Saturday, January 18, 2014

கிபி 2013 டூ கிபி 1000 - IV

நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் சுற்றியிருக்கும் கோயில்கள் பற்றிய விபரங்களை அச்சிட்டு தந்திருந்தார்கள். அதை சும்மா மேய்ந்துக் கொண்டிருந்த போது கண்களில் பட்டது 'சோழர் கால நெற்களஞ்சியம்'.

முடிந்தால், நேரமிருப்பின் பார்க்கலாம் என்று பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. தேனுபுரீஸ்வரர் கோயிலிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் ஒரு கோயில் எதிர்பட்டது.அந்த கோயிலின் மதிலுக்கு வலப்பக்கம் கூம்பு போன்ற வடிவம் தென்பட்டது. 
அநேகமாக, இதுதான் அந்த நெற்களஞ்சியமோ என்ற சந்தேகம் வந்ததும் அருகில் என்று பார்த்தோம். அதே கோயில்தான். ஆனால், மணி 12 க்கு மேலாகி விட்டதால் கோயில் மூடியிருந்தது.வரும்போது பார்த்துகொள்ளலாம் என்று வெளியிலிருந்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.


தஞ்சாவூரிலிருந்து திரும்பி வரும்போது, கோயில் திறந்திருந்தது. சற்று வெளிச்சமும் இருந்தது.


திருப்பாலைத்துறை.  சோழர்கள் காலத்து கோயில்.


இந்த நெற்களஞ்சியம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. 

மேலே சன்னல் போன்ற ஒரு திறப்பு காணப்படுகிறது. கீழேயும் ஒரு கதவு இருக்கிறது. பள்ளிக்கூட பாட புத்தகங்களில் 'தஞ்சாவூர் நெற்களஞ்சியம்' என்று படித்தது நினைவுக்கு வந்தது. ஆனால், இப்படி நெற்களஞ்சியங்களில் சேகரித்து வைத்திருப்பார்கள் என்று தோன்றியதில்லை. கோயில்கள்தான் அந்தகாலத்து பேங்க் போல! நகைகளிலிருந்து, நெல் வரை !!

கோயிலை சுற்றி வந்தோம். பப்புவுக்கு நெற்களஞ்சியம் பற்றியெல்லாம் பெரிதாக ஆர்வம் இல்லை. 

அவளது ஆர்வமெல்லாம் வழக்கம்போல தூண்களில் சிற்பங்களைத் தேடுவதில்தான். இருட்டாகிவிட்டதால் தூண்களில் எதுவும் புலப்படவில்லை. ஆனால், வெளி கோபுரத்தில் சில சிற்பங்கள் கண்டுபிடிக்க முடிந்தது.

ஒரே தலையோடு மூன்று விதமான விலங்கு உடல்கள். குரங்கு ஒன்றும் மான் என்றும் ஆடு என்றும் நாங்கள் சண்டையிட்டு கொண்டிருந்தோம். :‍)


யானை ஒன்று மாலையுடன், கிளி ஒன்று மாலையுடன் என்று சிறு சிறு சிற்பங்கள்...ஆனால், வித்தியாசமாக!இந்த சிற்பங்களை செதுக்கியவர்களை, பெயர் தெரியாத அந்த சிற்பிகளை,  நினைத்துக்கொண்டோம்!

அடுத்த நாள் காலையில் நாங்கள் சென்று இறங்கியது திருபுவனம்.

திருபுவனம் கோயில் பற்றி நேடிவ் பிலானட் பக்கத்தில் பார்த்திருந்தது உபயோகமாக போயிற்று. கலைநயமிக்க கோயில்.  நல்லவேளை, இந்த கோயிலை லூசில் விடவில்லை என்று எண்ணிக்கொண்டோம்.

நுழைவாயிலை கடக்கிறோம்...ஒரே கலகலவென சிரிப்பொலி! குரல் வரும் திசை நோக்கி பார்க்கிறோம்...மாடங்களில் பெண்கள் எங்களை ஒய்யாரமாக நின்று எங்களை வரவேற்கின்றனர்!! (ஹிஹி)நுழைவாயிலிலேயே, பல சிற்பங்கள். தூண்கள் தூண்களாக செதுக்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு தூண் போன்ற அமைப்பிலும், பலகனிகள்/மாடங்கள் அதில் ஒவ்வொன்றிலும் பெண்டிர் செடி கொடிகளை பிடித்துக்கொண்டும், ஒய்யாரமாக நின்றுக்கொண்டும்,இசைக்கருவிகளோடும், நடன அபிநயத்தோடும்! அவர்களது கொண்டைகளையும், உடையலங்காரத்தையும் ரசிக்கவே எங்களுக்கு நேரம் போதவில்லை. அவர்களது கூந்தலை பார்த்து எவ்ளோ நீட்டு முடி என்றும் எவ்ளோ மொத்தம் என்றும் வியந்ததுதான் மிச்சம்!! :-)
 உள்ளே சென்று ஆராயத் தொடங்கினோம். இந்த கோயிலின் சிறப்பம்சமே தூண்கள்தான் என்று பேசிக்கொண்டோம். எந்தவொரு தூணும் வெறுமனே விடப்படவில்லை. ஒவ்வொரு தூண்களும் வெகு நுட்பமாக செதுக்கப்பட்டிருந்தன. அதை வார்த்தைகளில் புரிய வைக்கமுடியும் என்று தோன்றவில்லை.


தூண்களை பார்த்த பின்பு கோயிலின் உள்ளே சென்றோம். சுத்தமாக கூட்டமே இல்லை. எங்களைத் தவிர ஏதோ ஒன்றிரண்டு பேர்தான் இருந்தனர். இந்த கோயில் தஞ்சை பெரிய கோயிலின் அமைப்பை பிரதிபலிப்பதாக ஒருவர் கூறினார். எங்களை பார்த்ததும், அர்ச்சகர் வெளியே வந்தார். கோயிலைப் பற்றிக் கேட்டோம். வரகுண பாண்டியனின் பயத்தை/நடுக்கத்தை போக்கிய கோயிலாம் இது. இணையத்தில் இது சோழர்களால் புதுப்பிக்கப்பட்ட கடைசி கோயில் என்பது போல வாசித்திருந்தேன். சோழர்களின் கோயிலில் பாண்டியர்கள்...ம்ம்..சுவாரசியம்தான்!உள்ளே, சாமி இருக்கும் இடம் பெரிதாக இருந்தது. மற்ற கோயில்களை விட, கர்ப்பகிருகம் பெரிதுதான் என்றார்,அர்ச்சகர். படிகளில் இறங்கி தும்பிக்கை போன்ற கைப்பிடியில் பப்பு விளையாடத் துவங்கினாள். சற்று நேரம் கழித்து, கோயிலை வலம் வரத்தொடங்கினோம்.
மிக சிறிய சிற்பங்கள்,வெகு  நுணுக்கமாக  செதுக்கப்பட்டிருந்தன. யானைகள் மீது வீரர்கள், நடன மங்கைகள், இசைக்கலைஞர்கள்......ஓரிடத்தில், யானைகள் பிரசவம் பார்க்கும் காட்சியை கண்டுபிடித்தோம். கண்டுபிடித்தது நாந்தான்!!  ;-)
வெளியில் வரும் சமயம், ஒரு யானை!  யானையையும் குதிரையையும் சட்டமிட்டு பாதுகாத்து வைத்திருந்தார்கள். அவர்களையும் கண்டுகொண்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். அடுத்த ஸ்டாப் கங்கை கொண்ட சோழபுரம்!!நாங்கள் எதிர்பார்த்திருந்ததைவிட அதிகமான வரலாற்று ஆச்சர்யங்களை சந்தித்தது இங்குதான். இந்த ஊர்சுற்றலில் 'கேக்கின் மீதான செர்ரியும்' அந்த பயணம்தான்!

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான படங்களுடன் கருத்துகளும் அருமை... வாழ்த்துக்கள்...

கானா பிரபா said...

அவ்வ்வ் சித்திரக்கூடத்தை ரொம்ப நாள் மிஸ் பண்ணிட்டோம் போல, ஒவ்வொன்றா படிக்கிறேன் இப்போ