Friday, June 11, 2010

முமியா அபு ஜமால் : குரலற்றவர்களின் குரல்

'கொஞ்சம் நேரம் கூட தனியா இருக்க முடியலை, எப்போ பாத்தாலும் சுத்தி மக்கள்..எங்கேயாவது ஆளே இல்லாத இடத்துக்குப் போகணும்” என்று அங்கலாய்த்துக்கொள்கிறீர்களா? யாருமற்ற காடுகளுக்கும், மலை பிரதேசத்துக்கும் சுற்றுலாவை திட்டமிட்டுக் கொண்டிருக்கிறீர்களா?

அப்படியானால், என்னோடு கொஞ்சம் வாருங்களேன்.

எங்கு என்றா கேட்கிறீர்கள்?

சொல்கிறேன்...

தனி மனித உரிமைகள் 'புனிதப்பசுவாகக்' கருதப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த மரண தண்டனை கைதிகளுக்குக்கான - கொல்வதற்காகவே உயிரோடு உடல்களை வைத்திருக்கும் சிறைக்கும் ,'குழி' என்ற தனிமைச் சிறைகளுக்கும் தான் உங்களை அழைக்கிறேன்!

பென்சில்வேனியாவின் ஹண்டிங்டனுக்கு!

இதோ, இங்கே இருக்கிறது பார்த்தீர்களா..கத்தி போன்ற கூர்மையான இரும்புக் கம்பிகளாலான வேலி- நமது செல்லப்பிராணிகளுக்கான கூண்டை நினைவூட்டுகிறது அல்லவா - அதை நாம் ”நாய் கூண்டு” என்றே அழைக்கலாம். இங்குதான் மரண தண்டனை கைதிகள் தமது நாளின் 24 மணிநேரத்தில் 2 மணி நேரங்களை செலவழிக்க கூட்டமாக விடப்படுவார்கள். மின்னலோ மழையோ வந்தால் வெளிக்கூண்டில் அடைக்கப்படுவதும் தடைப்பட்டுவிடும்.

ஓ..இன்னொரு முக்கியமான செய்தியை சொல்ல மறந்துவிட்டேன் பாருங்கள். கொஞ்சம் கவனித்திருந்தால் நீஙகளே கூட இதை உணர்ந்திருக்க முடியும். அற்பத்தனத்திற்கும், நம்பிக்கையற்ற தன்மைக்கும் இடையே வாழ்க்கை ஊசலாடும் மரண தண்டனை கைதிகளுக்கான இந்தச் சிறையில் கறுப்பர்களையே நீங்கள் அதிகமாக காணமுடியும்.மொத்த தேசத்திலும் 11 சதவீதமே உள்ள ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் இங்கு 40 சதவீதத்தினராக இருக்கிறார்கள்.

ஒரு வெள்ளையரைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒவ்வொரு பதினொரு பேரிலும் ஆறு பேர் தாங்கள் கறுப்பரை கொன்றிருந்தால் சாவை நோக்கி அணிவகுக்க வேண்டிய தண்டனையைப் பெற்றிருக்க மாட்டார்கள். குற்றம் சாட்டப்பட்ட பிரதிவாதியின் வாழ்வும் சாவும் 'இனம்' என்ற அதாவது கொல்லப்பட்டவரின் மற்றும் பிரதிவாதியின் இனம் என்ற முக்கிய காரணியாலேயே நிர்ணயிக்கப்படுகிறது.

ஏனெனில் அவர்கள் கறுப்பர்கள்.கறுப்பாக இருப்பதாலேயே ஆபத்தானவர்கள். அவர்கள் மனித உயிரி அல்ல.ஏனெனில் வெள்ளை இனத்தை சேர்ந்தவராக அவர்கள் இல்லை. ஆம், மரண தண்டனை பிரச்சினையைப் பொறுத்தவரை சட்டம் அரசியலையே பின்பற்றுகிறது என்பதை இதிலிருந்து ஓரளவுக்கு நீங்கள் விளங்கிக் கொள்ளலாம்.

ஊளையிடும் ஜெனரேட்டர்கள், பாய்ச்சப்படும் நச்சுவாயுக்கள், கலக்கப்படும் விஷ திரவங்கள்...

இரண்டாயிரம் வோல்ட் மின்சாரம் தாக்கி ஒருவரை சாவுக்கு அனுப்பும் நேரத்தில் அமெரிக்கா மாகாணத்தின் ஒரு மூலையில் ஏதோ ஒரு மனிதர் அடக்கமுடியாத கோபத்தில் இன்னொரு மனிதரை கொலை செய்துவிடுகிறார்.

அது சரி, மரண தண்டனை குற்றங்களை தடுத்து நிறுத்துமா?

நாம் இப்போது நடந்து வந்தபோது இரும்பு கதவின் கம்பிகளோடு பிணைத்து கட்டப்பட்டிருந்த அவரை கவனித்தீர்களா? சுருக்கம் விழுந்த வெளிறிய அவரது முகமே பாதி கதையை சொல்லிவிடும்தான்.ஆற்றல் வாய்ந்த உளவியல் ரீதியான பாதிப்புகளை தரக்கூடிய மருந்துகளை நீண்டகாலம் பயன்படுத்துவதால்தான் அவர் இந்நிலைக்கு ஆளாகியிருக்கிறார்.

ஓ..போதை மருந்து உட்கொள்பவர் என்று நினைத்து விட்டீர்களா?

இல்லையில்லை..'பாதுகாப்பு'க்கு அச்சுறுத்தல் என்று வெளியிலிருந்து வரும் எந்த ஒரு பொருளுக்கும் அனுமதியில்லை. ஏன், வார்த்தைகளில் மறுப்பு தெரிவித்தால் கூட இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சாதனமான தொலைக்காட்சிக்கும் இழப்பு வந்துவிடும்.

இருந்தாலும், அவரது கை கால்கள் திரும்ப திரும்ப திருகிக்கொள்கிறதே! அவரது உடல் நடுக்கங்களையும்,கட்டுப்பாடற்ற பொருத்தமற்ற அசைவுகளையும் கொண்டிருக்கிறதே! மூளையை மழுங்கடிக்கும் மருந்துகளை தாராளமாக தந்து உளவியல் நோய்களுக்கு எளிதில் இரையாகிறார்களே....

யார் காரணம்?

கைதிகளுக்கு சிறை அதிகாரிகளே மருந்து தருவதற்கான அதிகாரத்தை வழங்கிய அமெரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பினாலேதான்.

இப்படி ஏற்கெனவே செத்துப் போன உடல்களுக்குத்தான் இவர்கள் மரண தண்டனை நிறைவேற்றுகிறார்கள்.

நீங்கள் தனிமைச்சிறையில் நாள் முழுவதும் தனிமையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறீர்கள்.சிறையில் உங்களுக்கென்று எந்த அகவாழ்வும் இல்லை. உங்களது ஆற்றல்களுக்கு, வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பற்றவராக இருக்கிறீர்கள். பாட்டரியால் இயங்கும் தட்டச்சுக்கூட பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற காரணத்தால் மறுக்கப்படுகிறது. பார்க்க வருபவர்களை தொட்டு பேசக்கூட முடியாதபடி, உங்கள் குழந்தைகள் உங்கள் கழுத்தை கட்டிகொள்ள முடியாமல் குடும்ப உறவுகளிலிருந்து விலக்கப்படுகிறீர்கள். சமயங்களில் தொலைபேசி அழைப்புகளும் மறுக்கப்படுகின்றன. வீட்டிற்கும் உங்களுக்குமான தூரம் அதிகரித்துக்கொண்டே போய் சிலநேரங்களில் துண்டிக்கப்படவும் நேரிடுகின்றன. மனநோய் சிகிச்சைகளில் ஆரம்பித்து கடைசியில் உங்களை தொடர் மயக்க நிலையில் வைத்திருக்கும் (கோமா ) மருந்துகளே வழங்கப்படுகின்றன. இறுதியில் மனித உணர்வே அறுத்தெறியப்பட்டு மனச்சிதைவுக்கு ஆளாக்கிவிடுகின்றன, இந்த ஏற்பாடுகள் அனைத்தும்!

ஒரு நூற்றாண்டு காலமாக பின்பற்றப்படும் இவ்வேற்பாடுகள் உண்டாக்கிய சீற்றமும், ஊளையும், கத்தலும், பிதற்றல்களுமே இச்சிறையின் சுவர்களில் மோதிக் கொண்டிருக்கின்றன.

இதில் எங்கிருக்கிறது இனவெறி என்றா கேட்கிறீர்கள்?

இப்போது நாம் பார்த்தது எல்லாம் கறுப்பானவர்களுக்கான, கருப்பட்டியை போன்ற ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்கான சிறைக்குழிகளைத்தான். அப்போதானால், வெள்ளையின மரண தண்டனை கைதிகள் எங்கே?

அதோ தெரிகிறதே...திறந்த வெளி முற்றமும், செயற்கை நீருற்றுகளும்,கூடை பந்து மைதானங்களும்,ஆட்டக்களங்களும் கொண்ட இடம் - இந்த திறந்த வெளி பகுதிகளே வெள்ளையின மரண தண்டனை கைதிகளுக்கானவை. இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேனே..ஒரு கறுப்பின அதிகாரி கூட இந்த சிறைக்குழியில் இல்லை. இனவெறிக்கு இந்த சிறிய எடுத்துக்காட்டே போதும்.

இன்னும் வேண்டுமானால், கறுப்பர்களை கொன்ற கறுப்பர்களுக்கு கிடைக்கும் மரணதண்டனை பற்றிய புள்ளி விவரங்களை நோக்கினால் இனவெறி தாக்கிய நீதி அமைப்பை புரிந்துக் கொள்ளலாம்.

ஜூம்மா என்ற தொழுகை நேரத்தில் விலங்கிடப்பட்டவர்களை அடிப்பதை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுப்ப ஐம்பதிற்கும் மேற்பட்ட மரண தண்டனை கைதிகள் ஒன்று கூடுகிறார்கள். இனி அவ்வாறு நடக்காது என்று உறுதி கூறி அவர்களை கலைந்து செல்லுமாறு அதிகாரிகள் கூறுகிறார்கள்.அடுத்த இரண்டு நாட்கள் முழு அடைப்பு. அடுத்த நாள் இரவு, தூக்கத்திலிருந்து எழுப்பி கைதிகளை நிர்வாணப்படுத்தி நிராயுதபாணிகளாக அடித்து நொறுக்கப்பட்டார்கள். இரத்த சுவடுகள் படிந்திருந்த அந்த தரை, எதிர்பாராத தாக்குதலை துணிந்து எதிர்கொண்ட அப்பாவி கிராம மக்களின் இரத்தக்கறை அடுத்த நாள் கழுவப் பட்டிருந்தது. அடிமை வெறி கொண்ட, திட்டமிட்ட இனவெறி தாக்குதலன்றி இது வேறென்ன?

இப்போது நாம் இன்னொருவரை சந்திக்கப் போகிறோம்.

வயது முதிர்ந்தவர்களைப் போலவே இளம் பருவத்தினருக்கும் கடுமையான தண்டனைகள் வழங்கலாம் என்ற தீர்ப்பின் கீழ் அடைக்கப்பட்ட நபர்தான் அவர். பெயர் ரப்பானி.ஏர் -கன்னை கொண்டு கொள்ளையிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இந்த பென்சில்வேனியா சிறைக்கு வந்தபோது அவர் பதினைந்து வயது இளைஞர்.

விலங்கு பூட்டிய நிலையிலேயே அவர் ஆண்மகனாக வளர்ச்சியடைந்தார். ஆனாலும் அவர் வயதுக்குரிய வாய்ப்புகளனைத்தும் மறுக்கப்பட்ட நிலையிலேயே! பதினைந்து ஆண்டு காலமாக அவர் சூரியன் மறைவதையோ உதிப்பதையோ காதலனாகவோ குழந்தைக்கு தகப்பனாகவோ உலகை பார்க்காமலேயே ”சீர்திருத்தப்பட்டார்”. உளவியல் மற்றும் நீதியின் ரீதியாக பீப்பாய்க்குள் அடைத்து பதப்படுத்தப்பட்டார்.

இப்படி ஒவ்வொரு கிராதிக்கம்பிக்குள்ளும் சொல்லப்படாத கதைகள் நிரம்பியுள்ளது. அதற்கு பின்னால் இனவெறியும் அடிமை வெறியும் தங்களது கோரமுகத்தை நீதிக்குப் பின்னால் மறைத்துக்கொண்டுள்ளன.

ஒரு கொடிய மிருகத்தை போல சித்தரிக்கப்பட்ட, பல புத்தகங்களும் ஒரு திரைப்படமும் உருவாகக் காரணமாக இருந்த, தனது வாழ்வின் பனிரெண்டு ஆண்டுகளை போராட்டத்திலும் தனிமைக் குழிகளும் கழித்து எதிர்காலம் குறித்த எந்த திட்டமிடலும் இல்லாமல் வெளியேறிய ஜே ஸ்மித், சட்டப்பூர்வமாக சட்டத்தை மீறும் அதிகாரம் படைத்த அடிமை வெறி கொண்ட அதிகாரிகளின் கோரமுகம், குடிக்கும் தண்ணீரிலும் நச்சு கலப்பு என்று எண்ணற்ற மீறல்களை நீங்களும் நேரடியாகக் காணலாம்....'முமியா அபு - ஜமால்” அவர்களின் 'சிறையும் மரணமும்' என்ற இடுக்கமான வாசலின் மூலம்.

”இந்த உலகம் ஒரு பெரிய பந்து. எல்லைகள், தடுப்புச் சுவர்கள், சிறைக்கூடங்கள்,சிறையறைகள், நமது வாழ்வென்னும் சிறை ஆகிய அனைத்துமே மனிதர்களது மூளைகளின் தவறான எண்ணங்களிலிருந்து உதித்ததுதான்” - முமியா அபு ஜமால்.

இதோ, நாம் விடைபெறும் தருணம் வந்துவிட்டது.

ஆம், இப்போது நாம் பார்வையாளர்களுக்கான இடத்திற்கு வந்துவிட்டோம். சிறை என்பதே ஆன்மாவின் மீது தொடுக்கப்படும் தாக்குதலென்றும் பார்வை நேரம் என்பது அவமானப்படுத்துவதற்கான ஒன்று என்று உணர்கிறீர்களா?

கைதிகளை பார்க்க வருபவர்களால் காண முடியாததை, கைதிகள் பார்வை நேரத்திற்கு முன்பு கடந்து வரும் நிகழ்ச்சியை மட்டும் நீங்கள் அறிய வேண்டும். அது ஒரு கொடூரனமான அனுபவம். உடலின் உட்புறங்களை எல்லாம் திறந்து காட்டச் சொல்லி சோதனையிடுவது. கைதி நிர்வாணமாக ஆனதும் அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் கீழ்படிய வேண்டும். குனிந்தும், நிமிர்ந்தும்,வாயை திறந்தும், பிறப்புறுப்புகளைக் காட்டியும் சோதனைக்கு உட்பட வேண்டும்.

இத்தனைக்கும், பார்வையாளர்களுக்கும் கைதிகளுக்கும் இடையே தொட்டுக்கொள்ளக் கூட முடியாத பெரிய கண்ணாடியாலான தடுப்புச் சுவர் உண்டு. உறவுகளிடமிருந்து துண்டிக்கப்பட்டு அவமானத்திற்கு ஆளாக்கப்படும் இடம். இங்குதான் முமியாவின் அன்பு மகள், குட்டி எலியின் கீச்சுக்குரலை கொண்ட அந்த சிறுமி தடுப்பை வெறித்துப் பார்த்து கண்ணீர் விட்டு அழுது தன் சின்னஞ்சிறு விரல்களால் முஷ்டியை உயர்த்தி “உடைந்து போ; உடைந்து போ” என்று தடுப்பை குத்தினாள்.

”அவரை ஏன் கட்டித் தழுவ முடியவில்லை, ஏன் முத்தமிட முடியவில்லை? ஏன் தொட்டுக்கொள்ள முடியவில்லை?” என்ற ஹமீதாவின் கேட்காத கேள்விகள் இந்த பார்வையாளர் இடத்தை சுற்றி சுற்றி வருகின்றன!

முமியாவை மட்டுமல்ல...அமெரிக்காவின் நரக படுகுழிகளில் காட்டுமிராண்டித்தனமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆண்களையும் பெண்களையும் சந்திக்க உங்களுக்கு விருப்பமாயின் :

புத்தகம் : முமியா : சிறையும் மரணமும்
முமியா அபு ஜமால்
தமிழில் : வி.நடராஜ்
விடியல் பதிப்பகம்

முமியா அபு ஜமால் - அறிமுகம்

குரலற்றவர்களின் குரல் என்று அழைக்கப்பட்டவர். ஆப்ரிக்க-அமெரிக்க ஒலிபரப்பு பத்திரிக்கையாளர். ஒரு வெள்ளை போலிஸ் அதிகாரியை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு 1982 ஜூன் மாதத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டார். தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக சிறைதண்டனை அனுபவித்த பிறகும் அந்த குற்றங்களை தான் செய்யவில்லை என்ற ஆதாரங்களை நிரூபித்தபிறகும் விடுதலைக்காக மனு செய்து காத்திருக்கிறார்.

குற்றமற்ற இந்த மனிதரை காப்பாற்ற வேண்டிய காலகட்டத்தில் நாமிருக்கிறோம். முமியாவின் வழக்கறிஞரின் வார்த்தைகளில் சொல்வதானால் ”முமியா நமக்கு மிக அவசியமாக தேவைப்படுகிறார். இதுபோன்ற ஒரு சமயத்தில், மிகப்பெரிய அளவிலான ஒரு போராட்டத்தை நடத்தாமல், நம்மிடமிருந்து இத்தகைய ஒரு குரலை அவர்கள் பறித்துக் கொள்வதை நம்மால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

மேலும் தகவல்களுக்கு :

http://en.wikipedia.org/wiki/Mumia_Abu-Jamal


முமியா ஆதரவு தளங்கள்

ட்விட்டரில் முமியா : http://twitter.com/MumiaAbuJamal

17 comments:

சென்ஷி said...

//”இந்த உலகம் ஒரு பெரிய பந்து. எல்லைகள், தடுப்புச் சுவர்கள், சிறைக்கூடங்கள்,சிறையறைகள், நமது வாழ்வென்னும் சிறை ஆகிய அனைத்துமே மனிதர்களது மூளைகளின் தவறான எண்ணங்களிலிருந்து உதித்ததுதான்” - முமியா அபு ஜமால்.//

மனதை உலுக்கச் செய்யும் கட்டுரை :((

Deepa said...

அதிர்ச்சியும் ஆத்திரமுமாய் இருக்கிறது. அமெரிக்காவின் கோரமான இருண்ட பகுதிகளை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறது புத்தகம்.

//சிறையில் உங்களுக்கென்று எந்த அகவாழ்வும் இல்லை.// சிறையிலிருப்பவர்களுக்குப் புறவாழ்வு இல்லை. அகவாழ்வும் இல்லையென்று நுட்பமாகக் குறிப்ப்ட்டிருக்கிறீர்கள்.
அருமையான பகிர்வு. நன்றி.

seetha said...

Mullai we have about 1,00,000 undertrials who have not been convicted in India.

It is a very sad situation inn india because of our slow snail like justice system.

sriram said...

முல்லை,

அமெரிக்காவிற்கு மனிதவுரிமையை பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது. படிக்க மிஹவும் வருத்தமாக இருந்தது. விரைவில் முமியவிற்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.

-ஸ்ரீராம்
http://sriramsrinivasan.net

நட்புடன் ஜமால் said...

குரலற்றவர்களின் குரல்

யப்பா! தலைப்புலையே பலது தெரியுது

குரல் இருந்தும் சத்தமிட அனுமதியற்றவர்களின் குரல்

நல்ல பகிர்வு

---------------

(மேலோட்டமாகத்தான் படித்தேன், மீண்டும் படிக்கனும்.)

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ஒரு நிமிடம் நிலைகுலைந்துபோனேன் வாசித்ததுவிட்டு . மிகவும் சிறை செய்யும் பதிவு . சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி

rajan said...

//தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக சிறைதண்டனை அனுபவித்த பிறகும் அந்த குற்றங்களை தான் செய்யவில்லை என்ற ஆதாரங்களை நிரூபித்தபிறகும் விடுதலைக்காக மனு செய்து காத்திருக்கிறார்.

குற்றமற்ற இந்த மனிதரை காப்பாற்ற வேண்டிய காலகட்டத்தில் நாமிருக்கிறோம். //

ஒரு புத்தகத்தில் இருப்பதை அப்படியே மொழிபெயர்த்தால் மட்டும் போதுமா? உங்கள் வாசகர்களுக்கு அதை அறிமுகம் செய்யும் முன்பு அந்த செய்திகளின் நேர்மை , உண்மை பற்றி எதேனும் ஆய்வு செய்ய வேண்டாமா?அவசியம் இல்லையா?


சரீங்க , கசாப் , அப்சல் குரு அப்புறம் இன்னும் ஜெயில்ல தூக்கு தண்டனை , ஆயுள் தண்டனை கைதிகளை எல்லாம் ஸ்டார் ஹோட்டலுக்கு மாத்திடலாம்.. மொபில்போன் , லேப்டாப் வசதிகளும் செய்து கொடுத்து வீட்டு சாப்பாடு வசதியும் செய்து தரலாம் உடனே மனசு திருந்திடுவாங்க...

ponraj said...

நடுங்க வைக்கும் பதிவு!!!
நன்று!

அம்பிகா said...

நெஞ்சை உலுக்கும் தகவல்கள்.
வருத்தந்தரும் பகிர்வு

நியோ said...

ஜமாலின் குரல் விரைவில் நம்மை வந்தடையட்டும் ...
முகம் அறியப் படாத பிற ஜமால்கள் ...?

seetha said...

mullai ,i was intrigued by your claims of racial segregation in american prisons.I did some google search and came up with some interesting reading material.

it is from a blog post. so i am not copying the whole text.

nicholasstixuncensored.blogspot.com/2007/09/new-york-times-to-white-prisoners-bend.html


FRIDAY, SEPTEMBER 21, 2007

New York Times to White Prisoners: ‘Bend Over and Take It’
By Nicholas Stix
November 22, 2004

மாதவராஜ் said...

//முமியாவின் அன்பு மகள், குட்டி எலியின் கீச்சுக்குரலை கொண்ட அந்த சிறுமி தடுப்பை வெறித்துப் பார்த்து கண்ணீர் விட்டு அழுது தன் சின்னஞ்சிறு விரல்களால் முஷ்டியை உயர்த்தி “உடைந்து போ; உடைந்து போ” என்று தடுப்பை குத்தினாள்.//
அழுகையை அடக்க விரும்பவில்லை. ஆத்திரம் பொங்குகிறது.

உணர்ந்து வாசிப்பவர்களால்தான், மற்றவர்களையும் உணர வைக்க முடியும்.

முல்லை! மிக முக்கியமான, அவசியமான பதிவு.

காலம் said...

தீவிரமான வாசிப்பு உள்ளதை உணந்திருந்த எனக்கு இவ்வளவு தீவிரமான வாசிப்புக்கு நீங்கள் உரியவர் என அளவிட முடியவில்லை

சமையலறையிலிருந்து சகமனிதர்களுக்கு
சகமனிதர்களிடமிருந்து சமூகத்துக்கு என்று தளத்தை விலாசப்படுத்தும் உங்களுக்கு

வாழ்த்துக்கள்,வெல்டன் என்பதைவிடவும் ஆழமும் அர்த்தமும் பொதிந்த ஏதேனும் ஒன்று

சின்ன அம்மிணி said...

வெள்ளையர்கள் ஒரு காலத்தில் நிறத்தின் பெயரால் எவ்வளவு கொடுமைகள் செய்திருக்கிறார்கள்.

சென்ஷி said...

//
ஒரு புத்தகத்தில் இருப்பதை அப்படியே மொழிபெயர்த்தால் மட்டும் போதுமா? உங்கள் வாசகர்களுக்கு அதை அறிமுகம் செய்யும் முன்பு அந்த செய்திகளின் நேர்மை , உண்மை பற்றி எதேனும் ஆய்வு செய்ய வேண்டாமா?அவசியம் இல்லையா?

//

சரியான வார்த்தைகள்தான் ராஜன்.. தங்களின் கருத்து ஆமோதிக்கப்பட வேண்டியது. தாங்கள் பின்னூட்டதிலாவது இவரைப் பற்றிய உண்மை நிலையை, குற்றத்தை, செய்திகளைப் பகிரலாமே..

(மற்றொரு அமெரிக்க நண்பரும் ஜமாலின் குற்றம் உறுதி செய்யப்பட்டு விட்ட ஒன்று, நேரில் பார்த்த சாட்சிகளின் அடிப்படையிலேயே தண்டனை வழங்கியுள்ளதாக உறுதிப்படுத்தினார். ஆனால் இனவேறுபாடு காரணத்தினாலான சிறைப்பிரிவு குறித்த கருத்துக்களை கூற மறுத்துவிட்டார். அதிகாரம், பணம், கல்வி போன்ற அடிப்படைகளைக் கொண்டு பாகுபாடு நிலவுதல் அமெரிக்காவிலும் இயல்பானது என்று குறிப்பிட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் தான் குற்றம் செய்யவில்லையென்று புத்தகம் எழுதி அது விற்பனைக்கு அனுமதித்தல் அமெரிக்க சட்டத்திற்கு ஆதரவானதா? அவருக்காக நீதி கேட்டு கேட்கின்ற குரல்கள் போலிகளா?

உங்களுக்குத் தெரிந்த விவரங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ராஜன்..!

தீஷு said...

ஏற்கெனவே தெரிந்த அமெரிக்காவின் இன்னொரு முகம் மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாகியது.

rajan said...

சென்ஷி, விக்கிபீடியா வில் ஜமால் பற்றிய விரிவான இணைப்புகள் மற்றும் மேலும் பல தகவல்கள் உள்ளன..
ஒரு நாட்டின் நீதி மன்றம் அந்த நாட்டின் சட்டங்களின் படி குற்றம் சட்டப்பட்டவருக்கான தண்டனையை உறுதி செய்த பின், மேல் முறையீடுகளும் அதே தண்டனையை உச்ச நேதி மன்றமும் உறுதி செய்த பின்னும், ஒரு புத்தக ஆசிரியர் அவரின் விருப்பு வெறுப்புகள் சார்ந்து -"தண்டனை விதிக்கப்பட்டவர் நிரபராதி, குற்றமற்றவர் "என்று எழுதினால், அதை முல்லையும் ஆராயாமல் மொழிபெயர்க்கலாமா , என்பது தான் ஏன் கேள்வி.

உங்கள் கேள்விகளுக்கு விளக்கங்கள் விக்கிபீடியா வில் கிடைக்கும்.
நீங்கள் கேட்கிற -"குற்றம் சாட்டப்பட்டவர் தான் குற்றம் செய்யவில்லையென்று புத்தகம் எழுதி அது விற்பனைக்கு அனுமதித்தல் அமெரிக்க சட்டத்திற்கு ஆதரவானதா? அவருக்காக நீதி கேட்டு கேட்கின்ற குரல்கள் போலிகளா? "- இந்த அளவுக்கு கருத்து சுதந்திரம் அமெரிக்காவில் உள்ளது,இந்தியாவிலும் உள்ளது, ஆனால் நிச்சயமாக பல மத்திய கிழக்கு நாடுகளில் இல்லை.
நீங்கள் அந்த விக்கிபீடியா விவரங்களை கூகுல் மூலம் பெறலாம்.


நாளை, அஜ்மல் கசாப் நிரபராதி , குற்றமற்றவர் என்று பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒரு புத்தகம் எழுதினால், அதுவும் விற்கும்.அவருக்கும் ஆதரவாளர்கள் தோன்றுவார்கள்.அதையும் மொழிபெயர்க்கலாம்; ஏற்கனவே ஒரு கூட்டம், "9 / 11 அமெரிக்க சதி, al quaeda சம்மந்தப்படவில்லை" என்று சொல்லி வருகிறார்கள்..அதையும் அப்படியே பகிர்ந்து கொள்ளலாம், ஆராய வேண்டியதே இல்லை என்பது தவறான அணுகுமுறை, சமுக நலனுக்கு நன்மை தராது என்பது ஏன் கருத்து ...