Wednesday, January 03, 2007

சண்டகோழி

காலை மணி 7.30.

"என் கருப்பு பேண்ட் எங்க இருக்கு?" - காலை அவசரத்தில் அவன்!

"உங்க ஷெல்பிலயே பாருங்க!" - இது அவள்!

"ப்ச்..இன்னைக்கும் லேட்டா? ட்ரெயினிங் இருக்கு, சீக்கிரம் போகனும்னு சொன்னேனே!
வந்து கொஞ்சம் தேடிக் குடுத்தா என்ன?" - அவன்.

"நான் என்ன இங்க சும்மாவா இருக்கேன்? தேடி எடுங்க..ராத்திரியே எடுத்து வச்சிகிட்டா என்ன?" - அவள் மறுபடியும்!

"ச்சே!! இது கூட பண்ணாம என்ன வேலை உனக்கு? ஒண்ணுமே ஒழுங்கு இல்ல இந்த வீட்டில!" - அவன்.

"நான் மட்டுமா இருக்கேன் இந்த வீட்டுல..நீங்களுந்தான் இருக்கீங்க! எப்பவும் என்னை ஏதாவது சொல்லனும் உங்களுக்கு!" - அவள்.

மணி - 8.00

"காலையில இவ்ளோ சத்தமா பாட்டு வைக்க வேணாம்னு எத்தனை தடவை சொல்றேன்?" - அவள்.

"சரி..கத்தாதே! பாட்டு கேட்டாக்கூட தப்பா உனக்கு. இதுக்கும் சுதந்திரம் இல்லாம போய்டுச்சு!
இதோ நிறுத்திடறேன்!! " - எரிச்சலுடன் அவன்!

"நான் ஒண்ணும் நிறுத்த சொல்லல..கொஞ்சம் சத்தம் கம்மியா வைக்கலாம் இல்ல!" - அவள்

"ஒண்ணும் தேவையில்ல..நான் கிளம்பறேன்!!" - வாசலில் அவன்!

"சாப்பாடு வேணாமா? " - அவள்!

"வேணாம், டைமாயிடுச்சு! இந்த வீட்டுல நிம்மதியாவே இருக்க முடியல!!" - பைக் உறுமியது!

காலையிலிருந்து நடந்த சண்டைகள் அவர்களுக்குள்! இதற்குப்பின் ஒரு நாள் முழுதும் பேச்சு வார்த்தை இருக்காது அல்லது ஒற்றை வார்த்தையில் பதில்கள்.கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை இயல்புக்கு திரும்பும். பெரும்பாலும், அவசரங்களும், எதிர்பார்ப்புகளுமே காரணம்!!


"ஹேய்! என்ன அழுமூஞ்சி சீரியல பார்த்துகிட்டிருக்கியா!! காபி குடு!!" - வீடு திரும்பியவன் உற்சாகமாய் பேச முற்பட்டான்.

"என்ன..பேச மாட்டேங்கற..காலையில இருந்த கோவம் இன்னும் போகலியா?" - செல்லமாய் சீண்டினான்.

இதற்கும் மௌனமே பதில் அவளிடமிருந்து!

"சரி, மன்னிச்சுடு! இனிமே சண்டை போடல..காலையில அவசரத்தில டென்ஷனாயிட்டேன்!" - அவனே பேச தொடங்கினான்.

"ம்ம்..அதுக்காக ஏன் சாப்பிடாம போகனும்? எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு!!" - அவள்.

"ம்ம்..இன்னைக்கு எங்க மேனேஜ்மெண்ட் ட்ரெயினிங்ல ஒரு மேட்டர் சொன்னாங்க..அதாவது, நமக்கு நெருக்கமாயிருக்க யார்கிட்டயாவது கருத்து வேறுபாடு,சண்டை இருந்ததுன்னா, அதை தீர்க்க இந்த மாதிரி செய்யலாம்ன்னு" - அவன்

"எந்த மாதிரி? " - அவள்

"இரு, வரேன்!" - என்றபடி இரு தாள்கள் மற்றும் பேனாக்களோடு வந்தான்.

"இந்தா" - அவளிடம் ஒரு தாள் மற்றும் பேனாவை நீட்டினான்.

"ம்ம்" - பெற்றுக்கொண்டாள்.

"இதுல என்கிட்ட பிடிக்காத விஷயம் எதுன்னு நீ நினைக்கிறீயோ அதை ஒன்னு, ரெண்டுன்னு நெம்பர் போட்டு எழுது. உன்கிட்ட எனக்கு பிடிக்காத விஷயத்தையெல்லாம் நான் எழுதறேன். அப்புறம் மாத்திக்கலாம்.கொஞ்சம் கொஞ்ச்மா நம்மை மாத்திக்க முயற்சி பண்ணலாம். சரியா? " - அவன்.

"சரி!!" - பேனாவை உருட்டிக்கொண்டே அவள்.

"ஏய்..எழுது?" - சொல்லிவிட்டு அவன் நிமிராமல் எழுத் தொடங்கினான்.

"எட்டி பார்க்காதே..ம்ஹூம்..!!" - திரும்பவும் அவன்.

அவளும் ஏதோ கிறுக்கினாள் சிறிதுநேரம். பின் தாளை மேஜை மீது வைத்துவிட்டு, தண்ணீர் குடித்தாள்.

"எழுதிட்டியா. இரு..நானும் முடிச்சிட்டேன்" - என்றபடி நிமிர்ந்தான்.

"குடு..மாத்திக்கலாம்" - என்றபடி தாள்களை மாற்றிக்கொண்டனர்.

அவள் எந்த உணச்சியும் முகத்தில் காட்டாமல் வாங்கிகொண்டாள்.

அவன் தாளில்,

1. எப்பவோ நான் கோவத்தில சொன்ன வார்த்தையெல்லாம் ஒவ்வொரு தடவை சண்டை போடும் போதும் சொல்லிக்காட்ட கூடாது.

2. ராத்திரி சண்டை போட்டா அதை காலையில மறந்துடனும். நான் வேலைக்கு போகும்போது உர்ருன்னு இருக்க கூடாது.

3. எந்த கலர்ல் நீ கல்யாணநாள் அன்னைக்கு ட்ரெஸ் போட்டிருந்தேன்னு எனக்கு ஞாபகம் இல்லன்னு சண்டை போடக்கூடாது!!


என பத்து வரை எழுதி இருந்தான்.

அவன் கையில் இருந்த தாளில்,

1.ஐ லவ் யூ
2.ஐ லவ் யூ
3.ஐ லவ் யூ
4.ஐ லவ் யூ
5.ஐ லவ் யூ
6.ஐ லவ் யூ
7.ஐ லவ் யூ
8.ஐ லவ் யூ
9.ஐ லவ் யூ
10.ஐ லவ் யூ

என்று இருந்தது.

"ஏய்..அதை படிக்காதே ப்ளீஸ்!!" - கத்திக்கொண்டே அதை பிடுங்க பாய்ந்தான் அவன்!

"முடியாது நான் படிச்சிட்டுதான் தருவேன்" - அவள்.

இன்னொரு சண்டைக்கான ஆரம்பம் தொடங்கியிருந்தது அங்கே!

8 comments:

கார்மேகராஜா said...

எப்படிங்க உங்களால மட்டும் இதெல்லாம்?

சூப்பரப்பு!

Anonymous said...

nice one - Prema

வல்லிசிம்ஹன் said...

கோபத்தை மானேஜ் பண்ணூம்போதே
கோபம் வருதோ:-)

ஜி said...

அருமையா ரொமாண்டிக்கா எழுதியிருக்கீங்க...

ஓ! குடும்பம்னா இப்படித்தானோ?

தேவ் | Dev said...

வாவ்...:)

வெங்கட்ராமன் said...

கல்யாணம் ஆனவர்கள் மட்டும் படிக்கவும்னு Disclaimer போடுங்கப்பா.
என்ன மாதிரி சின்ன பசங்க மனசெல்லாம் கெடுக்குறீங்களே.

இருந்தாலும் நல்லா இருந்தது.

செந்தழல் ரவி said...

கலக்கல் !!!

அரை பிளேடு said...

வாவ்..
ரியலி நைஸ் ஸ்டோரி...

இந்த எக்சர்சைச ஒரு தடவ வீட்ல டிரை பண்ணி பாத்துட வேண்டியதுதான்..

ஏடாகூடமா முடிஞ்சு நான் பாண்டேஜ் பாண்டியனா மாறுனா நீங்கதான் பொறுப்பு.. இப்பவே சொல்லிட்டேன்.
:))