Saturday, December 19, 2009

நின்னுக்கிட்டே ஃபேனை தொடுவது பற்றி...

குறிப்பு : காப்பி போ(பே)ஸ்ட்தான்!
ப்லாக் காணாம போனப்போ இங்கே எழுதினது. இங்கேயும் ஒரு தடவை போஸ்டறேன்.

பப்புவை பார்ப்பவர்கள், அடுத்து என்னைப்பார்த்து முதலில் கேட்கும் கேள்வி "என்ன, இவ்ளோ ஒல்லியா இருக்காளே!". அதுவும் என்னை பார்த்துவிட்டு, பப்புவை பார்த்தால் அப்படித் தோன்றுவது நியாயம்தான் என்றாலும் , நான் அவளுக்கு சாப்பாடு போடுகிறானெவென்றே ஒரு சிலருக்கு சந்தேகம் வருவது கொஞ்சம் ஓவர்தான்.

அப்படி சொல்பவர்கள் கையில் உடனே ஒரு கிண்ணத்தில் சாதத்தை போட்டு பப்புவுக்கு ஊட்ட சொல்லி பார்க்க மிகவும் ஆவலாக இருக்கும்! ஆனால் என்ன செய்வது...அவர்களின் அறிவுரைகளுக்கு தலையை ஆட்டிக்கொண்டிருப்பதைத் தவிர!!

பெரிம்மாவுக்கும், அம்மாவுக்கும் ஊரிலிருந்து வந்தால் பப்புவோடேதான் பொழுது போகும்...ஒரு கிண்ணத்தில் சாப்பிட ஏதாவது வைத்துக்கொண்டு. அதைப்பார்த்து எனக்கு சந்தேகம் வந்துவிடும்..ஒருவேளை பப்பு வளர்ந்து தானாக சாப்பிட கற்றுக்கொண்டால் என்ன பண்ணுவார்கள்? பாட்டு பாடி, நரியாக, பூனையாக மாறி, கடைசியில் அவர்கள் டயர்டு ஆகி அமர்ந்திருப்பதைப் பார்த்தால் அந்த கிண்ணத்திலிருப்பதை அவர்களுக்குத்தான் ஊட்டவேண்டும் போல இருக்கும்! இதைச் சொன்னால் எனக்குதான் அர்ச்சனை நடக்கும்...

”அது எப்படி, உன்னால் சாப்பிட முடிகிறது, பப்பு சாப்பிடாம” என்று!! அதை பார்க்கவாவது எனக்கு தெம்பு வேண்டாமா, அதற்குதான் சாப்பிடுகிறேன் என்று ஒரு பிட்டை போடுவேன். உடனே அடுத்த அம்பு வரும். ‘வெறும் புக்ஸ் வாசித்துக்காட்டினால் மட்டும் போதும்னு நினைச்சுக்கிட்டிருக்கியா, அஞ்சு வயசுக்குள்ளே நீ என்ன சாப்பாடு கொடுக்கிறாயோ அதுதான் முழு ப்ரெய்ன் டெவலப்மெண்ட்' என்று! 'வயிற்றுக்குள் என்ன செல்கிறது என்பதைவிட பப்புவின் மூளைக்குள் எனன் செல்கிறது என்பதுதான் பெரிம்மா முக்கியம்' என்று நானும் அடுத்த பிட்டை போடுவேன்! ( அப்படி அவங்க நினைச்சிருந்தா...ஹிஹி!)

வளர்ப்பது, கவனித்துக்கொள்வது என்றால் சாப்பிடக் கொடுத்துக்கொண்டே இருப்பதுதான் என்று நினைத்துக்கொள்பவர்கள்தானே நாம்! விருந்தோம்பலில் பெயர்பெற்றவர்களல்லவா! அவ்வளவு ஏன், கடைசியாகச் சென்ற திருமண வரவேற்பில்கூட, போனதும் சாப்பிடத்தானே சொன்னார்கள். மணமக்களை பார்க்காமல், முதலில் சாப்பாட்டை முடித்துக்கொண்டு, பின்னரே அவர்களை வாழ்த்தினோம்! ”பந்திக்கு முந்து” என்றே பழமொழி கொண்ட சமூகத்தில் இதெல்லாம் ஆச்சர்யமா என்ன!! :-)

எது எப்படியாயினும், ஓடி ஓடி ஊட்டும் ரகமல்ல, நான் . (அதானே, அப்படி இருந்தா இந்த போஸ்ட் போடாம பப்புவை சாப்பிட அல்லவா வைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று ஆயில்ஸ் நினைப்பது புரிகிறது! ) அவள், போதுமென்று சொல்லிவிட்டால் விட்டுவிடுவேன். என் கையிலிருக்கும் கிண்ணம் காலியாக வேண்டுமென்ற நினைப்பே கிடையாது. எடை அவளது வயதுக்கு தகுந்தவாறு இருக்கும் வரை பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை. ஆனால், நாம் கண்டிப்பாக இப்படி வளர்க்கப்பட்டிருக்க மாட்டோம்! (மேலும், பப்புவை போல தீர்மானிக்கும் உரிமையெல்லாம் எனக்கும், என் தம்பிக்கும் இருக்கவில்லை.) கொடுத்ததையெல்லாம் சாப்பிட்டாக வேண்டிய கடமை எங்களுக்கு - சாப்பிட கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டிய கடமை பெரியவர்களுக்கு!

”பால் குடி, எலும்பெல்லாம் அப்போத்தான் ஸ்ட்ரென்த்தா இருக்கும்! ”

”கீரை சாப்பிடு, கண்ணுக்கு நல்லது”

“பருப்பு சாதம் சாப்பிடு, அப்போதான் ஹைட்டா ஆகலாம், நின்னுக்கிட்டே மேலே ஃபேனை தொடலாம்! (ஹ்ம்ம்..எதுக்கு தொடணும்? ஒரு வேளை தொடைக்கறதுக்கு இப்படி ஒரு வழி இருக்கோ?!!)

“அஞ்சு மணிக்கு எழுந்தா ப்ரெட் அண்ட் ஜாம் தருவேன்..”
(ஆனா, அதுக்கு அப்புறம் பத்து திருக்குறளை படிச்சு மனப்பாடம் செஞ்சது தனிக்கதை! )

அதை சாப்பிடு, இதுக்கு நல்லது. இதை சாப்பிடு அதுக்கு நல்லது என்று வளர்ந்து, பப்பு உருவானதும் இதெல்லாம் “பப்புவுக்கு நல்லது” என்று மாறியது. பப்பு வந்தப்பிறகோ, இதை குடி, பால் கிடைக்கும், அதை சாப்பிடு, சீக்கிரம் உடம்பு தேறும் என்று உருமாறியது. கொஞ்ச நாட்களில், ‘ பப்புவுக்கு இப்போ ராகி குடு, உடம்புக்கு நல்லது', 'அப்போ சூப் கொடு, உடம்புக்கு நல்லது' என்றும் கவனம் திசை திரும்பியது!

இன்று காலை முட்டையை சாப்பிட மறுத்த பப்புவிடம். “எக் சாப்பிட்டாதான் 'சிங்கம் போல ஸ்ட்ரென்த் எனக்கு' வரும்” என்று சொன்ன போதுதான் உறைத்தது நானும் என் பெரிம்மா,அம்மா போல மாறிக்கொண்டிருப்பது!!

5 comments:

ஆயில்யன் said...

யெம்ம்ம்ம்ம்ம்மாம் பெரிய பதிவு !

அம்பிகா said...

\\அது எப்படி, உன்னால் சாப்பிட முடிகிறது, பப்பு சாப்பிடாம” என்று!! அதை பார்க்கவாவது எனக்கு தெம்பு வேண்டாமா, அதற்குதான் சாப்பிடுகிறேன்.//
உண்மை தானே!! நானும் இதே பதிலை சொல்லியிருக்கேன்.

நானும் என் பெரிம்மா,அம்மா போல மாறிக்கொண்டிருப்பது!!
உண்மைதான்.
தலைமுறைகள் தான் மாறினாலும் தாய்மை மாறுவதில்லை.

ஒரே நாளில் எத்தனை பதிவு. சூப்பர் ஃபாஸ்ட்

சின்ன அம்மிணி said...

வெட்டி ஆபீஸர் வலைத்தளத்துல வந்ததேதானே

பா.ராஜாராம் said...

//பெரிம்மாவுக்கும், அம்மாவுக்கும் ஊரிலிருந்து வந்தால் பப்புவோடேதான் பொழுது போகும்...ஒரு கிண்ணத்தில் சாப்பிட ஏதாவது வைத்துக்கொண்டு. அதைப்பார்த்து எனக்கு சந்தேகம் வந்துவிடும்..ஒருவேளை பப்பு வளர்ந்து தானாக சாப்பிட கற்றுக்கொண்டால் என்ன பண்ணுவார்கள்? பாட்டு பாடி, நரியாக, பூனையாக மாறி, கடைசியில் அவர்கள் டயர்டு ஆகி அமர்ந்திருப்பதைப் பார்த்தால் அந்த கிண்ணத்திலிருப்பதை அவர்களுக்குத்தான் ஊட்டவேண்டும் போல இருக்கும்! இதைச் சொன்னால் எனக்குதான் அர்ச்சனை நடக்கும்...//

இங்கிருக்கிறார்கள்..

பப்பு ஆச்சி,(எ)சந்தனமுல்லை(எ)முல்லை.

தீஷு said...

எல்லா வீட்டிலேயும் இதே கதை தானா?