Tuesday, July 07, 2009

உனக்குப் பிடித்த சாக்லேட் கூட....

பப்பு,

இந்த கடிதத்தை நீ பலதடவைகள், உன் வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களில் வாசித்து பார்க்க வேண்டுமென ஆசைப்படுகிறேன் பப்பு. குறிப்பாக உனது டீனேஜில்!

நாம் ஒரு புத்தகம் வாசித்துக்கொண்டு இருந்தோம் பப்பு, அதில் நிறைய சிறுவர்கள் இருந்தார்கள்....வெவ்வேறான கலரிலே, ஃப்ரௌன், டார்க் ஃப்ரௌன், வெளுப்பு என்று. ”ஏன் அவங்க வேறவேற கலரிலே இருக்காங்க” என்றுக் கேட்டாய்! 'ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கலரிலே இருப்பாங்க, அவங்கவங்க இடத்துக்கு தகுந்தமாதிரி, அப்பா அம்மா மாதிரி' என்றேன். சிறிதுநேரம் கழித்து, என் கைக்கருகில் உனது கையை வைத்துப் பார்த்துக்கொண்டாய். 'ஏன் என் கை கருப்பா இருக்கு' - என்று கேட்டாய்!

”ஏன்னா பப்பு, உன்னோட அம்மாவும் கருப்பு. அப்பாவும் கருப்பு” என்றேன். நீயும் அமைதியாகிவிட்டாய். ஆனால், உன் மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்தது என்று நானறிந்திருக்க வில்லை. முன்பு நானும் உன்னைப் போல இருந்திருக்கிறேன்! நான் சொல்ல வருவதெல்லாம் ஒன்றுதான் பப்பு, ”கருப்பா இருக்கிறது ஒன்னும் தப்பு இல்ல". அது உனது கம்பீரம். உனது வசீகரம். நமது ஊரின், பரம்பரையின் அடையாளம். Above all, we should love our body! உடலின் சருமம் கருப்பாயிருந்தாலும் உன் மனம் எப்படியிருக்கிறது என்பதுதான் முக்கியம் என்று நான் பயிற்றுவிக்கப்பட்டேன்! நீயும் கற்றுக்கொள்வாய்! ஆனால் பப்பு, அதற்கு முன்னால் கொஞ்சம் அனுபவப்படவேண்டியிருக்கும்!

என்னுடைய சொந்தக்கார பசங்க (மாமா பசங்க, அத்தை பசங்க) எல்லாரையும் விட நான் கரு்ப்பு. விடுமுறையில் நாங்களனைவரும் ஒன்றாக வடலூரிலேதான் இருப்போம், மே மாதம் முழுவதும்! நிறைய விளையாடுவோம், சண்டையும் போட்டுக்கொள்வோம்! அப்போது அவர்கள் என்னுடைய நிறத்தை வைத்து கிண்டல் செய்வார்கள்! பெரியவர்கள் யாராவது கூடவே இருந்தா அப்படியெல்லாம் சொல்ல மாட்டார்கள்...ஆனால் எல்லா நேரங்களிலும் பெரியவர்களால் கூடவே இருக்க முடியாதே! உனக்கும் கூட இதேமாதிரி நிலைமை வரலாம், உன்னைக் காப்பாற்ற நான் கூட இருக்க வேண்டுமென்று நினைப்பதை விட நீயே அதை கையாளவேண்டுமென்று நினைக்கிறேன் பப்பு!

அவர்கள் அப்படி கிண்டல் செய்யும்போது நான் அதை என் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை! நான் அவர்களை முழுவதுமாக இக்னோர் பண்ணிவிட்டேன் பப்பு! ஏனெனில், தோலின் நிறத்தைவிட பப்பு, மூளையின் திறமைதான் வலிமையானதென்று நம்பினேன்! அடுத்ததடவை லீவுக்குப் போகும்போதும் இதே மாதிரி நிகழ்ந்ததது பப்பு! நான் அவர்களை பார்த்து கேட்டது இதுதான், உங்கள் முடியின் நிறம் என்ன? உங்கள் பாதத்தின் நிறம் என்ன? எந்த நிறத்தைத் தலையிலும் எந்த நிறத்தை காலின்கீழும் வைத்துக்கொண்டு நடக்கிறீர்களென்று! (Thanks to my zoology teacher!) அதன்பின் அதைப்பற்றிய கிண்டல்கள் எதையும் காணோம்!

நீயும் இதையேத்தான் கையாளவேண்டுமென்று நான் சொல்ல வரவில்லை!உன் டீனேஜில் அழகு க்ரீம்களை நீ என்னிடம் கேட்கலாம், பப்பு. நான் மறுக்கப்போவதில்லை.ஆனால் தோலின் நிறத்தை எதுவும் நிரந்தரமாக மாற்றிவிட முடியாதென்ற தெளிவும் உனக்கு அவசியம் என்று ஆசைப்படுகிறேன்! ஆனால், தோலின் நிறம் குறித்த சர்ச்சைகள், விளம்பரங்கள் உன்னை பாதிக்காமல் பார்த்துக்கொள் என்றுதான் சொல்ல வருகிறேன்!

ஏனெனில், பப்பு கருப்பு நிறம் உண்மையில் நல்லது. அதனுள் நீ மிகவும் பாதுகாப்பாக உணர்வாய்! வெண்சருமம் கொண்டவர் கடக்க முடியாத இடங்களை, மேற்கொள்ள முடியாத பயணங்களை நீ எளிதாக கடக்கலாம்!அவர்களின் எல்லைகளைவிட உன் எல்லைகள் இன்னும் விரிந்தது. உன்னை கட்டுபடுத்தாதது! எல்லாவற்றுக்கும் மேல், பியிங் டார்க் இஸ் ஃபன்!


இந்தப் பாதையை உனக்கு முன் கடந்துசென்ற
தன் தோலின் நிறத்தை நேசிக்கிற
உன் அம்மா!

54 comments:

rapp said...

சூப்பர் போஸ்ட்

rapp said...

//. Above all, we should love our body! //

ஒத்த வரில செம சூப்பர் விஷயத்தை சொல்லிட்டீங்க.

பொதுவா நம்மூரில் வெள்ளையா இருந்தாலும், இன்னும் வென்குஷ்டமாட்டம் ஏன் செவக்கலைங்கர கவலை திநிக்கப்படுதுன்னு தோனுது. நானும் இந்த மாதிரி ஒரு மைன்ட் செட்ல இருந்து, வித விதமா பேஷியல் அது இதுன்னு அலைஞ்சிருக்கேன். ஆனா, செம அலர்ஜி வந்துச்சி மொதல் தடவையே. சரின்னு தோல் டாக்டர்கிட்ட போனப்போ, அசிங்க அசிங்கமா திட்டினார். அப்போ, நிஜமான ஒரு தோல் பிரச்சினை உள்ள அக்கா ஒருத்தங்களைப் பாத்தேன். அவங்க சும்மா நச்சுன்னு மண்டைல உரைக்கராப்டி சொன்னத இன்னிக்கும் மறைக்கல. அவங்களுக்கு வந்திருந்தது, பரம்பரை சார்ந்த பிரச்சினை. அவங்க என்கிட்டே, நீ எதுக்கு பேஷியல் பண்ணேன்னு கேட்டப்போ, இன்னும் செகப்பாகன்னு சொன்னப்போ, கேட்டாங்க, சராசரி தென்னிந்திய நிறத்தைவிட செவப்பாதான இருக்கேன்னு. நான் சொன்னேன், ஆமா ஆனா இன்னும் மார்வாடி மாதிரி செவப்பாகனும்னு செஞ்சேன்னு சொன்னேன். சரி, அப்போ ஐரோப்பா போனா அவங்க செட்டுங்கள விட செவப்பா இருப்பாங்களே, அப்போ தோலை உரிச்சு எடுத்திடுவியான்னாங்க. கூடவே சேர்த்து இயற்கையான பிரச்சினைகள் தோணாத சருமம் எவ்வளவு பெரிய கொடுப்பினை, நம்ம ஊரின் சரும நிறத்தால் எவ்வளவு இம்சைகளில் இருந்து நாம் தப்பிச்சிக்கிறோம்னு சொன்னாங்க. அதுக்கப்புறம்தான் நான் கொஞ்சமாவது திருந்தினேன்.

rapp said...

முதலில் இருக்கும் இடத்தை வைத்துத்தான் என் நிறமே தீர்மானிக்கப்படுது. நம் ஊரில் கொஞ்சம் செவப்பாக தெரிந்த நான், இப்பொழுது இங்கு கருப்பு நிறத்தின் கீழ்தான் வருகிறேன். அதுமட்டுமல்ல, நான் அப்பொழுது செவப்பாக நினைத்த சேட்டு கலரும் இங்கு கருப்பின் கீழ்தான் அடையாளப்படுத்தப்படுகிறது.

rapp said...

பதிவுக்கு சுத்தமா, சம்பந்தமே இல்லாத பின்னூட்டம்தான், ஆனாலும் டார்ச்சருக்குன்னு கெளம்பியாச்சு முழுசா சொல்லி முடிச்சிடுவோம்:):):)

இங்கு நான் கண்டவரை, பலகாலமாக வாழும் இந்தியர்கள், வாடா இந்தியர்கள், ஈழ அன்பர்கள் இவர்களை எளிதில் அடையாளம் காணலாம். எப்டின்னா, ஆப்பிரிக்க மற்றும் ஏனைய கறுப்பின சகோதர சகோதரிகளுடன் சாதாரணமாக பழகிக்கொண்டு இருப்பார்கள். ஆனா, சமீபத்தில் வந்த இந்தியர்கள்னு எப்டி கண்டுப்பிடிக்கலாம்னா, முக்காவாசிப்பேர் நளதமயந்தி மாதவன் மாதிரியே நடந்துப்பாங்க. ஈசியா தெரியும்.

rapp said...

செம சூப்பர் போஸ்ட் முல்லை. நான் சொல்லவந்ததில், எதையாச்சும் சரியா சொல்லலைன்னா, வழக்கம்போல சொல்லத் தெரியாம ஒளறி இருக்கேன்னு புரிஞ்சிக்கங்க.

rapp said...

//ந்த நிறத்தைத் தலையிலும் எந்த நிறத்தை காலின்கீழும் வைத்துக்கொண்டு நடக்கிறீர்களென்று!//

:):):) நக்கலு:):):) இனிமேயாச்சும், இப்டி வாங்கிக் கட்டிக்காம லூசு ஆடிட்யூட்லருந்து, அந்த ஆடிட்யூட் உள்ள மக்கள் வெளில வரணும். இல்லைன்னா, சாப்ட் முல்லைகிட்டருந்தே இப்டி வாங்குனவுங்க, சும்மா, நச் பப்புக்கிட்டருந்து என்னா வாங்கிக் கட்டிப்பாங்களோ:):):)

அமிர்தவர்ஷினி அம்மா said...

பப்புவுக்கு நீங்க எழுதுன இந்த கடிதம், அவளுக்கு மட்டுமல்ல, நிறத்தினால் கொஞ்சம் இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் உள்ள எனக்குமே :(

இந்தப் பாதையை உனக்கு முன் கடந்துசென்ற
தன் தோலின் நிறத்தை நேசிக்கிற
உன் அம்மா! //

கொஞ்சமல்ல நிறையவே நெகிழ்ச்சி,

எனக்கென்னவோ பப்பு இது மாதிரிலாம் ஃபீல் செய்வான்னு தோணலை ஆச்சி. :)-

ஏன்னா பார்க்ல அவ சொன்ன அந்த வாக்கியம் எனக்கு இன்னும் நெல்லா நினைவிருக்கு.!!!!

நட்புடன் ஜமால் said...

நல்லதொரு தகவல், நல்ல முறையில்

நிச்சியம் குழந்தைக்கு ஒரு தன்னம்பிக்கையை தரும் இதனை படிக்கையில் ...

முனைவர்.இரா.குணசீலன் said...

நல்லாருக்குங்க.......
நிறம் குறித்த நல்ல தன்னம்பிக்கையளிக்கும் இடுகை...

நிறத்தில் என்னங்க இருக்கு
மனம் சுத்தமாக இருந்தால் போதும்...

புகழ் பெற்றவர்களெல்லாம் நிறத்தாலா புகழ் பெற்றார்கள்....

தொடர்க....
வாழ்த்துக்களுடன்...

அமுதா said...

அருமையான கடிதம்

மாதவராஜ் said...

முக்கியமான விஷயத்தை நெகிழ்வாகவும், நம்பிக்கையளிப்பதாகவும் சொல்லியிருக்கிறீர்கள்.
அருமை.

கைப்புள்ள said...

நல்ல போஸ்ட். ஒரு படத்துல ஒரு கூட்டம் வடிவேலுவைப் போட்டு அடிச்சிட்டு அதுக்கு காரணமா "வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்னு" சொல்லிட்டுப் போவாங்க. வேடிக்கையா சொன்னாலும் இப்பெல்லாம் நிறம் குறித்த நம்பிக்கைகள் கிட்டத் தட்ட இப்படித் தான் இருக்கு. பப்பு பின்னாளில் படிச்சா கண்டிப்பா புரிஞ்சுப்பா.

:)

கைப்புள்ள said...

அப்புறம் இன்னொரு மேட்டர் - ராப் அக்கா அவங்க மனசுக்குப் பிடிச்சிடுச்சுன்னா பதிவை விட பெருசா கமெண்டு போட்டுத் திணற வைக்கிறாங்க. அவங்களைக் கிண்டல் பண்ணறதுக்காகச் சொல்லலை.

அந்தளவுக்கு நீங்க சிந்திக்க வைக்கிறீங்க. அதாவது உங்க எழுத்தோட வீரியம் இன்கிரீஸ் ஆகியிருக்கு :)

கைப்புள்ள said...

//அதாவது உங்க எழுத்தோட வீரியம் இன்கிரீஸ் ஆகியிருக்கு :)//

சாரி...ஒரு சின்ன திருத்தம். உங்க எழுத்தோட வீரியத்தை எப்போ குறைச்சலா நான் பாத்தேன்னு ஆராய்ச்சி செஞ்சப்போ தோனுச்சு, நான் சொல்ல வந்தது "உங்க எழுத்தோட வீரியம் இன்னும் இன்கிரீஸ் ஆகியிருக்கு"

rapp said...

//ஏன்னா பார்க்ல அவ சொன்ன அந்த வாக்கியம் எனக்கு இன்னும் நெல்லா நினைவிருக்கு.!!!!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..................
அதை சொல்லாம போய்ட்டீங்களே அமித்து அம்மா.

rapp said...

எக்கச்சக்க ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகளில் தூக்கலானவற்றை மட்டும் ஹி ஹி மாத்தறேன்.

//வாடா இந்தியர்கள்,//

ஹி ஹி, வட இந்தியர்கள்:):):)

//அப்போ ஐரோப்பா போனா அவங்க செட்டுங்கள//

அப்போ ஐரோப்பா போனா அவங்க சேட்டுங்கள

கவிதா | Kavitha said...

ஏன் இப்படி.. ?!! குறிப்பிட்டு நம்மை தேத்திக்கற அளவு நிறம் ஒரு பிரச்சனையா? அதுவும் பப்புவிற்கு???

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா சொல்லி இருக்கீங்க முல்லை.. இதை என் குழந்தைகளுக்கும் படிச்சிக்காட்டனும்.. நம்ம ஊருலயே கலருக்கான சங்கடம் இருக்குதுன்னா இங்க வடநாட்டுல கேக்கவே வேணாம்.. முன்னாடியே என் வீட்டுவேலைக்காரங்க பொண்ணைப்பத்தி எழுதி இருந்தேன்.. அந்த பொண்ணை வகுப்பு குழந்தைகள் உனக்கு கல்யாணமே ஆகாதுன்னு அழவைச்சிருக்காங்க..

Deepa said...

அற்புதம் முல்லை!

//உங்கள் முடியின் நிறம் என்ன? உங்கள் பாதத்தின் நிறம் என்ன? எந்த நிறத்தைத் தலையிலும் எந்த நிறத்தை காலின்கீழும் வைத்துக்கொண்டு நடக்கிறீர்களென்று! //
உடல் சிலிர்த்தது இதைப் படிக்கும் போது.

வரலாற்றில் எங்கோ எப்போதோ ஏற்பட்ட தவறு தான் வெள்ளைத் தோல் அழகு என்ற கற்பிதத்தை நமது மூளைக்குள் ஏற்றி இருக்க வேண்டும்.
சில நாடுகளில் இந்தத் தெளிவு இருக்கிறது. பப்பு நேஹா காலத்துக்குள் நம் நாட்டிலும் வந்து விடும் கண்டிப்பாக.

நேஹா பிறந்த போது பார்க்க வந்தவர்கள் பலர் “அய்யோ. பொண்ணு உங்களைப்போல கலர் இல்லையே” என்று வருந்தினாகள்.

”நல்ல வேளை. அவங்க அப்பா மாதிரி அழகா வரணும்னு தான் ஆசைப்பட்டேன்” என்பேன். அதுவும் சொன்னவர் சிவப்பாக இருந்தால், “சிவப்பா கண்றாவியா நம்மை மாதிரி பிறந்திருந்தா எப்படி இருந்திருக்கும்” என்று சிரிப்பேன். வாயை மூடிக் கொண்டு விடுவார்கள்.

நேரம் இருக்கும் போது என் ஆங்கிலப்பக்கத்தில் இது குறித்த என் பதிவை வாசித்துப் பாருங்கள்.

http://deepajoe.blogspot.com/2008/07/unfair-ugly-ive-been-meaning-to-write.html
இது

Rithu`s Dad said...

நல்ல பதிவு முல்லை, ஆனால் அனேகமாக இது பப்புவின் காலத்திற்க்கு தேவைப்படாது என்றே என்னுகிறேன்.. கண்டிப்பாக எதிர்காலம் என்பது அவர் அவர் திறமைக்கும் அறிவுக்கும் மட்டுமே முன்னுரிமை கொடுப்பதாக அமையும் என்பது என் கருத்து..

அது சரி கருப்பை முதன்மைப்படுத்துவதற்க்காக வென்மையை சிறுமைப் படுத்த வென்டுமா?!! எல்லா நிறமும் சமம்.. எல்லா மனிதர்களும் சமம்... சரி தானே..

rapp said...

அன்புமணி அமைச்சரா இருந்தப்போ செய்ய நினைச்ச உருப்படியானக் காரியம் இது சம்பந்தமான்னு நினைக்கிறேன். இந்த வெள்ளை தோல் கிரீம்கள மற்றும் விளம்பரங்கள கட்டுப்படுத்த டிரை பண்ணாருன்னு, ஞாபகம்.

வித்யா said...

நல்ல கடிதம்.

தீஷு said...

இனிமேல் வருகிற ஜெனரேஷனில் இந்த மாதிரி பிரச்சனைகள் அதிகமாக இருக்காது என்று தோன்றுகிறது முல்லை. நல்லதொரு தன்னம்பிக்கைத் தரும் பதிவு

விக்னேஷ்வரி said...

Fantastic, beautiful letter Mullai.

ராமலக்ஷ்மி said...

அற்புதமான பொக்கிஷமாய் போற்ற வேண்டிய கடிதம் முல்லை.

தாரணி பிரியா said...

நல்ல கடிதம் முல்லை. நானும் சின்ன பொண்ணா இருந்தப்ப கருப்பா இருக்கிறதை பத்தி நிறைய வருத்த பட்டு இருக்கேன். ஆனா போக போக நிறம் ஒரு பெரிய விஷயமே இல்லை. நம்ம சாதிக்கிற போற விஷயங்கள்தான் நம்மளை முன்னிறுத்துமுன்னு புரிஞ்சுகிட்டேன்.

//Rithu`s Dad said...

நல்ல பதிவு முல்லை, ஆனால் அனேகமாக இது பப்புவின் காலத்திற்க்கு தேவைப்படாது என்றே என்னுகிறேன்.. கண்டிப்பாக எதிர்காலம் என்பது அவர் அவர் திறமைக்கும் அறிவுக்கும் மட்டுமே முன்னுரிமை கொடுப்பதாக அமையும் என்பது என் கருத்து.. //

இவர் சொன்னது போல இப்ப இருக்கிற குழந்தைங்க ரொம்ப ஷார்ப். அவங்க காலத்தில கருப்பு வெள்ளை அப்படின்ற பேச்சே இருக்காதுன்னு தோணுது :)

பாசகி said...

பப்பு கொடுத்துவைச்சவங்க...

கானா பிரபா said...

கடிதத்தில் நிறைய விஷயத்தை கலந்துட்டீங்க

வருங்கால முதல்வர் said...

கண்டிப்பாக தேவைதான். மீண்டும் என் பெண்ணை வைத்தே விளக்குகிறேன். ஹரிணியை 3 வயது முதலே டே கேரில் குழந்தைகள் பிரவ்ணி என்று கூப்பிடுவார்களாம், ரொம்ப கவலைப்படுவாள். இப்போ இல்லை அது தானாக சரியாகி விடும் அல்லது வேறு சாதனைகள் மறக்கடித்துவிடும்.தானகவே நடக்கும்.நாம் அவர்களின் உண்மையான வெற்றிக்கு வழிகாட்டியா இருந்தால் போதும்.

மயில் said...

கருப்பும் ஒரு அழகு, காந்தளும் ஒரு ருசி.

ரொம்ப நல்ல இருக்கு முல்லை. என் அம்மா இதுபோல் எனக்கு எழுதவில்லையே என்று தோன்றுகிறது..

ராஜா | KVR said...

நிறம் குறித்த தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களுக்கும், அவர்களது அந்த எண்ணத்தை இன்னமும் அதிகப்படுத்தும் விளம்பரங்களுக்கும், நிறத்தை கேலி செய்பவர்களுக்கும் அவசியமான பதிவு.

//அடுத்ததடவை லீவுக்குப் போகும்போதும் இதே மாதிரி நிகழ்ந்ததது பப்பு! நான் அவர்களை பார்த்து கேட்டது இதுதான், உங்கள் முடியின் நிறம் என்ன? உங்கள் பாதத்தின் நிறம் என்ன? எந்த நிறத்தைத் தலையிலும் எந்த நிறத்தை காலின்கீழும் வைத்துக்கொண்டு நடக்கிறீர்களென்று//

சூப்பர்.

ஆனால், இந்தப் பதிவை பப்புவின் காலத்தில் படிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருப்பதே இந்தப் பதிவின் வெற்றி.

Sathananthan said...

இந்த நேரத்தில் Michael Jackson ஐயும் ஞாபகப் படுத்திக் கொள்வது நல்லது. அவரது சிறு வயதுப் புகைப்படங்களில் துறு துறுவென்று அழகான சிறுவனாக இருந்திருக்கிறார். ஆனால் இறுதியில்...... நிற பேதம் சம்பந்தமான எத்தனை வலி அவரை இதை நோக்கித் தூண்டியதோ அல்லது வேறு ஏதோ தெரியவில்லை.....

மிகவும் நல்ல பதிவு.........

நசரேயன் said...

அனுபவபட்டு இருக்கேன்.. நான் ஒரு அட்டு கருப்பு, உண்மைதான் மற்றவர்களின் கிண்டலை காதில் வாங்கி கொள்ளக்௬டாது

தமிழ் பிரியன் said...

///உடலின் சருமம் கருப்பாயிருந்தாலும் உன் மனம் எப்படியிருக்கிறது என்பதுதான் முக்கியம் என்று நான் பயிற்றுவிக்கப்பட்டேன்!///

ஆச்சி, You are great..:)
நல்ல விஷயத்தை அழகா, தெளிவா கடிதமா கொடுத்திட்டீங்க..:)
இது எல்லாருக்கும் பயன்படும்.

சின்ன அம்மிணி said...

//இந்தப் பாதையை உனக்கு முன் கடந்துசென்ற
தன் தோலின் நிறத்தை நேசிக்கிற
உன் அம்மா!//

வாவ் ஆச்சி

♫சோம்பேறி♫ said...

இந்த வருடத்தின் சிறந்த பதிவுகளில் ஒன்று.. தொடர்ந்து கலக்குங்க..

பைத்தியக்காரன் said...

ஆச்சிமா,

குழந்தை(களு)க்கு தேவையான, அவசியமான கடிதம். நிச்சயம் இதிலுள்ள வாசகங்களை பப்புவிடம், நீங்கள் தேவையான நேரங்களில் எல்லாம் பகிர்ந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

யாருடைய பயணத்தையும் யாரும் தீர்மானிக்க முடியாது. ஆனால், வழிகாட்ட முடியும். பப்புவுக்கு மட்டுமல்ல, பல தாய் - தந்தையருக்கு இந்தப் பதிவு நிச்சயம் தெளிவை உண்டாக்கும்.

முடிந்தால், அவ்வப்போது பப்புவுக்கு இதுபோல் கடிதம் எழுதி வாருங்கள். இந்திரா பிரியதர்ஷினிக்கு ஒரு அப்பா எழுதிய கடிதங்களை இன்றும் உலகம் வாசிக்கிறது. நாளை பப்புவுக்கு ஒரு அம்மா எழுதிய கடிதங்களை அதே உலகம் வாசிக்கட்டுமே.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

பாபு said...

பப்பு கொடுத்துவைச்சவங்க

" உழவன் " " Uzhavan " said...

நல்ல `கரு'த்து.

//ஆனால், தோலின் நிறம் குறித்த சர்ச்சைகள், விளம்பரங்கள் உன்னை பாதிக்காமல் பார்த்துக்கொள் என்றுதான் சொல்ல வருகிறேன்!//

நல்லா சொல்லிருக்கீங்க.

கையேடு said...

ஒன்னும் சொல்லத் தோணலை வாசித்து முடித்ததும் ஒரு அடர் மொளனம் சூழ்ந்தது..

ச.முத்துவேல் said...

அவசியமான,முக்கியமான பதிவு.

நிஜமா நல்லவன் said...

Great!

மணிநரேன் said...

நேற்றிலிருந்து பலமுறை வாசித்துவிட்டேன். வெறுமனே இந்த பதிவிற்கு கடிதம் நன்றாக இருந்தது என கருத்துரையிட என் மனம் ஒப்பவில்லை.

//கையேடு said...

ஒன்னும் சொல்லத் தோணலை வாசித்து முடித்ததும் ஒரு அடர் மொளனம் சூழ்ந்தது..//

ஒருவகையில் வழிமொழிகிறேன்.

என்னுள் மொளனம் சிலநேரம் சூழ்ந்தன; கேள்விகள் பலநேரம் எழுந்தன.

சினேகிதி said...

ரொம்ப அழகான கடிதம்....என்ர அம்மாவும் எனக்கு இப்பிடி ஒன்டை எழுதியிருக்கலாம் இல்லாட்டி சொல்லியாவது இருக்கலாம். எனக்கான வாதப்பிரதிவாதங்களை நான்தான் தேடித் தெரிந்துகொண்டன்.

விளையாட்டு விளையாட்டாக இப்பவும் ஆட்கள் கேட்பதுண்டு ஏன் நான் மட்டும் எங்கட வீட்டி நிறம் குறைவெண்டு:)

Puppy is lucky that she has you:)

புதுகை.அப்துல்லா said...

கருப்பு என்பது திராவிட இனத்தின் தனிப்பெரும் நிறம்.கருப்பு நிறம் ஒரு இனத்தின் அடையாளம். கருப்பாய் பிறக்க,இருக்க குடுத்து வைத்திருக்க வேண்டும்.

சற்றே வெள்ளையாய் பிறந்ததற்காக இன்றளவும் வேதனைப்படும்,

மு.மு.அப்துல்லா

கயல்விழி said...

அருமையான கடிதம், ரொம்ப நாளுக்கு பிறகு ப்ரெஷான பதிவு படித்ததில் மிக்க மகிழ்ச்சி.

//ஏனெனில், பப்பு கருப்பு நிறம் உண்மையில் நல்லது. அதனுள் நீ மிகவும் பாதுகாப்பாக உணர்வாய்! //
உண்மை, மெலனின் அதிகமாக இருப்பது கேன்சர் வராமல் இருக்க உதவுகிறதாம்.
//வெண்சருமம் கொண்டவர் கடக்க முடியாத இடங்களை, மேற்கொள்ள முடியாத பயணங்களை நீ எளிதாக கடக்கலாம்!அவர்களின் எல்லைகளைவிட உன் எல்லைகள் இன்னும் விரிந்தது. உன்னை கட்டுபடுத்தாதது! எல்லாவற்றுக்கும் மேல், பியிங் டார்க் இஸ் ஃபன்!//

இது மட்டும் ஏன் என்று புரியவில்லை, கொஞ்சம் விளக்குவீர்களா?

In my opinion, "Being happy in your own skin color is fun! doesn't matter you are white, black, yellow, brown etc"

கண்மணி said...

simply superb
i like the way you teach pappu.
she is really lucky to have a mom like you

Supa said...

அருமையான பதிவு. ஆனால் நீங்க பரவாயில்லீங்க....எங்க வீட்ல நான் நல்ல நிறம், ஆனால் என் மகள் கருப்பு. இதை சுட்டி காட்டும் நிறைய பேருக்கு இந்த பதிவ எடுத்து காட்டணும் போல இருக்கு, especially the last paragragh. see how blessed my daugher is என்று.
குழந்தை பிறந்த உடன் நேரா குழந்தையின் காது நிறத்தை பார்க்கும் புத்தி எப்போ தான் மறையுமோ அப்போ தான் இதுக்கு எல்லாம் விடிவு காலம்?

Dr.Rudhran said...

congratulations

பிரியமுடன்...வசந்த் said...

யக்கோவ்...உங்களுக்கும் பப்புக்கும் சேர்ந்து வாழ்த்துகள்....

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள் முல்லை & பப்பு

வந்தவாசி ஜகதீச பாகவதர் said...

இது பெண் பார்க்கும் படலத்திலுருக்கும் பெற்றோர்களுக்காக.

ஜ.ப. இரவிச்சந்திரன், பெங்களூர்

ஹரணி said...

சந்தன முல்லை...
இப்போதுதான் உங்கள் வலைத்தளத்தைப் பார்த்தேன். அனுபவத்தின் வலி வலிமையானது. அதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். அருமை.

Maya said...

Hi Sandanamullai

This is a wonderful post. It must be a while since you wrote this, but I read it just today. I was really moved to read this.

Good one!

- Vaneetha, Mother of Maya