Wednesday, July 28, 2010

மறக்கக்கூடியதா போபால் படுகொலை?

”போபால் விஷவாயுவிற்கு முன்பு ஆஸ்பத்திரியின் உள்ளே கூட நான் நுழைந்தது இல்லை.ஆனால், அதன் பிறகு பெரும்பாலான ஆண்டுகளை ஆஸ்பத்திரி வளாகத்திலேயே கழித்திருக்கிறேன்.முன்பு நான் ஒரு காப்பகத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தேன்,இப்போதோ என்னால் எந்த வேலையும் செய்ய இயலாது.எனது கணவர் கல்லுராமினால் கூட எந்த வேலையும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறார்.அவர் மூட்டைத் தூக்கும் வேலை செய்து வந்தார்.எனது மகன் துணி தைப்பதால் எங்கள் பிழைப்பை ஓட்டுகிறோம்” (நாரயணி பாய்)


போபால் விஷ வாயு கசிவினால் பாதிக்கப்பட்ட, தங்கள் வாழ்வையும் கனவுகளையும் இழந்த எண்ணற்ற மக்களில் நாராயணியும் ஒருவர். இது நாரயணிக்கு மட்டும் நடந்த சம்பவம் இல்லை. இதே போன்ற பல லட்சம் வாழ்க்கை கதைகள் போபாலில் உண்டு.

செர்னோபிலில் இறந்தவர்களின் எண்ணிக்கை : 50
போபாலில் இறந்தவர்களின் எண்ணிக்கை : 25000 பேர் (பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல லட்சங்கள்)

இதில் மனதை அறுக்கும் விஷயம் என்னவெனில்,பலருக்கு உரிய நேரத்தில் மருந்துகளும் ஊசிகளும் மருத்துவமனையில் கைவசம் இருந்தே கிட்டாததும், அதன் பாதிப்புகள் மரபணு ரீதியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தொடர்வதும்தான்.மேலும், தொழிற்சாலை வளாகத்தில் அகற்றப்படாத ரசாயன கழிவுகள் இன்னமும் உண்டு.அவை மண்ணையும், தண்ணீரையும் காற்றையும் இன்னமும் மாசு படுத்திக்கொண்டிருக்கின்றன.

அரசாங்கமும், மருத்துவத்துறையும் ஏழை மக்களை கண் கொண்டு பாராமல் இருப்பதைப் போல நீதியும் கண்களை கட்டிக்கொண்டு விட்டது.

மெக்ஸிகோ வளைகுடா இழப்பீடு : 2000 கோடி டால்ர்
பாதிக்கப்பட்ட மற்றும் இறந்து போன தொழிலாளர்களுக்குக் கிடைத்த இழப்பீடு : 10 கோடி டாலர்

போபால் சம்பவத்தின் இழப்பீடு : 47 கோடி டாலர்
பாதிக்கப்படட நபரு ஒருவருக்குக் கிடைத்த சராசரி இழப்பீடு : 500 டாலர்கள்


உலக வர்த்தக மையத்தின் மீதான தாக்குதலுக்கு ஒரு வருடத்திற்குள் நீதி வழங்கப்பட்டது. போபால் சம்பவத்திற்கோ 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. அதுவும் இழப்பீட்டு தொகைக்கும் வட்டியும் கிடையாது.

குற்றவாளிகளுக்கோ எந்த தண்டனையும் இல்லாமல் ராஜ மரியாதை அல்லவா வழங்கப்படுகிறது?

வல்லரசாகத் துடிக்கும் இந்தியாவிற்கு இது ஒரு வெட்கக்கேடான விஷயம் இல்லையா?

அரசாங்கமும் அமைச்சர்கள் குழுவும்மே குற்றவாளிகளை தப்பிக்க விட்டும், சொந்த மக்களின் குரல்வளையை நசுக்கி பரிதவிக்கவிடும் அவலமும் உலகில் எந்த நாட்டில் நிகழக்கூடும்?
45 டன் மெத்தில் ஐசோ சயனைடு நச்சுக்காற்று யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து வெளியேறி இருக்கிறது.ஆமாம், அது ஏன் இங்கே வந்தது? அமெரிக்காவில் இருந்தால் அமெரிக்க மக்களுக்கு பாதுகாப்பு இல்லையில்லையா, அதனால் அந்தத் தொழிற்சாலை இந்தியாவுக்கு மாறி இருந்தது.மூன்றாம் உலக நாடுகளைப் பற்றி யாருக்கு என்ன கவலை? அந்நாடுகளும் இதை ரத்தின கம்பளம் விரித்து ஆபத்துகளை அல்லவா வரவேற்கின்றன!

பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் இல்லை. பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டும் தொழிற்சாலை இயங்கி வந்திருக்கிறது.இவை முறையாக செயற்படுத்தப்படாதத்திற்குக் காரணம் முதலாளியின் லாப நோக்கமே. அமெரிக்காவிலிருக்கும் அத்தொழிற்சாலையின் தலைமை அலுவலகத்திலிருந்து வந்த ஆணைப்படியேதான் லாப நோக்கிற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளும் பராமரிப்புகளும் குறைக்கப்பட்டது.


தப்பிப் பிழைத்தவர்கள் எவரும் அந்த நள்ளிரவை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. எந்தப் பணியும் செய்ய இயலாமல் நடமாடும் பிணம் போன்ற வாழ்க்கையையே அவர்கள் வாழ்கின்றனர். அவர்கள் செய்த தவறுதான் என்ன? இதில், மருத்துவமனைகளும் தங்கள் மருந்துப் பரிசோதனைகளுக்கு கினியா பன்றிகளைப் போன்று பாதிக்கப்பட்ட மக்களை உபயோகப்படுத்திக்கொள்கிறது என்றால்.....இருமலும் கண்களின் எரிச்சலும் துரத்த வாந்தியும் பின்னர் உடல் இயக்கம் பாதிக்கப்பட்டும் உயிருக்கு ஓடினர் மக்கள். சாலைகளில் செத்து செத்து மடிந்தனர்.எவ்வளவுக்கெவ்வளவு வேகமாக ஓடினார்களோ அவ்வளவுக்கவ்வளவு நுரையீரலை நிரப்பியது நச்சு வாயு.
நகர் முழுக்க மரண நெடி. போபாலின் ரயில்வே அலுவலர்கள் எதையோ உணர்ந்துக் கொண்டவர்களாக இரவு முழுக்க தந்திகள் அடித்தும் சிக்னல்களை அனுப்பியும் எந்த ரயிலும் நிற்காமல் பார்த்துக்கொண்டனர். சன்னல்களை இழுத்து மூடியபடி போபாலில் நிற்காமல் கடந்து செல்லும்படி அனுப்பினார் அதன் நிலைய அதிகாரி துருவே. அந்தக் காலத்தில் எந்த செல்ஃபோன்களோ 3ஜியோ அல்லது அலர்ட்களோ இல்லை.

அடுத்த நாள் காலையில் போலிஸ் மீட்பு படை மோர்ஸ் கோட் இயந்திரத்தை இறுகப்பற்றி இறந்துகிடந்த துருவேவின் உடலையும், சிக்னல் மேனின் உடலையும், ரயில் பாதைகளை மாற்ற முயன்று லீவரை கையில் பிடித்தபடி உயிரை விட்ட கடைப்பணியாளர்களின் உடல்களையுமே கண்டனர். அன்றைய மத்திய பிரதேச முதல்வர் அர்ஜூன் சிங்கோ நகரை விட்டு பாதுகாப்பாக மாளிகையில் பதுங்கிக்கொண்டிருந்தார்.

ஆயிரமாயிரமாக மக்கள் புதைக்கப்பட்டனர்.சிதைகளில் எரியூட்டப்பட்டனர்.ஆண்களும் பெண்களும் அவரவர் மதங்களைக் கொண்டு அடையாளம் காணப்பட்டு ஈமக்கிரியைகள் மொத்தமாக நிறைவேற்றப்பட்டன.

உயிர் தப்பிப் பிழைத்தவர்கள் இன்றும் மாசான சூழ்நிலையிலேயே வாழ்கின்றனர்.குடிப்பதற்கு சிறிதும் லாயக்கற்ற தண்ணீர். குழந்தைகள் இறந்து பிறக்கின்றன. ஊனத்தோடு பிறக்கின்றன. தாயின் கருவிலேயே சிதைகின்றன. பெண்களின் மாதவிலக்கு சுழற்சியே பாதிக்கப்பட்டிருக்கிறது.

பெண்களின் நிலை இன்னும் மோசம். விதவைகளாக்கப்பட்ட பெண்கள் விதவா காலனி என்ற குடியிருப்பில் வசிக்கின்றனர்.குடும்பத்தை சுமந்தாக வேண்டிய பொறுப்பு அவர்கள் தலைமேல் விழுகிறது. பைசா பெறாத அன்றாட வாழ்வின் செலவுகளை சந்திக்கக்க்கூட இயலாத லாயக்கற்ற வேலைகளை செய்து பிழைக்கின்றனர். ஒரு சிலருக்கு வெகுக் குறைவான ரூ 200க்கு குறைவான பென்ஷன் வழங்கப்படுகிறது.

1990க்கு பிறகு போபால் சம்பவத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கையை அரசு கவனத்தில் கொள்ளவே இல்லை. 25000 என்பது 1990 வரையிலான இறந்தவர்களின் எண்ணிக்கைதான். இன்றும் பல்லாயிரம் டன்கள் உயிர்க்கொல்லி ரசாயனங்கள் யூனியன் கார்பைடு தொழிற்சாலையை சுற்றி புதைக்கப்பட்டிருக்கிறது. சுற்றியுள்ள மக்களின் உயிரை கொய்துக்கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளாக ரசாயனம் புதைக்கப்பட்டிருக்கும் நிலத்திலிருந்தே தண்ணீரை மக்கள் உட்கொள்கிறார்கள்...ஆனால் நமக்கு அதைப்பற்றி என்ன கவலை?

போபால் நச்சு வாயு படுகொலைக்கே நீதி கிடைக்காத நிலையில் எஞ்சியிருக்கும் மக்களையும் புதைக்க யூனியன் கார்பைடை வாங்கி பாஸ்போர்ட்டுடன் நுழைந்திருக்கிறது டௌ கெமிக்கல்ஸ்.

வாருங்கள் கொலைக்கார 'டௌ' வை வெளியேற்றுவோம்! இனியும் போபால்கள் நமக்கு தேவையில்லை!

முற்றுகை : ஆகஸ்ட் -15
டௌ கெமிக்கல்ஸ் அலுவலகம், கிண்டி, சென்னை

10 comments:

நட்புடன் ஜமால் said...

டெள - டை நவ்

காமராஜ் said...

அன்பின் முல்லை.
ஜூலை மாத பு ஜ இதழில் படித்த பிறகு மனசு எதிலும் ஒட்டவில்லை. அந்த படங்கள் சாப்பிடும் நேரத்தை அலைக்கழிக்கிறது.நடந்த கொடூரங்களும்.அதன் பின்னனியும்,தாமதிக்கப்பட்ட நீதி மூலமாக கொடுக்கப்பட்ட பிச்சைக்காசும் படிக்கிற யாருக்கும் ஆத்திரத்தைஉண்டாக்கும்.பொது ஆத்திரம் உருவாகவில்லை. ஆதாலால் குற்றவாளிகள் கொக்கரிக்கிறார்கள்.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

பகிர்வுக்கு நன்றி

சின்ன அம்மிணி said...

//அரசாங்கமும் அமைச்சர்கள் குழுவும்மே குற்றவாளிகளை தப்பிக்க விட்டும், சொந்த மக்களின் குரல்வளையை நசுக்கி பரிதவிக்கவிடும் அவலமும் உலகில் எந்த நாட்டில் நிகழக்கூடும்?
//

அரசியல்வாதிகள் மட்டும் இல்லை. அவர்களுக்கு அடிமையாகிப்போன ஊடகங்களும் காரணம். போபால் பற்றி வந்த பதிவுகளில் இது சிறந்த பதிவு என்பேன்

Deepa said...

சார‌மான இடுகை முல்லை.

காம‌ராஜ் அவ‌ர்க‌ளையும் சின்ன‌ அம்ம‌ணியையும் வ‌ழிமொழிகிறேன்.

கையேடு said...

இந்த பிரச்சனையை முன்வைத்து உரையாட நிறைய இருக்கிறது, செய்ய வேண்டியவையும் நிறைய இருக்கிறது.

பின்னர் விரிவாகப் பேசலாம்.

thejasvie said...

அருமையான,தேவையான பதிவு. போபால் போன்று, ஏன் அதை விட பல மடங்கு ஆபத்து நம் கடலூர் மாவட்டத்தில் காத்திருக்கிறது, ரசாயன உரங்கள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள், பெயிண்ட் கம்பெனி, சக்கரையை வெள்ளையாக்கும் தொழிற்சாலை, நாம் பயன்படுத்தும் வாசனை திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மூலமாக. நம் தண்ணீரும், நாம் சுவாசிக்கும் காற்றும் மாறுபட்டு மாசுடன் தானே இருக்கிறது.
அமெரிக்காவில் இந்த மாதிரியான ஒரு தொழிற்சாலையை ஒரு இந்தியன் தொடங்க முடியுமா? உலகத்தாரால் ஒதுக்க பட்ட நிறுவனங்கள் அனைத்தும் நம் இந்தியாவில். உலகத்திலேயே விலைமதிப்பிலாத உயிர் இந்தியனின் உயிர் தான். நாம் உபயோகபடுத்தாத பல பொருட்களும் இங்கே தான் தயாரிக்க படுகிறது. இதை தட்டி கேட்க்க யார் வருவார்? இன்னொரு முறை வெள்ளையனே வெளியேறு என்று புரட்சி ஏற்பட்டாலும் இது முடிவுக்கு வருமா? தெரியவில்லை.
முன்னொரு காலத்தில் ஒற்றுமையுடன் போராட ஒரு கூட்டம் இருந்தது, இப்போது யாருக்கும் நேரம் இல்லை..............
- வருத்தத்துடன் தேஜாம்மா

santhanakrishnan said...

நிச்சயமாக டெளவ்வை விரட்டியே
ஆக வேண்டும்.

காலம் said...

iஇத்தகைய கம்பனிகளின் லாபத்தில் மறைமுகமாக இங்குள்ள பெரும் புள்ளிகளும் ஆட்சியாளர்களும் பங்குபெறுகிறார்கள்

பூங்குழலி said...

போபால் நம் மனசாட்சியில் என்றுமே உறுத்தப் போகும் நிகழ்வு .இதில் அரசிலிருந்து நீதித் துறை வரை அனைவருமே குற்றவாளிகளே .இன்னமும் SEZ என்ற போர்வையில் என்னென்ன நடைபெற காத்திருக்கிறதோ ?அச்சமாக இருக்கிறது .சரியான பதிவு சந்தனமுல்லை