Tuesday, June 17, 2014

தந்தையர் தினப் பதிவு - லால் டிப்பாவிலிருந்து ஐவி காட்டேஜ்(ரஸ்கின் பாண்ட்) ‍வழியாக‌

இரண்டாம் முறையாக, லால் டிப்பா வரை நடைபயணம். திரும்பி வந்துக்கொண்டிருந்தோம். தேவதாரு மரங்களும், பூத்துக்குலுங்கும் செஸ்ட் நட் மரங்களும் அடர்ந்த சாலை. பள்ளத்தாக்குகளிலிருந்து, மேலெழும்பி வரும் ஈரக்காற்று மதிய வெயிலைக்கூட சிலிர்ப்பாக மாற்றியிருந்தது. இங்கொன்றும் அங்கொன்றுமாக பறவைகள் சப்தம். இதைத்தவிர, நாங்கள் நடக்கும் சப்தம் மட்டுமே. அந்த அமைதியை அவ்வப்போது உடைக்கும் பப்புவின் மெல்லிய‌ குரல்"ட்வென்டி சிக்ஸ்...ட்வென்டி செவன்". உதிர்ந்து கிடக்கும் ஜக்ரந்தா மலர்களை சேகரித்துக்கொண்டிருந்தாள், பப்பு.
ச்சார் தூகான் வந்ததும், ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளாம‌லேயே அந்த‌ கடையில் அமர்ந்தோம். தான் சேகரித்த, ஊதா வண்ண‌ மலர்களை மேஜையின் மேல் பரப்பிவிட்டு, கண்ணாடி அலமாரிக்குள்ளிருந்த சாக்லெட்டுகளை பராக்கு பார்க்க துவங்கினாள் பப்பு. அவளை பின் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தபோது, அலமாரிக்குள்ளிருந்த புத்தகங்கள் ஈர்க்க, வெளியே எடுத்து பார்த்தோம்.  எல்லாம் ரஸ்கின் பாண்டின் புத்தகங்கள்.அவர் எழுதிய புத்தகங்கள்  சில ,அவரைப் பற்றி எழுதிய புத்தகங்கள் சில!

ச்சார் தூகான் -  பெயருக்கேற்றாற்போல், நான்கே நான்கு கடைகள்தான். ஒரு நூறாண்டு வரலாறு இந்த நான்கு கடைகளுக்கு உண்டு.  மேகியும், பான் கேக்குகளும், பன் ‍ஆம்லெட்டுகளும் சுறுசுறுப்பாக பரிமாறப்படும் கடையில், புத்தகங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. சில சமயங்களில், உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் ரஸ்கினை ச்சார் தூகானில் பார்க்கலாம் என்று சொல்லியிருந்தார்கள்.

நான்காவதோ, ஐந்தாவதோ தலைமுறையாக நடத்திவரும், இந்த கடைக்காரர் ரஸ்கினுக்கு குடும்ப நண்பர். அவரது கையெழுத்திட்ட பிரதிகள் அங்கிருந்தன. ஆட்களிலில்லாத மாலைநேரத்தில், நீங்கள், ச்சார் தூகானுக்கு சென்றால், அந்த கடைக்காரர் பழங்கதைகளை உங்களுக்கு சொல்லக்கூடும். கூடவே, ஒவ்வொரு சனிக்கிழமையும் ரஸ்கின், மசூரியிலிருக்கும் கேம்ப்ரிட்ஜ் புத்தக கடைக்கு வந்து இரண்டு மணிநேரம் வாசகர்களை சந்திப்பதையும்.

மில்க் ஷேக்குக்காக,  லால் டிப்பா வரை இரண்டாம் முறையாக நடந்திருந்த பப்புவை ஏமாற்றாமல், ஆர்டர் கொடுத்துவிட்டு புத்தகத்தை பிரித்தால் விரிந்தது, இந்த பக்கம் - " The funeral". வாசித்துவிட்டு, எதிரில் இருந்த அந்த பூங்காவையே வெறித்துக் கொண்டிருந்தேன், நீண்ட நேரம். செஸ்ட்நட் மரநிழலில், உறங்கிக் கொண்டிருந்தன, நான்கைந்து நாய்கள். ச்சார் தூகானின் பிரிக்க முடியாத அங்கம், அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும் அதன் நாய்கள். சாதாரண தெருநாய்கள் என்று அவற்றை சொல்லிவிட முடியாது. உயர்வகை நாய்கள்.தங்கள் உரிமையாளர்களை நூறாண்டுக்கு முன்பே தொலைத்தவை. மெல்லிய காற்று, மேஜையில் பப்பு பரப்பியிருந்த  ஜக்கரந்தா மலர்களை கலைத்துபோட்டது.

ரஸ்கினின் பெற்றோர், இந்தியாவில் பிறந்த ஆங்கில வம்சாவளியினர். ரஸ்கினின் தந்தை, ஏதோ விடுமுறைக்காக லேண்டர் வந்தபோது, ரஸ்கினின் தாயை சிஸ்டர்ஸ் பஜாரில் சந்திக்கிறார். மலேரியா மற்றும் மற்ற நோய்களால் பாதிக்கப்பட்ட போர்வீரர்களுக்கு ஓய்வளிக்க ஏற்படுத்தப்பட்ட சிற்றூர்தான், லேண்டர். அந்த  மருத்துவமனை 1947 வரை செயல்பட்டும் வந்திருக்கிறது. அங்கு, செவிலியர்ப்பயிற்சியும் உண்டு. அதானாலேயே அந்த பகுதிக்கு 'சிஸ்டர்ஸ் பஜார்' என்றும் பெயர். அங்கு, செவிலியர் பயிற்சி படிக்க வந்தவர்  ஈடித். ஆப்ரே - ஈடித் சந்திப்பு காதலாக மலர்ந்து திருமணத்தில் முடிகிறது. அந்த தம்பதியினரின்  இரண்டாவது மகன்தான் ரஸ்கின்.

ரஸ்கினின், குழ்ந்தை பருவ நினைவுகள் ஜாம்நகரிலிருந்து தொடங்குகிறது. அங்கு அவரது தந்தை, இந்திய ராஜகுடும்ப‌ குழந்தைகளுக்கு ஆங்கில பயிற்றுநராக பணியாற்றுகிறார். இரண்டாம் உலகப்போர் சூழல், ரஸ்கினின் குடும்ப சூழலை மாற்றுகிறது. தந்தை கல்கத்தாவுக்கு செல்ல, தாயாரோடு ரஸ்கின் டேராடூனுக்கு செல்கிறார்.

சிலநாட்களிலேயே, குடும்பம் இரண்டாக‌ பிரிகிறது. ரஸ்கின், தந்தையாரோடு டெல்லிக்கு அழைத்துச்செல்லப்படுகிறார். ரஸ்கினின் இனிமையான நினைவுகள் என்றால் அதுதான். சிறிது காலமே ஆனாலும், அவரது தந்தையாரோடு அவர் தினமும் செலவழித்த நேரங்கள், பயணித்த இடங்கள், அவரது தந்தையார் அறிமுகப்படுத்திய இசை என்று ரஸ்கினின் வாழ்க்கை ஒரு அழகான குழந்தைபருவமாக நகர்கிறது.

சிம்லாவின் ,உறைவிட பள்ளியில் ரஸ்கின் சேர்ந்துவிட, தந்தையார் கல்கத்தாவுக்கு இடம் பெயர்கிறார். பெரும்பாலும், இருவருக்கும் தொடர்பு கடிதங்கள்தான். ரஸ்கின் அவ்வளவாக எழுதாவிட்டாலும், தந்தையாரி டமிருந்து அடிக்கடி கடிதங்கள் வரும் ரஸ்கினுக்கு. அந்த கடிதங்கள்தான் ரஸ்கினின் மகிழ்ச்சியான தருணங்கள். ரஸ்கினை ஒரு குழந்தையாக பார்க்காமல்,குழந்தைக்கு என்ன புரியும் என்று எண்ணாமல் கடிதம் மூலமே பேசியிருக்கிறார் அவரது தந்தை. மலேரியாவில்,ரஸ்கினின் தந்தை இறந்துவிட, இருள் சூழ்கிறது ரஸ்கினின் வாழ்க்கை.

தந்தையின் மறைவு, ரஸ்கினின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவருகிறது.தந்தை மறையும்போது,ரஸ்கினுக்கு ஒன்பது அல்லது பத்து வயதுதான். இழப்பை புரிந்துக்கொள்ளகூடிய வயதில்லையே அது!  ரஸ்கினை  தந்தையின் இறுதி சடங்கிற்கு,ரஸ்கினை அழைத்து செல்ல வேண்டும் என்று யாருக்கும் தோன்றவில்லை. 'வருடங்கள் பல சென்றாலும், இப்போதுகூட, அவரை இற‌ந்தது போல எனக்கு தோன்றவில்லை' என்கிறார், ரஸ்கின்.

தந்தையார் எழுதிய கடிதங்களும், ரஸ்கினிடம் தற்போது இல்லை. அது ஒரு சோகக்கதை. தந்தையிடமிருந்து வரும் கடிதங்கள் நின்றுவிட,பழைய கடிதங்களோடு திரிந்துக்கொண்டிருந்த ரஸ்கினிடமிருந்து அந்த கடிதங்களை வாங்கியிருக்கிறார், ஒரு தலைமையாசிரியர், அந்த வருடப்படிப்பு முடிந்ததும் வந்து வாங்கிக்கொள்ளலாம் என்ற நிபந்தனையோடு. இறுதியாக, ரஸ்கின் சென்று கேட்டபோது, அந்த தலைமையாசிரியருக்கு ரஸ்கின் எதைப்பற்றி பேசுகிறார் என்றே புரியவில்லையாம். மறதி! பத்து வயது சிறுவனுக்கு காலம் கொடுத்த கொடூரமான‌ தண்டனை!

தனது பள்ளி விடுமுறைகளை டேராடூனிலுள்ள‌ தாயாரோடு கழிக்கிறார். தாயாரோடும், தாய்வழிபாட்டியோடும்தான் அவரது விடுமுறை கழிகிறது. தாயின், இரண்டாம் கணவர் பற்றி கசப்பான எண்ணங்கள் எதுவும் இல்லை யென்றாலும், ரஸ்கினுக்கு உவப்பாக எதுவும் இல்லை.

படிப்பை முடித்து, இங்கிலாந்து சென்றாலும், ஆங்கிலேயராக அவரால் ஒன்றமுடியவில்லை. இமாலயத்தின் மலைகளின் பிள்ளை அவர். மலைகள் அவரை அழைக்கவே, திரும்பவும் மசூரிக்கு குடிபுகுந்து, எழுத்தாளராக வாழ்கிறார். எழுத்தாளராக ஆகவே, சிறுவயதிலிருந்து விரும்பியிருக்கிறார்.

எழுதவும், எழுத்தில் ஆர்வத்தையும் விதைத்தவர் அவரது தந்தையார்தான். ரஸ்கினோடு வாழ்ந்தது சிலகாலமேயானாலும், இன்றுவரை ரஸ்கினால் மாற்றிக்கொள்ள முடியாத குணநலன்களை போதித்தது அவரது தந்தைதான்.  சிறுவனாக இருந்த ரஸ்கினை, டைரி எழுத ஊக்குவித்த தந்தையால் நமக்கு கிடைத்தவைதான் ரஸ்கினின் இந்த கதையுலகம். ஆரம்பத்தில், பார்த்த நாடகங்களையும், பயணக்குறிப்புகளையும் எழுதத்தொடங்கியவர், தந்தையின் மறைவுக்குப் பின் புனைவாக எழுத ஆரம்பிக்கிறார். ஆனால், 'குழந்தைகளுக்காக, தான் எழுத ஆரம்பித்ததற்கு முக்கிய காரணம் பிரேமின் குழந்தைகளே' என்கிறார்.

 பிரேம், அவரது உதவியாளரின் உறவினர். உதவியாளர், டெல்லி சென்றுவிட, பிரேம் வேலை கேட்டு உள்ளே வருகிறார். அப்படியே, ரஸ்கினோடு தங்கிவிட, இன்று ரஸ்கின் ஒரு பெரும் குடும்பத்தின் தாத்தா.  பிரேமின் குழந்தைகளுக்கே குழந்தைகள் இன்று வந்துவிட்டாலும், ரஸ்கினின் பாடல்களும், கதைகளும் தான் அவர்களை தூங்க வைக்கின்றன. பிரேமின் குழந்தைகளை மட்டுமின்றி, நம் அனைவரின் குழந்தைகளையும்தான்!

காமிக்ஸ் என்றால் கொள்ளை விருப்பம் பப்புவுக்கு.அதை அடுத்து, அவள் விரும்பி படிப்பது ரஸ்கினின் கதைகளைதான்.அதற்காகவே, நாங்கள் மசூரியை இந்த வருடம் தேர்ந்தெடுத்தோம். அவரை சந்திக்க நாங்கள் பிரயத்தனப்படவில்லை. அவர் அறிமுகப்படுத்தியவற்றை நாங்கள் நேரில் காண ஆசைப்பட்டோம்.  ரயில்களையும், சிங்கத்தையும், கரடியையும், பூக்களையும், குருவிகளை, மலைகளையும் - முக்கியமாக மசூரியையும், வெயிலும் புழுதியும் படிந்த இந்திய தெருக்களை அவளுக்கு அறிமுகப் படுத்தியதற்கு நான் நன்றி சொல்லவிரும்புவது, ரஸ்கினுக்கும் அவரது தந்தைக்கும்தான்.

 
இதோ, அவள் , டெல்லி நிஜாமுத்தீன் ரயில் நிலையத்தில் ஓய்வு அறையில், ரஸ்கினின் புனைவுலகத்தின் பிடியில்!

தந்தையர் தினத்தன்று, இந்த தந்தையை நினைவு கூராமல் இருக்க முடியவில்லை. அப்படியே,நமது பிரியத்துக்குரிய  தாத்தாவாகிவிட்ட  ரஸ்கினையும்தான்! :-)

RUSKIN, OUR ENDURING BOND 
          by : Ganesh Saili
Pages : 144
Price : Rs 395.00

No comments: