Friday, June 19, 2009

முதல் நாளின்று...


(முதல் நாள் எடுத்தது!)

பப்புவை வாழ்த்திய உங்களனைவருக்கும் நன்றிகள்! உங்கள் வாழ்த்துகளோடு, பப்பு பள்ளி செல்ல ஆரம்பித்து நேற்றோடு ஒரு வாரமாகிவிட்டது. இன்னுமும் அந்த விருந்தாளி வராமலிருப்பாரா? இரண்டு நாட்களுக்கு முன்னர் நலமுடன் வந்து சேர்ந்துவிட்டார் - பப்புவின் மூக்குக்கு! கடந்தவாரத்தின் அந்த நாளை எண்ணிப் பார்க்கிறேன்.....

45 நாட்களுக்கு மேலாக விடுமுறைநாட்கள். காலை 8.30 க்கு எழுந்து பழகிவிட்டாள். அதுவும் இப்போதெல்லாம் மதியம் 2.15 வரை பள்ளிக்கூடம். ஆமாம், பப்பு இப்போது சீனியர் பேட்ச்! காலையில் ஏதாவது சாப்பிட வைக்க வேண்டும். எனக்குத்தான் டென்ஷன் தலைக்கேறிக் கொண்டிருந்தது முதல் நாளிலிருந்து. அதுவும் இந்த டென்ஷன்களில் வேனை தவற விட்டுவிடக் கூடாது! முதல் ஒரு வாரத்திற்கு மட்டும் நேரத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதென்று பள்ளிக்கூடத்துல் சொல்லி இருந்தார்கள்! கொஞ்ச நாட்களாக பள்ளிக்குச் செல்லவேண்டுமென்று சொல்லும்போதெல்லாம், பப்பு, தான் பள்ளியை முடித்து விட்டதாக சொல்லிக் கொண்டிருந்தாள்.ஒழுங்காக அழாமல் பப்புவை கிளப்ப வேண்டுமே!!


காலையில் பப்பு எழும்போது 7 மணி. குளிக்க வேண்டுமென்று சொன்னபோது ஓடிப் போய் அறையில் புகுந்துக் கொண்டாள். அதற்கு முதல்நாள் நாங்கள் sponge painting செய்துவிட்டு எல்லாவற்றையும் அப்படியே வைத்திருந்தோம்! போய் பார்த்தபோது, அவள் வண்ணங்கள் குழைக்க ஆரம்பித்திருந்தாள். எனக்கோ அது ஒரு சவால் நிறைந்த காலையாக தோன்றிற்று. முகில் ஒரு கையில் டூத்பிரஷ்-உம் நான் கையில் துண்டுமாக பப்புவை (மடக்கிப் போட) “வா பப்பு, வா பப்பு, டைமாச்சு, வேன் வந்துடும்” என்றுக் கெஞ்சிக் கொண்டிருந்தோம்.

“என்னை விட்டுடுங்க!!” - என்று சத்தமாக சொன்னாள் பப்பு!

அதற்குள் படங்கள் வேறு வரைய ஆரம்பித்திருந்தாள்! 'வெண்மதி, வர்ஷினி, ஆகாஷ் அப்புறம் மோதி ஆன்ட்டி எல்லாம் பப்புக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்களாம், வா போய் பார்க்கலாம் ” என்றதும் மனமில்லாமல் செய்துக் கொண்டிருந்த வேலையைவிட்டு விட்டு குளியலறைக்குள் சென்றாள். புதுச் சீருடைகள், அவளது உணவு டப்பாக்களில் ஒரு முறுக்கு, கொஞ்சம் சிப்ஸ், இரண்டு இட்லிகளை வைத்து தண்ணீர் பாட்டிலோடு பையை எடுத்துவைத்தாயிற்று. புதுச்சீருடை மிகவும் பெரிய அளவாக இருந்ததால், கடந்த வருடத்தினுடையதைப் போட்டுக் கொண்டாயிற்று. ஒரு தம்ளர் பாலும் அரை தோசையும்! மணி 8.

8.15க்கு வேன். காலுறைகளும், ஷூவும் அவளாகவே போட்டுக் கொண்டு பையைத் தானே தூக்கிக் கொள்வதாக சொல்லி மாட்டிக்கொண்டாள். சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிவிட்டேனாவென்று யோசித்துக் கொண்டேன் பள்ளியில் என்ன செய்யவேண்டும், எந்த டப்பாவை முதலில் திறக்கவேண்டும், தண்ணீர் அவளது பாட்டிலிலிருந்து மட்டுமே குடிக்க வேண்டும்..!! அவள் அதையெல்லாம் கவனித்தாளாவென்றால் நான் கவனிக்கவில்லை!! அந்த இடத்திற்கு வந்ததும், என்னைத் தூக்கிக் கொள்ளச் சொன்னாள். சரியாக ஐந்து நிமிடங்கள் கழித்து வந்தது வேன். ஆயாம்மாவை பார்த்ததும் சிரித்துக்கொண்டே ஏறிக்கொண்டாள். ஆயாம்மா கையாட்டச் சொன்னதும் கையாட்டினாள்....வேன் புறப்பட்டுவிட்டது! பப்பு சென்றுவிட்டாள்!

ஆமாம், நான் ஏன் இன்னும் நின்றுக் கொண்டிருக்கிறேன்..திரும்பி நடக்க ஆரம்பித்தேன். அவளை வேனில் வைத்து போட்டோ எடுக்க விரும்பினேன். ஜன்னலினூடாக, படிக்கட்டில் ஏறியபின் திரும்பி பார்க்கும்படி...என்று! ஆனால் எதுவும் எடுக்கவில்லை!

வீடு மிகவும் அமைதியாக இருந்தது. காலியாக இருந்தது போலிருந்தது! விடுமுறை தினமாக இருந்தால் இந்நேரம் பால் குடிக்க மாட்டேனென்று ஒவ்வொரு இடமாக ஓடிக் கொண்டிருப்பாள். கடைசி முயற்சியாக சுட்டி டீவி போடப்படும். ஆயாவின் பையை எடுத்து அலசி ஆராய்ந்து புளிப்பு மிட்டாய் தேடிக் கொண்டிருப்பாள்! 'இது புது பேப்பரா, பழசா' என்று கேட்பாள் கத்திர்கோலுடன் அன்றைய செய்தித்தாளை காட்டியபடி! எந்த சத்தமும் இல்லாமல் இருந்தது அப்போது!!

அறைக்குள் நுழைந்தேன். அவள் வரைந்த, வண்ணம் தீட்டிய படங்கள் பாயின் மேல் கிடந்தன! ஒரு பக்கம் முழுவதும் இப்படி வண்ணம் தீட்டியதில்லை பப்பு என்றைக்கும்! ஒரு தாள் முழுவதும் கறுப்பு வண்ணம்! அடுத்ததில் ஒரு ஸ்மைலி! அது ஸ்மைலியாக இல்லாமல், வாய் இறுக்கமாக மூடி இருந்தது! என்ன சொல்ல வருகிறாய் பப்பு?
உங்களுக்கு ஏதேனும் புரிகிறதா?! ”என்னை விட்டுடுங்க” என்ற குரல் திரும்ப ஒலித்தது என் காதுகளுக்குள்!!

26 comments:

குடுகுடுப்பை said...

எனக்கு ஒன்னும் புரியல, அவளும் உங்கள மாதிரி டென்சன் ஆயிட்டாங்க போல.

ஹரிணி இப்போதெல்லாம் வரைவதில்லை , கேட்டால் நான் நல்லா வரைவதில்லை அதனால விட்டுவிட்டேன் என்கிறாள்.

பைத்தியக்காரன் said...

பெஸ்ட் அப்சர்வேஷன் வித் மதர்ஸ் டச் :-)

பப்புகிட்ட அவங்களோட ஸ்கூல் அனுபவத்தை கேளுங்க. அதை அப்படியே வார்த்தை மாத்தாம பதிவா எழுதுங்க ஆச்சி :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

வித்யா said...

பாவம் பப்பு. ம்ம்ம் எனக்கும் இருக்கு.

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்டேய்ய்ய்ய்ய் :)))

Deepa said...

பப்பு புறப்பட்டுச் சென்றவுடன் வீட்டுக்குள் நிலவி இருக்கும் அந்த நிசப்தம் என்னையும் ஆட்கொண்டது.
அந்த இறுக்கமான ஸ்மைலியும் தான்.


//காலுறைகளும், ஷூவும் அவளாகவே போட்டுக் கொண்டு //

//'இது புது பேப்பரா, பழசா' என்று கேட்பாள் //

அட, சமத்து பப்பு!
பப்புக் குட்டிக்கு வாழ்த்துக்கள்

ஆயில்யன் said...

//உங்களுக்கு ஏதேனும் புரிகிறதா?! ”என்னை விட்டுடுங்க” என்ற குரல் திரும்ப ஒலித்தது என் காதுகளுக்குள்!!///


நோ ஃபீலிங்க்ஸ் பாஸ் ! அப்படித்தான் இருக்கும்! பப்புவுக்கும் கூட ஸ்கூல் போறது கடுப்பாத்தான் இருக்கும் பட் இதுதானே அடிப்படை - எதிர்கால வாழ்வுக்கு சில சமாதானங்களோடு தொடரட்டும்

வாழ்த்துக்களுடன்....!

தீஷு said...

ரொம்ப டச்சிங்.. அழுதுட்டே போகும் பொழுது கஷ்டமாயிருக்கு முல்லை. முதல் நாள் போன வருடம்) பள்ளியில் விட்டவுடன் வீட்டிற்கு வந்து தீஷு இல்லாத வீட்டைப் பார்த்து எனக்கு அழுகை வந்துவிட்டது.

rapp said...

//ஆமாம், பப்பு இப்போது சீனியர் பேட்ச்//
ஆமாம், இனி கதை சொல்லி கொடுமப்படுத்துற வேலையெல்லாம் வெச்சுக்கிட்டா அவ்ளோதான்:):):)

//
“என்னை விட்டுடுங்க!!” - என்று சத்தமாக சொன்னாள் பப்பு!//

உண்மையச் சொல்லுங்க நீங்க அப்போ ஒரு கதை சொல்ல ஆரம்பிச்சீங்கதானே:):):)

//ஒழுங்காக அழாமல் பப்புவை கிளப்ப வேண்டுமே!!//

ஹையா, கடசீல பாருங்க பப்பு ஜாலியா ஸ்கூலுக்கு போய்ட்டா, நீங்கதான் பீலிங்க்ஸ் ஆப் சென்னை ஆகிட்டீங்க:):):)

//
8.15க்கு வேன். காலுறைகளும், ஷூவும் அவளாகவே போட்டுக் கொண்டு பையைத் தானே தூக்கிக் கொள்வதாக சொல்லி மாட்டிக்கொண்டாள்//

பப்பு: 'அதான் சீனியர் பேட்ச் ஆகிட்டம்ள, அப்புறம் என்னாத்துக்கு டீட்டெயிலு?'

//அவள் அதையெல்லாம் கவனித்தாளாவென்றால் நான் கவனிக்கவில்லை//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............

//இது புது பேப்பரா, பழசா' என்று கேட்பாள் கத்திர்கோலுடன் அன்றைய செய்தித்தாளை காட்டியபடி!//

இந்த குசும்புக்கொன்னும் கொறைச்சலில்லை:):):)

//விடுமுறை தினமாக இருந்தால் இந்நேரம் பால் குடிக்க மாட்டேனென்று ஒவ்வொரு இடமாக ஓடிக் கொண்டிருப்பாள். கடைசி முயற்சியாக சுட்டி டீவி போடப்படும்//

பப்பு: 'மொதல்லயே சுட்டி டிவி போட வேண்டியதுதானே, ஒரே டென்ஷனப்பா'.
//ஒரு தாள் முழுவதும் கறுப்பு வண்ணம்! அடுத்ததில் ஒரு ஸ்மைலி! அது ஸ்மைலியாக இல்லாமல், வாய் இறுக்கமாக மூடி இருந்தது! என்ன சொல்ல வருகிறாய் பப்பு?//

ஒன்னு கத சொல்லப் போறேன்னு நீங்க மெரட்டரத்துக்கு முன்ன, இன்னொன்னு சொல்லி முடிச்சப்புறம்(அதாவது, முடிஞ்சிடுச்சேன்னு சந்தோஷப்படுறதா இல்லை அடுத்த வேலை தொடங்குவீங்களேன்னு கவலைப்படறதா:):):))

//

உங்களுக்கு ஏதேனும் புரிகிறதா?//

எஸ்,எஸ். பப்பு இப்போ ரொம்ப பிசி.

rapp said...

சூப்பர் போஸ்ட், ஆனா என்னைய மாதிரி ஆட்களோட எல்லாம் பழகற அரிய சந்தர்ப்பம் ஸ்கூலுக்கு போனாத்தான் கிடைக்கும்:):):)

இது மாதிரி ஸ்கூலுக்கு பசங்கள அனுப்ப ஆரம்பிக்கும்போது பெற்றோருக்கு வர்ற அந்த குற்றவுணர்ச்சி எம்புட்டு பெரிய வரம் தெரியுமா:):):) இதை வெச்சு எம்புட்டு சாதிக்கலாம்ங்கர பொது அறிவு அந்த வயசுல இல்லாம போறதுதான் ஒரே சோகம்:):):)

rapp said...

பப்பு: 'சீனியர் பேட்ச் ஆகியாச்சுல்ல இனி ஸ்நாக்ஸ் லன்ச்னு எல்லா முக்கிய டெசிஷனையும் எங்கள கேட்டுத்தான் எடுக்கணும் ஆமா'.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பதிவின் முதல் வரி வாழ்த்துக்கள் சொல்லத்தோன்றினாலும், இறுதி வரிகள் ஏனோ எதுவும் சொல்லத்தோன்றவில்லை.

ALL THE BEST PAPPU

அமிர்தவர்ஷினி அம்மா said...

அவளது உணவு டப்பாக்களில் ஒரு முறுக்கு, கொஞ்சம் சிப்ஸ், இரண்டு இட்லிகளை வைத்து //

ஆயில்ஸ் அண்ணன் இத கவனிக்கலயோ, சீரியஸா கமெண்ட் போட்டுட்டு போயிருக்காரு :)-

தமிழினி said...

உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்


உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

மயில் said...

முல்லை,

எப்பவும் குழந்தைகள் பள்ளிக்கு போனதும் ஏற்ப்படும் வெற்றிடம், திரும்பவும் அவர்களின் ஷூ ஏற்படுத்தும் தாளத்தில் தான் நிறையும்...

பப்பு வளர்ந்தாச்சு.....

தமிழ் பிரியன் said...

:)

விக்னேஷ்வரி said...

ஐயோ, நான் வாழ்த்து சொல்லலியே. என்னோட வாழ்த்தையும் பப்புவுக்கு சொல்லிடுங்க முல்லை.

பப்பு இப்போது சீனியர் பேட்ச்! //

அசத்துடா பப்புக் குட்டி.

முகில் ஒரு கையில் டூத்பிரஷ்-உம் நான் கையில் துண்டுமாக பப்புவை (மடக்கிப் போட) “வா பப்பு, வா பப்பு, டைமாச்சு, வேன் வந்துடும்” என்றுக் கெஞ்சிக் கொண்டிருந்தோம். //

உங்களைப் பார்க்கப் பரிதாபமாக உள்ளது.

அவளது உணவு டப்பாக்களில் ஒரு முறுக்கு, கொஞ்சம் சிப்ஸ், இரண்டு இட்லிகளை வைத்து தண்ணீர் பாட்டிலோடு பையை எடுத்துவைத்தாயிற்று. //

பப்புவின் சாப்பாட்டு ரகசியத்தை வெளியில் சொல்லும் ஆச்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

உங்களுக்கு ஏதேனும் புரிகிறதா?! ”என்னை விட்டுடுங்க” என்ற குரல் திரும்ப ஒலித்தது என் காதுகளுக்குள்!! //

Finishing touch A class.... பப்பு ஸ்கூலுக்கு போனது நாமளே போனது மாதிரி இருக்கு.

அன்புடன் அருணா said...

ம்ம்ம்...இது ஆரம்பம்தான்!!!!???

anbudan vaalu said...

இந்த வருஷம் சூப்பரா போக பப்புவிற்கு என் வாழ்த்துக்கள்.....

" உழவன் " " Uzhavan " said...

ஓவியத்தின் மூலமாகவும் தனது எண்ணங்களைப் பரிமாறக் கற்றுக்கொண்டாயே பப்பு. ஓவியம் வரைவது அவளுக்குப் பிடித்தமோ?
பிடித்தமான கலையில் முன்னேறட்டும் :-)

மங்களூர் சிவா said...

nice. All the very best pappu.

Divyapriya said...

:)) all the best to pappu

நசரேயன் said...

வாழ்த்துக்கள் பப்புக்கு

மாதவராஜ் said...

இந்தப் பதிவு, நேரடியாகச் சொல்லாமல் இன்னொரு தளத்தில் கடுமையான பாதிப்பைத் தருகிறது. உங்கள் presentation பிரமாதம்.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் பப்பு!

ரங்கன் said...

இதெல்லாம் சகஜம்தானே!!

தன் குழந்தை பறக்கிறதே என்று எந்த பறவையும் அழுததில்லை..

தன் குழந்தை ஓட ஆயத்தமாகிறதே என்று எந்த
மானும் அழுததில்லை..

தன் குழந்தை தயராவதை பார்த்து
மனிதர்கள் மட்டுமே எப்போதும் வருந்துகிறீர்கள்..

இதில் சோகமாய் ஒரு பதிவு வேறு..!!

போப்பா.. போய் உன் வாழ்க்கையை பாரு..!!

வரேன்.. நோ ஃபீலிங்க்ஸ்..!!

ஆகாய நதி said...

//
வீடு மிகவும் அமைதியாக இருந்தது. காலியாக இருந்தது போலிருந்தது!
//
:(

பப்புவுக்கு மீண்டும் வாழ்த்துகள்!