Monday, January 13, 2014

கிபி 2013 டூ கிபி 1000 - II


 தாராசுரத்துக்கு வழிகேட்டுக்கொண்டோம். 3 கிமீ தானாம்.  மிகவும் குறுகலான சாலைகள். ஒரு பஸ் சென்றால் எதிரில் இன்னொரு வாகனம் வருவது கடினம். பழையாறை,பட்டீஸ்வரம் செல்லும் பேருந்து எங்கள் முன்னால்.  இந்த ஊரின் பெயர்களை  நாவல்களில் படித்த நினைவு.  குறுகிய சாலை நெளிந்து வளைந்து சென்றது. சுற்றிலும் வீடுகள் மற்றும் கடைகள். இதற்குள்தானா அந்த புகழ் பெற்ற கோயில் இருக்கிறது என்று ஒருநிமிடம் சந்தேகமும் எட்டிப்பார்த்தது.ஏனெனில், கண்ணுக்கெட்டிய தூரம் வரை மலையோ அல்லது கற்களோ கிடையாது. எங்கிருந்து கற்கள் கொண்டு வந்து கோயில்களை அமைத்திருப்பார்கள்? கும்பகோணம், அதன் சுற்றுவட்டார கோயில்களை பார்க்கும்போது இந்த எண்ணம் எழாமலில்லை.

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், யுனெஸ்கோ பராமரிக்கும் சின்னங்களுள் ஒன்று. கோயில் கோபுரங்களை வர்ணமடித்து இருக்க மாட்டார்கள் என்பதே ஆறுதல். பச்சையும், சிவப்புமாக கோயில் கோபுரங்களில் சிற்பங்களை பார்த்தால் அவை கற்சிற்பங்கள் என்ற எண்ணமே வருவதில்லை. ஏதோ பிளாஸ்டிக்கினால் அல்லது ப்லாஸ்டர் ஆஃப் பாரிசினால் செய்த உருவமாக தோற்றமளிக்கிறது.

கோயில் மதில் தெரிந்தது. மதில் மேல் நந்திகள் நமக்காக காத்திருக்கின்றன.  யுனெஸ்கோ பராமரிப்பின் அடையாளத்தை, பசும்புல் மெத்தை பறை சாற்றியது. நுழைவு சீட்டு அல்லது காமிராவுக்கு என்று டிக்கெட் எதுவும் வாங்க வேண்டியதில்லை.  செருப்புகளை விட்டுவிட்டு படிகளில் இறங்கினோம்.  தரையில் இருந்து இறங்கிதான் செல்ல வேண்டியிருக்கிறது. இறங்கியதும், ஒரு சிறு மண்டபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நந்தி.  உள்ளே நுழைந்தோம். கூட்டம் அதிகமில்லை.இடப்பக்கம் திரும்பி நடக்கும்போதே நம்மை ஈர்க்கிறது - தேரை இழுக்கும் யானையும், குதிரையும் மற்றும் தேரின் சக்கரமும். இந்த கோயிலின்  முன் மண்டப அமைப்பே ஒரு பெரிய தேரை குதிரைகளும், யானையும் இழுப்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தேர் போன்ற அமைப்பை கொண்ட கோயில் ஹம்பியில் இருப்பதாக இணையத்தில் வாசித்திருக்கிறேன். அதே போல், கோனார்க்கின் சூரிய கோயிலும். 

தேரை இழுக்கும் பாவனையில், யானையின் முன்னங்கால் சற்று மடக்கியிருப்பது போல வடிவமைத்திருப்பது சிற்பியின் அழகான கற்பனை. சக்கரத்தில் செதுக்கப்பட்டிருக்கும் அலங்காரங்களை சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தோம். மண்டபத்தின் படிகளிலும் கூட ஆடலும் பாடலுமே!

இந்த பயணத்தின்போது, பப்புவுக்கு திடீரென்று குதிரை வாங்கும் ஆசை வந்துவிட்டிருந்தது.  அவள் இந்த கல் குதிரையை கவனித்துக்கொண்டிருந்ததோடு, அதில் எப்படியாவது ஏறிவிட முடியுமா என்று பார்த்த படியிருந்தாள்.பார்த்து ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும்,ஒவ்வொருவரும் அப்படி ஏறி அமர ஆசைப்பட்டால் இவ்வளவு நாட்கள் இந்த யானையும் குதிரையும் இருந்திருக்குமா என்றும் ஒரு குட்டி லெக்சர் கொடுத்தேன். 

யானையின் அணிகலன்களையும், சக்கரத்தின் நுணுக்கமான வேலைப்பாடுகளையும் ரசித்தோம். அங்கேயே போட்டோக்களையும் எடுத்துக்கொண்டோம். படிகளின் கைப்பிடியாக‌ யானையின் தும்பிக்கை! எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன், வாழ்ந்து பெயர் தெரியாமல் மறைந்துபோன அந்த சிற்பிகளை நினைத்துக்கொண்டோம். மேலே மண்டபத்துக்கு ஏறிச் சென்று தூண்களை பார்வையிட்டோம். ஒவ்வொரு தூணிலும் அவ்வளவு நுணுக்கமான கலைநயமிக்க சிற்பங்கள்! ஒவ்வொன்றிற்கும் ஒரு கதை இருக்க வேண்டும். அதேபோல்,  எல்லா வெளிப்புற தூண்களும்  யாளியின் மீது செதுக்கப்பட்டிருக்கிறது.

அநேகமாக, இந்த சிற்பங்கள் எல்லாம் நாயன்மார்களின் கதையாக இருக்கலாம். நமக்குத்தான் ஒன்றிரண்டை தவிர மீதி எதுவும் தெரியாது என்று பேசிக்கொண்டிருந்தோம். அதற்குள், அர்ச்சகர் "வர்றீங்களா" என்று கேட்டு அழைத்துச் சென்றார். கோயிலின் வரலாறை சுருக்கமாக சொல்லி முடித்தார். 'இரண்டாம் ராசராசனால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கோயில் அதன் சிற்பக்கலைக்காகவே மிகவும் பெயர்பெற்றது. ஐராவதம் என்பது இந்திரனின் வெள்ளை யானை. அந்த யானை இங்கு சிவனை வழிபட்டது என்பது ஐதீகம். கோயில் முழுக்கவே அற்புதமான சிற்பங்கள். ஒரு இன்சிலும் செதுக்கியிருப்பார்கள். அதே போல், பெரிதாகவும் செதுக்கியிருப்பார்கள்' என்று கூறி,  தூணில் ஒரு இன்ச் பிள்ளையாரைக் காட்டினார். கையை வைத்து பார்க்கவும் சொன்னார். உள்ளிருந்து கடைந்தெடுத்தது தெரிந்தது.

அடுத்து, உள்ளே சென்றோம். அங்கு படமெதுவும் எடுக்கக் கூடாது. பார்த்துவிட்டு வெளியே வந்தோம். ஒரு ஐயப்ப பக்தர் கூட்டம் வந்திருந்தது. யானை மீதேறி படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். பப்புவுக்கு யானை மீது அமர ஆசை வந்துவிட்டது.ஏறி அமர்ந்துகொண்டாள். படமெடுக்கவும் ஆணையிட்டாள்.பின்னர். கோயிலின் சுவர்களில் இருக்கும் சிற்பங்களை பார்த்துக்கொண்டே நடந்தோம். மேலே மட்டுமில்லை, சுவரின் கீழே இருக்கும் இடத்தைக்கூட விடவில்லை. சொல்லப்போனால், அங்குதான் மிக அழகான சிற்பங்கள் இருக்கின்றன.வெளிச்சுற்று மண்டபத்தில் முழுக்க தூண்கள். மேற்கூரைகளை கூட விடவில்லை. எல்லா இடத்திலும் சிற்பங்கள். பப்புவுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் நல்ல அனுபவமாக இருந்தது.  இது என்ன உருவமாக இருக்கும் என்றும் யாளியின் தும்பிக்கை என்றும் சிற்பங்களில் இருக்கும் மக்கள் கையிலிருக்கும் உபகரணங்களை கண்டுபிடிப்பதிலும் நேரத்தை கழித்தோம். 'அங்கே எல்லாரும் சண்டைக்கு ப்ராக்டீஸ் பண்றாங்க' என்றும் 'யானை மேல சிங்கம் உட்கார்ந்து இருக்கு' என்றும் ஆராய்ந்தாள். நெடுநேரம் யானையின் மீது சிங்கத்தின் தலை எப்படி இருக்க முடியும் என்று தடவி பார்த்துக்கொண்டிருந்தாள்.  இந்த மண்டபம் முடியும் இடத்தில் கல்லாலான ஜன்னல்கள்.சிற்பிகளின் திறமையை எண்ணி வியந்து போனோம்!


அங்கிருந்து, மீண்டும் எங்களின் "ஐ ஸ்பை " தொடங்கியது. ஒவ்வொருவரும் மற்றவரை அழைத்து அவரவர் பார்த்ததை கூற முற்பட்டோம். இறுதியாக, பப்புவையே தொடர்வது என்று முடிவாயிற்று. ஒரு தலை, நான்கு பக்கங்களிலும் நடன போஸ் கொடுத்த மங்கையை கண்டுபிடித்தோம். 
 
திடீரென்று, கோலாட்டம் ஆடும் சப்தம் வர‌ கோலாட்டம் ஆடிக்கொண்டிருந்த  மங்கையரை  வந்தடைந்தோம். அதன் தொடர்ச்சியான, இன்னொரு மண்டபத்துக்குச் சென்றோம்.   அங்குதான் 108 சிறு சிற்பங்கள் சுவரில் கடைந்தெடுக்கப்பட்டுள்ளன. அவர்களெல்லாம் சைவ சமய முனிவர்களாக இருக்கலாம்.

அந்த முனிவர்களோடு பப்பு கொஞ்சம் நேரம் செலவிட்டாள். எங்களுக்கு 108 ஆக எண்ணிக்கையில் இருந்தது பப்புவுக்கு மட்டும் 105 ஆக மாறிவிட்டது.அவர்களது இடையிலிருக்கும் உடை கூட மிக அருமையாக செதுக்கியிருக்கிறார்கள். தூரத்திலிருந்து பார்த்தால் நிஜமாகவே உடை உடுத்தியிருப்பது போல!  


அடுத்ததாக, ஒரே சிற்பத்தில் யானையும், காளையும் இருப்பதை கண்டுபிடித்தோம். அந்த உற்சாகத்தில் நாங்கள் கத்தியவுடன் அருகிலிருந்த இன்னும் சிலரும் யானையையும் காளையும் கண்டு களித்தனர்.
அடுத்ததாக, தொல்லியல் துறையின் சிறு அருங்காட்சியகம். கோயிலின் உதிரி/உடைந்த‌ சிற்பங்களை எடுத்து வைத்திருக்கிறார்கள். ஒருவர், அனைவருக்கும் விவரிக்கிறார். அந்த மண்டபத்தின் மேலே பனிரெண்டு ராசிகளுக்குமான சிற்பங்கள் வரைந்திருப்பதை காண்பிக்கிறார். அதோடு, நாயக்கர் காலத்திய சுவர் ஓவியங்களையும். சிற்பங்களை காட்டி சிவன், விஷ்ணு என்று புராண கதைகளை சொன்னதால் மனதில் எதுவும் பதியவில்லை. அந்த காலத்து சந்தன கட்டையை (கல்லாலானது) காண்பித்தார். எவ்வளவு பெரிது!! 

இறுதியாக‌, ஒரு வள்ளி தெய்வானை முருகன் சிலையை காண்பித்தார். அதில் தெய்வானையின் உடையலங்காரத்தையும், வள்ளியின் உடையலங்காரத்தையும் விவரித்துச் சொன்னார். இருவரும் வேறு வேறு வர்க்க பெண்கள். வள்ளியின் ஆடை அணிகலன்கள் எளிமையாக இருப்பதாக சிற்பிகள் காண்பித்திருக்கின்றனர். அதோடு, வள்ளியின் மூக்கில்,காதில் அணிகலன் அணிய துவாரங்களையும் கொடுத்திருக்கிறார்கள். பப்புவுக்கு அது மிகவும் ஆச்சரியம்!


அந்த மண்டபத்திலேயே, சோழர்களின் வரலாறும்,தலைமுறை தகவல்களும் கிடைக்கிறது. அதோடு, அந்த கோயிலில் நாம் தவறவிடக்கூடாத சிற்பங்களையும் போட்டோ எடுத்து வைத்திருக்கிறார்கள்.  அந்த சிற்பங்களை தவறாமல் பார்க்க சொன்னதோடு, அவரே இன்னொரு தகவலையும் கூறினார். ஒரு இன்ச் பிள்ளையாரோடு, ஒரு இன்ச் நடராசர், சிவன் எல்லாம் இருப்பதாக.

போட்டோவில், குறிப்பிட்டிருந்த சிற்பங்களில், இரண்டு சிற்பங்களை நாங்கள் கவனிக்காமல் விட்டிருந்தோம். ஒன்று ,வளையமாக‌ பெண்கள் இருவர், மாடு ஒன்று தானாக பாலை அபிஷேகம் செய்வது. தேடிப்பார்த்தும் கிடைக்காமல், அவரையே தேடிச் சென்றோம். அந்த மண்டபத்தின் கீழ் வரிசையிலேயே இருந்தது. தவறவிடக்கூடிய வாய்ப்புகள் அதிகம்! எங்களைத் தொடர்ந்து பின்னாலேயே இன்னும் சிலர் வர, மற்ற சிற்பங்களை பற்றியும் எங்களிடம் கேட்டனர். அவர்களுக்குச் சொல்லிவிட்டு மற்றொரு சிற்பத்தை காண சென்றோம். ஒரு வயதான தம்பதி, எங்களோடு வந்து மற்ற சிற்பங்களை காண்பிக்குமாறு கேட்டனர். கேரளாவிலிருந்து வந்திருக்கிறார்களாம். "நம்ம  பீபிள் அப்பவே இப்படி இருந்திருக்காங்க" என்று அவர்களுக்குள்
பேசிக்கொண்டனர்.

கோயிலினுள் ஒரு சிறு மதில் போல கட்டி அதிலும் சிறு நந்திகளை வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த நந்திகளின் தலைகள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன.


போட்டோக்கள் எடுத்துக்கொண்ட பின்னர் வெளியில் வந்தோம். செருப்புகளை அணிந்துக்கொண்டு கோயில் மதில் மீதிருக்கும் நந்திகளை திரும்பி பார்த்தபடி நடந்தோம். 'பக்கத்துலதான் இருக்கு, ஹேண்ட்லூம் சாரி, சில்க் சாரி இருக்கு. டயம் இருந்தா வந்து பாருங்க‌' என்றார் ஒருவர். கார்டு இருந்தா தாங்க, வரோம் என்று அவரிடம் வாங்கிக்கொண்டோம். தாராசுரத்தின் தேர் அங்கேயே நிற்க எங்கள் தேரில் ஏறி  பட்டீஸ்வரம் செல்ல  ஆயத்தமானோம்.

  

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் பல அறியாத தகவல்கள்... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...