அமித்து அம்மா ஆரம்பிச்சு, வித்யா தொடர்ந்து அப்புறம் என்னையும் இழுத்து விட்டுட்டாங்க இதுல. ஓக்கே என்னோட கொசுவத்தி இல்லை அனுபவங்கள் எப்படியாவது எடுத்துக்கோங்க!
உண்மையில் ஒரு பதிவு எழுதத்தான் நினைத்திருந்தேன் வழக்கம்போல பப்புவை பற்றி! வில் பப்பு ஃபாலோ அ ரிலீஜியன், அப்படின்னு! ஏன்னா, ரிலீஜயனை விட ஸ்பிரிச்சுவலா இருக்கறதுதான் முக்கியம்ன்றது என்னோடக் கருத்து! அந்தப் பத்தி அப்புறம் பார்ப்போம்!
நான், ஒரு தமிழ்நாட்டு பெண்ணுக்குரிய அடையாளங்களான, நீள முடி, பூ வைக்கிறது, கொலுசு போட்டுக்கிறது, கை நிறைய வளையல் இதெல்லாம் இல்லாத ஒருத்தி. ஏனோ அதெல்லாம், சீரியல்லயும் சினிமாலயும் வர்றவங்களுக்குத்தான் எனும் நினைப்பு! பெண்ணுக்கு படிப்பும் அறிவும் இருந்தாப் போதும்ன்ற நினைப்பாக் கூட இருக்கலாம்! உண்மை-ன்னு ஒரு புத்தகம் எஙக் வீட்டுக்கு வரும். அதை ஐந்தாவது படிக்கும்போதிலிருந்து படிக்க ஆரம்பிச்சேன். அதுல படிச்சு, சின்ன வயசுலயே மனசில பதிந்ததனாலேயே என்னவோ எனக்கு நகை, அப்புறம் பூ மேலல்லாம் ஈர்ப்பு இல்லாமயே போய்டுச்சு! பூ ரொம்ப பிடிக்கும், ஆனா பறிக்கப் பிடிக்காது. ஏன்னா, ஒருதடவை கோகுலத்தில், “பூ எனக்குப் பிடிக்கும், ஆனா அதை பறிச்சு ஜாடியில் வைக்கப் பிடிக்காது, குழந்தைகள் கூடத்தான் அழகு. அதனால், அவர்களின் தலைகளை வெட்டியா வைச்சிக்கறோம்-”ன்ற மாதிரி ஒரு பொன்மொழி படிச்சேன். அதிலேர்ந்து பூக்களை பறிக்கறது இல்லை. அதுவுமில்லாம, பூவை தலையில் வைக்க அவ்வளவாக முக்கியத்துவம் கொடுத்ததில்லை நான். ஒருமுறை, மதுரை பஸ் நிலையத்தில் ஒரு பெண் நின்று ஓரத்தில் இருந்த கடையில் பூவாங்கி தலையில் வைத்துக் கொண்டு பஸ் ஏறிச் சென்றதை மிகுந்த வியப்போடு பார்த்தேன் நான்!
வீட்டுல எனக்கு நகை வாங்கினாக் கூட நான் போட்டுக்கவே மாட்டேன். மேலும் அதெல்லாம் எனக்குத் தெரியாமலே வச்சிருந்தாங்க. (காலேஜ் போனப்பறம்தான் ஆகா, இவ்ளோ இருக்கான்னு தெரிஞ்சது. அதிகமில்லை, குட்டி குட்டியா கம்மல்கள்)எனக்கு அதெல்லாம் வேணாம்னு தொடவே மாட்டேன். நானே சம்பாரிச்சுதான் போட்டுக்கணும்னு ஒரு வைராக்கியம். மேலும் நகை மேல அப்படி ஒன்னும் பெரிய ஆசையெல்லாமும் இல்லை. வீட்டிலயும், எனக்கு நகை ஆசை வராதமாதிரிதான் பார்த்துக்கிட்டாங்க. நகை-னு ஒண்ணு போட்டுக்கணும்னு தோணினது, கல்யாணத்துக்கு அப்புறம்தான்! உறவினர் கல்யாணம், விசேஷங்கள்-னு போக ஆரம்பிச்சதுக்கு அப்புறம், அம்மா கொடுத்த நகைகளை பூட்டி வைக்காம அப்போ மட்டும் போட்டுக்க ஆரம்பிச்சேன். மேலும், இன் லாஸ்-க்கு நாம் போட்டுக்கலன்னா அது பிரஸ்டீஜ் பிராப்ளம்! அதுவும், ரொம்ப சிம்பிளாதான், அப்போ மட்டும் அமித்து அம்மாவோட அம்மன் எஃபக்ட் கொடுப்பேன் நான். புடவைக் கட்டி, கை நிறைய மேட்சிங் வளையல் போட்டு, தொங்கல் கம்மல், இல்லேன்னா இருக்கவே இருக்கு முத்துக்கள். பூ மட்டும் நோ சான்ஸ், ஏன்னா எனக்கு இருக்கற முடியில் வைக்க முடியாதே!
கல்யாணம் நிச்சயமானபின் முடி வெட்டாம விட்டுட்டேன் வளரட்டும்ன்னு, முகிலின் பாட்டி வேண்டி விரும்பி கேட்டுக்கிட்டதால! கல்யாணத்திற்கு அப்புறம், ட்ரிம் பண்ணிட்டேன், கொஞ்சமா பின்னல் போடறமாதிரி. அப்போ எங்க மாமியார் வந்திருந்தாங்க ஊரிலிருந்து. நான் ஆபிஸ் கிளம்பும்போது, நான் தலை சீவறேம்மான்னாங்க. யார் என் தலையில்
கைவச்சாலும் எனக்கு பிடிக்காது. ஆனா, நோ சொல்லதான் நமக்கு தெரியாதே. சோ, பின்னி விட்டுட்டு,பிரிட்ஜிலிருந்து பூ எடுத்துட்டு வந்தாங்க. கனகாம்பரம். மஞ்சள் கனகாம்பரம்.
அன்னைக்குன்னு பார்த்து, என் கூட வேலை செய்ற பிரண்டு வேற நான் ஆட்டோலதான் போறேன், ரெடியா இரு, பிக்கப் பண்ணிக்க வரேன் ஒண்ணா போலாம்னு வேற சொல்லியிருந்தா. ஆகா, பிரண்ட்ஸ்-எல்லாம் பார்த்தா கிண்டல் பண்ணியே நம்மளை காலி பண்ணிடுவாங்க்ளேன்னு ஒரு கிலி வேறே! ஆனா, வைச்சிக்காம இருந்தா அவங்க ஹர்ட் ஆகிடுவாங்கன்னும் தோணுது. என்ன பண்ணறது! என் பிரண்டு வர்றா, அவளுக்கு வேணும்னு கட் பண்ணி வைச்சிட்டு, போகும்போது வச்சிக்கறேன் ஆண்ட்டி-ன்னு சொன்னா நானே வச்சிடுறேம்மான்னு வைச்சிவிட்டுட்டாங்க, பார்த்தா அப்பவும், சடையை விட நீளமா தொங்குது பூ! அப்புறம், என்ன ரெண்டு பேரும் மஞ்சள் கனகாம்பரம் வச்சிக்கிட்டு சியன்னா ஸ்விட்ச் பக் பிக்ஸ் பண்ணக் கிளம்பினோம். ஆட்டோவில் போகும்போது ரெண்டு பேரும் எடுத்து ஹாண்ட் பேகில் வைச்சிக்கிட்டோம், அந்தப் பூவை!!
மெட்டிப் போட்டுக்க பிடிக்கும் எனக்கு. ஆனா சில சமயம், செருப்புகளோட ஒத்துப் போகாது, உறுத்தும். ஆனா, பப்பு ஒரு வயசா இருக்கும்போதிலிருந்து அதை கழட்ட முயற்சி செஞ்சு ஒன்றரை வயசுக்குள்ள வெற்றியும் பெற்று விட்டாள். கையில் வச்சிருந்து முழுங்கிட்டா என்ன பண்றதுன்னு, அதையும் கழட்டி வைச்சதுதான், இன்னும் போடலை. எங்கம்மாவும் திட்டித் திட்டி பார்த்துட்டாங்க. நாமதான் சொன்னா செய்ய மாட்டோமே! ஒருவேளை சொல்லாம இருந்திருந்தா போட்டிருப்பேனோ என்னவோ!
கொலுசு போட்டும் பழக்கமில்லை எனக்கு. ஆனா யாராவது போட்டிருந்தா பார்க்கப் பிடிக்கும்.
கல்யாணத்தின் போது, அம்மா ஒரு செட்டும், கல்யாணத்திற்கு அப்புறமும் மாமியார் ஒரு செட்டும் கொடுத்தாங்க. ஆனா, நாந்தான் போட்டுக்க மாட்டேனே.வழக்கம் போல மாமனார் கொலுசு போடும்மா ந்னு சொன்னார். ரொம்ப சத்தம் வரும் அங்கிள், ஆபிஸ்-ல் எல்லாரும் என்னையே பார்க்கற மாதிரி பீலிங் ந்னு சொன்னது,, அந்த மணிகளை மட்டும் எடுத்திட்டு கொடுத்தார். அப்புறம் அவங்க ஊருக்குப் போனப்பறம் கழட்டி வைக்கிறது, அவங்க நாளைக்கு வராங்க இன்னைக்கு நைட் எடுத்து போட்டுக்கறதுன்னு ரெண்டு மூனு தடவை நடந்துச்சு. நம்ம கொள்கைகள், விருப்பங்கள் அடுத்தவங்களை காயப் படுத்திடக்கூடாதுன்னு! அப்புறம், முகில் இதைப் பார்த்திட்டு, உனக்கு இஷ்டமில்லேன்னா போடாதே, நான் கேட்டா சொல்லிக்கறேன் அப்படின்னு சொல்லிட்டாங்க. சோ, அதுக்கும் டாடா!!
நகையெல்லாம், சிட்டில வீட்டுல இருந்தா பயம்ன்னு, லாக்கர்ல கொஞ்சம், எங்க மாமியார் வீட்டுல கொஞ்சம்னு இருக்கும். ஏன்னா, சில சமயம் அது ஹிந்தி ட்யூசன் படிக்கப் போகும். அதேசமயம், ஊரில விசேஷம்னா, அங்க இருக்கும் நகையை போட்டுக்கிட்டு போகலாம். மத்தபடி தாலி போட்டிருக்கும் செயின் மட்டும்தான்! கொத்துக் கொத்தா போட்டுக்கற வழக்கமும் கிடையாது. இப்போ சுத்தமா வளையலும் கிடையாது, போட்டிருந்தா இப்படி டைப் அடிக்கமுடியுமா என்ன! காலேஜ் டே, சாரி டே மாதிரி வந்தா மட்டும் பேஷனபிளா போட்டுப்பேன். அவ்வளவுதா, ஆனா சின்ன வயசுல எக்கச்சக்கமா பான்ஸி வளையல்கள் போட்டிருக்கேன். அதுக்கு அப்புறம் பிரெஸ்லெட்தான். ஏனோ தங்க வளையல் என் கைக்கு நல்லாயில்லாத மாதிரி பீலிங். சின்ன வயசுலே ஒரு தடவை, குடும்ப நண்பர் கல்யாணத்தில், செயினையோ கம்மலையோ வேற தொலைச்சுட்டேன்! அவ்ளோதான், அதுவும் கட். அதுவும் இல்லாம, காலேஜ் படிச்சது ஹாஸ்டல், அதுவும் கொடைக்கானல். பனிரெண்டு மணிநேர பயணம். அதனாலேயே காதுல போட்டுக்க சின்னச் சின்ன கம்மலா கலெக்ஷன் வச்சிருப்பேன். உயிருக்கே ஆபத்தாயிடக்கூடாது இல்லையா! அப்படியே போட்டு போட்டு, இப்போ எனகிட்ட இருக்கறதெல்லாம் லைட் வெயிட் மாடல்கள் தான்!
பதிவு ரொம்ப நீளமா போய்கிட்டிருக்கு!
முடிவா என்னன்னா, சாதாரணமான நாட்கள், அலுவலகம் செல்லும் போது கம்மல்,
தாலி போட்டிருக்கும் செயின். வளையல், பூ நோ எண்ட்ரி! புடவை, அதான் சொன்னேனே, கல்யாணம் அதுவும் காலை முகூர்த்ததிற்கு போனால் மட்டுமே. ரிசப்ஷன் என்றால் சல்வார்! இப்படியிருக்கும் நான், என்னோட அடுத்த தலைமுறைக்கு என்ன கத்துக் கொடுக்கப் போறேன்னு நினைக்கறீங்க? உனக்கு இஷ்டமிருந்தா இதெல்லாம் போட்டுக்கோ, வற்புறுத்தவோ தலையிடவோ மாட்டேன். ஆனா, உனக்கு பிடிச்சமாதிரி வேணுங்கறதை நீ சம்பாரிச்சுதான் வாங்கிக்கணும்!
பி.கு:இதுக்கு எல்லாம் காரணம், அமித்து அம்மாவோட போட்டோ பார்த்து ஒன்னைக் காட்டினாங்க..பார்த்தா, கையில் ஒரு வேல் வைச்சி, ஏதாவதொரு பூவுக்குள்ள நிக்கவோ உட்காராவோ வைச்சு அம்மன் படம் தோத்துது போங்க, அந்த ரேஞ்சுல இருந்தாங்க!! அதைப் பத்தி பேசிக்கிட்டே இருந்தப்போ இதைப் பத்தி பதிவு போடலாமான்னு பேசினது, இப்போ இந்த நெலமையில் இருக்கு. யாராவது இந்தப் பதிவை தொடர்ந்தா நல்லாயிருக்கும்!