Saturday, June 21, 2014

லேண்டர் போனா டோன்ட் மிஸ்....

லேண்டர்/Landour  - முன்குறிப்பு

எங்கள் உத்ராகாண்ட் பயணத்தில், லேண்டர் ஓர் அழகிய கனவு. ஒரு சின்ன‌
நட்சத்திரம். இந்த பயணத்தில், குறித்த திட்டங்களோ அல்லது பார்க்க வேண்டியவைகள் என்று எதுவும் எங்களிடம் இல்லை. முற்றிலும், புதிய இடத்தை, அந்த இடம் எங்களுக்கு என்ன அனுபவங்களை கொடுக்கிறதோ எதை அப்படியே எடுத்துக்கொள்ளும், எண்ணத்தில்தான் இருந்தோம்.

கடந்த டிசம்பர் மாதத்தில், சென்ற கோயில் பயணத்தில், இன்ன கோயில்களை  பார்த்தாக  வேண்டும் என்ற பட்டியல்  எங்களிடம் இருந்தது. ஆனாலும், பயணத்தை, பாதைகளிடமே முழுக்க ஒப்புக்கொடுத்துவிடுவது எங்கள் வழக்கம். இந்த முறையும் அப்படியே! மசூரியின் சாலைகள் எங்களை கைப்பிடித்து அழைத்துச்சென்றன.

பொதுவாக, மனிதர்களை எங்களுக்கு பிடிக்கும்தான் என்றாலும், அதிக மனித நடமாட்டமில்லாத இடங்களில் நேரத்தை செலவழிப்பதே பிரியம்.நாங்கள் சென்றது கோடை விடுமுறையில். மசூரி நிரம்பி வழிந்தது. சுற்றுலா கூட்டம்.

மசூரியிலிருந்து,  கொஞ்சம் மேலே, 4கிமீ தூரத்தில் உள்ளது லேண்டர். டேராடூனிலிருந்து லேண்டர் செல்ல வேண்டுமானால், பிக்சர் பேலஸ் என்ற இடத்தில் இறங்க வேண்டும்.உத்ராகாண்ட் பேருந்து நிலையத்தில், பிக்சர் பேலஸ் என்று கேட்டு டிக்கெட் வாங்க வேண்டும், டேராடூனிலிருந்து ஒன்று அல்லது ஒன்றரை மணிநேர பயணம். ஒரு மலைபாம்பு போல வளைந்து நெளிந்து செல்லும் சாலையில்கண்களை மூடிக்கொண்டு பயணித்தால், பிக்சர் பேல்ஸ்  - ஒன்றரை மணிநேரத்தில் வந்துவிடும்.

பிக்சர் பேலஸ், பேருந்து நிறுத்தத்துக்கு அருகிலேயே, ஒரு டாக்ஸி கவுண்டர் உண்டு. லேண்டர் என்று சொன்னால் போதும்.  முன்பணம் கொடுத்து டிக்கெட் எல்லாம் வாங்க வேண்டாம். 200 ரூபாய்.  டாக்ஸிக்காரர்களின், வரிசைப்படி ஒருவர் வருவார்.

பிக்சர் பேலஸிலிருந்து, சாலை குறுகல் நெடுகலாக இடித்து ஒடித்து செல்கிறது. டாக்ஸி, ஒரு ஏற்றமான சாலையில், திடீரென பிரேக் அடித்து நிற்கிறது. எங்களுக்கு, எங்கே பின்னாலேயே வழுக்கிக்கொண்டு சென்றுவிடுமோ என்பதுபோல திகில். மெதுவாக, வெளியே வந்தோம். லேண்டர், ஓர் அமைதியான, சுத்தமான, இதமான குளிர்காற்றுடனான சிற்றூர். 


அறைக்கு வந்து, சற்று ஓய்வு. வயிற்றுக்கு வேலை. பின்பு, கால்களுக்கு சக்கரம். விடுதியில், ஒரு வரைப்படத்தை கொடுத்திருந்தார்கள். நாமே, அந்த ஊரை சுற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

லேண்டர், ஒரு கன்டோன்மென்ட் பகுதி. அந்த காலத்து ஆங்கிலேய போர்வீரர்களுக்கான ஊர் போல. ஒரு சர்ச், ஒரு மருத்துவமனை,சிஸ்டர்ஸ் பஜார், ஒரு கல்லூரி, ச்சார் துகான் , பனிபடர்ந்த இமாலய மலைகளை காண ஒரு லால் டிப்பா...இவை எல்லாம் வரிசையாக இருக்கும் என்று நினைத்துவிடக்கூடாது.  வரைப்படத்தில்,  குறிக்கப்பட்டு இருந்தது.

1. ச்சார் தூகான்

லேண்டரிலிருந்து இடம் வலமாக சாலைகள் பிரியும். இதில், எப்படி நடந்தாலும், வந்து சேருமிடம், ச்சார் தூகானாக இருக்கும். நான்கு கடைகள்தான். மிஞ்சிபோனால் ஐந்து கடைகள் இருக்கும். ஒவ்வொன்றும் கடந்த நூற்றாண்டாக இயங்கி வருவன. இதில், நாங்கள் சென்றது, டிப் டாப் கடைக்கு.நான்காவது தலைமுறையாக இந்த கடையை நடத்திவருகிறாராம்.
இரண்டு மரமேஜைகள்,  பெஞ்சுகள்,சில நிழல்குடைகள்,  பூந்தொட்டிகள் மற்றும் சில நாய்கள். எதிரில் ஒரு பூங்கா.  மற்றபடி, மசூரியின் மால் ரோடு போல கூட்டம் எதுவும் இல்லை. ஒரு சில வெளிநாட்டினர். சில சுற்றுலா பயணிகள். நமது உணவு மேஜைக்கருகிலேயே, நாலைந்து நாய்கள் படுத்திருக்கும்.அப்படியே விட்டுவிடுங்கள். கண்டுக்கொள்ளவேண்டாம்.அந்த நாய்களோடு சேர்ந்ததுதான், ச்சார் தூகானும். :-)

"மேகி" என்று பப்பு கேட்டதும், "சீஸ் போட்டதா, காய்கறிகளுடனா அல்லது சாதாவா" என்று கேள்விகளை அடுக்கினார், கடைக்காரர்.  பப்பு , சாதா மேகியை வாங்கிக்கொள்ள, நான் பன் அன்ட் ஆம்லெட்டை தேர்ந்தெடுத்தேன். ஆம்லெட்டுக்கும், "சீஸ் போடுவதா வேண்டாமா", "வெங்காயமும்,மிளகாயும் போடலாமா" என்று கேள்விகளை அடுக்கினார். பெரிம்மா, சாயோடு நிறுத்திக்கொண்டார். அடுத்தடுத்த நாட்களில், நாங்கள் பான் கேக்குகளையும், ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக்குகளையும் இந்த கடையிலேயே ருசி பார்த்தோம். பப்பு, மேங்கோ மில்க் ஷேக்கை கேட்க, மாம்பழத்தை எடுத்துவர ஆளனுப்பினார் அவர். அதுதான் லேண்டர். :‍)

இங்கு, ரஸ்கினின் கையொப்பமிட்ட அவரது வாழ்க்கைச்சரிதத்தை வாங்கலாம்.பன் அன்ட் ஆம்லெட்டும், பான் கேக்குகளும், சாயும் கண்டிப்பாக உண்ண வேண்டியவை. அதோடு, உள்ளூர் தயாரிப்பான, வண்ண வண்ண பெப்பர்மின்ட்டுகளும். (அவற்றை சுவைத்ததும், எனது குழந்தைபருவ நினைவுகள் அலைமோதின.  அதன்பிறகு, காணாமல்போன அவற்றை லேண்டரில்தான் கண்டேன்.)

2. செயின்ட் பால்'ஸ் சர்ச்

ச்சார் தூகானிலேயே, டிப் டாப் கடைக்கு அடுத்ததாக,சற்று உயரத்தில், இருக்கிறது, இந்த சர்ச்.சுற்றிலும், தேவதாரு மரங்கள் சூழ, அழகான ஒரு சிறிய‌ சர்ச்.  மதியம், ஒரு மணிநேரம்  தவிர, எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்.

வாசலிலேயே, சர்ச் பற்றிய சிறுகுறிப்பு இருக்கிறது. வளைவு வளைவான வாசல்கள். உள்ளே நுழைந்ததுமே, சில்லென்று இருக்கின்றது. மரக்கதவுகளை திறந்துக்கொண்டு, உள்ளே சென்றதுமே, ஏதோ சிறுகதையில் வரும் சர்ச்சுக்குள் இருப்பதுபோல் தோன்றுகிறது.

ஓவியங்கள், தீட்டப்பட்ட கண்ணாடி ஜன்னல்கள். வரிசை, வரிசையாக மர பெஞ்சுகள். ஒவ்வொரு ஜன்னலுக்கும் ஒரு உபயதாரர் இருந்திருக்கிறார்.  உபயதாரரின் விபரங்களும், காரணங்களும் எழுதி வைத்திருக்கிறார்கள். பெரும்பாலும், ஆங்கிலேய படையணியினர் அல்லது படைத்தளபதிகள். ஒருகாலத்தில்,  ஞாயிற்றுக்கிழமைகளில், இந்த சர்ச் மிகுந்த கோலாகலமாக இருந்திருக்கும் என்ற சித்திரம் தோன்றுகிறது.

எதிரில், மெழுகுவர்த்திகள் ஏற்றுமிடம் தெரிகிறது. பப்பு, ஒரு பெஞ்சில் அமர்ந்து, சற்று நேரம் தவம் புரிகிறாள். பின்பு, மெழுகுவர்த்தி ஏற்றுமிடத்துக்கு செல்கிறாள். திரும்பி வந்து, என்னிடம் பத்து ரூபாய் கேட்கிறாள். மெழுகுவர்த்திகள் கீழேயே இருக்கின்றன. அவற்றை எடுத்து ஏற்ற, நீங்கள் பத்து ரூபாய் நன்கொடை கொடுக்கவேண்டும். சந்தோஷமாக, ஒரு பத்து ரூபாயை நீட்டுகிறேன். மெழுகுவர்த்தியை ஏற்றி சில நிமிடங்கள் கண்மூடி நிற்கிறாள்.

திரும்பி வந்தவளிடம், என்ன செய்தாய் என்றதும், 'விஷ் பண்ணேன்...அஞ்சு விஷ்" என்றாள். "என்ன விஷ்ப்பா, எனக்கும் சொல்லுப்பா" என்று நைச்சியமாக கேட்கிறேன். "அதெல்லாம் சொல்ல முடியாது, போப்பா" என்கிறாள், அதே தொனியில்.   :‍)

3. லால் டிப்பா

சார் தூகானிலிருந்து, வலது பக்கம் பிரிந்து, கிட்டதட்ட அரைமணி நேரம் நடந்தால், நாம் வந்தடைவது லால் டிப்பா.மசூரியிலேயே, உயரமான இடம் கிட்டதட்ட 7000 அடிகள் உயரம். இந்த உயரத்தை விட, இங்கு வருவதற்கான பாதைதான் அழகு. திடீர் திருப்பங்களும், சடார் சடாரென்று மாறும் மலை முகடுகளும், பள்ளத்தாக்குகளும் கொடுக்கும் அனுபவங்கள், நேராக காரில் வந்து இறங்குவதில் இருக்காது.

 இந்த வளைவு நெளிவான, நீண்ட சாலைகளின் முடுக்குகளில் அறிஞர் பெருமக்களின் வார்த்தைகளை எழுதி வைத்திருக்கிறார்கள். எல்லாமே, இயற்கையை, தனிமையை கொண்டாடி தீர்ப்பவை. ஒவ்வொரு முடுக்கிலும் இருப்பவற்றை பப்பு படித்து அவளாக அர்த்தம் கற்பித்துக்கொண்டும், சிலவற்றை கேட்டுக்கொண்டும் வந்தாள்.

 

ஓக் மரங்களும், ஓங்கி வளர்ந்த தேவதாரு மரங்களும்தான் அதிகம். குளிர்காலங்களில், இந்த தேவதாரு மரங்களில், பனி படர்ந்து தொங்கிக்கொண்டிருப்பதை போன்ற சித்திரம் மனதில் வந்து போனது.ஆனால், அதைக்காண, அந்த குளிரை நாம் தாங்க வேண்டுமே!வழிகள் முழுக்க, குருவிகளின் அழைப்புகள். ஒரு சில குரல்களை பப்பு அடையாளம் காண்கிறாள். அடர்த்தியான மரங்களும், இளந்தென்றலும், குருவிகளின் மொழியும், மலையின் மொழியான மௌனமும் இந்த சாலைப்பயணத்தை இனிய அனுபவமாக்குகின்றன.அருகிலேயே, ஒரு வீடு இருந்தால் வசிக்கலாம் என்றும் தோன்றுகிறதுதான். ஒரு சில இடங்களில், பயணிகள் இளைப்பாற மாடங்கள் கட்டி வைத்திருக்கிறார்கள். சில பள்ளிக்கூட சிறுவர்கள் உள்ளே விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

லால் டிப்பா ‍ - ஒரு  வெள்ளைமாடிகட்டிடத்தில், சிவப்பு வண்ண கோடுகள்.
மூன்றடுக்குத்தளம்.  இரண்டு கட்டிடங்கள் இதே போல் இருக்கின்றன. ஒரு வயதான பெண்மணி,நம்மை பார்த்ததும், குரல் கொடுத்து கூப்பிடுகிறார். சென்று, தலைக்கு பத்து ரூபாய் கொடுத்து டிக்கெட் பெற்றுக்கொண்டதும் உள்ளே செல்கிறோம்.

மேல்தளத்தில், ஒரு தொலைநோக்கி இருக்கிறது. இமாலய மலைத்தொடர்களை இங்கிருந்து காண்பது இதன் சிறப்பு. பெரும்பாலும், காலை நேரங்களிலும் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் மிகத் தெளிவாகவும் தெரியுமாம். நாங்கள் சென்றநேரம்,  முழுவதும் மேகம். எங்கள் காலடிகளில் மேகம் மிதப்பது போல தோன்றியது.
பப்பு, தொலைநோக்கியை அங்குமிங்கு திருப்பியவாறு இருந்தாள். அங்கிருந்தவரும், "தூரத்தில தெரியுதா? ஒரு கிராமம், ஒரு கோயில்" என்றவாறு படம் காட்டிக்கொண்டிருந்தார். நாங்கள் மும்முரமாக படமெடுத்துக்கொண்டிருந்தோம்.

நிறைய மலைகள் வெறும் மண்மேடாகவே காட்சியளித்தன. பெரும்பாலும், பனிமூடியிருக்குமாம். பள்ளத்தாக்குகளையும், மலைமுகடுகளையும், அதனினூடாக மனிதன் கடந்து சென்ற பாதையும் காணும்போது ஆச்சரியமாக இருந்தது. இரண்டாம தளத்திற்கு வந்ததும், கார்வால் பகுதியின் உடைகளை வைத்துக்கொண்டு படமெடுக்க தயாராக இருந்தார் ஒருவர். எனக்கும் பப்புவுக்கும் பெரிதாக ஆர்வமில்லை.
கீழே, அழகழகான காட்டுப்பூக்கள் கொத்துகொத்தாக மலர்ந்திருந்தன. அதோடு, கீழிருந்து மேலே வரும் மெல்லிய தென்றல். அங்கேயே சற்று நேரம் அமர்ந்திருக்கிறோம். கிட்டதட்ட ஏழெட்டு கிமீ நடந்து களைத்திருந்தன கால்கள். நேரம் போவதே தெரியாமல், அமர்ந்து பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறோம். திடீரென, மேகம் நம்மை மூடுகையில், நடக்க வேண்டிய தூரம் நினைவுக்கு வருகிறது. எழுந்தபின்னும், போகத்தோன்றாமல், நின்றபடி காற்று வாங்கிக்கொண்டிருக்கிறோம்.
 
 பப்பு, சில கற்களையும், பூக்களையும் சேகரிக்கிறாள். இறுதியாக,  லால்டிப்பாவிலிருது,மனதை பிய்த்துஎடுத்து கொண்டு வெளியே வருகிறோம். எதிரில், இருந்த கடையிலிருந்து மேகி-காகவும், பெப்சி-காகவும் ஓடி வருகிறான் பையன். அவனை தவிர்த்துவிட்டு நடக்கத்தொடங்குகிறோம், அவரவர் எண்ணங்களில் மூழ்கியபடி.

உயர்ந்து நிற்கும் இமாலய மலைகள் நமக்குள் உண்டு பண்ணும் மாற்றங்கள் அப்படி. அந்த மலை முகடுகள், உயரங்கள், இயற்கையின் அழகு நம்மை சுத்திகரிக்கின்றன போலும்!

4. எமிலிஸ் ரெஸ்டாரெண்ட்

ச்சார் தூகானிலிருந்து இடப்புறமாக நடந்தால், சில திருப்பங்களிலே, எமிலி உணவகத்தைக்காணலாம். அங்கிருந்து, மேலே நடக்கவேண்டும். ஆங்கிலேய பாணியிலான அருமையான வீடு. விஸ்தாரமான வீடு என்று ஆயா சொல்வார். அதுபோன்று, இருந்தது. பழங்காலத்து வீடு.
 
 இன்று அது விடுதியாகவும், உணவகமாகவும் செயல்பட்டு வருகிறது. உணவகம் மேலே. பால்கனி போன்று இருந்த இடத்தை தேர்வு செய்து அமர்ந்தோம். குளு குளு காற்றும், மலைமுகடுகளும், வீட்டை சுற்றியிருந்த மரங்களுமாக மனதுக்கினிமையான சூழல்.

ஒரு பெரிய அட்டையை கொடுத்து, மெனு என்றார்கள். முற்றிலும், ஆங்கிலேய மற்றும் ஆங்கிலோ இந்திய உணவுகள். பப்பு, தக்காளி சாஸுடனான பாஸ்தாவை தேர்வு செய்ய, நாங்கள் பிட்சாவை தேர்வு செய்தோம். அருந்த, சில ஸ்மூதிகள். உணவு அருமை!

லேண்டர் செல்பவர்கள் மறக்காமல் செய்ய வேண்டியது, எமிலியில் ஒரு வேளையாவது உணவு அருந்துவதுதான். இறுதியாக, ஒரு ஆப்பிள் க்ரம்பிள். பப்பு, தனக்கு ஆப்பிள் க்ரம்பிள் செய்வது எப்படியென்று தெரியும் என்றும், வீட்டில் வந்து செய்து தருவதாகவும் வாக்குகொடுத்தாள். ஆனால், அவள் அதை தொடக்கூட இல்லை. நானும் பெரிம்மாவும் ஆப்பிள் க்ரம்பிளுக்கு தகுந்த மரியாதை செய்தோம். ;)
ஆங்கிலேய படைத்தளபதி, ஒருவர் பணிஓய்வு பெற்று இங்கு வசித்திருக்கிறார். மனைவி எமிலிக்காக, மனைவியின் பெயரில் கட்டியிருக்கிறார். அந்த எமிலியின் , மார்பளவு உருவ பொம்மையை
வைத்திருக்கிறார்கள்.  அழகான பெண்ணாக இருந்திருக்கிறார், எமிலி.

வீட்டின் கலைப்பொருட்களும், கணப்படுப்பும் நம்மை கடந்தகாலத்துக்கே அழைத்துச் செல்கின்றன. ரிசப்ஷனில், ரஸ்கினின், ஒரு அழகிய கவிதை சட்டமிட்டு மாட்டியிருக்கிறார்கள்.

ரஸ்கின் பாண்ட், லேண்டரின் முதல் குடிமகனாம்.

ச்சார் தூகானில், ஒரு புத்தகம் வாங்கியிருந்தோம். அதில், ஒரு படம் இருந்தது. ரஸ்கினின் தாயும், அவரது சகோதரியும். அந்த சகோதரியின் பெயர் எமிலி. ஒருவேளை, அந்த எமிலிதான் இவரா என்றும், அவர் மாதிரிதான் இருக்கிறார் என்றும் பேசிக்கொண்டோம். சுவாரசியமாகத்தான் இருக்கிறது, உணவும், அதன் வரலாறும்!

5. கெலாக்ஸ் சர்ச் மற்றும்  மொழிகளை பயிற்றுவிக்கும் பள்ளிக்கூடம்

எமிலி உணவகத்திலிருந்து, மேலே நடந்து வந்தால், உட் ஸ்டாக் பள்ளிக்கூட வழியையும், ஒரு எஸ்டேட்டையும் கடக்க வேண்டியிருக்கும். அங்கிருந்து இன்னும் மேலே நடந்தால், ஒற்றை சக்கரத்தோடு கூடிய ஸ்கூட்டர் நின்றுக்கொண்டிருக்கும். அதையும் தாண்டி சென்றால், ஒரு அமைதியான சாலை. அந்த சாலையின், இறுதியின், ஒரு வீடு, வீட்டின் முகப்பு முழுக்க பெட்டூனியா மலர்கள். அதன் வழியே சென்றால், இடப்புறம், ஒரு சர்ச்.  மெத்தடிஸ்ட் சர்ச். பூட்டியிருந்தது.


மாலை நேரத்தில் சென்றால், உள்ளூர் பெண்கள், கையில் கம்பளிநூல்கண்டுகளை வைத்து பின்னியபடி, கதை பேசி சிரித்துக்கொண்டிருப்பார்கள். மாலை மங்கும் நேரத்தில், பின்னியபடியே, அவரவர் வீடு நோக்கி நடக்கத்துவங்குவார்கள். என்ன செய்தாலும், அவர்கள் கை மட்டும் கம்பளியும் ஊசியுமாக இருக்கிறது. ஆச்சரியம்தான்!


அவர்களை சுற்றி சென்றால், அடுத்த வாசலே, இந்திய மொழிகளை பயிற்றுவிக்கும் பள்ளிக்கூடம். அந்த காலத்தில், மிஷனரிகள், இங்கு வந்து இந்தியை கற்றுக்கொண்டு நாட்டில் பல பாகங்களுக்கு செல்வார்களாம். இன்று, அது வளர்ந்து இந்திய மொழிகளை கற்றுக்கொடுக்கும் நிறுவனமாக இருக்கிறது.

நாங்கள் சென்றபோது இருவர் பேசிக்கொண்டிருக்கும் சப்தம் கேட்டது. வெளியில், நிழல்குடையில், ஒரு திபெத்திய பெண்மணி நோட்டுப்புத்தகத்தை விரித்து வைத்துக்கொண்டு, மொபைலை தட்டிக்கொண்டிருந்தார். எனக்கு வயதாகிவிட்டால், இங்கு வந்து மொழிகளை கற்றுக்கொள்வேன் என்று சொல்லிக்கொண்டேன்.

6. சிஸ்டர்ஸ் பஜார்

லேண்டர் லேங்குவேஜ் நிறுவனத்திலிருந்து, எதிரில் நீளும் பாதையில் நடந்தால், தேவதாரு வுட்ஸ் என்றொரு வீடு வரும். நீங்கள் சப்தமாக பேசியபடி சென்றால், நாய்கள் அந்த வீட்டிலிருந்து குலைக்கும். அதைத்தாண்டி சென்றால், ஒரு அடர்ந்த வனம்.அடியும் முடியும் காணமுடியாதபடி, தேவதாரு வனம்.

அங்குதான், மழைக்காலங்களில், சிறுத்தை வந்து நாய்களை கவ்விக்கொண்டு போகும். உங்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால், மாலைவேலைகளில் சில சமயம் தென்படும். ;-) ஆனால், சிறுத்தை மிகவும் கூச்சமான விலங்கு. இரண்டு முறை சென்றும் காணமுடியவில்லை.அந்த சாலை, கைவிடப்பட்ட வீடுகளிடம் கொண்டுபோய் சேர்க்கும். என்றால், சிஸ்டர்ஸ் பஜார் வந்துவிட்டோம் என்று பொருள்.

அதன் முடுக்கில், உள்ளது, ப்ரகாஷின் கடை. அந்த இடமும், சாலையும் எனக்கு அந்தோன் செகாவின் "பள்ளத்து முடுக்கில்" கதையை நினைவுப்படுத்தின.
ப்ரகாஷின் கடை மட்டும்தான் அந்த பஜார். ஸ்ட்ராபெர்ரி, ரஸ்பெர்ரி,மல்பெர்ரி ஜாம் வகைகள், நிலக்கொட்டை மசியல் (பீநட் பட்டர்) இங்கு வாங்க வேண்டிய ஒன்று. ஒவ்வொரு வகையிலும், 200கி வாங்கிக்கொண்டோம். ஹோம்மேட்  சாக்லேட்டுகள் 200கி. பப்புவுக்கு சில லாலிபப்புகள்.

ஜாம்கள், வாங்கியது வீணல்ல என்று வீட்டுக்கு வந்ததும் தெரிந்துக்கொண்டோம். இனிப்பை கொட்டிச் செய்யாமல், பழங்களில் துண்டுகளோடு, சுவையாக இருந்தது. ப்ரகாஷ், இந்த ஜாம்களை தபாலில் அனுப்புவாரா என்று கேட்காமல் விட்டுவிட்டோமே என்று எண்ணிக்கொண்டோம்.
 


இவை எல்லாம், எந்த சுற்றுலா கையேட்டிலும் இருக்குமென்று சொல்வதிற்கில்லை. ஆனால், முற்றும் புதிய, ஒரு சிறிய ஊரை, அங்கு தங்கி அறிந்துக்கொள்ளும் முயற்சி -  எங்கள் அனுபவங்கள்.

நாங்கள் தங்கியது, ஒரு திபெத்தியர் வீட்டில். மோமோ பிரியராக இருந்தால், வகைவகையான மோமோக்களை இங்கு ருசிக்கலாம். ரசனையோடு, தங்க்கா வகை ஓவியங்களோடு கூடிய அறைகள்.

இந்த காட்டேஜின், அடுத்த முனையில்தான் ரஸ்கின் பாண்ட் வசிக்கிறார்.  அவரது எழுத்துகளைப் போலவே எளிமையான குடில். ஒரு பெயர் பலகையோ அல்லது பெரிய வாசல்கதவுகளோ இல்லை. பெரும்பாலும், காலையில் எட்டரைக்கு தூங்கிவிடுவார்.

முடிந்தால், ஒரு எட்டு போய் பார்க்கலாம். அல்லது, அவர் கதைகளூடாக சித்தரித்த ஊரையும்,  வீடுகளையும் சிறுவர் சிறுமிகளையும்,மனிதர்களையும் சந்தித்து உலாவிய திருப்தியில் பயணத்தை தொடரலாம்.

1 comment:

coolgk said...

Hi,

Nice writeup..I'm a silent reader of your blog.

After reading this post, I simply felt love on Landour, I wish to go there on my next vacation and I want my son to enjoy the place.

Expecting more articles on your trip..