Monday, December 21, 2009

காமன்மேன்

கடந்தவாரம் தம்பி வந்திருந்தான், பரிட்சைகள் முடித்துவிட்டு.

குட்டி எப்போதுமே எல்லா பரீட்சைகளையுமே நன்றாக எழுதியிருப்பதாகத்தான் சொல்லுவான். அஃப்கோர்ஸ், அவன் புத்திசாலிதான். ஆனாலும், எப்போது கேட்டாலும், எந்த பரிட்சையாக இருந்தாலும், நன்றாக சூப்பராகவே எழுதியிருப்பதாகவே சொல்லுவான். இவ்வளவு மார்க் வருமென்று மிகச்சரியாக சொல்லுவான். அதுபோலவே வாங்குவான். எல்லாவற்றுக்கும் மேலாக செஸ் சாம்பியன்!


ஆனால், நான் அப்படியே நேரெதிர். மாதாந்திர டெஸ்டாக இருந்தாலும், எவ்வளவுதான் நன்றாக எழுதியிருந்தாலும் 'நல்லாவே எழுதலைப்பா' என்றே சொல்லுவேன்.டெஸ்டுக்கே இப்படியென்றால் தேர்வுகளுக்கோ கேட்கவே வேண்டாம். அன்று முழுவதும் அழுது வடியும் முகத்தோடு, யாரிடமும் பேசாமல் மூட் அவுட்டாகவே கழியும்! இப்போதே இதையெல்லாம் செய்து விட்டால் விடைத்தாள் கிடைக்கும்போது ரீப்ளே செய்ய வேண்டாமே! அதுவுமில்லாமல், ஆயாவுக்கும் பெரிம்மாவுக்கும் மதிப்பெண் தெரிய வரும்போது பெரிதாக ஒன்றும் சஸ்பென்ஸ் இராது!

ஆனால், மறைமுகமாக எடுத்துக்காட்டுகளுடன் பேச்சு கிடைக்கும். படிப்பை மூச்சாக கொண்டிருக்கிற தமிழ் சமூகத்தில் அதுவும் டீச்சரின் பிள்ளையாக நீங்கள் பிறந்துவிட்டால் ஏதாவது ஒருவிதத்தில் எடுத்துக்காட்டாக திகழ வேண்டும். ஒன்று அதிபுத்திசாலியாக அல்லது மக்குபிளாஸ்திரியாக! யாருக்காவது எ.கா-ஆக காண்பிக்க நீங்கள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டேயிருப்பீர்கள்! அதுவும் குடும்பத்தின் முதல் பேரன் பேத்திகளாக இருந்துவிட்டாலோ உங்கள் பாடு திண்டாட்டம் திண்டாட்டம்!

எல்லா குடும்பத்திற்கும் சொல்லிக்காட்டவென்று ஒரு ரோல் மாடல் கிடைத்துவிடுவார்கள். ஆர் ஈ சியிலோ அல்லது எம் எம் சியிலோ படித்தவர்கள். அல்லது 'அந்த காலத்துலேயே கோல்ட் மெடலிஸ்ட்' அடைமொழி கொண்ட ஏதாவதொரு சித்தப்பாவோ, பெரியப்பாவோ,அத்தையோ அல்லது மாமாவோ! அதுவும் அவர்களைப் பற்றிய கதைகள், பராக்கிரமங்கள், சிறுவயது மேதமைத்தனங்கள் எல்லாம், அடுத்தடுத்த தலைமுறைக்குக் கவனமாக கடத்தப்படும். அந்தக்காலத்துக்கு, இந்த கோல்ட் மெடலிஸ்ட்கள் ஓக்கேதான் என்றாலும் இன்றைய போட்டிகள் நிறைந்த சூழலுக்கு இந்த ரோல் மாடல்கள் அவுட்டேட்டட் என்பதை வசதியாக மறந்துவிடுவார்கள். 'பியூசிலே கணக்குலே செண்டம்' எனபது முதல் 'உங்க மாமாவுக்கு கால்குலேட்டரே வேண்டாம்' என்பது வரை!

ஏதோவொரு தைப்பூசத்தில் நடந்த விடுகதை போட்டியில் யாருக்கும் தெரியாத புதிருக்கு விடை சொன்ன மாமாவின் கதை மறக்காமல் எல்லா குட்டீஸுக்கும் சொல்லப்படும். “பூனைக்கு ஆறு கால்” என்று புதிர் சொல்பவர் சொல்ல எல்லோரும் ”தவறு, நான்கு” என்று சொல்ல, மாமா மட்டும் ”சரிதான், பூ நக்கிக்கு ஆறுகாலென்று” என்று சொல்லி பாராட்டை பெற்றாராம். (இப்போது என் கடமையை நானும் சரிவர செய்துவிட்டேன், பப்புவுக்கு கடத்திவிட்டேனல்லவா!!)


அடுத்தது, 'நல்லா படிக்கறவங்க கூடத்தான் சேரணும்'னு என்ற அட்வைஸ்/மித்! அப்படி சொல்லும்போதெல்லாம் ஒரு கேள்வி தொண்டை வரை வந்துட்டு போகும். ‘இதே மாதிரி அவங்க வீட்டுலேயும் சொல்லுவாங்க தானே, அப்போ அவங்க எப்படி எங்க கூட சேருவாங்க'ன்னு! ஆனா, கேக்கற இடத்துலேயா நான் இருந்தேன்...கேட்டுக்கற இடத்துலேதானே இருந்தேன்! அதைவிட, செண்டம் எடுக்கும் கசின்ஸோ அல்லது செண்டம் எடுக்கும் குடும்ப நண்பர்கள் பிள்ளைகளோ இருந்தால் உங்கள் பாடு திண்டாட்டம்தான்! எனக்கும் அந்த திண்டாட்டம் இருந்தது - ஒரு குடும்ப நண்பரின் ஹேமா மூலமாக!


அவரது, நோட்டுப்பாட புத்தகங்கள் அவ்வளவு அழகாக இருக்கும், குண்டு குண்டு கையெழுத்துடன். மூலைகள் மடங்கியிருக்காது. எல்லாவற்றுக்கும் மேல் கையெழுத்து ஆரம்பம் முதல் கடைசி வரை, நோட்டுப்புத்தகத்தின் கடைசி வரை ஒரே மாதிரி அழகாக இருக்கும். என்னுடையது முதல் பாடம் மற்றும் இரண்டாம் பாடங்கள் மட்டும் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல..அடுத்து வருபவை வர வர மாமா...;-) சோ, இவரது நோட்டுபுத்த்கத்திற்கு எங்களிடையே பயங்கர டிமாண்ட் இருக்கும் என்பதை சொல்லவே வேண்டாம். எதற்கு டிமாண்ட் இருக்குமோ அதன் மதிப்பும் அதிகம்தானே...இந்த ஞானசௌந்தரியும் அதற்கு விதிவிலக்கில்லை..கொடுக்க ஏகப்பட்ட பிகு பண்ணுவார் - கொடுத்துவிட்டாலோ ஏதோ ஒரு படத்தில் ரஜினிக்கு வேட்டிக்கொடுத்த செந்தில் மாதிரிதான்! எல்லாவற்றுக்கும் மேல் அவர் பார்க்க ஒல்லியாக வேறு இருப்பார். ‘படிச்சி படிச்சே இவ இப்படி ஆகிட்டா' என்று அதுவும் அவரது தலையில் ஒரு இறகாக மாறி நிற்கும்!


இப்படி எல்லோரும் மெரிட்டில் சீட் வாங்கிவிட நான் மட்டும் பிசிஏ சேர நேர்ந்தது.
சேர்ந்தபின், எனக்கு மணி மாமா நினைவுதான் வந்தது. கணக்கில் செண்டம் எடுத்தும், ஐ ஏ எஸ் -க்கும் படித்துக்கொண்டிருந்த மாமாக்களுக்கு இடையில் ஐடிஐயில் படித்து சேஷசாயியில் வேலை செய்த மாமா. மாமாவின் ரசனைகள் குறித்தும் திறமைகள் குறித்தும் பல்வேறு துணுக்குகள் விடுமுறைக் காலங்களில் குடும்பங்கள் ஒன்று கூடும்போது பரிமாறிக்கொள்ளப்படும். இதெல்லாம் நினைவுக்கு வந்தபோது என் முதுகுதண்டு ஒரு முறை சிலீரிட்டு அடங்கியது! அடுத்து நானா?! என்ற கேள்விதான் அது! மணிமாமாவாவது உடலளவில் பலசாலி, காலையில் முட்டையைக் உடைத்துக் குடித்துவிட்டு ஞானசபை வரைக்கும் ஓடுவாராம். கிணற்றின் ஆழத்திலிருக்கும் உள்கிணற்றிற்கு நீர்மட்டம் இறங்கிவிட்டால் ராட்டினம் போட்டு நீர் இறைத்துத்தருவாராம். ஆனால். நான்? ஹீம்ம்...

குட்டி இங்கே யாருடனோ தொலைபேசிக்கொண்டிருந்தான். போனிலேயே சந்தேகங்களை விளக்கிக்கொண்டு!'நான் அடுத்தவாரம் ஊருக்கு போறேன், குட்டி, வர்றியா' என்றேன் அவனைப் பார்த்து. 'இல்லக்கா, அந்த வாரம் ஃபுல்லா எனக்கு செஸ் காம்படிஷன் இருக்கு' என்று கம்ப்யூட்டருடன் ப்ராக்டிஸ் செய்ய ஆரம்பித்துவிட்டான்.

வாழ்வின் சாமான்யங்களிலேயே திருப்தியடைந்துவிடுகிற நான், ஊருக்குத் தேவையானவைகளை பையில் எடுத்துவைக்க ஆரம்பித்தேன்.


குறிப்பு: எனக்கு மட்டும் இந்த தலைப்புலே எழுதனும்னு ஆசையிருக்காதா என்ன?! ஹிஹி..

17 comments:

நட்புடன் ஜமால் said...

நானும் செஸ் சாம்பியன் தான்

ஆனால் படிப்பில் - ஹாஜரிடம் சொல்ற மாதிரி ஒன்றுமில்லை.

காமன்மேன்

க‌ரிச‌ல்கார‌ன் said...

//இன்றைய போட்டிகள் நிறைந்த சூழலுக்கு இந்த ரோல் மாடல்கள் அவுட்டேட்டட் என்பதை வசதியாக மறந்துவிடுவார்கள். 'பியூசிலே கணக்குலே செண்டம்' எனபது முதல் 'உங்க மாமாவுக்கு கால்குலேட்டரே வேண்டாம்' என்பது வரை! //

இந்த‌ ரோல் மாட‌ல்க‌ள் தொல்லை தாங்க‌ முடியல‌ப்பா (எப்ப‌டியோ உங்க‌ளுக்கு ஒரு ப‌திவு போடவாவ‌து ப‌ய‌ன்ப‌டுறாங்க‌ல்ல‌)

சின்ன அம்மிணி said...

//வாரம் ஃபுல்லா எனக்கு செஸ் காம்படிஷன் இருக்கு//

Best wishes for your brother.

☀நான் ஆதவன்☀ said...

//ஒரு படத்தில் ரஜினிக்கு வேட்டிக்கொடுத்த செந்தில் மாதிரிதான்!//

இதில் சொற்பிழை பொருட்பிழை உள்ளது புலவரே! :)

ஹி ஹி எங்க பரம்பரையிலேயே அதிகம் படிச்சவங்க இல்லாததால எனக்கு இந்த பிரச்சனையே இருந்ததில்லை :)

☀நான் ஆதவன்☀ said...

//இதெல்லாம் நினைவுக்கு வந்தபோது என் முதுகுதண்டு ஒரு முறை சிலீரிட்டு அடங்கியது! அடுத்து நானா?! என்ற கேள்விதான் அது//

பாஸ் டோண்ட் ஒர்ரி... அதான் நல்லா படிக்கறவங்களை தான் உதாரணத்துக்கு சொல்லுவாங்கன்னு சொன்னீங்கல்ல. அப்ப கவலை இல்ல :)

☀நான் ஆதவன்☀ said...

//குறிப்பு: எனக்கு மட்டும் இந்த தலைப்புலே எழுதனும்னு ஆசையிருக்காதா என்ன?! ஹிஹி.. //

ஒத்துக்கிறோம். நீங்களும் ரவுடி தான் :)

தாரணி பிரியா said...

//அதுவும் குடும்பத்தின் முதல் பேரன் பேத்திகளாக இருந்துவிட்டாலோ உங்கள் பாடு திண்டாட்டம் திண்டாட்டம்//

ஆமாம். வீட்டுல இருக்கிற மத்தவங்க படிச்சாலும் நான் திட்டு வாங்குவேன் (உன்னை விட சின்னதுங்க எல்லாம் எப்படி படிக்குது நீயும் இருக்கியே)

படிக்கலைன்னாலும் திட்டு வாங்குவேன் ( நீ அக்காவது லட்சணமா ஒழுங்கா படிச்சாதானே மத்ததுங்க படிக்கும் )

rapp said...

//ஒரு படத்தில் ரஜினிக்கு வேட்டிக்கொடுத்த செந்தில் மாதிரிதான்!//

கிரர்ர்ர்ரர்ர்ர்ர்............. இந்தளவுல இருந்தா எப்டி பின்ன? படையப்பா படத்துல பேண்டையும் சட்டையும்தான ரஜினி செந்திலுக்குக் கொடுப்பாரு? நீங்க என்னடான்னா இப்டி கண்டபடி எழுதிருக்கீங்க? இந்த அதிமுக்கிய தகவலே உங்களுக்கு சரியா தெரில. என்னவோ போங்க பப்புவோட பொது அறிவை நினைச்சா எனக்கு இப்பவே கவலையா இருக்கு.

ராமலக்ஷ்மி said...

//வாழ்வின் சாமான்யங்களிலேயே திருப்தியடைந்துவிடுகிற நான்,//

இதிலே தப்பே இல்லையே:)!

இப்படிக்கு
காமன்உமன்

அமுதா said...

:-)

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

:-)

நிஜமா நல்லவன் said...

:)

நிஜமா நல்லவன் said...

/rapp said...

//ஒரு படத்தில் ரஜினிக்கு வேட்டிக்கொடுத்த செந்தில் மாதிரிதான்!//

கிரர்ர்ர்ரர்ர்ர்ர்............. இந்தளவுல இருந்தா எப்டி பின்ன? படையப்பா படத்துல பேண்டையும் சட்டையும்தான ரஜினி செந்திலுக்குக் கொடுப்பாரு? நீங்க என்னடான்னா இப்டி கண்டபடி எழுதிருக்கீங்க? இந்த அதிமுக்கிய தகவலே உங்களுக்கு சரியா தெரில. என்னவோ போங்க பப்புவோட பொது அறிவை நினைச்சா எனக்கு இப்பவே கவலையா இருக்கு./


ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்....!

அம்பிகா said...

இது எல்லா வீட்லேயும் நடக்குற
காமன் மேட்டர் தாங்க.
கவலைய வுடுங்க.

நசரேயன் said...

//அஃப்கோர்ஸ், அவன் புத்திசாலிதான்.//

இதை நான் நம்புறேன்

Deepa said...

:-) நல்ல கொசுவத்தி!
ரசித்தேன்.

- இன்னொரு காமன்வுமன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

☀நான் ஆதவன்☀ said...

ஹி ஹி எங்க பரம்பரையிலேயே அதிகம் படிச்சவங்க இல்லாததால எனக்கு இந்த பிரச்சனையே இருந்ததில்லை //

அதே அதே அதே. சொல்லப்போனா நாமதான் அக்கா பசங்களுக்கு ரோல் மாடல். அவங்க நம்மளை வச்சு பேசும்போது உள்ளுக்குள்ள பெருமையா இருக்கும்னு வெச்சுக்கோங்களேன், ஆனா அதெல்லாம் ஒரு ஸ்டெப் வரைக்கும் தான், அதற்குப்பிறகு எல்லாமே வேற மாதிரி, அவங்க எனக்கு ரோல் மாடலாகிட்டாங்க, லைஃப்ல கூட :))