Friday, December 18, 2009

கி யா மற்றும் கேசினி

+2விற்கு பிறகு காலை ஐந்து மணி எப்படி இருக்குமென்று கடந்த சனிக்கிழமை பார்க்க நேர்ந்தது! பப்புவின் பள்ளியில் கராத்தே செய்முறை மற்றும் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சிக்காக காலை ஏழு மணிக்கே வரச் சொல்லியிருந்ததே காரணம். அகில இந்திய வீரக்கலை கழகம் என்ற அமைப்பிலிருந்து அதன் தலைவர் வந்திருந்தார். ஒரு பேச்சுக்காக அவரை பேசச்சொன்னதுக்கு போட்டு தாளித்துவிட்டார். தன் கை, கால்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பவரை எந்த நோயும் அண்டாதென்றும், நமது நாட்டில் உடல்நலத்தைப் பற்றிய அறிவு மிகமிகக் குறைவென்றும்.

மேலும் அவர் சொன்னதிலிருந்து, வாக்கிங் ஒரு உடற்பயிற்சியே அல்ல, எதுவுமே செய்யாமலிருப்பதற்கு வாக்கிங் ஒக்கே. விழிப்புணர்ச்சி பலருக்கு இருந்தாலும் நிறைய பேர் உடற்பயிற்சியை முறையாக செய்வதில்லை.

கையை போட்டு சுழற்றுவது, பின்பு தலையை ஒரேயடியாக ஆட்டுவது என்று இது தசைகளை சோர்வடைய செய்யுமாம். உடற்பயிற்சி என்பது செய்து முடித்தபின் புத்துணர்ச்சியடைய வைக்க வேண்டும். சக்தியை சேமிக்க செய்வதாக இருக்க வேண்டும். ஜிம்-களுக்குச் செல்வது சரிதான், ஆனால் தொடர்ந்து செய்ய வேண்டும். கொஞ்சநாட்கள் விட்டால் காற்றுபோன பலூன் போல ஆகிவிடும். அதற்கு மார்சியல் ஆர்ட்ஸ் மிகச்சிறந்தவை. நமது சிலம்பம், யோகா இவற்றை அடிப்படையாகக்கொண்டு சீனாவும், ஜப்பானும் அமைத்தவையே கரத்தே, டேக் வான் டோ முதலியன. எல்லோருக்கும் தெரிந்த ஜிம் மனிதர்கள் ‘அர்னால்டு','ஸ்டாலன்'. ஆனால் இவர்கள் இன்று எப்படி இருக்கிறார்கள? எல்லோருக்கும் தெரிந்த தற்காப்புக்கலை வீரர்கள் ஜாக்கி சான், இன்னொருவர் (பெயர் மறந்துவிட்டது) எப்படி இருக்கிறார்கள். இன்றும் அதே வேகம்,உற்சாகம்! மேலும், சைனாவின் ஆர்மியில் ஆள் எடுப்பது வீரர்களை அல்லது சண்டையில் ஆர்வமுள்ளவர்களைத்தான் பயிற்சி கொடுத்து சேர்க்கிறார்களாம். ஆனால், நம் நாட்டில் ஆட்களை தேர்ந்தெடுத்து பயிற்சிக் கொடுக்கிறார்களாம், அதாவது அந்த நபருக்கு சண்டையில் ஆர்வமிருக்கிறதா, முனைப்பிருக்கிறதா என்ற தெளிவில்லாமலேயே! அதற்குள் தூறல் நின்றுவிடவே கராத்தே நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.

எல்லோரும் வரிசையில் நின்றார்கள். மாஸ்டர் கி ஐ என்றதும் எல்லோரும் பஞ்ச் கொடுத்து க்யா என்று கத்தினார்கள். (வீட்டில் பப்பு அடிக்கடி கத்திக்கொண்டிருப்பாள் - க்யா க்யா வென்று!) அடியை விட சத்தமே மிகுதியாக இருக்கும்! இங்கும் அப்படியே இருந்தது! மேலும் குட்டீஸ் எல்லோரும் அம்மா அப்பாவை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வேறு இருந்தனர். முடிந்ததும், அமர சொல்லிவிட்டு ஒவ்வொருவருக்கும் பச்சை பெல்ட் கொடுத்தார் மாஸ்டர். அதை முன்னால் வைத்து குனிந்து வணங்கி எழுந்தனர். பின்னர், அவர்களுக்கு அதை அணிவித்துவிட்டு, ஏற்கெனவே அணிந்திருந்த வெள்ளை பெல்ட்டை அவரவர் கையில் கொடுத்தார். அனைவரும் திரும்ப அமர்ந்ததும் மாஸ்டர் வந்து வெள்ளை பெல்ட்டை வாங்கிக்கொண்டார். (என்ன செய்வாங்க?)

உடனே, எல்லோரும் ஹேய், நான் க்ரீன் டான் என்று ப்ரவுன் டான்களிடம் சொல்லத் தொடங்கினர். 'க்ரீன் க்கு அப்புறம்தான் ப்ரவுன் என்று ப்ரவுன் டான் அக்காக்களும் அண்ணாக்களும் கூற க்ரீன் டான்கள் ஞே வாகினர். அம்மா அப்பாக்கள் அவரவர் டான்களை போட்டோ எடுப்பதில் பிசியாகி விட கூட்டம் மெதுவாக கலைந்தது!


ஞாயிற்றுக்கிழமை சென்னை பிர்லா கோளரங்கம் சென்றிருந்தோம். ஆங்கிலம் மற்றும் தமிழில் காட்சிகள் உண்டு. நாங்கள் சென்றது தமிழில். cassini/huygens விண்கலம் சனிக்கிரகத்திற்கு சென்றது பற்றிய வெர்ச்சுவல் டூர் பார்த்தோம். 30 மணி நேரக் காட்சி. பப்புவிற்கு ஓரளவிற்கு சுவாரசியமாக இருந்தது - ஸ்பேஸ் ஷட்டில், நிலவு/கோள்கள் சுற்றுவது முதலியன. பூமி சுற்றுவதால் இரவு பகல் வருகிறது என்று மட்டுமே அவளுக்குத் தெரியும். ஒருமுறை உனக்கு விங்ஸ் இருந்தா என்ன பண்ணுவே என்று கேட்டதற்கு 'சூரியன் கிட்டே போவேன்' என்றும் சூரியனை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வருவேன் என்றும் சொல்லியிருக்கிறாள். இங்கும் சூரியனை எதிர்பார்த்துதான் வந்தாள். ஆனால் சூரியன் பற்றி எதுவும் இல்லை.

அதன்பின்னர் 3D படக்காட்சி இருந்தது. பப்புவுக்கு மிகவும் இஷ்டமாக இருந்தது. மேலும், பார்க்க நிறைய அரங்குகள் இருந்தன. பப்புவின் வயதுக்கு அதிகம். அங்கிருந்த சறுக்குமரம், ஊஞ்சல் போன்ற விளையாட்டுச் சாதனங்களில் மிகுந்த நேரத்தைக் கழித்துவிட்டு வீடு திரும்பினோம். கிண்டி பார்க் போல கூட்டமாக இல்லாமல் வேண்டியமட்டும் விளையாட இங்கே வாய்ப்பு கிடைத்தது.

கேசினியின் சுருக்கமான காட்சியாக்கம் இங்கே (thanks to google)

இடம் : பிர்லா கோளரங்கம், அண்ணா பல்கலை அருகில், கோட்டூர்புரம்

ஷோவுக்கான கட்டணம் : ரூ 25 (4 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு)
ரூ 45 (பெரியவர்களுக்கு)

4 comments:

☀நான் ஆதவன்☀ said...

க்யா.... க்யா... க்யா.... பாஸ் இனி பப்புவ நீங்க அடிக்க கை ஓங்கினா உங்க நிலைமை அவ்வளவு தான் போல :)

//'சூரியன் கிட்டே போவேன்' என்றும் சூரியனை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வருவேன் என்றும் சொல்லியிருக்கிறாள்//

பாஸ் ஆதவனைப் பார்க்கனும்னா இங்க துபாய்ல வரும் :)

சின்ன அம்மிணி said...

டான் பப்புவுக்கு ஓஓஓ.

பிரியமுடன்...வசந்த் said...

//அடியை விட சத்தமே மிகுதியாக இருக்கும்//

நம்ம தமி சினிமா ஃபைட் மாதிரிதானே பப்புவும் யோசிப்பாங்க...

க்யா க்யா...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இங்க பையனும் டேன்ஸ் க்ளாஸ் ட்ரை செய்துகிட்டிருக்கார்..கூடவே டேய்க்வாண்டொ போகவும் ஆர்வமா இருக்கார்.. இங்க குடுத்த ஸ்பீச் பாத்தா ஓகே தானா...சேத்துடலாம் போலயே..
எனக்கு பயமெல்லாம்.. அல்ரெடி நல்லா உதை அடி எனக்கு விழுது.. இனி ப்ரபசனலாவேற வாங்கனுமான்னு தான்..

பதிவு போட்டிருக்கறது பாத்தா உங்களுக்கு அடிபலம் இல்ல போலருக்கு..