Monday, September 14, 2009

பக்-பக் மாடப்புறா

”அனுப்பலாமா வேண்டாமா..?” - நான்.

”போய்ட்டு வரட்டுமேப்பா!” - முகில்.

”வேணாம், வீட்டுலேயே இருக்கட்டும். அடுத்த தடவை பார்த்துக்கலாம்!” - நான்.

ம்ஹூம்...திருப்திகரமாக இல்லாததால், செகண்ட் ஒபினியன்!

”ஆயா, நாளைக்கு என்ன பண்றது? அனுப்பலாமா?”

”..இருக்கட்டும். என்ன இப்போ!?! ”(வேற மாதிரி சொன்னாலும் நான் கேக்கவா போறேன். எனது தொனியை வைத்தே பதில் சொல்லும் ஆயா வாழ்க!)

”என்னப்பா, நாளைக்கு அனுப்பலாமா? போய் என்ன பண்ணபோகுது? நாமளே ஒருநாள் கூட்டிட்டு போகலாம்! என்ன சொல்றே?!”

”அது போய்ட்டு வரட்டும்..ஒண்ணும் ஆகாது!!” - முகில்.

ஒரு முறைப்புடன், "அதை அனுப்பிட்டு நிம்மதியா இருக்க முடியுமா? அந்த டென்ஷனுக்கு, அது வீட்டுலேயே இருக்கட்டும்!"

”நம்மக் கூட போறதைவிட அது ப்ரெண்ட்ஸ் கூட போறதுதான் அதுக்கு ஜாலி. போய்ட்டு வரட்டுமே. கூட்டிட்டு போறவங்களுக்குதான் ரெஸ்பான்ஸிபிலிட்டி அதிகம்!!” - முகில்

பப்பு பள்ளிக்கூடத்தில் ஃபீல்ட் ட்ரிப் கூட்டிச் செல்கிறார்கள் - அதற்குத் தான் இந்த மத்திய மந்திரிகள் மாநாடு! ஆண்ட்டி சொல்லியிருப்பார்கள் போல, பப்புவிடம்! "நாளைக்கு நாங்க சயின்ஸ் பார்க் போறோம்" - என்று அவள் பங்குக்கு கிலி சேர்த்துக் கொண்டிருந்தாள்!

ஃபீல்ட் ட்ரிப் : 3.5 டூ 4.5 வயதினருக்கு.
இடம் : சயின்ஸ் பார்க் (அதாங்க பிளானட்டோரியம்)!
தொப்பி, யூனிஃபார்ம், ஸ்னாக்ஸ், தண்ணீர் முதலியனவற்றைக் கொண்டு வரச் சொல்லி பள்ளியிலிருந்து சுற்றறிக்கை பார்த்தபின்னர்!

”இல்ல, அது வீட்டுலேயே இருக்கட்டும். அவ்ளோதான்!!” - என்றுச் சொல்லிவிட்டு உறங்கச் சென்றாயிற்று, குழப்பங்களோடு!!

செய்தித்தாள்களில் எப்போதோ படித்த விபரீத சம்பவங்களெல்லாம் நினைவுக்கு வந்துக்கொண்டிருந்தன. தனியா போய் என்ன பண்ணும், நம்மளாலேயே கவனிச்சுக்க முடியலை...இது அங்கே இங்கே ஓடினா எப்படி மேனேஜ் பண்ணுவாங்க...அவங்க இதையே கவனிச்சுட்டிருப்பாங்களா இல்ல மத்த குழந்தைகளை கவனிப்பாங்களா!! so many thoughts!

வழக்கம்போல ஆறு மணிக்கு விழிப்பு வந்தது. 'அதான் அனுப்பப்போறதில்லையே' என்று நினைத்துக் கொண்டு தூக்கத்தைத் தொடர்ந்தேன்! 'ஸ்ஸ்...ஸ்ஸ்' என்று சத்தம். பப்புதான்! என்ன கொடுமை குள்ளநரி இது!! அவ்வ்வ்! சரி, அவளாகவே நேரம் வளர்த்தாமல் ரெடியாகிவிட்டால் அனுப்பலாமென்று அடுத்த செக் பாயிண்ட்!

சமத்தாக பாலைக் குடித்து, தோசையை சாப்பிட்டு ரெடியாகி விட்டாள்! அப்புறமென்ன...மனதை கல்லாக்கி..இரும்பாக்கி அனுப்பியாயிற்று!! ‘கவலைப்படாதீங்கம்மா, நாங்க பத்திரமா பார்த்துப்போம்' - ஆயாம்மாவின் உத்தரவாதம் வேறு!

ஆபீஸில் ஒரு 12 மணிக்கு மேல் திரும்ப நினைவு இல்லையில்லை..கவலை!!
மதியம் மூன்று மணிக்கு வீட்டிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தபின்பே நிம்மதியாயிற்று!

ஒரு சின்ன ட்ரிப்தான்! ஆனால், முதல் ட்ரிப்!

அடுத்த வருஷம், அடுத்த வருஷமென்று நான் சொல்லிக்கொண்டிருந்தாலும் எல்லா வருஷங்களும் அப்படியேத்தான் சொல்லிக்கொண்டிருப்பேனென்று தெரிந்துதானிருந்தது!! 'அங்கே போகக் கூடாது, இங்கே போகக் கூடாது' என்று எந்தத் தடையும் போடக்கூடாது, தைரியமாக வளர்க்க வேண்டும் என்றுதான் பேசிக்கொள்வோம். ஆனால், இப்படி ஒரு சூழ்நிலை வந்தப்பின்தான் தெரிந்தது - இது எவ்வளவு கடினம் - To let go - என்பது!! ஒருவேளை இந்த ட்ரிப்-க்குச் செல்லாமல் இருப்பது பப்புவிற்கு பெரிய இழப்பாக இல்லாமல் போகலாம்- வெளியே தனியாக நாங்களில்லாமல் எப்படி மேனேஜ் செய்கிறாளென்பது அவளுக்கு ஒரு பரிட்சையாக இருக்கலாம் - இதையெல்லாவற்றைவிட, எனக்கு வைக்கப்பட்ட ஒரு பெரிய பரிட்சையாகத்தான் தோன்றிற்று! முதல் அடியை எடுத்துவைக்காமல் தோற்றுப்போக விரும்பவில்லை!

என்னைப் பொறுத்த வரை இது ஒரு பயணம் - நானே, என்னைக் கடந்துச் செல்ல வேண்டியிருந்த பயணம் - ஒரு தடவை அனுபவப்பட்டதால், இனி இந்த மனத்தடைகள் இருக்காதென்று நம்புகிறேன்!!

”உன்னை அனுப்பிட்டு நாங்க இங்கே “பக் பக்”ன்னு இருக்கணும், அடுத்த வருஷம் பார்க்கலாம்” - ஸ்கூல் டூருக்கு போகணும்னு கேட்டா எங்க ஆயா சொல்றதுதான் இது!!
(பள்ளிக்கூட வாழ்க்கையிலே ரெண்டே ரெண்டு தடவைதான் டூர்-க்கு போயிருக்கேன்!! அது ஒரு சொந்தக் கதை - சோகக் கதை! அதை இன்னொரு நாள் பார்க்கலாம்!)

அந்த “பக்-பக்” ஃபிலீங் இருக்கே....அதோட உண்மையான அர்த்தம் இப்போதான் புரிஞ்சது!!
வேறு யாருக்கும் "பக்-பக்” அனுபவங்கள், பகிர்வுகள், எண்ணங்கள், ஃபிலீங்ஸ் இருந்தால் பகிர்ந்துக்கொள்ளுங்களேன்! :-)

31 comments:

சின்ன அம்மிணி said...

நல்லவேளை அனுப்பி வைச்சீங்க முல்லை. இதெல்லாம் அழியா நினைவுகளா இருக்கும் பப்புவுக்கு. கொஞ்ச நாள் இதே கதையா இருக்கும். கேட்டு பாருங்க பப்புகிட்ட.

ஆயில்யன் said...

//அடுத்த வருஷம், அடுத்த வருஷமென்று நான் சொல்லிக்கொண்டிருந்தாலும் எல்லா வருஷங்களும் அப்படியேத்தான் சொல்லிக்கொண்டிருப்பேனென்று தெரிந்துதானிருந்தது!!//

எஸ் கரீக்ட் !

ப்ரெண்ட்ஸ்ங்களோட பழகி வெளியில சென்றுவருவதற்கு இப்போதிலிருந்தே அனுமதி அளிக்க தொடங்குங்கள்!

//என்னைப் பொறுத்த வரை இது ஒரு பயணம் - நானே, என்னைக் கடந்துச் செல்ல வேண்டியிருந்த பயணம் - ஒரு தடவை அனுபவப்பட்டதால், இனி இந்த மனத்தடைகள் இருக்காதென்று நம்புகிறேன்!!//

குட்!

ஆயில்யன் said...

//வேறு யாருக்கும் "பக்-பக்” அனுபவங்கள், பகிர்வுகள், எண்ணங்கள், ஃபிலீங்ஸ் இருந்தால் பகிர்ந்துக்கொள்ளுங்களேன்! :-)///கண்டிப்பா!

(ஸ்ஸ் அடுத்த தொடருக்கு பிட்டை போட்டுட்டாங்களே அவ்வ்வ்வ்வ்!!!)

கதிர் - ஈரோடு said...

குழந்தை நம்முடன் இருக்கும் போதுதான் அதிக குறும்பு செய்கிறது... பீல்ட் டிரிப்பில் ஆசிரியைகளுடன் செல்லும் போது இவ்வளவு குறும்பு செய்வதில்லை

அதனால் நான் ஒருபோதும் பக்-பக் என திகிலடிப்பதில்லை...

பீல்ட் டிரிப்-க்கு பந்தாவாக செல்லும் என் மகளைப் பார்த்து மகிழ்வேன்

G3 said...

எங்க வூட்ல இதுக்கெல்லாம் ஆப்ஷனே இல்லை. அப்பா வேற ஊர்ல முக்காவாசி நாள்.. அம்மா இங்க வொர்க்கிங்.. ஆக நாங்க தான் கூட்டிட்டு போகலை உன் ப்ரெண்ட்ஸோடவாவது போனு மொத ஆளா தொறத்தி விடுவாய்ங்க :)))

ஒரு வேளை அந்த ஒரு நாள் அவங்க நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சிருப்பாய்ங்களோ ;)))

☀நான் ஆதவன்☀ said...

தலைப்பை பார்த்துட்டு ஏதோ திகில் சம்பவமா இருக்குமோன்னு நினைச்சேன். :)

☀நான் ஆதவன்☀ said...

எனக்கு கூட எங்க மேனஜர் மாதிரியே பேசி கிண்டலடிச்சிட்டு இருக்கும் போது மனுசன் பின்னால நின்னுட்டு இருந்தார். கொஞ்ச நேரம் கழிச்சு என்னைய கூப்பிட்டார். “பக்” “பக்”ன்னு இருந்துச்சு...ஆனா மனுசன் கண்டுக்கல :)வேலைய பத்தி தான் பேசினார்

☀நான் ஆதவன்☀ said...

பாஸ் யாராவது இந்த பதிவுக்கு எதிர்பதிவு போடுவாங்களா?
எனக்கு ‘பக்’ ‘பக்’ன்னு இருக்கு..

மாதவராஜ் said...

இந்த ‘பக்.. பக்’ எல்லோருக்குமானதுதான். இதுமாதிரியான தருணங்களில் குழந்தைகளை வெளியே அனுப்பக்கூடாது என்று யோசிப்பதை விட எப்படி அனுப்புவது என்று யோசிப்பதே நலம். சிற்குகள் முளைப்பதை பயத்தோடாவது ரசித்துத்தான் ஆக வேண்டும்.

தியாவின் பேனா said...

தலைப்பைப் பார்த்திட்டு திகில் சம்பவமாக இருக்கும் என்று எடுத்தேன்

PITTHAN said...

குழந்தைகளை அனுப்பவேண்டும் இல்லை என்றால் எல்லா குழந்தையும் போகும்போது நம் குழந்தை ஏங்கிவிடும். அப்புறம் பப்புவின் பயன அனுவங்களை மழலை மொழியில் கேட்டு அப்படியோ ஒர் பதிவு போடவும்.

// நல்லவேளை பப்புக்கு ப்ளாக் கார்ட்ஸ் செக்யுரிட்டி வேனும் அப்படினு அப்பளை பண்ணலை//

அமிர்தவர்ஷினி அம்மா said...

பின்னாடி பப்பு பதிவெழுத ஒரு வாய்ப்பு கொடுக்கவேணாமா,
வேண்டுதல்களோடு அனுப்பி வைங்க :)))

Ram said...

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

நிஜமா நல்லவன் said...

/☀நான் ஆதவன்☀ said...

பாஸ் யாராவது இந்த பதிவுக்கு எதிர்பதிவு போடுவாங்களா?
/


ஏற்கனவே எதிர் பதிவு ரெடி ஆகிட்டு இருக்கும் போது என்ன கேள்வி இது??

அமுதா கிருஷ்ணா said...

இந்த பக் பக் எல்லோருக்கும் இருக்கும் தான். என் பையன் 8th படிக்கும் போது சிம்லா சென்றான். வரும் போது ஏகப்பட்ட கதைகளுடனும், +2 படிக்கும் பெண்களின்(அக்கா, அக்கா என்று ஒரே புராணம் தான்) ஃப்ரெண்ட்சிப்புடன் வந்தான். தைரியமாக அனுப்ப வேண்டும் என்பது என் கட்சி.

கண்மணி said...

அனுப்பலாம்.அவளாகவே எல்லாவற்றையும் செய்ய அல்லது மிஸ்ஸிடம் கேட்க கூடிய துணிவோடு இருந்தால்.
ஆனால் வாட்டர் கேம்ஸ் உள்ள இடங்களுக்கு மட்டும் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.அனுபவம் தந்த பாடம்
சப்போர்ட் பின்னூட்டம் போட்ட அம்மாக்கள் கோபிக்கப் போறாங்க:(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பக்-பக்கால கொஞ்ச நாள் அனுப்பாமவும் வச்சிருந்திருக்கேன் .. இப்ப ஒரே திடும் திடும் ந்னு அடிக்கும் இதயத்தோட ( மறுபாதியின் மிரட்டலுக்கு பயந்து) நாலு நாள் டிரிப்புக்கும் ட்ரயினில் அனுப்பிட்டு போன் போட்டு பேசறேனேன்னு கெஞ்சிக்கிட்டிருப்பேன்..

வந்து சேர்ந்ததும் எல்லா அம்மா அப்பாவும் போனை போட்டு தொந்திரவு .. யூ பீப்பிள் வெரி க்ரேட் என்னைத்தொந்திரவே செய்யலைன்னா.. ஹிஹி ந்னு சிரிச்சி வச்சிக்குவேன்..

பின்னோக்கி said...

எனக்கும் 20 நாட்களுக்கு முன் இதே நிலை. என்ன என் பையன் 10 மணிக்குத்தான் எழுந்தான் :-) அதுனால அனுப்பவில்லை.

கோமதி அரசு said...

முல்லை,
குழந்தைகள் பள்ளியில் கூட்டிப்போகும் இன்பச்சுற்றுலாவிற்கு போகவேண்டும்.

அந்த இன்பம் எத்தனை காலம ஆனாலும் மறக்காது.

நான் சிறு வயதில் சுற்றுலா போயிருக்கிறேன், ஆனால் என்
குழந்தைகள் சுற்றுலா போகும் போதும்

இப்போது பேரக்குழந்தைகள் சுற்றுலா போகும் போதும் பக் பக் என்று தான்
இருக்கிறது.
திருப்பி வரும் வரை பிராத்தனை
செய்து கொண்டு தான் இருப்பேன்.
,

ஆகாய நதி said...

//
'அங்கே போகக் கூடாது, இங்கே போகக் கூடாது' என்று எந்தத் தடையும் போடக்கூடாது, தைரியமாக வளர்க்க வேண்டும் என்றுதான் பேசிக்கொள்வோம். ஆனால், இப்படி ஒரு சூழ்நிலை வந்தப்பின்தான் தெரிந்தது - இது எவ்வளவு கடினம் - To let go - என்பது!!
//

Oops......... :((( ippave kanna katuthe ella newsum pathutu padichutu epdi ithellam saathiyam future la nu :(

Anyway congrats for ur success/pappu's success :) both r equal?! :)

சினேகிதி said...

\\அங்கே போகக் கூடாது, இங்கே போகக் கூடாது' என்று எந்தத் தடையும் போடக்கூடாது, தைரியமாக வளர்க்க வேண்டும் என்றுதான் பேசிக்கொள்வோம்.\\

அதானே பார்த்தன். முந்திச் சொன்ன கதைகள் ஞாபகம் இருக்க. அப்படியிருக்க trip க்கு அனுக்க இப்பிடியா என்டு யோசிச்சன். நம்ம வீட்டிலயும் இதே கதைதான். அக்கான்ட மகனுக்கு 5 வயசாச்சு இப்ப. ஆனால் அவனையும் ரிப் அனுப்ப இதே மாதிரியான விவாதங்கள் நடந்திருக்கு. இப்பெல்லாம் சில இடங்களுக்கு பெற்றோரையும் கூட்டிக்கொண்டு போவார்கள் volunteers ஆக அதால அக்காவும் போடுவா மகனோட.

காமராஜ் said...

இந்த அனுபவத்தை பப்பு அடைந்த பிறகும்,
பப்புவின் பின்னால் சுற்றும் பக் பக்-
இட் இஸ் க்ரேட்- கோடிக்கடவுள்கள் கூடி
வந்தாலும் தாய்தான்- க்ரேட்.

kathir said...

//காமராஜ் said...
கோடிக்கடவுள்கள் கூடி
வந்தாலும் தாய்தான்- க்ரேட்.//

அழகாய்ச் சொன்ன எங்கள் காமராஜ் கிரேட் ஓ கிரேட்

கலையரசன் said...

ஏதோ வாத்தை பத்தி எழுதியிருக்கீங்களோன்னு நினைச்சேன்!
திகிலாமுல்ல... திகிலு!!!

அதான் எங்க ஆயா என்னைய டூர் அனுப்பலையோ?
:-))

Divyapriya said...

neengalaavadhu rendu thadavai poi irukkeenga...naan oru thadavai kooda ponadhillai...enga ammaavukku konjam over buk buk thaan :)

அமுதா said...

/*(பள்ளிக்கூட வாழ்க்கையிலே ரெண்டே ரெண்டு தடவைதான் டூர்-க்கு போயிருக்கேன்!! அது ஒரு சொந்தக் கதை - சோகக் கதை! அதை இன்னொரு நாள் பார்க்கலாம்!)*/
ம்... நான் ஒரு தடவை கூட போனதில்லை. அதனால் இந்த மாதிரி ட்ரிப்னா சந்தோஷமா குழந்தைகளை அனுப்பி விடுவேன்.

ராமலக்ஷ்மி said...

நான் பள்ளியில் படிக்கையில் இறுதி ஆண்டு வரை, ஒவ்வொரு வருடமும் அம்மாவிடம் கெஞ்சி சுற்றுலாவுக்கு அனுமதி வாங்கி விடுவேன். பொறுப்பா இருந்து வந்து விடுவேன் என அம்மாவும் அனுப்பிடுவாங்க, ஆனா தங்கைகளை அனுப்ப மாட்டாங்க, பயத்தில். இப்பவும் தங்கைகளுக்கு அதில் ஆதங்கம் உண்டு, அம்மாவிடம் சொல்லிக் காண்பித்து சண்டை பிடிப்பார்கள்:)!

அமுதா சொன்ன மாதிரி சின்ன ஃபீல்ட் ட்ரிப்பெல்லாம் ஓக்கே. பெரிய டூர்கள் எனில் இதே ‘பக்பக்’தான் எனக்கும் மகனை அனுப்புகையில்:)!

துபாய் ராஜா said...

கூடிய விரைவில் பப்பு குரலில்
'அப்பூறம்....''அப்பூறம்...'
என டூர் போன கதை ஆடியோ ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கிறோம். :))

நசரேயன் said...

நல்ல பகிர்வு.. நானும் கலந்துகிறேன் ஆட்டத்திலே

மங்களூர் சிவா said...

/
இதையெல்லாவற்றைவிட, எனக்கு வைக்கப்பட்ட ஒரு பெரிய பரிட்சையாகத்தான் தோன்றிற்று!
/

கண்டிப்பா.

குடுகுடுப்பை said...

பப்புவுக்கு மிகவும் மகிழ்ச்சியான தருனமாக இது நிச்சயமாக இருக்கும். அடுத்து பப்பு சொல்லும் கதைகளை பதிவாக்குங்கள்