Saturday, March 07, 2009

Happy women's day!

சுதா அக்கா. பத்தாம் வகுப்பு. நன்றாகப் படிப்பார்கள். பார்ப்பவரை வசீகரிக்கும் அழகிய புன்னகை. மாநிறம். பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் எடுக்கலாம் என்று ஆசிரியர்களின் கருத்துக் கணிப்பின் அவர் பெயர் முதலில். (கண்டிப்பாக இவர் டீச்சர் பெண் இல்லை, எனது பழைய இடுகையோடு எதையும் அனுமானிக்க வேண்டாம்..;-)). ஒரு நாள், தலைவிரி கோலமாக, முகத்த்தில் எந்த திருத்தங்களோ(பொட்டு, பவுடர், மை மற்றும் பூ) இல்லாமல் பள்ளிக்கு வந்தார். நாங்கள் அப்போது ஏழாம் வகுப்பு.சுதா அக்கா தான் நன்றாக படிப்பவர்கள் எல்லோருக்கும் ரோல் மாடல் மாதிரி. அன்று எங்கள் வகுப்பு என்றில்லை..எல்லா வகுப்புகளிலும் பிரேயர் மற்றும் மதிய உணவு இடைவேளைகள் “ஏன் சுதா அக்கா இபப்டி வந்திருக்காங்க?” என்றே கேள்விகளாலும், அனுமானங்களினாலும் நிரம்பியிருந்தது.

“யாரோ அவங்களை ஃபாலோ பண்றாங்களாம்...” என்ற விடை எங்களனைவருக்கும் அன்று சாயங்காலத்திற்குள் கிடைத்தது.

பள்ளிக்கு வரும்போதும் போகும்போதும் பின் தொடர்ந்திருக்கிறார் யாரோ ஒருவர். ஆனால் எங்கள் பள்ளி மாணவர் கிடையாது. சுதா அக்காவை வழக்கம் போல பார்க்க இரண்டு வாரங்கள் ஆனது. அந்த வருட இறுதியில் அவர் மூன்று பாடங்களில் முதலிடம் பெற்றார், மொத்தமாக முதலிடம் பெறாவிட்டாலும்!

சுதாக்கா அப்படி செய்தது(அலங்கோலமாக வந்தது) சரியா தவறா என்பதே எனக்கும் ஞானசௌந்தரிக்கும் பட்டிமன்றமாக இருந்தது, நெடுநாட்கள் வரை!சவிதா அக்கா. ஒன்பதாம் வகுப்பு. சுதா அக்கா மாதிரியேதான் என்றாலும், இவர் டீச்சரின் பெண். அன்று காலையில் நான் சைக்கிள் நிறுத்தும்போது, சைக்கிள் ஸ்டாண்ட் முகப்பற்கு கொஞ்சம் தள்ளி ஒரு வித பதற்றத்தோடு நின்றுக் கொண்டிருந்தார்கள். புன்னகைத்துக் கொண்டோம்.

“டீச்சர் வந்துட்டாங்களா?” என்றார் என்னிடம். அதாவது என் பெரிம்மாவை.

”இன்னும் இல்லக்கா , வந்துக்கிட்டிருக்காங்க, என்றேன்.

ஆனாலும் ஏன் இங்கே நின்றுக் கொண்டு, முகம் வேறு சரியில்லை. ஆனால் அப்போதெல்லாம் விவரம் பத்தாது எனக்கு.

“ஏன்க்கா” என்றேன்.

“இல்ல, ஒருத்தன் அங்கே சைக்கிள் மேலே உட்கார்ந்திருக்கான் இல்ல, இன்னைக்கு காலைலேர்ந்து பின்னாடியே வந்துக்கிட்டிருக்கான் எங்கேபோனாலும். பயமாருக்கு”.

பள்ளி பிரேயருக்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

”டெய்லி ஃபாலோ பண்ணுவான். நான் கண்டுக்கலை. இன்னைக்கு எங்க அம்மா ஊருக்கு போயிருக்காங்க, +2 போல இருக்கு அவன், அதான் “, என்றார்.

அதன்பின் நான் எதுவும் ஃபாலோஅப் செய்யவில்லை.


மேலே சொன்னவையெல்லாம், கொஞ்சம் பழைய மேட்டர். இது மிக சமீபத்தில் நடந்தது.ஒருவர் பாலோ செய்கிறார், நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பது பதின்மம் தொடங்கும் வயதில் எவ்வளவு அச்சுறுத்தலையும் மன உளைச்சலையும் தருகிறது,
அதுவும் நாம் பார்க்கும் படி இருக்கிறோம் என்ற காரணத்திற்காக.இதில் அவர்களின் பங்கு ஒன்றுமேயில்லை, கொஞ்சம் கவரக் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள், அவ்வளவுதான். அந்த பையனும் பதின்மத்தில் இருக்கலாம்.இன்ஃபாச்சுவேஷன் என்று யாரேனும் சொல்லலாம்.

சரி!ஆனால், செய்யாத ஒரு காரியத்திற்காக பயப்படவும், குற்றவுணர்வு கொள்ளவும் இந்த அக்காக்களுக்குச் சொல்லிக் கொடுத்தது யார்? சுதா அக்காவை, தான் என்றும் அழகில்லை என்று காண்பித்துக் கொள்ள,அந்த வயதில் தான் விரும்பும் அனைத்தையும் இழக்கச் செய்து, “நான் அழகா இருக்கறதுனாலே தான், நான் அப்படியில்லை” என்றுக் காட்டிக் கொள்ள செய்த உணர்வுக்குப் பெயர் என்ன?

31 comments:

நட்புடன் ஜமால் said...

\\ஒருவர் பாலோ செய்கிறார், நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பது பதின்மம் தொடங்கும் வயதில் எவ்வளவு அச்சுறுத்தலையும் மன உளைச்சலையும் தருகிறது\\

சரிதான் ...


கடைசி பாரா விளங்கயில்லை ...

நிஜமா நல்லவன் said...

தலைப்பு காணும்???

நிஜமா நல்லவன் said...

/செய்யாத ஒரு காரியத்திற்காக பயப்படவும், குற்றவுணர்வு கொள்ளவும் இந்த அக்காக்களுக்குச் சொல்லிக் கொடுத்தது யார்? /


பெண் குழந்தைகள் என்றாலே அவங்க வளர வளர அவர்கள் மேல் தேவை இல்லாமல் வீட்டில் உள்ள பெரியவர்களாலும் சமூகத்தாலும் திணிக்கப்படுகின்ற கருத்துக்கள் கூட இப்படி ஒரு நிலைக்கு காரணமாக இருக்கலாம்.

அபி அப்பா said...

பாவம் தான்! அந்த வயசுல இது போல கொடுமைகள் நடப்பது உண்டு தான்! ஆனா இப்ப நிலமை அப்படி இல்லை. அனேகமாக பெண் பசங்க நல்லா தைரியமா ஆகிட்டாங்க.

ஜோதிபாரதி said...

வாழ்த்துகள்!

Iyarkai said...

மகளிர்தின வாழ்த்துக்கள்

தமிழ் பிரியன் said...

ஓ.. அப்ப நான் பாலோ பண்ணின பொண்ணுக எல்லாம் இப்படி தான் பயந்து போய் இருப்பாங்களோ.. அய்யோ.. பாவம்.. :-0

முத்துலெட்சுமி-கயல்விழி said...

:( என்னன்னாலும் கடைசியில் குற்றம் அந்த பெண் மேலே வந்துடும்னு அவளுக்கு தெரியும் அதனால் தான் அந்த பயம் இல்லையா.. ?

கணினி தேசம் said...

மகளிர் தின வாழ்த்துகள்

anbudan vaalu said...

நீங்க சொல்வது சரிதான்.நமது வளர்ப்பு முறை அப்படி...ஒரு ஆண் ஒரு பெண்ணை பின்தொடர்கிறான் என்றால் அவனைக் கண்டிப்பதற்கு முன் அவள் தான் உற்றுநோக்கப் படுகிறாள்....

இன்றைய நிலை கொஞ்சம் வித்தியாசமாய் உள்ளது...சில பெண்கள் தன்னை யாரும் பார்க்காவிட்டால் தான் அழகில்லை என வருந்துவோராகவும்,பார்த்தால் தான் அழகுதான் என திருப்திப்பட்டுக் கொள்வோராகவும் இருக்கிறார்கள்...
:(((

நசரேயன் said...

நல்லா சிந்திக்க வேண்டிய விஷயம்.

Divyapriya said...

அறியாமையும் பயமும் தான் காரணம் முல்லை...happy women's day wishes...

பத்மா அர்விந்த் said...

சந்தனமுல்லை
உங்கள் குழந்தைகளுக்கான கதைகளுக்கு நான் விசிறி. அருமையாக எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள்.
தன் உடலை பிறர் காணா வண்ணம் (கண்டாலே பத்தினித்தன்மை போய்விடும்) என்று சொல்லி தன் கணவனுக்காக மட்டுமே என்று இருப்பதே சிறந்தது என்ற கருத்தே காலம் காலமாக சொல்லப்பட்டு வந்திருக்கிறது. அவ்வாறில்லாமல், பிறர் கவனிக்கும்போது தம் மீதுதான் தவறாய் இருக்க முடியும் என்ற எண்ணமும் வருகிறது. இப்போதும் ஊடகங்களை கவனீத்தீர்களானால், இரவு நேரத்தில் ஏன் தனியாய் போனாள் என்பது முதல் தூண்டிவிடும் வன்ணம் ஏன் ஆடை அணிந்தாள் என்பதுவரை குற்றம் சாற்றப்படுவது பெரும்பாலான இடங்களில் பெண்கள் மீதுதான். இந்திரன் மீது தவறு இருந்தாலும் அகலிகையும் தண்டிக்கப்பட்ட கதையை படித்திருக்கிறோம். இதுவேதான் அடிப்படை காரணம். அழகாக எழுதி இருக்கிறீர்கள்.ஒரு வருடம் முன் மும்மையில் பெண்கள் தாக்கப்பட்டபோது வலையுலகிலும் கூட அவர்கள் மீதுதான் அவர்கள் அணிந்த ஆடைகள் மீதுதான் குற்றம் சுமத்தப்பட்டன என்பது கொசுறு தகவல்.
விகடனிலும் உங்கள் கட்டுரை படித்தேன். சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லாவிடிலும், வார இதழில் உங்கள் படைப்புக்கள் வரத்துவங்கியமைக்கும் என் பாராட்டுக்கள்.

பத்மா அர்விந்த் said...

சந்தனமுல்லை என்றொரு தொடர், பி. எம் கிருஷ்ணன் எழுதியது என்று நினைக்கிறேன், அதனால் அந்த பெயரும், சித்திரக்கூடம் என்ற பதிவின் பெயரும் பிடித்து உங்கள் பதிவுகளைப் படிக்க துவங்கினேன்.

கவிதா | Kavitha said...

முல்லை நல்ல பதிவு, அப்படி பயம் வருவது.. நம் மேல் ஏதேனும் தவறு இருக்கிறதோ.. என்ற எண்ணமும், வீட்டில் நம்மால் தான் இப்படி பிரச்சனைகள் வருகிறது என்று பின்னி விடுவார்களோ என்ற எண்ணமும் தான் நான் என்னுள் உணர்ந்து இருக்கிறேன்.

மனஉளைச்சல் அதிகபட்சமாக நான் உணர்ந்திருக்கிறேன்... இதை எல்லாம் சொல்வதற்கு இல்லை :(.. எஸ்எம்எஸ்'ல் வந்த ஆபாசங்கள் பற்றி பதிவிட்டுருந்தேன்... அந்த சமயத்தில் எனக்கு இருந்த மனஉளைச்சலுக்கு அளவே இல்லை எனலாம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

சுதா - என்னால் மறக்க முடியாத ஒரு பெயர்.

சரி!ஆனால், செய்யாத ஒரு காரியத்திற்காக பயப்படவும், குற்றவுணர்வு கொள்ளவும் இந்த அக்காக்களுக்குச் சொல்லிக் கொடுத்தது யார்? //

வேறு யார்
சமூகம் தான். வரையறுக்கப்பட்ட எல்லைக்கோட்டுக்குள் தான் நீ வாழ்ந்தாக வேண்டும் என்று காலம் காலமாக சொல்லப்பட்ட இதிகாசங்களும் இன்ன பிறவும் தான்.

இது போன்ற ஃபாலோ அப்கள் இன்னமும் தொடரத்தான் செய்கிறது. அவர்களுக்கு வயது வித்யாசமெல்லாம் தேவையில்லை.
இனக்கவர்ச்சி மட்டுமே இதற்கு காரணம்

குடுகுடுப்பை said...

இந்த விசயத்திலேயும் வாத்தியார் பசங்களுக்கு அனுபவம் கெடக்காது. எங்க வீட்டில பெண் குழந்தைகள் எங்கள் தலைமுறையில்தான்.அதன் உளவியல் ரீதியான பிரச்சினை இனிமேல்தான் ஆராயவேண்டும்

narsim said...

//நான் அழகா இருக்கறதுனாலே தான், நான் அப்படியில்லை” என்றுக் காட்டிக் கொள்ள செய்த உணர்வுக்குப் பெயர் என்ன?//

தீர்க்கமான கேள்வி.. பல சிந்தனைகளை தூண்டும் வரிகள்..

வல்லிசிம்ஹன் said...

அழகாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். முல்லை..
அபோது எங்கள் பதின்ம வயதுகளில் இந்த நடவடிக்கைகள் இருந்தது.
இப்போது எவ்வளவோ பெண்கள் தெளிவுடன் இருக்கிறார்கள்.
சென்னை போன்ற நகரங்களில் இந்த பயத்திற்குப் பதிலாகத் தன்னை அழகானவளாக வெளிப்படுத்திக் கொள்ளும் பெண்களை நான் நிறையப் பார்க்கிறேன்.

காலம் நிறைய மாறிவிட்டது.

சந்தனமுல்லை said...

நன்றி ஜமால், பின்னூட்டங்களைப் பார்த்தபின் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்! :-)

நன்றி நிஜமா நல்லவன் அண்ணா,
//
வீட்டில் உள்ள பெரியவர்களாலும் சமூகத்தாலும் திணிக்கப்படுகின்ற கருத்துக்கள் //
ஆமா..

நன்றி அபிஅப்பா..ஒருவேளை நகரங்களில் மாறி இருக்கலாம்..

நன்றி ஜோதிபாரதி, இயற்கை!

தமிழ்பிரியன் அண்ணா..அவரா நீங்க...!!! :-)

சந்தனமுல்லை said...

நன்றி முத்துலெட்சுமி...//குற்றம் அந்த பெண் மேலே வந்துடும்னு அவளுக்கு தெரியும் // ம்ம்..குற்றம் சாட்டப்படுவது எப்போதும் பெண்கள் மீதுதானே!

நன்றி கணினிதேசம்!

நன்றி அன்புடன் வாலு! ஆமாம், பெண்தான் விமர்சிக்கப்படுகிறாள்..சூழ்நிலை எதுவாயினும்!

சந்தனமுல்லை said...

நன்றி நசரேயன், திவ்யா!

நன்றி பத்மா அர்விந்த. தங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது எனக்கு! :-)ஆமாம் நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே..பெண்ணை நோக்கித்தான் சமூகத்தின் கைகள் நீளுகின்றன..குற்றம் சாட்ட! தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி..எனது அந்தப் பதிவைப் பற்றி தாங்கள் சொல்ல வரும் கருத்து புரிந்த மாதிரி இருக்கிறது! எனதுப் பெயர் காரணம், வீட்டிலிருந்த பூ-தான்! :-)

சந்தனமுல்லை said...

நன்றி கவிதா...:(..சூழ்நிலைகள் மாறவில்லை போல..தொல்லைகளின் வழிகள்தான் மாறியிருக்கின்றன..!

நன்றி அமித்து அம்மா...
//வேறு யார்
சமூகம் தான். வரையறுக்கப்பட்ட எல்லைக்கோட்டுக்குள் தான் நீ வாழ்ந்தாக வேண்டும் என்று காலம் காலமாக சொல்லப்பட்ட இதிகாசங்களும் இன்ன பிறவும் தான்.//

ஆமா, பத்மா அவர்கள் சொன்னதுபோல!

சந்தனமுல்லை said...

நன்றி குடுகுடுப்பை..
//இந்த விசயத்திலேயும் வாத்தியார் பசங்களுக்கு அனுபவம் கெடக்காது.//

:-)

நன்றி நர்சிம்!

நன்றி வல்லியம்மா..ஒருவேளை அந்தத் தொல்லை அனுபவித்த பெண்கள்தான் இன்று தைரியமான பெண்களை உருவாக்கியிருக்கிறார்களோ?!

தாமிரா said...

பெண்களுக்கான உலகம் மிகக்கட்டுப்பாடுகளோடு இருந்ததே காரணமாக இருக்கலாம். அபி அப்பா சொன்னது போல காலம் மாறி வருகிறது.. இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம்..

rapp said...

என்னைக்கு வெறும் உடலை மட்டுமே பிரதானப்படுத்தும் பார்வை குறைந்து, நார்மல் பார்வை வருதோ அப்போதுதான் இதுவும் நீங்கும்.

சரி பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாக்கும்போது, என்ன பாதிப்புகள் பெண்ணுக்கு ஏற்படுது?

முதல்ல பாதுகாப்பற்ற உறவினால் கர்ப்பம்.
ரெண்டாவது அதே காரணத்தால் நோய்.(இரு பாலருக்கும் பொருந்தும்).
மூன்றாவது சமூகத்தின் பார்வை.
நான்காவது அந்தப் பெண்ணோட மனநிலை தீவிர பாதிப்படைதல்.


சரி முதல் காரணத்தை தவிர்த்து மத்ததெல்லாம் ஆண்களுக்கு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் கிடையாதா? உண்டு. ஆனால் பொதுவாக பல காலங்களாக பெண்ணை ஒரு போகப்பொருளா பாக்குற பார்வை சமூகத்தில் பெண்கள் உட்பட எல்லாருக்கும் வந்தாச்சு. இவைகளையே ஒரு ஆணும் உணரனும்னா, ஒரு உதாரணத்தை சொல்லலாம். பொதுவான தாம்பத்திய எதிர்பார்ப்புள்ள ஒரு ஆணை , ஒரு ஓரின தாம்பத்திய எதிர்பார்ப்புள்ள ஆண் கடத்திக்கொண்டுபோய் வன்புணர்ந்தார்னு வெச்சுக்கங்க, அப்போ அந்த ஆணின் மனநிலை எப்டி இருக்கும்?


பாதுகாப்பற்ற உறவினால் நோய் தொற்று உண்டு, சமூகத்தின் நெகடிவ் பார்வை, மனநிலை பாதிப்பு, இப்டி எல்லாமே ஆண்களுக்கும் ஏற்படுது. சமீபத்தில் கூட ஒரு பதிவில் இது குறித்து பல ஆண்களின் பார்வையை படித்த ஞாபகம்.

(தயவுசெய்து ஓரின தாம்பத்திய விருப்பமுள்ளவர்கள் மன்னிக்கவும், எல்லா இடங்களிலும் இப்படிப்பட்டவர்களும் உண்டுதானே).


ஆனா இங்க இப்டி பாதிக்கப்பட்ட பெண்கள் அதிக அளவில் குற்றவுணர்ச்சி ஏற்பட்டு தற்கொலைக்கு முயல்வதில் இருந்து பற்பல பாதிப்புக்கு தங்களை தாங்களே உட்படுத்திக்கிறாங்க. ஏன்னா, இதில் எங்கோ தன் மேல் தவறிருக்குன்னு அவங்க உள்மனசு நினைக்கும்படி வளர்க்கப்படுவதுதான்னு நினைக்கிறேன்.
அதே பாதிப்பு ஆண்களுக்கு ஏற்படும்போது அவங்களுக்கு குற்றவுணர்ச்சி ஏற்படுதான்னு பாருங்க. கிடையாது.

இங்க யாரும் எப்டியும் இம்சைக்கு உள்ளாகலாம். அதுக்கு ஜென்டர்லாம் கெடயாது. ஆனா அதை ஹேண்டில் செய்யும் விதம்தான் அனைத்திற்கும் காரணம்.

இன்னமும் முன்னபின்னத் தெரியாத ஒரு பெண்ணைக் கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுத்துத்தான் அவள அவமானப்படுத்துவேன்னா, அப்புறம் சும்மானாச்சுக்குமே 'என் புடவைய கிழிச்சிட்டாங்கன்னு' ஒரு குரூப் கெளம்பத்தான் செய்யும். அப்போ வந்து குத்துதே கொடயுதேன்னா, ஒன்னும் பண்ணமுடியாது

தமிழன்-கறுப்பி... said...

பதிவை அப்புறமா படிக்கிறேன் முதல்ல வாழ்த்துக்களை சொல்லிடறேன்...

மகளிர் தின வாழ்த்துக்கள்..!

பிரேம்குமார் said...

நல்ல பதிவு முல்லை. ஆனால் கடைசியாக நீங்கள் குறிப்பிட்டுள்ள சம்பவத்திற்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தம் இல்லையே. அந்த சம்பவம் ஒரு கடைந்தெடுத்த அயோக்கியதனம் :(

சந்தனமுல்லை said...

நன்றி தாமிரா...

நன்றி ராப்..நல்ல செறிவான கருத்துப் பின்னூட்டம்!

நன்றி தமிழன்-கறுப்பி...

நன்றி பிரேம்...சம்பந்தம் இல்லையா..அந்த பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டிய உண்ர்வின் பெயர் என்ன? mere humiliation...

புதுகைத் தென்றல் said...

ஒருவர் பாலோ செய்கிறார், நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பது பதின்மம் தொடங்கும் வயதில் எவ்வளவு அச்சுறுத்தலையும் மன உளைச்சலையும் தருகிறது//

இந்த வார்த்தைகள் எனக்குள் என் கடந்த காலத்தை நினைவூட்டியதை.

பதில் சொல்ல முடியாத பல கேள்விகள் புதைந்து கிடப்பதும் புரிந்தது.

புதுகைத் தென்றல் said...

என்னென்னவோ சொல்லவிழைகிறேன்,
ஆனால் வார்த்தைகள் வரவில்லை.