Wednesday, May 20, 2009

”இலங்கையில் சண்டை”

நம் அனைவருக்குமே பிரபாகரனைப் பிடிக்கும். அல்லது சிறுவயதில் பிடித்திருக்கும். இங்கே முக்கியமாக அனைவர் என்று குறிப்பிடுவது, 25 வயதிலிருந்து 30 வயதிற்குள்ளாக இருக்கும் இளைய சமூகத்தினரைப் பற்றி! திக அல்லது திமுக பற்று கொண்ட குடும்பங்களில் பிறந்திருந்தால் ஈழத்தில் நடக்கும் போராட்டம் பற்றியும், பிரபாகரன் யாரென்றும் ஓரளவுக்குத் தெரிந்திருக்கும். அதாவது, புருஸ்லீ அல்லது ஜாக்கிசான் ஒரு படத்தில் சண்டைப் போட்டால் எப்படி ரசித்து பார்ப்போமோ அப்படி நம் அனைவருக்குமே பிரபாகரன் தேவையாயிருக்கிறார்.பெருமைப்படுவதற்கும், ”தமிழண்டா” என்று மார்தட்டிக்கொள்வதற்கும்!
அவர் போரிடுவது/போராட்டத்தை வழிநடத்துவது நமக்கு பார்க்கப் பிடித்திருக்கிறது. உணவு இடைவேளைகளில் உலக அரசியல் பேசும்போது ஊறுகாய் போல ஈழத்தை தொட்டுக் கொள்ள, போராட்டத்திற்கு ஆதரவாகவோ அல்லது எதிர்த்தோ ஓரிரு நிமிடங்கள் பேச!! நான் பார்த்த, சந்தித்த மனிதர்களைக் கொண்டுத்தான் இதைச் சொல்கிறேன். கடந்த இரு தினங்களாக எல்லோரும் ஒரு வித பரபரப்புக்குள்ளாவதைக் காண்கிறேன். சேனல்கள் மாற்றிப் பார்ப்பதும், விவாதிப்பதுமாக - எதோ ஒரு தமிழ் சினிமாவின் கிளைமாக்ஸ் காட்சியைப்
பார்ப்பது போல!

ஆனால் சென்ற வாரம் வரை, இப்படி ஒரு போராட்டமோ,அங்கு இன்னலுக்குள்ளாகும் மக்களைக் அறிந்துக் கொள்ள வேண்டிய தேவையோ/பிரக்ஞையோ இல்லாமல் இருந்தவர்கள் இவர்கள். ”இலங்கையில் சண்டை” என்பதுதான் அவர்களுக்குத் தெரிந்த மாக்ஸிமம் நியூஸ்! ஆனால், அங்கிருந்து வந்து இங்கு தங்கியிருக்கும் ஈழ மக்கள் குறித்தோ, அவர்தம் வாழ்வு குறித்தோ ஒரு எண்ணமுமிராது (எண்ணினால் மட்டும் என்ன செய்ய முடியும் என்றுக் கேட்காதீர்கள்!). ஆனால், நமது முந்தைய தலைமுறைக்கு இதுக் குறித்து இருந்த விழிப்பும், பற்றும், நமது இனம் என்ற சிந்தனையும் இன்றைய இந்த குறிப்பிட்ட தலைமுறையில் இல்லை என்பதே என்னை இப்படி ஒரு இடுகையை எழுதத் தூண்டியது. இங்கும் ஆண்/பெண் வேறுபாடு இருக்கிறது. ஆண்கள், ஓரளவிற்கு அரசியல் ஆர்வம் கொண்டவர்களாயிருந்தால் கொஞ்சமேனும் போராட்டம் குறித்தும் இனஅழிப்புக் குறித்தும் விழிப்புக் கொண்டிருக்கிறார்கள். (இது எனது பார்வை மட்டுமே. பல நண்பர்கள் இரண்டு நாட்களாகக் கூடிகூடி பேசுவதும், இணையத்தை செக் பண்ணுவதுமாக இருக்கும்போது, பெண்தோழிகள் மருந்துக்குக்கூட வாய் திறக்கவில்லை (கஷ்மீர் பிரச்சினையோ அல்லது யூதர்கள் குறித்தோ பேச்சு வந்தால் பிய்த்து உதறிவிடுவார்கள்). அதுவும் சொற்பமே. மேலும், போட்டி நிலவும் பள்ளிச்சூழல், கல்லூரி வேலை என்று எப்போதும் தங்களை நிலைநிறுத்திக் கொண்டாகவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களை குறை சொல்லவும் முடியாது போல்!ஆனால், ஈராக்கிலோ,பாலஸ்தீனத்திலோ பிரச்சினை வந்தால், ஆராய்ந்து அலச முடியும் அளவிற்கு ஈழம் குறித்த பார்வை பெரும்பாலோர்க்கு இருப்பதில்லை. இதில் நானும் அடக்கம்!

தினமும் போராட்டத்தில் இத்தனை பேர் பலி என்று செய்தியில் ஓரிரு வரிகள் கேட்பதோடு முடிந்துவிடுவதும் ஒரு முக்கியக் காரணம். ஆயிரக்கணக்கில் அல்லலுறும் அப்பாவி பொதுமக்கள் குறித்தோ அல்லது, முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் பெண்டிர்/ குழந்தைகள் நிலை குறித்தோ எதுவும் சொல்லாத மீடியாக்களும் காரணம். ஈழத்தமிழர்களின் எழுத்துகள் வெகுசன பத்திரிக்கைகளில் வருகிறதாவென்று எனக்குத் தெரியாது. யுகாமாயினியில் தற்போது வருகிறது, ஆனால் எத்தனைப் பேருக்கு அதைப் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கும். சந்தரவதனா அவர்களின் "கரண்டி" படைப்பை என் தோழிகளுக்குப் படிக்கக் கொடுத்திருக்கிறேன்! மீடியாக்கள் ஒருவித பரபரப்பை உண்டாக்கியிருக்கும் இந்த நேரத்தில், அங்கு நடக்கும் இனப்படுகொலையைக் குறித்தும் பேச வேண்டும். நிம்மதியாக, சம உரிமைகளோடு அவரவர் மண்ணில் வாழ அனைவருக்கும் உரிமை இருக்கிறது என்பதையாவது இந்தத் தலைமுறையினருக்கு தெரிவிக்கவேண்டும். நாம் எவ்வாறு நமது குழந்தைகள் விளையாடவும், சாக்லேட் ருசிக்கவும் உரிமை இருப்பதாக எண்ணுகிறோமோ அதே உரிமையும் வாழ்வின் சுகங்களும் தமிழர்களாய் பிறந்த/போராட்ட மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்கும் இருக்கிறது என்பதையும் நினைவுபடுத்த வேண்டும்!!

26 comments:

குடுகுடுப்பை said...

இன்றைய பிரபாகரன் பற்றிய பரபரப்பில், அங்கே கடைசி ஒரு வாரத்தில கொல்லப்பட்டவரின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறது. குறைந்தது 30 ஆயிரம் பேர் புதைக்கப்பட்டிருப்பார்கள்.

அனு குண்டால் அழிந்த ஜப்பான் கார் கம்பெனிகள் அமெரிக்க கார் கம்பெனிகளுக்கு சங்கு ஊதியது. தமிழினமே மதியால் வெல்.யாரையும் பகைத்துக்கொள்ளாதே.ஈழத்தமிழர்களே உங்கள் வெற்றி அவர்களின் முகத்தில் கரி பூசட்டும்.

ஆயில்யன் said...

/அங்கு நடக்கும் இனப்படுகொலையைக் குறித்தும் பேச வேண்டும். நிம்மதியாக, சம உரிமைகளோடு அவரவர் மண்ணில் வாழ அனைவருக்கும் உரிமை இருக்கிறது என்பதையாவது இந்தத் தலைமுறையினருக்கு தெரிவிக்கவேண்டும்//

well said

ஆகாய நதி said...

ஈழப் பிரச்சனை குறித்து நமக்குள்ளே விவாதிப்பது வீண்... அந்த பிரச்சனையினால் ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் இரத்தக் கண்ணீர் வடியதான் செய்கிறது...

பேச வேண்டியவர்கள் பேசித் தீர்க்கும் பிரச்சனை இது... பேசுவதை விடுத்து ஒருவருக்கொருவர் ஆயுதம் ஏந்தி தாக்கி அழித்து இதனால் அவர்களுக்கிடையில் சிக்கித் தவிக்கும் அழிந்து கொண்டிருக்கும் ஈழ மக்களின் நிலை பரிதாபமானது :(

இது என் கருத்துமட்டுமே...

என் கவலை ஈழத் தமிழ் மக்கள் பற்றியது தான் :( அவர்கள் ஏன் அநியாயமாக சாக வேண்டும்?
உயின் மதிப்பு யாருக்குமே புரியவில்லை அங்கே... வலியின் உணர்வும், இரத்தத்தின் இழப்பும் உணர்ந்து போரினை இரு தரப்பினருமே நிறுத்தி பேச்சு வார்த்தை மூலம் ஒரு நல்ல முடிவுக்கு வருவது நலம்...

தமிழ் மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும் ஆனால் அவர்கள் அழிந்து அந்த உரிமையைப் பெற்று என்ன பயன்? சந்ததியில்லாமல் செய்த பின் யாருக்காக உரிமை... அழிவை நிறுத்த வேண்டும்...

இதில் பல விஷயங்களை வெளிப்படையாக கூற இயலாத நிலையில் நான் :( என்னைப் போல் இன்னும் எத்துணை பேரோ?

ஆகாய நதி said...

//
ஈழப் பிரச்சனை குறித்து நமக்குள்ளே விவாதிப்பது வீண்...
//

என்பதற்கு அர்த்தம் நாம் மட்டுமே நமக்குள்ளேயே பேசிக் கொண்டிருப்பது வீண்... பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும்...

இதைப் பற்றி நமக்குள்ளேயே பேசியே நேரத்தை வீணடிப்பதை விட எல்லாரும் சேர்ந்து இந்திய அரசுக்கு மனு கொடுக்கலாமே இது விஷயத்தில் உதவுமாறு... நம்மால் முடிந்ததை செயலில் செய்ய வேண்டும் என்பதே என் கருத்து...

ஆகாய நதி said...

//
ஆண்கள், ஓரளவிற்கு அரசியல் ஆர்வம் கொண்டவர்களாயிருந்தால் கொஞ்சமேனும் போராட்டம் குறித்தும் இனஅழிப்புக் குறித்தும் விழிப்புக் கொண்டிருக்கிறார்கள். (இது எனது பார்வை மட்டுமே. பல நண்பர்கள் இரண்டு நாட்களாகக் கூடிகூடி பேசுவதும், இணையத்தை செக் பண்ணுவதுமாக இருக்கும்போது, பெண்தோழிகள் மருந்துக்குக்கூட வாய் திறக்கவில்லை //

மன்னிக்கவும் முல்லை,

எல்லாப் பெண்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை...

பெண்களுக்கு அரசியலில் நடப்பதும் தெரியும், ஈழத்தில் நடப்பதும் தெரியும்...

விவேகமான சிந்தனையும் அதற்கான செயலாற்றலுமே இங்கு தேவை.. பேசிக் கொண்டிருப்பதால் நமக்குள்ளே கர்த்துப் பரிமாற்றம் நிகழுமே அன்றி அங்கு நடக்கும் பிரச்சனைக்கு அது தீர்வாகாது என்பது என் கருத்து...

ஆகாய நதி said...

//
நிம்மதியாக, சம உரிமைகளோடு அவரவர் மண்ணில் வாழ அனைவருக்கும் உரிமை இருக்கிறது என்பதையாவது இந்தத் தலைமுறையினருக்கு தெரிவிக்கவேண்டும்.
//

இது சரியான கருத்து!

Thiru said...

நீங்கள் சொல்வது ரொம்பவே சரி. என்ன காரணமாக இருந்தாலும், எங்கே நடந்தாலும், யார் செய்திருந்தாலும் - மனிதர்களின் மீது தாக்குதல் நடத்தி கொல்லுதல் மன்னிக்கமுடியாத குற்றம் தான். இதை கண்டும் காணாமல், ஒரு சிறிய எதிர்ப்பைக் கூட பதிவு செய்யாது இருக்கும் அனைவர்க்கும் (என்னையும் சேர்த்துதான்) இதில் ஒரு பங்கு உண்டு. பின்னாளில் வரும் தமிழ் சந்ததியினர் ஹிட்லர்/முசோலினி படுகொலைகளோடு, இந்த தமிழின கொலைகளையும் வரலாற்றில் படிப்பார்கள். ஒருவேளை அவர்கள் யோசிக்கலாம் "ஏன் இதை தடுக்க பக்கத்து வல்லரசு நாடான இந்தியா வரவில்லையென".

ஐந்தினை said...

நாம் கையாலாகாதவர்கள் என்பதை நேர்த்தியாய் சுட்டியிருக்கிறீர்கள்.... நம்மால் வருத்தப்பட மட்டுமே முடிகிறது :(

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஐந்தினை said...
நாம் கையாலாகாதவர்கள் என்பதை நேர்த்தியாய் சுட்டியிருக்கிறீர்கள்.... நம்மால் வருத்தப்பட மட்டுமே முடிகிறது :(

வழிமொழிகிறேன்.


டாக்டர் ஷாலினியின் இந்தப் பதிவை படியுங்கள், அனைவரிடமும் பகிருங்கள்

Post: இலங்கை தமிழருக்கான மனநல மேம்பாட்டு உதவிகள்
Link: http://linguamadarasi.blogspot.com/2009/05/blog-post.html

நம்மால் இதையாவது செய்யமுடியுமா என்று பார்ப்போம்

தமிழ்நதி said...

நீங்கள் சொல்லும் 'பரபரப்பை'பதிவுலகில் நானும் அவதானித்தேன். இவ்வளவு நாட்களும் மனச்சாட்சியற்றவர்களின் செருப்பைத் தோள்மீதில் சுமந்தவர்கள்கூட திடீரென 'தலைவன் என்றால் அவன்தான்'என்கிறார்கள். கொடுமை என்றால் இதுதான் கொடுமை. வழக்கம்போலவே பார்த்திருக்கவே விதிக்கப்பட்டோம்.

jothi said...

//நாம் கையாலாகாதவர்கள் என்பதை நேர்த்தியாய் சுட்டியிருக்கிறீர்கள்.... நம்மால் வருத்தப்பட மட்டுமே முடிகிறது :(//

என்னையும் சேர்த்தே இது. உண்மையான தகவல்களை புறந்தள்ளி விட்டு வெற்று தகவல்களை பரப்பும் ஊடகங்கள் மிக கண்டனத்திற்குரியவை. இஸ்ரேலின் கொடுமையை வெளியே கொண்டு வந்த ஊடகங்கள் எங்கே? நமீதாவின் தோழன் என்ன செய்கிறார் என்பதை துப்பு பார்ர்க்கும் இவர்கள் எங்கே? அரசியல்வாதிகளுக்கு கூட சாவு உண்டு. துப்பு கெட்ட இவர்களுக்கு???

rapp said...

////
ஆண்கள், ஓரளவிற்கு அரசியல் ஆர்வம் கொண்டவர்களாயிருந்தால் கொஞ்சமேனும் போராட்டம் குறித்தும் இனஅழிப்புக் குறித்தும் விழிப்புக் கொண்டிருக்கிறார்கள். (இது எனது பார்வை மட்டுமே. பல நண்பர்கள் இரண்டு நாட்களாகக் கூடிகூடி பேசுவதும், இணையத்தை செக் பண்ணுவதுமாக இருக்கும்போது, பெண்தோழிகள் மருந்துக்குக்கூட வாய் திறக்கவில்லை //

மன்னிக்கவும் முல்லை,

எல்லாப் பெண்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை...

பெண்களுக்கு அரசியலில் நடப்பதும் தெரியும், ஈழத்தில் நடப்பதும் தெரியும்...

விவேகமான சிந்தனையும் அதற்கான செயலாற்றலுமே இங்கு தேவை.. பேசிக் கொண்டிருப்பதால் நமக்குள்ளே கர்த்துப் பரிமாற்றம் நிகழுமே அன்றி அங்கு நடக்கும் பிரச்சனைக்கு அது தீர்வாகாது என்பது என் கருத்து//


இதில் ஆகாயநதி மற்றும் சந்தமுல்லை இருவரின் கூற்றையும் வழிமொழிகிறேன்.

ஆகாயநதி கூறியது போல, பெரும்பான்மையானப் பெண்கள், அரசு ஊழியர்களில் இருந்து பூ விற்கும் அம்மா வரை , ஈழத்தின் பால் மிகுந்த பற்று கொண்டவர்களே. இவர்களிடம் பேசும்போதோ, இவர்கள் தங்களிடையே பேசும்போதோ, இதை சர்வ சாதாரணமாகக் கேக்கலாம். இன்னும் கொஞ்சம் தாம்பரத்தை தாண்டிய, ஆவடியை தாண்டிய ரயில்களில் பெண்களின் உரையாடல்கள் இன்றுவரை இவ்விஷயத்தை நோக்கி உண்டு. அவர்கள் தங்களின் அனுதாபத்தையும், ஆத்திரத்தையும் அக்கறையையும் பெரியளவில் தங்கள் சொந்த விஷயத்திலேயே வெளிக்காட்டாதபோது, பொது விஷயங்களிலா காட்ட முடியும்? இப்படிப்பட்ட பெண்கள் வீட்டில் ஆதரவு காட்டுவதால்தான் வெளியில் பெருவாரியான ஈழ ஆதரவாளர்கள் பிரச்சினையின்றி போராடவும் முடிகின்றது.

அரசாங்கம்தான் எம்என்சி மற்றும் அதன் சார்புடைய நிறுவனங்களையும் அதில் பணியாற்றும், அதனால் நேரடிப் பயன்பெறும் ஒரு சிறிய வட்டத்திற்குண்டான மக்களை நோக்கி உள்ளதென்றால், சந்தனமுல்ளையும் இவர்களைப் பற்றியே அல்லது இவர்களை வைத்தே ஏன் ஒரு வருத்தத்திற்கு வர வேண்டும் என்று யோசிப்பதும் சரிதான்.

ஆனால், சந்தனமுல்லையின் கூற்றும் சரிதான். ஏனென்றால், மேலேக் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பான்மையானப் பெண்கள் பெரியளவில் கருத்துக் காமாட்சிகளாக ஊடகத்திலோ எங்குமோ மாறுவதில்லை. ஆனால், இந்த குறுகிய வட்டத்திற்குள் அடங்கிய பெண்கள் மட்டுமே, ஒட்டுமொத்த பெண்களின் குரலாக (பெரும்பான்மையாக) வெளியுலகில் புரொஜெக்ட் செய்யப்படுகின்றது. மேலும், அவர்களால் ஈராக் விஷயத்தில் அமெரிக்காவை எதிர்த்து மனிதாபிமானக் கூக்குரலிட முடியும்போது, ஏன் இந்த இன அழிப்புக்கு எதிராகக் கூவ முடிவதில்லை என்பதே வருத்தம்.

அத்துடன் இதனைப் போன்ற குறுகிய வட்டத்தை நோக்கிய ஊடகச் சூழ்நிலைகளால், இதனை வீட்டில் பேசுவதோ, இல்லை குழந்தைகளுக்கு இன உணர்வு ஊட்டுவது அசிங்கம் என்றோ, தவறு என்றோ ஒரு சூழல் வந்துவிடக் கூடிய ஆபத்தும் உள்ளது. அதனையே சந்தனமுல்லையின் கூற்றாக நான் பார்க்கிறேன்.

rapp said...

ரொம்ப நல்ல பதிவு முல்லை, என்று பொதுவாழ்வில் உள்ளோரும் ஊடகம் சார்ந்த துறையினரும் தன் இனம் தாழ்ந்ததில்லை, தன் மக்கள் கொடுமைக்குள்ளாகும்போது கொதித்தெழுவது தவறில்லை , மனிதவுரிமை என்பது மற்ற சமூகங்களுக்கு மட்டுமே உரியதில்லை, நம் சகோதரர்களுக்கும் உரியதுதான் என்று தெளிவாக மனதால் உணர்கிறார்களோ அன்றுதான் உண்மையான அக்கறையை அனைவரும் வெளிப்படுத்துவார்கள். ஏனென்றால் இவர்களின் கருத்தையே பொதுக் கருத்தாக மாற்றும் வல்லமை படைத்தவர்கள் என்பதால் சொல்கிறேன்.

அமுதா said...

/*ஆயிரக்கணக்கில் அல்லலுறும் அப்பாவி பொதுமக்கள் குறித்தோ அல்லது, முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் பெண்டிர்/ குழந்தைகள் நிலை குறித்தோ எதுவும் சொல்லாத மீடியாக்களும் காரணம்.*/
இது உண்மை. பலருக்கு பிரச்சினையின் முழுமை தெரியாததால், மிகத் தவறான கண்ணோட்டங்கள் பலரிடம் உள்ளன .


/*...இங்கும் ஆண்/பெண் வேறுபாடு இருக்கிறது.*/
இருக்கலாம், அது எந்த ஒரு செய்திக்கும் இருக்கும். ஆனால் பேசாததே அது குறித்த விழிப்புணர்வு இல்லை என்று கொள்ளலாகாது. ஆகாய நதியின் கருத்தோடு ஒத்துப்போகிறேன்.

ஆனால் இதில் ஊடகங்களின் பணியும் முக்கியமானது. ஆ.வி மற்று ப்ளாக் படிப்பதால் அங்கே நடக்கும் கொடுமைகள் எனக்கு தெரிந்தன. பல வேளைகளில் என் தோழிகளிடம் பகிர்ந்து கொண்ட பொழுது தான் அவர்களும் அங்கு நடக்கும் கொடுமைகளை ஓரளவு புரிந்து கொண்டனர். செய்திகள் படித்தால் தானே தெரியும்? இந்த கொடுமைகள் முடிவுக்கு வரவேண்டும் என்ற ப்ரார்த்தனைக்களுடன் தான் முடிவுறும் இந்த உரையாடல்கள் ஒவ்வொரு முறையும்.


/*நிம்மதியாக, சம உரிமைகளோடு அவரவர் மண்ணில் வாழ அனைவருக்கும் உரிமை இருக்கிறது என்பதையாவது இந்தத் தலைமுறையினருக்கு தெரிவிக்கவேண்டும்.*/
நிச்சயமாக...

விக்னேஷ்வரி said...

உண்மையிலேயே நாம் கையாலாதவர்களாய் சுய நலக்காரர்களாய் மாறி விட்டது கொடுமை.

ஆகாய நதி said...

//
டாக்டர் ஷாலினியின் இந்தப் பதிவை படியுங்கள், அனைவரிடமும் பகிருங்கள்
//

நன்றி அமித்து அம்மா...

ராமலக்ஷ்மி said...

//இந்த கொடுமைகள் முடிவுக்கு வரவேண்டும் என்ற ப்ரார்த்தனைக்களுடன் தான் முடிவுறும் இந்த உரையாடல்கள் ஒவ்வொரு முறையும்.//

அமுதா சொல்லியிருப்பதை வழி மொழிகிறேன்.

//நிம்மதியாக, சம உரிமைகளோடு அவரவர் மண்ணில் வாழ அனைவருக்கும் உரிமை இருக்கிறது என்பதையாவது இந்தத் தலைமுறையினருக்கு தெரிவிக்கவேண்டும்.//

நீங்கள் சொல்லியிருப்பதையும்.

வித்யா said...

ராப் கூறியதை நானும் வழிமொழிகிறேன். வீண் பரபரப்பு காட்டும் விஷயமல்ல இது. நன் உணர்வை உள்ளக் கொதிப்பை உலகுக்கு உரக்க சொல்ல வேண்டிய தருணம். மாண்ட இலட்சக்கணக்கான மக்களின் மரணத்திற்க்கு நியாயம் கேக்க வேண்டிய தருணம்.

சுரேகா.. said...

நியாயமான உணர்வுகளை அதைவிட நியாயமான வார்த்தைகளால் தந்துள்ளீர்கள்.

நல்லது!

தீஷு said...

ரொம்ப நல்ல பதிவு முல்லை. ஊடகங்கள் பரபரப்பு செய்திகள் கொடுக்கவே முயல்கின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை சில ஊடகங்கள் தவிர மற்றவை அறிவிப்பதில்லை.

//அவரவர் மண்ணில் வாழ அனைவருக்கும் உரிமை இருக்கிறது என்பதையாவது இந்தத் தலைமுறையினருக்கு தெரிவிக்கவேண்டும்//
கண்டிப்பாக..

நசரேயன் said...

அனைத்தையும் வழி மொழிகிறேன்

நிலாவும் அம்மாவும் said...

கையாலாகாத்தனம் நினியாச்சு வெக்கமா தான் இருக்கு..

ஏதாவது பண்ணனும்...என்ன பண்ணன்னு தான் யாருக்குமே தெரியல..

மருத்துவர் ஷாலினி மாதிரி தொண்டு செய்யுற வாய்ப்பு கிடச்சா கூட இவ்வளவு நாள் வாயைப் போத்திக்கிட்டு இருந்து சேர்த்து வச்ச பாவத்தை போயி கரைச்சுட்டு வரலாம்..

மாதவராஜ் said...

வேதனையோடும், நிதானத்தோடும் தங்கள் மனதை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். இலங்கையில் தமிழ் மக்கள் படும் அவதி, நம் இதயங்களையும், சிந்தனைகளையும் அறுத்துக்கொண்டு இருக்கிறது.

Anonymous said...

mullai akkaaa,
dont worry.i feel he is alive.nakeeran has posted a photo.
he is laughing seeing his image shown as dead.
byye.

Deepa said...

ஆழ்ந்த மனிதாபிமானம் தொனிக்கும் பதிவு. ஊடகங்கள் உருவாக்கும் பரபரப்புக்கு மட்டுமே அடிமையாகும் சராசரி மனோபாவத்தைக் கண்டித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

Kripa said...

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

நன்றிகள் பல...

- நம் குரல்