Monday, August 03, 2009

The Very Hungry Caterpillar

நானும் பப்புவும் ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தோம். The Very Hungry Caterpillar. ஒரு ஞாயி்றுக்கிழமையின் காலையில் முட்டையிலிருந்து வெளிவரும் ஒரு கூட்டுப்புழு அடுத்த ஞாயிறுக்குள் கூட்டுக்குள் அடையும்வரை பயணிக்கும் கதை. மிகுந்த பசி கொண்ட கூட்டுப்புழு , முதல் நாள் ஒரு ஆப்பிள், இரண்டாம் நாள் இரண்டு பேரிக்காய்கள், மூன்றாம்நாள் மூன்று பிள்ம்கள் என்று ஒரு வாரம் முழுக்க உணவுண்டு, அது போதாமல் கேக், ஐஸ்கிரீம், சலாமி என்று சாப்பிட்டு சிறிய (கூட்டுப்)புழுவிலிருந்து பெரிய (கூட்டுப்)புழுவாக மாறி பட்டாம்ப்பூச்சியாக வளருவதை சொல்லும் குழந்தைகளுக்கான படக்கதை. சாப்பிட்டு முடித்து, ஒரு கூட்டைத் தானேக் கட்டிக்கொண்டு இரு வாரங்களுக்கு அதனுள்ளே வசித்து, பின்னர் ஒரு சிறு ஓட்டைவழியே தன்னுடலை நுழைத்து வண்ணமிகு ப்ட்டாம்பூச்சியாக வெளிவருகிறது என்று பப்புவிற்குச் சொல்லிக்கொண்டிருந்தேன்.

முன்பொருகாலத்தில் மெயில்ஃபார்வார்டாக சுற்றிக்கொண்டிருந்த ஒரு கதைதான் நினைவுக்கு வந்தது. அதுவும், முதல்முதலாக வேலைக்குச் சேர்ந்தால் கடமையாகச் செய்யும் முதல்வேலையே ஃபார்வர்டு மெயில்களை படிப்பதும் அதைத் தொடர்ந்து ஃபார்வர்டு செய்வதும்தானே!! அதிலொன்று கேட்டர்பில்லரைப் பற்றியது. ஒருவர் மிகுந்த கவனத்தோடு கேட்டர்பில்லரின் வாழ்க்கைசுழற்சியை கவனித்து வந்தார். அது கூட்டுப்புழுவாக மாறியதும் அது வெளிவரும் அந்த நொடிக்காக ஆவலுடன் காத்திருந்தார். கூட்டிலிருந்து வெளிவர அந்தப்புழு உள்ளாகும் சிரமத்தைக் காணச்சகியதவராய், அந்தப் புழுவுக்கு உதவுவதாய் எண்ணி கூட்டைக் கத்தரித்து தாராளமாக வழியுண்டாக்கி அந்தபுழுவை வெளிவ்ரச்செய்வார். ஆனால் அந்தபுழு பட்டாம்பூச்சியாக மாறமுடியாமல், பறக்கவுமுடியாமல் தத்தித்த்தி வாழ்நாள் முழுக்க மிகுந்தச் சிரமப்படும். உண்மையில், அந்தச் சிறியதுவாரத்தின் வழியே அது வெளிவரும்போதுதான் வண்ணத்துப்பூச்சியாக முழுஉருவம் கொள்கிறது, அதன் உடல்வழியே இறக்கைகளுக்கு தேவையான சத்துகள் சென்றுச் சேர்கிறது. அவர் உதவி செய்வதாய் நினைத்து செய்த செயல் அந்த உயிரின் இயல்பு வாழ்க்கையையே பாதித்துவிட்டது என்பதாய் முடியும்! ஏனோ எனக்கு இந்தக்கதை எனக்கு மஞ்சுவையே எப்போதும் நினைவூட்டும்! மஞ்சுவிடம் இந்தக் கதையைச் சொன்னபோது, 'நானும் அந்த கூட்டுப்புழு போன்ற நிலையில்தானே முல்லை இருக்கிறேன்' என்று சொன்ன அந்த சனிக்கிழமை காலைநேரம் இன்னும் மனதிலிருக்கிறது.

மஞ்சுவை நான் சந்தித்தது வொர்க்கிங் உமன்ஸ் ஹாஸ்டலில்!மஞ்சுவிற்கு ஏனோ என்னைப் பிடித்திருந்தது அவளது வாழ்வின் இருண்ட பக்கத்தை பகிர்ந்துக்கொள்ளுமளவிற்கு. மஞ்சுவிற்கு, தரமணிக்கு அருகில்தான் வீடு - குடும்பமும் உறவினர்களும் அந்த ஏரியா முழுவதும். ஏதோவொரு குடும்பப்பிரச்சினைக் காரணமாக வீட்டைவிட்டு வெளியேறிய மஞ்சு வந்தடைந்தது அடையாறில் ஒரு லேடிஸ் ஹாஸ்டல். கொஞ்சநாளில், மஞ்சுவின் அம்மா கண்டுபிடித்து வீட்டுக்கு அழைக்க மஞ்சு செல்ல மறுத்துவிட்டாள். சொல்ல மறந்துவிட்டேனே..மஞ்சு வேலை செய்தது ஒரு லெதர் கம்பெனியில் - பர்ஸ் தைப்பதில் ஸ்பெஷலிஸ்ட். இடைப்பட்டக் காலத்தில், லேத் பட்டறை வைத்திருப்பவனொருவனுடன் அறிமுகமாகி காதலாகிக் கனிந்து கல்யாணமுமாகியிருக்கிறது. ஒரு சில மாதங்களுக்குப்பின் அவன் சரியாக வீட்டுக்கு வராமல்போக பொறிதட்டிய மஞ்சுவிற்குத், தெரியவந்தது அவனுக்கொரு குடும்பம் ஏற்கெனவே இருப்பது. வாங்கிய கட்டில், பீரோ, கேஸ் கனெஷன், சாமான் செட்டுகள் மற்றும் இன்னபிறவற்றை ரெட் ஹில்ஸில் தோழியின் தாயின் வீட்டில் வைத்துவிட்டு, மஞ்சு தஞ்சமடைந்தது இப்போதிருக்கும் லேடிஸ் ஹாஸ்டலை.

”நானும் அந்த கூட்டுப்புழு மாதிரிதானே முல்லை..ஏற்கெனவே அவனுக்குக் கல்யாணமாகியிருந்தும், என்னை கல்யாணம் பண்ணி என் வாழ்க்கையைக் பாழாக்கிட்டான். நானும் அந்த றெக்கை முழுசா வளராத பட்டாம்பூச்சி மாதிரிதானே! நிறைய நாள் அவன் வீட்டுக்கு வரவே மாட்டான். ராத்திரி, பக்கத்துவீட்டுக்காரன் கதவை தட்டுவான். நான் தூக்கம் வராம முழிச்சுக்க்கிட்டே படுத்துக்கிட்டு இருப்பேன்” - மஞ்சு.

மஞ்சுவிடம் ஒரு பைபிள் இருந்தது. எனக்கென்னவோ மஞ்சு அவளுக்குத் தேவையான சக்தியை அந்த பைபிளிலிருந்து உறிஞ்சிக்கொள்வதாய் தோன்றும்! 'உங்கம்மாக்கிட்டே போக வேண்டியதுதானே, மஞ்சு' என்றதற்கு, “அவங்கல்லாம் ஒரு கும்பலா வாழ்றவங்க முல்லை, அங்கே போனா நிம்மதியா இருக்க முடியாது” என்றாள். ஒருவேளை, மஞ்சுவின் கணவன் உண்மையுள்ளவனாக இருந்திருந்தால், மஞ்சுவும் மிக அழகாக குடும்பம், குழந்தையென்று வாழ்ந்திருப்பாள். கவரவத்துடன் அம்மாவீட்டுக்குப் போக வர இருந்திருப்பாள். மஞ்சுவிற்கு இங்கிலீஷில் பேச மிகவும் ஆசை. விவேகானந்தாவில் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் சென்றுக்கொண்டிருந்தாள்.

ஹாஸ்டலை புதுப்பித்தல் காரணமாக நாங்கள் வெளியேற வேண்டிய சூழல் வந்தபோது நான் தோழியின் தோழிகளோடு ஒண்டிக்கொண்டேன்.மஞ்சு 600ரூ வீடு (அறை) பார்த்து, பொருட்களை எடுத்துவந்து வைத்துக்கொண்டாள். இரண்டு மூன்று பெண்களை வைத்து பர்ஸ் தைக்கும் தொழிலைச் செய்தாள். அது சரிவராமல் போகவே மறுபடியும் கம்பெனியில் சேர்ந்துக்கொண்டாள். அதற்குள் நான், பெங்களூர்-கல்யாணம்-திரும்பவும் சென்னை என்று வாழ்க்கைச்சுழற்சியை முடித்திருந்தேன். பப்புவுக்கு மூன்றுமாதங்கள் இருக்கும் போது வீட்டுக்கு வந்திருந்தாள். அதுதான் கடைசியாக நான் அவளைச் சந்தித்தது. சென்ற டிசம்பரில் மஞ்சுவிற்கு திருமணமாகியிருக்கிறது. அவளது தோழியின் அண்ணன்தான் மணமகன். அவருக்கு நீண்டநாட்கள் ஜாதகத்தடையால் திருமணமாகாமல் இருந்திருக்கிறது. அந்தத்தோழிக்கு மஞ்சுவின் நிலை தெரிந்து அவரெடுத்த முயற்சியே இந்தத்திருமணம். கூட்டுக்குடும்பம். மஞ்சுவுக்கென்று ஒரு குடும்பம். மஞ்சு ஒரு கேட்டர்பில்லர்தான், வாழ்வின் மீது பசிக்கொண்ட கேட்டர்பில்லர் - வாழ்ந்துவிடத்துடிக்கும் - வானத்தைத் தொட்டுவிட எத்தனிக்கும் பட்டாம்பூச்சியை உள்ளடக்கிய கேட்டர்பில்லர்!!

எனக்கென்னவோ, அவள் இறக்கைகள் முழுமையடையாத பட்டாம்பூச்சியாகத் தோன்றவில்லை. மஞ்சு எடுத்த முடிவுகள் சரியா தவறா என்று அவளது வாழ்க்கையை வாழாமல் விவாதிக்கமுடியாது. ஆனால், பாதுகாப்பானது என்று நான் கருதும், படிப்பு, நல்ல சம்பளத்துடன் வேலை என்ற ஆயுதங்களை..... தற்காப்புகளைக் கொண்டிருந்தும், நான் எடுக்கத் தயங்கும் முடிவுகளை மஞ்சு அநாயசமாக எடுத்திருந்தாள். ஒருவேளை, நல்லக் கல்விச் சூழலும், வேலைவாய்ப்பும் அமைந்திருந்தால்?! மஞ்சுவின் உறுதி, தைரியம் - வாழ்தலுக்கான விடாமுயற்சி - எல்லாவற்றுக்குமேல் வாழ்க்கையின் மீதிருந்த நம்பிக்கை - இவையே மஞ்சுவின் முழுமையடைந்த இறக்கைகள்!!

23 comments:

சின்ன அம்மிணி said...

நானும் இந்த மாதிரி வொர்க்கிங் வுமன்ஸ் ஹாஸ்டல்ல இருந்திருக்கிறேன். எத்தனை விதமான பெண்கள். ஒவ்வொருவரிடமும் ஒரு கதை.

நட்புடன் ஜமால் said...

மஞ்சு எடுத்த முடிவுகள் சரியா தவறா என்று அவளது வாழ்க்கையை வாழாமல் விவாதிக்கமுடியாது.]]

சரியா சொன்னீங்க.

----------
மஞ்சுவின் உறுதி, தைரியம் - வாழ்தலுக்கான விடாமுயற்சி - எல்லாவற்றுக்குமேல் வாழ்க்கையின் மீதிருந்த நம்பிக்கை - இவையே மஞ்சுவின் முழுமையடைந்த இறக்கைகள்!!]]

மேலும் அவர் வாழ்வு ஒளிர எமது பிரார்த்தனைகள்.

மங்களூர் சிவா said...

/
மஞ்சுவின் உறுதி, தைரியம் - வாழ்தலுக்கான விடாமுயற்சி - எல்லாவற்றுக்குமேல் வாழ்க்கையின் மீதிருந்த நம்பிக்கை - இவையே மஞ்சுவின் முழுமையடைந்த இறக்கைகள்!!
/

வாழ்வில் செழிக்க நல்வாழ்த்துக்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

மஞ்சு எடுத்த முடிவுகள் சரியா தவறா என்று அவளது வாழ்க்கையை வாழாமல் விவாதிக்கமுடியாது.

கண்டிப்பாக ஆணோ,பெண்ணோ, பலரின் வாழ்க்கையை அவர்களின் வாழ்க்கைச்சூழல் மட்டுமே தீர்மானிக்கிறது.
அதையும் தாண்டி வெளிவந்து ஜெயிப்பவர்கள் மிக சொற்பமே.

மஞ்சுவின் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெறவேண்டும் இது என் வாழ்த்துக்களும், ப்ரார்த்தனைகளும்.

Rithu`s Dad said...

பட்டாம் பூச்சி கதையின் உண்மை வாழ்க்கையில் நிறையவே உண்டு.. உதாரனம் “பெற்றோர்கள்” குழந்தைகளை எதற்கெடுத்தாலும் பொத்தி பொத்தி வளர்ப்பது.. பின் அதுவே அவனது முன்னேற்றத்திர்க்கு தடையாய் மாறுகிறது..

கடினமான சூழ்நிலைகள் மற்றும் அனுபவங்கள் தான் ஒவ்வொருவரையும் மிக சிறந்தவர்களாக மாற்றுகிறது..

முல்லை.. இதை நீங்கள் ஒரு தனி கதையாகவே எழுதியிருக்கலாம்!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஒரு கதையோடு இன்னொரு கதையை சரியாக் கொண்டு போய் சேத்தீங்க.. இங்க மஞ்சுவை நானும் வாழ்த்திக்கிறேன்..

கோமதி அரசு said...

வாழ்க்கையின் மீதிருந்த நம்பிக்கை
இவையே மஞ்சுவின் முழுமையடைந்த
இறக்கைகள்!!

உண்மை!
நம்பிக்கைதான் வாழ்க்கை.

பைத்தியக்காரன் said...

ஆச்சி,

ஒரு எளிமையான கதையை வைத்து, அதை பெண்களின் வாழ்க்கையுடன் பொருத்திப் பார்த்து நீங்கள் அலசி இருந்த விஷம், கிரேட். மஞ்சு, புனைவோ உண்மையோ... ஆனால், காலம்தோறும் ஏராளமான மஞ்சுக்கள் பட்டாம்பூச்சியாக மாறி பறக்க முடியாமலேயே தவிக்கிறார்கள் இல்லையா?

'என் ஆயா கலர் டீவியைக் கண்டுபிடிக்காதது ஏன்?', 'ஹேமாக்களும் ஞானசௌந்தரிகளும்!', 'உனக்குப் பிடித்த சாக்லேட் கூட....' வரிசையில் மேலும் ஒரு அழுத்தமான இடுகை.

நீங்கள் ஏன் பத்திரிகைகளில் எழுதக் கூடாது?

தோழமையுடன்
பைத்தியக்காரன்

அமுதா said...

/*மஞ்சுவின் உறுதி, தைரியம் - வாழ்தலுக்கான விடாமுயற்சி - எல்லாவற்றுக்குமேல் வாழ்க்கையின் மீதிருந்த நம்பிக்கை - இவையே மஞ்சுவின் முழுமையடைந்த இறக்கைகள்!!*/
உண்மை. மஞ்சு போல் பலர் உள்ளனர். மஞ்சுவின் வாழ்க்கை வளமாக இருக்கட்டும்

Jeeves said...

சிவ்ராம் சொன்ன மாதிரி

நீங்க ஏன் பத்திரிகைகளில் எழுதக் கூடாது. ( அட நாங்க தப்பிச்சுப்போம்லன்னு ஆயில் வந்து கமென்ட் போட்டா நான் பொறுப்பு கிடையாது )நல்லா எழுதறீங்க. வாழ்த்துகள்

Deepa said...

மஞ்சுவை ஒரு தோழியாக நீங்கள் புரிந்து கொண்டதற்கும் அவரது வாழ்க்கையையும் அவரெடுத்த முடிவுகளையும் விருப்பு வெறுப்பின்றி பார்த்து எழுதியதற்கும் மிகுந்த பாராட்டுக்கள்.

வாழ்க்கையை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற பட்டாம் பூச்சி மஞ்சு இனி சிறகடித்துப் பறக்கட்டும்.

தமிழ் பிரியன் said...

///Jeeves said...
சிவ்ராம் சொன்ன மாதிரி
நீங்க ஏன் பத்திரிகைகளில் எழுதக் கூடாது. ( அட நாங்க தப்பிச்சுப்போம்லன்னு ஆயில் வந்து கமென்ட் போட்டா நான் பொறுப்பு கிடையாது )
நல்லா எழுதறீங்க. வாழ்த்துகள்/////
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்

naathaari said...

மஞ்சு அநவசயமாக எடுக்கின்ற முடிவுகளை நீங்களோ நானோ எடுக்க ஏலாது இழப்பதற்க்கு ஏதுமில்லாத நிலையில் வறுமை தின்றது போக மிச்சமிருக்கிற ஜீவனில் செரிந்திருக்கும் வீரியம் அவள் வாழ்வை ஆக்கிரமிக்கும் எல்ல முள்வேலிகளையும் நொறுக்கிவிடும் வல்லமைகொண்டது
உடலால் உழைக்கும் மக்களின் பெருந்திரளுக்குள் ஆண் என்ற ஆதிக்கம் நீர்த்துப்போயிருக்கும் அதிசயத்தை மீண்டும் மஞ்சுவின் மூலம் உணர்த்தப்பட்டிருக்கிறது

ஆமாம் மஞ்சுவிடம் இப்போதும் தொடர்பு கொள்வதுண்டா?

மஞ்சுவுக்கு என் வாழ்த்தை சொல்லுங்கள்
நிச்சயம் எல்லோரும் மெச்சும் ஒரு வாழ்வை அவளைவிட யார் வாழ்ந்துவிட முடியும்

ஆகாய நதி said...

மஞ்சுவிற்காக என் வேண்டுதல்களும் வாழ்த்துகளும்.... தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தால் போதும் மஞ்சு வாழ்க்கையின் ஒளி நிறைந்த பாதைக்கு போகும் வழி அதுவாகத்தானிருக்கும்!

//
உதாரனம் “பெற்றோர்கள்” குழந்தைகளை எதற்கெடுத்தாலும் பொத்தி பொத்தி வளர்ப்பது.. பின் அதுவே அவனது முன்னேற்றத்திர்க்கு தடையாய் மாறுகிறது
//

மிகச் சரியான உண்மை!

செல்வநாயகி said...

///'என் ஆயா கலர் டீவியைக் கண்டுபிடிக்காதது ஏன்?', 'ஹேமாக்களும் ஞானசௌந்தரிகளும்!', 'உனக்குப் பிடித்த சாக்லேட் கூட....' வரிசையில் மேலும் ஒரு அழுத்தமான இடுகை.
///////

Thanks for this post.

குசும்பன் said...

// மஞ்சு எடுத்த முடிவுகள் சரியா தவறா என்று அவளது வாழ்க்கையை வாழாமல் விவாதிக்கமுடியாது.//

இது மிகவும் பிடித்திருக்கிறது!

அப்புறம் 'மஞ்சு' எடுக்கும் முடிவுகள் எப்பொழுதும் இனி சரியாக இருக்க வாழ்த்துக்கிறேன்.

(இதுல ஒரு சுயநலமும் இருக்குங்கோ:))))

சூரியன் said...

நம்பிக்கைதான் வாழ்க்கை

குடுகுடுப்பை said...

வாய்ப்புகள் கிடைக்காமல் முடக்கப்படுவோர் இன்னும் அதிகம்.

மஞ்சுவிற்கு வாழ்த்துக்கள்.

லதானந்த் said...

கோவிச்சுக்காதீங்க!
இந்தக் “காதல்” என்னும் மாயைதான் எப்படியெல்லாம் பாடாய்ப் படுத்துகிறது!

" உழவன் " " Uzhavan " said...

முடித்திருந்த விதம் நன்று.
(தலைப்பை பார்த்தவுடன் Caterpillar கம்பெனி பற்றிய இடுகையோ என எண்ணினேன் :-))

rapp said...

சான்சே இல்லை, செம போஸ்ட். அதுவும் வாழ்ந்து பாக்காம வேதாந்தம் பேச முடியாதுங்கற ஆட்டிட்யூட் சூப்பர். உங்களை அவங்களுக்கு ஏனோ கொஞ்சம் ஜாஸ்தி பிடிச்சிருந்ததுன்னு சொன்னீங்கல்ல , அதுக்கான காரணம் தெரியனும்னா, இந்தப் போஸ்டை படிங்க அப்போத் தெரியும்:):):) சூப்பர்:):):)

rapp said...

மஞ்சுவிற்கு என்னோட வாழ்த்துக்களும்:):):)

நிஜமா நல்லவன் said...

/Jeeves said...

சிவ்ராம் சொன்ன மாதிரி

நீங்க ஏன் பத்திரிகைகளில் எழுதக் கூடாது. ( அட நாங்க தப்பிச்சுப்போம்லன்னு ஆயில் வந்து கமென்ட் போட்டா நான் பொறுப்பு கிடையாது )நல்லா எழுதறீங்க. வாழ்த்துகள்/


ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்..