Monday, March 07, 2011

சப்-கோர்ட்டும் கோயிலும்

தோழியுடன் கோர்ட்டுக்குச் சென்றிருந்தேன். குடும்பநல நீதிமன்றம். எப்போதும்போல ஒரு குர்தியும், ஜீன்ஸும் அணிந்திருந்தேன். ஒவ்வொரு எண்ணாக அழைத்துக்கொண்டிருந்தார்கள். தோழி அவளது எண்ணுக்காக
முன்னால் நின்றிருந்தாள்.அவளது எண்ணை அழைக்கும்போது நீதிபதிக்கு முன்னால் வருகையை காண்பிக்க வேண்டும் என்பதற்காக.

எனக்குப் பின்னால் இரு பெண்கள் வந்தனர். அப்போதுதான் வந்திருக்க வேண்டும் அவர்கள். ஒருவர் நடுத்தர வயதுள்ளவர். மற்றொருவர் இளம்பெண். நடுத்தர வயதுள்ளவர் என் தோளைத்தட்டி அழைத்தார். திரும்பியதும், ‘முடிய கட்டுங்க’ ஒரு ரப்பர் பேண்டாவது போடுங்க’என்றார். அவருக்கு மறைக்கிறது போல, தொந்திரவாக இருக்கிறது அவருக்கு என்று எண்ணி, கைப்பையில் வைத்திருந்த கிளிப்பை எடுத்தேன். அதற்குள் அவர், “முடிய இப்படி விரிச்சி வுடக்கூடாதும்மா, கோர்ட்டுக்கு இப்படி வரக்கூடாது, வெளில எழுதியிருப்பாங்களே, பார்க்கல” என்று லேசாக அதிர்ச்சியைக் கொடுத்தார்.

’எங்கே எழுதியிருக்காங்க, அப்படில்லாம் இருக்கா என்ன? பழங்காலத்து படத்துல இந்த கனம் கோர்ட்டார் அவர்களேல்ல்லாம் வரும்போது ஜட்ஜூங்களே அழகழகா சுருட்டை முடியில்லே வச்சிருப்பாங்க! ஏன் இந்தம்மா இப்படி சொல்றாங்க? இவ வேற என்கிட்டே சொல்லவேயில்லையே’ என்று தோழியையும் மனதுக்குள் வைதேன்! சரி, அவரிடமே கேட்கலாமென்றால் அந்த அம்மாவை காணோம். அதற்குள் எங்கோ மாயமாக மறைந்துவிட்டார்.

அவரிருந்த இடத்துக்கு அந்த இளம்பெண் வந்தார். அவரும், “முடிய கட்டுங்க, இல்லன்னா தப்பா எடை போடுவாங்க” என்றார். என்ன தப்பா எடை போடுவாங்க என்று கேட்க ஆசையாக இருந்தாலும் தோழியை நினைத்து அமைதி காத்தேன். தொடர்ந்து அவர் “நீங்க இந்துவா” என்றார். நான் ’இல்லை’யென்று தலையசைத்தேன். “கிறிஸ்டியனா?” அமைதியாக இருந்தேன். ”முஸ்லீமா?” என்னடா கொடுமை இது, இவர் ஏன் இதெல்லாம் கேட்கிறார் என்று புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். முடிவாக, “உங்க பேர் என்ன” என்றார் மிரட்டலாக.
”ஏன் இதெல்லாம் கேக்கறீங்க”, என்றேன். ”தமிழ் தெரியுமா, இந்தி மாலும்? சொல்லுங்க, உங்க பேர் என்ன?” என்று அடுக்கினார். என்னடா இது ஆம்பூருக்கு வந்த சோதனை என்று நினைத்துக்கொண்டே ”முல்லை” என்றேன்.

”இந்துதான, ஏன் பொட்டு வைக்கல, பொட்டு வைக்கணும், ஜட்ஜு அதெல்லாம்

பார்ப்பாரு, இந்துன்னா பொட்டு வைச்சிருக்காங்களா இல்லையான்ன்னு பார்ப்பார். கிறிஸ்டியன் மாதிரி பொட்டு வைக்காம இருக்காங்களா,முஸ்லீம்னா முஸ்லீம் மாதிரி இருக்காங்களான்னு பார்ப்பாரு” என்றார்.

“அவர் கம்ப்ளெயிண்டைத்தானேங்க பாக்கணும், ஏன் இதெல்லாம் பாக்கணும், கேஸை பார்த்துதானே ஜட்ஜ்மெண்ட் தரப்போறாரு,ஆளைப்பாத்தா ஜட்ஜ்மெண்ட் தரப்போறாரு” என்றேன்.


இல்லையில்லை என்று கண்டிப்புடன் தலையசைத்த அவர், ” நாம இந்து, இந்து மாதிரிதாங்க இருக்கணும், காலத்துக்கேத்த மாதிரி நாம மாறிக்க முடியுமா சொல்லுங்க, கோயிலுக்கு எப்படி போறோம், கோர்ட்டும் அது மாதிரிதான், கோயிலுக்கு ஜீன்ஸ் போட்டுட்டு போவீங்களா, சொல்லுங்க, அதுமாதிரிதான்” என்றவர் தனது துப்பட்டாவை சரி செய்துக்கொண்டார். என்ன நினைத்தாரோ, சற்று நேரத்தில் எனக்கு முன்னால் இருந்த வரிசையில் நகர்ந்து நின்றுக் கொண்டார். ( ”ஹலோ, நான் x கிலோ, நீங்க என்ன எடை போட்டீங்கன்னு சொல்லுங்க, தப்பா,சரியான்னு பாக்கலாம்” என்று அவர் நகர்ந்துக்கொண்டபோது கேட்க வேண்டும் போலிருந்தது!)
விட்டால், மண்டல விரதமெல்லாம் இருந்துவிட்டு வரச்சொல்லிவிடுவார் என்று எண்ணி அமைதியாக இருந்தேன். அப்போதுதான் யதேச்சையாகப் பார்த்தேன், அவரது உள்ளங்கையில் சாயிபாபாவின் படங்கள் மூன்றை இறுக்கமாக பிடித்திருந்ததை.


எங்களுக்கு முன்வரிசையில் இருந்த, முதல் இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணும் கையில் 1008 நாமாவளி போன்ற ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு தனக்குள் சொல்லிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.

அந்தப் பெண் மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை. வருத்தமும் இல்லை. கோயிலுக்கும் கோர்ட்டுக்கும் என்ன சம்பந்தம் என்றும் புரியவில்லை. அவரது மூளையில் காலங்காலமாக ஏற்றி வைத்திருந்ததைதானே என்னிடமும் சொல்லியிருக்கிறார், ஆனால், அதில் உண்மை இல்லாமலும் இல்லைதானே!
உடையை, தோற்றத்தை வைத்துதானே பெண்களை எடை போடுகிறார்கள்? இதே சிந்தனைதானே, சாமானியன் முதல் சப் கோர்ட் நீதிபதியிலிருந்து உயர்நீதி மன்ற நீதிபதியின் மூளை வரை நிறைந்திருக்கிறது! ஒருவேளை அப்படி எடை போடமாட்டார்கள் என்று நிச்சயமாகத் தெரிந்தால் அந்த பெண்ணும் ஜீன்ஸ் அணிந்து வந்திருக்கலாம், யார் கண்டது!

ஆனால், ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது, நீதிபதிகள் பெண்களின் பக்கமிருக்கும் நீதியை கணக்கிலெடுக்காமல் நீதியளிக்கிறார்கள். அந்த பயமே அவர்களை 1008 நாமம் கொண்ட புத்தகத்துக்கும், சாயிபாபாவின் போட்டோவை இறுகப் பற்றிக்கொள்ளவும் துரத்துகிறது!

6 comments:

tamil said...

இந்து சட்டம்,முஸ்லீம் சட்டம்,கிறித்துவ சட்டம் என்று தனிநபர் சட்டங்கள் இருப்பதால் நீதிபதிகள் வாதி/பிரதிவாதி இந்துவா முஸ்லீமா கிறிஸ்டியனா என்று அறிய வேண்டியிருக்கிறது.அதற்காக சட்டம் இப்படி உடை அணி அப்படி உடை அணி,முடியை இறுக்கக் கட்டு, பொட்டு வை/வைக்காதே என்று சொல்லவில்லை.நீதிபதிகளும் அப்படி சொல்கிறார்களா என்ன.

எந்த மதமானால் என்ன ஆண்-பெண் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சட்டம்- ஒரே ஒரு சட்டம் uniform civil code இருந்தால் போதும். அதில் ஆண்-பெண் சமத்துவம் உறுதி செய்யப்பட்டால் மதமாவது வெங்காயமாவது, ஆணும், பெண்ணும் சமம் என்பதால் என்று பெண்களின் உரிமைகளுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறி விடலாம். அப்படி இருந்தால் மணவிலக்கு,தத்து எடுத்தல்,சொத்தில் சமபங்கு போன்றவற்றில் ஆணுக்கு உள்ள உரிமை பெண்ணுக்கும் கிடைக்கும்படி செய்ய முடியும். ஐரோப்பாவில் பல நாடுகளில்,அமெரிக்காவில்,கனடாவில்
அப்படித்தான் இருக்கிறது.இந்தியாவில்
ஏன் இல்லை.அதற்கு தடைக்கல்லாக
இருப்பவர்கள் யார்.இதையெல்லாம்
சிந்திப்பீர்கள்- மார்ச்8ம் நாளாவது இதைப் பற்றி சிந்திப்பீர்களா.
ஒன்று பொது சிவில் சட்டம் வேண்டும், இல்லை இருக்கிற மத அடிப்படையிலான சட்டங்களில் ஆண்-பெண் சமத்துவத்தின் அடிப்படையில்
மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.இந்த இரண்டில் எதுவும்
இல்லாத நிலைதான் இன்று உள்ளது. அது ஏன், இந்த மாற்றங்களை எதிர்ப்பவர்கள் யார் யார், அவர்களை ஆதரிப்பவர்கள் யார் யார் என்று உங்களுக்கு தெரியுமா.

Rithu`s Dad said...

முல்லை வழக்கமாக உங்கள் பதிவுகள் தான் எல்லோரையும் யோசிக்க வைக்கும்.. ஆனால் இந்த முறை “ தமிழின்” பின்னூட்டம் மிகவும் யோசிக்க வைக்கிறது..

லெமூரியன்... said...

என்னங்க சொல்றீங்க???
படிக்கும்போதே கொஞ்சம் அதிர்ச்சியாத்தான் இருக்கு...!
இப்டி DRESS CODE லாம் குடும்பநல கோர்ட்ல உண்டா என்ன???

துளசி கோபால் said...

அடக் கொடுமையே:(

ஏங்க, இப்படி இருக்கறவங்களுக்கு ஏன் குடும்பக் கோர்ட்டுக்கு வரும் நிலை!!!!!

Sai Ram said...

காப்கா காட்சி போல எழுதி இருக்கிறீர்கள். பெண்கள் துப்பட்டா அணியவில்லை என்றாலே புரணிகளுக்கும் பேச்சுகளுக்கும் கால் முளைத்து விடும்.

☀நான் ஆதவன்☀ said...

:( டூ பேட்.

இப்படியெல்லாம் நடக்குதா! :(