Monday, November 16, 2009

ஊ ஃபார் ... (தொடர்ச்சி)

...ஊருக்குப் போறோம்!
பகுதி 1

பண்ருட்டி வந்தவுடன், ஊருக்கே போய்விட்ட சந்தோஷம் கிட்டி விடும் - அதுவும், குடத்தை கையில் ஏந்திக்கொண்டு தண்ணீர் ஊற்றுகிற பாவனையில் பெண்கள் இருபுறமும் நிற்குமாறு கட்டப்பட்ட அந்த வளைவு/ஆர்ச் - 'அப்பாடா, வடலூர் வந்துவிட்டது' என்ற நிம்மதி!! 'நெய்வேலி உள்ளே போகுமா' என்று கேட்டுவிட்டு வடலூர் பஸ் பார்த்து ஏறி அமர்ந்தால் பலாபழ கூடைகளுடனும், முந்திரி கூடைகளுடனும் நம்மை மொய்க்கத் துவங்குவார்கள்! பெரும்பாலும், குட்டிபசங்கள் ஜன்னலோரத்தில் அமர்ந்தால் பலாபழத்தை பேப்பரில் வைத்து மடியில் போட்டு விடுவார்கள்...நான் ஆயாவை பார்ப்பேன் - அவர் 'வேணாம்மா' என்றாலும் விற்கும் நபர்கள் திணிப்பார்கள் - 'கீரைக்காரம்மாவிற்காக கீரை வாங்கும்' ஆயா இந்த பலாப்பழ ஆளுக்காக பலாப்பழம் வாங்குவார். ..அது இரண்டு அல்லது மிஞ்சி போனால் இரண்டரை ரூபாய்! இன்றைக்கு பத்து சுளைகள் பத்துருபாய்.சாப்பிட்டபின் பலாப்பழ கொட்டைகளை கண்டிப்பாக கோன் மாதிரி செய்து வைத்திருக்கு பேப்பரில் போடவேண்டும், அது அத்தையிடம் கொடுத்து அடுத்த நாள் சாம்பாரில் போடப்படும்!!

பண்ருட்டி என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது முந்திரி மரங்களும், பிஞ்சு பிஞ்சாய் தொங்கும் பலாமரங்களும்தான். அதுவும் அந்த செம்மண் கலர் இருபுறங்களிலும் பார்க்க மிகவும் பிடிக்கும்!போர்வையால் மேலே போர்த்தி கட்டிலுக்கு கீழே வீடு விளையாட்டு விளையாடும் எனக்கு, கவிந்து பரவிக்கிடக்கும் முந்திரி மரங்களுக்குள்ளே வீடு விளையாட்டு விளையாட மிகவும் ஆசையாக இருக்கும்!ஆனால் ஆயா அங்கு பெரிய பாம்புகள் இருக்குமென்று சொல்வார்! சாலையின் இருபுறமும் இருக்கும் செம்மண் மழைக்குக் கரைந்து வித்தியாசாமான வடிவங்களில்ம் மேடுகளாக பள்ளங்களாக இருக்கும் - அதை ஒரு க்ராண்ட் கான்யனாக உருவகப்படுத்திக்கொள்வேன்! தண்ணீர் அரித்து ஓடியிருக்கும் குட்டி க்ராண்ட் கான்யன்!! அதுவும் பண்ருட்டியில் ஒரு இடத்தில் மகா கெட்ட வாசனையொன்று வரும்...அது வந்தால் முக்கை பொத்திக்கொண்டு வாயால் சுவாசிப்பேன்/அல்லது மூச்சை இழுத்துபிடித்துக்கொள்வேன்! அது ஒரு சாராய பேக்டரி - ஆனால் அது வந்துவிட்டால் வடலூர் நெருங்கிவிட்டது என்று அர்த்தம்! மழைநீர் தேங்கியிருக்கும் செம்மண் குழிகள் - வீடு விளையாட்டில் செங்கல்லை அரைத்து நாங்கள் வைக்கும் சாம்பார் வைப்பதை நினைவூட்டும்!! மண்ணைக்குவித்து அதன் தலையில் நீர் ஊற்றினால் அந்த இடம் ஈரமாகி குழிந்திருக்கும் - அதை கீழாக நோண்டிஎடுத்தால் அதுதான் இட்லி. உடனே விளையாட மனம் ஆயத்தமாகும்! இன்னும் ஒருமணி நேரமே..வடலூர் வந்துவிடும். நிலைகொள்ளாது அதன்பின் - ஆம்பூரில் கற்றுக்கொண்ட விளையாட்டுகளை வடலூரிலும், வடலூரில் கற்றுக்கொண்டதை ஆம்பூரிலும் அல்லவா பரிவர்த்தனம் செய்துக்கொண்டிருந்தேன்! எனக்கு தெரிந்த அரிய பெரிய வித்தைகளை பகிர்ந்துக்கொள்ள வேண்டிய கட்டத்துக்கு தள்ளப்பட்டிருப்பேன்!

உங்களை எங்கே விட்டேன்...சாராய பேக்டரி...இப்போது ரயிலே கேட் அருகில் வந்துவிட்டோமே!! அப்புறம் ஒரு பெரிய புளியமரம் ..அதனருகில், முகப்பில் டீ கடைகொண்ட குடிசை வீடுகள் - அதைத்தாண்டினால் பீங்கான்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் - அவை தொப்பியை கவிழ்த்து வைத்த வடிவில் இருக்கும்.மேலே சொரசொரப்பான பகுதி. அதை எங்குதான் உபயோகிப்பார்களென்று இன்றும் எனக்கு தெரியாது. அப்புறம் நீள வடிவில் குழாய்கள் - அவை நெய்வேலியிலிருந்து தண்ணீருக்காக. அதையடுத்து, சேஷசாயி பேப்பர் மில்ஸ். தொடர்ந்து, கடைகள் ஆரம்பிக்கும்.பெயர்கள் எல்லாமே பெரும்பாலும் வள்ளலார் என்றுதான் தொடங்கும்....வள்ளலார் காபி கடை, வள்ளலார் ஓட்டல்..வள்ளலார் சலூன்....பஸ் வந்ததுமே பிஞ்சு வெள்ளரிக்காய் எடுத்துக்கொண்டு மொய்க்க ஆரம்பித்துவிடுவர் மக்கள்...பஸ் கூடவே ஓடி வரும் அவர்கள் லாவகம் மிகுந்த வியத்தலுக்குரியது!! ஆனால் வாங்க மாட்டோம்...அதான் ஊர் வந்துவிட்டதே...மறக்காமல் செருப்பை மட்டிக்கொண்டு...இறங்கி நடந்தால்...

நான்குமுனைச் சாலை.வடலூரில் ஜனநெருக்கடி கொண்ட ஒரே சாலை. ஒரு புறம் பண்ருட்டி செல்ல, அதனெதிர் புறம் சிதம்பரம் செல்ல, அதன் பக்கத்தில் நெய்வேலி செல்ல,அதனெதிர்ல் கடலூர் செல்வதற்கு! இங்கும் கெஸ்ஸிங் விளையாட்டு ஒன்று நடக்கும் என் மனதிற்குள்! ஒவ்வொரு முறையும் இறங்கி்ய பின் 'அந்த ரோடில் சென்றால் தான் வீடு வரும்'என்று நினைத்துக்கொண்டிருப்பேன்..ஆனால் அதில் சென்றால் வேறு யாராவது வீட்டுக்குத்தான் செல்லவேண்டிருந்திருக்கும்!சரி, அடுத்த முறை சரியாக கெஸ் செய்யவெண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது, ஆயா க்ருஷ்ணா பேக்கரியின் முன் நிற்பார் - ரஸ்க், ஜாம் பிஸ்கட், கேக், க்ரீம் அடைக்கப்பட்ட கோன் (மேலே செர்ரி இருக்குமே), பேக்கரிகளில் மட்டும் கிடைக்கும் பிஸ்கட் (அதனை எனது பெரியகுளத்து தோழி 'சூஸ்பெரி' என்பாள்) எல்லாம் இரண்டு செட்(பெரிய மாமாவீட்டுக்கு/சின்னமாமா வீட்டுக்கு) வாங்கியபின் பூக்காரம்மா ஸ்டாப்...தாமரை இலையில் வைத்து நூல்கட்டி கொடுப்பார். வாங்கியபின் நடக்க வேண்டும்..ஒரு கிமீ.ஆட்டோக்கள் அரிது...புளியமரங்களில் எண்கள் எழுதியிருக்க அதை எண்ணிக்கொண்டு லாம்ப் போஸ்ட் எங்கே வருகிறதென்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வந்தால் - ஆயாவை கண்டுக்கொண்ட ஒன்றிரண்டு பெரியவர்கள் , ‘இப்போதான் வர்றீங்களா, மக வயித்து பேத்தியா'என்று சில விசாரிப்புகள். கடந்து வந்தால் வீடு வந்திருக்கும். இருட்டவும் ஆரம்பித்திருக்கும்.

அப்புறம், (பெரிய/சின்ன) மாமா-அத்தை,தம்பி,புழு என்ற புகழேந்தி, கயலு, பஜ்ஜி என்ற விஜி, மகேஷ் எல்லாம் பார்த்தபின் சோர்வாவது ஒன்றாவது! ஒளிந்து பிடித்து,கோ கரண்ட், கல்லா மண்ணா என்று ஆட்டம் தொடங்கும். அப்புறம், யானை மேலே குதிரை மேலே சிங்கம் மேலே டூ கா...துபாய்லேர்ந்து துப்பாக்கி எடுத்துட்டு வந்து சுடுவேனென்றும், பம்பாய்லேர்ந்து பாம்பை உன் மேலே விடுவேன் என்றும் சிங்கப்பூர்லேர்ந்து சிங்கத்தை விட்டு கடிக்க விடுவேன்றும், ரஷ்யாலேர்ந்து ராக்கெட்டை உன் மேலே உடுவேன்றும் பெனாத்திக்கொண்டிருக்க அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் வந்து சேர....திரும்ப அதே ஜாலி,கலவரம்,கிலி்.. அதே டவாலி, பைகள் சகிதம்....பட்டுக்கோட்டை/பெரியார்/திருவள்ளுவர், பண்ருட்டி டூ திருக்கோவிலூர் டூ திருவண்ணாமலை டூ வேலூர் டூ ஆம்பூர்!!

24 comments:

ஆயில்யன் said...

ஆஹா டூர் செம பிக்கப் ஆகிடுச்சு போல அப்படியே எங்க ஊருபக்கம் வந்துட்டு போங்க பாஸ் :))))

☼ வெயிலான் said...

// உங்களை எங்கே விட்டேன்...சாராய பேக்டரி...//

அங்கேயே ரொம்ப நேரமா மூக்கைப் பிடிச்சிட்டு நின்னுட்டிருக்கோம் :)

மங்களூர் சிவா said...

/
☼ வெயிலான் said...

// உங்களை எங்கே விட்டேன்...சாராய பேக்டரி...//

அங்கேயே ரொம்ப நேரமா மூக்கைப் பிடிச்சிட்டு நின்னுட்டிருக்கோம் :)
/

ROTFL
:))

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

வெயிலான் முந்திட்டார்

// உங்களை எங்கே விட்டேன்...சாராய பேக்டரி...//
ஹி... ஹி...

நல்லா இருக்கு.

க.பாலாசி said...

//வள்ளலார் என்றுதான் தொடங்கும்....வள்ளலார் காபி கடை, வள்ளலார் ஓட்டல்..வள்ளலார் சலூன்....//

நானும் அவ்வழியே பேருந்தில் செல்லும்போது இந்த பெயரில் உள்ள கடைகளை பார்த்திருக்கிறேன். பெரும்பாலான கடைகள் ஒரே பெயரில்.

முந்திரிக்காட்டின் அருகில் சென்றாலே அதன் வாசனை ஆளையே தூக்கும்....

நல்ல பயணக்கட்டுறை....

அமிர்தவர்ஷினி அம்மா said...

தொடர்ச்சிப் பதிவும் மிக சுவாரஸ்யம்.

தீஷு said...

//துபாய்லேர்ந்து துப்பாக்கி எடுத்துட்டு வந்து சுடுவேனென்றும், பம்பாய்லேர்ந்து பாம்பை உன் மேலே விடுவேன் என்றும் சிங்கப்பூர்லேர்ந்து சிங்கத்தை விட்டு கடிக்க விடுவேன்றும், ரஷ்யாலேர்ந்து ராக்கெட்டை உன் மேலே உடுவேன்றும் பெனாத்திக்கொண்டிருக்க//

:-))

நல்ல சுவாரஸ்யம்..

மணிநரேன் said...

இரண்டு பகுதிகளிலும் எங்களையும் தங்களுடன் பயணிக்க வைத்துவிட்டீர்கள். சிறு வயதில் தாத்தா-பாட்டியுடன் செல்வது, அதுவும் அவர்களின் மற்ற பிள்ளைகள் வீட்டிற்கு செல்வது ஒரு தனி மகிழ்ச்சியை அளிக்கும். சிறு பிள்ளைகளாகவே இருந்திருக்கலாமோ??? ;(


//‘இப்போதான் வர்றீங்களா, மக வயித்து பேத்தியா'என்று சில விசாரிப்புகள்//

ஊரில் பார்ப்பவர்கள் நம்மை கண்டுகொள்ளாமல் விடவில்லை என்ற மகிழ்ச்சி. நமக்கென்று ஒரு அடையாளம் கிடைத்த திருப்தி...:)

rapp said...

wat is this? எதுக்கு நீங்க அபீஸ் வரீங்க? பதிவெழுதத்தானே? அப்புறம் ஏன் நடுவுல வீக்கெண்டப்போ பதிவு போடறீங்க? கிர்ர்ர்ரர்ர்ர்ர்....................

rapp said...

//மழைநீர் தேங்கியிருக்கும் செம்மண் குழிகள் - வீடு விளையாட்டில் செங்கல்லை அரைத்து நாங்கள் வைக்கும் சாம்பார் வைப்பதை நினைவூட்டும்!! மண்ணைக்குவித்து அதன் தலையில் நீர் ஊற்றினால் அந்த இடம் ஈரமாகி குழிந்திருக்கும் - அதை கீழாக நோண்டிஎடுத்தால் அதுதான் இட்லி. உடனே விளையாட மனம் ஆயத்தமாகும்!//
நானும் இந்த சாப்பாடு வேல்லாட்டுன்னா அலைவேன். ஒரு சின்ன சைஸ் பாத்திரம் வீட்ல பாத்தாலும், வெளில போய்டும் என் கைவண்ணத்தில். இப்போ அதை செய்யனும்னாலே ஏன் அலறியடிக்கிறேன்? ஒருவேளை சின்ன வயசுல செஞ்ச மண்ணு சாப்பாடு ருசியிலயே இப்பவும் வர்றதாலையா? அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்.........

rapp said...

எனக்கு எல்லாரையும் பாத்தா ஒருவிதத்துல பொறாமையா இருக்கு. நான்தான் எங்க குடும்பத்துல கடைசி பேத்திங்கறதால, எங்க பாட்டி (அம்மாவோட அம்மா) தவிர யாரையும் பாத்ததுக் கூடக் கெடயாது:(:(:(

rapp said...

ஓவரா பீத்திட்டே போகாதீங்க. கிர்ர்ர்ரர்ர்ர்ர்..... சாராய பேக்டரிக்கு சமமா முந்திரி பேக்டரியும் கேவலமா நாறும். எங்க ஊர்ல என்னென்னமோ பண்ணி அந்த பேக்டரியா மூடினாங்க. அதுவரை ராத்திரி நேரம் மூக்ல துணியோடத்தான் திரியனும்.

Deepa (#07420021555503028936) said...

//// உங்களை எங்கே விட்டேன்...சாராய பேக்டரி...//

ரொம்பத்தான் முல்லை உங்களுக்கு! :)))

//வெயிலான்: அங்கேயே ரொம்ப நேரமா மூக்கைப் பிடிச்சிட்டு நின்னுட்டிருக்கோம் :)//
LOL!! :))))

நல்ல பயணக்கட்டுரை!

கும்க்கி said...

இதே டெம்ப்லேட்டில் ரொம்பவும் அவஸ்தைப்பட்டது நினைவுக்குள் உறுத்திக்கொண்டேயிருக்கிறது.
எழுத்துக்கள் மிகவும் நெருக்கமாக இருக்கின்றது..போலவே படிக்கவும் சிரமம்.

பதிவுக்கு சம்மந்தமில்லாமல் மூக்கை நுழைத்தமைக்கு மன்னிப்பீர்களென்ற நம்பிக்கையுடன்,
கும்க்கி.

சின்ன அம்மிணி said...

// உங்களை எங்கே விட்டேன்.//

எங்க விட்டீங்க, புடிச்சுட்டுதான் இருக்கீங்க. :)
அந்த பலாக்கொட்டை சாம்பார் , ஆஹா ஜொள் விட வச்சிட்டீங்க.

நசரேயன் said...

நல்லா ஊரை சுத்தி காட்டுறீங்க

பித்தனின் வாக்கு said...

நல்ல நடை, அழகான கருத்துக்கள், சிறு வயது பயணம் போவது போல உள்ளது. மிக்க நன்று.

பித்தனின் வாக்கு said...

நானும் சென்னையில் இருந்து எங்கள் ஊருக்குப் போகும் போது எல்லாம் அந்த இடத்தில் மூக்கைப் பொத்திக் கொள்வேன் அல்லது தம் பிடித்துக் கொள்வேன். நன்றி.

நிஜமா நல்லவன் said...

/ ஆயில்யன் said...

ஆஹா டூர் செம பிக்கப் ஆகிடுச்சு போல அப்படியே எங்க ஊருபக்கம் வந்துட்டு போங்க பாஸ் :))))/

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்

நிஜமா நல்லவன் said...

/☼ வெயிலான் said...

// உங்களை எங்கே விட்டேன்...சாராய பேக்டரி...//

அங்கேயே ரொம்ப நேரமா மூக்கைப் பிடிச்சிட்டு நின்னுட்டிருக்கோம் :)/


:)))))))

சந்தனமுல்லை said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்! :-))


கும்க்கி, நன்றி, விரைவில் டெம்ப்லேட் மாற்றுகிறேன்...பரிசோதித்துக் கொண்டிருக்கிறேன்! :-)

" உழவன் " " Uzhavan " said...

உங்க புண்ணியத்துல பண்ருட்டி ஏரியாவயும் பாத்துக்கிட்டேன் :-)

மாதேவி said...

கிராமத்து மணத்தினூடே பயணம் நல்ல சுவாரஸ்யத்தைக் கொடுத்தது.

துபாய் ராஜா said...

ஆழமாய் மனதில் பதிந்த அழகான பயணநினைவுகள் அருமை.