Friday, April 02, 2010

காப்பியும் கட்டாயக்கல்வியும்

வழக்கம்போல, ஆயாவின் டவாலியை மாட்டிக்கொண்டு கூடவே நடக்கிறேன். ஆயாவின் ட்ரேட் மார்க் - ஒரு குடும்பமே செல்லக் கூடிய கருப்பு குடை. அந்தக் குடைக்குள் செல்வது எனது கௌரவத்துக்கு இழுக்கு என்பதுபோல நான் தனியாக நடக்கிறேன். வடலூர் வரும்போதெல்லாம் ஆயாவோடு நெய்வேலி ட்ரஷரி-க்குச் சென்று வருவது வழக்கம். பெரும்பாலும் நானும் இளஞ்செழியனும் தான் ஆயாவுக்கு உதவியாளர்கள். அன்றைக்கு நான் மட்டுமே. ஆயாவோடு வடலூரில் நூறடி நடந்தால் நான்கடிக்கு ஒரு முறை ப்ரேக் போட வேண்டி இருக்கும். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், அறிந்தவர்கள், அறியாதவர்கள் என்று வடலூரில் சகலரையும் ஆயாவுக்குத் தெரியும். சகலருக்கும் ஆயாவைத் தெரியும். ‘மக வயித்து பேத்தியா' என்று என்னைப் பார்த்து ஒரு கேள்வியும் தொக்கி நிற்கும்.

அப்படி, அன்றைக்குத் தானாகவே வந்து சிக்கினார் ஒருவர். டிசைன் டிசைனாக போட்ட சட்டை, கரிய உடலோடு, இடுப்பில் துண்டு போல வேட்டி, கையில்- கழுத்தில் சிலபல மணிகள், சிங்கப்பல் டாலர் வைத்த கயிறு கழுத்தில். ‘டீச்சர்' என்று கூப்பிட்டு ஆயாவைப் பார்த்து கைகளைக் குறுக்காக கட்டிக்கொண்டார்.
ஆயா என்ற ஆலமரம் அந்த பட்சியைக் கண்டுக்கொண்டு ”அட, காப்பி ” என்றது. குசலங்கள் - நல விசாரிப்புகளுக்குப்பின், அவருக்கு நாலு குழந்தைகள், நெய்வேலியில் இருக்கிறார் என்ற செய்தியைத்தாண்டி கிளம்புமுன், காப்பி கரகரத்த குரலில் சொன்னார், “ஏன் டீச்சர், என்னை அன்னைக்கே நீங்க அடிச்சு பள்ளிக்கூடத்துக்கு துரத்தியிருக்கலாம் இல்ல, இன்னைக்கு நான் இவ்ளோ கஷ்டப்பட்டிருக்க மாட்டேனே,நானும் நல்லா இருந்திருப்பேனே!” . மனதை அறுத்துக்கொண்டிருக்கிறது இன்னமும் அந்தக் குரல்.

“நான் தலப்பாடா அடிச்சுக்கிட்டேன், இப்போ வருத்தப்பட்டு என்ன புண்ணியம், உன் பசங்களையாவது நல்லா படிக்க வை, படிப்புதான் எல்லாம் ” என்று ஆயா சொன்னபிறகு வீடு நோக்கி நடக்கத்துவங்கினோம். கொஞ்ச தூர மௌனத்திற்குப் பிறகு , வழியில் ஆயா சொன்னது :

தாத்தா விறகுக்கடை வைத்திருந்தபோது காப்பியின் பெற்றோர்தான் விறகு வெட்டவும்,கடையில் உதவியாகவும் இருந்தார்கள். காப்பிக்கு அப்போது ஆறு வயது. ஆயா, வள்ளலார் குருகுலத்தில் (வடலூரின் ஆரம்பப்பள்ளி)வேலை செய்துவந்தார். காப்பியை குருகுலத்தில் சேர்த்துவிடவும், மிட்டே மீல்ஸூக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறியிருக்கிறார். காப்பிக்கு படிப்பில் நாட்டமில்லாததால், தொடரவில்லை. கொக்கு குருவி சுடுவதும், ஊரைச் சுற்றுவதுமாக நாட்களைக் கழித்துவிட்டு இப்போது பிழைப்புக்கே கஷ்டப்படுகிறார்.

காப்பி என்றில்லை...வடலூரில் மெயின் ரோட்டில் வரிசையாக இருக்கும் ஒவ்வொரு புளியமரத்தினடியிலும் வசிக்கும் நரிக்குறவ குடும்பத்து பிள்ளைகளின் கதை இதுதான். அதே வழியில், எல்லோரும் பள்ளிக்குச் செல்லும்போது இவர்கள் விறகுகள் பொறுக்கிக்கொண்டோ அல்லது காக்கா,காடை சுட்டுக்கொண்டும் சாயங்கால வேளைகளில் ட்ரான்ஸிஸ்டரில் பாட்டுக்கேட்டுக்கொண்டோதான் நாட்களைக் கழிப்பார்கள். எங்கோ ஒரு சிலர் மட்டும் பட்டதாரியாகி செய்தித்தாள்களில் இடம் பிடிக்கிறார்கள்.

பொங்கல்,மாட்டுப்பொங்கல் எல்லாம் முடிந்து காணும் பொங்கலன்று - பெண் குழந்தைகள் எல்லாம் தாழம்பூவால், சாமந்தியால் வாழைமட்டை சடை தைத்து மேக்கப் எல்லாம் போட்டுக்கொண்டு அங்கேயும் இங்கேயும் நடை பயில் ஆரம்பிக்கும் நேரத்தில், ப்சங்கள் எல்லாம் கடைத்தெருவிற்கும், மைதானத்திற்குமாக சைக்கிளை எடுத்துக்கொண்டு அலைந்துக்கொண்டு இருக்கும்நேரத்தில் வாசலில் குரல் கேட்கும். கொட்டாய்க்கு முன்னால், வாசலுக்குத் தள்ளி ஒடுங்கிய தோற்றத்துடன் ஒருவர் ”ஐயா” என்றோ ”வாத்யாரே” என்றோ கூப்பிடுவார்.

யார் முதலில் போய் பெரியவர்களை கூப்பிட்டு வருகிறார்களென்று போட்டியில் மாமா , பெரிப்பா என்று கத்திக்கொண்டு ஓடுவோம். 'உள்ளே வாங்க' என்று அக்காக்கள் யாராவது கூப்பிடுவார்கள். கரிய உடம்பு. தண்ணீரை கண்டு பல வருடங்களான கோவணததை, வேட்டியா அல்லது துண்டாவென்றே தெரியாமல் இடுப்பில் இருக்கும் ஒரு துணி. கொட்டாயில், தூணுக்கு ஓரத்தில் குத்தவைத்து உட்கார்வார். இடுப்பில் இருக்கும் துணியில், இவ்வளவு நேரம் இருந்ததாவென்றே தெரியாமல் இருக்கும் வெற்றிலையை சுண்ணாம்பைக் கிள்ளி வாயில் அடக்கிக்கொள்வார். நாங்கள் எல்லாம் வினோதமாக அவரையே பார்த்தபடி இருப்போம். ஒருநிமிடம்தான். அப்புற்ம், 'ஹோ' வென்ற கூச்சலுடன் விளையாட்டு தொடங்கும்.


அம்மாவோ, அத்தையோ கொடுக்கும் தண்ணீரை வாங்கிக் தூக்கிக் குடித்துவிட்டு கீழே வைப்பார். மாமா வந்து சட்டைப்பையை எடுத்துவரச்சொல்லி ரூபாயை கொடுப்பார். “என்னா வாத்யாரே” என்றதும் “எல்லாம் சரி வரும், சரி வரும்..”என்று மாமா சொன்னதும் தலையைச் சொறிந்துக்கொண்டு நிற்பார். ஆயாவும் தன்பங்குக்கு கயிற்றுக்கட்டிலில், தனது தலைகாணிக்கு அடியிலிருக்கும் பையை துழாவி நாணயங்களைக் கொடுப்பார்.

மறக்காமல், ஆயா கேட்கும் கேள்வி, ”காத்தான், எத்தனை பசங்க” அப்புறம் ”என்ன படிக்குது”. அவர் பேசுவது அப்போது என்னால் புரிந்துக்கொள்ள முடியாதிருந்தது. 'எல்லாம் சும்மாதான் சுத்திட்டு இருக்குதுவோ '- என்பதுபோலத்தான் பதிலிருக்கும். இன்றுவரை, அவர்கள் அப்படியேதான் பொங்கலின்போது வந்து காசு வாங்கிச் செல்கிறார்கள். என்ன, வேட்டி சட்டை முழுவதுமாக அணிந்திருக்கிறார்கள். அவர்கள் யாரென்று சொல்லவில்லையே.. அவர்களை, வெட்டியான்களென்று மாமா சொன்னார்.

காப்பியும்,காத்தானும் இருபது வருடங்களுக்கு முன்பானவர்களென்றாலும் நிலைமை ஒன்றும் மாறிவிடவில்லை. சின்னமலை பஸ் ஸ்டாப்பிற்கு அருகில் மேலே கூடாரம் போல கட்டி செருப்புத் தைத்துக்கொண்டிருப்பார் அந்த தாத்தா. ஓரிரு முறை அவரிடம் செருப்புகளை செப்பனிட்டும் இருக்கிறேன். சில வருடங்கள் இடைவேளைக்குப் பிறகு பார்த்தபோது அந்தக்கடையில் பதினைந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் செருப்புத் தைத்துக்கொண்டிருந்தான்.

அம்மா வேலை செய்வது குள்ளஞ்சாவடி என்ற குக்கிராமத்திலிருக்கும் பள்ளிக்கூடத்தில். எட்டாவது வரை இருக்கும் அந்த பள்ளிக்கூடத்தில் எத்தனை பேர் இருப்பார்களென்று நினைக்கிறீர்கள்? மொத்தம் 200 பேர். மூன்றே ஆசிரியர்கள். அந்த பள்ளிக்கூடத்திற்கு போஸ்டிங் போடுபவர்களெல்லாரும் ஒன்று ட்ரான்ஸ்ஃபர் வாங்கிச் சென்று விடுவார்கள் அல்லது காசு கொடுத்து வேறு இடத்திற்கு மாற்றல் வாங்கிச் செல்வார்கள். யாருக்கு வீடு அருகிலிருக்கிறதோ..அவர்கள் மட்டுமே ஜாயின் செய்வார்கள். பிள்ளைகளைக் கண்டிப்புடன் நடத்தும் வாத்தியாராக இருந்தால் கொஞ்சம் பயத்தோடுதான் காலந்தள்ள வேண்டியிருக்கும். ஏனெனில், ஏதாவது ஒரு குழந்தை பள்ளிக்கு போக மாட்டேன்று வீட்டில் அழுதால், அந்த ஆசிரியர் போகும் வழியிலோ அல்லது அடுத்தநாள் பள்ளிக்கூடத்திலோ ஒரு கும்பல் அரிவாளோடு வந்து மிரட்டிவிட்டு போகும்.

கல்வியை அடிப்படை உரிமை என்று சட்டமாக்கியிருப்பது பெற்றோர்களையும், சிறார்களை பணிக்கமர்த்துபவர்களையும் கொஞ்சம் பயமுறுத்தலாம். பள்ளிகூடத்திற்கு வரும் பிள்ளைகளின் எண்ணிக்கையைக் கூட்டுமா என்பது தெரியவில்லை.ஆரம்ப வகுப்புகளில் முப்பது முதல் நாப்பது வரை இருக்கும் மாணவர்களின் வருகை ஐந்தாம் வகுப்பிற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும். எட்டாம் வகுப்பில் மொத்தம் பத்தோ பதினைந்தோ பேர்தான் தேறுவார்கள். இதற்கு முதல்காரணம் வறுமை. மற்றும் அறியாமை. 'பொம்பளை புள்ளை படிச்சு என்ன பண்ணப்போகுது,எங்கூட வேலைக்கு வந்தா கஞ்சியாவது குடிக்கலாம் என்ற எண்ணமும். நிறைய, பஞ்சாயத்து யூனியன் பள்ளிகளில் ஆசிரியர் பணிகளுக்கான் இடங்கள் காலியாகவே இருக்கின்றன. அவைகளை நிரப்பாமல்,வறுமையைப் போக்க வழிவகைகள் செய்யாமல் வெறும் சட்டத்தின் மூலம் காப்பிகளின்/காத்தான்களின் வாழ்வை மாற்றுவது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை.

15 comments:

ஜெயந்தி said...

நரிக்குறவர்கள் வாழ்க்கை பல நூற்றாண்டுகளாக அப்படியேதான் இருக்கிறது.

gulf-tamilan said...

அவர்கள் நிலைமை மாற இன்னும் எத்தனைக்காலம் ஆகுமோ!நிறைய கிராம பள்ளிக்கூடங்கள் ஆசிரியர் பற்றாக்குறையாகத்தானிருக்கின்றன.

அமைதிச்சாரல் said...

//ஆசிரியர் பணிகளுக்கான் இடங்கள் காலியாகவே இருக்கின்றன. அவைகளை நிரப்பாமல்,வறுமையைப் போக்க வழிவகைகள் செய்யாமல் வெறும் சட்டத்தின் மூலம் காப்பிகளின்/காத்தான்களின் வாழ்வை மாற்றுவது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை//

உண்மைதான்.. ஆனால் கிராமங்களில் படித்த பட்டதாரி இளைஞர்கள், தன்னார்வத்தொண்டாக ஏதேனும் செய்யலாம்.அட்லீஸ்ட், கைநாட்டாக இருப்பவர்களை எழுத்துக்கூட்டி வாசிக்கும் அளவுக்காவது முன்னேற்ற முடியாதா!!!..

ஆயில்யன் said...

எல்லோருக்கும் கல்வி மத்திய அரசினால் கொண்டு வரப்பட்டிருக்கும் சட்டம் எந்த அளவுக்கு அமல்படுத்தப்படும்போது வரவேற்போ அல்லது ஆதரவினை தருமோ பொறுத்து பார்க்கத்தான் வேண்டும்! காப்பி/காத்தான்களினை போன்றே ஒரு குடும்பம் எங்கள் ஊரிலும் என் கண் முன்னால் சிதைந்து போன கதையும் உண்டு!

சட்டம் போடுவதை மட்டுமே அரசு எப்பொழுதுமே சிம்பிளாக சிறப்பாக செய்துவிடுகிறது பொதுமக்கள் - நாம் தான் - அதை செயல்படுத்தும் வழிகளினை பற்றி ஆர்வத்துடன் யோசிக்கவேண்டியிருக்கும்!

ராமு said...

காப்பிகளின்/காத்தான்களின் வாழ்வை மாற்றுவது எவ்வளவு சாத்தியம்?

முடியவேமுடியாது!

ராமு said...

காப்பிகளின்/காத்தான்களின் வாழ்வை மாற்றுவது எவ்வளவு சாத்தியம்?????????????????????????????????

SUPERUUUUUUU!

ஈரோடு கதிர் said...

நல்ல பகிர்வு

ராமலக்ஷ்மி said...

//கல்வியை அடிப்படை உரிமை என்று சட்டமாக்கியிருப்பது பெற்றோர்களையும், சிறார்களை பணிக்கமர்த்துபவர்களையும் கொஞ்சம் பயமுறுத்தலாம். பள்ளிகூடத்திற்கு வரும் பிள்ளைகளின் எண்ணிக்கையைக் கூட்டுமா என்பது தெரியவில்லை.//

உண்மைதான். அன்றாட வாழ்விலே நாமும் எத்தனை குழந்தை தொழிலாளிகளைப் பார்க்கிறோம்:(!

//வறுமையைப் போக்க வழிவகைகள் செய்யாமல் வெறும் சட்டத்தின் மூலம் காப்பிகளின்/காத்தான்களின் வாழ்வை மாற்றுவது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை.//

மிகச்சரி.

நசரேயன் said...

//வறுமையைப் போக்க வழிவகைகள் செய்யாமல் வெறும் சட்டத்தின் மூலம் காப்பிகளின்/காத்தான்களின் வாழ்வை மாற்றுவது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை//

ம்ம்ம்

காமராஜ் said...

இப்படிக்கோடிக்கணக்கான கதைகள் கிடக்கிறது ஒவ்வொரு குடிசைக்குள்ளும். வளர்ந்து வரும் உலகமயம்,கல்வியை அயல்தேசத்துக்கு விற்றுகொண்டிருக்கிறது.நாளை முதல் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் எதற்குத்தெரியுமா வழக்குகளுக்கு வாதாட அந்நிய நிறுவண வழக்குறைஞர் உள்ளே வருகிறார்கள்.நிறைய்யச்சவால்கள் இருக்குப்பா முல்லை.

தாராபுரத்தான் said...

எந்த இலவசங்களும் வேண்டாம். கல்வி மட்டுமே இலவசம் என்ற நிலை வந்தால் மட்டுமே....இது சாத்தியம்ங்க.

சின்ன அம்மிணி said...

//பொம்பளை புள்ளை படிச்சு என்ன பண்ணப்போகுது//

என் அத்தை பெண்கள் இரண்டு பேரும் இப்படித்தான் பத்தாவதோடு நிறுத்தப்பட்டார்கள். இத்தனைக்கும் பள்ளியில் முதல் மதிப்பெண்கள் வாங்கியவர்கள். மாமா அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று சொல்லும் வகையறா. எல்லாரும் சொன்ன பின் கரஸ்பாண்டென்ஸில் ப்ளஸ் டூ படிக்க அனுமதித்தார். ஹூம்.

அம்பிகா said...

//கல்வியை அடிப்படை உரிமை என்று சட்டமாக்கியிருப்பது பெற்றோர்களையும், சிறார்களை பணிக்கமர்த்துபவர்களையும் கொஞ்சம் பயமுறுத்தலாம். பள்ளிகூடத்திற்கு வரும் பிள்ளைகளின் எண்ணிக்கையைக் கூட்டுமா என்பது தெரியவில்லை.//
உண்மைதான்.
நல்ல பதிவு.

பின்னோக்கி said...

என்னுடன் 10வது படித்த நண்பனை சில வருடங்களுக்கு முன், டெலிகாம் நிறுவனத்திற்கு குழி வெட்டும் பணியில் பார்க்கும் போது, மனசு கனத்தது. “நீ நல்லா படிச்ச.. நான் படிக்கலை.. அதுதான் இப்படி” என்ற அவன் குரல் இன்னும் மனதில்.

அமுதா said...

யதார்த்தங்களைத் தெளிவாகக் கூறி இருக்கிறீர்கள் முல்லை.