மாலினி நேற்றுதான் தனது எட்டாவது பிறந்த நாளைக் கொண்டாடினாள்.
அவளது நண்பர்களும், உறவினர்களும் அவளது பிறந்தநாளுக்கு வந்து வாழ்த்துத் தெரிவித்ததுடன் பரிசுகளும் அவளுக்குக் கொடுத்தனர்.பரிசுகள் என்றால் மாலினிக்கு மிகவும் பிரியம். பரிசுப் பொருள் சுற்றியுள்ள காகிதத்தைப் பிரிக்கும்போதே அவள் கண்கள்
ஆவலுடன் விரியும். இப்போதெல்லாம் அவளாகவே காகிதத்தை அழகாகப் பிரிக்கக் கற்றுக் கொண்டு விட்டாள். முன்பெல்லாம் அவளது அம்மா சிலப் பரிசுப் பொருட்களைத் தனியாக எடுத்து வைத்து, இன்னும் சிறிது நாட்கள் சென்றபின் தருவதாகக் கூறிவிட்டு ஒருசிலவற்றை மட்டும் கொடுப்பார்கள். ஆனால் இந்தப் பிறந்தநாளிலிருந்து எல்லாப் பரிசுப் பொருட்களையும் அவளிடமே கொடுத்து விட்டார்கள். அது மாலினிக்குத் தான் ஒரு பெரியச் சிறுமியாகிவிட்டதைப் போன்ற கவுரத்தைக் கொடுத்தது.
அவள் பரிசுகளைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தப்போது பொம்மைகள், கதைப்புத்தகங்கள், ஒன்றாகச் சேர்த்து ஒட்டவைக்கக் கூடிய புதிர்கள், வண்ணம் தீட்டும் புத்தகங்கள் போன்றப் பல பரிசுகள் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தாள். அவற்றில் ஒரே மாதிரியான இரண்டுப் புதிர்கள் இருக்கக் கண்டாள்.
”அம்மா, இங்கே பாருங்களேன், இந்த சிக்-சாக் புதிர்கள் ஒரே மாதிரி இரண்டு இருக்கு “ என்றாள் அம்மாவிடம்.
அம்மாவும், ”எங்கே காட்டு” என்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்போது மாலினி, “அம்மா, குட்டிமணி மாமாவும், அருண் மாமாவும் ஒரே மாதிரி வாங்கியிருக்காங்க, அம்மா!” என்றாள்.
அம்மா, “ஆமா, மாலினி! இருக்கட்டும், ஒன்றை நீ எடுத்துக் கொள், இன்னொன்றை தனியாக வை” என்றார்கள்.
“ஏன், அம்மா? அதை மாமாகிட்டே கொடுத்து வேற மாத்திக்கிட்டு வரச் சொல்லலாமா?” என்றாள் மாலினி.
அம்மாவும் புன்னகைத்துக் கொண்டே, “மாலினி, கொடுத்தப் பரிசைத் திருப்பிக் கொடுப்பது நல்ல நாகரீகமல்ல”, என்றார்.

உடனே மாலினி, “அப்புறம் இது பழசாயிடுச்சுன்னா இன்னொன்னு எடுத்துக்கலாமா, அம்மா” என்றாள்.
அம்மா, “இல்லம்மா, நம்மத் தேவைக்கு அதிகமா இருந்ததுன்னா, அது நம்முடையதுக் கிடையாது. அது மத்தவங்களுக்கு, அதாவது அந்தப் பொருள் இல்லாதவங்களுக்குச் சேர வேண்டியது”.
மாலினி பார்த்துக் கொண்டிருந்தாள், பதில் சொல்லாமல். அவள் மனதிற்குள், ”அப்படின்னா அம்மா இதை ஆகாஷிற்குக் கொடுக்கச் சொல்வார்களோ, அப்போ அவன்கிட்டே இருக்கும் சிவப்புக் காரை வாங்க்கிக்கலாமா” என்றெண்ணியவாறு, “அம்மா, இதை நான் என் ப்ரெண்ட்ஸ் யாருக்காவது கொடுத்துட்டு அவங்ககிட்டேயிருந்து அதிகமா இருக்கற விளையாட்டுச் சாமானை வாங்கிக்கவா, அம்மா” என்றாள்.
அம்மா, ”ஒன்றாகச் சேர்ந்து விளையாடும்போது பொருட்கள் பரிமாறிக்கொள்ளனும். ஆனா, நாம பரிசாக் கொடுக்கும்போது, திரும்ப எதையும் எதிர்பார்க்கக் கூடாது. நம்ம இதைப் பிரசாந்த்-க்கு கொடுக்கலாம். சரியா மாலினி” என்றார்.
”கஸ்தூரி ஆண்ட்டி கூட வருவானே, அவனுக்கா”, என்றாள் மாலினி.
”ஆமா, மாலினி! தனியா எடுத்து வை , நாளைக்கு காலையிலே அவங்க வேலைக்கு வருவாங்க இல்லையா, அப்போக் கொடுக்கலாம்”, என்றார்.
“அம்மா, பிரசாந்த்கிட்டே இருந்துதுன்னா”, என்று கேள்வி எழுப்பினாள் மாலினி.
அம்மாவும், “சரி, அவங்கம்மாக் கிட்டே கேட்டுட்டு நீ கொடு, சரியா! எப்போது, நம்மக்கிட்டே தேவைக்கு அதிகமா இருக்கோ, அது நம்முடையது இல்லன்னு நினைச்சுக்கோ மாலினி. நம்மைச் சுத்தியிருக்கறவங்க யாருக்கோ,அது நம்ம மூலமா போய் சேரணும். அதனாலதான் கடவுள் அதை நம்மக்கிட்டே சேர்த்திருக்கார்” என்றார்.
”சரிம்மா”, என்றபடி மாலினியும் எடுத்துவைத்தாள், அரைகுறை மனதோடு.
அழைப்புமணியோசை கேட்டு அம்மா கதவைத் திறந்துவிட்டு “மாலினி, இங்கே வா” என்றழைத்தார்கள்.
“இங்கே கையெழுத்துப் போடுங்கம்மா” என்று கூரியர் பணியாளர் சொன்ன இடத்தில் கையொப்பமிட்டாள் மாலினி.
“ஹை!! அம்மா, பெரிம்மா எனக்கு கிஃப்ட் அனுப்பியிருக்காங்க, பாருங்கம்மா, இது தபால் தலைகள் சேகரிக்கும் புத்தகம்தானே!” என்றாள் மலர்ந்த முகத்துடன்.
அம்மாவும், “ஆமா, அவங்க உன்கிட்டே சொன்ன மாதிரி, அதைத்தான் அனுப்பியிருப்பாங்க,மாலினி! பார்த்தியா, நீ மத்தவங்களுக்குக் கொடுக்கணும்னு நினைச்சவுடன், உனக்கு ஒரு கிஃப்ட் வருது” என்றார்.
மாலினியும், ”ஆமா, அம்மா நான் பிரசாந்த்-கிட்டே இருந்துச்சுன்னா அவங்க அக்காவுக்கு அந்தப் புதிரைக் கொடுப்பேன், அம்மா. ”, என்று சொல்லிவிட்டு, பிறந்தநாளுக்கு வந்திருந்தவர்களுக்கு ”நன்றி” சொல்லி வாழ்த்தட்டை எழுதத் தொடங்கினாள்
பி.கு 3 : தேவைக்கு அதிகமாக பணம் வைத்திருப்போர் எனது வங்கி கணக்கிற்கு அனுப்பி விடவும்! (மாரல் ஆஃப் த ஸ்டோரி!)
பி.கு 2 : கதை எனதுக் கற்பனையே. அணுகுமுறையில் மாற்றம் கொண்டுவரலாமென்று விரும்புவோர் தயைச் செய்து சுட்டிக் காட்டவும்.
பி.கு 1: what an irony!! :-) சிறுமியாக இருந்தபோது பெரியவர்களுக்கான கதைகளும், பெரியவர்களானப் பின் சிறுவர்களுக்கானக் கதையும் எழுதுவதையெண்ணி யாரும் எள்ளி நகையாடவேண்டாம் :-))...பப்பு படிக்க நான் எழுதி வைக்கும் கதைகள்!