Sunday, September 27, 2009

எங்கே செல்லும்....

எட்டாம் வகுப்பின் ஆரம்ப நாட்கள். அன்னபூரணி டீச்சர் பேரேடு எடுத்து ஒவ்வொருவராய் அழைக்கிறார். மாணவியர் ஒவ்வொருவராக டீச்சர் அருகில் செல்கிறார்கள். அவர்கள் சொல்வதை ஒரு தாளில், பேருக்குப் பக்கத்தில் குறித்துக் கொள்கிறார். அது வேறு ஒன்றுமில்லை, சாதி ரீதியான படிப்பு உதவித்தொகைக்கான கணக்கெடுப்பு. அந்த நேரம் வரும் வரை நான் என்ன சாதியென்று எனக்குத் தெரியாதிருந்தது!என் முறையும் வந்தது, பெரிம்மா அதே பள்ளியில் வேலை செய்வதால், 'மத்தியானம் சொல்றேன் டீச்சர்' என்று சொல்லிவிட்டு வந்தமர்ந்தேன்.

“சாதிகள் இல்லையடி பாப்பா” என்று என் சிறுவயதில், பாரதியாரையும், தினமும் பத்து திருக்குறளும் படிக்க வைத்த பெரிம்மாவிடம், உணவு இடைவேளையில் கேட்டு தெரிந்துக்கொண்டு அன்னபூரணி டீச்சரிடம் சொல்லிவிட்டேன்.வீட்டில் நாங்கள் சாதியைக் குறித்து எதுவும் பேசியதில்லை. அதற்கு அவசியமும் இருந்ததில்லை. அதனால் நான் என்ன சாதி என்ற அறிந்துக்கொள்ள வேண்டிய அவசியமுமேற்படவில்லை, அதுநாள்வரை. ஆனாலும் என் மனதை அரித்துக்கொண்டே இருந்தது இது...அமுதா வில்லாளனுக்கும், நித்யா சீனிவாசனுக்கும், அனுப்பிரியா சீனுவாசனுக்கும் தெரிந்திருந்தது சந்தனமுல்லை ராஜரத்தினத்துக்கு எப்படித் தெரியாமல் போயிற்று? சாதியை பற்றி தெரிந்துக்கொள்ளாமல் இருப்பது ஒரு பெருமைப்படும் விஷயமாக இல்லையா? ஆம்பூரில் ஒரு ஏரியா இருக்கிறது. அந்த பகுதியில் குறிப்பிட்ட மக்களைத் தவிர யாரும் வசிக்க மட்டார்கள். அங்கிருந்து வெளியே வேறு எங்காவது குடி போவார்களே தவிர, அந்தப் பகுதிக்கு வேறு யாரும் குடிவரமாட்டார்கள். இன்னமும் அப்படி இருக்கிறதா என்றுத் தெரியவில்லை!

கல்லூரியில் ஒருமுறை அனைத்திந்திய கல்லூரிகளுக்கான கலாச்சார விழாவிற்காக மவுண்ட் அபுவிற்குச் சென்றிருந்தோம். தங்குமிடத்திலிருந்து விழா நடைபெறும் இடத்திற்குச் செல்லவிருந்த பேருந்தில் ஏறினோம். மூவர் அமரக் கூடிய சீட்டில் நானும் எனது பேராசியரும் அமர்ந்தோம். இடம் தேடி வந்த இரு வடநாட்டு இளைஞர்கள், எங்களை நோக்கி 'என்ன குலம்' என்றார்கள். ஒரு நிமிடம் என்ன கேட்கிறார் இவரென்றே விளங்கவில்லை. அந்த இளைஞரே, ‘நான் ஷத்திரியன், நீ என்ன குலம்” என்றார். அதற்குள் எங்கள் குழுவிலிருந்து இன்னொரு பெண்ணும் வந்துவிட இடமில்லாமற்போகவே அவ்விடத்தை விட்டு அகன்றார் அவ்விளைஞர்!

நான் வேலை செய்த நிறுவனங்கள் ஒன்றில், பார்த்த முகங்களில், பட்ட அனுபவங்களுக்குப் பின்னரே அப்படி முடிவு செய்தேன். அப்போது சின்னமலையில் தோழிகளோடு அறையெடுத்துத் தங்கியிருந்தோம். செல்லம்மாள் மகளிர் கல்லூரி என்ற ஒரு கல்லூரி சின்னமலை-கிண்டியில் இருக்கிறது. அந்த போர்டை பார்த்தால்தான் அங்கு ஒரு கல்லூரி இருப்பதேத் தெரியும். நேராக அந்தக் கல்லூரியின் அட்மின் அறைக்குச் சென்றேன்.

பி.யெஸ்சி கம்ப்யூட்டர் இருக்குங்களா?

பார்ட்-டைம் தான் மேடம் இருக்கு.

அதுலே, ஃபீஸ் கட்டமுடியாம இருக்கிற யாரையாவது சொல்றீங்களா? எம்.பி.சி இல்லேன்னா எஸ்.சி-லே பார்த்துச் சொல்லுங்க!!


ஆதியில், எங்கள் வீடு காங்கிரசுடன் இருந்தது. அதன்பின் தி.க- தி.மு.கவுடன் இருந்தது. இனி *.*.*.*.க?

குறிப்பு : தோழியோடு பேசிக்கொண்டிருந்த போது, பெயருக்குப்பின் அல்லது மெயில் ஐடிக்களில் பின்னால் சாதிப்பெயரைச் சேர்த்துப்போட்டுக்கொள்ளும் வழக்கம் வந்திருக்கிறதே, இதைப்போல் செய்வதற்கு, முன்னர் எவ்வளவு தயங்குவார்கள், ஆனால் இப்போது இளைய தலைமுறையினரே இப்படி செய்ய ஆரம்பித்திருக்கிறார்களே என்ற வருத்தத்தை பகிர்ந்துக்கொண்டார். அதைத் தொடர்ந்தே இந்தப் பதிவு!

23 comments:

Deepa (#07420021555503028936) said...

சிந்திக்க வைக்கும், அவசியமான பதிவு.

//நித்யா சீனிவாசனுக்கும், அனுப்பிரியா சீனுவாசனுக்கும் தெரிந்திருந்தது சந்தனமுல்லை ராஜரத்தினத்துக்கு எப்படித் தெரியாமல் போயிற்று? //
:-) நல்ல கேள்வி.

ராஜா | KVR said...

கா’வில் இருந்து க’விற்குப் போனாலும் வேறு க’விற்கு மாறினாலும் எல்லா க’வும் ஓட்டுக்காக மட்டுமே சாதிகளைப் பயன்படுத்திக்கொள்ளும். வேண்டுமானால் அந்தச் சாதியிடமே பணம் வசூலித்து கல்லூரியும் கட்டி மனைவி பெயரை வைத்து அழகு பார்க்கும்.

சாதிகள் உண்டடி பாப்பா
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

ராமலக்ஷ்மி said...

எனது வலைப்பூவின் முதல் பதிவான ‘ஒன்றுபட்டால்..’ கவிதையிலிருந்து சில வரிகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்:

"இன்னாரின் தொழில் இதுவென்றறிய
அன்னாளில் தோன்றியதே சாதி.
திறமையிருந்தால் எந்தத் துறையிலும்-
எவரும் பிரகாசிக்க வாய்ப்புக்கள்
வரிசைகட்டி நிற்கின்ற இந்த
இருபத்தோராம் நூற்றாண்டிலும்
சாதி எனும் சங்கடத்தைப்
பாரமாய்ச் சுமந்து திரியவேண்டுமா ?
நீ இந்தஇனம் நான் அந்தஇனமென
உயர்வுதாழ்வு பார்ப்பது நம்மைநாமே
இழிவுபடுத்துதல் ஆகாதா?"
***

அன்புடன் அருணா said...

இளைய தலைமுறையினர் இதைக் கண்டு கொள்வதில்லையென்றல்லவா நினைத்திருந்தேன்....

துபாய் ராஜா said...

நல்லதொரு பதிவு.

எந்த சாதிக்கு பிறந்தோம் என்று நினைப்பதை விட என்ன சாதிக்க பிறந்தோம் என்று நினைக்கவேண்டும் என்பதே என் கொள்கை.

பா.ராஜாராம் said...

நியாயமான,எல்லோருக்கும் வரவேண்டிய கேள்வி!
அருமையான பதிவு முல்லை.

ச.பிரேம்குமார் said...

படித்த இளைஞர்கள் கூட இன்னும் சாதியை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தான் வேதனையே :(

ச.பிரேம்குமார் said...

:(

சின்ன அம்மிணி said...

//நான் ஷத்திரியன், நீ என்ன குலம்”//

எந்த நாட்டுக்கூட போர் செஞ்சார்னு கேட்டீங்களா??

நிஜமா நல்லவன் said...

:(

பித்தன் said...

very good, great thought.

கலையரசன் said...

நீங்க பப்புவை பள்ளியில் சேர்க்கும்போது ஜாதி சொல்லி சேர்த்தீர்களா? இல்ல...ஓப்பன் கிளாஸ் என்ற பிரிவில் ஜாதியை சொல்லாம சேர்த்தீர்களா?

கோஷம் போடுவதாலையோ, பேசுவதாலையோ, எழுதுவதாலையோ, ஜாதியை ஒழித்துவிட முடியாது! நம் பிள்ளைகளில் இருந்து ஜாதி ஒழிப்பை தொடங்குவோம்.. ஆகக்குறைந்தது, அவர்கள் பிள்ளைகளாவது ஜாதியில்லாமல் மகிழ்ச்சியாக வாழட்டும்!!

(இப்பின்னூட்டம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்....)

கதிர் - ஈரோடு said...

நல்ல பதிவு சந்தனமுல்லை

பின்னோக்கி said...

//மெயில் ஐடிக்களில் பின்னால் சாதிப்பெயரைச் சேர்த்துப்போட்டுக்கொள்ளும்

அப்படியா ?...நான் பார்த்தது இல்லை. இது கண்டிக்கத்தக்கது.

rapp said...

வழக்கம்போல அருமையான பதிவு முல்லை:):):) நான் என்னோட பெயர் பத்தி எழுதுனதுல சுத்தி வளச்சி இதைத்தான் சொல்ல வந்தேன். எந்த காலேஜ்ல படிச்சிட்டு, சாதியே இல்ல, இன்னிய தலைமுறை ஜாதி பாக்கறதில்லைன்னு நெறைய பேர் கூவறாங்களோ தெர்ல. நான் 2001-2006 பேட்ச், எங்க கல்லூரி சென்னையில் ஒரு குறிப்பிடத்தக்க பொறியியல் கல்லூரி. ஆனா அங்க ரேகிங்கே ஜாதிய கேட்டுதான் ஆரம்பிக்கும். முன்னெல்லாம் பேர் வெச்சே கண்டுப்பிடிக்க முடிஞ்சது, இப்போ லதா, ஷாந்தி, ஸ்வேதான்னு எல்லாருமே பேர் வெக்கறதால அவங்களுக்கு கேக்குற நெலம வந்துச்சி. பாத்தாங்க நம்ம ஆளுங்க, ரெட்டி பொண்ணுங்க, நாய்டு பொண்ணுங்க, நாயர் பொண்ணுங்க எல்லாம் பாத்து, இவங்களும் இப்போ சர்வ சாதாரணமா வெச்சிக்க ஆரம்பிச்சாச்சு. அம்மா அப்பால்லாம் வெக்காம, காலேஜ்ல வந்து தானா வால் சேர்த்தவங்களையே நான் நெறைய பாத்திருக்கேன்.

rapp said...

வட இந்தியாவிற்கு சென்ற அனுபவமில்லை. ஆனா கேள்விப்பட்டதெல்லாம் உண்மையாத்தானிருக்கும் போல:(:(:(

மாதவராஜ் said...

நல்ல பதிவு. இன்னும் முகத்தில் அறைகிற மாதிரி வெடிப்புற வந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

சாதி குறித்த பிரக்ஞையை இந்த அமைப்பு தொடர்ந்து ஒரு பிரஜைக்கு உனர்த்திக்கொண்டே இருக்கிறது.எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் சொல்வது போல் “பிரக்ஞையற்றவர்கள் பாக்கியவான்கள்”!

Anonymous said...

சாதி அழுகலை காட்டி சலுகை பிச்சை எடுக்காதீர்

காமராஜ் said...

இப்படியொரு பிரம்மிப்பூட்டுகிற பதிவை தாமதமாகப் படிப்பதற்கு
வருந்துவைத் தவிர வேறென்ன சொல்ல.

சினேகிதி said...

அநாநி கொமன்ற் வந்திருக்கு உங்களுக்கும் :)

நல்ல பதவு முல்லை. அப்படி பஸ்ல நேரில எல்லாம் கேப்பினமா?

இது வாசிக்கும்போது எனக்கு ஞாபகம் வந்தது :

கிட்டடியில ஒரு demographic info sheet எழுதிக்கொண்டிருந்தோம் ஒரு கூட்டமா இருந்து. அப்போ அதில ஒரு ஆய்வில பங்குபற்றுபவர்களிடம் என்னென்ன கேட்பது என்று கதைத்துவிட்டு age , sex என்னு எழுதிக்கொண்டு வந்தம். அப்ப ஒராள் சொன்னா sex (M/F) என்று போட்டால் ஆசிய மக்கள் அலறுவாங்கள் அதால gender எண்டு போடுவம் என்டு போட்டிட்டடு ஆண் பெண் என்டு option குடுப்பம் என்டு அப்ப இன்னொராள் சொன்னா அப்பிடிப்போட்டால் LGBT மக்கள் கோவப்படுவினம் என்டு.

தீஷு said...

நானும் மெயில் ஐடியில் சாதி பெயர் பார்த்திருக்கிறேன் முல்லை. வருத்தப்பட வேண்டிய விசயம்..

நசரேயன் said...

சிந்திக்க வேண்டிய விஷயம்

அமிர்தவர்ஷினி அம்மா said...

யோசிக்கத்தூண்டும் பதிவு