Thursday, September 10, 2009

ப்ரியா B.E.,

ஆச்சி, ப்ரியா வந்துருக்கும்மா, நம்ம ஸ்கூல்லதான் ட்ரெயினிங், ரெண்டுநாளா!! - அலுவலக்த்தில் இருக்கும்போது பெரிம்மாவின் தொலைபேசி அழைப்பு!

“எந்த ப்ரியா, பெரிம்மா?”

“இதோ நீயே பேசு, உன்கிட்டே பேசணும்னு சொல்லுச்சு” - பெரிம்மா தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

”எந்தப் ப்ரியா, பெரிம்மா, சொல்லிட்டுக் கொடுங்க?” - பெரிம்மா காதில் வாங்கிக்கொண்ட மாதிரியேத் தெரியவில்லை!

”ஆச்சி, எப்படி இருக்கே, நல்லா இருக்கியா?” - மறுமுனையில் ப்ரியா!

”நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்கே” - எந்த ப்ரியாவென்றேத் தெரியாமல் பேச ஆரம்பித்தேன்!

என்னிடம் இதுதான் பிரச்சினை. ஒன்று மறதி. இன்னொன்று ஒரே பெயரில் பல நண்பர்கள் இருப்பது! ப்ரியா என்று சொல்வீர்களானால் பல ப்ரியாக்கள் பரிச்சயம். ஹவுசிங் போர்ட் ப்ரியா, பி செக்ஷன் ப்ரியா, தோழியின் தங்கை ப்ரியா, கல்லூரியில் இரண்டு ப்ரியாக்கள்.கவிதா என்று சொல்வீர்களானால் ஐந்துக் கவிதாக்களைத் தெரியும். எஸ்.கவிதா,டி.கவிதா, சீனியர் கவிதா - இவர்கள் பள்ளிக்கூட கவிதாக்கள். கல்லூரியில் ஒரு கவிதா. இப்போது, வலையுலகில் ஒரு கவிதா. அனு எனில் இரண்டு அனுக்கள். ஹேமா என்றால் மூன்று ஹேமா. (ஒரேயொரு ஞானசௌந்தரிதான்!). கெஜலஷ்மிகள்,முத்துலஷ்மிகள்,சுஜாக்கள், வினிதாக்கள், மஞ்சுக்கள், கல்பனாக்கள்,ஜெயஸ்ரீக்கள். இவர்கள் எல்லாரையுமே பெரிம்மாவுக்கும் தெரியும். இவர்கள் எல்லோருக்குமே பெரிம்மாவையும் தெரியும்!! இந்தப் பிரியா இதில் எந்த ப்ரியா? கொடுமை என்னவெனில் மிகவும் நெருக்கமான அல்லது சரியான ப்ரியா மட்டும் உரிய நேரத்தில் நினைவில் எட்டமாட்டார்கள்!

இங்கே, ப்ரியா போனில் பேசிக்கொண்டே இருந்தாள். இல்லையில்லை...கேட்டுக்கொண்டே இருந்தாள்.

குரலிலும் அடையாளம் பிடிபடவில்லை! ('உன் குரல், சுப்பு-ருக்குலே வர ருக்கு குரல் மாதிரி இருக்கு' என்று எனக்குச் சொல்லிக் கொண்டிருந்தவர்கள், இப்போதெல்லாம் 'உன் குரல் சுப்பு குரல் மாதிரி இருக்கு' என்றுச் சொல்லும்போது, ப்ரியாவின் குரலில் மட்டும் காலம் எந்த அடையாளத்தை விட்டிருக்கும்?!)


“உன் பொண்ணு ஃபோட்டோ பார்த்தேன், பெரிம்மா ஃபோன்லே காட்டினாங்க, என்ன படிக்கிறா?”

.....

“எனக்கு ரெண்டு பையன். பெரிய பையன் செகண்ட் ஸ்டாண்டர்டு படிக்கறான், மணவாளம்-லதான் வேலை செய்றேன்”

ஓ...தெரிந்துவிட்டது! இந்த ப்ரியா! என்ன சொல்வது அவளைப் பற்றி!! படிப்பு என்றால் ப்ரியா. ப்ரியா என்றால் படிப்பு! எனது நெருக்கமான தோழி!! 'ஒல்லி ப்ரியா பல்லி ப்ரியா','கண்ணாடிப் ப்ரியா' என்றும் அவளுக்குப் பெயர் இருந்தது! பத்தாவதிலிருந்து ஒன்றாகப் படித்தோம்.அதற்கு முன்பாக வேறு செக்‌ஷனிலிருந்தாபோதே அறிமுகம். இருவரும் இருவரின் வீட்டிற்கும் சென்றிருக்கிறோம். இருவருக்கும் இருவரது வீட்டினரையும் தெரியும். ப்ரியாவின் அப்பாவும் ஆசிரியர். இருவரும் அவரவர் தம்பிகளைப் பற்றிப் பேசிப் பேசி புண்பட்ட மனதை ஆற்றியிருகிறோம். இயற்பியலில் கூடுதல் ஆர்வம் அவளுக்கு!

'ப்ரியா கண்டிப்பாக பிஈ'தான் - 'ரேணுகா கல்யாணம்' - 'சபீனா, ஆர்ட்ஸ் காலேஜ்' - என்று எல்லோரும் பக்கா எதிர்காலத் திட்டத்துடன்தான் இருந்தோம்! +2 மதிப்பெண்களும் வந்தது. எதிர்பார்த்தது போலவே ப்ரியாவிற்கு நல்ல மதிப்பெண்கள். கண்டிப்பாக, மெரிட்டிலேயே பிஈ கிடைக்கும். ஒருநாள் காலையில் ப்ரியாவின் அப்பா வீட்டிற்கு வந்தார். Bsc இயற்பியல் படிக்க வைக்கப் போவதாகச் சொன்னார். அதிகம் படித்தால் அவர்கள் சாதியில் மாப்பிள்ளைக் கிடைப்பது கடினம் என்றார். சேலம் சாரதாவில் பிஎஸ்சி படித்தாள் ப்ரியா. நானும் வேறு கல்லூரிக்கு, ஹாஸ்டலுக்குச் சென்றுவிட்டேன். முதல் செமஸ்டர் வரை எல்லோரும் எல்லோருக்கும் கடிதம் எழுதிக்கொண்டோம், கல்லூரி பிடிக்கவில்லையென்றும், பள்ளிதான் நினைவில் நீங்காதிருக்கிறதென்றும் ஒருவரையொருவர் பார்க்கமுடியாமல் இருப்பது மிகவும் கடினமாக இருக்கிறதென்றும், திரும்ப பள்ளிக்கே சென்றுவிடலாமாயென்றும்! அதன்பின், தொடர்புகள் நூலிழையில் இருந்தன!

நான் MCA நுழைவுத்தேர்வுக்கு படித்துக்கொண்டிருக்கையில், கையில் திருமண அழைப்பிதழோடு வீட்டிற்கு வந்தாள் ப்ரியா! பக்கத்து ஊர்காரர். பிஎட் படித்திருக்கிறார். வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. நல்ல நிலபுலன்கள். ஏழு வயது வித்தியாசம். நான் முதல் வருட விடுமுறைக்கு வந்தபோது ப்ரியாவிற்கு குழந்தை பிறந்திருந்தது. சில நாட்களில், குழந்தை இறந்துவிட்டதாக சபினா சொன்னாள். செய்தித் தெரிந்ததும் ப்ரியாவுடன் பேசினேன்.

“பிறந்து கண்ணுக் கூட முழிக்கலைப்பா, கையிலே வைச்சிருந்தேன். அது செத்துப் போகப் போகுதுன்னு தெரிஞ்சுதான் கையிலே வச்சிருந்தேன் போல” என்றாள். ஒரு நொடியில் ப்ரியா முற்றிலும் வேறாகத் தெரிந்தாள்!! எங்களுடன் கிண்டலடித்துக்கொண்டு, விளையாட்டுத்தனமாகத் திரிந்தவளாகத்தான் ப்ரியாவை அறிந்திருந்தேன். ப்ரியா, இப்படியெல்லாம் பேசுவாளென்று நானறிந்திருக்கவில்லை. திடீரென ப்ரியா வேறு தளத்திற்கு சென்றுவிட்டாற் போலிருந்தது! (அப்போதெல்லாம் தாய்மை உணர்வுகள் புரிந்திருக்கவில்லை!)

நாங்கள் சிறுவயதில் ஒரு விளையாட்டு விளையாடுவோம். மூன்றாவது, நான்காவது படிக்கும்போது! அம்மா-அப்பா விளையாட்டு. அவரவர் பொம்மைகளைக் கொண்டு வரவேண்டும். யாராவது சற்றே பெரியச் சிறுமிதான் எங்களை அதட்டிக்கொண்டிருப்பாள் - அவள் பேச்சை நாங்களும் கேட்போம்! 'ஹாஸ்பிடல் செல்வது - ஆபரேஷன் நடக்கும் - குழந்தை வரும்' - அப்புறம் குழந்தைப் பொம்மையை குளிப்பாட்டி சடை போட்டு என்று விளையாட்டு! ப்ரியாவிடம் பேசிக்கொண்டிருந்த போது ஏனோ அந்த விளையாட்டை அடிக்கடி நினைத்துக் கொண்டேன்!

ப்ரியாவிற்கு எத்தனையோ கனவுகள் இருந்திருக்கும்!! இருந்ததாவென்றுத் தெரியவில்லை..ஆனால் அவள் அம்மா-அப்பா சொன்னதைக் கேட்கும் பெண்ணாக இருந்தாள். அவளுக்கென்று தனிப்பட்ட விருப்பங்கள் இருந்திருக்கும்! பிஈ படிக்க - ஆபிஸிற்குச் செல்ல - 'இந்த டீச்சர் வேலை போர்ப்பா, நான் டீச்சராக மாட்டேன்' என்பதாக!! ஒருவேளை ப்ரியாவிற்கு அவளது வாழ்க்கையின் தீர்மானங்களை எடுக்கும் உரிமைகள் இருந்திருந்தால்?!!

ப்ரியா அந்த முடிவுகளை விரும்பி ஏற்றுக் கொண்டாளாவென்றுத் தெரியவில்லை.

ஆனால், அதற்குப் பின் பிஎட் படித்தாள். ஊரிலேயே ஒரு மேனேஜ்மென்ட் பள்ளியில் ஏழாவது/எட்டாவது வகுப்பிற்கு ஆசிரியராக இருக்கிறாள். இதுவும் அவளது விருப்பமாக இருந்ததாவென்றுத் தெரியாது, ஏனெனில் படிக்கும்போது நாங்கள் பேசிக்கொள்வோம், “நான் டீச்சர் வேலைக்கு மட்டும் போக மாட்டேன்ப்பா!”.

ப்ரியாவை நேரில் சந்திக்க வாய்த்தால் கண்டிப்பாகக் கேட்கவேண்டும்.

“ஏன் ப்ரியா?, ஏன் நீ பிஎஸ்சி படிக்கமாட்டேன்னு சொல்லலை? ஏன் பிஈதான் படிப்பேன்னு அடம் பிடிக்கலை? ஏன் டீச்சர் ஆக மாட்டேன்னு சொல்லலை? ஏன் ப்ரியா?!!”


குறிப்பு: இது ஆசிரியர் தினத்துக்காக எழுதியது. ஏதோவொரு இனம் புரியாத உணர்வு அன்று வெளியிட தடுத்தது!

39 comments:

Deepa (#07420021555503028936) said...

முல்லை,

உங்கள் பதிவுக்கு வந்து தாங்க முடியாமல் கண்கலங்குவது இது தான் முதல் முறை.

//அதிகம் படித்தால் அவர்கள் சாதியில் மாப்பிள்ளைக் கிடைப்பது கடினம் என்றார்.//

ஏன், ஏன் இப்படித் தங்கள் ஆசை
மகள்களின் வாழ்க்கையையே இருட்டுக்குள் தள்ள நினைக்கிறார்கள் பெற்றவர்கள்? அவ்வளவு பயமா சமூகத்தின் மீது?

உங்கள் தோழிக்கு நேர்ந்த சோகத்தோடு உங்கள் சிறு வயது விளையாட்டையும் நினைவு கூர்ந்ததும் கண்ணீரை அடக்கவே முடியவில்லை.

வெகு காலம் நெஞ்சை விட்டு நீங்காது இந்தப் பதிவு.

ஆயில்யன் said...

//ப்ரியாவிற்கு எத்தனையோ கனவுகள் இருந்திருக்கும்!! இருந்ததாவென்றுத் தெரியவில்லை..ஆனால் அவள் அம்மா-அப்பா சொன்னதைக் கேட்கும் பெண்ணாக இருந்தாள். அவளுக்கென்று தனிப்பட்ட விருப்பங்கள் இருந்திருக்கும்! பிஈ படிக்க - ஆபிஸிற்குச் செல்ல - 'இந்த டீச்சர் வேலை போர்ப்பா, நான் டீச்சராக மாட்டேன்' என்பதாக!! ஒருவேளை ப்ரியாவிற்கு அவளது வாழ்க்கையின் தீர்மானங்களை எடுக்கும் உரிமைகள் இருந்திருந்தால்?!! //

:( மனம் சங்கடப்படுத்தியது விரும்பும் துறை அல்லாது வேறு ஒரு துறைக்கு சென்று பிறகு நடந்தது எல்லாமே எதிர்பாரதா விசயமாக இருக்கும்போது அவரின் மனம் இருக்கும் நிலை கண்டு!

கலையரசன் said...

நீங்க சொல்வது சரிதான் முல்லை..
இதை ஆசிரியர் தினத்தில் வெளியிட்டுயிருந்தால் கஷ்டம்தான்!

அதுபோல.. ஆண்கள் பேரும் இருக்கு!
Like ராஜா, கணேஷ், சுரேஷ் ன்னு...

கா.பழனியப்பன் said...

சூழ்நிலைகள் முன்பு ப்ரியவின் கனவு மட்டுமல்ல ராமசாமி,குப்புசாமி ..... அனைவ‌ரின் கனவும் பொய்த்துபோய்விடும்.சூழ்நிலைகளின் கைதி நாம்.

// பிறந்து கண்ணுக் கூட முழிக்கலைப்பா, கையிலே வைச்சிருந்தேன். அது செத்துப் போகப் போகுதுன்னு தெரிஞ்சுதான் கையிலே வச்சிருந்தேன் போல //

// ஆனால், அதற்குப் பின் பிஎட் படித்தாள். ஊரிலேயே ஒரு மேனேஜ்மென்ட் பள்ளியில் ஏழாவது/எட்டாவது வகுப்பிற்கு ஆசிரியராக இருக்கிறாள். //

// இது ஆசிரியர் தினத்துக்காக எழுதியது. ஏதோவொரு இனம் புரியாத உணர்வு அன்று வெளியிட தடுத்தது! //

ப்ரியாவின் தன்னம்பிக்கை பாராட்டுதலுக்கு உரியது.நல்ல ஆசிரியறால் சி்றப்பான நாட்டை உருவாக்க முடியும்.ஆசிரியறாக ப்ரியாவின் பணி தொடர வாழ்த்துக்கள்.

சின்ன அம்மிணி said...

//“நான் டீச்சர் வேலைக்கு மட்டும் போக மாட்டேன்ப்பா!”. //

நெகிழ வைத்த பதிவு. நானும் இப்படி டீச்சர் வேலைக்குப்போகக்கூடாது என்றே வங்கி, அரசாங்க வேலைகளுக்கு போட்டித்தேர்வுகள் எழுத ஆரம்பித்தேன். எங்கள் குடும்பத்தில் நிறைய டீச்சர்கள்தான். அப்பா அம்மா உட்பட

துபாய் ராஜா said...

படித்து முடித்தவுடன் எங்களையும் ஏதோ ஒரு உணர்வு தொண்டையை அடைத்தது.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை.ஆனால் சிலநேரம் நடப்பதை எல்லாம் நினைக்கும்போது தெய்வம் இருப்பதாக தெரிவதில்லை.

எப்படியோ தோழி மனக்கவலை தீர்க்க ஆண்டவன் இரண்டு ஆண்குழந்தைகள் கொடுத்தாரே.அதுவரை சந்தோஷம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹ்ம்... சென்னையில் ஒரு கல்லூரியில் இடம் கிடைத்தும் சேர முடியாத ஒரு சூழ்நிலையில் என் ஆசைக்கனவுகளை அழிச்சிக்கிட்டதும் அதுக்காக பலநாட்கள் கண்ணீரில் நனைத்ததும் நினைவுக்குவருது.. :(

அமுதா கிருஷ்ணா said...

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்......எல்லோருக்கும் எல்லாம் கிடைக்காது...

ஐந்திணை said...

எத்தனையோ ப்ரியாக்கள் ப்ரியமில்லாததை இன்னமும் ஏற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள் நம் நாட்டில்...

☀நான் ஆதவன்☀ said...

பணக்கஷ்டத்தால் படிக்க வைக்க முடியவில்லை என்றால் ஓரளவு சமாதானமாவது செய்துக்கலாம். ஆனா இந்த மாதிரி காரணங்களுக்காக படிக்க வைக்கலன்னா ரொம்ப கொடுமை :(

//கெஜலஷ்மிகள்,முத்துலஷ்மிகள்,சுஜாக்கள், வினிதாக்கள், மஞ்சுக்கள், கல்பனாக்கள்,ஜெயஸ்ரீக்கள்.//

முத்தக்காவோட முத்துலெட்சுமின்ற பேர்லயே நிறைய பேரு இருக்கும் போது இதெல்லாம் ஜகஜம் :)

வல்லிசிம்ஹன் said...

அன்பு முல்லை,
எத்தனையொ பேசுகிறோம். பேசுகிறார்கள். 33 சதவிகிதம். !!!!
எத்தனை சதவிதம் வந்தென்ன.
சமூகப் ப்ரக்ஞை மாறதவரை, பெண்களுக்கு ஒன்றும் நடக்கப் போவதில்லை.


மிக வருத்தமாக இருக்கிறது.
சுதந்திரம் வேண்டும்.

கதிர் - ஈரோடு said...

கனமான இடுகைங்க...

பிரியாவுக்கு மனம் கனிந்த பிராத்தனைகள்

கோமதி அரசு said...

ப்ரியா ஆசிரியர் தொழிலில் சிறந்து
விளங்க வாழ்த்துக்கள்.

தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு
தன்நம்பிக்கை ஊட்டி அவர்கள் விரும்பிய துறையில் முன்னுக்கு வர
உதவட்டும்.

மாதவராஜ் said...

கனத்த சோகத்தோடு, கண்கள் குளமாகிப் போய் இருக்கிறேன்....

சந்தனமுல்லை said...

நன்றி தீபா, சோகமாக இருக்க வேண்டுமென்று நினைத்து எழுதவில்லை...ஆனால் அப்படி அமைந்துவிட்டது! சமூகத்தின் மீது பயம் - மேலும் கல்யாணம் செய்துவிட்டால் தனது கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கும் மனோபாவம்..எல்லாம்தான்!! ப்ரியா கொஞ்சம் சொல்லியிருந்தால் கூட அவரது அப்பா கேட்டிருப்பாரோ என்று ஒரு நப்பாசைதான்!

தியாவின் பேனா said...

கனமான கதை
கண்ணீர் வரக்கூடிய அளவுக்கு கதை நகர்வு அமைந்துள்ளமை சிறப்பு

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

அமிர்தவர்ஷினி அம்மா said...

“ஏன் ப்ரியா?, ஏன் நீ பிஎஸ்சி படிக்கமாட்டேன்னு சொல்லலை? ஏன் பிஈதான் படிப்பேன்னு அடம் பிடிக்கலை? ஏன் டீச்சர் ஆக மாட்டேன்னு சொல்லலை? ஏன் ப்ரியா?!!” //

இப்படி ப்ரியா மட்டுமில்லை, எங்கவீட்டுல கமலா ந்னு கூட ஒருத்தர் இருக்காங்க :(((((((((((((

நீ அன்னிக்கு அழுது அடம்புடிச்சு எனக்கு கல்யாணம் வேணா, நான் படிக்கிறேன்னு அப்பாகிட்ட சொல்லவேண்டியது தானே கமல்

எல்லாத்தையும் செஞ்சுதான் பார்த்தேன். ஆனா நம்ம அப்பா எஙக் விட்டாரு, அப்புறம் அவர உயிரோட பார்க்கமுடியாதுன்னு சொல்லிட்டாரு.

இப்போது அன்புத்தகப்பனுமில்லை, ஆசை கணவனுமில்லை, தான் பெற்ற செலவங்களுக்காக போராடிக்கொண்டிருக்கிறாள் கமலா தனியொருத்தியாக.

இப்படிக்கு கமலாவின் தங்கை :(

மிகவும் நெகிழவைத்த பதிவு முல்லை.

சந்தனமுல்லை said...

நன்றி ஆயில்யன்!

நன்றி கலையரசன், ஆண்களுக்கு இப்படி திருமணத்திற்கு பெண் கிடைக்க மாட்டார்களென்று மேல்படிப்பு படிக்க வைக்க யோசிப்பார்களா..? ஆச்சர்யமாக இருக்கிறது...

சந்தனமுல்லை said...

நன்றி கா.பழனியப்பன், சூழ்நிலையின் மேல் பழி போடுவது சரியா எனத் தெரியவில்லை - காரணம், நம்மால் சூழ்நிலைகளைக் கையாளமுடியும் - சூழ்நிலைகளைக் நாம் கட்டுப்படுத்த முடியும்தானே - மாப்பிள்ளைக் கிடைக்கலன்னா பரவாயில்லை...பெண்ணின் ஆசைதான் பெரிது என்று ஏன் முடிவெடுக்க முடியவில்லை?!

சந்தனமுல்லை said...

தங்கள் பகிர்வுக்கு நன்றி, சின்ன அம்மிணி! எங்க வீட்டிலும் அதே கதைதான்! :-)

நன்றி துபாய்ராஜா!

நன்றி முத்துலெட்சுமி, தங்களின் மன உணர்வுகளைப் புரிந்துக்கொள்ள முடிகிறது! :(

நன்றி அமுதா கிருஷ்ணா!

நன்றி ஐந்திணை!

நன்றி நான் ஆதவன், உண்மைதான்...இதை ஒரு காரணமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லைதான்!!

சந்தனமுல்லை said...

நன்றி வல்லியம்மா, நீங்கள் சொல்வதை ஆமோதிக்கிறேன்!

நன்றி கதிர்!

நன்றி கோமதி அம்மா!! :-)

சந்தனமுல்லை said...

நன்றி மாதவராஜ் சார்!

தியாவின் பேனா-விற்கு நன்றி!

நன்றி அமித்து அம்மா...மிகவும் கனக்க செய்தது தங்கள் மறுமொழி! யோசிக்கவும் வைத்தது - படிப்பைவிடவும் நம் பெற்றோர் திருமணத்தை நம்புவதன் காரணம் என்னவாக இருக்கும்?!!

Deepa (#07420021555503028936) said...

//அமித்து அம்மா: இப்போது அன்புத்தகப்பனுமில்லை, ஆசை கணவனுமில்லை, தான் பெற்ற செலவங்களுக்காக போராடிக்கொண்டிருக்கிறாள் கமலா தனியொருத்தியாக.

இப்படிக்கு கமலாவின் தங்கை :(
//

:-(( அதிர்ச்சி.

நிஜமா நல்லவன் said...

:(

Deepa (#07420021555503028936) said...

//படிப்பைவிடவும் நம் பெற்றோர் திருமணத்தை நம்புவதன் காரணம் என்னவாக இருக்கும்?!!//

ஓரளவு காலம் மாறி வருகிறது.ஆனாலும் இந்த மனப்பான்மைக்கு நிறைய காரணங்கள் இருப்பது இருப்பது தெரிகிறது. நீங்கள் பதிவில் சொல்லி இருப்பது போல் சாதி ஒரு முக்கியக் காரணம்.

அவர்கள் சாதியில் அதிகம் படித்த ஆண்கள் இருந்து அவர்களும் நிறைய படித்த பெண்கள் வேண்டுமென்று கேட்டிருந்தால் ப்ரியாவை அவர் அப்பா படிக்க வைத்திருப்பாரோ என்னவோ?

அமித்து அம்மாவின் மறுமொழி இவர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் பொய்ப் பிம்பங்களைப் (பெண்ணுக்கு ஆண் தான் பாதுகாப்பு) பார்த்து வேதனையுடன் சிரிக்கிறது.
:-(

உண்மையில் நாம் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

சுந்தரா said...

மனசு கனத்துப்போனது...எத்தனையோ ப்ரியாக்கள் இதுபோல இருக்கத்தான்செய்கிறார்கள் :(

Anonymous said...

ம‌ன‌தை நெருடுகிற‌து
Ilavarasan

Vidhoosh/விதூஷ் said...

பெண்ணுக்கு வெளியில் இருக்கும் எதிரிகளை விட, குடும்பத்துக்குள் அவளோடே, அவள் ஆசாபாசங்களை அறிந்தவர்களே, அவள் ஆசைகளை நசுக்கிறார்கள். பெண்கள் தன் உணர்வுகளை, தைரியமாக பேசி, என்று தெளிவுற குடும்பத்தினருக்கு புரிய வைக்கிறாளோ, அன்றுதான் இந்த மாதிரி கஷ்டங்கள் தீரும்.

மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது :(

இருந்தாலும், முடங்கிப் போய் விடாமல் இருக்கிறாரே, அதுவரை மகிழ்ச்சி.

யுனிவெர்சிட்டியிலேயே முதலிடம் பெற்றும் தங்கப் பதக்கம் வாங்கி, physics-சில் கலக்கிய என் தோழி ஒருத்தி, PHD வரை பயின்றாள். எல்லாவற்றிலும் முதல்தான். அவளை போலவே படித்த மாப்பிள்ளைதான். ஆனாலும், இவள் அமெரிக்காவில் படிப்பு எதுவும் பயன்படுத்தாமல் இருக்கிறாள். நானும் எவ்வளவோ சொல்லி பார்த்தேன். :(

--வித்யா

mayil said...

“பிறந்து கண்ணுக் கூட முழிக்கலைப்பா, கையிலே வைச்சிருந்தேன். அது செத்துப் போகப் போகுதுன்னு தெரிஞ்சுதான் கையிலே வச்சிருந்தேன் போல”

:(((((((((

ஆகாய நதி said...

இப்படி எத்தனையோ பிரியாக்கள் :(

சிங்கக்குட்டி said...

நல்ல பதிவு.
//திரும்ப பள்ளிக்கே சென்றுவிடலாமாயென்றும்//
உண்மை...உண்மை ...உண்மை!

கா.பழனியப்பன் said...

நான் ப்ரியாவின் அப்பாவின் பார்வையிலிருந்து இதை பார்க்கிறேன்.ப்ரியவினால் பி இ படிக்க முடியவில்லை அனால் இப்போதது பி இ மாண வர்களை ப்ரியாவினாள் உருவாக்க முடியும்.எந்த தகப்பனும் தன் குழ்ந்தைகளின் கனவை கலைக்க ஆசைப்படமாட்டார்.

// அதிகம் படித்தால் அவர்கள் சாதியில் மாப்பிள்ளைக் கிடைப்பது கடினம் என்றார். சேலம் சாரதாவில் பிஎஸ்சி படித்தாள் ப்ரியா. //

அவர் ப்ரியாவின் படிப்பை பாதியில் நிறுத்தவில்லை. சூழ்நிலை(சமுதாயம்) அவரை இந்த முடிவிற்க்கு தள்ளியுள்ளது.

அன்புடன் அருணா said...

நீண்ட மௌனம்தான் என் பதில்...

manasu said...

ப்ரியாக்கள் நிறைய இருக்காங்க முல்லை. நல்ல பதிவு.

" உழவன் " " Uzhavan " said...

:-((
 
முடிந்தால் இந்த லின்க்ல போய் படிங்க
 
http://tamiluzhavan.blogspot.com/2009/08/blog-post_31.html

காமராஜ் said...

இங்கு கனவுகள் கருக்கப்படுவது இயல்பானது.
பல myth கள் அதற்கான காரணத்தை விழுங்கிக்கொள்வது
இன்னும் இயல்பானது, ஒரு கல்யாணத்தை முன்னிட்டு என்ன என்ன
வெல்லாம் பாரம் ஏற்றிவைக்கப்படுகிறது பாருங்கள்.பெண்ணுக்கு கல்யாணம் மட்டும் தான் லட்சியம் என்பது இன்னும் குரூரம்.

கலங்க வைக்கிற ஒரு ஆழமான பதிவு.

Sabarinathan Arthanari said...

நண்பரே,
வீடியோ பதிவுகள் கருத்துக்களை எளிய வகையில் வெளிப்படுத்த உதவுகிறன. நேரமும் குறைவாகவே தேவைப்படும். கருவிகள் கீழ் காணும் முகவரியில் உள்ளன. http://www.tamilscience.co.cc/2009/09/blog-post.html

நேரமும் விருப்பமும் உங்களுக்கு இருப்பின் உங்களுடைய வீடியோ இடுகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

பா.ராஜாராம் said...

கண்கள் நிறைந்து விட்டது முல்லை.யதார்த்தமான,தெளிந்த நடை!பக்குவ சித்தரிப்பு.பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.வாழ்த்துக்கள்!