Thursday, July 01, 2010

காசு மேலே காசு வந்து....

நினைவு தெரிந்த நாளாக பணத்தில் மேல் ஆசைப்பட்டிருக்கிறேன். கையில் காசு இருப்பது எனக்கு மகிழ்ச்சியளித்திருக்கிறது. காசு வைத்திருப்பது சுதந்திரம். தேவைகள் என்று பெரிதாக ஒன்றுமில்லாவிட்டாலும் கையில் காசு இருப்பது ஒரு தைரியம். நம்பிக்கை. எனது சிறு பீரோவின் சேஃபின் உள்ளறையில் நாணயங்களை சேமித்து வைத்திருந்தேன். பெரும்பாலும் அதை செலவு செய்வதற்கு சந்தர்ப்பங்களே இருந்தது இல்லை.

ஆனால், அவ்வப்போது அவற்றை கைகளில் எடுப்பதும் வைப்பதுமாக பார்த்து பார்த்து மகிழ்ச்சியடைந்திருக்கிறேன். 'பெரிசானப்புறம் இந்த பீரோ ஃபுல்லா காசு வைச்சுப்பேன்' என்று கனவு கண்டிருக்கிறேன். காசு அல்லது பணம் என்பது எனது உலகில் நாணயங்களே. ரூபாய் தாள்களும் காசுதான் என்று அறியாத வயது. அல்லது காசாக மதிக்க தெரியாத வயது.ஐந்து வயதிருக்கலாம் அப்போது.

“நீ பெரிசாகி என்னவாகப் போறே' என்பதுதான் அன்றைய குழந்தைகள் அதிகமாக எதிர்கொண்ட கேள்வியாக இருக்கும்.அது புதியவர்களானாலும் சரி..பழகியவர்களானாலும் சரி. எத்தனை முறை கேட்டிருந்தாலும் சரி...குழந்தைகளை பார்த்ததும் நோக்கி வீசப்படும் கேள்வி அதுதான்.

“டாக்டர் ஆகப் போறேன்”

”டாக்டர் ஆகி என்ன பண்ணுவே”

“ஊசி போட்டுட்டு, காசு வாங்கி டிராவிலே போட்டுப்பேன்” - இதுதான் உறுதியான குரலில் எனது பதில்.

பெரிம்மாவின் நண்பர் பானு ஆண்ட்டி கிளினிக்குக்கு தினந்தோறும் செல்வோம். சாயங்கால நேரங்களில் யாரும் இருக்க மாட்டார்கள். பெரிம்மாவும் பானு ஆண்ட்டியும் பேசிக்கொண்டிருக்க அவரது சுழல் நாற்காலியில் அமர்ந்தும் ஸ்டெத்தை வைத்தும் கிளினிக்கை சுற்றியும் விளையாடிக்கொண்டிருப்பேன். அப்போது பார்த்ததுதான் - பானு ஆண்ட்டி ஸ்டெத் வைத்து பரிசோதித்துவிட்டு காசு வாங்கி டேபிள் டாராவில் போடுவார். இன்னொரு கவர்ச்சி அம்சம் - மெத் மெத்தென்ற சுழல் நாற்காலி.

சாயங்கால வேளையில், ஹால் முழுக்க 30-40 அண்ணாக்கள் நிறைந்திருக்க பாடம் நடத்தும் பெரிம்மாவின் வேலை எனக்கு பெரிதாகவே படவில்லை. தினமுமா ட்யூஷனுக்கு காசு வாங்குவார்கள்?

புத்தகங்கள் மூலமும், அமெரிக்க ரிட்டர்ன் சொந்த பந்தங்கள் மூலமும் பாக்கெட் மணி பற்றி அறிய நேர்ந்தது. ஆனால், வீட்டைப் பொறுத்தவரை பணம் என்பது குழந்தைகள் கையால் தொட்டுவிடவேக் கூடாத வஸ்து அது.

தப்பித்தவறி பிறந்தநாட்களுக்கு யாரேனும் ஓரிருவர் ஐம்பது ரூபாய் அல்லது நூறு ரூபாயை கொடுத்துவிட்டாலோ ஷாக் அடித்தாற் போல பதறிப் போய்விட வேண்டும். அவர்கள் எவ்வளவு வலிய வலிய திணித்தாலும் சரி, கையை நீட்டி வாங்கிவிடக் கூடாது. அதில்தான் குடும்பத்தின் வளர்ப்பு உள்ளது.

பின்னர், கொஞ்சம் வளர்ந்தபின் காசு வாங்கலாம், ஆனால் பெரியவர்களிடம் கொடுத்து விட வேண்டும் என்று நிலைமை முன்னேறியது. அவ்வப்போது நாம் கணக்குக் கேட்டுக்கொள்ளலாம். அது கணக்கோடே நின்று விடவும் வாய்ப்பு அதிகம். ஆனால், ஷட்டில் பேட் அல்லது கேரம் போர்ட் அல்லது அந்த மாத அருண் ஐஸ்க்ரீம் கோட்டாவாக கணக்கு காட்டப்படலாம் - அது உங்கள் ஏமாறும் திறனை பொறுத்தது.

ஆனால், கையில் காசு வைத்துக்கொள்ள வேண்டுமானால் கண்டிப்பாக நன்றாக படிக்க வேண்டும். வேலைக்குப் போக வேண்டும். இதை மனதில் பதிய வைக்கவே வீட்டில் இவ்வளவு முயன்றார்கள் என்று நினைக்கிறேன்.

அது ஓரளவு வொர்க் அவுட் ஆகியது. அம்மா - அப்பா விளையாட்டில் கூட நாந்தான் வேலைக்குப் போயிருக்கிறேன். விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த பக்கத்துவீட்டுப் பையன் “ஆச்சி, நான் ஒரு வாட்டி வேலைக்குப் போறேன்.. ஆச்சி” என்று கூட விளையாடும் போது கெஞ்சியிருக்கிறான். (அடுத்த விடுமுறைக்கு அந்த பையன் வரவேயில்லை!LoL)

மாதம் ஒரு முறை கண்டிப்பாக பெரிம்மா எங்களை அருண் ஐஸ்கிரீம் அழைத்துச் செல்வார். மாத சாமான் வாங்கும்போது ஒரு பாக்கெட் சாக்லெட்கள் கண்டிப்பாக உண்டு. இவை தவிர நொறுக்ஸ். வேண்டிய கதை புத்தகங்கள் வீட்டுக்கு வந்துவிடும். இவை தவிர பிள்ளைகளுக்கு அப்படி என்ன தேவை - காசு எதற்கு என்பதே பெரியவர்களின் வாதமாக இருந்தது.

ஆனால் நமக்கு அப்படியா? நண்பர்களுக்கு பிறந்தநாள் பரிசு வாங்க வேண்டுமானால் காசு அளந்துதான் தரப்படும். மறுத்து அடம்பிடித்தால் அதுவும் கிடைக்காமல் போய் பரிசுப் பொருளாகவே வாங்கி வந்து தரப்படும். வாழ்த்து அட்டைகள் பற்றி சொல்லவே வேண்டாம். நாமே வரைந்து அனுப்பினால்தான் நண்பர்களுக்கு நாம் அளிக்கும் மரியாதை என்று உணர்த்தப்பட்டு எனது கைவண்ணங்களே வாழ்த்தட்டைகளாயின.

அதில் எழுதி அனுப்புவதற்கு செம செண்ட்டியான டச்சிங் டச்சிங் வாசகங்களை ஒரு டைரி முழுவதும் சேகரித்து வைத்திருந்தேன். மிஸ் யூ, ஜஸ்ட் டு சே அ ஹலோ, ஹவ் அ குட் டே, ஹாப்பி பர்த்டே, கெட் வெல் சூன், பான் வாயேஜ் என் ஒவ்வொன்றிற்கும் 7 அல்லது 8 வரிகளுக்கு மிகாமல் நெஞ்சை பஞ்சாக்கி பஞ்சை பஞ்சராக்கும் வசன வரிகள்!

இவை எல்லாமே எனது கையில் பணம் இருந்தால் நான் விரும்பியதை யார் உதவியில்லாமலே செய்யலாமென்று தோன்றவைத்தது. எப்படி சம்பாதிப்பது என்றெல்லாம் ஒரே யோசனை. வெளிநாட்டில் பிள்ளைகள் பள்ளியில் படிக்கும் போதே பார்ட் டைமாக வேலை செய்து சம்பாதிப்பார்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டதிலிருந்து நானும் ஏதாவது செய்து சம்பாதிக்க வேண்டும் என்று ஒரே ஆசை.

ஒரே வழி பிசினஸ். ஆனால், என்ன செய்வது? ஆயாவுக்கு பென்ஷன் வந்தால் அதில் இருபது ரூபாய் தருவார். பள்ளியிறுதியில் அது நூறு ரூபாயாக உயர்ந்தது. அதைவிட்டால் பிறந்தநாட்கள் - அது வருடம் ஒரு முறைதான்.

கல்லூரிக்கு வந்த பிறகே கொஞ்சம் பெரிய மனுசியாக பார்க்கப்பட்டேன். பெரிம்மாவும் அம்மாவும் அனுப்பும் செக்க்கில் எனது பெயரை பார்த்தபின் ஏற்படும் பெருமித_சந்தோஷ_உணர்வுகள் அலாதியானது. பீரோ லாக்கரில் இருந்த நாணயங்களை எண்ணியது போலவே அவ்வப்போது பாஸ் புக்கை எடுத்து பார்த்துக்கொண்டிருந்தேன். மெஸ் பீஸ் கட்டியதும் கொஞ்சம் சந்தோஷம் குறையும். ஒவ்வொரு செமஸ்டரும் எனது உள்ளார்ந்த சந்தோஷமானது சேவிங்ஸ் அக்கவுண்டைப் பொறுத்து ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.

ஆனாலும் ஏதாவது பிசினஸ் செய்ய வேண்டுமென்று சுஜாவும் நானும் பேசிக்கொள்வோம். சுஜாவின் அப்பா ஷேர் ப்ரோக்கர்.


ஷேர்கள் வாங்கி பெரிய ஆளாகிவிடலாமென்று மனக்கோட்டை கட்டிக்கொண்டு பெரிம்மாவை நச்சு பண்ணியதில் பாரி அங்கிள் மூலமாக சிண்டிகேட் வங்கியில் 5000 ரூபாய்க்கு ஏதோ ஷேர்கள் வாங்கி தந்தார்.ஷேர் மார்க்கெட்டில் எனக்குத் தெரிந்த ஒரே பெரிய ஆள் ஹர்ஷத் மேத்தாதான். அந்த டாக்குமெண்ட்களை வைத்து ஒரே கனவுதான்.

ஆனாலும் நாமே சம்பாதித்து கையில் காசு வைத்துக்கொள்ள வேண்டும் என்பது நிறைவேறாமலே இருந்தது. கொடைக்கானல் வானொலி நிலையத்தில் ஏதோ சர்வே எடுக்க வாய்ப்பு கிடைத்தது. கொடுக்கப்பட்ட முகவரிகளைத் தேடி காடு மலைகளைச் சுற்றி ஏறி இறங்க வேண்டும்.

ஊர் சுற்றுவதுதான் நமக்கு சாக்லெட் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது போன்றதாயிற்றே! பழம் நழுவி பால். அதில் கணிசமாக கிடைத்தது. முதலில் குட்டிக்கு கிஃப்ட். அப்புறம், ப்ரெண்ட்ஸ்க்கு ட்ரீட். அப்புறம் எனக்கு இசை ஆல்பங்கள். மாயமாக மறைந்தது பணம்.


எனக்காவது பரவாயில்லை. அம்மாவிடமும் பெரிம்மாவிடம் வாங்க்கொண்டிருந்தேன். எனது ஒரு சில நண்பர்களுக்கு அப்பாக்கள் கொடுப்பதுதான் பாக்கெட் மணி. ப்ராஜக்ட்-க்கு வந்தபோதும் பெரிம்மா அம்மாவின் தயவுதான்.அந்த அரசாங்க அலுவலகத்தில் ஐந்து மணிக்கு மேல் வேலை இல்லை. வெட்டியாக அடையாரைச் சுற்றிக் கொண்டிருந்த போது கண்ணில் பட்டது “தாஸ் ட்யூஷன் செண்டர்”.

உலகத்தில் இருக்கும் எல்லா மொழிகளுக்கும் எல்லா பரிட்சைகளுக்கும் ட்யூஷன் தேவையெனில் நீங்கள் அணுக வேண்டிய முகவரி இதுதான். தாஸ் என்பவர் அந்த ட்யூஷன் செண்டரை நடத்தி வருபவர். எந்த இடத்தைப் பார்த்தாலும் ஒருவர் பாடம் நடத்திக்கொண்டிருப்பார். இருவராக மூவராக அமர்ந்து கேட்டுக்கொண்டிருப்பார்கள். ஒரு பேப்பருக்கு வசூலிக்கும் காசில் நான்கில் ஒரு பங்கு தாஸ் சாருக்கு.

முதல் வகுப்பு மட்டும் கொஞ்சம் பயமாக இருந்தது. நாம் என்ன சொல்லிக் கொடுத்து இந்த பையன் என்ன எழுதி பாஸ் பண்ன போகுதோ என்ற பொறுப்பு உணர்ச்சிதான்! பி.ஈ ஐடி மாணவன்.நாங்கள் படித்ததை அப்படியே வாந்தி எடுக்கும் வேலைதான்.

அவனும் என்ன சொன்னாலும் தலையாட்டிக்கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு மாதத்தில் ஒரு பேப்பர் சொல்லிக்கொடுத்து இரண்டாயிரம் கிடைத்தது. எனது பாக்கெட் மணியின் இரு மடங்கு. அதன் பிறகு கொஞ்சம் தைரியம் வந்தது. அடுத்து ஒரு பெரியவர் - வங்கியில் வேலை உயர்வுக்காக கணினி பரிட்சை. அப்புறம் ஒரு ஆண்ட்டி - அவரது எம்சிஏ எல்லா பேப்பர்களுக்கும். அப்புறம் இன்னொரு பி.ஈ - ஐடி. (பிற்காலத்தில் ஆர்குட்டில் சந்தித்தபோது நல்ல நிலையில் செட்டிலாகி இருந்தான்.ஹப்பாடா!)


வீட்டிலிருந்து பணம் வாங்குவது மெதுவாக குறைந்திருந்தது. மேலும் எனக்கான தேவைகளையும் நானே சந்திக்க துவங்கியிருந்தேன். எல்லாமே ஃபான்ஸி பொருட்கள்தான். அப்புறம் நண்பர்களுக்கு ட்ரீட். கல்லூரி காலத்தின் ட்ரீட்கள்..மறக்க முடியாதவை!!

காசை சேர்த்து வைத்து பார்த்துக்கொண்டிருக்கும் சுகத்தைவிட அதை செலவழிக்கும் போது வரும் மகிழ்ச்சியை கண்டுகொண்டிருந்தேன். ”காசோட அருமை தெரியறது இல்லே” என்று வாங்கிய திட்டுகள் எல்லாம் பனியாக கரைந்துக் கொண்டிருந்தது. ஏனெனில் எனது உழைப்பு. எனது காசு. எனது சுதந்திரம். அடிப்படை தேவைகள் சந்திக்கப்பட்டபின்னர் இருந்த காசு எல்லாமே அப்போது அபரிமிதமாகத் தெரிந்தது.மேலும் காசு இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை என்றும் புரிந்துக்கொண்டிருந்தேன்.

முழுநேர வேலை கிடைத்தபின்னர் முற்றிலும் விடுதலையாக உணர்ந்தேன். உறவினர்களுக்கு,நண்பர்களுக்கு எல்லாருக்கும் ஒரே பரிசுப்பொருட்கள்தான். சேமிக்க வேண்டுமென்று அப்போது தோன்றவேயில்லை. இப்போதும்தான். இதுவரை என்னை பாராட்டி வளர்த்த அனைவருக்கும் எனது ஃபீலிங் ஆஃப் கிராட்டிட்யூடை காட்டவே எனக்கு போதுமாக இருந்தது.

எனக்கு திருமணம் ஆனபின்னர் ஆயா எனக்கு சொன்னது “எப்போதும் உனது அக்கவுண்ட்டில் இரண்டு லட்சங்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்” என்பதுதான். ஆனால், முடியவேயில்லை. சந்தர்ப்பங்களும் விடுவதில்லை. கொஞ்சம் பணம் சேர்ந்தால் உடனே அது வாங்கலாமா இல்லது இவர்களுக்கு இதை வாங்கித் தரலாமாவென்றே கரைந்து விடுகிறது.

ஆனாலும், எனது சந்தோஷமும் தைரியமும் ஏடிஎம் துப்பும் ரசீதை பொறுத்தே உள்ளது என்பதை மறுக்க முடியாது.

ஆமா, ஏன் இன்னைக்கு இவ்ளோ மொக்கை...முதல் தேதியில்லையா...?! எஸ்.எம்.எஸ் வந்தாச்சா பாக்கணும்...:-)

அதுவரைக்கும் அபாவின் பாடலை கேட்டுக்கொண்டிருங்கள் !

25 comments:

மயில் said...

எனது சந்தோஷமும் தைரியமும் ஏடிஎம் துப்பும் ரசீதை பொறுத்தே உள்ளது என்பதை மறுக்க முடியாது.//

இது நூறு சதவீத உண்மை.

லெமூரியன்... said...

நல்ல மொக்கை முல்லை..! :-) :-)
கையில் காசு இருக்கும்போது ஒரு நம்பிக்கை இருக்கும் பாருங்க...இந்த உலகத்தையே ஜெயிச்சிடுவோம் என்ற அளவிற்கு இருக்கும்...
ஒரு சந்தோசம் இருக்கும் :-) :-)
நெறைய பேர்க்கு மிக பிடித்தவர் பட்டியலில் வருவோம்... :-) :-)
காசு உண்மையிலேயே மிக பெரிய போதைதான்..!

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

ஆச்சி சம்பளம் 26ம் தேதியே வந்தாச்சு :-)

Deepa said...

எங்கேந்து தான் இப்படி டாபிக் பிடிக்கிறியோ! படு சுவாரசியம்!

சிறுவயதில் செலவு செய்யாமல் காசை எண்ணிப் பார்த்துப் பூரித்த நீ சுய‌கால்க‌ளில் நின்று சம்பாதிக்கத் தொடங்கியதும் தாராளமாக மற்றவருக்குச் செலவு செய்யத் தொடங்கியது அழகிய முரண்!


//“ஊசி போட்டுட்டு, காசு வாங்கி டிராவிலே போட்டுப்பேன்” - இதுதான் உறுதியான குரலில் எனது பதில். // ய‌ப்பாடி!

//பெரிம்மாவின் வேலை எனக்கு பெரிதாகவே படவில்லை. தினமுமா ட்யூஷனுக்கு காசு வாங்குவார்கள்?
//அடிப்பாவி!

‌//நாமே வரைந்து அனுப்பினால்தான் நண்பர்களுக்கு நாம் அளிக்கும் மரியாதை என்று உணர்த்தப்பட்டு எனது கைவண்ணங்களே வாழ்த்தட்டைகளாயின// Me too same blood!

//காசு இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை என்றும் புரிந்துக்கொண்டிருந்தேன்.//அப்ப‌டியா? :(

//ஆனாலும், எனது சந்தோஷமும் தைரியமும் ஏடிஎம் துப்பும் ரசீதை பொறுத்தே உள்ளது என்பதை மறுக்க முடியாது.// இந்த‌ வ‌ரிக‌ள் ஆழ‌மாக‌ யோசிக்க‌ வைக்கின்ற‌ன‌. உண்மையில்லையென்றும் ம‌றுக்க‌ முடியாது. ஆனாலும் ஏற்ப‌த‌ற்கு என்ன‌வோ நெருடுகிற‌து.

சின்ன அம்மிணி said...

//எனக்கு திருமணம் ஆனபின்னர் ஆயா எனக்கு சொன்னது “எப்போதும் உனது அக்கவுண்ட்டில் இரண்டு லட்சங்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்” என்பதுதான்.//

ஆயாவை ரெண்டு லட்சம் டெபாசிட் பண்ண சொல்லுங்க . :)

Chidambaram Soundrapandian said...

// அவ்வப்போது நாம் கணக்குக் கேட்டுக்கொள்ளலாம். அது கணக்கோடே நின்று விடவும் வாய்ப்பு அதிகம்.//

repeatttuuu....

http://vaarththai.wordpress.com

ஜெயந்தி said...

காசுதான் நம்மை நமது வாழ்க்கையை செலுத்துகிறது என்பதை அழகாக சொல்லிவிட்டீர்கள்.

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்ச இடுகைங்க இது.

அம்பிகா said...

முல்லை,
பல இடங்களில் அசத்துகிறீர்கள்.
சொந்தகால்களில் நிற்பதும்,
சம்பாதிப்பதும் மிக மிக சந்தோஷமான விஷயம்.
இந்த பதிவு மிக பிடித்திருக்கிறது முல்லை.

அமைதிச்சாரல் said...

//எனக்கு திருமணம் ஆனபின்னர் ஆயா எனக்கு சொன்னது “எப்போதும் உனது அக்கவுண்ட்டில் இரண்டு லட்சங்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்” என்பதுதான். ஆனால், முடியவேயில்லை. சந்தர்ப்பங்களும் விடுவதில்லை. கொஞ்சம் பணம் சேர்ந்தால் உடனே அது வாங்கலாமா இல்லது இவர்களுக்கு இதை வாங்கித் தரலாமாவென்றே கரைந்து விடுகிறது.
ஆனாலும், எனது சந்தோஷமும் தைரியமும் ஏடிஎம் துப்பும் ரசீதை பொறுத்தே உள்ளது என்பதை மறுக்க முடியாது//

அனுபவஸ்தர்கள் சொன்னா கேட்டுக்கணூம் :-)))

ponraj said...

பணம் ?? :-)
அருமையான தகவல்கள்!!!

pinkyrose said...

mmmm kaasu mukyam thaan but intha kasa vida itha selavu panravanga romba mukyampa yaarum illathapp intha currency verum papera ethanayo time enuku theriyum ok evry one has diff experience illiya itho intha blog kooda, suthi suthi manusangala thedi salichu veruthu ponappa kedacha oru oyasis thaan santhanamullai rommba perisa iruku name epdi koopduvanga ellarum

நிஜமா நல்லவன் said...

:)

நிஜமா நல்லவன் said...

/ சின்ன அம்மிணி said...

//எனக்கு திருமணம் ஆனபின்னர் ஆயா எனக்கு சொன்னது “எப்போதும் உனது அக்கவுண்ட்டில் இரண்டு லட்சங்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்” என்பதுதான்.//

ஆயாவை ரெண்டு லட்சம் டெபாசிட் பண்ண சொல்லுங்க . :)/

சின்ன அம்மிணி அக்கா சொன்னதை வழி மொழிகிறேன்:)

முனியாண்டி said...

நான் மிகவும் ரசித்து கதையோடு குழந்தைவளர்ப்பு சொன்னது.

http://adisuvadu.blogspot.com/2010/06/blog-post_27.html

அமைதிச்சாரல் said...

ஒண்ணாம்தேதியானா சம்பளம் மட்டுமல்ல தங்கமும் தேடிவரும் :-)))
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்றுக்கொள்ளவும்.

http://amaithicchaaral.blogspot.com/2010/07/blog-post_02.html

mrsvel said...

பொருளாதார விடுதலை மிக பெரிய விடுதலை சகோதரி

sakthi said...

ஹலோ முல்லை நலமா

அருமையான பதிவு

santhanakrishnan said...

வாழ்த்துகள்.
உங்கள் பதிவு
இந்த மாதம் உன்னதம்
இதழில் வந்துள்ளது.

☀நான் ஆதவன்☀ said...

//ஆனாலும், எனது சந்தோஷமும் தைரியமும் ஏடிஎம் துப்பும் ரசீதை பொறுத்தே உள்ளது என்பதை மறுக்க முடியாது.//

:))))) எல்லாருக்கும் இதே கதி தான் பாஸ்

pinkyrose said...

ennachu mullai rendu naala aala kaanum?!
unga comment varumnu wait panni ponga mullai kastapattu tamilla eluthi irukan pathuttu comment pannunga.. okaya

ILA(@)இளா said...

போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்(சிபஎபா), இந்த இடுகைய சேர்த்திருக்கேன்.

மாதேவி said...

அருமையான பதிவு.

தீஷு said...

//எனது சந்தோஷமும் தைரியமும் ஏடிஎம் துப்பும் ரசீதை பொறுத்தே உள்ளது என்பதை மறுக்க முடியாது.
//

உண்மையான‌ வ‌ரிக‌ள் முல்லை.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

காசு விஷயத்தைப்பொறுத்தவரை கிட்டத்தட்ட அனைவரின் பால்யமும் இப்படித்தான்.