'அதை செய்யாதே, இதை செய்யாதே. செய்யக்கூடாது" என்றெல்லாம் சொன்னால் நானே
கேட்டதில்லை. இதில், பப்பு மட்டும் எப்படி கேட்பாள். அப்படியே சொன்னாலும்,
பூமராங்காய் திரும்பி வரும் 1008 கேள்விகளுக்கு பதில் சொல்லும் பொறுப்பை
யார் சுமப்பது! அந்த மாதிரி சமயங்களில், அவளிடம் சிலபல "பகீர் கதைகளை"
எடுத்து விடுவதுண்டு.
பபுள்கம் சாப்பிட்டு, பெரிய முட்டை விட்டு,
அது தொண்டையில் மாட்டிக்கொண்ட சிறுமியின் கதை, பெரியவங்க இல்லாதப்போ
கிச்சனில் நுழைந்து குறும்பு செய்த சிறுவனை போலீஸ் பிடித்த கதை, ஊற வைத்த
அரிசி சாப்பிடும் பழக்கம் கொண்ட ஒரு பெண்ணுக்கு வயிற்றில் ஆபரேஷன் செய்த
கதை, சாப்பிடும்போது பேசிக்கொண்டே இருந்த சிறுமிக்கு காற்று போகும்
பாதையில்உணவு மாட்டிக்கொண்ட கதை என்று திகில் கதைகள் பல ரூபத்தில்
வரும். எனக்குத்தான் கதைகளே தவிர, பப்புவை பொறுத்த வரை, இவையெல்லாம்
எப்போதோ யாருக்கோ நடந்த சம்பவங்கள்!!
இப்படி போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில், என்னையே திடுக்கிட வைத்தது ஒரு 'சம்பவக்கதை'.
வாஷ்பேசினில்,
முகம் கழுவிக்கொண்டிருந்த பப்புவிடம், 'வாஷ்பேசின் பக்கத்துலே, எப்பவுமே
ஃபேஷ் வாஷ் இருக்கும்னு நினைச்சுக்க கூடாது பப்பு, அது ஹேண்ட் வாஷா கூட
இருக்கும். நம்ம வீட்டுலன்னு இல்ல, எங்க போனாலும், நீ இத நோட் பண்ணனும்'
என்று சொல்லி வைத்தேன். முகம் கழுவிக்கொண்டு, தலை பின்னிக்கொள்ள வந்த பப்பு
லைட்டாக ஆரம்பித்தாள்.
"ஆமா, ஆச்சி, ஒரு பொண்ணு வாஷ்பேனில் முகம்
கழுவ போச்சு. அங்க இருந்த பாட்டிலை, எடுத்து பார்க்காம, முகத்துல போட்டு
முகம் கழுவுச்சு. தேச்சப்பறம்தான் அதுக்கு தெரியுது, அது சோப்
இல்லன்னு...அது என்னது? அவங்க அம்மா சர்ஃப் எக்சலை வைச்சிருக்காங்க..அதை
எடுத்து போட்டுக்கிச்சு. அதுக்கு எப்படி இருக்கும்? ஒரே அழுகை!வேணுமா?
(தேவையா? என்பதன் பொருள்)"
அவ்வ்வ்வ்வ்!!
இந்த பொண்ணு நெஜமாத்தான் சொல்லுதா இல்ல என்னை கிண்டல் பண்ணுதா?
#இனிமே_ஏதாவது_சம்பவத்தை_சொல்லுவியா?_சொல்லுவியா? ;-)
காலையில் அரக்க பரக்க எழுப்பினாலும், ஆற அமர, ஏழு மணிக்கு குறைந்து எழவே
மாட்டாள். அப்படியே எழுந்தாலும், அரைக்கண்ணை மட்டும் திறந்து, 'நைட்லாம்
நான் தூங்கவே இல்லப்பா. இப்போதான் தூங்கவே ஆரமிச்சேன்' என்று யோசிக்காமல்
சொல்லுவாள்.
பல் துலக்க நிற்கும்போதுதான், 'ஆச்சி எனக்கு ஒரு பயங்கரமான
கனவு. என்னா தெரியுமா' என்று ஆரம்பிக்கும்போதே, எனக்கு பிபி ஏறும். ஈவு
இரக்கம் பார்க்காமல், 'கட் கட்' சொன்னால்தான், நேரத்துக்கு கிளம்ப
முடியும். ('இதெல்லாம் வழியில சொல்லு. இப்போ என்ன பண்ணனுமோ அதை பண்ணு')
இன்றும், அப்படியான ஒரு நாள்.
'ஒரு
பயங்கரமான கனவுப்பா' என்று ஆரம்பித்தாள். நேற்று இரவு, நாய்கள் குரைத்த
சத்தத்தில் நடு இரவில் விழித்துக்கொண்டவள் கொஞ்ச நேரம் தூங்கவில்லை. 'தட்டி
குடு,ஆச்சி' என்று சொன்னபடி புரண்டு கொண்டிருந்தாள். (நாமே தட்டி
கொடுத்தால், 'என்னை என்ன, பேபின்னு நினைச்சியா' என்று சண்டைக்கு
வருவாள்!!ஸ்ப்ப்பா!)
தூக்க கலக்கத்தில், வழக்கம்போல, 'தவுஸன்ட்
ஆடுங்க வேலியை தாண்டி குதிக்குமே, அந்த ஆடுங்களை ஒன்னொன்னா கவுண்ட்
பண்ணு' என்று சொல்லிவிட்டு திரும்பி தூங்கிவிட்டேன்.
பேய்
கனவைத்தான், அவ்வப்போது, பயங்கரமான கனவு என்பாள்.சரி, நாய்கள் குரைத்ததால்
விழிக்கவில்லை போல, பேய் கனவால்தான் பயந்து விழித்திருக்கிறாள்... கேட்போம்
என்று லேசாக அசந்துவிட்டேன்.
"கொடி ஏத்தணும். ஓகே! அது ரொம்ப
ஹைட். அது வரைக்கும் ஏத்தணும். அதை நான் தான் ஏத்தணும்னு பிரபா ஆண்ட்டி
சொல்லிட்டாங்க. மாஸ்டருக்கு கூட எப்படி ஏத்தணும்னு தெரியல. நாங்க ஏத்த ட்ரை
பண்ணிக்கிட்டிருக்கும் போது ஒரு பேய் வந்துடுச்சு." - பப்பு
.....
(இப்படி கேப் விட்டிருக்கும்போதே சுதாரிச்சு இருக்கணும்!)
"ம்ம்ம்" - மீ
"வந்து, என்னை எழுப்பி விட்டுடுச்சு அந்த பேய்." - பப்பு
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
#நானாதான்_வாலண்டியரா_வந்து_ஏமாந்துட்டேனா?!

No comments:
Post a Comment