Tuesday, December 19, 2006

நெஞ்சே நெஞ்சே

சென்னை போகும் லால்பாக் ரயில் கிளம்ப இன்னும் அரை மணிநேரம் இருந்தது. ப்ரியங்கா ஒரு ஓப்பன் டிக்கட்டை கையில் வைத்து கொண்டு, குழப்பத்தோடு வந்துக் கொண்டிருக்கிறாள். மறு கையில் இருந்த ஹோல்டால் கனத்தது. மனம் அதனினும் மேலாக.

சரி, எஸ்-3 எண் கொண்ட பெட்டியில் ஏறிக்கொண்டாள். பெண் என்றால் பேயும் இரங்கும், டிடிஆர் இரங்காமலா போய் விடுவார்? அதுவும் தனியாக வரும் பெண் என்றால்
ஒரு டிக்கட் அட்ஜஸ்ட் செய்து கொடுத்துவிடுவார் என்று மனதில் நினைத்தவாறு ஒரு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தாள். தள்ளுவண்டியில் வந்த லேஸ் சிப்ஸ் மற்றும் வாழைப்பழத்தை வாங்கியவள், கையோடு கொண்டு வந்திருந்த வுமன்ஸ் எராவை பிரித்து படிக்க முற்பட்டாள்.
ஆனால், அவள் மனமோ இரவு நடந்ததை நினைத்துக் கொண்டிருந்தது.

செந்தில் - ப்ரியங்கா திருமணம் நடைபெற்று மூன்று மாதங்களே ஆகி இருந்தது. செந்தில் ஒரு நல்ல கம்பெனியில் மென்பொருள் பொறியாளராக இருந்தான். கண்ணுக்கு இனியவன். தேனிலவு முடிந்து, வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருந்தது இருவருக்கும். அதுவும், செந்தில் வேலை செய்யும் பன்னாட்டு கம்பெனி வேலை பளு அதிகம். இரவு வீடு திரும்ப தாமதமாக ஆகும்.ஆனால், கடந்த மூன்று மாதங்களாகவே அது ஒரு நாள் போல தொடர்ந்து கொண்டிருந்தது.

ப்ரி-யும்,(செந்தில் அப்படித்தான் அவளை அழைப்பது வழக்கம்) கேட்காமலில்லை. பதில் என்னவோ,

"இன்னைக்கு ஸ்டேடஸ் மீட்டிங்டா" இல்லை "ரிலீஸ் இருக்கு" என்ற ரீதியில் இருக்கும். சில நேரங்களில், "கான்ப் கால் இருக்கு, வெய்ட் பண்ணாதே..சாப்பிட்டுடுமா" என்பான் தொலைபேசியில். காலை எட்டு மணிக்கு சென்றால், இரவு பதினொன்று இல்லை அதற்கு மேல்தான். சனிக்கிழமைகளிலும் செல்ல வேண்டி இருக்கும்.

என்ன வேலையோ என்று ப்ரிக்கு சில சமயங்களில் தோன்றும். அதுவும், மொழி தெரியாத, நண்பர்க்ளும் இல்லாத இந்த ஊரில் தனியாக மாட்டிக்கொண்டோமே என்று கழிவிரக்கம் அவள் மனதில். இவை எல்லாம் சேர்ந்து அவளை வாட்டியதில், பிரச்சினை நேற்று வெடித்து விட்டது.

கரம் பிடித்து கொஞ்சியவன், சினத்தைக் காட்டிவிட்டான்.
வார்த்தைகள் முற்றியது. கண்ணீர் மிஞ்சியது. இதோ இப்போது அவள் ரயிலில். அவள் பயணப்படுவது கூட அறியாமல் கணினி முன் அவன். இன்னும் இருபத்தியைந்து நிமிடங்கள் இருந்தன. "நான் போறேன். இப்போ ரயிலில் இருக்கேன். என் தொல்லை இல்லாமே, உங்க வேலையை கட்டிக்கிட்டு சந்தோஷமா இருங்க! " என்று குறுசெய்தி அனுப்பி விட்டு ஜன்னல் புறம் வேடிக்கை பார்க்க துவங்கினாள்.

அட..அங்கே வருவது யார் சுனந்தா போல் இருக்கிறதே!
அப்பா, ஒரு துணை கிடைத்து என மகிழ்ந்தவள், அவளை நோக்கி கையசைத்தாள். தோழிகள் இருவரும் அருகில் அமர்ந்து கொண்டனர்.

"ஹாய், எப்படி இருக்கே சுனி? யூ.எஸ்-ல இருந்து எப்ப வந்தே? எவ்ளோ நாள் ஆச்சு பார்த்து? "

"ஆமாப்பா!நான் வந்து ஒரு வருஷம் ஆகப்போகுது. நீ எப்படி இருக்கே? "

"நான் நல்லா இருக்கேன். அப்போ கல்யாணத்துக்கு வந்திருக்கலாமில்ல? எங்க உன் ஹப்பி?" - வினவினாள் ப்ரி.
"இல்ல ப்ரியா..நான் தனியா வந்துட்டேன். விவாகரத்துக்கு அப்ளை பண்ணியிருக்கேன்!"

"ஹேய்! என்ன சொல்ற? "

"ஆமாப்பா! அவன் கூட வாழ்ந்த ஒரு வருஷம்... ஊப்ஸ்!
அது ஒரு நைட் மேர்!! "

"ஓ..சாரி சுனி! அம்மா, அப்பால்லாம் எப்படி இருக்காங்க? "

"ம்ம்..ஓக்கே! "

அதற்குள், ரயில் புறப்படுவதற்க்கான அறிவிப்புகள்.
இன்னும் சில மணித்துளிகள்! திடீரென தன்னைத் தேடி செந்தில் இப்போது வந்தால் எப்படி இருக்கும் என அவள் மனம் நினைத்தது. ம்ம்..அவன் வரமாட்டான், வேலைதான் முக்கியம் அவனுக்கு என்றெண்ணியவள், சுனியை நோக்கி
பேச்சை தொடரலானாள்.

"இப்ப என்ன சுனி பண்ணிட்டிருக்கே?"

"நான் மெயின்ஃபிரெம்ஸ் கோர்ஸ் முடிச்சிட்டு, இப்ப வேலை தேடிக்கிட்டிருகேன். இப்பக்கூட இண்டர்வியூக்குதான் இங்க வந்தேன். அனேகமா இது கிடைச்சிடும்."

"ஓ! கங்கிராட்ஸ்யா! "

"தேங்க்ஸ் ப்ரியா! "

ரயில் ஓட தொடங்கியது. அவர்கள் பேச்சும்!

யாஹூக்கு ஃபுல்பார்ம் தெரியுமாடி ப்ரி உனக்கு?

தெரியலயே சுனி! இண்டர்வ்யூ-ல கேட்டாங்களா?

இல்ல சுனி, இது தெரியலன்னு என்னை ஒரு நாள் ராத்திரி முழுக்க வெளியில் நிக்க வைச்சாண்டி. குளிர்ல விறைச்சு போய்ட்டேண்டி!

"யாரு உன் ஹஸ்பெண்டா?!" - அதிர்ந்தாள் ப்ரி.

ஆமா! அதுமாதிரி நிறைய!! வீட்டுக்கு தெரிஞ்சா மனசு கஷ்டப்படுவாங்கன்னு ஆரம்பத்துல நான் யார்கிட்டயும் எதுவுமே சொல்லல!

ம்ம்..!

ஆனா, அவன் என்கிட்ட சின்சியரா இல்லன்னு என்க்கு ஒருநாள் தெரிய வந்தது! அப்பதான் எனக்கு வெறுத்துப் போச்சு!

அடப்பாவி!!

மனம் செந்திலை எடை போட்டது. அவளை ஒரு வார்த்தை கூட கடிந்து பேசியது இல்லை. வீட்டில் இருந்தால் வேலைகளில் உதவாமலில்லை. தான் தான் புரிந்துக் கொள்ளாமல் இருந்துவிட்டோமோ!

அவள் எண்ணத்தை கலைத்தது செல்லில் வந்திருந்த் குறுசெய்தி! அட..செந்தில்தான்!

"டியர், நான் எஸ்-9லில்..இதே ரயிலில் உன்னோட !! ! ம்ம்...என்ன பார்க்குறே என்னை விட்டு போக முடியுமா :-)?
ம்ம் எந்த பெட்டியில் இருக்கே..வந்திட்டேன்!!

அவன் அன்பை நினைத்து அவள் மனம் பூரித்தது!!

"சுனி, இதோ வந்திடறேன்"

அவசரமாக எழுந்து செல்லும் ப்ரியாவை ஒன்றும் அறியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சுனி!

9 comments:

பொன்ஸ்~~Poorna said...

நல்லா இருக்கு முல்லை.. சுனந்தாவின் அனுபவங்களை இன்னும் கொஞ்சம் விவரித்திருக்கலாமோ?! ஒரே வாக்கியத்தில் பிரியா மாறுவது கொஞ்சம் நம்பமுடியாததாக இருக்கிறது..

Amudhavalli said...

நல்லா இருக்கு

Anonymous said...

hmm...good improvement'nga..keep it up - padipavan

Divya said...

Short and sweet ஆக சொல்ல வந்த கருத்துடன் அழகிய எழுத்து நடையில் கதை எழுதியிருக்கிறீர்கள்.

பெண்ணிற்கு அவசர புத்தி என்பது போல் காட்டுகிறது ப்ரி கணவனிடம் கோபப்பட்டு சொல்லிகொள்ளாமல் ரயில் ஏறுவதும், தோழியுடன் பேசிய அடுத்த நிமிடத்தில் தன் கணவனோடு ஒப்பிட்டு மனம்மாறுவதும்.........
ஆனால் அப்படியும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நல்ல கதை, தொடர்ந்து எழுதுங்கள்.
ரசித்தேன் உங்கள் கதையின் அழகிய நடையை.பாராட்டுக்கள்!!

சந்தனமுல்லை said...

நன்றி அமுதா மற்றும் "படிப்பவன்"அவர்களே!!
அடிக்கடி வந்து செல்லவும்!!

சந்தனமுல்லை said...

பாராட்டுக்கு நன்றி திவ்யா!!
வலைப்பக்கம் வந்து செல்லவும்!
இன்னும் விரிவாக சொல்லியிருக்கலாம்..தான்!

Manoj Kumar said...

hmm gud... girls are always pinputhi udayavargal :)

Abiramalakshmi said...

I liked it. Though it was short, unnaduya ezuthu nadai ennaku puduchurku. Good Mullai.

Abirami said...

I liked it. Though it was short, unnaduya ezuthu nadai ennaku puduchurku. Good Mullai.