Monday, July 12, 2010

கப் சாதி பஞ்சாயத்தும் கௌரவக்கொலைகளும்

சான்ச்சல் மற்றும் ராஜ்குமாரி. இருவரும் முறையே 14 மற்றும் 12 வயதுடைய பெண்கள். இருவரது உடல்களும் ஹரியானாவின் சோனாபேட் அருகில் கால்வாயில் கண்டெடுக்கப்படுகின்றன. அவர்களது பாட்டியும், மாமாக்களுமே இருவரையும் அடித்து கொலை செய்து கால்வாயில் வீசியதாக போலீஸ் விசாரணைக்குப் பிறகு தெரிய வருகிறது. இப்படி தனது சொந்தக் குடும்பத்தினரால் கொலை செய்யப்படுவதற்கான காரணம் - பக்கத்து வீட்டில் வசிக்கும் 16 வயது பையனுடன் அவர்களுக்கு தொடர்பு இருந்ததாகவும் அதனால் குடும்பத்திற்கு அவப்பெயர் கொண்டு வந்துவிடக்கூடாது என்பதாலுமே. (செய்தி )

சண்டிகரின் பிவானியைச் சேர்ந்த மோனிகா(18) மற்றும் ரிங்குவின் (19) , இருவரது உடல்களும் மின்விசிறியில் தொங்கிக் கொண்டிருந்திருக்கின்றன. மோனிகாவின் குடும்பத்தினரே இருவரையும் அடித்து துன்புறுத்தி கொலை செய்து தூக்கிலிட்டிருக்கின்றனர். அவர்கள் செய்த குற்றம் - ஒரே கோத்திரத்தில் பிறந்த அவர்களிருவரும் காதலித்ததுதான். ஒரே கோத்திரமென்றால் சகோதர உறவு என்று அர்த்தமாம். அதன்படி ஒரு கிராமத்தில் வாழ்பவர்கள் முழுவதும் ஒரே கோத்திரமெனில் - அனைவரும் சகோதர உறவு!

தில்லியில் பத்திரிக்கையாளராக வேலை செய்துக்கொண்டிருந்த நிருபமா பதக் தனது காதலரை திருமணம் செய்துக்கொள்ள வீட்டாரின் சம்மதம் வேண்டி ஜார்க்கண்டிலிருக்கும் தனது வீட்டிற்கு வருகிறார். அப்போது அவர் சில வாரங்கள் கர்ப்பம்.வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாகி இறந்து போகிறார். போஸ்ட் மார்ட்டத்தில், அவர் மூச்சுத் திணறலால் இறந்து போனது தெரியவந்து, போலீஸ் விசாரணைக்குப் பிறகு அவரது தாயே குற்றவாளியென்ற உண்மை வெளிவருகிறது. நிருபமா தனது சாதியை விட தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவரை விரும்பியதே அவரது தாயின் ஆக்ரோஷத்திற்குக் காரணம்.

இவை எல்லாம் நமக்கு புதியவை இல்லைதான்.

நமக்குத் தெரிந்த இந்தக் கொடூரமான கொலைகள் நிகழ்ந்தது கடந்த சில மாதங்களில்தான். ஹரியானா, பஞ்சாப்,உத்தர பிரதேசம்,ராஜஸ்தான் கிராமங்களில் நாம் அறியாத ஆண்களும் பெண்களுமாக சாதி மற்றும் கோத்திரத்தின் பெயரால் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த படித்தவரான நிருபமாவின் விஷயத்தால் பத்திரிக்கைகளிலும் இணையத்திலும் பரபரப்பைப் பெற்று கவனத்தை ஈர்த்தது.

மேலும் இன்னொரு பழைய செய்தியும் உண்டு.

பப்லி மற்றும் மனோஜை யாரும் மறந்திருக்க முடியாது. இருவரும் இந்திய சட்டப்படி திருமணம் செய்துக்கொள்ளும் வயதை அடைந்தவர்கள். 2007 ஏப்ரலில் காதலித்து திருமணமும் செய்துக் கொண்டார்கள். அதே வருடம் ஜூனில் இருவரும் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்பட்டார்கள். பப்லி மற்றும் மனோஜ் செய்த ஒரே குற்றம் ஒரே கோத்திரத்தில் பிறந்தது தொலைத்ததுதான்.

இந்தக் கொலையில் முக்கிய பங்கு வகித்தது - கப் பஞ்சாயத்து என்ற சாதிய சங்கம். ஒரே கோத்திரத்தில் அல்லது தாழ்ந்த சாதியில் காதலிக்கும் குற்றவாளிகளின் உயிரை எடுக்கும் தண்டனையை விதிப்பது இந்த கட்டப் பஞ்சாயத்துதான். மார்ச் 2010இல், கொலையாளிகள் ஐந்து பேருக்கு தூக்குத் தண்டனையும், கொலை செய்யத் தூண்டிய கப் சாதிய பஞ்சாயத்துத் தலைவருக்கு சிறைத் தண்டனையும் இந்திய நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதற்கு பின்னரே இந்தியாவின் சாதிய கோர முகம் வெளியே தெரியத் தொடங்கியது. தண்டனை வழங்கப்பட்ட கப் பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு ஆதரவாக ஹரியானா,பஞ்சாப்,உத்திர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் பிற கப் பஞ்சாயத்து உறுப்பினர்கள் பொங்கி எழுந்து இந்திய சட்ட அமைப்புக்கு சவால் விட்டனர். ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட சாதி சங்க தலைவருக்கு தங்களது ஆதரவை வெளிப்படையாக தெரிவித்தனர். ”பாரம்பரியத்திற்கு மதிப்பளிக்கும் காப்பாற்றும் வகையிலேயே” அவர்கள் கொலை செய்ததாகவும் குரல் எழுப்பினர். எதிர்ப்பவர்களை அச்சுறுத்தும் விதமாக தலித் குடியிருப்புகளை தீயிட்டனர். இதில் உயிரோடு எரிக்கப்பட்ட தந்தையும் அவரது ஊனமுற்ற மகளும் அடக்கம்.

கப் பஞ்சாயத்துகள் - இவர்கள் நமது “சுத்துபட்டு 18 பட்டிக்கும் நாட்டாமை” போலத்தான். என்ன, 18 பட்டிக்கு பதில் 84 பட்டிகள். இந்த கிராம மக்கள் அனைவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள். ஒரே கப் சாதி சங்கத்தை சேர்ந்த எல்லா ஆண்களும் பெண்களும் சகோதர உறவினர்.காதல் திருமணங்கள் கப் சங்களுக்குள் நடைபெறாது. அப்படி நடந்தால் அது பாவம். அப்படி ஒரே கப் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டால் அந்த ஜோடி கப் பஞ்சாயத்தால் கொலை செய்யப் படுவார்கள். அவர்களது குடும்பத்தினரும் தண்டனைக்கு ஆளாவார்கள்.

கிராமங்களும் கிராம மக்களும் கப் பஞ்சாயத்தினருக்கு கட்டுப்பட்டவர்களே. கப் பஞ்சாயத்தினரின் தலைவர் அவரது அறிவிற்கு ஏற்றபடி நிர்வாகம் செய்வார். முஸ்லிம் அமைப்புகள் பத்வாக்கள் வெளியிடுவது போன்று கட்டளைகளை அறிவிப்பார்- கொல்லவும்,குடும்பங்களை தள்ளி வைக்கவும்! அவர்களுக்கு இந்திய சட்டங்கள் குறித்தோ சட்ட அமைப்புகளின் தீர்ப்புகள் குறித்தோ கவலையில்லை. அவர்களுக்கு அவர்களது பழைய நம்பிக்கைகளும்,பாரம்பரிய வழக்கங்களுமே முக்கியம். இவர்கள் திரும்ப சதி வழக்கத்தை ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. காதலிப்பவர்களை தண்டிக்க இவர்களுக்குத்
தெரிந்த ஒரே நீதியும் தண்டனையும் - காதலித்தவர்களைக் கொலை செய்வதும் குடும்பங்களை விலக்கி வைத்தலுமே. இவர்கள் பெரும்பாலும் ஜாட் என்ற ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் - சாதியின் இரு கைகளான சொத்து மற்றும் பெண்ணை அதிகாரம் கொண்டு அடக்கியாள்வதே இவர்களின் முக்கிய நோக்கம். எந்த கப் பஞ்சாயத்துகளிலும் உறுப்பினர்களாக பெண்களுக்கு இடமில்லை.

தாராளமயமாக்கப்பட்ட பொருளாதார இந்தியாவின் இன்றைய தலைமுறை இளைஞர்கள் கிராமங்களை விட்டு நகரங்களுக்குச் செல்கிறார்கள். நகர்ப்புற கலாச்சாரங்களாலும், மாற்றங்களாலும் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். ”அலைபாயுதே” ஸ்டைல் திருமணங்களையும், நாகரிகங்களையும் கைகொள்ள விரும்புகிறார்கள். இது கப்-களின் கண்களை உறுத்துகிறது. தாங்கள் கட்டி காத்துவந்த பழங்கால நம்பிக்கைகளும், பாரம்பரியங்களும், கலாச்சாரமும் கண்முன் சிதைக்கப்படுவதாக எண்ணி பழமைவாதிகளான கப் பஞ்சாயத்தினர்
மூர்க்கம் கொள்கிறார்கள். புதிய மாற்றங்களை விரும்பும் இளைய தலைமுறைக்கும், ஒன்றுக்கும் உதவாத outdated பழைய பஞ்சாங்கங்களுக்கும் இடையேயான உரசல் இது என்று சிலர் சொல்வது மேலோட்டமாக உண்மையாகத் தெரிந்தாலும் இதற்கு அடிநாதமாக இருப்பது ஆதிக்க சாதி உணர்வே! இதற்கு பலியாவது அப்பாவி இளைஞர்களும் அவர்களது குடும்பங்களுமே!

இந்தியாவிலேயே பெண்சிசுக் கொலை அதிகமாக நடப்பது ஹரியானாவில்தான். பெரும்பாலான ஹரியானா கிராமங்களில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனிப் பள்ளிகளுண்டு. நேரங்களும் வெவ்வேறானவையாகவும் இருக்கும். சில குடும்பங்களில் பெண்கள் ஓடிப்போய்விடுவார்கள் என்று பயந்து சிறிய வயதிலேயே திருமணம் செய்து விடுவார்கள். கப் பஞ்சாயத்தினரின் கட்டளைக்குக் கீழ்பட்டு பெண் குழந்தைகளுக்கு பூச்சிக்கொல்லிகளைக் கொடுத்து போலீஸுக்கு தெரியாமலே எரித்து விடுவதும் உண்டு. குடும்ப கௌரவம் என்பது பெண்ணை மட்டுமே சார்ந்துள்ளது போலும்! ஆணுக்காக சிறிதளவாவது பாரம்பரிய நம்பிக்கைகள் வளைக்கப்பலாம், ஆனால் பெண்ணுக்காக அவர்களது சட்டங்கள் சற்றும் வளைந்துக் கொடுக்காது. மீறி எவரேனும் ஓடிப் போனால் அந்த குடும்பங்கள் விலக்கி வைக்கப்படுவதோடு லட்சக்கணக்கில் அபராதமும் விதிக்கப்படும். அந்த குடும்பத்தை சேர்ந்த மற்ற பெண்கள் மீதும் உரிமை மீறல்கள் நடக்கும்; நடந்தாலும் யாரும் கேட்க முடியாது. குடும்ப கௌரவத்தை குலைக்கும் விதமாக ஒரு பெண் நடந்துக்கொண்டாள் என்பதே அவள் மீது வன்முறையை ஏவிவிடுவதற்கு போதுமானது .

மேலும் ஜாட்களில் பெண்களுக்கு சொத்துரிமை உள்ளதால் அடக்குமுறைக்கு அதிகம் ஆளாவதும் அவளே. உண்மையில் இந்த honour killing-ம் ஒருவகை Domestic Violenceதான். கௌரவத்திற்காக என்றால் மட்டும் கொலை செய்வது நியாயமாகி விடுமா என்ன?

திருமணம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். இந்திய சட்டத்திற்கு மட்டுமே அனைவரும் கட்டுப்பட்டவர்கள். முன்னேறிய சமூகத்தில் ஒருவரது விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். யார் யாரை திருமணம் செய்து கொள்வது என்ற முடிவை சாதி சங்கங்கள் ஏன் எடுக்க வேண்டும்? அதுவும் பாரம்பரியம் மற்றும் கௌரவம் என்ற பெயரில்?

அரசியல் கட்சிகளும் இந்த கப் பஞ்சாயத்துகளை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. சில அரசியல்வாதிகள் வெளிப்படையாகவே கப் பஞ்சாயத்துகளை ஆதரிப்பதாக சொல்கின்றனர். நமது ஊர் சாதி சங்கங்கள் மற்றும் கட்சிகளைப் போல கப்-களின் பெருத்த ஓட்டு வங்கிகளே காரணம். இவையே கப் பஞ்சாயத்தினருக்கு தைரியமூட்டுகின்றன. சட்டங்களுக்கு அப்பாற் பட்டவர்களென்று தங்களை நினைத்துக் கொள்ள வைக்கின்றன. அவர்களுக்கு தங்கள் கையிலிருக்க வேண்டிய அதிகாரமே முக்கியம். கப் பஞ்சாயத்தின் தலைவர் ராஜாவைப் போன்றவர். அவர்களுடையது தனி நீதிமன்றம். அவர் வைத்ததே சட்டம்.

தங்கள் ஓட்டு வங்கியை இழக்க விரும்பாத அரசியல்வாதிகள் கப் பஞ்சாயத்தை ஆதரிப்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. இல்லையெனில் கப் பஞ்சாயத்தை ஒழிக்க இன்னும் ஏன் அரசு எவ்வித முயற்சிகளை எடுக்கவில்லை? கப் பஞ்சாயத்தினருக்கு எதிரான சட்டங்களை இயற்ற இன்னமும் விவாதங்களே முழுமையடையவில்லை.

ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதியுடனான ஐந்து நட்சத்திர விடுதிகளின் கேண்டில் லைட் டின்னர், சலுகை விலையில் மொபைல் போன்கள், ஜோடியாக பப்-க்கு வந்தால் ஒருவருக்கு இலவச அனுமதி என்று காதலர் தினத்துக்காக சுண்டியிழுக்கும் விளம்பரங்களும், கவர்ச்சிகரமான சலுகைகளுமாக காதலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படும் இந்தியாவில்தான் சாதி சங்கங்களை மீறித் திருமணம் செய்துக் கொண்ட காதலர்களின் உயிரை ”கௌரவத்திற்காக” எடுப்பதும் நடக்கிறது.

இன்று வரை சட்ட அமைச்சரும் மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் கப் பஞ்சாயத்துகளுக்கெதிரான மசோதாவை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். விவாதங்களில் பாராளுமன்றம் பிளவுபட்டு நிற்கிறது! எதற்காக இன்னமும் காலதாமதம்? honour killing என்ற பெயரில் நிகழ்ந்தாலும் இது கொலைதானே!

”அட, சாதி எல்லாம் இப்போ யாருங்க பாக்குறாங்க? அதெல்லாம் அந்த காலம். தேவையில்லாம எல்லாத்துலேயும் சாதியை இழுக்கறாங்க, அதுவும் நம்ம ஊரிலே எங்கே சாதி இருக்கு?” என்று உங்களைப் போலத்தான் நானும் நினைத்துக்கொண்டிருந்தேன்.

ஆனால், குடும்ப கௌரவத்திற்காக கப் என்ற சாதிப் பஞ்சாயத்தின் கட்டளைக்கு கட்டுப்பட்டு தனது சொந்தங்களை தன் கையாலே கொல்வதற்கு வேறு என்ன காரணங்கள் இருக்க முடியும்?

அதுவும் தங்களது ஆசை மகன்களையும், மகள்களையும் தாங்களே கொன்றோம் என்ற குற்ற உணர்ச்சியோ வருத்தமோ கொஞ்சம் கூட இல்லாமல் குடும்பக் கௌரவத்திற்காக இதைச் செய்தேன் என்று பெருமைகொள்வதற்குப் பின்னால் வேறு என்ன காரணங்கள் இருக்க முடியும்?

இது எங்கோ வட இந்தியப்பகுதிகளில்தான் நடைபெறுகிறது என்று எண்ணிவிட முடியாது. நமது ஊர்களும் இதற்கு சற்றும் குறைந்தது இல்லை.

”நீயா-நானா” நிகழ்ச்சியின் காதல் திருமணங்களைப் பற்றிய எபிசோட் என நினைக்கிறேன் - மதுரைப் பக்கத்து கிராமத்து தலைவர் ஒருவர் “மீறி வேற சாதியிலே கல்யாணம் பண்ணிக்கிட்டா போட்டுற வேண்டியதாங்க” என்ற தொனியில் பேசிக்கொண்டிருந்ததை நமது வரவேற்பறையில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தவர்கள்தானே நாம்.

அவ்வளவு ஏன்?

மதுரையைச் சேர்ந்த மேகலாவும் சிவக்குமாரும் காதலித்திருக்கின்றனர். சிவக்குமார் வேறு சாதியைச் சேர்ந்தவரென்று மேகலா மற்றொருவருக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறார்.

அடுத்த சில தினங்களில் காதலர்கள் ஓடிப் போய் விடுகின்றனர். ஓடிப் போனவர்களை நயமாக பேசி அழைத்து வந்து அடித்து சிவக்குமாரை கொலையும் செய்துவிடுகிறார்கள். மேகலா தற்சமயம் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். சென்ற வாரம் நிகழ்ந்தது இது.

நமது பத்திரிக்கைகள் இதனை எப்படி பார்க்கின்றன? திருமணமானபின்னர் காதலனுடன் ஓடிவிட்டார் என்று கள்ளக்காதலாகவே நோக்குகின்றன. செய்தி வெளியிடுகின்றன.

அதன்பின்னால் புரையோடிப்போயிருக்கும் சாதியின் கோரப்பிடியை வெளிக் காட்டாமல், கண்ணோக்கும் முறையையே மாற்றி மேகலாவின் காதலை கள்ளக்காதலாக்கி பிரச்சினையை நீர்த்துப் போக செய்கின்றன.

டைம்ஸ் நௌ-வின் சுட்டி

தினமலரின் சுட்டி

மேகலாவும் சிவக்குமாரும் அரிவாளால் வெட்டப்பட்டதும் ”கௌரவத்திற்காகத்தான்”. சிவக்குமாரின் மரணமும் ”கௌரவக்கொலை“ தான்.

சட்டங்கள் மற்றும் தண்டனைகளினால் இந்த honour killing முடிவுக்கு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டியது - நமது கலாச்சாரமென்றும், பாரம்பரியமென்று ஆழமாக நமக்குள் பதிய வைக்கப்பட்டுள்ள சாதிய சிந்தனைகளே! ஒரு முன்னேறிய
சமூகம் என்று சொல்லிக் கொண்டு இந்தியாவை திரும்பவும் பழமையின் பிடிக்குள் கொண்டுச் செல்லாமல் காப்பது நம் மனதிலிருந்து முற்றிலுமாக சாதிய எண்ணங்களைக் களைவதன் மூலமே!

25 comments:

Deepa said...

அபாரம் முல்லை. கப் பஞ்சாயத்துகள் குறித்தான தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன.

//காதலர் தினத்துக்காக சுண்டியிழுக்கும் விளம்பரங்களும், கவர்ச்சிகரமான சலுகைகளுமாக காதலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படும் இந்தியாவில்தான் சாதி சங்கங்களை மீறித் திருமணம் செய்துக் கொண்ட காதலர்களின் உயிரை ”கௌரவத்திற்காக” எடுப்பதும் நடக்கிறது.//
ஹும்!

//நமது பத்திரிக்கைகள் இதனை எப்படி பார்க்கின்றன? திருமணமானபின்னர் காதலனுடன் ஓடிவிட்டார் என்று கள்ளக்காதலாகவே நோக்குகின்றன. செய்தி வெளியிடுகின்றன.
அதன்பின்னால் புரையோடிப்போயிருக்கும் சாதியின் கோரப்பிடியை வெளிக் காட்டாமல், கண்ணோக்கும் முறையையே மாற்றி மேகலாவின் காதலை கள்ளக்காதலாக்கி பிரச்சினையை நீர்த்துப் போக செய்கின்றன.//

மிக முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட்டிருக்கிறாய். இம்மாதிரி திசை திருப்ப‌ல்க‌ள் அபாய‌க‌ர‌மான‌வை.

செல்வநாயகி said...

Thanks for this post.

ஜிஜி said...

சாதீயம், மதங்களின் ஆளுகை மனிதனுக்கு உதவவில்லைதான். என்றாலும் அதையே பற்றிக்கொள்வதும், அதனாலேயே அழிந்து போவதும் பரிதாபத்துக்கு உரியது. புரிந்துகொள்கிறார்கள். ஆனால் திருந்த மறுக்கிறார்கள்.

வாழ்த்துகிறேன்.

☀நான் ஆதவன்☀ said...

நச் பாஸ்!

ஆனா சாதிய எல்லாம் எந்த காலத்திலேயும் ஒழிக்க முடியாது. காலத்துக்கு ஏத்த மாதிரி வேற ஒரு ரூபத்துல அட்ஜஸ் ஆகிட்டே இருக்கும் :(

இந்த கட்டுரை பத்திரிக்கையில் வருவதற்கான அனைத்து அம்சங்களும் இருக்குது பாஸ்

ஏழர said...

பதிவுக்கு நன்றி... சாதின்னு பேசினாலே என்னமோ கரப்பான்பூச்சிய பாக்குறமாதிரி பாங்குறப்பா... நாங்க என்ன இல்லாத ஒன்னையா பேசுறோம்.

இந்தியாவில் சாதிய 'கப்பு'க்கு இந்த 'கப்' பஞ்சாயத்து இன்னொரு சான்று.

சென்ஷி said...

//மதுரையைச் சேர்ந்த மேகலாவும் சிவக்குமாரும் காதலித்திருக்கின்றனர். சிவக்குமார் வேறு சாதியைச் சேர்ந்தவரென்று மேகலா மற்றொருவருக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறார்.

அடுத்த சில தினங்களில் காதலர்கள் ஓடிப் போய் விடுகின்றனர். ஓடிப் போனவர்களை நயமாக பேசி அழைத்து வந்து அடித்து சிவக்குமாரை கொலையும் செய்துவிடுகிறார்கள். மேகலா தற்சமயம் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். சென்ற வாரம் நிகழ்ந்தது இது.

நமது பத்திரிக்கைகள் இதனை எப்படி பார்க்கின்றன? திருமணமானபின்னர் காதலனுடன் ஓடிவிட்டார் என்று கள்ளக்காதலாகவே நோக்குகின்றன. செய்தி வெளியிடுகின்றன.

அதன்பின்னால் புரையோடிப்போயிருக்கும் சாதியின் கோரப்பிடியை வெளிக் காட்டாமல், கண்ணோக்கும் முறையையே மாற்றி மேகலாவின் காதலை கள்ளக்காதலாக்கி பிரச்சினையை நீர்த்துப் போக செய்கின்றன.//


:((

கொடுமை...

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

என்னத்த சொல்ல?

KVR said...

//மதுரையைச் சேர்ந்த மேகலாவும் சிவக்குமாரும் காதலித்திருக்கின்றனர். சிவக்குமார் வேறு சாதியைச் சேர்ந்தவரென்று மேகலா மற்றொருவருக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறார்.//

கடந்த வாரத்தில் நிகழ்ந்தது எனில் இந்தச் செய்தி தவறென நினைக்கிறேன். ஏனெனில் சிவக்குமாரும் மேகலாவும் ஒரே சாதி தான். இருவரும் சகோதர உறவு (cousins). அது தான் அங்கே பிரச்சனை ஆனதே தவிர சாதியில்லை

சின்ன அம்மிணி said...

//அதுவும் தங்களது ஆசை மகன்களையும், மகள்களையும் தாங்களே கொன்றோம் என்ற குற்ற உணர்ச்சியோ வருத்தமோ கொஞ்சம் கூட இல்லாமல் குடும்பக் கௌரவத்திற்காக இதைச் செய்தேன் என்று பெருமைகொள்வதற்குப் பின்னால் வேறு என்ன காரணங்கள் இருக்க முடியும்?//

சாதி வெறி அப்படி ஆட்டுகிறது . வேதனை

வெண்ணிற இரவுகள்....! said...

உண்மை சந்தன முல்லை நல்ல பதிவு

pinkyrose said...

மனுசங்க மாறனும்ப்பா...
மதங்கள் நிச்சயமாய் வன்மங்களை போதிப்பதில்லை இது சரியான மதப்பற்றுள்ளவர்களுக்கு தெரியும்.

சில பேர் இப்படி...

வடுவூர் குமார் said...

ச‌ன் செய்திக‌ளில் "கௌர‌வ‌ கொலை" என்று சொல்வ‌து புரியாம‌ல் இருந்த‌து,இப்ப‌திவை ப‌டித்த‌தும் தான் புரிந்த‌து.
ஹூம்!

சே.குமார் said...

உண்மை சந்தன முல்லை நல்ல பதிவு

கையேடு said...

அமெரிக்காவில் செட்டில் ஆனாலும், சொந்த சாதியில் மேட்ரிமோனியில் பெண் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கையில் இந்தியக் கிராமங்களில்...கடினம்தான்.

LK said...

படித்தவர்கள்தான் அதிக ஜாதி வெறியுடன் இருக்கின்றனர். பல வலைப்பூக்கள் அதற்க்கு உதாரணம்

அம்பிகா said...

அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்.
ஜாதிவெறிகளும், கௌரவ கொலைகளும், செய்தியாக படிக்கும் போதே கவலையளித்தது. இந்த அக்கிரமங்கள் எப்போது தான் ஒழியுமோ தெரியவில்லை.
அவசியமான பகிர்வு முல்லை.

காமராஜ் said...

அன்பின் முல்லை உண்மையில் அபூர்வ தகவல்களடங்கிய பதிவு இது.கிராமங்கள் இன்னும் வீர்யமாக சாதியை துக்கிப்பிடிக்கிறது.

அமைதிச்சாரல் said...

நல்ல பகிர்வு முல்லை.

லெமூரியன்... said...

நல்ல பகிர்வு முல்லை....!
வட இந்தியாவில் உள்ள கிராமங்களில் இன்னும் காட்டுமிராண்டிதனமான சட்ட திட்டங்கள் மிக பிரபலம்....
தலித்துகளை கொலை செய்வதற்கென்றே ஒரு படை உண்டு பீகாரில்...
இவர்களுக்கு பணம் மற்றும் ஆயுதம் வழங்கி ஆசீர்வாதம் செய்வது உயர் ஜாதியைச் சேர்ந்த பணக்கார சாதி தலைவர்கள்...

\\கிராமத்து தலைவர் ஒருவர் “மீறி வேற சாதியிலே கல்யாணம் பண்ணிக்கிட்டா போட்டுற வேண்டியதாங்க” என்ற தொனியில் பேசிக்கொண்டிருந்ததை..........//
தனது குடும்பம் குழந்தை என்பது மறந்து சாதி வெறி தெரிகிறதென்றால்...
வேறுவழியில்லை.......
இவங்களைதான் முதலில் போட்டு தள்ள வேண்டும்...!

வினவு said...

பதிவுக்கு நன்றி முல்லை! சாதி, மதம், இனம், குடும்பம் முதலான அனைத்துப் பிரிவுகளின் கௌரவமாக பெண் மட்டும் ஏன் வதைக்கப்படுகிறாள் என்பதை பற்றி ஒரு இடுகை எழுதலாமே முல்லை!

காலம் said...

பதிவுக்கு நன்றி
இன்னும் எதிர்பார்க்கிறோம்

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

ஜெயந்தி said...

நல்ல தொகுப்பு. நிச்சயம் இது ஒரு முக்கியமான பதிவு.

தீஷு said...

உண்மை முல்லை. சாதி கிராமத்தில் மட்டுமில்லை.. படித்து ஐந்து இலக்க சம்பளம் வாங்குபவர்களிடமும் கொடி கட்டி பறக்கிறது.. எங்கு சென்றாலும் விடாமல் துரத்தும் கேள்வி "நீங்க ஆளுங்க?"...

ஆட்டையாம்பட்டி அம்பி said...

கையேடு said...

அமெரிக்காவில் செட்டில் ஆனாலும், சொந்த சாதியில் மேட்ரிமோனியில் பெண் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கையில் இந்தியக் கிராமங்களில்...கடினம்தான்.//

அது என்னாங்க எல்லாத்துக்கும் அமெரிக்கா தான் அளவு கோலா? சொந்த அறிவே கிடையாதா?

உங்களுக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது உங்கள் மகளையோ அல்லது மகனையோ கொல்வதற்கு. இதுக்கு கருணை கொலை என்ற ஒரு பெயர் வேற.

இந்த கூத்து எல்லாம் இந்தியாவின் சொத்து. கேட்டா கலாசாரம் பண்பாடு அப்படின்னு.
எவனுக்காவது இந்த இரண்டு கலாசாரம் பண்பாடு சொற்களுக்கு சரியான அர்த்தம் சொல்ல சொல்லுங்களேன்.
உலகத்தில் எவனுக்கும் இந்த "கலாசாரம் மற்றும் பண்பாடு" சொற்களுக்கு அர்த்தம தெரியாது. எவனாலேயும் சொல்லவும் முடியாது..

அது என்ன கொலையில் ஒரு கருணை கொலை? வெங்காயம்.???