Wednesday, December 27, 2006

கனவே கலையாதே....

கனவு சொல்றதுங்கறது ஒரு கலை. அதை பொறுமையா கேக்கறதுங்கறதும் ஒரு கலை, ஏனோ அது நிறைய பேருக்கு கைவர மாட்டேங்குது! தான் கண்ட கனவை சொல்றதுல இருக்கற ஆர்வம், கேக்கறதுல இல்ல!

கனவுன்னா அப்துல் கலாம் சொல்றாரே அந்த கனவு இல்லீங்க..நாம தூங்கும்போது வருமே அது!

என் தோழி ஒருத்தி பாவம்..அவளுக்கு நிறைய கனவு வரும். ஆனா, அதை கேக்கறதுக்குதான் யாருமே இருக்கறதில்ல! காலேஜ் நாள்ல இருந்தே அவளுக்கு இது ஒரு பழக்கம். கனவை கண்ட உடனே அதாவது காலையிலேயே சொல்லிடனும் சுடச்சுட. அதுவும் பரீட்சை சமயத்தில எல்லை மீறி போய்டும். திடு திப்புனு எழுந்து உக்காந்துப்பா! என்னன்னு பார்த்தா, கனவாம். வேற வழி இல்லாம் நாங்களும் அந்த நேரத்தில அதை கேட்டுட்டு...எங்க தூங்கறது!!அவளோட மனக்குறைய போக்கத்தான் இந்த பதிவு!

என்ன கனவுன்னா பரீட்சைக்கு இவ கிளம்பி வரா. அதுவும் நேரம் வேற ஆகிடுது. இவளும் வேக வேகமா வந்து சேர்ந்துடுடறா! பார்த்தா, பெல் அடிச்சு, கேள்வித்தாள் கொடுத்துடறாங்க! அது மட்டும் இல்லாம, ஒரு மணி நேரம் லேட். அப்படியே வியர்த்து விறுவிறுத்து போய் நிக்கறா. அந்த நேரத்தில இவ முழிச்சுக்கறா!இதுதான் கனவு! இந்த கனவு ரொம்ப கடினமான பேப்பர் அன்னைக்குத்தான் வரும். என்ன கேக்க வரீங்க..இது எப்படி எங்களுக்கு தெரியும்ன்னா..ஏன்னா, இதே கனவு எல்லா செமஸ்ட்ருக்கும் எல்லா கடினமான் பேப்பருக்கும் வரும்! (ம்ம்..எல்லா பேப்பருமே கடினமான பேப்பர்தான்..அது தனி விஷயம்!!)

வேற வழி..நாங்க எல்லாரும் அதே கனவை எல்லா செமஸ்டருக்கும் கேக்க வேண்டி வரும்!இதுக்கூட பரவாயில்ல..இன்னொரு விஷயம் என்னன்னா, நிஜ வாழ்க்கையில் அவளுக்கு ஒரு பழக்கம்.அதாவது, அவ எதிர்பாராதது ஏதாவது நடந்துச்சுன்னா, அது கனவா இருக்க கூடாதான்னு நினைச்சிப்பாளாம்.அதே மாதிரி, கனவுலயும் நினைச்சுப்பாளாம்.இது எப்படி இருக்கு?

அந்தளவுக்கு கனவோட ஒன்றி போய்டறது...அதாவது பரவாயில்ல..அவ விளையாடற மாதிரி கனவு கண்டா, ஃபுட்பால் யாருன்னு நினைக்கறீங்க பக்கத்துல படுத்திருக்கறவங்கதான்! ஒருதடவை, டமால்ன்னு ஒரு சத்தம் , பார்த்தா கட்டில்ல இருந்து கீழே விழுந்து கிடக்கறா என்னன்னு கேட்டா, மலையில இருந்து ஓடி வந்து பள்ளத்துல விழற மாதிரி கனவாம்.

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்ன்னு சொல்லுவாங்க இல்லையா!இதே பழக்கம் இப்பவும் தொடருது.இப்பவும்ன்னா கல்யாணத்துக்கு அப்புறமும்! இப்ப அம்மணிக்கு என்ன கவலைன்னா அவளோட கணவர் இவ சொல்லுற கனவையெல்லாம் ரசித்துக் கேக்கறதில்லையாம். .

ஏங்க, நான் பச்சைகலர் புடவை கட்டிக்கிட்டு போறேண்..காடு மாதிரி இருக்குது அந்த இடம். ஆனா அங்க ஒரு ஏரோப்பிளேன் மாதிரி ஒன்னு வருது.நான் அதுகிட்ட போய் என்னன்னு பார்க்கறேன். திடீருன்னு ஒரு சத்தம்.. இப்படின்னு அவ சொல்லறத கேக்க பொறுமை இல்லயாம்.

"ஏங்க, நேத்து எனக்கு வந்த கனவுல" ன்னு ஆரம்பிச்ச உடனே "இதோ..குளிச்சிட்டு வரேம்மா"ன்னு கிளம்பிடறாராம்.

அதனால, என்ன பக்க விளைவுன்னா, எனக்கு போன் பண்ணிடறாங்க மேடம். வேறேன்ன..நான்தான் கேக்க வேண்டியிருக்கு!

ம்ம்..நானுந்தான் எத்தனை நாள் பொறுமையா இருக்கறது!!
அதனால, ஒரு ஐடியாவை சொன்னேன்.அது இப்போ சரியா ஒர்க்-அவுட் ஆகிடுச்சாம்.. இப்போல்லாம், அவ வீட்டுக்காரர் ஒரு கனவு விடறதில்லையாம்!!

சாம்பிளுக்கு சில..

"நான் வேகமா சைக்கிள் ஓட்டிக்கிட்டு போறேன். அழுத்தி தான் மிதிக்கறேன். ஆனா, போன மாதிரியே தெரியல..அப்போ பார்த்தா நீங்க வந்துடறீங்க! என்னை பார்த்துட்டு சைக்கிள் சாவியோட பூட்டை திறக்கறீங்க..என்ன ஆச்சரியம்..சைக்கிள் ஓடுது! நான் போய்கிட்டே இருக்கும் போது பார்த்தா, ஒரு போலீஸ்காரர் வரார். என்கிட்ட வந்து, "லைசன்ஸ் இருக்கா"ன்னு கேக்கறார். நான் இல்லன்னு சொல்றேன். அப்போ நீங்க வந்துடறீங்க...அப்புறம்..

"ம்ம்..சொல்லு. நான் வந்து என்ன பண்றேன்?"

"இருங்க..மறந்துட்டேன்..ம்ம்."

"நல்லா யோசிம்மா! என்ன பண்றேன்?"

அடுத்த நாள்,

"நான் பிளேன்ல போய்கிட்டிருக்கேன். கீழே பார்த்துகிட்டே வரேன். மெட்றாஸ் மாதிரி இருக்கு. அட, நம்ம வீடு தெரியுதான்னு எட்டி பார்க்கறேன். நீங்க நிக்கறீங்க."

"ம்ம்..என்ன பண்றேன்..? நான் உன்னோட பிளேன்ல வரலியா?"

"ம்ம்..எனக்கு றெக்கை முளைக்கற மாதிரி இருக்கு. என் கைய பார்த்துக்கறேன்.."

"சொல்லு? வேற என்ன பண்றேன்?"

"கைய ஆட்டறீங்க..! ஏதோ சொல்ற மாதிரி இருக்கு!
அப்புறம், காலையும் பார்த்துக்கறேன்"

"என்ன சொன்னேன் நான்?"

மற்றொரு நாள்,

"மாடியில மொளகா காய வச்சிக்கிட்டிருக்கேன். அப்போ ஒரு காக்கா வந்து மொளகா கேக்குது! நான் ஆச்சரியமா பார்க்கறேன். கையில இருந்த மொளகாய கொடுக்க நினைக்கிறேன். உங்க குரல் கேட்குது!! "

"நானும் வரேனா?.."


கட்..கட்..கட்!!

இப்ப உங்களுக்கு நல்லா புரிஞ்சிருக்குமே..நான் என்ன ஐடியா கொடுத்திருப்பேன்னு!

எதிர்ல இருக்கறவங்களயும் கனவுவில சேர்த்துகிட்டா
அவங்களும் சுவாரசியமா கேப்பாங்க! சொல்லறது என்னமோ கனவுதானே!!

3 comments:

கார்மேகராஜா said...

என்னாது!
கனவுன்னு சொல்லிட்டு கதை உடுறீங்க!

சந்தனமுல்லை said...

வாங்க கார்மேகராஜா,
அட..கனவை பத்தின கதைதாங்க!!

ஜி said...

இது நல்லக் கதையா இருக்கே...

நான் கண்ட கனவு காலைலேயே மறந்து போயிடுது.. இதுல எக்ஸ்ப்ளேனேஸன் வேறயா...