Friday, December 08, 2006

இது கதை நேரம்

ஒரு ஊர்ல ரெண்டு பாட்டிங்க இருந்தாங்க. அவங்க பேரு இந்தா பாட்டி, இல்லா பாட்டி.ஏன் அந்த பேரு வந்துச்சுன்னா இந்தா பாட்டி எல்லாருக்கும் இந்தா இந்தான்னு கேட்டதெல்லாம் எடுத்து குடுத்துக்கிட்டே இருப்பாங்களாம்.ஆனா, இல்லா பாட்டி யார் என்ன கேட்டாலும் இல்ல..இல்லன்னே சொல்லுவாங்களாம்.! அதனாலதான் அவங்களுக்கு அந்த பேர் வந்துச்சாம்.

ஒரு தடவை, என்னா ஆச்சு தெரியுமா.?


ஒரு குருவி அடிப்பட்டு கீழ விழுந்து கிடந்துச்சாம். இல்லா பாட்டி பார்த்துட்டு ஒண்ணும் பண்ணாம போய்ட்டாங்களாம். இந்தாபாட்டி அதை பார்த்துட்டு வீட்டுக்கு தூக்கிகிட்டு வந்தாங்க. அதுக்கு வேண்டிய மருத்துவம் செஞ்சு, குடிக்க தண்ணி, சாப்பாடு-ல்லாம் தந்தாங்க!குருவியும், ஜாலியா பாட்டி கூட இருந்துச்சு! குருவிக்கு உடம்பு சரியானவுடனே, பாட்டிக்கு "பை" சொல்லிட்டு பறந்து போய்டுச்சு.


அடுத்த நாள் காலைல பாட்டி கோலம் போட வாசலில் வந்து பார்த்தப்போ ஒரு பூசணி விதை இருந்தது. பாட்டி அதை நட்டு வச்சாங்க. கொஞ்ச நாள்ல பூசணிக்கொடி வளர்ந்து பூத்து காய் காய்ச்சது. அது சாதாரணமான சைஸ்ல இல்லாம, ரொம்ப பெரிசா இருந்தது. பாட்டி அதை அறுத்து பார்த்தப்போ, அவங்களுக்கு ஒரே ஆச்சரியம்! அது உள்ள நிறைய பரிசு பொருட்கள், நகைங்க, பணம்-லாம் இருந்தது. பாட்டி ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க. அதுவும் இல்லாம,அந்த பூசணிக்காயை கேட்டவங்களுக்கெல்லாம் கொடுத்தாங்க!

இல்லா பாட்டி இதை பார்த்து ரொம்ப பொறாமை பட்டாங்க! அடுத்த நாள் அவங்க ஒரு குருவிய பிடிச்சி அதுக்கு சாப்பாடு, தண்ணில்லாம் கொடுத்தாங்க! குருவியும் அவங்க வீட்டு முன்னாடி ஒரு பூசணி விதைய போட்டுச்சி! பாட்டி ரொம்ப சந்தோஷமாய்டாங்க! அந்த விதைய நட்டு தண்ணி ஊத்தினாங்க! அடுத்த நாள் காலைலயே அது வளர்ந்துடுச்சான்னு பார்த்தாங்க! தினமும் அது வளருதா வளருதான்னு பார்த்துக்கிட்டே இருந்தாங்க! கடைசியா அது வளர்ந்து பூ பூத்து காயும் வந்துது. பாட்டி அது பெரிசாகட்டும்ன்னு காத்திருந்தாங்க. அதை பார்த்துட்டு நிறைய பேர் வந்து கேட்டாங்க. ஆனா, பாட்டி யாருக்கும் கொடுக்கல்ல.அவங்க மட்டும்,அதைபறிச்சு வீட்டுக்கு உள்ள எடுத்துகிட்டு போனாங்க. கதவு, ஜன்னல்லாம் சாத்திட்டு, அதை அறிஞ்சு பார்த்தாங்க. அது உள்ளேர்ந்து வண்டு, பல்லி,பூரான் எல்லாம் வந்து அவங்களை கடிச்சுது!!

(இது ஒரு செவி வழி கதை!! சிறு வயதில் என் பெரிம்மா எனக்கு சொன்னது. என்னை எப்போது கதை சொல்ல சொன்னாலும் இதைதான் சொல்வேனாம்!!நான் என் மகளுக்கும் சொல்ல விரும்பும் கதை!! )






6 comments:

luckylook said...

தலைப்பு சூப்பர்

செந்தழல் ரவி said...

இந்த கதை எல்லாம் பாப்பா புரிஞ்சுக்குமா முல்லை அவர்களே !!!

சந்தனமுல்லை said...

அப்போ கதை??

சந்தனமுல்லை said...

அதான் படம்லாம் போட்டிருக்கேன்ல..புரிஞ்சுக்கும்..:-)!!

முத்துலெட்சுமி said...

நன்றி.என் பெண்ணின் பள்ளி ப்ராஜக்ட்டுக்கு ஒரு கதை தேவைப் பட்டது இந்த கதையை உபயோகித்துக்
கொண்டேன்.இப்படி நிறைய கதை சொல்லுங்க .

சந்தனமுல்லை said...

கண்டிப்பாக..நிறைய கதைகள் சொல்லப்படும்...!!!