Friday, November 06, 2009

ஆயாத்துவங்கள்!!

நம்பிக்கைகள்தானே வாழ்க்கையை சுவாரசியமாக்குகின்றன! கீழே இருப்பவை சிறுவயதிலிருந்து நேற்றுவரை என் ஆயாவிடம் பல்வேறு தருணங்களில் நான் கேட்டவை. ஓவர் டூ ஆயா'ஸ்!

பாத்திரங்களை கழுவுவதற்காக சிங்கில் போடும்போது : பாத்திரத்தைக் காய விடக்கூடாது...தண்ணி ஊத்திவைக்கணும்..இல்லேன்னா வயிறு காயும்!

ஆள்காட்டி விரலை நீட்டிக்கொண்டு (ஸ்டைலுக்காக) சாப்பிடும் பழக்கம் இருந்தபோது:
சாப்பிடும் போது அஞ்சு விரலும் குவிச்சு வைச்சுதான் சாப்பிடணும் - இல்லாட்டி அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போய்டும்!!

ஊருக்குப் போகும்போது தலைக்கு எண்ணெய் வச்சு தலைகுளிக்கக்கூடாது! (ஆனா, தலை குளிச்சாத்தானே பஃப்-னு அழகா இருக்கும் என்ற பிடிவாதத்திற்குப்பின் சீயக்காய் வைத்து தலைகுளிக்க வேண்டாம், ஷாம்பூ உபயோகப்படுத்தலாமென்று தளர்த்தப்பட்டது!)

வீடு இன்னைக்கு துடைக்க வேண்டாம் - ஊருக்குப் போய் இருக்காங்க, வந்தப்புறம் துடைச்சுக்கலாம்.

செவ்வாய்க்கிழமை வெளியாட்களுக்கு காசு கொடுக்க வேண்டாம். (அவங்க சம்பளப் பணம்தான்!)

புது ட்ரெஸ் புதன்கிழமை போடணும். (புதன்கிழமையெல்லாம் புதுட்ரெஸ்தான் போடணும்னு சொன்னா எப்படி இருக்கும்!!)

நகத்தைக் கடிக்காதே - தரித்திரம்.

வேலைக்காரம்மாவுக்கு சாப்பாடு முதலில் வைக்கக் கூடாது. ஒரு நாலு சாதம் எடுத்து வாயிலே போட்டுக்கிட்டு அப்புறம் கொடு.

வடக்குப் பார்த்து உட்கார்ந்து சாப்பிடாதே! கஷ்டம் வந்து சேரும். ('இதுக்கும்மேலயா?!!)

உப்பு கொட்டினியா, துப்பை கொட்டினியா? - (உப்பை கொட்டும்போது கண்டிப்பாக இதை சொல்லிவிட வேண்டும். சோ, துப்பைக் கொட்டியதாக ஆகாது!)

இருட்டினப்புறம் நகம் வெட்டாதே!

ஊரிலேர்ந்து முருங்கைக்காய் எடுத்துட்டு வராதே!

ஊருக்கு நான்-வெஜ் எடுத்துட்டு போனா ஒரு அடுப்புக்கரித்துண்டு போட்டு அனுப்பு.

கிழக்குப்பக்கம் தலை வச்சு படு.

சாதத்தை வேஸ்ட் பண்ணா பிற்காலத்துலே சாப்பாடு கிடைக்காது. (அந்த பிற்காலம் எனக்கு 20 வயசுலேயே ஆரம்பிக்கும்னு தெரியாது!)

சாயங்காலத்துலே தூங்கக் கூடாது..படிப்பு வராது.

சாயங்காலத்துலே சாதம் சாப்பிடக் கூடாது...படிப்பு வராது. (நொறுக்குத்தீனி சாப்பிடலாம்)

அன்ரூல்டு பேப்பரிலே எழுதும்போது எழுத்து கீழ்நோக்கி போகக்கூடாது. படிப்புலே கீழே போய்டுவே!

யாருக்காவது காசு கொடுக்கும்போது வாசல்படிலே நின்னுக்கிட்டு கொடுக்காதே. ஒன்னு அவங்களை உள்ளே கூப்பிட்டு கொடு, இல்லேன்னா நீ வெளிலே போய் கொடு!

குறிப்பு: இதெல்லாம், எங்க ஆயாவுடைய 'நம்பிக்கைகள்' இல்லேன்னா 'வாழ்க்கை அனுபவங்கள்' இல்லேன்னா 'இந்திய பண்பாடு' இல்லேன்னா 'இந்திய கலாச்சாரம்' இப்படி எதுவேனா வச்சுக்கலாம்!இதேபோல, உங்கள் ஆயாவும் உங்களுக்குச் சொல்லியிருந்தால் பகிர்ந்துக்கொள்ளுங்களேன் - பின்னூட்டமாகவோ, பதிவாகவோ!!

அடுத்த இடுகையில் ”ஆயாவின் அட்டகாசங்கள்” !!! ;-)))

41 comments:

அமுதா said...

:-))
நிறைய இது மாதிரி கேட்போமே..

1. இருட்டினப்புறம் குப்பை கொட்டாதே. குப்பையோட குப்பையா செல்வமும் போயிடுமாம்.
2. வெள்ளி, செவ்வாய் நகம் முடி எல்லாம் வெட்டக்கூடாது
3. பிறந்தநாள் அன்னிக்கு அரைக்கீரை வைக்கக்கூடாது
4. ஊருக்கு போயிருக்காங்க... உளுந்து வறுக்கக்கூடாது. இதுல இன்னும் பெரிய லிஸ்ட் உண்டு... நினைவில் இல்லை...
5. இருட்டில் சாப்பிட்டால் பூதமும் சாப்பிடும் (சாப்பிடும்பொழுது கரண்ட் போயிடுச்சுனா விளக்கு வர வரைக்கும் ஃப்ரீஸ்...)(ஆனால் நல்ல விஷயம் தான்.. பூச்சி எதுவும் விழுந்தால் தெரியாது... பட் இப்படி பயமுறுத்த வேண்டாம் :-)
6. விளக்கு வச்ச பிறகு காசு கொடுக்காதே. பால், தயிர் எல்லாம் கொடுக்கக்கூடாது
7. ஊசி தொலைச்சால் கண்டுபிடிச்சுடணும். ஊசிக்கு திருடன் உடனே வருவானாம்
8. கையை ஊனிட்டு சாப்பிடாதே... சாப்பாடு அப்படியே இறங்கிடும்
9. சின்ன பசங்க வெத்தலை சாப்பிட்டால் மாடு முட்டும்
etc.. etc...

பாபு said...

தண்ணிய வீணாக்குனா மகாலக்ஷ்மி நம்ம வீட்ட விட்டு போய்டுவா

பின்னங் காலை சரியா கழுவலேனா சனி பிடிச்சுக்கும்

கதவின் தாழ்ப்பாளை ஆட்டினா சண்டை வரும்

உப்பு இருக்கும் பாத்திரத்தில் கால் படக்கூடாது,தொட்டு கும்பிடு

கால்களை ஆட்டக்கூடாது

ஒருகாலில் நின்னா தரித்திரம்

தலைல கை வைச்சா தரித்திரம்

இன்னும் நிறைய இருக்கு

ராமலக்ஷ்மி said...

இந்தத் தத்துவங்களில் பலவும் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்:)!

கடைசியில், அடுத்த இடுகையில் என்ன என்கிற அறிவிப்பு அட்டகாசம்:))!

சின்ன அம்மிணி said...

இதெல்லாம் எங்கவீட்டுலயும் நடந்ததுதான். ரங்ஸ் சாப்பிட்டு முடிச்சும் தட்டை வைச்சுகிட்டே டீவி பாத்தா என்கிட்டே இருந்து நல்லா டோஸ் வாங்குவார்.

அம்பிகா said...

உறவினர்கள் கிளம்பி போனபின் வாசல் தெளிக்கக் கூடாது( அவர்களை
தண்ணீர் தெளித்து விடுவது போலவாம்), தலைக்கு குளிக்கக் கூடாது.
விளக்கு வைத்தபின் யாருக்கும் பணம்
கொடுக்கக் கூடாது( வீட்டு லட்சுமி வெளியே போய்விடுவாளாம்).
செவ்வாய் வெள்ளி துளசி பறித்துக் கொடுக்கக் கூடாது( கேட்பதே ஏதாவது மருந்துக்கு தான். அதனால் கொடுத்து விடுவேன்). உப்பை கையில் கொடுக்கக் கூடாது... உங்கள் பதிவை விட பெரிசாப் போயிரும். அதனால போதும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தத்துவமெல்லாம் எங்க வீட்டுல சொல்றமாதிரியே தான் அதனால் இது நம்ம தமிழ் கலாச்சாரம் தான் போல.. எங்க வீட்டுல சாயங்காலம் ஆனப்பறம் உரை ஊத்த தயிர் குடுக்கக்கூடாது..

பாலா குடுத்து உரைய வச்சு அடுத்த நாள் வாங்கிக்கலாம் (சட்டத்தின் ஓட்டை)

வெள்ளி செவ்வாய் ஒட்டடை அடிக்கக்கூடாது.
நிலைப்படியில் உக்காந்து சாப்பிடக்கூடாது.(நரசிம்மர்?)

கையை தரையில் ஊணி சாப்பிடக்கூடாது. (தரை வழியா ஸ்ட்ரா போட்டமாதிரி போயிடுமோ)

இதுவே தொடர்பதிவாட்டம் நீளும்போலயே..? :)

Vidhoosh said...

சந்தனமுல்லை: வயது ஆக ஆக இதெல்லாம் எவ்வளவு உண்மையான வார்த்தைகள் என்று தெரிகிறது இல்லையா...எல்லாத்துக்கும் ஒரு நல்ல காரணம்தான் இருக்கிறதே?

--வித்யா

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆயா சொன்னதுல பெரும்பாலும் எங்க அம்மா சொல்லியும் கேள்விப்பட்டிருக்கேன்.அதில் இன்று வரை கடைப்பிடிக்கும் பழக்கம்:

வாசப்படியில் வைத்து யாருக்கும் எதையும் கொடுக்காதது. ஒன்று உள்ளே, இல்லை வெளியே.
(ஏன் என்று காரணம் தெரிந்துகொள்ளாமலேயே, யாராச்சும் தெரிஞ்சா சொல்லுங்க)

ஆள்காட்டி விரலை நீட்டிக்கொண்டு (ஸ்டைலுக்காக) சாப்பிடும் பழக்கம் இருந்தபோது //
எங்கம்மா இப்படி சொல்லுவாங்க, இப்படி ஒத்த விரலை விட்டுட்டு சாப்பிட்டா நீ கடைசி வரைக்கும் தனியாதான் இருப்பே, யாரும் உன்கூட வந்து ஒண்ட மாட்டாங்க !!!!

பகிர்ந்து கொள்ள நினைப்பது:(செண்டிமெண்ட்டா இருக்கறதால இதை ஃபாலோ பண்றேன்;)

1. உப்பைக் கொட்டினா சண்டை வரும், பிறகு இன்னொருவருக்கு உப்பு தரும் போது கையால் தரக்கூடாது. உப்பிருக்கும் பாத்திரத்தைத்தான் தரவேண்டும்.
2. யாராச்சும் நம்ம வீட்டுல இருந்து ஊருக்கு போனா, அவங்கள அனுப்பி வைத்துவிட்டு அன்று தலை குளிக்கக்கூடாது. இல்ல அவங்க கெளம்பறதுக்கு முன்னாடியே தலைக்கு குளித்துவிடவேண்டும்.

ஆயில்யன் said...

//ஊருக்கு நான்-வெஜ் எடுத்துட்டு போனா ஒரு அடுப்புக்கரித்துண்டு போட்டு அனுப்பு.//

ஆச்சி இப்ப உங்க வீட்ல எவ்ளோஓஓஓஓஓஓஓஒ கரித்துண்டு இருக்கு?:)))))))

பிரியமுடன்...வசந்த் said...

//அன்ரூல்டு பேப்பரிலே எழுதும்போது எழுத்து கீழ்நோக்கி போகக்கூடாது. படிப்புலே கீழே போய்டுவே!//

அப்போ ரூல்ட் பேப்பர்ல கீழ் நோக்கி எழுதுனா? அவ்வ்வ்வ்..

கோமதி அரசு said...

முல்லை,

வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள்
பாடம்.

முன் ஏர் சென்ற வழியில் பின் ஏர் செல்லும்.இப்படி எல்லாம் சொல்லி
நம்மை வளர்த்தார்கள்.

சாப்பிட்ட தட்டில் தண்ணீர் ஊற்றி வை
இல்லை என்றால் நெஞ்சு உலர்ந்து போகும் என்று என் அம்மா சொல்வார்கள்.

தண்ணீரை அதிகம் செலவு செய்தால்
பணம் அதிகம் செலவு ஆகும்.

வடக்கு பக்கம் தலை வைத்து படுக்ககூடாது.விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

குப்பையை இரவு கொட்ட கூடாது.
காணாமல் போன மோதிரம் குப்பையிலிருந்து காலை கிடைத்தது.

இப்படி காரண காரியங்களுக்காக சொல்லப் பட்டவை.

நீங்கள் சொன்னமாதிரி பதிவே போடலாம்.
நன்றி, வாழ்க வளமுடன்.

சந்தனமுல்லை said...

நன்றி அமுதா, தங்களின் 3,4 எனக்கு புதிதாக இருக்கின்றன!

பகிர்வுக்கு நன்றி பாபு, /உப்பு இருக்கும் பாத்திரத்தில் கால் படக்கூடாது,தொட்டு கும்பிடு/ இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

நன்றி ராமலஷ்மி!

நன்றி சின்ன அம்மிணி, உங்ல ரங்ஸ் வெர்ஷனை கேக்க ஆவலா இருக்கேன்!:)

பகிர்வுக்கு நன்றி அம்பிகா!

நன்றி முத்துலட்சுமி, கலாச்சாரத்தை காப்பாத்தீட்டீங்க - ஓட்டையை கண்டுபிடிச்சு!

சந்தனமுல்லை said...

நன்றி விதூஷ், /உண்மையான வார்த்தைகள் என்று தெரிகிறது இல்லையா../ அவை வெறும் நம்பிக்கைகள்தானே தவிர, அதில் எந்த உண்மையும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை! 'இதைச்செய்யவில்லையென்றால் என்ன ஆகிவிடுமோ' என்ற மனோபயமே இந்நம்பிக்கைகளை உயிருடன் வைத்திருக்கின்றன!

rapp said...

இதுல அமுதா மற்றும் அம்பிகா சொல்லிருக்கற சில விஷயங்கள்(உளுந்து, அரைக்கீரை, துளசி) மத்ததஎல்லாம் எங்க வீட்ல ஒருத்தர் கூட மதிச்சு நடக்கலன்னாலும், நான் கண்டபடி கன்னிராசிலருந்து, ஐயப்பன் திரைப்படங்கள் வரை பாத்து ஒவ்வொருத்தரையும் தலைதெறிக்க ஓட வெச்ச காலங்கள் உண்டு:):):)

நீங்க சொல்லிருக்கறதுல, கரித்துண்டு மேட்டர் ஒரு படத்துலக் கூடப் பாத்தா ஞாபகமில்லையே:(:(:(

//ஆள்காட்டி விரலை நீட்டிக்கொண்டு (ஸ்டைலுக்காக) சாப்பிடும் பழக்கம் இருந்தபோது//

இது நல்லா ஞாபகம் இருக்கே:):):) ஒரு இயக்கம் மாதிரி ஒரு சமயம் எல்லா ஊர்லயும் பெண்கள் இப்டி ஒரு கஷ்டமான ஸ்டயிலை பாலோ பண்ணாங்கப் போல:):):)

rapp said...

எங்க மாமியார் வழில தெரிஞ்சது, இங்க மட்டுமா தமிழ்நாட்லயுமான்னு தெரில.

கண்ணாடி பாத்திரங்கள் உடைஞ்சா பணம் வந்து சேரும்.

பூண்டு தொங்கவிட்டா பேய் பூதம் வராது(எல்லா ரோமன் பொலான்ஸ்கி படங்களிலும் பாருங்க, ஹி ஹி ஹி:):):)). இது நம்ம ஊரிலும் இருக்கு. என் பிரெண்ட்ஸ் நிறையப் பேர் இரும்பு அல்லது பூண்டை பர்ஸ் அல்லது பாக்ஸில் வைத்துள்ளதை பள்ளிக்காலங்களில் பாத்திருக்கேன்.(ஆனா, யாருமே கல்லூரியில் வைத்திருந்துப் பாத்ததில்ல).

குளிர் காலங்களில் குறைந்தபட்சம் வீட்டின் சமயலறயாவது வெளிச்சத்தோட இருக்கணும். இல்லன்னா சூரியனே வராது.(இந்த நம்பிக்கையின் காரணமாக உருவானதுதான் கிருஸ்துமஸ் சமயங்களில் விளக்கால் அலங்கரிக்கும் பழக்கம், செல்டிக் மக்களால் தொடங்கப்பட்டு, பின்னர் மதம் சம்பந்தமான வழக்கமாக மாறியது, அப்டின்னு சொல்வாங்க).

rapp said...

//பின்னங் காலை சரியா கழுவலேனா சனி பிடிச்சுக்கும்//

இது என்னை என்ன பாடுப் படுத்திருக்குத் தெரியுமா? தூர்தர்ஷனில், நள தமயந்தின்னு சீரியல் வந்துச்சா, அதப் பாத்துட்டு, நான் என்னல்லாம் செஞ்சேன் தெரியுமா:(:(:( அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........

Vidhoosh said...

:) இவை அனைத்தையும் மூட நம்பிக்கைகள் என்று ஒதுக்கியும் விடமுடியாது. சமயம் வரும்போது இதைப் பற்றியும் பதிவிடுகிறேன்.:))

ஏறத்தாழ அவர்கள் (முன்னோர்/மூத்தோர்) சொன்னதில் 99% உண்மை இருப்பதாகவேவும், ஏதோ ஒரு நல்ல காரணமும் அதற்குப் பின்னால் இருப்பதாகவும் தெரிகிறது.

இன்று Child Psychologists படிப்பில் ஆர்வம் காட்டாத குழந்தைகளிடம் "நல்லா படிக்கலைனா ஏழையாகிடுவ" என்று சொல்லச் சொல்கிறார்கள். ஏனென்றால் எந்தக் குழந்தையும் ஏழையாக இருப்பதை விரும்புவதில்லையாம். :(

அது போலத்தான் இதுவும். :)

--வித்யா

--வித்யா

Rajasurian said...

சாப்பிடற தட்டில தாளம் போட்டா பின்னாளில் சோறு கிடைக்காது

வெத்தல போட்டா படிப்பு வராது

மாலை நேரத்துல வாசல்ல உக்காரக்கூடாது. (லச்சுமி வீட்டுக்கு வர மாட்டா)

நான்-வெச் கொண்டு போகும்போது சுடுகாடு இருக்கற ரூட்ல போகக்கூடாது. (பேய் வாசம் பிடிச்சிக்கிட்டு பின்னாடியே வந்துரும்)

பொழுது விடிந்த பின் தூங்க கூடாது. குடும்பத்திற்கு ஆகாது.

செருப்பு தலைகீழாய் கிடந்தால் குடும்பத்தில் சண்டை வரும்

யாசவி said...

you all missed it

” வெறும் அரிசி அதிகமாக சாப்பிட்டால், உன் கல்யாணத்தன்னைக்கு மழை பெய்யும்”

” வாசல் நிலையில் நின்றால் கடன் சேரும்”

“சாப்பிட்ட கை காயக்கூடாது. தரித்திரம் பிடிக்கும்”

பழமைபேசி said...

எனக்கு அழுகை, அழுகையா வருது! எங்க ஊட்டு ஞாவகந்தேன்!!

தமிழன்-கறுப்பி... said...

hahahhaa...

:)

தமிழன்-கறுப்பி... said...

இந்த புதன் கிழமைல ஏதோ ஒரு விசேஷம் இருக்கத்தான் செய்யுது என்னா நான் பிறந்தது புதன் கிழமைதானே.

;)

சந்தனமுல்லை said...

நன்றி அமித்து அம்மா!

நன்றி ஆயில்ஸ், அவ்வ்வ்வ்..ஏன்..இந்த கொலவெறி?!

நன்றி வசந்த், ரூல்ட்லேயே கோணலா எழுதுனா...ரொம்ப நல்ல எதிர்காலம் இருக்கு! :-)

நன்றி கோமதி அரசு...எல்லாம் காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதைதான்.....ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம்!

சந்தனமுல்லை said...

ராப், கலக்கறீங்க!! யார் யார் வீட்டிலே கண்ணாடி பாத்திரம் உடையபோகுதோ?!! :))

நன்றி விதூஷ், தாராளமாக பதிவிடுங்கள்! :-) ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாமேயொழிய பெரும்பாலும் பயத்தின் காரணமாக பின்பற்றப்படுபவை. வேலைக்காரம்மாவிற்கு முதலில் கொடுக்க கூடாதென்பதற்கு என்ன பெரிய காரணம் இருந்துவிடமுடியும்?! எல்லாம், முனிவர் குளிக்கச் செல்லும் முன் பூனையை கட்டிவைத்த கதைதான்! நீங்கள் சொன்ன சைல்ட் சைக்யாட்ரிஸ்ட் அதிர்ச்சியளிக்கிறது. யார் அந்த சைக்யாட்ரிஸ்ட் - தெரிந்துக்கொள்ள ஆவலாக இருக்கிறேன்! குழந்தைகளிடம்/சிறார்களிடம் பாஸிடிவ் அப்ரோச்சை சொல்லித்தரும் சைக்யாட்ரிஸ்டுகளையே அறிந்திருக்கிறேன்!

சந்தனமுல்லை said...

நன்றி ராஜசூரியன், நீங்கள் கடைசியில் சொன்ன விஷயம் சுவாரசியமாக இருக்கிறது! பகிர்வுக்கு நன்றி!

நன்றி யாசவி!

நன்றி பழமைபேசி, இதுக்கெல்லாம் அழலாமா?! சிரிங்க பார்ப்போம்!! :)

நன்றி தமிழன் - கறுப்பி - ஆவ்வ்வ்வ்வ்வ்!! :))

rapp said...

வாட் இஸ் திஸ்? ஒடனே நீங்க சொல்லிருக்கணும், ஏன் உங்க மாமியார் வீட்ல பூண்டு தொங்கவிடுரதில்லையா, நீ நொழஞ்சிட்டியேன்னு. மனசுல நினைக்கறத வெளில சொல்ல என்னக் கூச்சமாக்கும்?:):):)

தாரணி பிரியா said...

அவ்வ்வ் எப்படி எல்லாம் சொல்லி இருக்காங்க. எங்க வீட்டுல அப்படியே உல்டா. இது போல இருக்கிற எதையும் பாட்டி கண்டுக்க மாட்டாங்க. ஆனா அம்மா எல்லாத்தையும் ஃபாலோ செய்வாங்க :)

வண்டிக்காரன் said...

ஆயாத்துவங்கள் எப்படி பிறந்திருக்கும் என்று கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணி எழுதுங்களேன் ..நன்றாக வரும்.

நசரேயன் said...

//
ஊருக்கு நான்-வெஜ் எடுத்துட்டு போனா ஒரு அடுப்புக்கரித்துண்டு போட்டு அனுப்பு.//

வீட்டிலே இன்னும் விறகு அடுப்பு சமையல் தானா?!!

நசரேயன் said...

//அன்ரூல்டு பேப்பரிலே எழுதும்போது எழுத்து கீழ்நோக்கி போகக்கூடாது. படிப்புலே கீழே போய்டுவே!//

நான் படிப்பிலே கிழே போனதுக்கு காரணம் தேடிகிட்டு இருந்தேன்

நட்புடன் ஜமால் said...

நகம் கடிக்கக்கூடாது - நிறைய மருத்துவ காரணங்கள் இருக்கு போல.

---------------

இதில் பல நல்ல விடயங்கள் தான்.

---------------

அன் ரூல்டு பேப்பரில் கீழே இருந்து எழுத துவங்கினால் மேல் நோக்கி போகும் போல (எழுத்து மட்டும் தான்)

Sabarinathan Arthanari said...

Thx for sharing

☀நான் ஆதவன்☀ said...

ஹிஹி பதிவும் பின்னூட்டங்களும் ரசிக்கதக்கதாக இருக்கிறது பாஸ்.

மர தமிழன் said...

அட அத உடுங்க பாஸு இன்னிக்கு தேதிக்கு நம்ம கிட்ட என்னனென்ன மூட பழக்கங்கள் இருக்குன்னு சொன்ன சும்மா நச்சுன்னு இருக்கும், ஸ்டார்ட் மீசிக்...

Deepa (#07420021555503028936) said...

அருமையான பதிவு.

அம்மாவும் இப்படி நிறைய சொல்வார்.

விளக்கு வைத்த பின் யாருக்கும் உறை மோர் கொடுக்கக் கூடாது. வெள்ளிக்கிழமை கடன் கொடுக்கக் கூடாது என்று.
ஆனாலும் உங்கள் ஆயாவின் லிஸ்ட் கொஞ்சம் பிரமிப்பூட்டுகிறது!
:-))

இதில் சிலவற்றுக்கு வேண்டுமானல் ப்ராக்டிகல் காரணங்கள் இருக்கலாம்.
(பாத்திரங்களில் நீர் ஊற்றி வைத்தால் துலக்க எளிதாய் இருக்கும் தானே?)

மேலும் அக்காலத்தில் மாலையில் விளக்கு
வெளிச்சம் அவ்வளவாக இருக்காது என்று சில காரியங்கள் செய்ய வேண்டாமென்றிருப்பார்கள். (துணி தைப்பது, நகம் வெட்டுவது)

மற்றபடி இந்தக் கிழமைகளும் காரணங்களும் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை.
எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் சிந்தித்துப் பார்க்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து!
:-)

தீஷு said...

எங்க வீட்டிலேயும் நீங்க சொன்ன எல்லாம் இருக்கு..

1. மூடிய விரிச்சி போட்டிக்கிட்டு இருக்கக்கூடாது.

2. சாப்பிடுகிறப்ப லைட் ஆஃப் பண்ணக்கூடாது.

3. பிறந்த கிழமையில் வாழ்க்கையில் எப்பொழுதும் முடி வெட்டக்கூடாது

சிங்கக்குட்டி said...

நல்ல ஒரு முயற்சி மற்றும் பகிர்வு, வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

:-)

பித்தனின் வாக்கு said...

...தண்ணி ஊத்திவைக்கணும்..இல்லேன்னா வயிறு காயும்!

வயிறு காயுமான்னு எனக்குத் தெரியாது, ஆனா பாத்திரம் தேய்ப்பது கடினம்.
// ஊருக்குப் போகும்போது தலைக்கு எண்ணெய் வச்சு தலைகுளிக்கக்கூடாது//
எண்ணெய் வச்சு குளிப்பது உடலை சூட்டைக் குறைக்கும் ஆனால் வெளியில் சென்றால் உடன் உஷ்ணம் ஆவதால் காய்ச்சல் வரும். கொசுறு தகவல், தலை குளிக்கும் அன்று உறவும் கூடாது என்பது பெரியேர் வாக்கு. ஆனா முடியாது.
// வடக்குப் பார்த்து உட்கார்ந்து சாப்பிடாதே! //
// கிழக்குப்பக்கம் தலை வச்சு படு.//
நமது பூமி இடம் இருந்து வலமா சுழலுவதால் நாம் இந்த நியதிக்கு கட்டுப் பட்டு ஆக வேண்டும். வடக்கும், தெற்கும் ஆகாது. எதிர் திசையில் செயல்பட்டால் உடல் நலம் கெடும். நன்றி.

RR said...

இந்தியாவில் வேலையோ,வேலைக்கு மக்களோ தேடுகிறீர்களா..எந்த துறையாக இருப்பினும் கட்டணமில்லாத சேவைக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

http://job2flourish.blogspot.com/
acadjobtn@gmail.com

பொன்ஸ்~~Poorna said...

ஊரிலேர்ந்து முருங்கைக்காய் எடுத்துட்டு வராதே!
- இதை எதுக்குச் சொன்னாங்கன்னு தெரியலை, ஆனா கூட வேலை பார்க்கிறவர் மாமியார் ஊர்லேர்ந்து முருங்கைக்காய் எடுத்துகிட்டு இங்க வந்தாங்க (நியூயார்க்). எல்லாத்தையும் கஸ்டம்ஸ்ல தூக்கிப் போடுறமாதிரி வந்துட்டது..