Thursday, December 24, 2009

Joy to the world...

நாங்கள் ஹவுசிங் போர்டு வந்து ஒன்றரை ஆண்டுகளில் அந்த வேப்பமரம் மஞ்சள் பூசிக்கொண்டது. கொஞ்ச நாளில் கூரை வேய்ந்து உண்டியல் வைக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக செங்கல் சுவர் எழுப்பப்பட்டு பளிங்குக்கற்கள் போடப்பட்டது. அதன் முக்கிய தூண்களில் சுகர்மில் தாத்தாவும் ஒருவர்.

ஆயா மற்றும் காந்தா அத்தையின், ”நல்ல பிள்ளைக்கு லட்சணம்” மற்றும் “காலையில் எழுந்தால் நல்லது” மந்திரங்கள் காரணத்தால் ஒரு மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளில் காலை நேர பூஜைக்கு செல்ல பணிக்கப்பட்டேன். அதாவது சுகர்மில் தாத்தாவோடு சேர்ந்து திருப்பாவை பாடவும் வேண்டும்.
அவர் பாட... நான் படிக்க... இரண்டு நாட்கள் சென்றது.

” அவ்ளோ பால் ஏன் அபிஷேகத்திலே வேஸ்ட் பண்றாங்க? யாராவது ஏழை பசங்களுக்கு கொடுக்கலாம் இல்ல” - அன்றிரவு சாப்பிடும் நேரத்தில் பெரிம்மாவிடம் கேட்டேன்.

உண்மை பத்திரிக்கையும், கடவுள்கள் தோன்றியது பற்றிய தி.க புத்தகங்கள் வீட்டில் நிறைய உண்டு. மேலும், வீட்டில் ஒரு சாமி படம் கூட இருந்ததில்லை. அதனால், பெரிதாக சாமி மீதெல்லாம் அபிமானங்கள் இருந்ததில்லை. பெரிம்மாவுக்கும்தான். எங்கள் வாழ்க்கைமுறை எந்த மதத்தையும் சார்ந்து சுழன்றது இல்லை.

'அவர்கள் நம்பிக்கையை சார்ந்தது அதெ'ன்கிற ரீதியில் பெரிம்மா பதிலளித்தார். அதற்குப்பின் அந்தக்கோயிலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லாமல் போயிற்று.

கிறிஸ்மஸ் என்பது எனக்கு ஹேனா டீச்சர் வீட்டிலிருந்து வரும் அச்சு முறுக்கு, சுழியம் மற்றும் ப்ளம் கேக் போன்ற நினைவுகளோடு பிணைந்தது. இன்றைக்கு எத்தனை வீடுகளில் ஸ்டார்களைப் பார்த்தோம் என்ற எண்ணிக்கை விளையாட்டோடும், பக்கத்து வீடுகளில் இருக்கும் கிறிஸ்மஸ் மரத்தை, அதில் தொங்குகின்ற நூதனமாக பொருட்களைப் பற்றிய பேச்சோடு மட்டுமே பரிச்சயம்.

பெரியப்பாவின் உடல்நிலை மோசமாக இருந்தபோது அவரது நண்பரொருவர் வீட்டு முகவரிக்கு ”இயேசு அழைக்கிறார்” புத்தகத்திற்கு ஒரு வருட சந்தா கட்டியிருந்தார். வீட்டில் அதை சீண்டுவாரில்லை என்னைத் தவிர! இயேசுவின் அற்புதங்களை நான் வாசிப்பதைப் பார்த்து எல்லோரது கிண்டல் வேறு. ‘ஒரு கன்னத்தில் அறைந்தால்', ‘இயேசு உங்களை நேசிக்கிறார்', ‘உங்களுக்காக மரித்தேன்' போன்ற பரிச்சயமான, இதயத்திற்கு இதமான வார்த்தைகள் அந்த சந்தாவோடு முடிந்தது.

இளங்கலையிலேயே தமிழ்செல்வியை அறிந்திருந்தாலும் மிகவும் பழக்கமானது முதுகலையில்தான். எனது ரூம்மேட். எது அவளை மாற்றியதென்று தெரியவில்லை, ஒரு செமஸ்டர் லீவிற்குப் பிறகு வந்து சொன்னாள், “நான் கன்வெர்ட் ஆகிட்டேன்”. எனக்கு அது புதிதாக இருந்தது. நான் இன்ன மதம் என்று வரித்துக்கொள்ளாத போதும் ”எதுக்கு தமிழ்செல்வி இப்போ மாறனும்” என்று தான் தோன்றியது. எனக்குப் பிடிக்கவில்லை. அப்போதுதான் எனக்குள் நான் இந்து என்ற உணர்வு என்னையறியாமல் இருந்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. தமிழ்செல்வி காலையில் எழுந்து பைபிள் வாசிக்கத் தொடங்கினாள். நாங்கள் காஃபி குடித்து அரட்டை அடிக்கும் சாயங்கால வேளைகளில் முக்காடிட்டு பிரார்த்தித்தாள். மொட்டைமாடியில் இன்னும் சிலருடன் சேர்ந்து பாட்டு பாடினாள்.

அவள், கடவுளுடன் நெருக்கமாக நெருக்கமாக மற்றவர்களுக்கும் அவளுக்குமிடையே இடைவெளி விழுந்தது. பின்னால் நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டனர். நானும் கல்பனாவும், சாப்பிடுவதற்கு, வேனுக்குச் செல்வதற்கு, கம்பைன் ஸ்டடிக்கு தமிழ்செல்வியை சேர்த்துக்கொள்ள ஆரம்பித்தோம். அப்படித்தான் தமிழ்செல்வி எனக்கு உற்ற தோழியானாள். அப்படியே தமிழ்செல்வியுடனான எனது கேள்விகளும் தொடர்ந்தது. ஆனால், தமிழ்செல்வி விவாதம் செய்ய விரும்பவில்லை. “ஜீசஸ் தான் உண்மையான கடவுள், அவர் பிறந்ததை வைச்சுதான் ஏடி, பிசி யே இருக்கு” என்றும் “ஒரு கடவுள்தான் இருக்க முடியும், அது ஜீசஸ்தான், பைபிள்லே ஜீசஸ் வரைக்கும் பிறந்தவங்க ஹிஸ்டரி எல்லாம் இருக்கு, அதுதான் உண்மை” என்றும் இன்னும் சில உண்மைகளை சொன்னாள். எல்லாவற்றுக்குமேலாக, ஜீசஸ் அவளுக்கு மன ஆறுதலை தருவதாகவும், பாவமன்னிப்பு கிடைத்ததாகவும், அது அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும் குறிப்பிட்டாள். ஆனாலும் எனக்குள் கேள்விகள்..கேள்விகள்.. பாவம் என்றால் என்ன..எது செய்தாலும் பாவமா..அதுக்கு நீ ஏன் மாறணும்...

மேலும், தமிழ்செல்விக்கு என்ன மன ஆறுதல் வேண்டியிருக்குமென்று என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. அவளது ஊர் ராமேஸ்வரம். ஊரிலே அவரது அப்பா நல்ல செல்வந்தர். அவளுக்கு அடுத்து இரண்டு தங்கைகள். இருவருமே கொடைக்கானலில் கான்வெண்டில் தங்கி படித்துக்கொண்டிருந்தனர். ஊருக்கு அழைத்துச் செல்ல அவளது அப்பா காரில் வருவார். எல்லாவற்றிற்கும், அவளது வீட்டில் ஆள் இருந்தது. அவளுக்கு மகிழ்ச்சிக்கு என்ன குறை என்று புதிராக இருந்தது.

அந்த சமயத்தில்தான் செமஸ்டர் பரிட்சைகள் வந்தது. 'ரெண்டு வேல்யூவேஷன், ஃபர்ஸ்ட் நம்ம யுனிவர்சிடி, அப்புறம் மெட்ராஸ் யுனிவர்சிடி ' என்று வதந்திகள் கிளம்பியிருந்தன. பேராசியர் பிரச்சினைகளால பாடங்கள் அறைகுறையாகவே நடத்தப்பட்டிருந்தன. சீனியர்கள் உதவியுடன் தத்தித்தத்தி படித்துக்கொண்டிருந்தோம். ஸ்டடி ஹாலிடேஸின்போது எப்படி அந்த வேளை வந்ததென்று தெரியவில்லை. தமிழ்செல்வியிடம் எல்லோரும் அவர்களுக்காக ப்ரேயர் செய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். அவளும், நாம் எல்லோருமே சேர்ந்து ப்ரேயர் பண்ணலாமென்று சொல்லி, அன்று எங்கள் ஹாஸ்டலில் பதினைந்து பேர் ப்ரேயர் செய்தனர். அதில் நானும் கல்பனாவும் இருந்தோம். பரீட்சைமுடிவில் நல்ல மதிப்பெண்களே வந்திருந்தன.

அதன்பிறகும், அவளைநோக்கி நமுட்டு சிரிப்பும், கிண்டல்களும் தொடரத்தான் செய்தன. அடுத்த விடுமுறைக்கு தமிழ்செல்வி கல்பனாவையும், என்னையும் அவளது வீட்டிற்கு அழைத்திருந்தாள். சுற்றிப் பார்க்க டிரைவருடன் ஒரு கார், இரவில் டெக்கில் போட்டுப் பார்க்க சினிமா கேசட்டுகள் (ஹூம்...தமிழ்செல்விதான் சினிமா பார்க்க மாட்டாளே!!) என்று அவளது குடும்பத்தினர் ஒரு நிமிடம் விடாமல் கவனித்துக்கொண்டனர். இறால் பண்ணை, சினிமா தியேட்டர், இறால் ஏற்றுமதி என்று அவளது அப்பாவிற்கு பல பிசினஸ்கள் இருந்தன. எது வேண்டுமென்றாலும் சொன்னால் போதும். டிரைவர் வாங்கி வந்து தருவார். நாங்கள் எதுவும் செய்ய வேண்டியிருக்கவில்லை. அவளது அப்பா எங்களை வெளியிலே நடக்கவே விடவில்லை.

ஒருவேளை, தமிழ்செல்விக்கு அந்த இறுக்கங்களிலிருந்து விடுபட ஒரு இதம் தேவையாயிருந்திருக்குமாயிருக்கும். தன்னம்பிக்கையளிக்கக் கூடிய ஒருவர், எளிய வாழ்க்கையை வாழ அவள் பின்பற்றக்கூடிய ஒருவர், 'உன் வாழ்வை எதிர்கொள்ள நான் இருக்கிறேன்” என்று பாதுகாப்பளிக்கக்கூடிய ஒருவர் தமிழ்செல்விக்கு தேவைப்பட்டிருக்கிறார்.

அவர், தமிழ்செல்விக்கு ஜீசஸாக இருந்திருக்கிறார்!

எல்லாவற்றுக்கும் மேல், இது தமிழ்செல்வியின் நம்பிக்கை சார்ந்த விஷயமுங்கூட!

ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்!

Edited to Add : இங்கு நான் சொல்ல வந்திருப்பது மதம் மாற்றத்தைவிட மனம் மாற்றத்தையே. அந்த மனமாற்றம் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதெனில் அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வோம்.

24 comments:

குடுகுடுப்பை said...

மகிழ்ச்சியா இருந்தா சரி. ஆனால் என்னால் இந்த மதம் மாற்றும் வேலைகளில் ஈடுபடுவர்களை சகித்துக்கொள்ளமுடிவதில்லை. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையே நாத்திக குடும்பத்தில் பிற்ந்த நானும் இந்து என்று அடையாளப்படுத்திக்கொள்ள் காரணமாகியது.

பின்னூட்டம் தேவையா எனவும் யோசிக்கிறேன்

குடுகுடுப்பை said...

ஹாப்பி கிறிஸ்ட்மஸ்.

துளசி கோபால் said...

அட!


மெர்ரி கிறிஸ்மஸ்!

☀நான் ஆதவன்☀ said...

:) அனுபவம் எழுத்தில் நல்ல புனைவா வெளிவந்திருக்கு பாஸ்.

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் பாஸ்

ஸ்ரீமதி said...

'நம்பிக்கை சார்ந்த விஷயம்' ஹ்ம்ம் உண்மை :))

தாரணி பிரியா said...

Merry Christmas :)

சின்ன அம்மிணி said...

Merry X-mas !!!!

RAMYA said...

ஆமாம் எல்லாமே உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம்தான்.

உங்கள் தோழியை நல்ல புரிதலுடன் ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். உங்களை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது.

உங்கள் தோழிக்கு எனது கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை முடிந்தால் கூறவும்.

அவர்களின் மன ரீதியாக் மாற்றத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அது என்னவோ உண்மைதான்.

வேதனையில் தவிக்கும் பொது சில கொழுக் கொம்புகள் இப்படித்தான் அமைந்து விடுகின்றன. தேவைகள் தனிமனித விருப்பமாகி இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால்
யாரவது வலியுறுத்தி மாற்றங்களை ஏற்படுத்தினால் அதுதான் வேதனைக்குரியது. நான் கூறுவது சரிதானே முல்லை.

அனைவருக்கும் எனது கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!!

கபிலன் said...

Happy Christmas!!

கபிலன் said...

அருமையான கட்டுரை !

கடவுளே இல்லைன்னு சொல்றது ஓகே...நான் வணங்குகிற கடவுள் இருக்கார்னு சொல்றது கூட ஒகே.....ஆனால் A அப்படிங்குற கடவுள் இல்லை, B கடவுள் தான் இருக்கார்னு சொல்லி, ஒருத்தரை நம்ப வைத்து, மதம் மாற்றுவது என்பது மூளைச் சலவையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. எங்கள் கல்லூரியில் இப்படி நிறைய உண்டு, இதெற்கென ஒரு கும்பலே உண்டு. சுப்ரமணிய சிவா, ஜான் ஜோஷுவா ஆனது, மஹாலஷ்மி, ஏஞ்சலின் ஆன கதைகள் எல்லாம் உண்டு.

"அவள், கடவுளுடன் நெருக்கமாக நெருக்கமாக மற்றவர்களுக்கும் அவளுக்குமிடையே இடைவெளி விழுந்தது. "

அடேங்கப்பா....நேர்த்தியான உண்மை!

எது எப்படியோ, அது மூலமா அவங்களுக்கு சந்தோஷமா நிம்மதியும் கிடைச்சா சந்தோஷம் தான்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

Happy Christmas

பா.ராஜாராம் said...

மிக அற்புதமான பகிரல்!

//ஒருவேளை, தமிழ்செல்விக்கு அந்த இறுக்கங்களிலிருந்து விடுபட ஒரு இதம் தேவையாயிருந்திருக்குமாயிருக்கும். தன்னம்பிக்கையளிக்கக் கூடிய ஒருவர், எளிய வாழ்க்கையை வாழ அவள் பின்பற்றக்கூடிய ஒருவர், 'உன் வாழ்வை எதிர்கொள்ள நான் இருக்கிறேன்” என்று பாதுகாப்பளிக்கக்கூடிய ஒருவர் தமிழ்செல்விக்கு தேவைப்பட்டிருக்கிறார்.

அவர், தமிழ்செல்விக்கு ஜீசஸாக இருந்திருக்கிறார்!//

பளிச்!

கணமான ஒரு விஷயத்தை மிக எளிதாக அணுகுகிறீர்கள் முல்லை.உங்களின் எதார்த்தமான மொழி உதவியுடன்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)மெர்ரி கிரிஸ்த்மஸ்.. உங்க கடவுள் கடவுளே இல்லைன்னு பொதுவா இந்துகள் சொல்வது இல்லை. கடவுளை அடைய அல்லது உண்மையை அடைய பல வழிகள் அவையே பலமதங்கள்ன்னு சொல்வது உண்டு. அந்த அடிப்படை தான் பரிட்சைன்னா ப்ரேயர் செய்யபோறதெல்லாம்.. நாங்கள்ளாம் மெழுகுவத்தி ஏத்தி ப்ரேயர் செய்துட்டுத்தான் பரிட்சை எழுதபோவோம் எங்கள் பள்ளிக்கூடத்துல..

அன்புடன் அருணா said...

ரொம்ப சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் முல்லை!

நசரேயன் said...

Happy Christmas - எல்லோரும் சொன்னதையே நானும் சொல்லிகிறேன்

ராமலக்ஷ்மி said...

கடைசியாகச் சொல்லியிருப்பது சிறப்பு. அனைவருக்கும் இனிய கிறுஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

சிங்கக்குட்டி said...

புதுவருட வாழ்த்துகளுடன் உங்களுக்கு என் சிறிய பரிசு :-)

http://singakkutti.blogspot.com/2009/12/blog-post_25.html

காமராஜ் said...

முல்லை ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. இந்த அதிகாலையில் இந்த பதிவு. என்னை மிகவும் இலகுவாக்கிவிட்டது.
கிரிஸ்துமஸ்ஸை அல்ல ஏனையவற்றை,இப்படி ஒரு கோணத்தில் பார்க்க சில பேரால் மட்டுமே முடியும்.அதற்கு ரொம்ப பெரிய மன்சு வேண்டும். எனக்கு பைபிளோடு ஏழு வருட நெருக்கம். பத்தாவது படிக்கும்போது அது அப்படியே பின்னுக்குத்தள்ளப்பட்டு அதே கணமுள்ள வேறு இலக்கியப்புத்தகங்கள் வந்து நின்றன.மார்கழி மாதத்தில் காலையில் எழுந்து திருமால் வழிபாட்டுத்தலங்கள் இருக்கும் தெருக்களுக்குப்போவேன். கார்த்திகையில்வீடு நிறைய்ய விளக்குகளும்,மார்கழியில் ஸ்டாரும் தொங்குகிற இடமானது என் வீடு.ஒரு நாளும் என்ன படம் தொங்க விடவேண்டும் என்கிற பிரச்சினை எங்களுக்குள் எழுந்ததில்லை.நான் நம்புகிறவர்களை நம்புகிறவன் இப்படி எங்கேயோ படித்த ஞாபகம்.
என்னோடு பீட்டர் எனும் பெரியவர் வேலை பார்த்தார்.மிகப்பெரிய ஐயப்ப பக்தராகி தன்னை பீட்டர் அய்யப்பன் என் மாற்றிக்கொண்டார்.ஆனால் குணம் மாறவில்லை முல்லை.மரங்கள் கனிகளால் அறியப்படும் என்று பைபிளில் ஒரு வசனம் வரும்.மனிதர்கள் குணங்களால்.

காமராஜ் said...

முல்லை ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. இந்த அதிகாலையில் இந்த பதிவு. என்னை மிகவும் இலகுவாக்கிவிட்டது.
கிரிஸ்துமஸ்ஸை அல்ல ஏனையவற்றை,இப்படி ஒரு கோணத்தில் பார்க்க சில பேரால் மட்டுமே முடியும்.அதற்கு ரொம்ப பெரிய மன்சு வேண்டும். எனக்கு பைபிளோடு ஏழு வருட நெருக்கம். பத்தாவது படிக்கும்போது அது அப்படியே பின்னுக்குத்தள்ளப்பட்டு அதே கணமுள்ள வேறு இலக்கியப்புத்தகங்கள் வந்து நின்றன.மார்கழி மாதத்தில் காலையில் எழுந்து திருமால் வழிபாட்டுத்தலங்கள் இருக்கும் தெருக்களுக்குப்போவேன். கார்த்திகையில்வீடு நிறைய்ய விளக்குகளும்,மார்கழியில் ஸ்டாரும் தொங்குகிற இடமானது என் வீடு.ஒரு நாளும் என்ன படம் தொங்க விடவேண்டும் என்கிற பிரச்சினை எங்களுக்குள் எழுந்ததில்லை.நான் நம்புகிறவர்களை நம்புகிறவன் இப்படி எங்கேயோ படித்த ஞாபகம்.
என்னோடு பீட்டர் எனும் பெரியவர் வேலை பார்த்தார்.மிகப்பெரிய ஐயப்ப பக்தராகி தன்னை பீட்டர் அய்யப்பன் என் மாற்றிக்கொண்டார்.ஆனால் குணம் மாறவில்லை முல்லை.மரங்கள் கனிகளால் அறியப்படும் என்று பைபிளில் ஒரு வசனம் வரும்.மனிதர்கள் குணங்களால்.

Dr.Rudhran said...

இது ஓர் இயல்பான பரிணாமமாய் அமைந்தால் மகிழ்ச்சிதான். பலநேரங்களில் இப்படி திடீரெனவும் தீவிரமாகவும் மாறுவது ஒரு மன்னோயின் ஆரம்பக்கட்டம் என்பது என் அனுபவம்.
உங்கள் எழுத்துக்கள் மேலும் தொடர வாழ்த்துகள்.

Deepa said...

தோழி!
காமராஜ் அங்கிள் சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன். மிகவும் ஆரோக்கியமான நுட்பமான மனம் உன்னுடையது. அரிதினும அரிது!

மாதவராஜ் said...

கனமான விஷயத்தையும், மிக இலகுவாக, அதன் போக்கில் சொல்ல முடிகிற உங்கள் எழுத்துக்கு என் வணக்கங்கள்.
//அவள், கடவுளுடன் நெருக்கமாக நெருக்கமாக மற்றவர்களுக்கும் அவளுக்குமிடையே இடைவெளி விழுந்தது.//
இந்த வரிகளுக்குள் நிறைய இருக்கின்றன.
வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் முல்லை. தமிழ்ச்செல்வியின் அம்மா அப்பா எல்லாரும் மறுக்கவில்லையா.
அவளது மத மாற்றத்துக்கு ஒத்துக் கொண்டார்களா.
எங்கள் பள்ளியிலும் சாப்பல் உண்டு. பரீட்சைக்கு முன்னால் போய் அங்கே மண்டியிடுவதும் ஒரு பழக்கமாகவே இருந்தது.

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு, அருமையான விளக்கங்கள். பாலை ஏழைக்குழந்தைகளுக்குத் தரலாம் என்ற கருத்து சபாஷ். தங்களின் தோழி குறித்த தங்களின் பார்வை மிகவும் அருமை. நன்றி.