருத்தி நல்வழிப்படுத்தி அவனுடன் வாழ்வதுதான் மனைவியின் வேலையா?//

கள்ளு குடிச்சாலும் கணவன், புள்ளு குடிச்சாலும் கணவன் ?

நசரேயன் said...

//அதுவும் கணவனின் எல்லா நடத்தைகளுக்கும் மனைவியே பொறுப்பு என்று கற்பிப்பது ..?//

பாட்டு எல்லாம் இருக்கு தெரியுமா, ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலேன்னு

தாரணி பிரியா said...

//(ஒருவேளை அனிதா படித்தவளாக அல்லது சம்பாதிக்கக் கூடியவளாக இருந்திருந்தால், இவை எல்லாமே மாற்றி நடந்திருக்கும். ;-) //

அப்படி இல்லை முல்லை. அப்பவும் இப்படித்தான் இருந்து இருக்கும். இன்னும் அதிகமாக கொத்தடிமையா வீட்டுலயும் வேலை ஆபிசிலயும் வேலை.

இந்த வாழ்க்கை அனிதா விருப்பத்தோடு வாழறதா இருக்காது. நம்மளை போல இருக்கிற மிடிஸ் கிளாஸ்சுக்கு நம்ம வாழ்க்கையை விட அடுத்தவங்க பேச்சுக்குதானே பயம். அதுதான் ஷோபனா அக்காவுக்கு இருக்கிற தைரியம் அனிதாவுக்கு இல்லை :(.

T.V.ராதாகிருஷ்ணன் said...

காலம் மாறிகிட்டே இருக்குது

தோழர் மோகன் said...

முல்லை அருமையான பதிவு, சரியான கேள்வி ஆனால் இதற்கு பதில்... இது நீங்களே சொன்ன மாதிரி ஒரு தனி அனிதா வோடபிரச்சனையில்ல வீட்டுக்கு வீடு இருக்கும் எல்லா அன்னை தெராசா வுக்குமானா சமூக பிரச்சனை, இதுல நாம பேச வேண்டியது பகிர வேண்டியது,"எல்லாம் விதி அல்லது பொம்பளையா பிறந்துட்டா இதெல்லாம் சாதாரணம் இல்ல வாச்சது இவ்வளவு தான் இப்படித்தான் வாழனும் " னு திரும்ப திரும்ப பயமுறத்த பட்ட அனிதாக்களை அல்ல “ஆச்சி எனக்கு சம்பளம் கொடுக்குது,எனக்கென்னா ஆயா, நான் ரெண்டு பசங்களை வச்சிக்கிட்டு தனியா வந்துடுவேன், மாடு மாதிரி அடிக்கறான் ராத்திரி வந்து” என்று ஆயாவிடம் சொன்ன ஷோபனா போன்ற தைரியும் கொண்ட அக்காக்களதான் காரணம் "சம்பாதிசாலும் நான் பொம்பளை, என்னால தனியா இருக்கமுடியுமா? என நினைக்கிற பொண்ணோட பொதுப்புத்தி யும் "ஆயிரந்தா இருந்தாலும் நீ பொம்பளைதான் டி உன்னால ஒன்னையும் ...க முடியாது? என நினைக்கிற ஆணோட பொதுப்புத்தி யும் தான் இந்த பிச்ச்சனையொட மைய புள்ளி அதனால நீங்க பார்த்த சில ஷோபணா வோட வாழ்க்கையே எழுதுங்க அது பல அணிதா வோட வாழ்க்கைக்கு நம்பிகையா இருக்கும் னு நான் நினைக்கிறேன்... நீங்கள்?

தோழமையுடன்,
மோகன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நம்மளை போல இருக்கிற மிடிஸ் கிளாஸ்சுக்கு நம்ம வாழ்க்கையை விட அடுத்தவங்க பேச்சுக்குதானே பயம். அதுதான் ஷோபனா அக்காவுக்கு இருக்கிற தைரியம் அனிதாவுக்கு இல்லை :(.//

தாரணி சொல்வது சரின்னு படுது. அடுத்தவங்க பேச்சுக்கு யோசிக்கறதால தொடர்ந்து இருக்கிற ப்ரச்சனை தான் இதெல்லாம்..ம்

மாதவராஜ் said...

குடும்பம், குடும்ப அமைப்பு குறித்த முக்கியப் பிரச்ச்னையை தொட்டு பேசியிருக்கிறீர்கள் முல்லை.

வீட்டுக்கு வீடு அன்னை தெரசாவெல்லாம் இருக்க முடியாது. கணவனின் எல்லாவற்றுக்கும் மனைவி பொறுப்பு சுமக்க முடியாது. நளாயினிகளின் காலம் அல்ல இது.

அன்பும், நட்பும் கொண்ட உறவுகளே முக்கியமானது. ஒருவரையொருவர் மதிக்கத் தெரிய வேண்டும். இந்தப் புரிதலற்ற உறவுகளை வைத்துக் கொண்டு மாரடிக்கத் தேவையில்லை.

வினவு said...

இத்தகைய அனுபவப் பகிர்வுகளை படிப்பவர்கள் குறிப்பிட்ட பெண்ணை குற்றவாளி போல நடத்தும் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அப்படி இல்லை என்பதாக எளிதாக கடந்து போகிறார்கள். அவர்களிடம் சுயவிமரிசனத்தை எழுப்பும் வண்ணம் முல்லை தனது பதிவில் காரத்தையும், குறிப்பான கேள்விகளையும் எழுதவேண்டுமென்று கருதுகிறேன்.

காமராஜ் said...

தொலைக்காட்சித் தொடர்கள்
இந்த மாதிரியான பிம்பங்களை முன்நிறுத்துகிற, இன்னும் கூட தொடரும் இந்த நேரத்தில் திரும்பத்திரும்ப பேசவேண்டிய பொருள் இது. இன்னும் வலிமையாகப்பேசவேணும்.

செல்வா said...

குடும்பம் என்ற அமைப்பு ஏகப்பட்ட நெளிவு சுழிவுகளைக் கொண்டது. பெண் என்பவள் ஆதிக்கம் செலுத்தப் படும் ஒரு அப்பாவி எனவும் ஆண் என்பவன் ஆதிக்கவாதி, மனைவியை அவள் உணர்வுகளை மதிக்காதவன் எனவும் இருக்கும் பொதுவான பிம்பத்திற்குள் பலப் பல மனவியல் கூறுகள் மறைந்து போகின்றன.
// கணவன் எப்படியிருந்தாலும் திருத்தி நல்வழிப்படுத்தி அவனுடன் வாழ்வதுதான் மனைவியின் வேலையா?
அனுதினமும் போராடி அவமானங்களை பொறுமையாக சகித்து அவனை திருத்துவதுதான் அவளது வாழ்க்கையா? //
இதை முடிவு செய்ய வேண்டியது சம்பந்தப் பட்ட பெண். அவள் சூழலின் நிர்ப்பந்தம். அந்தக் கணவனின் உண்மையான மனநிலை ஆகியவையே. அதுதான் வேலை, அதுதான் வாழ்க்கை என்று துணிந்த பின்னர் புத்தி சாலித்தனமும், அன்பும் கொண்ட பெண்கள், சுய மரியாதையை அளவுக்கதிகமாக பேசி சொந்தக் காலில் நிற்கும் தைரியத்தில் உறவுகளை தூக்கியெறிந்த ஏராளாமாய் சம்பாதிக்கும் பெண்களை விட மிக வெற்றி கரமான, சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுள்ளனர்.
நான் அடிமைத்தனத்திற்கு ஆதரவளிக்கவில்லை. ஒரு கணவனை, குடும்பத்தை எப்படி அணுகுவது என்பது வெறும் சுயமரியாதை, பெண்ணுரிமை என்று மட்டும் பேசாமல் நீண்டகால வாழ்க்கையை கருத்தில் கொண்டு புத்தி சாலித்தனமாக தீர்மானிக்கப் பட வேண்டியது. திமிர், ஆதிக்க உணர்வு, ஊதாரித்தனம் ஆகியவை ஆண்களின் தனிச்சொத்தல்ல. குடும்பம் என்ற அமைப்பு தரும் கத கதப்பு உணர்வுக்கு, பாதுகாப்புனர்வுக்கு பலனாக பெண்கள் இழக்க வேண்டியதை மட்டுமே நீங்கள் முன்னிருத்துவதன் மூலம் ஒரு தலைப்பட்சமாகப் பேசுகிறீர்கள். இப்போதைய சூழலில் இதற்கும் சற்றும் குறையாததுதான் ஆண்களின் புலம்பல்களும்.

பா.ராஜாராம் said...

முழுக்க முழுக்க செல்வாவுடன் உடன்படுகிறேன்.

சடங்குகளை கேலி செய்வதில்,(நீங்களும் பங்கெடுத்த)உங்களுக்கு உடன்பாடாய் இல்லாது போனாலும்,இவ்வளவு தனம் கூடாது முல்லை. :-(

வாசிப்பும்,தன்மையும்,எது குறித்து தொலையும்? :-((

மற்றபடி,

கட்டுரையில் உடன்பாடான கருத்துக்களும் உண்டு.

அப்பாவி தங்கமணி said...

இப்போ இந்த அனிதாகள் குறைவு தான்... நீங்க சொன்னா மாதிரி படிப்பும் வேலையும் இதை மாற்றும்... முழுசா மாத்தும்னு சொல்ல முடியாது... ஒரு அளவுக்கு மாத்தும்... மாறனும். அதே படிப்பும் வேலையும் பல பெண்களை அடாவடிகளாவும் மாத்தி சில ஆண்களோட வாழ்கையை சூறை ஆடுது. ஒரு balance வரணும். நல்ல பதிவுங்க

வானமே எல்லை said...

நல்ல பதிவு. யதார்த்தம் நிறைந்ததாக தெரிந்தாளும், நிறைய யோசிக்க வைப்பது. 1978க்கு முன் திருமணம் முடித்த சராசரி பெண்கள் அனீதாபோலத்தான், பின் அடுத்த 20 வருட பெண்கள் இடைநிலை. பிற்பாடு இந்த பதிவின் எழுத்தாளர் போல வெகு ஜண சிந்தனை மாறிக்கொண்டு உள்ளது, மாறி விட்டது. அதற்கு காரணம் கருத்தடை, அது பற்றிய விழிப்புணர்வு மற்றும் பெண்களின் சுய சிந்தனை வெளிப்பாடு மற்றும் அதன் வெகு ஜண புரிந்துணர்வு. அதாவது

பெண்களின் மாபெரும் இடர்பாடு கருத்தரிதலும், அதனால் எதிர்கொள்ளும் அங்க, வாழ்வியல், உணர்வு ரீதியான இடர்படுகளும் தான். ஓரு ஆண் இவற்றில் முக்கால் வாசியை எளிதாக கடக்க முடியும்.

*இயற்கை ராஜி* said...

//ஒருவேளை அனிதா படித்தவளாக அல்லது சம்பாதிக்கக் கூடியவளாக இருந்திருந்தால், இவை எல்லாமே மாற்றி நடந்திருக்கும்//


படிப்பு சம்பாத்தியம் எல்லாம் இதை மாத்தாதுங்க.. அவங்க வளரும் முறையும், அவர்களின் மனப் பக்குவமும் தான் அவங்களை மாத்த முடியும்

செல்வராஜ் (R.Selvaraj) said...

இடுகைக்குச் சம்பந்தம் இல்லாத ஒன்று. தமிழ்மணம் விருதுகள் குறித்து வந்த மின்னஞ்சலைப் பார்த்தீர்களா? நன்றி.

Deepa said...

த‌லைவ‌லிக்கும் அல‌ங்கார‌த்தைக் கூட மற்றவர் பேச்சுக்காகக் க‌ழ‌ற்ற‌ப் ப‌ய‌ப்ப‌டும் இய‌ல்பைச் சுட்டிக் காட்டியது முதல் இடுகை ப‌ல‌ நுட்ப‌மான‌ விஷ‌ய‌ங்க‌ளைத் தெளிவு ப‌டுத்தி இருக்கிற‌து.

காலங்காலமாய் பெண்ணுக்கு ஆண் தான் பாதுகாப்பு, என்ற புளித்துப் போன வாதத்தை முன்நிறுத்தித் தான், அல்லது சமூகத்தின் ஏச்சு பேச்சுக்குப் பயந்து தான், அடிமை வாழ்க்கைக்கு பெண்கள் தங்களைப் பழக்கப் படுத்திக் கொள்கிறார்கள். அது தான் சரி என்றும் அவர்கள் அறிவு நம்புகிறது.

ச‌மூக‌ம் என்ப‌து யார்? நாம் தானே? மாற்ற‌ம் ந‌ம்மிலிருந்து வ‌ர‌ வேண்டுமென்றால் இப்ப‌டிப்ப‌ட்ட‌ கூர்மையான‌ பார்வைக‌ளுக்கு இட‌ம் கொடுக்க‌ வேண்டும். பொதுப்புத்தியில் ம‌ண்டிக்கிட‌க்கும் அழுக்குக‌ளை நீக்கிப் பார்த்தால் தான் தெரியும் ‍ ஒரு அழுக்கை ம‌றைக்க மேலும் மேலும் அழுக்குகள் சேர்த்துக் கொண்டு வருகிறோம் என்பதை.

ச‌க‌ல‌ செல்வ‌ங்க‌ள் இருந்தும், அன்புக்குரிய உற்றார் பெற்றோர் இருந்தும் ஒரு பெண் சுய‌ம‌ரியாதையை உதிர்த்து கொத்த‌டிமை வாழ்க்கை ந‌டத்துவ‌து தான் புத்திசாலித்தனம், "விவேகம்", பெண்ணுக்கு அழ‌கு என்று பேசுவது ச‌ரியா?

த‌ன்மான‌ம், சுய‌ம‌ரியாதை, த‌ன்ன‌ம்பிக்கை என்ப‌தெல்லாம் ஆண்க‌ளுக்கு அணிக‌ல‌னாக‌வும் பெண்க‌ளுக்கு ஏள‌ன‌த்துக்குரிய‌ விஷ‌ய‌மாக‌வும் போவ‌து ஏன்?

ப‌டித்து சுய‌ கால்க‌ளில் நிற்கும் பெண்க‌ளும் இப்படிப்பட்ட சுய‌சீரழிவுக்கு விதிவில‌க்க‌ல்ல என்பது ஓரளவு யதார்த்தமென்றாலும் நிச்சயம் ஆரோக்கியமான வாதமல்ல‌.
படிப்பதும், பொருளாதார சுதந்திரம் பெறுவதும் பெண்களின் உயர்வுக்கு முதல்படி. அடிப்படை விதி. அதற்கு மேலும் பல அக, புறக் காரணிகள் பெண்கள் விடுதலைக்கு முட்டுக்கட்டையாக இருப்பது உண்மை தான்.

தங்கள் நல்லறிவுக்கு ஏற்றபடி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும், தோழமை மிகுந்த, ஏற்றத் தாழ்வில்லாத ஆண் பெண் வாழ்க்கையை நினைத்துச் சமூகம் அஞ்சாத நிலை வர வேண்டும்.
அதற்கு நம் சிந்தனையில் என்னென்ன மாற்றம் தேவை என்று யோசிக்க வேண்டும்.

முல்லை எழுதும் இத்தகைய இடுகைகள் அதற்கான பாதையை அமைக்கின்றன. Bravo!

naathaari said...

//அனிதா என்ன அன்னை தெரசாவா என்று கேட்க வந்தது தண்ணீரோடு சேர்ந்து உள்ளே போய்விட்டது!//

//சிறுவயதிலிருந்து வளர்த்தவர்களாலேயே நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்டு வர முடியாது தோல்வியுற்றபோது, ஒரு adult-இன் பழக்க வழக்கங்களை மாற்றிட முடியுமா என்பதை விடுங்கள்//

உங்களிடமிருக்கும் வார்த்தையாடல்கள் உங்களின் எதிர்காலபுத்தகத்துக்கு அடிபோடுகின்றன்


உலகத்தில் பெண்ணே கிடையாது அவள் மூளைமுழுவதும் ஆணால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என்ற நீட்சேவின் வார்த்தைகள் சத்தியம்

நட்புடன் ஜமால் said...

இரண்டு பேருமே சமம் என்று இருவருமே நினைத்தல் வேண்டும், அவரவர் பொறுப்புகளை ( புரிதலின் பேரில் ) அவரவர் செய்து தான் ஆக வேண்டும்.

இன்னும் எத்தனை கோடி ஆண்டுகள் ஆனாலும் இப்படி சில நடக்கத்தான் செய்யும், அது எல்லாவற்றிர்க்கும் ஆண் மட்டுமே காரணம் என்றாகிவிடாது.

நல்ல புரிதலும் விட்டு கொடுக்கும் தன்மையும் - இரு பாலருக்குமே வரவேண்டும், சக உயிராக இருவருமே பார்த்து கொள்ள வேண்டும், அப்படிப்பட்ட பார்வை வரவேண்டும்.

கல்வி என்பது பலம்/சுதந்திரம் - இது முற்றிலும் உண்மையல்ல, படித்த ஆண்/பெண் இன்னும் பலர் தெளிவில்லாமலே இருக்கின்றனர்.

என்ன சொல்ல போங்க :(

அனிதாக்கலுக்காக :(

அன்புடன் அருணா said...

அருமையான பதிவு!

தீஷு said...

அருமையான பதிவு.. ஆனால் நம் நாட்டில் அனிதாகள் நிறையவே உள்ளனர்....

seetha said...

முல்லை,

படிப்பு மற்றும் வேலை என்று இருந்தால் கூட பெண்களுக்கு தைரியம் இல்லை.

எனக்கு தெரிந்து நடந்தது, நடக்கிறது........

என் நண்பன் காதல் திருமணம் செய்துகொண்டான்.பெண்ணும் மாப்பிள்ளையும் வேறு வேறு மதம், மானிலம் எல்லாமுமே.

ஆனால் என் நண்பனின் வேறு ஒரு முகம் திருமணத்திர்ர்க்கு பின் பர்த்தேன்.நான் இந்தியா போகும் போதெல்லாம் அவன் மனைவி என்னிடமும் என் வீத்துக்காரரடமும் ,ஒரேய் புலம்பல். வேறு சில பெரியவர்கள் பேசிப்பார்த்தார்கள் ஒன்றும் நடக்கவில்ல்ஐ. திடீரென்று ஒரு நாள் மகனை கூட்டிகொண்டு அந்தப்பெண் வேறு வீடு பார்த்து போய்விட்டாள். அவளுக்கு வேலை இல்லை. தம்பி மட்டும் கொஞம் உதவி செய்வான்.நன்றாக இருக்கிறாள்.ஏழு வருஷம் இந்த ஆளுகிட்ட குப்பை கொட்டிட்டேன் என்றாள்.

எநனக்கு தெரிந்த இன்னொரு கணினிப் பொரொயாள்ர் பெண்ணின் கதை நேர் எத்ர்.மிகவும் ஆழகாந பெண். அப்பா , அம்மா குதி என்றால் எவ்வளவு உயரம் என்ரு கேட்ப்பாள்.

திருமணம் ஆனதிலிருந்து ஒரேய் வருத்தம் தான். அவள் கணவருக்கு சரியாக வேலை கிடப்பதில்ல்ஐ. தாழ்வு மனப்பானமை எல்லாம் சேர்ந்து ஒவளுக்கு அஅடி. ஒரு முறை பெற்றோர் இருக்கும் போதே அடி உதை.அவர்கள் கெஞி கேட்டுகோண்டாலும் ரொம்ப மாறவில்லை.இப்போதும் அவள் கணவனுடன்ஏ தான் இருக்கிறாள், கேட்டால் மகனுக்காகா எங்கிறாள்.அவள் பெற்றோர் அவள்டுய விட்டிற்க்கு போக கூட உரிமை இல்லை.இது என்ன உறவு?