பப்புவை வேனில் அனுப்ப காத்துக்கொண்டிருந்தோம், வேன் வருமிடத்தில். எங்கள் தெருவில் மாடுகள் எப்போதும் நடைபழகிக்கொண்டிருக்கும். நாங்கள் நின்றுக் கொண்டிருந்த இடத்தை நோக்கி ஒரு மாடு வந்துக்கொண்டிருந்தது, ஒரு ஐந்தடி தூரத்தில். உடனே பப்பு, ”என்னைத் தூக்கு தூக்கு” என்று சொல்லத் துவங்கினாள். ”ஒன்னும் பண்ணாது பப்பு, அது போய்டும்”
என்று சமாதானப் படுத்திக் கொண்டிருந்தேன். வேகமாய் பப்பு சொன்னாள்,
“நான் குட்டி பொண்ணுடி, தூக்குடி”!! அவள் பெரிய பெண்ணா, குட்டி பெண்ணா என்று தீர்மானிப்பது சந்தர்ப்பங்களும், பப்புவும்தான்!!

இரவில் தூக்கத்திலிருந்து திடீரென் எழுந்த பப்பு, கால் விரல்களில் கடைசியைக் காட்டி,
“இது ஏன் குட்டியா இருக்கு? இது சரியா சாப்பிடலையா?”
அடுத்த விரலையும் காட்டி,
”இதுவும் சரியா சாப்பிடலையா” என்று கேட்டுவிட்டு தூங்கிப் போனாள். அதை சொல்ல ஏன் அந்த நடுஇரவு நேரத்தை தேர்ந்தெடுத்தாள் என்பது எனக்கு புரியாத புதிர்!!

எனது நண்பர்களின் அம்மாக்கள் மொபைல் உபயோகிக்க கற்றுக்கொண்டப்போது,
நீங்கள் எனக்கு குறுஜ்செய்தி அனுப்பினீர்கள், T1 லைப்ரரியை உபயோகித்து!!
எனது நண்பர்களின் அம்மாக்கள் மெசேஜ் அனுப்பியபோது
பப்புவின் குரலை ரெக்கார்ட் செய்து ரிங்டோனாக மாற்றிக்கொண்டீர்கள் நீங்களாகவே!!
எனது நண்பர்களின் அம்மாக்கள் கணினியை இயக்கக் கற்றுக்கொண்டபோது
நீங்கள் எனக்கு மெயில் அனுப்பினீர்கள்,
மூன்றாவது முறையாக உருவாக்கிய ஐடிமூலமாக!!
எனது நண்பர்களின் அம்மாக்கள் மெயில் அனுப்பியபோது
நீங்கள் ஆர்குட் ப்ரொபைலையும், ப்ளாக்கர் ப்ரொபைலையும் உருவாக்கிக்கொண்டீர்கள்!
இப்போது எனது பள்ளித்தோழிகள் பலரின்,கல்லூரித் தோழிகள் சிலரின்,
நண்பர்கள் லிஸ்டில் நீங்களும்!!
(நேற்று என் பெரிம்மாவும் நானும் ஆர்குட்டில் ஸ்கராப் செய்துக் கொண்டிருந்தோம்!!
ஒரு நீண்ட உரையாடலுக்குப் பிறகு அவர்கள் ஸ்க்ராப் புக்கிலிருந்த என் ஸ்க்ராப்-களை
அழித்தபோது, “என்ன பயமா, ஏன் டெலீட் செய்தீர்கள்” என நான் கேட்டதற்கு,அவர்களின் பதிலைப் பார்த்து நெடுநேரம் சிரித்துக்கொண்டிருந்தேன்!
namma rathahtile bayamma?what a disgrace!lesa nadukkam mattumdhan.!!!
சாரி பெரிம்மா, என்றைக்கும் உங்களின் முயற்சிக்கு உறுதுணையாய், பாராட்டாய் இருந்ததில்லையெனினும், கிண்டல் செய்யாமல் இருந்ததில்லை!! (இப்போது மட்டும் மாற்றிக்கொள்ள முடியுமா?!!)
you always made me proud, proud of me...proud of yourself!