Sunday, September 21, 2008

திண்ணை நினைவுகள்

திண்ணை நினைவுகள் பற்றி எழுத டேக் செய்த பிரேம்குமாருக்கு நன்றி.

இரண்டாம் வகுப்பு படிக்கும் வரை, ஆம்பூரில், ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தோம்.
அந்த வீடு திண்ணை, ஐந்து குடித்தனக்காரர்கள் வசிக்குமளவிற்கு பெரிய வீடு.
இருபுறமும் திண்ணை இருக்கும். வலது புறம் திண்ணை மாதிரி..அதாவது சிங்கிள் சீட்டர்.
இடதுப்புறம் வீட்டின் நீளத்திற்கு ஒருபுறம் திண்டு வைத்து திண்ணை இருக்கும்.
வீட்டினுள் கடந்துச் செல்ல மூன்று வாசல்கள் கடந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு கதவும்,
பெரிதாய் ஏதோ அரண்மனை கதவு போல் இருக்கும்.

திண்ணை காலை வேளைகளில் ரொம்ப பிசியாக இருக்கும்.
கீரைக்காரம்மா, பால்காரர் முதல், துணி தேய்ப்பவர் வரை காலை வேளைகளில் வியாபாரம் அங்கேதான். ஐஸ்கட்டி மழை பெய்தபோது, திண்னையில் கைநீட்டிய படி நின்றது நினைவுக்கு வருகிறது. அந்த தெருவில் இருந்த வீடுகளில் அநேகமாக எல்லா வீடுகளிலும் திண்ணை இருந்தது. ஆனால் இரண்டு வீடுகளில்தான் சிறுவர்கள் விளையாடுமவிற்கு திண்ணை இருந்தடு. மற்ற வீடுகளில் காம்பவுண்டுக்குள் திண்ணை இருந்தது. அந்த இரண்டு
வீடுகளில் ஒரு வீடு நாங்கள் குடியிருந்த வீடு. மற்றொன்று, மூக்குப்பொடி தாத்தாவினுடையது. அந்தத் தாத்தா, எப்போதும் வெளியே திண்ணையில் உட்கர்ந்திருப்பாரானதால், அங்கு விளையாட வாய்ப்பு கிடப்பதரிது.
ஆனால், தாத்தா, தூங்கும் மதிய வேளைகளில் அங்கு விளையாடுவோம். சிலவேளைகளில் திட்டுக் கூட கிடைக்கும், அந்தப் பாட்டியிடமிருந்து. அதனால், ஏதாவது நாங்கள் கத்திவிட்டு, அல்லது வீட்டுக் கதவை தட்டிவிட்டு ஓடி வந்து விடுவோம். :-)).
ஆனால், அவர்கள் வீட்டில் குழந்தை கிடையாது. பாவம் என்று எல்லாரும் பேச கேட்டிருக்கிறேன்.

அப்போது க்ரிஸ்டல் கொலுசு பேமஸாக இருந்தது. அது வேலூரில் மட்டுமே கிடைப்பதாகவும் செய்தி. பள்ளி ஆண்டு விழாவில் க்ரிஸ்டல் கொலுசு போட்டு நடனம் ஆட நாங்கள் வேலூர் சென்று வாங்கிவர திட்டம் தயாரானது அந்த திண்ணையில்தான். நால்வர் இருந்த அந்த அணியின் சராசரி வயது 8 அல்லது 9. நல்லவேளை அப்படியெல்லாம்
வாங்கப் போகவில்லை, எல்லாம் தொலைந்துப் போய்விடுவோம் என்ற பயம்தான்!

நான் எட்டாவது படிக்கும் போது, அந்த மூக்குப் பொடித் தாத்தா இறந்துப் போய்விட்டார், கொலை செய்யப்பட்டு!! அவரை கொலை செய்தது, நாங்கள் குடியிருந்த வீட்டில், குணா அக்காவின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்த சசி அக்காவின் அண்ணன், பாட்டியின் நகைகளுக்கு ஆசைப்பட்டு!!

யோசித்துப்பார்த்தால், ரொம்பவெல்லாம் திண்ணை பற்றி எனக்கு ஞாபகமோ செண்டிமெண்டல் அட்டாச்மெண்டோ இருந்ததில்லை.மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, நாங்கள் ஹவுஸிங் போர்ட் குடியிருப்புக்கு வந்து விட்டோம்.
அங்கு திண்ணை இல்லை...ஆனால் பலகணி இருந்தது. பலகணி நினைவுகள் என்று வேண்டுமானால் எழுதலாம். ;-) ஆனால், ஒன்று மட்டும் நான் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்..அது, தெருவில் விளையாடுவது. அந்த வயதில், அதிகமாக நேரம் கழித்தது, திண்ணையில் எல்லா வீட்டு சிறுவர் சிறுமிகளுடன் சேர்ந்து
விளையாடித்தான். சாயங்கால வேளைகளில், சனி, ஞாயிறுகளில் அங்கே அமர்ந்துதான் வேடிக்கை பார்த்தது, சொப்பு வைத்து விளையாடியது, மற்றும் ராஜா, ராணி, திருடன் போலிஸ் விளையாட்டு எல்லாம். (இப்பொழுதும் அந்த விளையாட்ட யாராவது விளையாடுகிறார்களா தெரியவில்லை..ஒவ்வொருவருக்கும் ஒரு பாயிண்ட்
பேப்பரில் இருக்கும்.மறந்துப் போய்விட்டது!!)

இப்போதெல்லாம் தெருவில் விளையாடுவதென்பதே மறக்கப் பட்டுவிட்டது போல் தோன்றுகிறது. பப்புவை நான் விளையாட அனுப்ப தயாரென்றாலும், தெருவில் இருக்கும் வேறு பிள்ளைகளோ, பெற்றோரோ தயாரில்லை!! :(


பிரேம், உங்க அளவிற்கு இல்லையென்றாலும், ஏதோ எனக்கு இருக்கும் நினைவுகளை(!) எழுதி இருக்கிறேன். விருப்பமிருப்பவர்கள், இந்த டேகை தொடரலாம். நான் ஓப்பனா விட்டுவிடுகிறேன்.

12 comments:

ஆயில்யன் said...

//ஒன்று மட்டும் நான் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்..அது, தெருவில் விளையாடுவது. அந்த வயதில், அதிகமாக நேரம் கழித்தது, திண்ணையில் எல்லா வீட்டு சிறுவர் சிறுமிகளுடன் சேர்ந்து
விளையாடித்தான்.//


:(((

ஆமாம் நானெல்லாம் எம்புட்டு ஆடியிருக்கேன்!

எல்லாம் இப்ப இல்ல :(

பயமக்க எதுவும் வீட்டுக்குள்ள போய்க்கிட்ட வெளியே வரதே இல்ல எல்லாம் டிவியும் கம்ப்யூட்டர் கேம்ஸுமே கதியா கிடக்குதுங்க !

Amudha said...

/* தெருவில் விளையாடுவது.*/
உண்மைதான் முல்லை. ஆனால் சென்னை வாழ்வில் தான் இது ரொம்ப கம்மியோ என்று தோன்றுகிறது. என் பெண்களுக்கு மதுரைக்கு செல்வதென்றால் ரொம்ப இஷ்டம். அவள் வயது பெண்களுடன் தெருவில் ஆடுகிறார்கள். ஆனால், சில விளையாட்டுக்கள் தான் விளையாடுகிறார்கள். பல விளையாட்டுக்கள் மறந்து விட்டன. சொல்லிக் கொடுக்கவும் வேண்டுமே?

புதுகை.அப்துல்லா said...

புதுக்கோட்டையில் எங்க வீட்டில் திண்னை இல்லை. ஆனால் எங்க சொந்த கிராமத்தில்( புதுக்கோட்டை அருகில் உள்ள செட்டிநாடு பகுதி) உள்ள பூர்வீக வீட்டு திண்ணையில் விஷேசத்திற்கு வருபவர்களில் பாதி பேர் அமரும் அளவிற்கு ப்ப்ப்ப்பெரிய திண்ணை இருந்தது. பண்டிகைகாலங்களில் அங்கு சென்று விடுவோம். விஷேசங்களை அங்குதான் நடத்துவோம். அப்போது அந்தத் திண்ணையில் தான் விளையாடுவோம். மூன்று வருடங்களுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டு சரியாக 146 ம் வருடம் கழித்து எங்களின் பூர்வீக வீடு இடிக்கப்பட்டது. இப்ப அவ்வளவு பெரிய இடத்தில் ஓரு மூலையில் நாங்க போனாவந்தா தங்க ஓரு சின்னோண்டு வீடு தான் இருக்கு :(

ராமலக்ஷ்மி said...

//பப்புவை நான் விளையாட அனுப்ப தயாரென்றாலும், தெருவில் இருக்கும் வேறு பிள்ளைகளோ, பெற்றோரோ தயாரில்லை!! :(//

உண்மைதான் இது வருத்தமான விஷயம். ஆயில்யன் சொல்லியிருப்பதையே நானும் வழிமொழிகிறேன்.

கானா பிரபா said...

திண்ணை நினைவுகள் சிறப்பா இருக்கு, இதெல்லாம் இனியெங்கே

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஓ அந்த ராஜா ராணி இப்பவும் என் மகள் விளையாடறாளே... :)

க்ரவுண்ட் ப்ளோர் வீடே கிடையாது இப்ப...அத்னால் கூட நாம போகவேண்டிய கால கட்டமாகிடுச்சு.. நாமள்ளாம் எங்க எங்கயோ போய் விளையாண்டுட்டு வருவோம்.. இப்ப இதுங்களுக்கு ஏகத்துக்கு கட்டுப்பாடு போடவேண்டியதா இருக்கே !

தாமிரா said...

முதலில் இந்தப்பதிவுக்கு நீண்ட பதில் எழுத விரும்பி இரண்டு நாள் கேப்பில் மறந்துடுச்சிங்க.. ஹி..ஹி..

சந்தனமுல்லை said...

ஆயில்யன் : நன்றி..

//பயமக்க எதுவும் வீட்டுக்குள்ள போய்க்கிட்ட வெளியே வரதே இல்ல எல்லாம் டிவியும் கம்ப்யூட்டர் கேம்ஸுமே கதியா கிடக்குதுங்க //

உண்மைதான்! டீவிதான் முக்கால்வாசி நேரத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது!!

நன்றி அமுதா, ஆமா..கல்லு போட்டு தாண்டும் விளையாட்டு வழக்கொழிந்துதான் போய் விட்டது..இதுப்போல் பல!!

சந்தனமுல்லை said...

அப்துல்லா..வருத்தமாதாங்க இருக்கு!!
146 வருஷமா!!அந்த வீட்டு போட்டோஸ் இருக்கா?

அப்போ நீங்க திண்ணை நினைவுகள் எழுதுங்களேன்..இன்னும் எழுதலைன்னா!!

சந்தனமுல்லை said...

நன்றி ராமலஷ்மி!!
உண்மையில் வருந்தத்தக்கது தான்..மாற்றுவதில் பெற்றோர் பங்கும் இருக்கிறது இல்லையா!!

சந்தனமுல்லை said...

நன்றி கானாஸ்!!
//இதெல்லாம் இனியெங்கே//

ம்ம்ஹம்ம்...!!

முத்துலெட்சுமி : நன்றி..சரியா சொன்னீங்க!! //இப்ப இதுங்களுக்கு ஏகத்துக்கு கட்டுப்பாடு போடவேண்டியதா இருக்கே !//

சிலசமயம் we become over protective!!

சந்தனமுல்லை said...

தாமிரா..இப்படி தப்பிக்கலாம்னு பார்க்கறீங்களா? :-))