Tuesday, April 27, 2010

”ஒடியன்”

ஆசய காத்துலே தூது விட்டு....என்று இருட்டில் தீப்பந்தங்கள் எரிய முக்கால் பாவாடையுடனும் அரை ஜாக்கெட்டுடன் காட்டுக்குள் நடனமாடுவார்கள். ஹீரோ-வின் வரவுக்காக காத்திருப்பார்கள். காயத்துக்கு மூலிகையோ,உண்ண உணவோ அல்லது தங்க இடமோ கொடுப்பார்கள். இல்லையேல், ‘ஒயிலா பாடும் பாட்டுலே ஓடுது ஆடு' என்று பாடியபடி காட்டுக்குள் ஆடு மேய்ப்பார்கள். எப்போதும், ஜாக்கெட் அணியாமல் சேலை கட்டியிருப்பார்கள். ஹீரோவை இக்கட்டுகளில் காப்பாற்றுவதே இவர்கள் வேலை. அல்லது வில்லன்களை /தீயவர்களைக் கொல்வார்கள். ஆண்களாக இருந்தால் வெற்று உடம்பில் நெருப்புப் பந்தத்தைத் தடவியபடி வீர சாகசங்கள் புரிவார்கள். காட்டில் வசிக்கும் ஆதிவாசிகளை, பழங்குடிகளை நினைத்ததும் மனத்தில் தோன்றும் பிம்பங்கள் இவையே.

ஆதிவாசிகள் என்றால் நாகரிகம் தெரியாதவர்கள். நமக்கும் அவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நவநாகரிகமான உடை உடுத்தத் தெரியாதவர்கள். நரபலி கொடுப்பவர்கள். வேட்டையாடுபவர்கள். சமைக்காமல், பச்சையாக உண்பவர்கள்...நம்மைப் போலல்லாமல், காட்டுமிராண்டித்தனமான பழக்க வழக்கங்கள் உடையவர்கள். பின் தங்கியவர்கள். வீடுவீடாக வந்து தேன் விற்பவர்கள். இவையே அவர்களைப் பற்றி எனக்குள் இருந்த எண்ணங்கள். இதைத்தாண்டி பெரிதாகச் சிந்தித்ததும் இல்லை. ஆனால இத்தொகுப்பு நம்மீது காட்டுமிராண்டிகள் யார் என்கிற கேள்வியை வீசிவிட்டு போகிறது

அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்களே, அவர்கள் மீது அரசாங்கத்தின், போலீஸின் அத்துமீறல்களும், வன்முறைகளும் ஏவப்படுகின்றன, பலவீனமான அம்மக்களே ஒடுக்குமுறைக்கு பலியாகின்றனர் என்பதை வீரப்பன் தொடர்நாடகம் மற்றும் சோளகர்தொட்டி நாவல் வாயிலாகவும் ஓரளவுக்குத் தெரிந்துக் கொண்டோம் .

விலங்குகளின் நலனில், உரிமைகளில் காட்டும் அக்கறையில் ஒரு பங்கு கூட மனிதர்களாகப் பிறந்த ஆதிவாசிகளிடம் காட்டப்படுவதில்லை. இந்த அவலமான நிலையில், இயற்கையோடு ஒன்றி வாழும் பழங்குடியினர் படும் துயரத்தையும், வலிகளையும், அவர்களோடே நெருங்கியிருந்த லட்சுமணனைத் தவிர வேறு யாரால் வலிமையாகப் பதிவு செய்திட இயலும்?

இருளர்களின்,தோடர்களின்,கரட்டிகரின் வாழ்க்கையையும், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், அவர்களது நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும், அவர்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளையும் அவர் - ”ஒடியன்” என்ற கவிதை நூல் மூலமாக முன்வைக்கிறார் - இருளர்களது மொழியிலேயே!அதற்காக அந்த மொழி புரியாதது, கடினமானதென்று இல்லை, வார்த்தைகளை கொஞ்சம் யோசித்தால், அதன் தற்போதைய நமது வழக்குச் சொல் புலப்படுகிறது. மேலும், கவிதைகளுக்கு அடியிலேயே சிறு வரலாற்றுக் குறிப்புகளை கொடுத்திருக்கிறார், லட்சுமணன்.

புதிர்

அப்பேங்கொடாத்த பச்சே பாவாடே

அண்ணேங்கொடாத்த நீலே சீலே
தொட்டில்லே ரொங்குகாதிருந்தே
போடுகே கழுத்து பாசி

செல்லி தந்தே
செத்த பின்னாக்கும்
அச்சாமேத்தான் கெடாக்கு

'இருளச்சிக்கு திமிரடங்கலே'ங்கா
கெம்பனூரு கவுண்டிச்சி.

(கொடாத்த - கொடுத்த, ரொங்குகாதிருந்தே - தூங்கும்போதிருந்தே, அச்சாமே- அப்படியே )

கணவன் இறந்தபிறகு அணிந்திருக்கும் வண்ண உடைகள், அற்பமான நகைகள், அனைத்தையும் விலக்க வேண்டுமென்கிறாள் புதிதாக மலைக்கு வந்து குடியேறிய கவுண்டச்சி.
ஏனென்று இருளச்சிக்கு புரியவில்லை.

இருளச்சிக்குப் புரியாத இன்னொன்றும் இருக்கிறது. ‘ஆண்மம் 3' என்ற கவிதையில்,

'மாடு பொட்டக்கண்ணு போட்டிருக்கு'

கண்ணாலம் கணக்கா
எல்லத்துக்குஞ் சொல்லுகா
..................
................
பொறந்தது பேத்தியுன்னு
பெணாங்குகா நாய்க்கச்சி

மாட்டு பொட்டக்கண்ணு போட்டதற்கு மகிழ்ச்சியடையும் நாய்க்கச்சி, பேத்தி பிறந்ததற்கு புலம்புவது ஏனென்று இருளச்சிக்குப் புரியவில்லை. இந்தக் கவிதைக்கு அருஞ்சொற்பொருள் தேவையில்லைதானே!

ஒழுங்காக பணி செய்யாதவர்களை 'தண்ணியில்லா காட்டுக்கு மாத்திடுவேன்' என்பதைக் கேள்விப்பட்டிருக்கலாம். காட்டுவாசிகளின் பார்வையில் பணி மாறுதல் எப்படியிருக்கிறது?


சக்கை

பாடே நடத்துகாதில்லே
பள்ளிக்கோடம் வருகாதில்லே

வேலே நேரத்துலே

வெளியே போகினான்னு
எழுமலே வாத்தியானே

எத்து ஊருக்கு மாத்தின.....
...................................................
ஆபிசன லெத்து
அச்சா
ஜீப்புலே
வெட்டி போடு

ரெண்டு பலாப்பழோ

பாடம் நடத்தாத வாத்தியாருக்கு தண்டனை என்று அவனை எங்கள் ஊருக்கு மாற்றிய அதிகாரிக்குப் பரிசாக அவர் ஜீப்பில் இரண்டு பலாப்பழங்களை வெட்டி, குறிப்பாக வெட்டி போடவேண்டும் என்கிறார் ஆதிவாசி. ஏன் தெரியுமா?


வெட்டிய பலாப்பழ வாசனைக்கு எங்கிருந்தாலும் வந்துவிடும் யானை.

பாடம் என்றதும் நினைவில் தங்கிய இன்னொரு கவிதை,

பள்ளிக்கூடம்


வீடு

.........
அதான் தூங்குவமே

ஓ! கூரே

தாய்
ம் அஃகா

தந்தை....
அம்மே ......

.......

சொன்னதை திருப்பிச் சொல்லு

பிரம்பு பிஞ்சிடும்
.
..............................
..............................
வகுப்பூக்கு வெளியே
முட்டிபோட்டு நின்னுகொண்டிருக்கேம்

நானூம்
எத்து மொழியும்

நம் வாழ்வுக்கு, ஆதிவாசிகள் குடியிருக்கும் காடுகள் வெட்டப்படுகின்றன. நமக்குக் கிடைக்கும் மின்சாரம் ஆதிவாசிகளின் ஆறுகளைத் தடுத்துக் கட்டப்படும் அணைகளிலிருந்தும் எடுக்கப்படுபவை.

நம் குடியிருப்புகளுக்கும், நகரங்களுக்கும் வளர்ச்சி என்ற பெயரில் பல்வேறு சாலைகளும், மேம்பாலங்களும் அமைக்கப் பெறும்போது - இவர்கள் குடியிருப்பு எப்படி இருக்கிறது?

இருள் வழியும் அணை

நித்து கூரேலே கரண்டு போச்சுன்னு

கத்துகே கேளயாடா

கவுருமெண்டு கேக்கூ


கத்துகேன்

இச்சா கரண்டே இல்லேன்னு

சோலே கெட்டு விருகா சாகூ
அலுங்கூ செத்து
புசுகி அழுகூங்கா


எத்து ஊருலேதான் கெடாக்கு

நினாக்கூ லைட்டுந் தண்ணியூந்தா

எல்லாத்தையும் பொதாச்சு கட்டுன
பில்லூர் டேமூ

கீழே மின்சாரம் தடைபட்டால் கேளையாடாகக் கத்துகிறீர்கள் நீங்கள். ஆனால், நாங்கள் மின்சார இணைப்புக் கேட்டால், காடும் மிருகங்களும் அழிந்து விடுமென்கிறார்கள் அதிகாரிகள். உங்களுக்கு நீரும் ஒளியும் கொடுக்கும் பில்லூர் அணை எங்கள் மலைகளில்தான் இருக்கிறது. இருண்டு கிடக்கிறோம் நாங்கள்.

ஆதிவாசிகளின் நலனுக்காக தீட்டப்படும் திட்டங்கள் என்னவாகின்றன? இவர்கள் நலன் பற்றி எத்தனை பேர் எண்ணியிருப்போம்..அரசியல்வாதிகள், அதிகாரிக இவர்களுக்குத் திட்டங்கள் தீட்டத்தான் செய்கிறார்கள். எப்படி?

இருப்பு

ஆதிவாசிக்கு

அற்புதமா திட்டோம் தந்தேங்கே

டெவலப்புன்னு
டெண்டரு போடுகே


பேப்பருலே எழுதுகா..
டீவிலே காட்டுகா...
ஊரெல்லாம் பேசுகா...

போட்டா புடிக்கா

நினாக்கு பெரியாபீசர் பதவீ

காட்டோடே இருந்தே


இப்போ
நிம்து பேரு வாங்காக்கு

நேனு கடங்காரே


பரணுன்னு மேலே எறுகாக்கில்லே
கெழங்குன்னு கீழே தோண்டுகாக்குமில்லே

இதற்கு விளக்கம் தேவையா..

காகிதத்தில் திட்டங்கள் தீட்டி அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் புகழ் பெறுகிறார்கள். ஆதிவாசிகளை இயல்புக்கு மாறான செயல்களில் இறக்கிவிட்டு கடனாளியாக்கி விடுகிறார்கள். மீள முடியாத கடன்களில் சிக்கி, அவர்களால்,பழைய மாதிரி மாறவும் முடியவில்லை,ஆபீசர் போல உயரவும் முடிவதில்லை என்பதே ஆதிவாசி கேட்கும் கேள்வி. பிணத்துக்கு கல்யாணம் என்பது போலத்தான் இருக்கிறது இவர்கள் தீட்டும் திட்டங்களும், போடுகிற சட்டங்களும் என்கிறார் லட்சுமணன் ஒரு கவிதையில்.

வனத்தைச் செப்பனிட்டு, உழுது,களையெடுத்து ,கடன் தந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளும் அரசின் கணக்கு இருளர்களுக்குப் புரிவதே இல்லை. ஆதிவாசிகளின் உழைப்புக்கும், வேலைக்கும் தகுந்த சம்பளமாக எதுவுமே பெறுவதில்லை. லஞ்சம் கொடுத்து மேய்த்த ஆடு கூட ரேஞ்சரின் மகன் கல்யாணத்துக்கு விருந்தாக போய்விடுகிறது.

அஞ்சு இட்லிக்கூ
ஆறு ஏக்கரே கொடாத்து
காலேவாயிலே

கல்லூ சொமக்கே நா


ஐந்து இட்டிலிக்கு விலையாக ஆறு ஏக்கரை இருளனிடம் கைப்பற்றி செங்கல் சூளை அமைக்கிறார்கள் கரியன்செட்டிகள். மண்ணைப் பிரிய மனமில்லாத இருளன் அதே சூளையில் ரத்தம் சுண்ட மண் சுமக்கிறான்.

காடுகளையும் விளைநிலங்களையும் நகரத்தில் வாழும் நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம். காட்டைப் பாதுகாப்பதும், காட்டுடன் பிணைந்த வாழ்வை வாழ்வதும் ஆதிவாசிகளே. ஆனால், அவர்களிடத்திலிருந்து வனத்திலிருந்து காலி செய்து ஓடவைக்கவே திட்டங்கள் தீட்டுகிறது அரசு. அவர்கள் காலி செய்த நிலத்தை தொழிலதிபர்களுக்கு தாரை வார்க்கவே குளிரூட்டப்பட்ட அறைகளில் கூடிகூடிப் பேசுகிறார்கள் அதிகாரிகள்.

நமக்கு என்ன, இருக்கவே இருக்கிறது, பங்குச்சந்தையின் சரிவுகளும் , பங்குச்சந்தைக் காளையின் பாய்ச்சலும், இரவா பகலாவென்றேத் தெரியாத மைதானங்களில் கைதட்டி ஆர்ப்பரித்தும், கவலைப்படவும்,பெட் கட்டி சண்டையிடவும் - ஐபிஎல்!

ஆதிவாசிகள் எத்தகைய சூழ்நிலையில், சுமைகளோடு, அத்துமீறல்களுக்கு இடையில் வசிக்கிறார்களென்பதை இருளர்களுடைய மொழியிலேயே கூறுவது போலவும், கேள்விகள் கேட்பது போலவும் மிக சூட்சுமத்துடன் பதிவு செய்திருக்கிறார் லட்சுமணன். கவிதைக்குப் பக்கபலமாக இருக்கும் அந்தத் தொன்மகுறிப்புகளை வாசிக்க வாசிக்க, இவ்வனுபவங்களை இவர் கவிதை மொழியில் அடக்குவதைவிட இன்னும் விரிவாகவே பதிவு செய்திருக்கலாமென்று தோன்றியது.
இந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய லட்சுமணன் ஒரு நாவல் எழுதவேண்டும். அல்லது அவர்களுடைய வரலாற்றையும் கலாசார வாழ்க்கையையும் ஒரு நூலாக எழுத முன்வரவேண்டும்.


இப்புத்தகம் நெடுக, ஒவ்வொரு கவிதையிலும் முகம் காட்டிச் செல்லும் இருளர்-இருளச்சிகளுக்கு நன்றிகள்!

புத்தகம் : ஒடியன்
ஆசிரியர் : லட்சுமணன்
வெளியீடு : மணிமொழி பதிப்பகம், திருவண்ணாமலை.
ஃபோன் : 04175-251980
விலை : ரூ 50

'ஒடியன்' பெயர் குறிப்பு : தாயின் கர்ப்பத்திலிருந்து சிசுவை எடுத்து தைலம் செய்யும் மந்திரவாதி.

இன்று இயற்கையின் மடியிலிருந்து வனத்தையும் உயிர்களையும் திட்டமிட்டு சிதைத்து அழிக்கும் ஒடியன்கள் கீழ்நாட்டிலிருந்து வந்து மலை முழுவதும் நிறைந்து கிடக்கிறார்கள்.

16 comments:

KVR said...

நல்ல புத்தக அறிமுகம்.

//ஆசய காத்துலே தூது விட்டு....என்று இருட்டில் தீப்பந்தங்கள் எரிய முக்கால் பாவாடையுடனும் அரை ஜாக்கெட்டுடன் காட்டுக்குள் நடனமாடுவார்கள். ஹீரோ-வின் வரவுக்காக காத்திருப்பார்கள். காயத்துக்கு மூலிகையோ,உண்ண உணவோ அல்லது தங்க இடமோ கொடுப்பார்கள். இல்லையேல், ‘ஒயிலா பாடும் பாட்டுலே ஓடுது ஆடு' என்று பாடியபடி காட்டுக்குள் ஆடு மேய்ப்பார்கள். எப்போதும், ஜாக்கெட் அணியாமல் சேலை கட்டியிருப்பார்கள். ஹீரோவை இக்கட்டுகளில் காப்பாற்றுவதே இவர்கள் வேலை. அல்லது வில்லன்களை /தீயவர்களைக் கொல்வார்கள். ஆண்களாக இருந்தால் வெற்று உடம்பில் நெருப்புப் பந்தத்தைத் தடவியபடி வீர சாகசங்கள் புரிவார்கள். காட்டில் வசிக்கும் ஆதிவாசிகளை, பழங்குடிகளை நினைத்ததும் மனத்தில் தோன்றும் பிம்பங்கள் இவையே.//

கூடவே, “ஹீரோவை ஒருதலையாய் காதலித்தும் தொலைவார்கள்” சேர்த்துக்கோங்க. அதென்னவோ தெரியவில்லை, சினிமா ஆதிவாசிப்பெண்கள் எல்லோருக்குமே பேண்ட் போட்ட ஹீரோவைப் பார்த்ததுமே காதல் வந்துவிடும்.

சின்ன அம்மிணி said...

கிடைத்தால் படிக்கிறேன். நல்ல ஹெவி ரீடிங்கா இருக்கும்னு நினைக்கிறேன்.

அம்பிகா said...

இருளர்களின் வாழ்க்கையை வெளிப்படுத்தும் அருமையான பகிர்வு.

ஈரோடு கதிர் said...

நல்ல அறிமுகம் சந்தனமுல்லை

நன்றி

நட்புடன் ஜமால் said...

o-de-cologne
ஓடிக்கலோன்னு ஊர்ல சொல்வாங்க

இதுவும் ஒரு வகை தைலம் தான், இதைப்பற்றிய பதிவென்று நினைத்து வந்தேன்.


அந்த கவிதைகளில் இருக்கும் மொழி புதிதாக இருக்கின்றது(எனக்கு).


நல்ல பகிர்வு.

பதி said...

அரசுகளின் கூட்டுக் கொள்ளைக்கு பயந்து ஒடுங்கி வாழ்ந்தால் கவிதையாவது எழுதலாம். அதைவிடுத்து உரிமையைக் கேட்க கிளம்பினால், பயங்கரவாதியாக்கி இருப்பதையும் அழிக்க கிளம்பி விடுவார்கள் நமது தேசிய வியாதிகள்.

கோமதி அரசு said...

முல்லை நல்ல புத்தக பகிர்வு.

வாங்கிப் படிக்கும் ஆர்வம் வந்து விட்டது.

பழங்குடியினரின் வாழ்க்கை எவ்வள்வு அவலங்கள் நிறைந்து இருக்கிறது!மனம் பாரமாகி போனது.

Deepa said...

நல்லதொரு நூல் அறிமுகம் முல்லை. இடுகையைத் தொடங்கிய விதம் அருமை! :)

//உங்களுக்கு நீரும் ஒளியும் கொடுக்கும் பில்லூர் அணை எங்கள் மலைகளில்தான் இருக்கிறது. இருண்டு கிடக்கிறோம் நாங்கள்.//
:-(((

Dr.Rudhran said...

thanks for sharing

நசரேயன் said...

நேரம் கிடைக்கும் போது ஓசியிலே வாங்கி படிக்கிறேன்

அமைதிச்சாரல் said...

//ஆபிசன லெத்து
அச்சா ஜீப்புலே
வெட்டி போடு
ரெண்டு பலாப்பழோ//

காரணம் அருமை. ஆனால் நிறைய பலாப்பழங்கள் தேவைப்படுமே என்ன செய்ய!!!

காமராஜ் said...

அடர்ந்த மூலிகை வாசம் அடிக்குதுடா முல்லை. எழுத்துவாசமும் பகிர்வும் இன்னொரு தளம் நோக்கி நகர்த்துகிறது.முழுசாப்படிக்கணும்.

இராமசாமி கண்ணண் said...

நல்ல புத்தக அறிமுகம். பகிர்விற்கு நன்றி.

அன்புடன் அருணா said...

பூங்கொத்துப் பதிவு!

Uma said...

//பரணுன்னு மேலே எறுகாக்கில்லே
கெழங்குன்னு கீழே தோண்டுகாக்குமில்லே//

//அஞ்சு இட்லிக்கூ
ஆறு ஏக்கரே கொடாத்து
காலேவாயிலே
கல்லூ சொமக்கே நா//

நானாக வாங்கிப் படித்திருப்பேனா என்று தெரியவில்லை. நீங்கள் இப்போது கட்டாயப் படுத்திவிட்டீர்கள். நன்றி.

ஜமாலன் said...

நல்லதொரு அறிமுகத்தை செய்துள்ளீர்கள். நண்பர் லட்சமனனின் இம்முயற்சி பாராட்டத்தக்கது. அம்மொழியை பிரதியின் வழி வாழவைக்க முயன்றுள்ளார்.

முதல் பத்தியில் சொன்ன விஷயங்களில் ஒரு திருத்தம்...

//காட்டில் வசிக்கும் ஆதிவாசிகளை, பழங்குடிகளை நினைத்ததும் மனத்தில் தோன்றும் பிம்பங்கள் இவையே.//

மனதில் தமிழ்த் திரைப்படங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பங்கள்.

மற்றொரு முக்கிய விடயம்.. அறிவு என்பது நேர்கோட்டில் வளர்வதாக எண்ணும் பகுத்தறிவுவாதப் போக்கு. அதாவது.. ஆதிவாசிகள் முட்டாள்கள் என்பது இப்படித்தான் உருவாகுகிறது. உண்மையில் பலவற்றிலும் அவர்களது அறிவாற்றல் அசாத்தியமானது. வாழ்க்கை வளர்ச்சி மற்றும் நாகரீகத்துடன் அறியபட்டதுதான் எல்லா வன்முறைக்கும் மூலம்.