Sunday, March 23, 2014

பப்புவும் அலமாரியும்

எவ்வளவுதான் ஹேர்பேண்ட், ரப்பர் பேண்ட், தலைமுடிக்கு போடும் கிளிப்புகள்  இருந்தாலும், நேரத்துக்கு ஒன்றும் கிடைக்காது. கையில் இருக்கும் கிளிப்பின் இணையை இங்கேதான் எங்கேயோ பார்த்தோமே என்று இருக்கும். ஆனால், சரியான நேரத்துக்கு அதுவும் கிடைக்காது. சோபாவிலும் புத்தக அலமாரியிலுமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். சரி, இன்றைக்கு இதற்கு ஒரு முடிவு கட்டலாம் என்று இறங்குவேன். பப்புவிடமும், சொல்லி வைப்பேன். இனிமே, ஸ்கூல்லேருந்து வந்ததும் ஒழுங்கா எல்லாத்தை ஒரு இடமா வைக்கணும். எல்லாம் ஒரு நாள் மட்டுமேதான். திரும்பவும் அதே கதை! இன்று சோபாவின் மேல் கிடந்த ஹேர்பேண்டையும், ஒற்றை கிளிப்பையும் பார்த்தவுடன் அதே வீரம் வந்தது. (அவ்வப்போது இந்த ஆவேசம் வந்தாலும் ஓரிரு நிமிடங்கள் பொறுமை காத்தால் போதும்..அந்த ஆவேசத்தை கடந்துவிடலாம். )

சரி, அதை மட்டும் தேடி தேடி ஒரு டப்பாவில் வைப்பதோடு, பப்புவின் அலமாரியையும் சேர்த்தே சுத்தம் செய்துவிடலாம் என்று திடீர் ஐடியா. ஓகே! முதலில் அந்த அலமாரியை சுத்தம் செய்யலாம். பிறகு இந்த ஹேர்பேண்டையும், கிளிப்பையும் வைத்துக்கொள்ளலாம் என்று தோன்ற, அலமாரியை டார்கெட் செய்தேன். அந்த அலமாரி, பப்பு பிறக்கும் சமயம் செய்தது. மூன்று அடுக்கு கொண்ட ஒரு சிறிய அலமாரி. கிட்டதட்ட,  பப்புவின்  தற்போதைய உயரம் இருக்கும்.  பப்பு பிறந்த சமயத்தில், ஹக்கீஸ், ஜட்டிகள் வைக்க உபயோகப்பட்டது. சற்று வளர்ந்ததும், அவளது உடைகளை அடுக்கி வைத்திருந்தேன். அவளது உடைகள் வளர்ந்து பெரிதாகி, இடம் கொள்ளாமல் போனதும், புத்தகங்கள் அந்த இடத்தை வந்தடைந்தது. கொஞ்ச காலம் கழித்து புத்தகங்களும் வேறு இடத்துக்கு மாறின. அதே காலத்தில்தான் பப்பு ரகசியங்களையும், பொக்கிஷங்களையும் காப்பாற்ற வேண்டிய கட்டத்துக்கு வந்திருந்தாள். சரி, இதுதான் சரியான சமயம் என்று அந்த அலமாரியை பப்புவின் பெயருக்கு மாற்றினேன்.

அவ்வளவுதான். அதற்குபிறகு, அந்த அலமாரியை தொடுவதற்கு கூட யாருக்கும் உரிமையில்லாமல் போயிற்று. சீவி சீவி குட்டியாகிப்போன பென்சில்கள், பலூன்கள், பிய்ந்து போன பலூன் துண்டுகள், உடைந்து போன க்ரேயான்கள், பென்சில் சீவல்கள், ஸ்கெட்ச் பேனாக்கள், கோலிகள், காந்த துண்டுகள், அவளது டப்பாக்கள்,பெரிய உண்டியல் ஒன்று, காசு வைக்க தனி கைப்பைகள்  என்று சகலமும் நோவாவின் கப்பல் போல அடைத்து வைக்கப்பட்டிருந்தன.விட்டுவிட்டேனே அதோடு, சிறு சிறு விளையாட்டுப்பொருட்களும்.

அந்த அலமாரிக்கு அருகே நின்று கொண்டு என்ன செய்வாளோ தெரியாது...உள்ளே எதையாவது வைப்பதும், திணிப்பதும், அது கீழே விழுவதும், பின்னர் திணிப்பதும்...என்று ஒரே ரகசிய பெட்டகமாக இருக்கும். ஒரு அலமாரி என்பது பப்புவின் முக்கியமான இடமாக சில நாட்களில் மாறிப்போனது. பப்புவுக்கு தான் பொக்கிஷமாக நினைக்கும், தனக்கு மட்டுமேயான ரகசியங்களை அடைகாக்கும் கூண்டை கொடுத்தது நல்லதாக போயிற்று என்று எனக்கும் ஒருகட்டத்தில் புரிந்தது. அதாவது, இந்த வீடே பப்புவுடையதாக, அவளது பொருட்களால் நிரம்பியிருந்தாலும், மற்றவர்கள் யாரும் உபயோகிக்காத ,அவளுக்கு மட்டுமேயான ஒரு இடம் ஒரு கட்டத்தில் அவளுக்கு தேவைப்படுகிறது என்பதை யதேச்சையாக நான் புரிந்துக்கொண்டது எவ்வளவு நல்லது!

"பப்பு, இன்னைக்கு உன்னோட கப்போர்டை நாம சுத்தம் செய்யலாம்ப்பா...நான் உனக்கு ஹெல்ப் பண்றேன். நீ எதெது எங்கெங்க  வைக்கலாம்னு சொல்லு." என்று லைட்டாக அடி போட்டேன். முதலில், "அதெல்லாம் நானே பார்த்துக்கறேன் " என்று முரண்டு பிடித்தது. அதனால், திட்டத்தை மாற்றினேன். முதலில் அவளது உடை வைக்கும் அலமாரியை சுத்தம் செய்யலாம் என்றேன்.  ஆடு சிக்கி விட்டது.  ;-) வீட்டுக்கு அணிந்து கொள்பவை, வெளியில் அணிந்து கொள்பவை, சிறியதாகிப்போனவை என்று பிரித்து அடுக்கினோம். அவளே மடித்து கொடுத்தாள். சொல்ல சொல்ல அடுக்கியும் வைத்தாள். இப்போது லைட்டாக ஆரம்பித்தேன். "இங்கியே எவ்வளவு தூசி இருக்கு, உன்னோட அந்த கப்போர்டையும் அடுக்கிடலாம்ப்பா...இதே மாதிரி நீயே அடுக்கு..நியூஸ் பேப்பர் மட்டும் நான் போட்டு தர்றேன்..சாப்பிட்டுட்டு பண்ணலாம்" என்றதும் முழு மனதுடன் அனுமதித்தாள்.

அவள் சாப்பிட்டுவிட்டு, நான் சாப்பிடும்போது, பாயை எடுத்து விரித்து அலமாரியிலிருந்த பொருட்களை அதில் பரப்பினாள். சாப்பிட்டு முடித்து நானும் போய் சேர்ந்துக்கொண்டேன். முதல் அடுக்கிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. பிங்க் கலர் பென் ஹோல்டர், அழுக்கேறிய ஒரு நீல டப்பா, உண்டியல், மரத்தினாலான புதிர் விளையாட்டு, ஒற்றை ஒற்றையாக ஹேர்பின்கள், ரப்பர் பேண்ட்கள், ஜிகினா பொட்டலங்கள், ஒரு ஸ்டாப்ளர், அட்டைப்புதிர் பாகங்கள், வண்டி வண்டியாய் பென்சில் சீவல்கள் விதவிதமான கலர்களில் மற்றும் சிறிய சிறிய நோட்டுகள்... இன்னபிற!  ஒவ்வொரு டப்பாவாக கவிழ்த்து பின்னர் அவற்றையே அதில் அடுக்கினோம். இதற்கு மேலும் சிறியதாக பென்சில்கள் இருக்க முடியுமா என்று வியக்க வைக்கும் அளவின் பென்சில்கள் சீவப்பட்டு இருந்தன. 

அடுத்த அடுக்கில், கோலி குண்டுகள், வளையல்கள், புதிர் பாகங்கள், மேலும் புதிர் பாகங்கள்,  செஸ் காய்கள், அதன் பெட்டி ...ஆ..இதென்ன.... பித்தளை டபரா செட் இரண்டும் இங்கிருந்தன! கும்பகோணம் பயணத்தில், ஞாபகமாக வாங்கியது. அதற்கு பிறகு அதனை காணவே இல்லை என்பது அவற்றை பார்த்தபிறகுதான் ஞாபகத்துக்கு வந்தது. டபராக்களை பார்த்தபின் ஏற்பட்ட, எனது அதிர்ச்சிக்கு பப்புவின் "ஹிஹி " என்ற சிரிப்பே பதிலாக கிடைத்தது. என்ன செய்வது. சுத்தம் செய்து பின்னர் அதே பொருட்களை அங்கேயே வைத்தோம். சுத்தம் செய்வது என்பது இங்கு அலமாரியின் அடுக்கில் 'பேப்பரை மாற்றுவது மட்டுமே'  என்று பொருள் கொள்க!

அதற்கு அடுத்த அலமாரிக்கு வந்தோம். அங்கு அடுக்கடுக்காக அட்டை டப்பாக்கள்! ஒவ்வொன்றாக எடுத்து கவிழ்த்தோம். சற்று நேரத்தில் பாய் முழுக்க வெவ்வேறு வடிவங்களில் க்ரேயான்களும், வண்ண பென்சில்களும். ஒவ்வொன்றாக பிரிக்கலாம் என்ற முடிவுக்கு இருவரும் வந்தோம். க்ரேயான்களை தனி டப்பாவிலும், பென்சில்களை தனி டப்பாவிலும் பிரித்தாகிவிட்டது. தற்போது மீதம் இருந்தவை ஸ்கெட்ச் பேனாக்கள், கற்கள், கிளிஞ்சல்கள், கலர் பேனாக்களின் மூடிகள்! ஸ்கெட்ச் பேனாக்களை பார்த்தேன்...ஓ மை காட்.அதில் பேனா முனை என்ற ஒன்று இல்லவே இல்லை. அதை எடுத்து குப்பையில் போடபோனேன்.

"ஹேய், அது எனக்கு வேணும்ப்பா..." வாங்கிக்கொண்டாள். எதற்கு என்றதற்கு, அதற்கு உள்ளிருப்பதை எடுத்து விளையாடுவாளாம்.  ஐயோ! ஸ்கெட்ச் உள்ளிருக்கும் பஞ்சு போன்ற பொருட்களையும் பார்த்தேன். ம்ம்... அவற்றையும் சேர்த்து பென்சில் டப்பாவில் 'வைத்தோம்'. அடுத்த டப்பாவை கொட்டினேன். அய்யய்யோ! புதிர் பாகங்களுக்கு கீழே ஒரே மாவாக கொட்டியது!!


எதிலிருந்து இப்படி கொட்டுகிறது? சப்பாத்தி மாவை எடுத்து வைத்திருக்கிறாளா? டப்பாவை சுத்தம் செய்துவிட்டு புதிர்களை அதில் அடுக்கி வைத்தோம். அப்போது அகப்பட்டது...இதுதான் அந்த மாவுக்கு காரணம்! சப்பாத்தி உருட்டும் கட்டை ஒன்று! கொண்டபள்ளி சொப்பு சாமான்! உளுத்து கொட்டியிருக்கிறது. அதை பற்றி கொஞ்சம் லெக்சர் பப்புவுக்கு கொடுத்து விட்டு அடுத்த டப்பாவுக்கு வருகிறேன். சிறு சிறு கற்கள்...கடலிலிருந்து மேடம் கொண்டு வந்த பொக்கிஷங்கள். சில சிப்பிகளில் வண்ண‌ங்கள் அடிக்கப்பட்டிருந்தன. சில கிளிஞ்சல்களில் நூல் கோர்க்கப்பட்டு கழுத்தில் போட்டுக்கொள்ளும் மாலை போன்று இருந்தது. உடைந்த பறவை, எங்கோ குடித்த ஜூசின் மேல் செருகியிருந்த சின்னஞ்சிறு குடை!   வேறு வழியின்றி எல்லாவற்றையும் எடுத்து வைத்தேன்.

இதையெல்லாம் அடுக்கி வைத்துவிட்டு, அலமாரியை பார்த்தேன்.
இந்த புதிர்பாகங்களை எல்லாம் எதற்கு எடுத்து வைத்தோமென்றே தெரியவில்லை. சிலதெல்லாம், பப்பு இரண்டரை வயதில் வார்த்தைகளை கற்றுக்கொள்ள ப்ளென்ட் கார்ட்ஸ் போன்றவை. அவைகளில் சில உடைந்தும் இருந்தன. எல்லா புதிர்களும் முழுமையானவையாகவும் இல்லை. இவற்றை வைத்து அவள் விளையாடுகிறாள் என்றும் சொல்லமுடியாது. ஆனால், தூக்கிப்போட மனமில்லை.

சொல்லப்போனால், எல்லாம் குப்பையே! ஆனாலும், அவரவர் குப்பை அவரவருக்கு முக்கியம்! ஊரில், பெரிய ஹோல்ட் ஆலிலும், ட்ரங்கு பெட்டியிலும் நான் சேமித்து வைத்திருக்கும் குப்பைகள் போலவே!அது ஏன்,  நமது குப்பை நமக்கு பொக்கிஷமாகவும்  அடுத்தவரின் பொக்கிஷங்கள் நமக்கு குப்பையாகவும் தோன்றுகிறது?!

இதையெல்லாம் முடித்து, பாயை எடுத்து தட்டுகிறேன்... அதிலிருந்து சிதறும் குப்பைகளையும் பொறுக்குகிறாள் பப்பு. காலியான பவுடர் டப்பா எதற்கு என்று எடுத்து வைக்கவில்லை. அது அவளது மைக்காம்! ஆமாம், பவுடர் டப்பாவின் கழுத்தில் அலங்காரங்கள் செய்து வைத்திருக்கிறாள்.  என்ன சொல்வது! 

நமக்கு அல்பமாக தோன்றும் ஒன்று பப்புவின் கண்களில் எவ்வளவு முக்கியமாக இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.  இறுதியாக, தூசியை மட்டும் தட்டிவிட்டு பாயை அலச போடுகிறேன். அதற்குள் , அந்த இடத்தை பெருக்கி வைத்திருக்கிறாள் பப்பு. அப்போதுதான் கவனித்தேன், அந்த அலமாரியில், அவளது ஹேர்பேன்டுகளையும், பின்களையும் வைக்கவில்லை என்பதையும் அதில் வைக்க அங்கு  இடமேயில்லை என்பதையும்!

3 comments:

கண்மணி/kanmani said...

:) :):)

ராமலக்ஷ்மி said...

சுவாரஸ்யம்:)!

Dhiyana said...

முல்லை, உங்கள் வீட்டிலுள்ள அலமாரியைப் போல் எங்கள் வீட்டிலும் ஒன்று உள்ளது. :‍))