Sunday, February 01, 2009

வழக்கொழிந்த தமிழ் சொற்கள் (தொடர்பதிவு)

வழக்கொழிந்த தமிழ் சொற்கள் எழுத அமித்து அம்மா சொல்லியிருக்காங்க! நன்றி அமித்து அம்மா!

அவங்களே சொல்லியிருக்கற மாதிரி, உண்மையில் நாம் பேசுவது தமிழா என்பதில் சந்தேகமே! காலையில் எழுந்து “பல் விளக்கு” என்று பப்புவிடம் சொல்லாமல், “ப்ரஷ் பண்ணியா?” என்றுதானே கேட்கிறேன்!! ஆனால், என் ஆயா அப்படி கிடையாது. அவர் உபயோகிப்பதில் பாதியளவுதான் நான் தமிழ் வார்த்தைகள் பேசுகிறேன். அவர் சொல்லும் பல வார்த்தைகள் தூயத்தமிழேயானாலும், கிண்டல் செய்திருக்கிறோம் அவரை அவ்வார்த்தைகளை வைத்து!! உறவினர்கள் தொலைபேசியில், “பப்புவை கூப்பிடுங்க” எனும்போது பப்பு உடனே வராவிட்டால், “சீக்கிரம் வா, காத்துக்கிட்டிருக்காங்க இல்ல” என்பார். ஆனால் நான், “சீக்கிரம் வா, வெயிட் பண்றாங்க இல்ல” என்கிறேன்!

இந்தப் பதிவில் என் ஆயா உபயோகிக்கும், ஆனால் அவர்களுக்கு இரண்டாவது தலைமுறையான நான் உபயோகிக்காத, சட்டென்று நினைவில் வரும் வார்த்தைகளை கணக்கில் கொண்டுவர பார்க்கிறேன். இப்படித்தான் வார்த்தைகள் வழக்கொழிகிறது போல!!

ஆயாவின் சொற்களை உச்சரிக்கும் முறையும் சரியாக இருக்கும். உதாரணத்திற்கு, பல்லி..அதை நாங்கள் “balli" என்று சொல்வோம். (நாங்கள் என்பது நானும், தம்பியும் என்று பொருள் கொள்க!)ஆனால் உண்மையில் அது "palli" யே!!

நான் ஒருகாலத்தில், ஆங்கில பாடல்கள், தம்பி ஒரு படி அதிகம் போய் ராக் என்று வீடே அதகளமாக இருக்கும், ஓடவிட்டிருக்கும் இசையில்! ஆயா சொல்வார்கள், “என்ன சத்தம் இது, கேட்கவே நாராசமா இருக்கு?!!” கண்டிப்பாக நாங்கள் இந்த வார்த்தையை எக்காலத்திலும் உபயோகித்ததில்லை, “ஆயா, எப்படி இருக்கு, நாராசமாவா..நாராசமா இருக்கா ஆயா” என்று அவர்களை எரிச்சலூட்டியதைத் தவிர! (Plz people, do not mistake me, I was so raw that time, என்ன பண்றது டீன்ஸ்!!)

ஏதாவது அனத்திக்கொண்டு, அல்லதுத் தொல்லைச் செய்தால், “ஏன் சிங்கிநாதம் பண்றே?” என்பார்கள். அதற்கும் கிண்டல்தான்! பிறிதொருநாளில் வீட்டில் உறவினர்கள்/நண்பர்கள் குழுமியிருந்தபோது எழுந்த பேச்சினில் ஆயா புரிய வைத்தார்கள், அது சிங்கிநாதம் இல்லை, உண்மையில் “சிணுங்கல் நாதமே!!”!
எனக்கு அதிலிருந்து ஒரு பெருமையே..ஏனெனில், நான் அரற்றுவதையும் ஆயா நாதமென்று சொல்லியிருக்கிறார்களேயென்று!! (ஆனா, பப்பு அப்படி செய்யும்போது நான் சொல்கிறேன். “சும்மா நை நை பண்ணாதே”!! :-))

பப்புவின் அரணாகயிறு (அரை ஜாண் (?) கயிறு/ அரைஞான் (??) கயிறு ) நெகிழ்ந்தபோது, ஆயா அம்மாவிடம் வாங்கிவர சொன்னது, “அரம்ப்ளி/லி”. அது ஒரு முக்கோண வடிவத்தில் சங்கிலிகளைக் கோர்த்ததுபோல் இருந்தது. அவர்கள் காலத்தில் மெல்லிய தகடு போல் இருக்குமாம்! அதன் ஒரு முனையில் கயிறைக் கட்டி மாட்டவேண்டியது! அவர்கள் சொல்லும் வரை எனக்குத் தெரியாது, மேலும் பிற்காலத்தில் உபயோகப்படுத்துவேனா என்பதும் சந்தேகமே..வார்த்தையையாகவோ அல்லது பொருளாகவோ!!

பப்புவிற்கு பல் முளைத்து ஈறுகள் ஊறும்போது கையில் கிடைப்பதைக் வாயில் வைப்பதுமாயிருந்தாள். நான் “டீதர்” வாங்கியதைப் பார்த்து சொன்னார்கள், ”எங்க அண்ணா உங்க மாமாவுக்கு சீப்பாங்கழி வாங்கிக் கொடுத்தாங்க” என்று. அது விரல் நீளத்தில் மேலே உருண்டையாக மரத்தாலான அந்தக் காலத்து டீதர். ஆனால், அது இப்போது கிடைப்பதில்லை. எங்காவது மியூஸியத்தில் காணக் கிடைக்கலாம்.


பதிவு நீண்டுக் கொண்டிருப்பதால், தொடர நான் அழைப்பது,

பார்வைகள் கவிதா
சிறுமுயற்சி முத்துலெட்சுமி
விரிந்த சிறகுகள் திவ்யாபிரியா

அவர்களின் சுவாரசியமான லிஸ்டை எதிர்நோக்கி!!

28 comments:

நட்புடன் ஜமால் said...

நாராசமா - இது மட்டும் தெரியும்.

(நல்ல ஆயா)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அழகான அவசியமான தொடரை எழுதிய அமித்து அம்மா மற்றும் முல்லைக்கு நன்றி... தொடர்கிறேன்..
" பண்ணி" ரொம்ப கலந்து போயிடுச்சு நம்ம வழக்கு மொழியில் :( .. இப்ப சில சமயங்களாக நான் அதை "செய்து" என்றாக கஷ்டப்பட்ட்டும மாற்றிப்பேச முயற்சி செய்கிறேன்..

நட்புடன் ஜமால் said...

\\நாராசமா\\

இது மட்டும் தெரியும்.

பழமைபேசி said...
This comment has been removed by the author.
பழமைபேசி said...

இத்தொடரைத் துவக்கி வைத்த, எமதுபக்கத்தின் வாசகரும், சக பதிவருமான Sriram அவர்களுக்கும் வாழ்த்துகளும் நன்றியும்! உங்கள் பதிவு குறித்து, மேலதிகத் தகவல்களை விரைவில், பதிவிடுகிறேன். சொற்களை நினைவு படுத்தியமைக்கு மிக்க நன்றி!!

உதாரணம்: நாராசம் என்பது காய்ச்சிய இரும்புத் துண்டு, அல்லது சுடுகோல். அதைத்தான், காதில் நாராசம் பாய்ச்சியது போல் உள்ளது என்பது வழக்கம்.

திகழ்மிளிர் said...

அருமை

பிரேம்குமார் said...

//எங்க அண்ணா உங்க மாமாவுக்கு சீப்பாங்கழி வாங்கிக் கொடுத்தாங்க” என்று. அது விரல் நீளத்தில் மேலே உருண்டையாக மரத்தாலான அந்தக் காலத்து டீதர்//

வழக்கொழிந்த சொற்களுடன் வழக்கக்கொழிந்த சில பொருட்களையும் நினைவுப்படுத்தியிருக்கிறீர்கள். நன்றி முல்லை :)

கவிதா | Kavitha said...

அழைத்ததற்கு நன்றி நல்ல தொடரைஇ அமித்து ஆரம்பிச்சி இருக்காங்க..

கண்டிப்பா எல்லோரும் எழுதற மறைந்து வருகின்ற தமிழ் வார்த்தைகளை ஒன்றாக சமரி மாதிரி கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்..:)

சிங்கிநாதம் - என்னுடைய ஆயா என் சாப்பாட்டு விஷயத்திற்கு சொல்லுவார்கள். காரம் சாப்பிட மாட்டேன்.. சாப்பாட்டில் சிங்கிநாதம் என்பார்கள்..:)

அரம்ப்ளி/லி”. - இதற்கு வேறு என்னவோ எங்கள் வீட்டில் சொல்லுவார்கள். .இருங்க யாரையாவது கேட்டுட்டு வந்து திருப்பி கமென்ட்டரேன்..!!

singainathan said...

//ஏதாவது அனத்திக்கொண்டு, அல்லதுத் தொல்லைச் செய்தால், “ஏன் சிங்கிநாதம் பண்றே?//

:) Enakkum ithukkum entha sambanthamum illai

Anputan
Singai Nathan

PoornimaSaran said...

நல்ல தொடர் பதிவு:)

thevanmayam said...

என்ன சத்தம் இது, கேட்கவே நாராசமா இருக்கு?!!” கண்டிப்பாக நாங்கள் இந்த வார்த்தையை எக்காலத்திலும் உபயோகித்ததில்லை//

இது கதைகளில் படித்து உள்ளேன்!!

thevanmayam said...

ஆயா அம்மாவிடம் வாங்கிவர சொன்னது, “அரம்ப்ளி/லி”. அது ஒரு முக்கோண வடிவத்தில் சங்கிலிகளைக் கோர்த்ததுபோல் இருந்தது.///

அரசிலை என்பார்களே
அதுவா?

அமுதா said...

சீப்பாங்கழி - டீதர் . ரொம்ப புதுசா கேள்விப்படறேன். நல்லா இருக்கு. balli palli ஆன மாதிரி கூட நிறைய இருக்கும்னு நினைக்கிறேன் இப்பல்லாம்...

முகவை மைந்தன் said...

ஆர்வத்தைத் தூண்டும் சிறப்பான தொடர்.

தொலைக்காட்சி முதலான நேரந்திண்ணிகளால் சிங்கி நாதம் கேட்பது (அ) பொருட்படுத்துவது அரிதாகப் போய்விட்டது. சீப்பாங்கழியை நவீனத்திற்கு (teether தானே) காவு கொடுத்து விட்டோம்.

இன்னும் சில சொற்கள் (வார்த்தைகள் அல்ல) மற்றிக் கொள்ள முடியுமே. சந்தேகம் - ஐயம், உபயோகம் - பயன்பாடு, list - பட்டியல். மற்றபடி உங்களுடையது நல்ல தமிழ்ப் பதிவு தான். நன்றி.

கவிதா | Kavitha said...

//அரசிலை என்பார்களே
அதுவா?//

ஆமாம் எங்க வீட்டில் இதை தான் சொல்லுவார்கள்.

சந்தனமுல்லை said...

நன்றி ஜமால்! ஓ..நீங்களும் ஆயாக்கிட்டே திட்டு வாங்கியிருக்கீங்களா? :-))

நன்றி முத்துலெட்சுமி, பன்னி-ன்னாதாங்கத் தப்பு! பண்றோம், பண்ணுங்க அப்படின்றது தமிழ்சொல்தானே..மாத்தவேண்டிய அளவிற்கு இருக்கிறதா எனக்குத் தோணலை..மேலும் எல்லா இடத்திலும் செய்-ன்னு மாத்தினா ஒரு மாதிரி ஆர்ட்டிபிஷியலாத் தோணலை..lol!

சந்தனமுல்லை said...

நன்றி பழமைபேசி..உங்க பதிவினைப் பார்த்தேன்!

நன்றி திகழ்மிளிர்!

நன்றி பிரேம்..சீப்பாங்கழி இருந்திருந்தால் பொழிலுக்கு வாங்கிக் கொடுத்திருப்பேன்!

சந்தனமுல்லை said...

நன்றி கவிதா, ஆமா இது ஒரு நல்ல தொடர்தான்! சிங்கிநாதம் திட்டு நீங்களும் வாங்கியிருக்கீங்களா..:-) அப்புறம் அரம்ப்ளி/லி..உங்க ஊரில அரசிலையா..:-)

ஹஹ்ஹா..சிங்கைநாதன் அண்ணா..ரசித்தேன்!

நன்றி பூர்ணிமா..

Divyapriya said...

உங்க பாட்டிய அநியாயதுக்கு கலாய்ச்சிருக்கீங்க…பாட்டியோட சொற்கள் எல்லாமே நல்லா இருக்கு :)

நசரேயன் said...

நல்லா உபயோகமா இருக்கு

நானானி said...

சிங்கிநாதத்துக்கு நல்ல அர்த்தம் கிடைத்தது. சிணுங்கல்நாதம்!!
கூதரப்பிசாசு கேட்டிருக்கிறீங்களா?

Nilavum Ammavum said...

சீப்பாங்கழி கிடைக்குதுங்க முல்லை.....மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் வாசலில் இருக்குற கடைகள்ள இப்போவும் கிடைக்குது..

சரி பப்புவுக்கு தம்பி பாப்பா பிறந்த பார்த்துக்கலாம்...

அருமையான பதிவு....

அமிர்தவர்ஷினி அம்மா said...

சட்டென்று நினைவில் வரும் வார்த்தைகளை கணக்கில் கொண்டுவர பார்க்கிறேன். இப்படித்தான் வார்த்தைகள் வழக்கொழிகிறது போல //

சரியாக சொல்லியிருக்கிறீர்கள் ஆச்சி

தாமிரா said...

பிரேம்குமார் said...
வழக்கொழிந்த சொற்களுடன் வழக்கக்கொழிந்த சில பொருட்களையும் நினைவுப்படுத்தியிருக்கிறீர்கள். நன்றி முல்லை :)//

சீப்பாங்கழி நான் இதுவரை கேள்விப்பட்டிராத வார்த்தை. பார்த்திராத பொருளும் கூட.. செம்மையான ஆனால் சிறிய பதிவு.

அரணாகயிறு (அரை ஜாண்(?)கயிறு /அரைஞான்(??)கயிறு)/// அது அரைஞாண் கயிறு.

rapp said...

he he, me the 25th:):):)

rapp said...

//(Plz people, do not mistake me, I was so raw that time, என்ன பண்றது டீன்ஸ்!!)//

தோடா, இதுக்கு மன்னிப்பையும் ஆங்கிலத்துல கேக்குறீங்களா:):):)

rapp said...

இதுல சீப்பாங்கழி ரொம்ப வித்தியாசமா இருக்கு. நான் இப்போதான் முதலில் கேக்குறேன்.

நான் இந்த கெட்ட பழக்கத்தால இங்க வந்து பிரென்ச் கத்துக்கிட்டப்போதான் பாடுபட்டேன். எப்பவுமே நம்ம தாய்மொழியில சரியான வார்த்தை தெரிஞ்சிருந்தா பிற மொழி கத்துக்கும்போது பயங்கர உபயோகமா இருக்கும் என்கிற உண்மைய அப்போ அனுபவிச்சேன். ஆனா இலக்கணத்துல நான் கெட்டிங்கறதால(நெசமாத்தான்:):):)) அதுல சிரமமில்லாம இருந்துச்சி. இங்கல்லாம் இருக்கும்போதுதான் அதிகமா குத்துது:):):)

rapp said...

//பல்லி..அதை நாங்கள் “balli" என்று சொல்வோம். (நாங்கள் என்பது நானும், தம்பியும் என்று பொருள் கொள்க!)ஆனால் உண்மையில் அது "palli" யே!!//

நீங்க சொல்றது ரொம்ப சரி. ஆனா பல்லு கொஞ்சம் பெருசா இருக்கறவங்களை கிண்டல் பண்றத்துக்காக அதை தாரைவார்த்துக் கொடுத்துட்டதால இதை இப்டி மாத்திட்டாங்க போல:):):)