Tuesday, January 14, 2014

கிபி 2013 டூ கிபி 1000 - III


 அடுத்ததாக, சென்று இறங்கிய இடம் பட்டீஸ்வரம். தாராசுரத்திலிருந்து வெகு அருகில் உள்ளது. கோயிலின் பெயர் தேனுபுரீஸ்வரர் கோயில்.  பாடல் பெற்ற தலம் என்பதால் நண்பர் லிஸ்டில் கொடுத்திருந்தார் போலும். மிகப் பழமையான கோயில். கோயிலின் முன்கோபுரம் வர்ண பூச்சுக்களுடன் இருந்ததால் பழமை தெரியவில்லை. கோயிலின் உள்ளிருந்து ஒரு குட்டி பெண்ணின் குரல் மைக்கில் ஒலித்தது.  ‍ "எம்பாவாய் " என்று ஒப்புவித்துக் கொண்டிருந்தாள்.

வாயிலிருந்து சற்று தள்ளி இட‌ப்பக்கத்தில் ஒரு பெரிய நந்தி. உள்ளே நுழைந்ததும், நந்தி அருகில் வயதான ஆண்களும் பெண்களுமாய் உள்ளே வருவோரிடம் காசு கேட்டக்கொண்டிருந்தனர். வலப்பக்கத்தில் ஒரு மண்டபம். திருப்பாவை  ஒப்புவிக்கும் போட்டி போலிருக்கிறது. கீழே சிறார்களும் ஆசிரியர்களும் அமர்ந்திருக்க மேடையில்தான் அந்த குட்டிப் பெண் திருப்பாவை சொல்லிக்கொண்டிருந்தாள். மேடையில் இருந்த பெரியவர்கள் கையிலிருந்த புத்தகத்தில் மூழ்கி இருந்தனர். வரிக்கு வரி சரிபார்ப்பார்கள் போல. அடுத்த நுழைவாயிலில் நுழைந்து உள்ளே சென்றோம்.

கூட்டமாக இருந்ததால், சாமியை விட்டுட்டு, யாளிகளை சுற்றி கோயிலை வலம் வந்தோம். 
 
திரும்பவும் முன்வாயிலை வந்தடையும் இடத்தில் இன்னொரு குட்டி நந்தி இருந்தது. அதற்குள் கூட்டம் காணாமல் போயிருந்தது. உள்ளே சென்றோம்.பப்பு தூண்களை ஆராய தொடங்கியிருந்தாள். கருவறையில் இருந்த அர்ச்சகர் , மிகவும் இளையவராக இருந்தார்  கோயிலை பற்றி  கேட்டோம்.


சுட்டெரிக்கும் வெயிலில் வந்த திருஞான சம்பந்தருக்கு இறைவன் முத்துபந்தல் அனுப்பி அவருக்கு  அருள் பாலித்த கோயிலாம். அப்படின்னா என்ற பப்புவின் கேள்விக்கு முத்து பந்தல்ன்னா அதோ அது மாதிரி இருக்கும் என்று ஓரமாக இருந்த பல்லக்கை காட்டினார். பல்லக்கில் வந்த திருஞானசம்பந்தர் காணும் விதமாக நந்தியை விலகச் சொன்னாராம்.அதனால்தான் இந்த கோயிலில் நந்திகள் எல்லாம் நேராக இல்லாமல் சற்று விலகியிருப்பதாக முடித்தார். இந்த கோயிலைக்கட்டிய வரலாறு பற்றி அவருக்கு தெரியவில்லை.அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.

புராணக்கதைகளை  சொல்லுவது போல  கொஞ்சம் வரலாற்றையும் சொல்லலாம். கோயில்களில் பெரும்பாலும் புராணங்களைத்தான் சொல்கிறார்கள். யார் கட்டியது, நூற்றாண்டு, வழிபட்ட மன்னர்கள் பற்றியும் தகவல்கள் சொன்னால் சுவாரசியமாக இருக்கும்.

 தூண்களில் பெரிதாக எதுவும் பப்புவை ஈர்க்கவில்லை. ஆனால், கோயிலில் இருந்த ஒரு அக்காவை பார்த்து பெரிதும் ஈர்க்கப்பட்டு அவரை சுற்றி சுற்றி வந்தாள். அவள் சுட்டிக்காட்டிய பின்னர், நானும் அந்த அக்காவின் அழகில் மயங்கி விட்டேன். அவரது கையில் ஒரு கையை யாரோ சேதப்படுத்தியிருந்தார்கள். 


அவரது கொண்டை, ஆடை, அணிகலன்களை ஆராய்ந்த பிறகு, அவரது கையில் இருக்கும் இசைக்கருவியின் பக்கம் கவனம் திரும்பியது. இப்போது வழக்கொழிந்து போன அந்த இசைக்கருவி என்னவாக இருக்கும் என்று பேசியபடி வெளியில் வந்தோம்.

இப்போது ஒரு சிறுவனின் குரலில் திருப்பாவை. நடுவில் ஒரு குரல் கேட்க, கொஞ்சம் இடைவெளிவிட்டு திரும்பவும் தொடங்கியது. முடியும்/ஆரம்பிக்கும் குறளை சொல்லு என்பது போல இதற்கும் தேர்வு போல!

அடுத்து எங்கு போகலாம் என்று திட்டம் எதுவும் இல்லாததால், அருகில் எந்த கோயில் இருக்கிறது என்று பார்த்த போது தஞ்சாவூர் 20 கிமீ என்ற தகவல் கிடைத்தது.

அடுத்த ஸ்டாப் தஞ்சாவூர். 

நேரம் கிட்டதட்ட ஒன்றரை. உயர்ந்து நின்ற கோயிலின் கோபுரம் எங்களை ஈர்த்தது. ஆனால், வயிற்றின் இருந்த ஒரு  நெருப்பு எரிந்துக்கொண்டிருக்கிறதே! ;‍) பசியை போக்க நல்ல உணவுவிடுதியை தேடினோம். ஞானம் ஒன்றொரு ஹோட்டல் இருந்தது. வழக்கம் போல பப்பு ஃப்ரெஞ்ச் ஃப்ரைசும், ஃப்ரெஷ் லைம் சோடாவும் அருந்த நாங்கள் ஃபுல் மீல்ஸ். பசியை போக்கிக்கொண்டு தஞ்சாவூர் பெரிய கோவிலை அடைந்தோம்.

கோயிலை சுற்றியுள்ள அகழியைப் பற்றி இருநாட்களுக்கு முன்னர்தான் செய்தித்தாளில் வாசித்திருந்தோம். பெரிய பெரிய மரங்களாக அடர்ந்திருந்தன.நுழைவு கோபுரத்தருகிலேயே விளக்கப்படங்கள் வைத்திருக்கிறார்கள். கோயிலின் வரைபடத்தையும் கொடுத்திருக்கிறார்கள்.நான்கு மணிக்குதான் உள்ளே திறப்பார்களாம்.  எதற்கு இந்த சம்பிரதாயம் என்று தெரியவில்லை.

உள்ளே திறந்திருந்தாலும் கட்டிடக்கலையை பார்க்க வந்திருக்கும் எங்களுக்கு கோயிலை சுற்றிபார்க்க என்ன இருக்கிறது. மெதுவாக நடக்கத் தொடங்கினோம். வெயில்!!  ஓடிப்போய், கோபுரத்தின் நிழல் விழுகிறதா என்று பார்த்தோம். விழுகிறதே! பள்ளிக்கூட பாட புத்தகங்களில் கூட நிழல் விழாது என்று படித்த நினைவு!! :‍)

நந்தி!! ஒரே கல்லாலான நந்தி! ஆனால், பக்தகோடிகள் நந்தியை பிசியாக வைத்திருந்தார்கள். அருகில் செல்ல முடியவில்லை. கோயிலை வலம் வரத் தொடங்கினோம். கோயில்தான் எவ்வளவு பெரிய வளாகம்!

சோழர்களின் கட்டிடக்கலையை புரிந்துக்கொள்ள அவர்களுக்கு முன்னும் பின்னுமான கட்டிடக்கலையை அறிந்துக்கொண்டால் நன்று. பல்லவர்கள் காலத்து சிற்பக் கலைநுணுக்கங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதை யும் விஜயநகர சிற்பக்கலையின் மாறுபாடுகளையும் ASI புத்தகம் சற்று விளக்குகிறது. மேலும்,பல்லவர் கால கோயில்களைக் காணச் சென்றபோது   பல்லவர் காலத்து சிற்பக்கலை பற்றி துப்ரயீல் எழுதிய புத்தகத்தையும் முன்பு வாசித்திருந்தேன். 
தூண்களில் இருக்கும் வேலைப்பாடுகள், மற்றும் தோரண வாயில்களின் வேலைப்பாடுகளை கவனித்தால் பல்லவர் கால கட்டிடக்கலையிலிருந்து சோழர்களின் கலை வளர்ந்ததை காணலாம். ஆனால், பப்புவுக்கு இதெல்லாம் புரிந்ததா என்று தெரியவில்லை. அவளது வயதுக்கு இது அதிகமாகவும் இருக்கலாம். அதனால், நாங்கள் துவாரபாலகர்கள், கோயில் சுவரில் இருக்கும் சிறு சிறு தூண்களின் அமைப்புகள், பூக்களின் வடிவங்கள், செடி கொடிகளின் அமைப்புகள், மிருகங்களை,பறவைகளை கண்டுபிடிப்பது, அதோடு முக்கியமாக ஆடல் பாடல் இசைக்கலைஞர்களை அடையாளம் காண்பது என்று கோயிலை ஆராய்ந்தோம்.  

  "ஏன் சில பேரு ப்ரைவேட் பார்ட்ஸ்க்கு நடுவில் இப்படி போட்டிருக்காங்க, சில பேருக்கு போடலை "என்று நடுவில் கேள்வி வேறு. அவள் காட்டிய சில சிலைக‌ளின் மார்புக்கு நடுவில் கச்சை போல கட்டியிருந்தது.

எனக்கும் தெரியவில்லை.


கோபுரங்களில் செதுக்கப்பட்டிருக்கும் தோரண வடிவத்தை பார்த்து மயிலின் தோகை போன்று இருப்பதாக சொன்னாள். எனக்கு அதை பார்க்கும் போதெல்லம் பல்லக்கு வடிவமாக தோன்றியிருக்கிறது. மயிலையும்,யானையும், சிங்க முகங்களையும் அதிகமாக கண்டோம்.

  நடுவில், கல்வெட்டு எழுத்துகளை கண்டதும் வாசிக்க தலைப்பட்டோம். பப்பு பாவம்....நானும் அவளுடன் சேர்ந்து திணறினேன்! சற்று நேரம்தான்...பிறகு ஒன்றிரண்டு வார்த்தைகளை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. சற்று ஊகத்திலேயே வாசித்தால் ஒன்றிரண்டு வார்த்தைகளை வாசித்து முடிக்கலாம். 

அதோடு, பப்புவுக்கு போட்டோ எடுக்கும் ஆசை வந்துவிட்டது. கோபுரங்களோடு, என்னையும் சேரத்து எடுத்து தள்ளினாள். மண்டபத்தில்தான் எத்தனை சாமிகள்...அவர்கள் எல்லோருக்கும் சிறு சிறு கோயில்கள்.வருண பகவான் மிகவும் கவலைகிடமாக இருந்தார். சுவர்களில்,  நாயக்கர் காலத்து படங்களும். படம் பார்த்து கதை சொல்லுதலை விளையாடினோம். புராணக்கதைகள் தெரியாவிட்டால் நீங்கள் சொல்லுவதுதானே கதை! 


சில இடங்களில், நந்திகளின் காதில் மக்கள் ரகசியங்களை கசியவிட்டபடி இருந்தனர். நந்தியின் இன்னொரு காதையும் பொத்திவிட்டனர். இல்லையென்றால், ரகசியத்தை நானும் கேட்டிருப்பேன்.;‍) மக்களின் நம்பிக்கை! 


அவர்கள் சொல்வதை பார்த்து, விளக்கம் கேட்டபிறகு பப்புவும் தன் ஆசைகளை நந்தியிடம் சொல்லிவிட்டு வந்தாள். கேட்டதற்கு, ரகசியம், சொன்னா நடக்காதே என்றாள். விட்டுவிட்டதும், அவளாகவே, "எனக்கு மெர்மெயிட் ஆகணும், எப்பல்லாம் தோணுதோ அப்பல்லாம் மெர்மெயிட் ஆகிட்டு அப்புறம் அம்மாகிட்ட வந்துடணும்னு சொன்னேன்" என்றாள். 

கால்கள் வலிக்க ஆரம்பித்தது. சொன்னால், பப்புவும் அதையே பிடித்துக்கொள்வாள். நல்ல கூட்டம். ஐயப்ப பக்தர்கள் ஒரு புறம் என்றால், மறுபுறம் மேல் மருவத்தூர் பக்தர்கள். கோயிலே கருப்பும் சிவப்புமாக‌ ஜெக ஜோதியாக  இருந்தது. அப்படியே சுற்றி பிராசதம் விற்கும் இடத்துக்கு வந்துவிட்டோம். அங்கும் வாங்கும்படி எதுவும் இல்லை. அதற்கு சற்று அருகிலேயே கல்படிகள் அந்த கோபுரத்துக்கு செல்ல வழிகாட்டின. ஆர்வத்தில் ஏறிவிட, பின்னாலே பப்புவும். அவளைத் தொடர்ந்து இன்னும் சிலரும்! 


அங்கிருந்து கீழே பார்க்கவும், கோபுரத்தை பார்க்கவும் அருமையாக இருந்தது.  நாங்கள் இறங்கவும், பிரசாதம் விற்கும் கடையிலிருந்து சிலர் வந்து எல்லோரையும் இறங்கச் சொல்லவும் சரியாக இருந்தது.

அதற்குள் கோயிலை திறந்துவிட்டிருந்தார்கள். அவ்வளவுதான்... விஸ்தாரமான அந்த படிகளில் முழுக்க மக்கள்! அதை பார்த்ததும்  செல்வதற்கு தைரியமில்லை. எல்லாருக்கும் பின்னால் கடைசியாக நின்றுக்கொண்டோம். ஆனாலும், பின்னால் சேர்ந்த கூட்டத்தை பார்த்து பயந்து விலகிவிட்டோம். துவாரபாலகருக்கருகில், அமர்ந்து வேடிக்கை பார்த்தோம். கூட்டம் சற்றே குறைந்துவிட, பப்புவை அழைத்தபோது வர மறுத்துவிட்டாள். 'உள்ளே போக வேண்டாம்' என்றும் "நான் வரலை நீ போ" என்றும் ஸ்ட்ரைக்! பிறகென்ன...உள்ளே செல்லாமல், சுற்றி சுற்றி படங்கள் எடுத்துவிட்டு திரும்பினோம். ஒரு பழமையான மரத்தை நன்றாக பராமரித்து வைத்திருக்கிறார்கள்.
இந்த கோயிலில் இசை எழுப்பும் தூண்கள் இல்லை. இதற்கு முன்பு, நாங்கள் சென்ற சில கோயில்களில் ஒலி எழுப்பும் தூண்களை கண்டிருந்தோம்.  சோழர்கள் காலத்தில் ராஜராஜனின் காலத்தில் அந்த தொழில்நுட்பம் வரவில்லையோ என்னவோ?!  அல்லது கோயிலின் உள்ளே இருந்ததோ?

எப்படியோ,தஞ்சாவூர் பிக் டெம்பில் பார்த்தாகி விட்டது. பப்புவின் இந்திய சின்னங்களில் இன்னொரு டிக். ஆனாலும், உள்ளே சென்று கோயிலின் உள்ளிருக்கும் ஓவியங்களை பார்க்காதது ஒரு குறைதான். அடுத்த முறை வருவதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கட்டுமே! ;‍)

குதுப் மினாரை பார்த்து மதி மயங்கியிருந்தது நினைவுக்கு வந்தது. அதை பார்க்கும்போதும் பிரமிப்புதான். தஞ்சையில், எங்கிருந்து கல் கிடைத்திருக்கும், எத்தனை மலைகளை கபளீகரம் செய்திருப்பார்கள் என்று பேசியபடி கும்பகோணம் வந்து சேர்ந்தோம்.  ஆச்சரியமாக, கும்பகோணத்தில் "கும்பகோணம் டிகிரி காபி" என்று எங்குமே இல்லை. ஆனால், காபியை பித்தளை டபரா தம்ளரில் கொடுக்கிறார்கள். வந்ததற்கு நினைவாக அதையாவது வாங்குவோம், மினியேச்சரில் கிடைத்தால் இன்னும் நல்லது என்று நினைத்து ஒரு பாத்திர கடையருகில் நிறுத்தினோம்.

மினியேச்சர் எல்லாம் இல்லை. சாதாரண சைசில் இரண்டு வாங்கிக்கொண்டோம். அங்கிருந்த குதிரை, யானைகளை பார்த்ததும் பப்புவுக்கு ஆசை! விலை கேட்டதும், "பள்ளி துட்டு/காலேஜ் மணி" என்று சொல்லிக்கொண்டாள். அதாவது, அதை வாங்கினால், அவளது காலேஜுக்கு என்று நான் வைத்திருக்கும் காசு போய்விடுமாம். (அப்படி ஒன்று இனிதான் நான் சேர்த்து வைக்கவேண்டும். விலையுயர்ந்த பொருட்களை கேட்கும்போது, 'காலேஜ் படிக்க காசு வேணும் இல்லப்பா..." என்று சீன் போடுவேன். அதுதான் இப்படி விளை(லை)ந்திருக்கிறது.)

ஆனால், எங்கு சென்றாலும் பப்புவுக்கு ஒரு பழக்கம். அவளது பள்ளிக்கு என்று ஏதாவது வாங்கிக் கொள்வாள். எஜுகேடிவாகத்தான் இருக்கும் என்பதால் நாங்களும் தடை சொல்வதில்லை. கன்னியாகுமரி சென்றபோது, விதவிதமான மணல் பாக்கெட்டுகள்,சங்குகள், தேக்கடி சென்ற போது பலவிதமான மசாலா/வாசனை பொருட்கள் பொட்டலம், தில்லி சென்ற போது பள்ளி லைப்ரரிக்கு ஒரு புத்தகம் என்று! இங்கு அவளைக் கவர்ந்தது, விதவிதமான நந்தா விளக்குகள். பள்ளிக்கு ஒன்றும், அவளுக்கு இரண்டுமாக வாங்கிக்கொண்டாள். 200ரு என்று சொன்னதும், ஒன்றை வைத்துவிட வற்புறுத்தினாள். செலவைக் குறைக்கிறாளாம்! எப்படியோ, நல்லபடியாக ஷாப்பிங் முடிந்துவிட தங்குமிடத்துக்கு திரும்பினோம்.

2 comments:

aarumugamayyasamy said...

நல்ல பதிவு.வாழ்த்துக்கள்!

Anonymous said...

I have been following your blog for a long time and introduced to my friends as well..I really admire your way of caring the kid. It will be helpful for us if you can share more as an advise to other parents and also the list of books you introduced to pappu.
Thanks
Kumar murugan