Thursday, September 17, 2009

இன்று ஒரு தகவல்!

(Publishing this @ 7.40AM in fond memories of Thenkachi swaminathan!)


வீட்டில் ஒரு ஃபிலிப்ஸ் ட்ரான்சிஸ்டர் இருந்தது.சமையலறை அலமாரியின் மூலைதான் நிரந்தர இடம் அதற்கு. காலையில் எழுந்ததும் அதை உயிர்ப்பித்து விடுவார் பெரிம்மா. மிக மெல்லிதாகத்தான் சத்தத்தில்.அது ஒரு ஆல் இண்டியா ரேடியோவாக மட்டுமில்லை, ஒரு கடிகாரமாகவும் எங்களுக்கு இருந்தது. பக்திமாலை, 'செய்திகள் வாசிப்பது சரோஜ்...', விவசாயக் குறிப்புகள், பிரில் இங்க், சூர்யா பல்பு இன்னபிற. 'இன்று ஒரு தகவல்' வந்துவிட்டால் புத்தகத்தை மூடிவிட்டு ஹாலுக்கு வந்துவிடலாம்.

அரிவாள்மனையில் காய்கள் அரிந்துக்கொண்டிருக்கும் ஆயா வெட்டுவதை நிறுத்தியிருப்பார். பெரிம்மா, குக்கர் விசில் வந்துவிடாமலிருக்க ‘சிம்'மில் வைப்பார். எல்லோரும் புன்னகையோடு கேட்போம். ஐந்து நிமிடம். கடைசியில், சிரிப்புக்கதை முடிந்தவுடன் ‘எல்லாம் நல்லபடியா முடிஞ்சது' பாவனையோடு நகர்வோம். சினிமா பாடல்கள் ('ராஜா வாடா சிங்கக்குட்டி' என்ற பாடல்தான் அடிக்கடி !!) ஒலிக்கத்துவங்கும்போது குளித்து ரெடியாக வேண்டும். 8.10 க்கு ஆங்கில செய்திகள் வரும்போது சாப்பிட உட்கார வேண்டும். இப்படி ஒரு பயாலஜிக்கல் கடிகாரத்தை எங்கள் வீட்டில் அனைவருக்கும் பொருத்தி இருந்தது ஆல் இந்திய ரேடியோவும், பெஞ்ச்மார்க்காக ‘இன்று ஒரு தகவலும்' நிகழ்ச்சியும்.

சில தமிழாசிரியர்கள் 'தென்கச்சி இன்று என்ன சொன்னார்' என்பதை சொல்ல வைக்குமளவிற்கு பள்ளிக்கூடத்திலும் ‘ இன்று ஒரு தகவல்' நிறைந்திருந்தது. சில சமயங்களில் மதிய உணவு இடைவேளையின்போது ஆசிரியர்கள் 'இன்று ஒரு தகவலை'யும் பரிமாறிக்கொள்வார்கள். சிறு நகைச்சுவைக் கதைகள், கொஞ்சம் புள்ளிவிவரங்கள், பொன்மொழிகள் எல்லாம் சரிவிகிததில் கலந்தால் பேச்சுப்போட்டியில் பரிசு கட்டாயம் உண்டு என்ற சூத்திரத்தை அப்போது மிகவும் நம்பிக்கொண்டிருந்தேன். அதற்கு, 'இன்று ஒரு தகவலி'ல் வரும் கதைகள் மிகப்பெரும் உதவியாக இருந்தது. எட்டாவது படிக்கும்போது 'இன்று ஒரு தகவல்' தொகுப்புகள் மொத்தமாகக் கிடைத்தது. பிறகென்ன...தமிழ்சினிமா இயக்குனர்களுக்குக் அயல்நாட்டு டிவிடிகள் மொத்தமாகக் கிடைத்தது போல மகிழ்ச்சிதான்! ஆண்டுவிழாவில் பரிசுகள் கிடைத்ததும், ‘தென்கச்சி கோ சுவாமிநாதனுக்கு' கடிதம் எழுதினால் என்ன என்று விபரீத எண்ணம் தோன்றியது.

அநேகமாக, அவர் பேசும்போது, ‘இப்படித்தான் ஒரு நேயர் கடிதம் எழுதியிருந்தார்' என்றுச் சொல்வதைக் கருத்தில் கொண்டு, 'என் கடிதத்தையும் ஒருநாள் சொல்லக்கூடுமெ'ன்ற (நப்)ஆசையும் காரணமாக இருக்கலாம். புத்தகத்தில், ஆசிரியரின் முகவரிக்கு பதிப்பகத்தை அணுகவும் என்று எழுதியிருந்தது. பதிப்பகத்திற்கு ஒரு கடிதம். அடுத்து தென்கச்சிக்குக் கடிதம். ஒரு வாரத்திற்குப் பின் எதுவும் வரவில்லை. 'தகவலிலும்' சொல்லவில்லை. எனக்கும் மறந்துவிட்டது.

ஓரிரு மாதங்களுக்குப் பின், ஆயா பிரிக்கப்பட்ட ஒரு என்வெலப்பைக் கொடுத்தார். ஒரு பக்கத்தாளில் எழுதப்பட்டிருந்தது....என்ன எழுதியிருந்ததென்று சரியாக நினைவில்லை...ஆனால், 'நன்றாக படிக்கவும் என்றும், சந்தனமுல்லை என்ற பெயர் மிக அழகாகவும் வித்தியாசமான பெயராக இருக்கிறதெனவும், பெயருக்கேற்றாற்போல வாசனையோடு திகழ வேண்டுமெனவும்' பொருள்பட எழுதியிருந்தார். கூட ஒரு புகைப்படம். பார்த்ததும் குரலுக்கும் உருவத்திற்கு சம்பந்தம் இல்லையே என்றுதான் தோன்றியது - பூர்ணம் விசுவநாதன் போலல்லவா கற்பனை செய்திருந்தேன்!

பெரிம்மாதான், படைப்புகளை ரசிப்பதோடு, வாசிப்பதோடு நிறுத்தக் கற்றுக்கொள்ள வேண்டுமெனவும், இதுபோல கடிதங்கள், தொடர்புகள் நமக்கு அவசியமற்றது எனவும் சொன்னார். பள்ளியில் நிறைய பசங்கள் ரஜினிக்கும், கமலுக்கும் கடிதங்கள் எழுதி ஃபோட்டோக்கள் வாங்குவதை பெரிம்மா அறிந்துமிருந்தார். அதுதான் ஒரு பிரபலத்திற்கு நான் எழுதிய முதலும் கடைசியுமானக் கடிதம்! இந்தமுறை ஊருக்குபோனால் தேடிப்பார்க்க வேண்டும் - நோட்டுகளின் மத்தியில் அல்லது நண்பர்களின் கடிதங்களுக்கிடையில் கிடைக்கக் கூடும்!

எங்கள் நாட்களை சுவாரசியமானதாக, எங்கள் காலைகளை லேசானதாக மாற்றினதற்கு என்றும் நன்றி! போய்வாருங்கள், தங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்!!

ஆம்பூரில் மழையின் காரணமாக ஆற்றின் ஓரத்தில் வசித்துவந்த குடும்பங்களில் உயிரிழப்புகள் (ஏறத்தாழ 20 பேர்) ஏற்பட்டிருக்கிறது - அதுவும் தூங்கிக்கொண்டிருக்கும்போது நடு இரவில் திடீரென வந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவது நினைத்துப் பார்க்க முடியாததாக இருக்கிறது! அவர்களுக்கு என் அஞ்சலிகள்! அவர்தம் குடும்பத்தினருக்கு ஆறுதலும், மனவலிமையும் இறைவன் தரட்டும்!!

29 comments:

குடுகுடுப்பை said...

தென்கச்சி சாமிநாதனுக்கும், விபத்தில் இறந்து போன அனைவருக்கும்
அஞ்சலிகள்

சின்ன அம்மிணி said...

இன்று ஒரு தகவல் தந்தவருக்கும் ஆம்பூரில் உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலிகள்

ஆயில்யன் said...

அதிக மக்களால் கவரப்பட்ட வானொலியின் இன்று ஒரு தகவல் கதாநாயகன் மறைவு ஈடு செய்யமுடியா இழப்பு - வானொலிக்கும் தொலைக்காட்சிக்கும் அதன் மூலம் நிறைய தகவல்களை மிககுறுகிய நேரத்தில் கேட்டு பயனடைந்த மக்களுக்கும்...!

ஆன்மா நிம்மதியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்!

சுரேகா.. said...

எனக்கும் இந்த அனுபவங்கள் உண்டுங்க!
ஆனா கடிதம் எழுதினதில்லை!

இப்ப சன் டிவியில் பேசிக்கொண்டிருந்தார்.

நல்ல மனுஷன்!
:(

நாமளும் லைனில் இருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துது..!

கதிர் - ஈரோடு said...

அஞ்சலிகள்

துபாய் ராஜா said...

நெகிழ்ச்சியான பதிவு.

//எங்கள் நாட்களை சுவாரசியமானதாக, எங்கள் காலைகளை லேசானதாக மாற்றினதற்கு என்றும் நன்றி! போய்வாருங்கள், தங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்!!//

உண்மையான உண்மை. பலதரப்பட்ட வயதை சேர்ந்தவர்களும் ரசிக்கும்படி பல நல்ல கருத்துக்களை பல ஆண்டுகளாக சொல்லி வந்தவர். தமிழர் குடும்பமெல்லாம் தனி இடம் பெற்றவ்ர்.அன்னாரது இழப்பை தாங்கும் மன உறுதியை இறவன் அருள்வானாக.

ஆற்று வெள்ளத்தில் இறந்தவர்களுக்கும் அஞ்சலிகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல நினைவுகூறல்..

கடிதத்தை தேடிஎடுத்து வையுங்க..

ஆம்பூர் விபத்தில் சிக்கிக்கொண்டவர்கள் குடும்பத்தினருக்கும் மன ஆறுதல் கிடைக்கட்டும்.

பித்தன் said...

ரேடியோ பற்றிய குறிப்புகள் அருமை, அதிலும் பிலிப்ஸ் ட்ரான்சிஸ்டர், நல்ல காம்பினெசன்.
மலரும் நினைவுகள் அனைவருக்கும் பொதுதான் போல இருக்கிறது. நல்ல கடிதம் பத்திரமாக பாதுகாக்கவும்.

அமுதா said...

நெகிழ்ச்சியான பதிவு.தென்கச்சி சாமிநாதன் அவர்களுக்கும், விபத்தில் இறந்து போன அனைவருக்கும்
அஞ்சலிகள்

நட்புடன் ஜமால் said...

அவர் தரும் செய்தியும் அவர் குரலும் ஒரு வசீகரம் தான்.

இறந்தவர்களை இழந்து தவிப்பர்களுக்கு எமது பிரார்த்தனைகள்.

தாரணி பிரியா said...

அஞ்சலிகள் :(

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

அஞ்சலிகள்

rapp said...

//ஆம்பூரில் மழையின் காரணமாக ஆற்றின் ஓரத்தில் வசித்துவந்த குடும்பங்களில் உயிரிழப்புகள் (ஏறத்தாழ 20 பேர்) ஏற்பட்டிருக்கிறது - அதுவும் தூங்கிக்கொண்டிருக்கும்போது நடு இரவில் திடீரென வந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவது நினைத்துப் பார்க்க முடியாததாக இருக்கிறது! அவர்களுக்கு என் அஞ்சலிகள்! அவர்தம் குடும்பத்தினருக்கு ஆறுதலும், மனவலிமையும் இறைவன் தரட்டும்!!//

அஞ்சலிகள் :(:(:(

rapp said...

கிட்டத்தட்ட அதே காலை செட்டப்தான் எங்க வீட்லயும். எனக்கு ரொம்ப கஷ்டமாப் போச்சு. என்னமோ எப்பவுமே மறையாம இருக்கக்கூடியவர்களில் ஒருவர் மாதிரியா இவரை நெனச்சிட்டு இப்போ இதை நம்பவே முடில.

rapp said...

//பார்த்ததும் குரலுக்கும் உருவத்திற்கு சம்பந்தம் இல்லையே என்றுதான் தோன்றியது - பூர்ணம் விசுவநாதன் போலல்லவா கற்பனை செய்திருந்தேன்! //
இதேமாதிரிதான் நெறைய மக்கள் சொல்றதா அவரே சொல்லிருக்கார் இல்லையா:):):) அவரோட புகைப்படம் முதல் முதல்ல ஒரு பத்திரிக்கையில் வந்தப்போ எங்கப்பா எனக்கு ஸ்பெஷலா எடுத்து காண்பிச்சதெல்லாம் ஞாபகம் வருது. நீங்க அவர பூர்ணம் வரிசையில் வெச்சாலும், ஹி ஹி, பெரிம்மா பாருங்க ரஜினி, கமல் வரிசையில் ஒரு பிரபலமாக கன்சிடர் பண்ணிட்டாங்க:):):)

கோமதி அரசு said...

திரு.கோ. தென்கச்சி சாமிநாதன்
அவர்களுக்கும், ஆற்று வெள்ளத்தில்
அடித்து செல்லப் பட்டவர்களுக்கும்
மௌன அஞ்சலிகள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

தென்கச்சியாரின் இழப்பு ஈடு செய்ய முடியாததுதான், காலையில் செய்தியில் கேட்டதும் அதிர்ச்சி

ஆம்பூர் வெள்ள விபத்துக்கும்

என் அஞ்சலிகள்

☀நான் ஆதவன்☀ said...

:( ஆன்மா சாந்தியடைட்டும்

கலையரசன் said...

அஞ்சலிகள்
:-(
:-(

ஐந்திணை said...

:-(

" உழவன் " " Uzhavan " said...

மனம் கலங்குகிறது. அனைவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.

SK said...

பேரிழப்பே .. அஞ்சலிகள்.. :(

அந்த தொகுப்பு புத்தகமாக வெளிவந்ததா ?? விவரம் முடிந்தால் பகிரலாமே. நன்றி.

செல்வநாயகி said...

தென்கச்சி சுவாமிநாதன் மறைவுக்கு இரங்கல்கள்.

ஆம்பூர் உயிரிழப்புகள் கொடுமையானவை. இன்னமும் இதுபோன்ற இழப்புகளைத் தடுக்கமுடியாத நிலையில் நமது அரசு இயந்திரங்கள் இருப்பது வருத்தத்திற்குரியது.

தியாவின் பேனா said...

அஞ்சலிகள்

காமராஜ் said...

இன்று மதியம் நாளேட்டில் பார்த்து சஞ்சலமடைந்தேன்.
நல்ல சிந்தனையாளர். இவருக்காக வானொலிகேட்ட
அனுபவம் எனக்கும் உண்டு. ஆழ்ந்த அஞ்சலிகள்.

மாதவராஜ் said...

வருத்தமாயிருக்கிறது...

Deepa (#07420021555503028936) said...

Brilliant post Mullai!


உங்கள் அளவுக்குத் தொடர்ந்து கேட்டதில்லை என்றாலும் அவ்வப்போது கேட்டிருக்கிறேன்.

அவரது இயல்பான பேச்சும் கடைசியில் பன்ச் வைத்துச் சொல்லும் குட்டி நகைச்சுவைகளும் ரொம்பவே ரசிக்கத்தக்கவை.
மறக்கமுடியாத குரல்.

ஆம், அவர் முகத்தை முதலில் பார்க்க நேர்கையில் வித்தியாசமாக உணர்ந்தது நினைவுக்கு வருகிறது. ஆனால் நான் பூரணம் மாதிரி கற்பனை செய்யவில்லை! :-))

அஞ்சலி...

Chandravathanaa said...

உங்களைப் போல நான் அவரது நிகழ்ச்சிகளைக் கேட்டதில்லை.
அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

உங்கள் சொந்தப்பெயரே சந்தனமுல்லை தான் என்பது இப்போதுதான் தெரியும்.
இதுவரை புனைபெயரென நினைத்திருந்தேன். அழகான பெயர்.

அன்புடன் அருணா said...

தென்கச்சி சாமிநாதனுக்கும், விபத்தில் இறந்து போன அனைவருக்கும்
அஞ்சலிகள்.